கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: October 27, 2016
பார்வையிட்டோர்: 14,723 
 

தங்க கிரீடமும் ஆபரணங்களும் தரித்த மகாராஜாக்கள் கூட கௌபீனம் தரித்த பிரம்ம ஞானியின் முன்பு தலை வணங்கிய மேன்மை பொருந்திய நாடு நம் பாரத தேசம். செல்வம், வினயத்துடன் சிரம் தாழ்த்துவது வித்யையிடமே.

தொன்று தொட்டு நம் நாட்டு கலாசாரம் அறிவுக்கும் கல்விக்கும் முதலிடம் அளித்து வந்துள்ளது. மற்றவையெல்லாம் அவற்றுக்குப் பின்பே.

நம் நாட்டின் பெயரே ‘பா-ரதம்’.

‘பா’ என்றால் ஒளி. அதுவே ஞான ஜோதி. ஞானத்தின் மீது ‘ரதம்’ அதாவது விருப்பம், சிரத்தை பெற்றிருப்பவரே ‘பாரத நாட்டினர்’.

போகங்களை சம்பாதிப்பவரை விட ஞானத்தை சம்பாதிப்பவருக்கே பூஜைக்கான அருகதை அளித்துள்ளது நம் நாடு. எந்த நாட்டில் ஞானம், அறிவு, மேதா சக்தி -இவற்றுக்கு கௌரவ மரியாதை கிடைக்கிறதோ அந்த நாடே அனைத்திலும் அபிவிருத்தி அடையப் பெரும் என்று நம் புராதன நூல்கள் விவரிக்கின்றன. கல்வியறிவு பெறுவதும் அதன் மூலம் தனி மனித ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்வதும் – இவையே வாழ்வின் மிக உயர்ந்த குறிக்கோளாகக் கொண்டனர் பாரத நாட்டினர்.

பரந்து விரிந்த பூமண்டலத்தை அரசாண்டு போக பாக்கியங்களை அனுபவித்த பேரரசர்கள் கூட தம் அகங்காரங்களை விட்டு பணிவுடன் ஞானிகளைச் சரணடைந்து அறிவு போதனை பெற்ற கதைகளை நம் இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. காடுகளில், உலக சுகங்களிளிருந்து விலகி தவ நிஷ்டையில் மூழ்கி இருக்கும் முனிவர்களான அறிவுக்கடல்களை பணிவுடன் அணுகி வணங்கினர் சக்ரவர்த்திகள். ஞானம் ஆடம்பரமற்றிருந்த போதிலும் கௌரவ மரியாதைகளில் முதலிடம் செல்வத்தை விட ஞானத்திற்கே அளிக்கப் பட்டது.

விஷ்ணு புராணத்தில் காண்டிக்யன், கேசித்வஜன் இவர்களின் வரலாறு மிகச் சிறந்த செய்தியை நம் முன் வைக்கிறது.

காண்டிக்யன், கேசித்வஜன் இருவருமே அரசர்கள். கேசித்வஜன் பராக்கிரமத்தால், அரசை விஸ்தரிக்கும் விதமாக காண்டிக்யனைத் தோற்கடித்து, விசாலமான சாம்ராஜ்யத்தை அமைதியான முறையில் அரசாண்டு வந்தான்.

காண்டிக்யன் தன்னுடன் வந்த சிறிதளவு பரிவாரத்துடன் வனத்தில் வசிக்கத் துவங்கினான். வைதீக கர்மங்களில் நிபுணனான காண்டிக்யன் யாக யக்யங்களையும் தர்ம சாஸ்திரங்களையும் நன்கறிந்தவன். கேசித்வஜன் வேதாந்த வித்யையைக் கற்றுத் தேர்ந்தவன்.

ஒருமுறை குடி மக்களின் மேன்மை கோரி ஒரு தெய்வீக யாகத்தைக் செய்ய நிச்சயித்தான் கேசித்வஜன். யாகத்தின் நடுவில் எதிர்பாராத விதமாக ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டது. அதற்குப் பிராயச்சித்தமோ அல்லது மாற்று ஏற்பாடோ என்ன செய்வதென்று அரசனுக்கு விளங்கவில்லை. ஊகிக்க முடியாத அந்த திடீர் தடங்கலை எவ்வாறு சமாளிப்பதென்று அரசவையிலிருந்த மந்திரிகளுக்கோ தர்ம சாஸ்திர நிபுணர்களுக்கோ கூடப் புரியவில்லை.

கர்ம காண்டத்திலும் தர்ம சூட்சுமத்திலும் நிபுணனான காண்டிக்யனே இதற்க்கு விடையளிக்கும் சாமர்த்தியமுள்ளவன் என்று உணர்ந்து கேசித்வஜன் தகுந்த பரிவாரத்துடன் காண்டிக்யனைச் சரணடைந்தான்.

