அகிம்சை காதல்

 

கனகசபேசன், மனைவி ராஜேஸ்வரியுடன் சினிமா தியேட்டரை அடைந்தபோது, மெல்ல இருட்ட ஆரம்பித்திருந்தது. பழைய படம் என்பதால், கூட்டம் அவ்வளவாக இல்லை. டிக்கெட் வாங்க சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்தபோது, அவரை நெருங்கிய, இளைஞன் ஒருவன்,”சார்…”என்று, தயக்கத்துடன் அழைத்தான்.

‘என்ன?’ என்கிற பாவனையில், அவனை ஏறிட்டுப் பார்த்தார் கனகசபேன்.

”சார்… என் நண்பனுக்கும் சேர்த்து, டிக்கெட் எடுத்துட்டேன், அவனுக்கு, ஏதோ அவசர வேலையாம்; வரமுடியாதுன்னு, இப்ப போன் செய்து சொல்றான். தனியா உட்காந்து படம் பாக்க எனக்குப் பிடிக்கல. இந்த டிக்கெட்ட, நீங்க வாங்கிக்கிறீங்களா?”

சிறிது யோசித்து, ”சரி, கொடுங்க தம்பி,” என்று, அவன் கொடுத்த டிக்கெட்டுக்களை வாங்கிக்கொண்டு, ”இந்தா தம்பி பணம்,” என்றார்.

”சேச்சே… பணம் வேணாம் சார். என் நண்பன் வந்திருந்தா, நான் படம் பார்த்திருப்பேனில்லையா… அவனுக்குப் பதிலா, இப்ப நீங்க பாக்கப் போறீங்க; நானே படம் பாத்ததா நெனைச்சுக்றேன்.”

”அது எப்படி தம்பி… இந்தப் பணத்த, நீங்க வாங்கித்தான் ஆகணும்.”

அவர் எவ்வளவு வற்புறுத்தியும், அவன் பணம் வாங்க மறுத்து விட்டான்.

”சார்… படம் போடப் போறான்; சீக்கிரம் போங்க சார்.”

அவசரப்படுத்தி அவர்களை தியேட்டருக்குள் அனுப்பிவிட்டு, அங்கிருந்து அகன்றான், அந்த இளைஞன்.

”தம்பி யாரோ… நல்ல பையனா தெரியறான்.”

ராஜேஸ்வரி சொன்னது, அவன் காதில் விழாமலில்லை.

ஒரு வாரம் ஓடி இருக்கும்.

கோவில் பிரகாரத்தைச் சுற்றி வந்துகொண்டிருந்தனர் கனகசபேசனும், ராஜேஸ்வரியும். எதிரே அவன்.

”வணக்கம் சார்.”

‘சட்’டென அடையாளம் கண்டு, ”அடடா… நீங்களா தம்பி! நல்லா இருக்கீங்களா?” என்றவர், மனைவி பக்கம் திரும்பி, ”அன்னைக்கு நமக்கு சினிமா டிக்கெட் கொடுத்தாரே, அந்த தம்பிதான்,” என்றார்.

”தெரியுமே! நல்லா ஞாபகம் இருக்கு,” என்றாள் ராஜேஸ்வரி.

”இந்தாங்க தம்பி பிரசாதம்.”

பயபக்தியுடன் வாங்கிக் கொண்டான்.

பேசிக்கொண்டே நடந்து, கோவிலைச் சுற்றி பின் பக்கம் வந்து, குளத்துப் படிகட்டில் அமர்ந்தனர்.

”உங்க பேர சொல்லலையே…” என்று கேட்டார் கனகசபேசன்.

”என் பேரு ராஜகோபால். சுருக்கமா ராஜ்ன்னு கூப்பிடுவாங்க. பாங்க்ல வேலை செய்றேன்.”

”ஓ… அப்படியா! ரொம்ப சந்தோஷம். கல்யாணம் ஆயிருச்சுங்களா?”

”இல்ல சார். இப்போதைக்கு செய்ற மாதிரி ஐடியா இல்ல.”

”ஏன் தம்பி?”

”வேலையில சேர்ந்து, ரெண்டு வருஷம்தான் ஆகுது. பேங்க் எக்ஸாம் எழுதியிருக்கேன். அதில பாஸ் ஆயிட்டா பிரமோஷனும், நல்ல சம்பளமும், கெடைக்கும். அதுக்கப்புறம் கல்யாணத்தப் பத்தி யோசிக்கலாம்ன்னு…”

”பேஷ்… பேஷ்! வாழ்க்கைய புரிஞ்சுக்கிட்டு, அதுக்கேத்தா மாதிரி திட்டம் போட்டு நடந்துக்கற, உங்க நல்ல பழக்கத்த, பாராட்டறேன்,” என்றவர், ”சரி தம்பி, அப்ப நாங்க கெளம்பறோம்,” என சொல்லி, எழுந்துகொண்டார் கனகசபேசன்.

”ரொம்ப நல்லது சார்,” என்று கூறி, கரம் குவித்து வணங்கி, விடைபெற்றான் ராஜ் என்கிற ராஜகோபால்.

மண்டையைப் பிளக்கும் உச்சி வெயில்; மின்வாரிய அலுவலகத்தில் செம கூட்டம். கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் காத்திருந்தனர் மக்கள்.

வரிசையோ நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது.

தலையில் துண்டை போட்டுக் கொண்டு, சிரமப்பட்டு நின்று கொண்டிருந்தார் கனகசபேசன்.

”குட் மார்னிங் சார்.”

அவர் காதருகே ஒலித்த குரல் கேட்டுத் திரும்பினார் ராஜகோபால்.

”வெரி குட்மார்னிங். வாங்க தம்பி… நீங்களும் பணம் செலுத்த வந்தீங்களா?”

”இல்ல சார். இந்த வழியா போய்க் கிட்டிருந்தேன்; உங்களப் பாத்துத்தான் வந்தேன். கொடுங்க சார் நான் கட்டறேன்.”

”அடடா… உங்களுக்கு எதுக்கு தம்பி சிரமம்?”

”ஒரு சிரமமும் இல்ல சார். இந்த வேகாத வெயில்ல, ஏன் இப்படி கஷ்டப்படறீங்க! அதோ… அந்த புளிய மரத்து நெழல்ல போய் உட்காருங்க. நான் பில்ல கட்டிட்டு வர்றேன்.”

பலவந்தமாய், அவர் கையிலிருந்து அட்டையையும், பணத்தையும் பிடுங்கிக் கொண்டான். கனகசபேசன் மர நிழலுக்கு வந்தபோது, சொர்க்கத்துக்கே வந்தது போலிருந்தது.
அரை மணி நேரத்துக்குப் பின் வந்த ராஜகோபால், ”இந்தாங்க சார்,” என்று, மின் அட்டையை, மீதி பணத்துடன் திருப்பிக் கொடுத்தான்.

”ரொம்ப நன்றி தம்பி,” என்றவாறு கிளம்பினார்.

”ஸ்… அப்பாடா” என்றவாறு, வீட்டுக்குள் நுழைந்த கனகசபேசன், மின் விசிறியை முடுக்கி, ஈஸி சேரில் சாய்ந்தார்.

”என்னங்க… கரன்ட் பில் கட்டிட்டீங்களா?” என்று கேட்டுக்கொண்டே வந்து, சேரில் அமர்ந்தாள் ராஜேஸ்வரி.

”ராஜி… உனக்கொரு விஷயம் தெரியுமா… ஈபி ஆபிஸ்ல பயங்கர க்யூ. வெயில்ல நிக்கறதுக்கே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஒடம்பெல்லாம் வியர்வை ஆறாப் பெருகி, பிசுபிசுக்குது… அந்த நேரம் பார்த்து, அங்க வந்தது யார் தெரியுமா?”

”யாரு?”

”நம்ம ராஜகோபால் தம்பிதான். என்னை நிழல்ல உட்கார வெச்சுட்டு, பணம் கட்டி, என்னை அனுப்பி வெச்சுது.”

”அப்படியா… இந்தக் காலத்துல, அதுவும் இவ்வளவு சின்ன வயசுல, இப்படி மத்தவங்களுக்கு உதவுற குணம் ஒரு சிலருக்கு மட்டும்தாங்க வரும்.”

”நீ சொல்றது நூத்துக்கு நூறு உண்மை. சமூக சேவைங்கறது சாதாரண விஷயமில்ல; இள வயசுல, சேவை மனப்பான்மை இருந்தா, வயசாக இன்னும் கூடி, ரத்தத்திலே ஊறிப் போகும்.”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, அங்கே வந்தாள் மகள் மலர்விழி.

”அப்பா…”

”என்னம்மா?”

”ஒரு நல்ல வேகன்சி வந்திருக்குப்பா. அதுக்கு விண்ணப்பிக்கலாமுன்னு நெனைக்றேன்பா.”

”எதுக்கும்மா வேலைக்கெல்லாம் போகணும்ன்னு நெனைக்ற?”

”என்னப்பா நீங்க… பி.காம்., வரை படிக்க வெச்சுட்டு, இப்படி பேசறீங்க… இந்த காலத்துல, பொண்ணுங்க வேலைக்குப் போறதெல்லாம் சர்வசாதாரணம்ப்பா!”

”ஆமாங்க. பக்கத்து வீட்டு மாமிகூட சொன்னாங்க; வேலைக்குப்போற பொண்ணுதான் வேணும்ன்னு, நிறைய வரன்கள் விரும்புறாங்களாம்,” என்று மகளுக்கு ஆதரவாகப் பேசினாள் ராஜேஸ்வரி.

”என்னவோ… உன் விருப்பம்போல செய்மா.”

”அப்ளிகேஷனோடு, ஒரு டிராப்ட்டும் அனுப்பணும்பா.”

”சரி… வெவரத்தை எழுதி குடு. நாளைக்கு காலையில டி.டி., எடுத்துக் கொடுக்கறேன்.”

மறுநாள் காலை, மலர்விழி எழுதிக் கொடுத்த விவரங்களோடு, வங்கிக்குப் போனார் கனக சபேசன்.

வங்கி படுசுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.

கனகசபேசன், எந்த கவுன்டருக்குப் போவது என, குழம்பி நின்றபோது, அவரைக் கடந்து போன ராஜகோபால், ‘சட்’டென நின்றான்.

”சார், நீங்களா?”

”அட, ராஜகோபால் தம்பிங்களா… ‘டை’ யெல்லாம் கட்டியிருக்கறதப் பாத்தா நீங்க, இந்த பேங்க்லத்தான், வேலை செய்றிங்க போல?”

”ஆமாம் சார். வாங்க… என் அறைக்கு போகலாம்.”

சொல்லிவிட்டு ராஜகோபால் நடக்க, அவனை பின் தொடர்ந்தார் கனகசபேசன்.

எதிர்த்த இருக்கையில், அவரை அமரச் செய்தவன், தானும் அமர்ந்து ”என்ன வேலையா வந்தீங்க சார்?” என்று கேட்டான்.

விவரத்தைச் சொன்னார்.

மணி அடித்து பணியாளை அழைத்தவன், டி.டி., எடுத்துக் கொடுத்ததோடு, காபியும் வழங்கி உபசரித்தான்.

சந்தோஷமாய் கிளம்பிச் சென்றார் கனகசபேசன்.

நாட்கள் படுவேகமாய் நகர்ந்தன. அன்று மலர்விழியை பெண் பார்க்க, வரன் வீட்டினர் வந்திருந்தனர்.

பையன் வேறு யாருமில்லை, ராஜகோபால்தான்!

கனகசபேசனும், ராஜகோபாலும் நேருக்கு நேர் பார்த்ததில், இருவர் கண்களிலும் ஆச்சரியம்.

”சார்… நீங்களா!”

”தம்பி நீங்களா!”

”போன மாசம்தான், எனக்கு அசிஸ்டென்ட் மேனஜரா பிரமோஷன் கெடச்சது. உடனே, அப்பா எனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சுட்டார். ஆனா, உங்க வீட்டுக்குத்தான் வரப் போகிறோம்ன்னு தெரியாது சார்.”

”தரகர் சொன்னப்போ, எனக்கு லேசா ஒரு சந்தேகம் இருந்துச்சு தம்பி, நீங்களா இருப்பீங்களோன்னு. அது சரியாப் போச்சு. வாங்க வாங்க,” என்றவாறு வந்தவர்களை வரவேற்று, ஹாலில் அமரச் செய்தார்.

ஏற்கனவே, ராஜகோபால் பற்றி நல்ல அபிப்பிராயம் இருந்ததால், பேச்சு வார்த்தை சுமூகமாய் முடிந்து, முகூர்த்த தேதியும் குறிக்கப்பட்டு, ஒரு சுபயோக சுபதினத்தில், படு அமர்க்களமாய் நடந்தேறியது ராஜகோபால் — மலர்விழி திருமணம்.

முதலிரவு —

ஊதுவத்தியின் நறுமணமும், பலவிதப் பூக்களின் வாசமும், அறை முழுக்கப் பரவி, ஒருவித கிறக்கத்தை ஏற்படுத்தியது.

பால் கிண்ணத்தை ராஜகோபால் கையில் கொடுத்துவிட்டு, நாணத்துடன் தலை கவிழ்ந்து, கட்டிலில் அமர்ந்தாள் மலர்விழி.

”ஏய்… என்ன, என்னை என்னமோ முதல் தடவையா பாக்ற மாதிரி வெக்கப்படறே,” என அவளைப் பார்த்துக் கேட்டான் ராஜகோபால்.

அவனை நிமிர்ந்து நோக்கிய மலர்விழி, ”ஆனாலும், நீங்க படா கில்லாடி ஆளுதான்,” என்றாள்.

”எப்படி?”

”சொன்னது போல காதலிச்ச என்னையே கைப்பிடிச்சுட்டீங்களே… அதுவும் பெரியவங்க சம்மதத்தோட.”

”ஓ… அதச் சொல்றியா… அன்னைக்கு உனக்காக டிக்கெட் எடுத்து, தியேட்டருக்கு வெளியே காத்திருந்தப்ப, திடீர்ன்னு உங்க அப்பா – அம்மாவ பாத்ததும், உடனே உனக்கு போன் செய்து வரவேணாம்ன்னு சொல்லிட்டு, அந்த டிக்கெட்டுகளை, அவங்களுக்கு கொடுத்து, படம் பாக்க அனுப்பி வெச்சதுக்கு அப்பறம் தான், எனக்கு ஓர் ஐடியாவே உதயமாச்சு.”

”என்ன ஐடியா?”

”பொதுவா நம்மள மாதிரி காதலர்கள் என்ன செய்றாங்க… தீவிரமா காதலிக்க வேண்டியது, தங்கள் காதல பெத்தவங்ககிட்ட, எடுத்து சொல்ல போராட வேண்டியது… அப்பறம் எதிர்ப்பு, சண்டை, சச்சரவு, மோதல், அடி-தடி, வெட்டு- குத்து, போலீஸ் கேஸ்ன்னு ஆகி, போலீஸ் ஸ்டேஷனிலே காதல் ஜோடி கல்யாணம் செய்துக்குறது அல்லது தற்கொலை; இப்படித் தானே, காலங்காலமா நடந்துகிட்டிருக்கு. காதல்ன்னாலே இந்தப் பெத்தவங்களும் ஏதோ பாவகாரியத்த செய்திட்டதா நெனச்சு எகிறி, கொஞ்சங்கூட யோசிக்காம, காதலிச்ச குற்றத்துக்காக, முன் பின் அறிமுகமில்லாத ஒருத்தனப் பிடிச்சு, ‘சட்டு புட்டு’ன்னு கட்டி வெச்சு, பொண்ணை பாழுங்கிணத்துல தள்ளிவிட்ற வேண்டியது. இந்த கொடுமைக்கெல்லாம், ஒரு முற்றுப் புள்ளி வைக்கணும்ன்னு யோசிச்சேன்.

”அதுதான், இந்த புதிய யுக்தியக் கடைபிடிச்சேன். நீயும், உன் அப்பா எங்கெல்லாம் போகிறார்ன்னு போன் மூலமா அடிக்கடி தகவல் கொடுத்தது, ரொம்ப உதவியா இருந்துச்சு. யாரோ, ஓர் அந்நியனா அறிமுகமாகி, அவங்க நம்பிக்கைக்குப் பாத்திரமாகி, என்னுடைய குணம், அந்தஸ்து எல்லாத்தையும் அவங்களுக்கு புரியவச்சு, ஒண்ணுமே தெரியாதவன் போல், பெண் பார்க்க வந்து, கடைசியில கத்தியின்றி, ரத்தமின்றி என் காதல வெற்றிப் பெற வெச்சுட்டேன்,” என்று விளக்கினான் ராஜகோபால்.

”அதனால்தான் உங்கள, ‘கில்லாடி’ன்னு சொன்னேன்,” என்றவாறு மகிழ்ச்சியுடன், அவன் மார்பில் சாய்ந்தாள் மலர்விழி.

- மலர்மதி (பெப்ரவரி 2014) 

தொடர்புடைய சிறுகதைகள்
அந்தக் காலகட்டத்தில் என் கல்லூரி நண்பர்கள் அனைவருமே காதலில்தான் இருந்தோம். உங்களின் சந்தேகம் எனக்குப் புரிகிறது. நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெண்களைக் காதலித்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் எல்லாம் அவர்களைக் காதலித்தார்களா என்று எனக்குச் சரியாகத் தெரிய வில்லை. அது தெரிந்து ...
மேலும் கதையை படிக்க...
அலமேலு என்று யாழ்ப்பாணத்தில் ஒருவரும் பெயர் வைப்பதில்லை. அது காரணமாயிருக்கலாம். அவருக்கு அந்தப் பெயரில் அப்படி ஒரு மோகம். இறுக்கிப் பிடித்துக் கட்டிய இரட்டைப் பின்னல்களோடு அவள் காணப்படுவாள். அன்ன நடை என்று சொல்வதுண்டு; பிடி நடை என்றும் வர்ணிப்பதுண்ட. ஆனால் ...
மேலும் கதையை படிக்க...
"ஏய், என்னா பாத்துட்டே போறே... காசு தரமாட்டியா...?" யார் கண்ணில் படக்கூடாது என்று வேக வேகமாக அந்த இடத்தைக் கடந்து கொண்டிருந்தேனோ அவளின் குரல் மெல்லிசாகக் கேட்டபோது அது என்னை நோக்கித்தான் என்ற தவிர்க்க முடியாத உள்ளுணர்வில் அப்படியே நின்று விட்டேன் நான். ...
மேலும் கதையை படிக்க...
குழலோசையைக் கேட்டுக் குதூகலம் கொண்டு, குதித்தோடி வந்த கோமதியைத் தழுவிக்கொண்டு, அருகே வந்து நின்ற அழகு மீனாவின் முகத்தைத் துடைத்து முத்த மிட்டுக் கமலத்தின் கண்களின் அழகைப் புகழ்ந்துரைத்து, அம்புஜம் வரக் காணோமே என்று ஆயாசப்பட்டுக் கோமளத்துக்கு நேற்று இருந்த கோபம் ...
மேலும் கதையை படிக்க...
தஞ்சாவூர் ஜங்ஷனிலிருந்து மஞ்சத்திடல் செல்ல வேண்டும். அடிக்கடி செல்வது வழக்கம் வேலையொன்றுமில்லை பெரியப்பா வீடு அங்கு. எக்ஸ்பிரஸ் நிக்காது. பெரும்பாலும் நான் பேசஞ்சரில் செல்வதே வழக்கம். நடைபாதை வியாபாரிகளுக்கு டிக்கட்டே தேவையில்லை அடுத்தடுத்த ஸ்டாப்பில் ஏறி இறங்கி வியாபாரம் செய்வார்கள். கீரை ...
மேலும் கதையை படிக்க...
காயத்ரியின் இரு உதடுகளும் பிரிந்து தரையில் அழுத்திக் கொண்டிருக்க முகம் பாதி புதைந்து வெகுநேரம் ஆகியிருக்க வேண்டும். யாராவது தூக்கி நிமிர்த்தி உட்கார வைக்கும்வரை அவள் அப்படியே கிடப்பாள். தரையின் குளிர்ச்சியும் வாயிலிருந்து ஒழுகி பின்னர் முகத்திலும் தரையிலும் காய்ந்து ஒட்டிப்போன ...
மேலும் கதையை படிக்க...
கடன் அட்டைக்கான காசோலையை மீனாட்சிக்கல்லூரிக்கு எதிர்புறம் உள்ள, பெட்ரோல் பங்கில் இருந்த பெட்டியில் போட்டுவிட்டு, தனது மோட்டார் வண்டியில் திரும்பிக்கொண்டிருந்த கார்த்திக்கு. ஜோடி ஜோடியாக காதலர்கள் இரு சக்கர வண்டியில் கடந்துப் போனதைப்பார்க்கையில் ஏக்கமாக இருந்தது. தேதி நினைவுக்கு வந்தது.. இன்று ...
மேலும் கதையை படிக்க...
குண்டோதரன் !
குடந்தை நகரத்தில் குப்பன் என்றால் யாருக்கும் தெரியாது. குண்டோதர குப்பன் என்றால் சிறியோர் முதல் பெரியோர் வரை பிரசித்தம். குழந்தையாக இருக்கும் போதே அவன் பாட்டி செல்லமாக வயிறு புடைக்க ஊட்டிவிடுவாள். அப்போதே ஜூராசிக் பேபி ஆகிவிட்டான். வயது கூட கூட ...
மேலும் கதையை படிக்க...
Ayiram Sontham Nammai Thedi Varum. Aanaal Thedinalum Kidaikatha Orey Sontham Nalla ‘NANBARGAL’ I am very lucky for your ‘friendship’ Kutty Pisasu : 13/8/2011/ 10/34 Pm. உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும், மரணப்படுக்கையிலும் மறக்காது ...
மேலும் கதையை படிக்க...
தாம்பரம் ரயில் நிலையம். காலை 8 மணி. ரயிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தான் சந்துரு. நேற்று நடந்ததை எண்ணினான். மயிலை ரயில் நிலையத்தில் நேற்றுதான் அவளை முதன்முதல் பார்த்தான். 5 அடி 8 அங்குலம் உயரம் அவள். கடலை மாவு நிறம், சுருள் முடி, சற்றே ...
மேலும் கதையை படிக்க...
அமுதா
வடக்கு வீதி
மீண்டும் பஞ்சமி
கிருஷ்ண லீலா
இருபத்தியோராம் நூற்றாண்டின் அழகி.!
எச்சில் குவளை
37G, மீனாட்சிக் கல்லூரியில் இருந்து லக்ஷ்மண் ஸ்ருதி சிக்னல் வரை
குண்டோதரன் !
குட்டிப் பிசாசு 2
ரயிலில் வந்த மயில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)