பருவம் வந்ததும்…

 

நிலா குழந்தையிலேயே நல்ல அழகு. வீதியில் போவோர் வருவோர் எல்லாம் கொஞ்சிக் கொண்டு போவார்கள்.

பனிரண்டு வயசில் வயசுக்கு வந்து விட்டாள். பூத்துக் குலுங்கும் அந்த அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

நிலாவின் அம்மா அன்னத்திற்கொரு ஆசை! அதற்கு ஒரு விழா எடுத்து அதில் தன் அந்த அழகுப் பெட்டகத்தை மனையில் உட்கார வைத்து உறவுகள் நலங்கு வைப்பதை ஒரு வீடியோ எடுத்து அதை தன் ஆயுசு முழுவதும் வைத்து ரசிக்க வேண்டும் என்று!

அன்னத்தின் கணவர் அதற்கு உடனே ஏற்பாடு செய்ய, நகரத்தில் உள்ள ஒரு நல்ல ஹோட்டலில் இது போன்ற விழாக்கள் நடத்த இருந்த ஒரு அரங்கில் அந்த விழா சிறப்பாக நடந்தது.

அன்னம் ஆசைப் பட்டபடி அந்த அழுகு நிலா மேடையில் அமர்ந்திருக்க, உறவுகள் ஒவ்வொருவராக நலங்கு வைத்துக் கொண்டிருந்தார்கள். சுற்றிலும் நின்று கொண்டு தோழிகள் கேலி செய்ய வெட்கத்தில் நிலா முகம் சிவக்க, அந்தக் காட்சியை எல்லா உறவுகளும் ரசித்துக் கொண்டிருந்தன.

தன் அழகைப் பார்த்து ரசிக்க அங்கு அரவிந்தன் இல்லாதது நிலாவின் மனசில் பெருங்குறையாக இருந்தது.

அந்தக் காலனியில் எதிர் வீடு அரவிந்தனின் வீடு. அரவிந்தனின் அப்பா மத்திய அரசில் ஒரு உயர் அதிகாரி. நிலாவை விட அரவிந்தன் மூன்று வயசு மூத்தவன். மனோகரும், நிலாவின் அப்பா முத்துச் செல்வனுக்கும் நல்ல நட்பு உண்டு எதிர் எதிர் வீடு என்பதால் ஒன்றுக்குள் ஒன்றாக பழகி வந்தார்கள்..

அதே காலனியில் இருக்கும் சி.பி.எஸ்.சி. ஸ்கூலில் தான் இருவரும் படித்து வந்தார்கள். நிலா முதல் வகுப்பு படிக்கும் பொழுது, அரவிந்தன் நான்காவது வகுப்பு. நிலா இயற்கையிலேயே குறும்பு அதிகம்.

“நீ இந்த வாலுத்தனத்தை விட விட்டால் என்னிடம் நன்கு உதை படுவாய்!…..” என்று அடிக்கடி தாய் அன்னம் அடிக்கடி மிரட்டுவாள். நிலா அம்மா பேச்சைக் கண்டுக்க மாட்டாள்.

நிலாவை ஸ்கூலுக்குக் கூட்டிப் போய், கூட்டி வருவது எல்லாம் அரவிந்தன் பொறுப்புத்தான்! நிலாமேல் அரவிந்தன் உயிரையே வைத்திருந்தான்.

ஒரு முறை பள்ளி மைதானத்திலிருந்து நிலா அழுது கொண்டு வந்தாள். எதிரே ஓடி வந்த அரவிந்தன் பதறிப் போய் என்னவென்று விசாரித்தான்.

“அந்த பிரசன்னா என்னை கீழே தள்ளி அடித்து விட்டான்!….” என்று நிலா அழுது கொண்டே சொன்னாள்.

அடுத்த நிமிடம் அரவிந்தன் விளையாட்டு மைதானத்திற்கு ஓடினான். அங்கு யாரிடமும் எதுவும் விசாரிக்காமல் பிரசன்னாவை இழுத்து கீழே போட்டு ஒரு கல்லை எடுத்து மண்டையில் அடித்து உடைத்து விட்டான்.

பிரச்னை பெரிதாகி பெரியவர்கள் விசாரிக்கும் பொழுது, “என் பிரண்ட் நிலாவை யார் அடித்தாலும் நான் அப்படித் தான் அடிப்பேன்!…” என்று திமிராக பெரியவர்கள் முன்னால் சொல்லி நிறைய அடி வாங்கிக் கொண்டு அழாமல், அசையாமல் நின்றான்.

அப்பொழுது அரவிந்தனுக்கு எட்டு வயசு. அந்தக் காட்சி நிலாவின் அடி மனசில் ஆழமாகப் பதிந்து விட்டது.

அதற்குப் பிறகு அந்த தெருவில் விளையாடும் பையன்கள், அரவிந்தனுக்குப் பயந்து கொண்டு நிலா விஷயத்தில் அவள் என்ன குறும்பு செய்தாலும் பொறுத்துக் கொண்டு போய் விடுவார்கள்.

பள்ளி நேரம் போக மீதி நேரம் எல்லாம் நிலாவும் அரவிந்தனும் ஒன்றாகவே இருப்பார்கள். முத்துச் செல்வனும் சரி, அன்னமும் சரி அரவிந்தனை தாங்கள் பெற்ற மகனைப் போல் வித்தியாசம் பார்க்காமல் நடந்து கொண்டார்கள்.

அரவிந்தனுக்கு பனிரண்டு வயசு இருக்கும். அரவிந்தனின் அப்பா மனோகருக்கு டெல்லிக்கு பதவி உயர்வில் மாறுதல் வந்து விட்டது. நிலா மூன்று நாட்களாக சாப்பிட வில்லை.

அவளை சமாதானப் படுத்துவதற்குள் அந்த இரண்டு குடும்பத்திற்கும் போதும் போதும் என்றாகி விட்டது.

மனோகர் தான், நிலாவை பக்கத்தில் வைத்து சமாதானப் படுத்தினார். “நிலா!…நீ சமத்துப் பொண்ணு…….இந்த மாமா சொன்னக் கேட்க வேண்டும்..அரசாங்க வேலையில் இதெல்லாம் தவிர்க்க முடியாதடா கண்ணு… … வாரம் தவறாம உங்களுக்கு நான் கடிதம் போடுகிறேன்…. நான் அடிக்கடி அரசு வேலையாக நான் சென்னைக்கு வரும் பொழுது உன் பிரண்ட் அரவிந்தனையும் இங்கு கூடவே கூட்டி வருகிறேன்….நாங்க வந்தா உங்க வீட்டில் தான் தங்குவோம்….” என்று தட்டிக் கொடுத்த சமாதானப் படுத்தி விட்டுப் போனார்.

அவர் சொன்ன படி ஆரம்ப காலத்தில் வாரா வாரம் கடிதம் போட்டார். அதில் உன் பிரண்ட் அரவிந்தன் உன்னை ரொம்ப விசாரித்தான்…அவன் நன்றாகப் படிக்கிறான்…நீயும் நன்றாகப் படி…என்று எழுதுவார்…

கால போக்கில் கடிதப் போக்குவரத்து குறைந்தது. வருடத்திற்கு ஒரு இரு முறை அலுவலக வேலையாக மனோகர் சென்னைக்கு வருவார். வரும் பொழுதெல்லாம் நிலா வீட்டிற்கு வந்து நலம் விசாரித்து விட்டுப் போவார்.

பருவத்தின் சித்து விளையாட்டு நிலாவின் மனசில் நிரந்தரமாக குடியிருந்த அரவிந்தனை, அவள் மனசில் கதாநாயகனாக மாற்றி விட்டது.

ஆண்டுகள் வேகமாக நகர்ந்தன. நிலா கல்லூரியில் சேர்ந்த வருடம் மனோகர் டெல்லியிலிருந்து வந்திருந்தார். இப்பொழுதெல்லாம் அந்த மாமாவிடம் அரவிந்தனைப் பற்றி விசாரிக்க நிலாவுக்கு வெட்கமாக இருந்தது

அம்மாவிடம் அரவிந்தனைப் பற்றி மனோகர் மாமாவிடம் விசாரிக்கும்படி நிலா வற்புறுத்தினாள்.

“ அரவிந்தனுக்கு ரிசர்வ் வங்கியில் வேலை கிடைத்து ஜாயின் பண்ணிட்டான்….அவனுக்கு என்னவோ டெல்லி பிடிக்கவில்லை!. …….சென்னைக்கு மாறுதல் வாங்கிக் கொண்டு வரத் துடிக்கிறான்…” என்று அவர் சொன்னார்.

நிலாவுக்குப் புரிந்தது. அரவிந்தனுக்கு டெல்லி ஏன் பிடிக்க வில்லை என்று.! அவள் கற்பனை செய்யச் செய்ய முகம் சிவந்து செந்தாமரையாக மலர்ந்தது. கூச்சத்தால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள்.

கல்லூரிக்கு போன பிறகு முன்பு போல் மனோகர் மாமா வந்தால் கூட அவளால் பேச முடிய வில்லை! வெட்கமாக இருந்தது. திரைப் படங்கள் பார்க்கும் பொழுது அதில் காதல் காட்சிகளில் அவள் அந்த இடத்தில் தன்னையும், அரவிந்தனையும் கற்பனை செய்து தன்னை மறந்து ரசிப்பாள்.

அந்த வருடம் நிலா பைனல் இயர் வந்து விட்டாள். அவள் டிகிரி முடிக்கவும், அவளுக்கு இருபது வயசு பூர்த்தியாகி விடும். இருபத்தியொன்றில் அவளுக்கு கல்யாணம் செய்து விட வேண்டும் என்று அப்பா, அம்மா பேசிக் கொண்டிருந்தார்கள். அவளும் அதைத் தான் எதிர் பார்த்தாள்.. இறுதித்தேர்வு எழுதியவுடன், கண்டிப்பாக அவள் எண்ணத்தை வீட்டில் சொல்லி விடுவதென்ற முடிவில் இருந்தாள்.

திடீரென்று அரவிந்தனிடமிருந்து ஒரு போன். “ மாமா! எனக்கு சென்னைக்கு மாறுதல் கிடைத்து விட்டது. அடுத்த வாரம் சென்னை வருகிறேன். என் டியரஸ்ட் பிரண்ட் அது தான் அந்த வாலு ஒழுங்காகக் கல்லூரிக்கு போகிறாளா?…இப்ப எப்படி இருக்கிறள்?…அவளையும் உங்களையும் பார்த்து ரொம்ப நாளாச்சு…..எனக்கு உங்களை எல்லாம் பார்க்க ரொம்ப ஆசையாக இருக்கு…..அதுமட்டுமல்ல நான் உங்களிடம் சொல்ல ஒரு முக்கியமான விஷயம் வைத்திருக்கிறேன்…..” என்று சஸ்பென்ஸ் வைத்து முடித்துக் கொண்டான்.

அது என்ன பெரிய சஸ்பென்ஸ்….வேலை கிடச்சாச்சு…அடுத்தது கல்யாணம் தானே?…நிலாவுக்கு அது புரிந்ததால் தலை கால் புரிய வில்லை!

அடுத்த வாரம் மீனம்பாக்கத்திலிருந்து டாக்ஸியில் வந்து இறங்கிய அரவிந்தனின் கம்பீரமான தோற்றம் எல்லோரையும் அசத்தியது!

வந்ததும் “எங்க அந்த வாலு?…”என்று தான் முதலில் கேட்டான்.

அன்னம் தான் “அரவிந்தன்! அவள் வயசுப் பெண். இந்த வருடம் டிகிரி முடிக்கப் போகிறாள்….இனி நீ அவளை வாலு என்றெல்லாம் சொல்லக் கூடாது!..” என்று செல்லமாக கோபித்துக் கொண்டாள்..

அரவிந்தன் எப்படி கூப்பிட்டால் என்ன….அம்மா எதற்கு இதில் எல்லாம் தலையிடுகிறாள் என்று நினைத்த நிலாவுக்கு அம்மா மேல் எரிச்சல் வந்தது.

தன் அறையிலிருந்து சிரித்துக் கொண்டே வெளியில் வந்த நிலாவைப் பார்த்து அரவிந்தன் அசந்து போய் விட்டான். அரவிந்தன் வருகையை எதிர்பார்த்த நிலா தன்னை ஏற்கனவே நன்கு அலங்கரித்துக் கொண்டிருந்தாள். நிலா ஏற்கனவே அழகு. பருவம் வேறு தன் முழு கைவரிசையையும் அவள் மேல் காட்டியிருந்தது.!

நிலாவைப் பார்த்து ரொம்ப வருஷமாகி விட்டதால், பழைய நினைப்பில் உரிமையில் ‘வாலு’ என்று தப்பாகச் சொல்லி விட்டோமோ என்று நினைத்து அவளைப் பார்க்க அரவிந்தன் கூச்சப் பட்டான்.

“ என்ன அரவிந்த்!…உனக்கு இப்பத் தான் சென்னை நினைப்பு வந்ததா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் நிலா..

அதற்குப் பின் அரவிந்தன் நிலாவுக்கு ஒரு மரியாதை கொடுத்துத் தான் பேசினான்.

இரவு எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, “ என்ன அரவிந்த்!…உன் கடிதத்தில் ஏதோ சஸ்பென்ஸ் வைத்து எழுதியிருந்தாயே… என்னப்பா அது?…” என்று முத்துச் செல்வம் கேட்டார்.

“அது வந்து என் கல்யாண மேட்டர்!…” என்று தயங்கித் தயங்கிச் சொன்னான்

“ நல்ல சமாச்சாரம் தானே?…என்ன தயக்கம்?..”

“ அண்ணா நகரில் இருக்கும் என் ஒன்று விட்ட மாமா இங்கு தலைமைச் செயலகத்தில் செக்கரட்டரியாக இருக்கிறார். அவர் பெண்ணை எனக்கு நிச்சயம் செய்திருக்கிறார்கள். இது தான் அவள் போட்டோ.. என் டியரஸ்ட் பிரண்ட் சொன்னாத் தான் நான் அவளைக் கட்டிப்பேன்!……” என்று போட்டோவை நிலாவிடம் நீட்டினான்.

அந்த போட்டோவை வாங்குவதற்குள் நிலாவின் கைகள் நடுங்கின.

டின்னர் முடிந்து தன் ரூமிற்கு போய் சேருவதற்குள் படாதபாடு பட்டாள் நிலா. இரவு முழுவதும் அவள் மனசில் இடியும் மின்னலோடு புயல் வீசியது..

குழந்தைப் பருவத்திலிருந்து இன்று வரை அரவிந்தன் தன் மேல் வைத்திருக்கும் மாசு மருவற்ற நட்பை குறை சொல்வது பாவம்!

இளமையில் ஏற்படும் ஆண், பெண் நட்பு பருவம் வந்ததும் அது காதலாக மாறுவது இயற்கை! அதில் எந்த சந்தேகமும் இல்லை!

ஒரு ஆண்மகன் பெண்ணின் உடலை மறந்து, உள்ளத்தை மட்டுமே பார்த்து நட்பு பாராட்டி, பருவம் வந்த பிறகும் தடம் மாறாமல் இருப்பது இலட்சத்தில் ஒருவருக்குத்தான் அது முடியும்!

ஆண் பெண் வேற்றுமை உணராத உயிருக்கு உயிரான அரவிந்தனின் நட்பை நான் மதித்ததே தீர வேண்டும் என்ற முடிவுக்கு நிலா வந்து விட்டாள்

நிலாவின் மனசில் சுனாமி வந்து ஓய்ந்து மயான அமைதி நிலவியது!

‘இந்த இருபது வருடமாக அரவிந்தன் உரம் போட்டு நீர் பாய்ச்சி வளர்த்த உன்னத நட்பை இன்று நான் காதல் என்று சொல்லி கொச்சைப் படுத்தி விடக் கூடாது! பருவம் வந்ததும் ஆண்கள் பார்வையையே மாறும் இந்தக் காலத்தில் அரவிந்தன் ஒரு ஒரு அருமையான நண்பன்! அந்த நட்பை எக்காரணத்தைக் கொண்டும் என் ஆசைக்காக நான் திசை திருப்பி விட மாட்டேன்! இது சத்தியம்!’ என்று முடிவு எடுத்த பிறகே படுக்கையில் சாய்ந்தாள் நிலா!

- ஜூன் 10 – 16 2016 

தொடர்புடைய சிறுகதைகள்
பிரபல தமிழ் எழுத்தாளர் எழிலரசு அவர்கள் தன்னுடைய 86 - வது வயசில் காலமானார். கடந்த ஒரு வாரமாக தமிழ் நாட்டிலிருந்து வெளி வரும் அனைத்துப் பத்திரிகைகளிலும், அவரைப் பற்றிய செய்திகளையும், கட்டுரைகளையும் பிரசுரம் செய்து சிறப்பு செய்தன. சில வாரப் பத்திரிகைகள் எழுத்தாளரின் ...
மேலும் கதையை படிக்க...
‘டொக்! டொக்!’ என்று கதவைத் தட்டிவிட்டு அறைக்குள்ளே வந்தாள் நர்ஸ். “ என்னம்மா!.... மாலை நாலு மணிக்கு ஆபரேஷன்….நீங்க இன்னுமா நீங்க பணம் கட்டலே!....உடனே போய் கேஷ் கவுண்டரில் பணத்தைக் கட்டிட்டு வாங்க!..” என்று நர்ஸ் சொன்னவுடன் மகன் முருகேசனைப் பார்த்தாள் பார்வதி. “ அம்மா!...நேற்று ...
மேலும் கதையை படிக்க...
இரவு இரண்டு மணி.நல்ல தூக்கம். திடீரென்று “.......சத்தியமா எனக்குத் தெரியாதுங்க!....எனக்குத் தெரியாமலேயே அவங்க செய்திட்டாங்க!.....” என்று தூக்கத்தில் உளறிக் கொண்டே எழுந்து உட்கார்ந்தார் அருணாசலம்! மனைவி மணிமாலா எழுந்து லைட் போட்டு, கணவனின் அருகில் வந்து ஆறுதலாகக் கைகளைப் பிடித்துக் கொண்டாள். கொஞ்ச நாளாவே அருணாசலம் ...
மேலும் கதையை படிக்க...
சாந்தியின் அன்பு மகன் மோகனுக்கு அவனுடைய மூன்றாவது வயசிலேயே போலியோ தாக்கப்பட்டு வலது கால் சூம்பிப் போய் விட்டது. பிறப்பும், இறப்பும் யார் சொல்லியும் வருவதில்லை. அது போல் தான் இந்த ஊனமும்! யாரும் விரும்பி ஊனம் அடைவதில்லை! பிறப்பால், விபத்தால், வியாதியால் ...
மேலும் கதையை படிக்க...
அவிநாசி ரோடு லட்சுமி மில் சிக்னல். மஞ்சள் விளக்கு மாறி சிவப்பு விளக்கு விழ இரண்டு நொடிப் பொழுது தான் இருக்கும் வேகமாக வந்த ராஜேஸின் பைக் அதே வேகத்தில் பறந்தது. எல்.ஐ.சி. சிக்னல் வந்து கொண்டே இருந்தது. சிவப்பு விளக்கு மாறிய ...
மேலும் கதையை படிக்க...
கதை!
குரு வீட்டில் சனி!
பயம்!
உலகை மாற்றும் திறனாளி!
மிக அவசரம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Sirukathaigal

FREE
VIEW