கேசித்வஜன் தன்னைக் கொல்ல வந்துள்ளானென்று முதலில் காண்டிக்யனுக்கு ஐயமேற்பட்டாலும் அவனுடைய வினயம், வணக்கம் இவற்றை கவனித்து அவனை அதிதியாக ஏற்று கௌரவித்து ஆதரித்தான்.

“காண்டிக்யரே! யாக விஷயத்தில் விளைந்த தர்ம சந்தேகத்தை நீர் தான் தீர்த்து வைக்க வேண்டும்!” என்று பணிவுடன் வேண்டிக்கொண்ட கேசித்வஜனுக்கு காண்டிக்யன் தர்ம சூட்சுமத்தை எடுத்துக் கூறி பரிகாரத்தைக் குறிப்பிட்டான். வித்யையின் ரகசியத்தைக் கற்பிக்கும் போது களங்கமில்லாமல் எதிரி என்ற எண்ணமில்லாமல் விவரமாக விளக்கிக் கூறினான் காண்டிக்யன்.

கேசித்வஜன் பணிவுடன் காண்டிக்யனை நமஸ்காரம் செய்து விட்டு மீண்டும் தன தலைநகருக்குத் திரும்பி வந்து யாகத்தைப் பூர்த்தி செய்தான்.

யாக தீக்ஷை பூர்த்தியானவுடன், ‘ தன் கல்வியறிவால் என்னை ஆதரித்து அறிவு புகட்டிய காண்டிக்யனுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?’ என்று ஆலோசித்து, சிறந்த செல்வங்களோடும் படை பலத்தோடும் மீண்டும் வனத்திற்குச் சென்றான் கேசித்வஜன்.

‘தேவை நிறைவேறியவுடன் என்னைத் தீர்த்துக் கட்ட திரும்ப வந்துள்ளான் போலும்!’ என்ற ஐயத்துடன் தன் வில்லைத் தயார் நிலையில் வைத்தான் காண்டிக்யன். அதை கவனித்த கேசித்வஜன் “அரசே! நான் உமக்கு தீமை செய்ய வரவில்லை. நீர் செய்த உபகாரத்திற்கு பதிலாக நீர் எதைக் கேட்டாலும் அதனை அளித்து என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளவே வந்துள்ளேன்” என்றான் அன்பாக.

‘நன்றி செலுத்துவது’ என்பது எதையும் எதிர்பார்த்து செய்வதல்ல. அது செலுத்தப்பட வேண்டிய கடமைகளுள் ஒன்று.

உண்மையில் காண்டிக்யனுக்கு இது ஒரு சிறந்த தருணம். இழந்த ராஜ்ஜியத்தைத் திரும்பப் பெறக்கூடிய அவகாசம். ஆனால் உத்தம க்ஷத்திரியன் குரு தட்சணையாக ராஜ்ஜியத்தை அங்கீகரிக்க மாட்டான்.

தர்மோபதேசத்திற்கு பதிலாக, அர்த்தத்திற்கோ (பொருளுக்கோ) காமத்திற்கோ ஆசைபடுதலை விரும்பாத காண்டிக்யன், “கேசித்வஜா! நீ வேதாந்த கல்வியில் சிறந்தவன். நான் கர்ம காண்டத்தை நன்கறிந்தவன். என் அறிவு உனக்குப் பயன்பட்டது. அதற்கு பதிலாக நான் உன்னிடமிருந்து கல்வியறிவையே கோருகிறேன். வேதாந்த கல்வியை எனக்கு உபதேசித்து என்னை புண்ணியவானாக ஆக்குவாயாக!” என்று வேண்டினான்.

அதனை ஆமோதித்த கேசித்வஜன், காண்டிக்யனுக்கு வேதாந்த கல்வியை போதித்தான். கல்வியறிவு பெறுவதில் விரோத மனப்பான்மையை மறந்து விடும் உன்னத குணம் இருவரிலுமே காணப்படுகிறது. ராஜ தர்மப்படி அவரவர் பலம் அவரவருக்கு இருந்த போதிலும் கௌரவத்துடன் பரஸ்பரம் அறிவை போதித்துக் கொண்ட தர்மத்தைப் பாருங்கள். நன்றியுணர்வு, அறிவுக்கே முதலிடம் போன்ற எத்த்தனையோ மேம்பட்ட குணங்கள் இக்கதை மூலம் தெரிய வருகின்றன.

கல்வியறிவிற்காக எத்தனை தூரம் வேண்டுமென்றாலும் சென்று, எத்தனை சிரமமென்றாலும் பொறுத்துப் பெற வேண்டுமென்ற சிறந்த கலாசாரத்தை நம் சனாதன தர்மம் போதிக்கிறது.

சுபம்.

– தீபம், செப்டம்பர் 5, 2016ல் பிரசுரமானது.

தெலுங்கில்- பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா.
தமிழில்- ராஜி ரகுநாதன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *