அளவு ஜாக்கெட்

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 9,393 
 

“நிரந்தர வேலையில்லாமல் கல்யாணம் பண்ணிக்க எனக்கு இஷ்டமில்லை’ என்று நான் பலமுறைச் சொல்லியும் செவிடன் காதில் ஊதிய சங்காக அம்மா காதில் வாங்கியதாகவே தெரியவில்லை. “”நீ போய் பொண்ணப் பாத்திட்டு வா” என்று செல்போன் ரெக்கார்டு வாய்ஸ் மாதிரி திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார்கள். இவர்களிடம் பேசிப் பிரயோஜனமில்லை. போய் பெண்ணைப் பார்த்து, பிடிக்கவில்லை என்று சொல்லிவிட வேண்டியதுதான் என்கிற முடிவோடு வந்து கொண்டிருந்தேன்.

சிதம்பரத்திலிருந்து வெள்ளுர் செல்லும் நகரப்பேருந்து குமராட்சித் தாண்டி மேலப்பருத்திக்குடிச் சாலையில் சென்று வெண்ணையூர் திரும்பும் பாதையில் தடதடத்துச் சென்று கொண்டிருந்தது. பேருந்தின் இடப்பக்க நடுவில் ஜன்னலோர இருக்கையில் நான். என் அருகில் கணேசன் அமர்ந்திருந்தார். அவர்தான் என்னை அந்த ஊருக்குப் பெண் பார்க்க அழைத்துச் செல்கிறார். இன்னமும் நாகரிகத்தைத் தொட்டு விடாத கிராமம் ஒன்றிரண்டுக் கட்டிடங்களைத் தவிர எத்தனையோ – பல குடியிருப்புக் குடிசைகள் இருந்து கொண்டுதானிருந்தன.

அளவு ஜாக்கெட்தார்ச் சாலையோரம் சாணிக் குப்பையைக் கொட்டியிருப்பதினால் வாடை பிடிக்காத பேருந்தில் பயணிப்பவர் ஒருசிலர் மூக்கை மூடிக் கொள்ளும் அவலம் இருந்து கொண்டுதானிருந்தன. பத்து வயதிற்குள்ளான சிறுவர்கள் சைக்கிள் டயரை வைத்துக் கொண்டு கிராம வீடுகளின் சந்துபொந்துகளில் எல்லாம் ஓட்டி விளையாடியது போன்று, பேருந்து ஓட்டுநர் மிகவும் சிரமப்பட்டு வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளில் வளைத்து நிமிர்த்தி, நேராக்கி ஒவ்வொரு தடவையும் படாத பாடாய் இருந்தது. அதில் பயணித்தவர்கள் படும்பாட்டைச் சொல்லவே வேண்டாம். நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தால் நிச்சயமாக அவள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியமே இல்லாமல் அங்கேயே சுகப்பிரசவமாகி விடுகிற அவலம்தான் நடைபெற்றிருக்கும். அப்படியொரு குலுக்கல். வழக்கமானவர்களுக்கு வேண்டுமானால் பழக்கப்பட்டு போயிருக்கலாம். புதிதாக வருபவர்கள் இப்படியொரு சாபத்தின் பிடியில் சிக்கிக் கொண்டோமே என்கிற வெறுப்பின் உச்சியைத் தொடாமல் இருக்க மாட்டார்கள். பாதையின் இரண்டு பக்கங்களிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியும் பச்சைப் பசேலென்று நெல் வயல்கள் எதுவும் என் சிந்தனையைத் தொட்டதாகத் தெரியவில்லை.

“”அப்பா, நான், அக்கா எல்லோரும் போய் பொண்ணப் பாத்திட்டு வந்திட்டோம். பஞ்சவர்ணம் பையன் கணேசன் வர்றாரு. அவரோடப் போயி நீயும் ஒரு முறை பொண்ணப் பாத்திட்டு வந்திட்டீன்னா நிச்சயதார்த்தம் வைச்சிக்கலாம்” அம்மா சொன்னது நினைவலைகளாய் வந்து கொண்டிருந்தன.

என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த கணேசன் பேருந்து குமராட்சித் தாண்டியதிலிருந்து “தொணத்தொண’வென்று பேசிக் கொண்டே வந்தபடியிருந்தார். “”இப்ப வாண்டையார் இருப்புப் போவுது. போயிட்டு இதே சாலையில திரும்பவும் வந்துதான், தே.. இப்படியேப் போவும் வெள்ளூருக்கு” என்று வாண்டையார் இருப்புச் செல்லும் நேர் எதிர்ச் சாலையைக் காட்டினார். எனக்குப் பேருந்தில் உட்கார்ந்து கொண்டு வரவே பிடிக்கவில்லை. பெயருக்குத்தான் தார்ச்சாலை. எப்பவோ போட்டிருக்க வேண்டும். மழை வெள்ளத்திற்கு அரிப்பு ஏற்பட்டு ஆங்காங்கே பள்ளம் பறித்தும், ஜல்லி வெளியே தெரியும்படியாக பெயர்ந்து ஒன்றின் மேல் ஒன்றாக, குவியல் குவியலாகவும் குண்டும் குழியுமான தார்ச் சாலை.

ஒரு வழியாய் பேருந்து சாமி ஊர்வலம் சுற்றியது போன்று வெள்ளூரை வந்தடைந்திருந்தது. குமராட்சித் தாண்டியதிலிருந்து வெள்ளூர் வருவதற்குள்ளாகவே வயிற்றைக் குலுக்கி கலக்கி எடுத்திருந்தது. “ஒருநாள் அதுவும் முதல் நாள் வருவதற்கே என்னை இந்தப் பாடு படுத்தியிருக்கிறதே. இதே சாலையில் தினந்தினமும் வந்து போகிறவர்களின் பாடு…? இந்தப் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கதி…? இந்த ஊரில் பொண்ணுக் கட்டுவதுதான் ஒரு கேடு’ ஏன்று எண்ணினேன்.

“ஊரே பிடிக்கல. அப்புறம் பொண்ணப் புடிச்சிருக்குன்னு எப்படிச் சொல்வேன். அப்படியே பொண்ணப் புடிச்சிருந்தாலும்கூட புடிக்கலேன்னுதான் சொல்லணும். இதுல எந்த மாற்றமும் இருக்கக்கூடாது என்று எண்ணியவனாய் பேருந்தை விட்டு இறங்கி கணேசன் பின்னால் சென்றேன்.

எங்களை எதிர்பார்த்திருந்தவர்கள் போல பெரியவர் ராமசாமி, அவர் மனைவி மீனாட்சி இருவரும் வாசலில் நின்றிருந்து எங்களை, “”வாங்க…” என்று அன்போடு வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்கள்.

சுத்துக்கட்டு வீடு. உள்ளே நான்கு பக்கமும் தாழ்வாரம். நடுவில் முற்றம். தாழ்வாரத்தின் உள் அறையினுள் அழைத்துச் சென்று எங்களை நாற்காலியில் அமரச் சொன்னார்கள். ஒரு சிறிய மேஜை. அந்த மேஜைக்கு மேலே பெட்ஷீட் மடித்து விரிக்கப்பட்டிருந்தது. இருவரும் அமர்ந்தோம். வைத்த கண் எடுக்காமல் ராமசாமிப் பெரியவர் என்னையே பார்த்தார். தாழ்வாரத்தின் தூண் ஓரம் நின்றபடி அவரின் மனைவி மீனாட்சி என்னை அப்படியே விழுங்கி விடுவது போல பார்த்துக் கொண்டிருந்தார்கள். அங்கு நிசப்தம் நிலவியதனால் எனக்கு என்னவோ போல இருந்தது. ஒரு குட்டிப் பையன் என் பக்கத்தில் வந்து நின்று கொண்டு என் முகத்தை அண்ணாந்து பார்த்தபடியிருந்தான். நான் அவனை என் பக்கத்தில் இழுத்தபடி, “”ஓம் பேரென்ன…?” என்றேன்.

“”கொளஞ்சி”

“”என்னப் படிக்கிற…?”

சாமி வரங்கொடுக்க காட்டுவதுபோல ஐந்து விரல்களையும் விரித்துக் காட்டி, “”அஞ்சாவது” என்றான். நான் அந்தப் பையனிடம் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு பெண் காபி எடுத்துக் கொண்டு வந்தாள். “”காபி எடுத்துக்குங்க” என்று பெரியவர் சொல்ல, நான் அந்தப் பெண்ணைப் பார்க்கவும் அவள் காபி டம்ளரை மேஜை மீது வைத்து விருட்டென்று திரும்பி உள்ளே சென்றுக் கொண்டிருந்தாள். செக்கச் சிவந்த உடம்பு. ஆனால் பருமனான உடல். கணேசனைச் சீண்டினேன். “இதான் பொண்ணா…? என்பதுபோல கண்களால் கேட்டேன். அவர் திருதிருவென்று விழிப்பது புரிந்தது.

அம்மா, அக்கா, அப்பா எல்லோரும் வந்து பெண்ணைப் பார்த்துவிட்டுச் சென்றிருக்கிறார்களாம். நடக்கச் சொல்லி பார்த்தார்களாம். பேசச் சொல்லிக் கேட்டார்களாம். நொண்டியாகவோ, ஊமையாகவோ இருந்துவிடக் கூடாது என்பதற்காகவாம். உடம்பு குண்டப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே. நல்லவேளை பொண்ணைப் பாக்க வந்ததும் ஒருவகையில் நல்லதாப் போச்சு என்று எண்ணிக் கொண்டேன். இது ஒன்று போதுமே பெண்ணைப் பிடிக்கவில்லை என்று சொல்வதற்கு. சிதம்பரத்தில் காலை ஆறரை மணிக்கு பஸ் ஏறி வெள்ளூர் வரும்போது ஏழரை ஆகியிருந்ததினால், காலையில் டிபன் ஏற்பாடு செய்திருந்தார்கள். நான் வேண்டாம் என்று மறுத்தேன். “பொண்ணைக் கட்டாத வீட்டுல கை நனைக்கக்கூடாது’ என்பது எங்கள் கிராமத்து வழக்கம். “”இந்தக் குண்டுப் பெண்ணைக் கட்டப் போறதில்ல. அப்புறம் எதுக்கு உட்கார்ந்து சாப்பிட வேண்டும். மொதல்ல கிளம்புங்க” என்று முகத்தைச் சுளித்து கணேசனை அவசரப்படுத்தினேன்.

“”இரு குமார் போவலாம்” என்றார் கணேசன்.

நான் நெருப்பு மேல் நிற்பது போல தகித்துக் கொண்டிருந்தேன். “ஒரு குண்டுப் பெண்ணை நம்ம தலையில கட்டிடுவாங்க போலிருக்கே. எப்படியாவது இந்த இடத்தை விட்டு, இந்த ஊரை விட்டு ஓடிடணும்னு நெனச்சேன். கணேசன் மீது வெறுப்பாய் இருந்தது. முன்னாடியே இவருக்கு தெரிஞ்சிருக்கும்தானே? ஒரு வார்த்தைக்கூட சொல்லவில்லையே… பொண்ணு குண்டா இருக்கும்னு, என்று அவரை மனசுக்குள்ளேயே திட்டித் தீர்த்தேன். என் பொருமலை அவர் புரிந்துக் கொண்டாரோ என்னவோத் தெரியவில்லை. “”எனக்கு ஒண்ணும் புரியில குமாரு. நானும் சின்னப் புள்ளையில பாத்ததுதான்” என்று என் காதோடு காதாக வந்து கிசுகிசுத்தார் கணேசன்.

பெரியவர் ராமசாமி, “”என்ன…?” என்பதுபோல ஜாடையில் கணேசனைப் பார்த்துக் கேட்டார்.

“”ஒண்ணுமில்ல சும்மா தோட்டத்துப் பக்கம் போய் வர்றோம்” என்று அவர் எழுந்து கொண்டார். என் நச்சரிப்பு தாங்காமல்தான் என்று நினைக்கிறேன். பெரியவர், சிறுநீர் கழிக்கச் செல்கிறார்கள் என்று நினைத்திருக்க வேண்டும். பெரியவர் குட்டிப்பையனிடம், “”கொளஞ்சி அழைச்சிக்கிட்டுப் போய் வாடா…” என்றவர், கணேசனிடம் திரும்பி, “”அப்படியே நம்மப் படுவை, நிலம் மூங்கில் தோட்டம் எல்லாம் கூட்டிட்டுப் போய் காட்டிட்டு வா…” என்று அன்பாய் அறிவுறுத்தினார்.

ஊருக்கும் வடக்குப் பக்கமாய் கொள்ளிடக்கரை கீழ் பெரிய ஆலமரம், அம்மன் கோவில், பள்ளிக்கூடம் தாண்டி மாந்தோப்பினுள் நுழைந்து ஒத்தையடிப் பாதை வழியாகக் கொள்ளிட ஆற்றுப் படுகைக்குச் சென்றது வழி. பெரிய பெரிய நாவல் மரங்களும் புளிய மரங்களும் மாந்தோப்புகளும் சூழ்ந்திருந்த அடர்ந்தக் காடு போன்று அதன் நடுவில் ஒரு நீண்ட பாதை சென்ற வண்ணமிருந்தது. சாரியாக தென்னை மரங்கள் உயர்ந்து வளர்ந்திருந்தன. அதன் கீழ் ஓடைபோல தண்ணீர் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது.

“”இதான் கொள்ளிடமா…?” என்றேன்.

“”என்னது கொள்ளிடமா…? நீ கொள்ளிடத்தைப் பாத்தது இல்லியா…?” என்ற கணேசன், “”காவிரியே கரை புரண்டு வந்தாலும் கொள்ளுமிடம் கொள்ளிடம்னு ஒரு பழமொழியே இருக்கு. இது கொள்ளிடத்துக்குப் போய் சேருகிற வடிகால் வாய்க்காத் தண்ணி… இதோட இவங்க இடம் போல” என்று சொன்னார்.

நான் யோசனையோடு, “”பொண்ணு என்னங்க இந்தாப் பெரிசா இருக்கு. எனக்குப் பொண்ணப் புடிக்கலீங்க. வீட்டுக்குப் போனா சாப்பிடச் சொல்வாங்க. நாம இப்படியே பஸ் ஏறிடுவோம். வாங்க…” என்று பிடிவாதமாய் அவரை அங்கிருந்து கிளம்பச் சொன்னேன்.

“”இரு குமாரு… எனக்கும் ஒண்ணும் புரியல. நானும் சின்னப்புள்ளையில பாத்ததுதான்” என்று சொன்னபோது கொளஞ்சி நாங்கள் என்ன பேசிக் கொள்கிறோம் என்பதனை உன்னிப்பாய் கவனித்தபடியிருந்தான். ஒருவேளை நாங்கள் என்ன பேசிக் கொள்கிறோம் என்று கேட்டு வரும்படி சொல்லி அனுப்பியிருப்பார்களோ என்றுகூட நினைத்தேன். நாங்கள் பெண்ணைப் பற்றி எதுவும் பேசாமல் தோட்டம் துரவு நிலம் மூங்கில் தோட்டம் எல்லாவற்றையும் பார்த்தபடி வந்து கொண்டிருந்தோம்.

“”ஒரு வார்த்த வீட்டுக்குப் போயிட்டு, போயிட்டு வர்றோம்னு சொல்லிட்டுக் கிளம்பிடலாம்” என்று நயமாகச் சொன்னார் கணேசன்.

“”சரி” …என்று ஒப்புக்கொண்டு மீண்டும் வீட்டிற்குச் சென்றோம்.

அதே மேஜை எதிரில் நாற்காலியில் அமர்ந்தோம். பெரியவர் கணேசனிடம் கேட்டார்: “”தம்பி என்னா சொல்லுது…?”

“”பொண்ணுதான் குண்டா இருக்குன்னு சொல்றாப்பல” என்று சொல்ல வாயெடுக்கிறார் என்று நினைக்கிறேன். “”பொண்ணு” என்கிறபோதே பெரியவர், “”காபி கொண்டாரச் சொல்றேன்” என்றார்.

“மறுபடியுமா…’ என்று நினைத்துக் கொண்டேன்.

“”மொதல்ல சாப்பிட்டுட்டீங்கன்னா…?” என்றிழுத்தார் பெரியவர்.

“”சாப்பாடு வேணாம். கிளம்பலாம்” என்றேன்.

பெரியவர், “”மீனாட்சி… பாப்பாக்கிட்ட காபி குடுத்தனுப்பு” என்றார்.

“”முன்னாடி வந்தது பொண்ணு இல்ல. அது அண்ணி போலிருக்கு இப்ப வர்றதுதான் பொண்ணு. நல்லாப் பாத்துக்க” என்று கணேசன் காதோரம் கிசுகிசுத்தார்.

அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஒல்லியான ஓர் இளம் பெண் கையில் ட்ரேயோடு அதில் இரண்டு கப் அண்ட் சாசர் காபியுடன் இருக்க, என் பக்கம் நீட்டியபடி நின்றிருந்தாள். அவள் கைகள் நடுநடுங்கிக் கொண்டிருந்தது. ரைஸ்மில்லில் அரிசி தனியாக கல்லு தனியாக சலிக்கும் இயந்திரம் புடைப்பது போல அவளின் மெல்லிய கைகளில் பிடிபட்டிருந்த காபி ட்ரே “தடதட’ வென்று ஆடிக்கொண்டிருந்தன. எங்கே காபியை என் தலையிலோ அல்லது மேலே சட்டைப் பேண்டிலோ கொட்டி விடுவாளோ? என்று நான் பயந்துப் போனவனாய் நாற்காலியை நகர்த்தி கால்களை எடுத்து வேறு பக்கமாய் உட்காரப் பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்தபோது, எனது செய்கை அவளுக்கு இன்னும் வெட்கத்தைக் கூட்டியிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். அப்படியே ட்ரேயை மேஜை மீது வைத்து விட்டு ஓடியே விட்டாள். கப்பில் இருந்த காபி பாதிக்கும்மேல் ட்ரேயில்தான் பரவியிருந்தது. உண்மையில் நான் முகத்தைப் பார்க்கவேயில்லை.

“”என்ன… புடிச்சிருக்கா…?” கணேசன் மெதுவாய்க் கேட்டார்.

வேதாளம் முருங்கை மரம் ஏறின கதையா மீண்டும் நான் சொன்னதையேச் சொன்னேன். “”நான் முகத்தையே பாக்கல. அப்படியே பார்த்தாலும் புடிக்கலேன்னுதான் சொல்லப்போறேன். வாங்க கெüம்பலாம்” என்றேன்.

“சரி வா போகலாம்…” என்று சொல்ல, இருவரும் அங்கு இருந்தவர்கள் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு வெளியே வந்தோம். நாங்கள் வெளியே வந்த போது, “”ஒரு நிமிஷம் தோ.. வந்திடறேன்” என்று சொல்லி கணேசன் மீண்டும் உள்ளே சென்றார். ஓரிரு நிமிடங்களில் வெளியே வந்தார். எனக்கு எதுவும் புரியவில்லை. அவரின் அக்குளில் ஒரு மஞ்சள்நிறப் பை இருந்தது. திடீரென்று ஒரு மஞ்சள்நிறப் பை அவர் அக்குளில் முளைத்துக் கொண்டதே என்று நினைத்தேன். ஆனால் அதுபற்றி நான் எதுவும் அவரிடம் கேட்கவில்லை. கேட்க அப்போது தோன்றவுமில்லை. இருவரும் சிதம்பரம் வந்து சேலம் செல்லும் பேருந்தில் நெய்வேலி வரை பயணித்து அங்கிருந்து விருத்தாசலம் செல்லும் நகரப் பேருந்தில் ஏறி ஊத்தங்கால் என்ற எனது ஊர் பேருந்து நிலையத்தில் இறங்கியபொழுது அவரும் என்னுடன் வீட்டிற்கு வந்தார். பேருந்தில் இரண்டு மூன்று மணிநேர பிரயாணத்தின்போதுகூட எனக்கு அந்த மஞ்சள் பையைப் பற்றிய நினைவில்லாமல் இருந்தது. அவரும் நானும் இறங்கி வீடு நோக்கி நடக்கும்போதுதான், “”ஏதுங்க மஞ்சப் பைய்யி… போகும்போது இல்ல வரும்போது சுருட்டி அக்குள்ல வச்சிருக்கீங்க?” என்றேன்.

“”குமாரு உனக்குப் புடிச்சிருந்தாலும் புடிக்கலேன்னாலும் பொண்ணுக்கு அளவு ஜாக்கெட் வாங்கிட்டு வரச் சொல்லிட்டாங்க. அநேகமா அடுத்த வாரம் உனக்கும் அந்தப் பொண்ணுக்கும் நிச்சயதார்த்தம் இருக்கும்ன்னு நினைக்கிறேன்” என்று பையிலிருந்து ஒரு ஜாக்கெட்டை வெளியே எடுத்து அவர் காண்பித்தபோது பேச்சற்று நின்றேன்.

– ப.கோவிந்தராசு (அக்டோபர் 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *