கதை கதையாம் காரணமாம்!

 

உலகில் நடக்கும் எதுவும் காரணமின்றி நடப்பதில்லை. சில நேரங்களில், இந்த காரணங்களும் அவற்றால் விளையும் நிகழ்வுகளும் ஆச்சர்யங்களையும், அதிர்ச்சிகளையும், ஏமாற்றங்களையும் பெயரிடப்படாத இன்னும் பல மன உணர்வுகளையும் உருவாக்குகின்றன. அதன் போக்கில் தான் மனிதன் பயணிக்க வேண்டியிருக்கிறது.

அப்படியொரு ஆச்சரியம் தான் ராகவன் வலையில் மாலதி விழுந்ததும். ராகவன், இளம்வயதிலேயே சிகரெட், டாஸ்மாக் வகைகள் எனக் கெட்டுச் சீரழிந்து, ஏரியாவின் எல்லா பெண்களுக்கும் ரூட் விட்டு, அத்தனை பேரும் போலீஸ் ஸ்டேஷனில் அவனுக்கு வாழ்த்துப்பா பாடி, பெற்றோரால் தண்ணீர் தெளித்து விடப்பட்டும் தெனாவட்டாய் திரியும் ஒரு இளைஞன்.

மாலதி, திருத்தமாய் அமைந்த வட்ட முகம், படிய வாரி மல்லிப்பூ சூடிய‌ கூந்தல், சுண்டினால் சிவக்கும் நிறம், நல்ல உயரம், அதற்கேற்ற சதைப்பிடிப்பான உடல்வாகு, பொறியியல் கல்லூரி படிப்பு, காரில் கொண்டு வந்து விடும் வீடு என ஏரியாவின் அத்தனை வாலிபர்களின் ஒரக்கண்களிலும் தவறாமல் பதிந்துவிடும் குடும்பத்து விளக்கு.

இந்த இரண்டு துருவங்களும் எப்படி இணைந்தது? இணைந்த‌து என்ப‌து த‌வ‌றான‌ வார்த்தை. ஆனால் அந்த‌ ஆச்ச‌ர்ய‌மான‌ சோக‌த்தை வெளிப்ப‌டுத்த‌ வேறு வார்த்தை கிட்ட‌வில்லை. இப்போதைக்கு இப்ப‌டியே இருக்க‌ட்டும்.

கதையின் முக்கிய‌மான‌ இட‌த்தை முத‌லில் சொல்லி விட‌வேண்டும். ராக‌வ‌ன் இருக்கும் ஏரியாவும், மால‌தி இருக்கும் ஏரியாவும் வெவ்வேறு. இனி காரணங்கள் எப்படி வேலை செய்கின்றன என்று பார்க்கலாம். இன்னொரு ஏரியா பெண்ணிட‌ம் ல‌வ் லெட்ட‌ர் த‌ருவ‌து இதுவே முத‌ல் முறை ராக‌வ‌னுக்கு. எந்த‌ நேர‌த்தில், எந்த‌ ஏரியாவிலிருந்து எவ‌ன் ந‌ம்மிட‌ம் ச‌ண்டைக்கு வ‌ருவானோ என்று க‌ல‌வ‌ர‌மாய்த் திரியும் ராக‌வ‌னுக்கு நேரெதிரான‌ ம‌ன‌ உணர்வுக‌ளைக் கொண்டிருந்தாள் மால‌தி.

இதோடு, அவ‌ள் கைக்கு வந்திருக்கும் இருப‌தாவ‌து ல‌வ் லெட்ட‌ர் அது. ஆனால் லெட்ட‌ர் கொடுத்த‌ அவ‌ன் பேசிய‌ பேச்சைத்தான் ம‌ன‌ம் ரீவைண்ட் செய்து கொண்டிருந்த‌து. “நான் ரொம்ப‌ சாதார‌ணமான ஆளுதான். வேலை தேட‌றேன். இன்னும் கிடைக்க‌ல‌. கிடைச்சுடும். உங்க அழகுக்கு என்ன‌ விட‌ அழ‌கா, ந‌ல்ல‌ வேலையில‌ இருக்கிற பைய‌ன் உங்க‌ளுக்கு கிடைப்பான்தான். நான் உங்க‌ளைக்‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌ ஆசை‌ப்ப‌ட‌றேன். யோசிச்சு சொல்லுங்க‌…” ஏதோ இன்ஃபோசிஸ் நாராய‌ண‌மூர்த்தியையும், அலைபாயுதே மாத‌வ‌னையும் ஒரே நேர‌த்துல‌ துணைக்கு வ‌ச்சுக்கிட்டு பேசின‌து மாதிரி பேசின‌துக்கு ஒரு கார‌ணம் இருக்கு.

ஏற்கனவே, ஏரியா பொண்ணுகிட்ட லவ்லெட்டர் குடுக்குறப்போ கத்திப்பாரா சந்திப்புல இருக்குற ஒரு கம்ப்யூட்டர் கம்பெனில‌ வேலைன்னு எக்க‌ச்ச‌க்க‌மா புருடா விட்டு, க‌டைசியில‌ உண்மை தெரிஞ்சி போய் அந்த‌ பொண்ணு போலீஸ்ல‌ சொல்ல‌ ரெண்டு நாள் ஸ்டேஷ‌ன்ல‌ முட்டிக்கு முட்டி த‌ட்டின‌து நென‌ப்புல‌ இருந்த‌துனால‌ வேற‌ என்ன‌ சொல்ற‌துன்னு யோசிச்சு ஓண்ணும் தோணாம‌ ட‌க்குனு ஏதோ சொன்ன‌துதான் இது. அதுக்க‌ப்புற‌ம் வீட்டுக்கு போய் தூக்க‌ம் வ‌ராம‌ மோட்டுவ‌ளைய‌ பாத்துக்கிட்டு “வேற‌ மாதிரி சொல்லிருக்க‌ணுமோ” ன்னு யோசிச்ச‌து வேற‌ கதை.

ஆனால், மால‌திக்கு தோன்றிய‌து வேறு. “பொய் சொல்லி ஏமாத்த ட்ரை பண்ற இந்த காலத்துல எவ்வ‌ள‌வு உண்மையா, வெளிப்படையா பேசினான்” என்ப‌துதான். இங்கே அவள் செய்த தவறு, உண்மையில், ஆண்களின் வார்த்தைகளைப் பெண்கள் எவ்விதமாய் அணுகுவார்கள் என்கிற ட்ரிக் தெரிந்தவர்களாகத்தான் பல ஆண்கள் இருக்கிறார்கள் என்பது தெரியாமல் இருந்ததுதான். அப்படியொரு ஆண் இப்படி பேசியதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. இப்படிபட்ட ஆண்களைச் சந்திக்கும் பெண்கள் தங்கள் மகள்களுக்கு ஏன் இதை சொல்லி வளர்ப்பதில்லை என்பதும் ஒரு புரியாத புதிர்தான்.

உட‌ல் சுக‌த்திற்காக‌ அப்பாவின் ச‌ட்டையிலிருந்து சுட்ட‌ ஆயிர‌ம் ரூபாயில் ஒரு விப‌ச்சாரியை அணுகி அவ‌ளால் முன்ப‌க்க‌ம் ச‌ரிந்து போன‌ வ‌யிற்றை அவ‌ன் இன் செய்யாம‌ல் விட்டு ம‌றைத்த‌தை, அவளின் முட்டாள் தோழிகள் அவளுக்கு உதவுவதாய் நினைத்து “இன்னிக்கு இருக்கிற‌ ப‌ச‌ங்க‌ யாருக்கு தொப்பை இல்லாம‌ இருக்கு?” என்று த‌ங்க‌ளுக்குத் தெரிந்த‌ “ஆண்க‌ள் ர‌க‌சிய‌த்தை” சொல்லி மேலும் த‌வ‌றாக்கினார்க‌ள். உடலின் பல்வேறு மாற்றங்களை பல்வேறு காலகட்டங்களில் உற்றுக் கவனித்தால் இது போன்ற சில விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். இதற்கு பயாலஜியின் அடிப்படை தெரிந்திருந்தால் நல்லது. ஆனால் நம் மக்கள் படிப்பது, பரீட்சை முடிந்ததும் அதை அப்படியே மறந்து விடுவதே பெரும்பாலும் நடக்கிறது.

வெவ்வேறு ஏரியா என்பதால் அவனைப் பற்றிய இவ்வாறான பல உண்மைகள் அவளுக்குத் தெரியாமல், தெரிந்து கொள்ள முடியாமல் போனது. சில நேரங்களில், இப்படித்தான் சிலருக்கு சில விஷயங்கள் சாதகமாகவும், சம்பந்தப்பட்டவருக்கு பாதகமாகவும் அமையும்.

போன‌ வ‌ருட‌மே முடித்திருக்க ‌வேண்டிய‌ பி.ஏ. ச‌ரித்திர‌த்தில்‌ முடிக்காம‌ல் வைத்திருந்த ப‌ல‌ அரிய‌ர்க‌ளுக்கு கூட‌ அவ‌ன் அவ‌ளையே கைகாட்ட‌, ‌ப‌ரிதாப‌ உண‌ர்வில் பாஸ் செய்யத்‌ தேவை 30 ம‌திப்பெண்க‌ளே, மீதி ஐந்து ம‌திப்பெண்க‌ளை பேப்ப‌ர் திருத்தும் ஆசிரிய‌ர்க‌ளே பாவ‌ப்ப‌ட்டு போட்டு விடுவார்க‌ள், படிக்கக் கொடுக்கப்பட்ட ஒரு வருடத்தில் 30 ம‌திப்பெண்க‌ள் வாங்க‌ முடியாதா? என்கிற‌ அடிப்ப‌டை லாஜிக் கூட‌ யோசிக்க‌ முடியாம‌ல் அவ‌னை விட பெரிய முட்டாளாகிப் போனாள் மால‌தி. இங்கே அவள் யோசிக்காமல் விட்டதும் இதைத்தான். பொதுவாகப் பெண்களுக்கு இப்படித்தான். சிம்பதியில் சிறுமூளை வேலையே செய்வது இல்லை.

இத‌ற்கிடையில், அவ‌ன‌து அப்பா எங்கேயோ யாரையோ பிடித்து கையிலும் காலிலும் விழுந்து வாங்கிய‌ பி.பி.ஒ. வேலையில் சொற்ப‌ வ‌ருமான‌த்தில் உட்கார்ந்த‌வ‌ன் ப‌ண்ணிய‌ அல‌ட்ட‌லில் கால‌னியே காணாம‌ல் போன‌து. அப்போது தெரிய‌ வ‌ந்த‌ அவ‌ன‌து குடிப்ப‌ழ‌க்க‌த்தையும், அவ‌ள‌து அதே தோழிக‌ள் “க்ளைய‌ண்ட் கூட‌ க‌ம்பெனி குடுக்க ‌வாச்சும் குடிச்சிதான் ஆக‌ணும். மேலும், இப்போல்லாம் யாரு குடிக்காம‌ இருக்கா?” என்று அதே ப‌ழைய‌ லாஜிக் பேசி, மொத்த‌த்தில் ப‌ச்சைப்பாவியான‌ அவ‌னை அப்பாவியாக்கி விட்டார்க‌ள். இப்போதெல்லாம், ச‌ற்றேற‌க்குறைய‌ எல்லா பெண்க‌ளும் இப்ப‌டி நினைக்க‌ ஆர‌ம்பித்து விட்டார்க‌ள் என்ப‌து ச‌ற்றே வருத்த‌ம‌டைய‌ச்செய்யும் உண்மைதான்.

மொத்த‌த்தில், ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ அவ‌ள் யோசிக்காம‌ல் விட்ட‌ ப‌ல‌ கார‌ண‌ங்க‌ளால், அங்கே ஒரு ச‌ம்ப‌ந்த‌ம் உருவாயிற்று. ஏமாறுகிறோம் என்று தெரியாம‌லேயே ஏமாந்து கொண்டிருந்தாள் பெண்ணொருத்தி. அவ‌ளுக்கு தெரிந்த‌ “நியாய‌ங்க‌ளைக்” கொண்டு ப‌ல‌ அநியாய‌ங்க‌ளுக்கு வித்திட்டுக் கொண்டிருந்தாள். அவற்றுள் பிரதானமான முதல் அநியாய‌ம், இவ‌ன் த‌ண்ணிய‌டித்து விழுந்து கிட‌ந்த‌ நேர‌த்தில், ஒழுங்காய் வேலைக்குச் சென்று, ச‌ம்பாதித்து பெற்றோரைக் காப்பாற்றிய‌, இவ‌ளை ஒரு தலையாய் நேசித்த‌வ‌ன் வேலைக்குப் போக‌ வேண்டியிருந்த‌தால் விட்ட‌ நேர‌த்தில் முந்திக் கொண்ட‌ ராக‌வ‌னுக்கு இவ‌ள் போன்ற‌ குத்துவிள‌க்கு காத‌லியாய் கிடைத்த‌து. சில‌ நேர‌ங்க‌ளில், சில‌ ந‌ல்ல‌ விஷ‌ய‌ங்க‌ள் கூட‌ பாத‌க‌மாய் அமையும். அது எது பாத‌க‌ம் என்ப‌தைப் பொறுத்து அமையும்.

இர‌ண்டாவ‌து அநியாய‌ம், அது நாள்வ‌ரையில் பொறுப்பாக‌த் த‌ன் ஆசை ம‌க‌ள் திரும‌ண‌த்திற்க்கென‌ ச‌ம்பாதித்து எத்த‌னையோ க‌ன‌வுக‌ளுட‌ன் க‌ல்யாண‌ம் செய்ய‌ காத்திருக்கும் பெற்ற‌வ‌ன் த‌ன் பெண் விரும்பி விட்டாள் என்கிற‌ ஒரே கார‌ண‌த்துக்காய் க‌ண்ட‌வ‌ன் காலில் விழ‌ வேண்டிய‌ அவ‌ல‌ம். மால‌தியைப் பொறுத்த‌வ‌ரை, அவ‌ள் காத‌ல‌ன் ந‌ல்ல‌வ‌ன் என்கிற‌ த‌வ‌றான‌ எண்ண‌ம் இருக்கும்வ‌ரை இது போன்ற‌ ஆச்ச‌ர்ய‌ங்க‌ள் நிக‌ழ‌த்தான் செய்யும்.

மூன்றாவ‌து அநியாய‌ம், அவ‌ளின் க‌ண‌வ‌னுக்கான‌ அத்த‌னை எதிர்பார்ப்புக‌ளும் அவ‌னுட‌ன் ஏமாற்ற‌ங்க‌ளாக‌ப் போகின்ற‌ன‌ என்ப‌து தெரியாம‌லே, அவ‌ளாக‌வே முன்வ‌ந்து திரும‌ண‌ம் வ‌ரையில் சென்று, ம‌ண‌முடித்த‌ பின், அவ‌ன் சுய‌ரூப‌ம் தெரிந்த‌தும், தான் ஏமாற்ற‌ப்ப‌ட்ட‌தை உண‌ர்ந்த‌தும் பெண்ணுக்கு, த‌ன் முடிவினை பிற‌ர் முன் நியாய‌ப்ப‌டுத்தும் விதமாக‌, தான் அறிய‌ வ‌ந்த உண்மைக‌ளை ம‌றைத்துத் தான் தேர்ந்தெடுத்த‌ ‌வாழ்க்கையும் ந‌ன்றே என்று சொல்லும் வித‌மாக‌வே ந‌ட‌க்கின்ற‌ன‌ர்.

இப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளே காத‌ல் திரும‌ண‌ங்க‌ளை பிற்பாடு எதிர்ப்ப‌வ‌ர்களாக‌‌ இருக்கின்றனர். ஆனால், இவ‌ர்க‌ளால் ஏன் த‌ன் பெண்ணுக்கோ, பிள்ளைக்கோ இம்மாதிரியான‌ த‌வ‌றுக‌ள் இல்லாத‌ ஒரு காத‌லை கண்டு கொள்ள க‌ற்றுக்கொடுக்க‌ முடிவ‌தில்லை என்ப‌து சுவார‌ஸ்ய‌மான‌ வேறொரு க‌தை.

என்னங்க இந்தக் கதையில ஏதாவது காரணம் இருக்குமுன்னு உங்களுக்குப் புரியுதா? அட போங்கங்க… இப்படித்தான் காரணமில்லாம…நீங்க எதையாவது புரிஞ்சுக்கிட்டு…இருப்பீங்க… 

தொடர்புடைய சிறுகதைகள்
அந்த பன்னாட்டு நிறுவனத்தின் ஏசி கேன்டீனில் அப்போதைக்கு ஜாஸ்தி கூட்டம் இல்லைதான். கண்ணாடிச் சுவர்களுக்கு அப்பால், புல் தரையினூடே அமைந்த நடைபாதையில் தங்கள் ஆக்ஸஸ் கார்டுகளைத் தேய்த்தபடி போய் வந்து கொண்டிருந்த என்ஜினியர்களைப் வெறுமையாய்ப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் ராகவன். உண்மையில் அது அவன் ...
மேலும் கதையை படிக்க...
வானம் மப்பும் மந்தாரமுமாய் காட்சியளித்தது. மாலை சாய்ந்திருந்த வேளை, நடுத்தர குடும்பங்கள் வசிக்கும் புஷ்பம் காலனி பெரியவர்கள், மழை வரப்போவதாய் குறிப்பறிந்து தத்தம் வீடுகளின் முன்பாக கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை வீட்டிற்குள் விரட்டிக்கொண்டிருந்தனர். விளையாட இடம் கிடைத்த தோரணையில் அங்குமிங்கும் சுற்றித்திரிந்த ...
மேலும் கதையை படிக்க...
ஒரு கைதேர்ந்த கொலைகாரன், நாடி, நரம்பு, பேச்சு, மூச்சு, சுவாசம் என சகலமும் கொலை வெறியால் நிறைந்து, அடங்காத கொலைப்பசியில் எதிரியைக் கைக்கெட்டும் தூரத்தில் கண்டம் துண்டமாய்க் கிழித்துப்போடும் வன்மத்தில் அவன் மீது அரிவாளுடன் பாய‌ அவதானிக்கும் நிலையில் அவனின் மனநிலை ...
மேலும் கதையை படிக்க...
கதிருக்கு தன் கண்களைத் தன்னாலேயே நம்ப முடியவில்லை. கணிப்பொறித் திரையையே வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான். திரையில் ஒரு பெண். இருபத்தைந்து வயது இருக்கலாம். திருமணமானவள் போலத் தோன்றவில்லை. வாளிப்பான உடல். முகம் தெரியவில்லை. ஆனால், அவளின் அங்கங்களை எடுத்துக்காட்டும் உடையில் அவளின் ...
மேலும் கதையை படிக்க...
பெட்ரூமில் தொங்கிக்கொண்டிருந்த சீலிங் ஃபேனை தாங்கிப் பிடிக்கும் ஸ்க்ரூக்களை மிகவும் கவனமாக ஸ்க்ரூ ட்ரைவரால் திருகி லூசாக்கிக் கொண்டிருந்தான் வைத்தி என்கிற வைத்தியனாதன். வைத்தி அந்த வீட்டின் ஓனர் சாந்தினியின் மாமா. சாந்தினியின் கணவன் ராகவுடன் பிஸினஸ் செய்கிறான். சாந்தினியின் அப்பாவின் ...
மேலும் கதையை படிக்க...
மாலதியின் புத்திசாலித்தனம்
நீ விரும்பும் தூரத்தில்
தண்டனை
போலீஸ் வந்துவிட்டால்…
படுக்கையறைக் கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)