காதலினால் ஒரு கனவு மாளிகை

 

ரேடியோவில் பாட்டுக் கேட்டு மனம் பூவாய் மலர்ந்து இறக்கை கட்டி வானில் பறந்த ஒரு பொற்காலம். கணக்கிட முடியாமால் தேய்ந்து தேய்ந்து,அழிந்து போகும் காலச் சுவடுகளில் அதுவும் ஒன்று. எனினும் நினைவு இருப்புகளில் அவளை உயிர்ப்புடன் வாழ வைக்க அந்தச் சிரஞ்சீவி ஞாபகம் ஒன்றே போதும். உடல் பார்த்துச் சொக்க வைக்கும் புறம் போக்கு அழகு நிலை கண்டு அவள்…….அந்த மனோகரி வளர்த்தெடுத்த காதல் கோட்டையல்ல அது. அவன் முகம் பார்க்காமலே ரேடியோ அலை வழியாகக் கிறங்கடிக்கும் அவனின் தேன் பாயும் கம்பீரக் குரல் கேட்டுக் அதிலேயே லயிப்புக் கொண்டு ஊறித் திளைத்த பரவச நிலைக்கு அவள் ஆளானது ஒரு சூழ் நிலைக் குற்றமே தவிரக் காலத்தின் தவறல்ல

முகமறியாமல் வானலையாய் வந்த வெறும் குரல் மட்டும் கேட்டுக் காதல் வருமா>வந்ததே அவளுக்கு ஆயிரத்தில் ஒன்றாகவல்ல கோடியில் ஒன்றாக அவள் ஓர் அபூர்வ காதல் தேவதை மெய் மறந்த உடல் நினைப்பு ஒழிந்து போன அவளின் மானஸீக வழிபாடான இந்த உயரிய காதல் வாழ்க்கை பற்றிய வரட்டுக் கண்ணோட்டங்களுக்குள் சிக்கித் தடம் புரண்டு போகாத ஒரு உண்மையான தெய்வீகக் காதல்

எப்படியாவது போகட்டும் முதலில் அவள் காதல் வளர்ந்த கதையைப் பார்ப்போம் களை கட்டிய யாழ்ப்பாண நகருக்கப்பால் அவளுடைய அந்த அழகான சின்னஞ் சிறு கிராமம். துல்லியமான ஒளிக் கீற்றுகளுடன் தலை நிமிர்ந்து நின்ற ஒரு பொற்காலம் சண்டைக்கு முன்பு கண்ணுக்கு இதமான காட்சியொளியுடன் மண் மட்டுமல்ல மனிதர்களும் கூட அப்படித்தான் நேச உறவு கொண்ட நல்லிணக்கமான சுமூக சூழ்நிலையில் எந்த இடறல் சரிவுமில்லாமல் வாழ்க்கை வாழ்வதற்கே என்று அவர்கள் போல் அவளும் நம்ப நேர்ந்தது வெறும் பகற் கனவல்ல

அவள் தேடிய அந்த வாழ்க்கை அவனையே இலக்காக வைத்து உயிர் பெற்று எழுந்தது ஒரு நிலைத் தவம் அதற்கே அவள் யுகக்கணக்காய் விழிப்பு நிலையில் காத்திருந்து தவம் கிடந்தது தினமும் ரேடியோ கேட்கத்தான் அப்போதெல்லாம் டி.வி கிடையாது வீட்டிற்கு வீடு கூட ரேடியோ இல்லாமல் அவள் தவித்த நேரம் அவள் வீட்டிற்கு இன்னும் ரேடியோ வரவில்லை அவள் இலங்கை வானொலியில் பாட்டுக் கேட்பதற்காக பக்கத்து வீட்டிற்குத் தான் போய் வருவாள் வீட்டு முதலாளி கங்காதரன் கணக்குப் பிள்ளை தென்னிந்தியாவைச் சேர்ந்தவர். யாழ்ப்பாணத்துப் பெண்ணை மணக்க நேர்ந்ததால் முழு இலங்கைப் பிரஜை தற்போது அவர். டவுனிலே அவருக்கு வேலை. அதிகாலையில் அவர் போன பிற்பாடு பாட்டுக் கேட்க மனோகரி அங்கு வருவாள்.

அவர்களுடைய வீடு பனை வடலிக்குள் இருந்தது. வெறும் மண் வீடுதான். தலை வாசல் சாணம் மெழுகி எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். அந்த வீட்டுஅம்மா மிகவும் சாது. மனோகரியைக் கண்டால் கை நிறைய வேலை இருந்தாலும் அதை நிறுத்தி விட்டுச், சாவகாசமாக வந்து ரேடியோவை போட்டுத் தானும் கூட இருந்து கேட்டு மகிழ்வாள். மனோகரி வீடும் கிடுகு வேய்ந்த அரைச் சுவர்களுடன் கூடிய சிறுமண் வீடுதான். கல் வீடு கட்டுகிற வசதி இன்னும் வரவில்லை. அப்புறம் ரேடியோ ஏது.. ரெயில்வேயில் ஏழைக் கிளார்க்காகப் பணி புரியும் பாபுவிடம் அதற்கான பண வசதியில்லை என்பதே உண்மை.. அவளுக்கு அது ஒரு பெரும் மனக் குறை தான்… இலங்கை வானொலி வர்த்தக சேவை பாட்டுத் தான் தினமும் அவள் கேட்பாள். அதில் காலத்தால் அழியாத பழைய பாடல்கள் அடிக்கடி ஒலிபரப்புவார்கள் காலை பத்து மணிக்கே அவற்றைக் கேட்க அங்கு அவள் பிரசன்னமாகியிருப்பாள்.. கல்லூரிப் படிப்பு முடிந்து வீட்டில் இருப்பதால் ரேடியோ கேட்பதிலேயே அவள் பொழுது கரைந்து போகும்.

இலங்கை வானொலி வர்த்தக சேவையில் சினிமாப் பாட்டுகள் மட்டுமல்ல வெவ்வேறு தரத்தில் கலை நிகழ்ச்சிகளும் தயாரித்து ஒலிபரப்புவார்கள். இசையும் கதையும் தேர்ந்த இசை, இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அவளும் எழுதி அனுப்புவாள்

அந்த ஒலிபரப்புகளைக் கேட்பதற்கென்றே அவள் வீட்டிற்கும் புது ரேடியோ வந்து விட்டது.. அவளுடைய கரைச்சல் தாங்காமலே அப்பா எவருடமோ கடன் பட்டு வாங்கிக் கொடுத்த ரேடியோ.. பாட்டரியில் இயங்கும் நீளமான பெரிய ரேடியோ. அதில் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான அறிவிப்பாளர் மயில்வாகனனின் குரல் மட்டுமல்ல, இன்னும் பல இளம் அறிவிப்பாளர்களும் கணீரென்ற குரல் வளத்துடன் சரளமாகப் பேசுவதைக் கேட்பதற்கென்றே அவள் ரேடியோ அருகே தவம் கிடக்கத் தொடங்கினாள்.. அதிலும் வாசு என்ற ஓர் அறிவிப்பாளன் .குழைந்து குழைந்து அவன் பேசுவதே ஒரு தேவ ராகம் போல் மனதை ஆகர்ஷித்து அவளை அவன் மீது அளப்பரிய காதல் கொள்ள வைத்தது. அவன் ஒரு குரல் மன்னன். பிசிறில்லாமல் தங்கு தடையற்றுக் கணீரென்ற கம்பீரமான குரலில் அவன் பேசுவதை நாள் முழுக்கக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம் அவன் குரலைக் கேட்பதற்காக நாள் முழுக்க அவள் ரேடியோவே கதியென்று கிடந்தாள்.. நனவில் மட்டுமல்ல கனவிலும் முகம் தெரியாத அவன் அடிக்கடி வந்து போனான்.. ஒரு எல்லையற்ற ஒளி வியாபகமான இன்பப் பெரு வெளியில் அவன் குரலை மெய் மறந்து கேட்டவாறே உடல் மறந்து போன காற்றுச் சுகத்தில் அவள் பறப்பது கூட நிகழும். எல்லாம் ஒரு கனவு மயக்கம் தான். வரம்பு கடந்த அந்தக் காதல் வெள்ளத்தில் , மூழ்கிக் கரை சேர முடியாமல் அவள் தத்தளித்து மனம் தடுமாறி நின்றதைப் பார்த்து ஒரு சமயம் அம்மா கேட்டாள்

“என்ன மனோ! முகம் சிவக்குது! கண்ணை மூடிக் கொண்டு என்ன இது? நித்திரைக் குழப்பமோ?

“ஐயோ! அப்படியெல்லாம் ஒன்றுமில்லை நான் சகஜமாய்த் தான் இருக்கிறன்”

“சும்மா கதை விடாதை உனக்குள்ளே ஏதோ மாற்றமிருக்கு அது என்னெண்டுதான் நான் கேக்கிறன்”

“அம்மா! வாசுவைத் தெரியுமல்லே “

“எந்த வாசு?

“நான் எப்படிச் சொல்ல நீங்கள் ரேடியோ கேக்கிறனீங்கள் தானே”

“அதுக்கென்ன இப்ப?”

“அங்கை தான் முடிச்சவிழப் போற என்ரை கதையே இருக்கு “

“என்ன புதிசாய்க் கதை சொல்லுறாய்?”

“அம்மா வெட்கத்தை விட்டிட்டுச் சொல்லுற.ன் iஇலங்கை வானொலி வர்த்தக சேவையிலை அறிவிப்பாளராய் இருக்கிற வாசுவை நான் மானஸீகமாய்க் காதலிக்கிறன். எனக்குக் கல்யாணம் என்று ஒன்று நடந்தால் அது வாசுவோடு தான். அப்பாவிடம் சொல்லி வையுங்கோ”

“ஓ! நீ விழுந்து விழுந்து ரேடியோ கேக்கிறபோதே நான் நினைச்சன். உது சரி வராது வெறும் குரலை மட்டும் கேட்டுக் காதல் வருமோ? எனக்குத் தலை சுத்துது?

அம்மா நீங்கள் நினைக்கிற மாதிரி வாசு ஒன்றும் பிழையான ஆளில்லை. பாட்டுப் போடுகிற போது அறிவுபூர்வமாய், அவர் சொல்கிற வியாக்கியானங்கள் ஒவ்வொன்றும் தெய்வீகமானவை.. அவற்றைக் கேட்டுக் கேட்டே மனசை இழந்தவள் நான். அவரோடு எனக்குக் கடிதத் தொடர்பு கூட இருக்கு.. சிலாபமாம் அவர் சொந்த ஊர்,. மற்றது மிக முக்கியமான இன்னொரு விடயம்.. அவர் சுத்த சைவமாம். இப்ப அதுக்காக நானும் சைவமாகப் போறன். எனக்கு இனி மரக்கறிச் சாப்பாடுதான் வேணும். கூடத் தயிரும் வேணும்”

“என்னவோ எனக்கிது சரியாய் படேலை.. மனசை விடுறதுக்கு நல்ல இடம் பார்த்தாய். எல்லாம் தலை விதி என்றாள் அம்மா மனம் கொதித்துப் போய்“

அதன் பிறகு இதை ஜீரணிக்கவே அம்மாவுக்கு வெகு நாள் பிடித்தது அப்பா பாபுவோடு இதைப் பற்றிப் பேசிப் பார்த்த போது அவர் ஊமைச் சாமியாரக இருந்து விட்டார்., எப்போதும் எதிலும் பட்டுக் கொள்ள விரும்பாத ஒரு புறம் போக்கு மனிதர் அவர். அம்மாவுக்குத் தான் நெஞ்சு கனத்தது. ஊர் உலகம் இதை அறிந்தால் பெரிய விழுக்காடுதான் என்று வெகுவாக நொந்து போனாள்

ஒரு நாள் வாசு கொழும்பிலிருந்து மனோகரியைப் பார்க்கப் புறப்பட்டு வந்து சேர்ந்தான். சில நண்பர்களோடு வந்திருந்தான். ஏற்கனவே மனோகரிக்கு அது தெரியும். அவனை வரவேற்க அவள் தான் உள்ளுணர்வாகக் கட்டி முடித்திருந்த காதல் மாளிகையினூடே பளிங்கு வாசல் கண்ணாடி பள பளக்கத் தன் வசமிழந்து நின்று கொண்டிருந்தாள்.

அவள் மனசளவிலே தான் அது மாளிகை.. அவள் வீடு தேடிவந்த அவன் கண்களுக்குத் தெரிந்ததோ வெறும் பூஜ்யம் தான். ஆம்! அவளின் வாழ்க்கைமயமான இருப்பையே மாயக் கண்கொண்டு அவன் பார்த்தாகப் பின்னாளில் அறிய முடிந்தது. அது கேட்டு அவள் மிகவும் அதிர்ச்சியுற்றாள். அங்கு அவன் வெகு அமர்க்களமாகப் புறப்பட்டு வந்து சேர்ந்த போது முதலில் அவன் கண் கொண்டு பார்த்தது அவளையல்ல. அவளுள் கம்பீர அழகு பிரகாசிக்க எழும்பி நிற்கும் அவளுடைய அந்தக் காதல் மெய்யுணர்வாகத் தோன்றுகின்ற கனவு மாளிகையையுமல்ல. பின் என்ன? அவனின் புறம் போக்கு வெளிச்சத்தையே காண அலையும் ஊனக் கண்களில் நிழல் தெறித்து நின்றது ஒரு மாளிகை போலாகாத அவளுடைய அந்தச் சிதிலமடைந்த சின்னஞ் சிறு மண் வீடுதான். அவன் இதைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத நிலையிலேயே அவனுக்கு அந்த மனச் சரிவு. .அத்தோடு அவன் மனதை விட்டு வேர் கழன்று விடுபட்டுப் போனவள் தான் ,பாவம் இந்த மனோகரி.. அதன் பிறகு அவனிடமிருந்து கடிதம் வருவதே அடியோடு நின்று போயிற்று.. இதனால் மிகவும் நிலை குலைந்து பித்துப் பிடித்த மாதிரி அவள் இருப்பதைக் கண்டு அம்மாவின் வற்புறுத்தலால் ஒரு சமயம் அப்பா கொழும்பு சென்று வாசுவைச் சந்திக்கப் போன போது அவன் கேட்டானே ஒரு கேள்வி

“ஆர் மனோகரி? அப்படி எந்த மனோகரியையும் நானறியேன்” ”என்று கையை விரித்து விட்டான்.. மனோகரி மனசளவில் களங்கமில்லாமல் உயரக் கோபுரமாய்க் கட்டி வைத்திருக்கும் காதலினாலான கனவு மாளிகைக்கு அவன் கொடுக்கும் அதி விசேடமான காதல் பரிசு அது. அது ஒன்றல்ல இன்னும் பல வரலாம். அந்த ஆணைக்கே காத்திருக்கிற மாதிரி அவள் நிலைமை.. அவளை என்ன சொல்லித் தேற்றுவதென்று புரியாமல் காலமும் கண் மயங்கி நிற்கிறது. அவளுக்கு வழி விட்ட காலம் 

தொடர்புடைய சிறுகதைகள்
எந்தக் காலத்திலும் டைரி வைத்துக் குறிப்பு எழுதும் பழக்கம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு முக்கிய நடைமுறை ஒழுக்கம் என்று நம்புகிறவனல்ல நான் இதை விட வாழ்க்கையில் தவறாது பின்பற்ற வேண்டிய மனோதர்ம ஒழுக்கங்களையே பெரிதாக நம்புகின்ற என் கண் முன்னால் ...
மேலும் கதையை படிக்க...
பாணுக்கும் மனதிற்கும் என்ன சம்பந்தம்? கேவலம் வயிற்றுப் பசி அடங்க அது ஒரு வேளை உணவு மட்டுமே. ஆனால் ஓர் ஏழையைப் பொறுத்த வரை, அதைப் பெறுவதில் கூட நிறையச் சவால்கள். .அதை எதிர் கொண்டு அனுபவபூர்வமாக உணரும் போது, வாழ்க்கையே ...
மேலும் கதையை படிக்க...
அடி வளவு மாமரத்து நிழலுக்குக் கீழே,தேவன் தீராத சத்திய வேட்கையுடன், ஏதோ கலை வழிபாடு செய்ய வந்து நிற்பது போல் உலகப் பிரக்ஞையற்றவனாய்,தன்னை மறந்து நின்று கொண்டிருந்தான்.இருபது வயது கூட நிரம்பாத அவனுக்கு அந்த வயதில் அப்படியொரு கலைத் தாபம் அவன் ...
மேலும் கதையை படிக்க...
மதுரா போகும் வழி தனித்துவானது..சராசரிப் பெண்களைப் போல வீண் ஆசைகளுக்காகத் தன்னிலை மறந்த மயக்கமே ஒரு போதும் அவளுக்கு வந்ததில்லை, உலகம் எங்கே போகிறது? அது தலை கீழாக மாறினாலும் அவள் நிலை இது தான். இந்த நிலை தொடுதலின் உச்சக் ...
மேலும் கதையை படிக்க...
மனதினுள் அடங்கி அதுவே தானாய் ஒருமுகப்பட்டு உறங்கும் நிலையில், அவர் இருந்த போது தான், எதிர்பாராத விதமாக அந்த விபரீத நிகழ்ச்சி நடந்தேறியது. அதன் முதற் தொடக்கமாக அழுகை குமுறி உச்ச கதி பிராணாவஸ்தையுடன் நிலை குலைந்து தன்வசமிழந்து சாரதா அவரை ...
மேலும் கதையை படிக்க...
அப்பாவின் டைரி
பாணோடு போன மனம்
கானலில் ஒரு கங்கை வழிபாடு
ஒரு சம நிலை வைத்தியம்
கனவு மெய்பட வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)