பக்தி

 

அது புராண காலம்.

உச்சி வெயில் சுள்ளென அடித்துக் கொண்டிருந்தது. மரங்களில் இலைகள் அசையாதிருந்தன.

அர்ஜுனன், பகவான் கிருஷ்ணரை மனதில் நினைத்தபடி தன் குடிலில் அரை சயன நிலையில் படுத்துக் கொண்டிருந்தான்.

அப்போது திடீரென பகவான் கிருஷ்ணர் அவன் முன் காட்சியளித்தார்.

அர்ஜுனன் பதறி எழுந்து நின்றான்.

“என்ன அர்ஜுனா அடிக்கிற வெயிலுக்கு சயனத்தில் ஆழ்ந்து விட்டாயா?”

“தாங்களைத்தான் மனதில் நினைத்துக் கொண்டிருந்தேன் கிருஷ்ணா…”

கிருஷ்ண பரமாத்மா கேட்டார், “அர்ஜுனா உலகத்திலேயே சிறந்த பக்தன் யார்? உனக்குத் தெரியுமா?”

“தாங்களே அதையும் சொல்லிவிடுங்கள் கிருஷ்ணா…” மிகவும் பெளவ்வியமாகச் சொன்னான்.

அர்ஜுனன் மிகுந்த எதிர் பார்ப்புடன் தன்னைத்தான் சிறந்த பக்தன் என்று பகவான் கிருஷ்ணர் தற்போது சொல்லப் போகிறார் என்று நினைத்துக்கொண்டு காத்திருந்தான்.

“அடுத்த ஊரில் உள்ள ராஜாதான் சரியான பக்தன்.”

கிருஷ்ண பரமாத்மா இப்படிச் சொன்னதும் அர்ஜுனனின் ஆணவத்திற்கு சரியான அடி விழுந்து விட்டது. ஆனால் என்ன செய்வது? சொன்னது சாட்சாத் கிருஷ்ண பகவான் ஆச்சே!

“அது எப்படி அந்த ராஜா அவ்வளவு பெரிய பக்தர்… வாருங்கள் நான் அவரைப் பார்க்க வேண்டும். அந்த ராஜாவின் பக்தியைப் புரிந்துகொள்ள வேண்டும் கிருஷ்ணா…”

“சரி என்னுடன் நீ வா… ராஜாவின் பக்தியை நீயே புரிந்து கொள்வாய்..”

“அப்படியே ஆகட்டும் கிருஷ்ணா…”

கிருஷ்ண பரமாத்மாவின் பலப் பல விளையாட்டுக்களில் இன்று என்ன மாதிரியான விளையட்டு அரங்கேறப் போகிறதோ என்று மனதில் எண்ணியபடி கிளம்பி கிருஷ்ணரைத் தொடர்ந்து சென்றான்.

இருவரும் ராஜாவின் அரண்மணையை அடைந்தனர்.

பகவான் கிருஷ்ணரைப் பார்த்ததும், மஹாராஜா அரியணையில் இருந்து கீழே இறங்கி ஓடோடி வந்து பகவானை எதிர்கொண்டு வரவேற்றார். கிருஷ்ணரின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தார்.

“நமஸ்காரம் கிருஷ்ணா.”

“ஆசீர்வாதங்கள்.”

மஹாராஜா பகவான் கிருஷ்ணரை தன்னுடைய அரியணையில் அமரச் செய்தார். அவருக்குப் பக்கத்தில் கைகளை கூப்பியபடி மஹாராஜா நிற்க, கிருஷ்ணருக்கு பக்கத்து இருக்கையில் அர்ஜுனனை அமரச் செய்தார்.

பகவான் கிருஷ்ணர் அரண்மனைக்கு விஜயம் செய்திருக்கிறார் என்கிற விஷயம் நொடியில் பரவ, உப்பரிகையில் நின்று கொண்டிருந்த மஹாராணி ஓடோடி வந்து பகவான் கிருஷ்ணரின் காலடியில் விழுந்து நமஸ்கரித்தாள்.

அங்கே உடனே வந்த மகாராஜாவின் ஐந்து வயது மகன் குழந்தைத்தனமான வெகுளியான தோற்றத்துடன் வந்து நின்றான். பாலகன் பிறந்ததில் இருந்தே ‘கிருஷ்ண பக்தி’ மஹாராஜாவினால் ஏராளமாக ஊட்டப் பட்டிருந்தது. மஹாராஜாவின் ஒரே வாரிசு ஆயிற்றே?

மஹாராணி பகவான் கிருஷ்ணரின் காலில் விழுந்து நமஸ்கரித்து எழுந்தது நின்றதும், அந்தப் பாலகனும் கிருஷ்ணரின் காலில் விழுந்து நமஸ்கரித்தான்.

கிருஷ்ணர் பாலகனை தூக்கி நிறுத்தி அன்புடன் வாரி அணைத்தார்.

இதைப் பார்த்த மஹாராஜாவின் உடம்பு பக்தியால் புல்லரித்தது. சபையில் கூடிவிட்ட மந்திரிகளும், புலவர்களும் பாலகனுக்கு கிடைக்கப்பெற்ற அதிர்ஷ்டத்தை எண்ணி வியந்தனர்.

பகவான் கிருஷ்ணர், “அரசே உன்னிடம் ஒன்றை வேண்டி வந்தேன்.” என்றார்.

அதற்கு அரசர், “தருகிறேன்” என்று உடனே பதில் சொல்லவில்லை. இந்த பரந்த உலகமே அவருடையது. அப்படி இருக்கும்போது கிருஷ்ண பரமாத்மாவிற்கு நாம் என்ன தருவது, அவரென்ன வாங்கிக் கொள்வது? என்கிற மிகுந்த பக்தியில் “கிருஷ்ணா உன் திருவுள்ளம்” என்றார்.

“எனக்கு உன்னுடைய ஒரே மகன் வேண்டும்.”

“அது என்னுடைய பாக்கியம் கிருஷ்ணா.”

“அதுவும் அப்படியே முழுதாக அல்ல மன்னா, எனக்கு உன் மகன் இரண்டு கூறுகளாக வேண்டும். உன் பாரியாள் மகனுடைய கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள, மன்னா நீ உன் கூரிய வாளால் மகனை இரண்டாக வகுக்க வேண்டும்… பாலகனின் வலது பாகம் எனக்கு வேண்டும். அப்படி நீ வாளால் வெட்டும்போது பாலகனின் கண்களில் சிறிதுகூட கண்ணீர் வரக்கூடாது. எனக்குக் கொடுப்பாயா?”

“கண்டிப்பாக. எல்லாம் உன் திருவுள்ளம் கிருஷ்ணா…”

சபையே ஸ்தம்பித்தது.

அர்ஜுனன் மனதில் மட்டும், கிருஷ்ணன் ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளை, உலகமே அவனுடையது எனும்போது எதையும் அவன் நிகழ்த்திக் காட்டுவான் என்கிற ரீதியில் சிந்தித்தான்.

கிருஷ்ணர் பாலகனிடம், “கடைசியாக நீ என்ன சொல்ல விரும்புகிறாய்?”

“பகவானே கடந்த ஐந்து வருடங்களாக என்னுடைய இந்த உடம்பு ‘கிருஷ்ணா, கிருஷ்ணா’ என்றுதான் துடித்தது. எனவே இது கிருஷ்ணனுக்கு அர்ப்பணிப்பு ஆக வேண்டிய உடம்புதான். கிருஷ்ணார்ப்பணம்…”

“…………………”

“இருப்பினும் கடைசியாக ஒருதடவை நான் ‘கிருஷ்ணாஷ்டகம்’ சொல்லிவிட்டு உன் திருவடி சேர விரும்புகிறேன்.

சபையினரின் கண்களில் நீர் திரண்டது. சிலர் வெடித்து அழ ஆரம்பித்தனர்.

பகவான் கிருஷ்ணர் பாலகனின் மழலைக் குரலை கேட்க விரும்பி, “சரி, சொல்” என்றார். சபை மூச்சைப் பிடித்துக்கொண்டு கேட்கத் தயாரானது. .

பாலகன் கணீரென்று,

வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸசாணுர மர்த்தனம; தேவகீ பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.

அதஸீ புஷ்ப ஸங்காசம் ஹார நூபுர சோபிதம்; ரத்ன கங்கன கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.

குடிலாலக ஸம்யுக்தம் பூர்ண சந்திர நிபானனம்; விலஸத் குண்டலதரம் தேவம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.

மந்தார கந்த ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்புஜம்; பர்ஹி பிஞ்சாப சூடாங்கம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.

உத்புல்ல பத்ம பத்ராக்ஷம் நீலஜீமுத ஸந்நிபம்; யாதவானாம் சிரோத்தனம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.

ருக்மணீ கேளீஸம் யுக்தம் பீதாம்பர ஸுஸோபிதம்; அவாப்த துளஸீ கந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.

கோபிகாநாம் குசத்வந்த்வ குங்கு மாங்கித வஷஸம்; ஸ்ரீநிகேதம் மகேஷ்வாஸம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.

ஸ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம்; ஸங்கு சக்ர தரம் தேவம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.

க்ருஷ்ணாஷ்டகமிதம் புண்யம் ப்ராதருத்தாய ய; படேத் கோடி ஜன்ம க்ருதம் பாபம் ஸத்ய ஏவ விநச்யதி.

என்று மனமுருக மழலைக் குரலில் பாடிவிட்டு நிறுத்தினான்.

மன்னன் உறையிலிருந்து தன் கூரிய வாளை உருவினான். மகனை நோக்கி விரைந்தான். மஹாராணி பாலகனை அசையாது பிடித்துக் கொள்ள, மன்னன் மகனை இரு கூறாக வெட்டப் போகும்போது பாலகனின் இடது கண்களில் மட்டும் கண்ணீர் சொறிந்தது…

பகவான் கிருஷ்ணன் உடனே “மன்னா நிறுத்து..” என்று கட்டளையிட்டார்.

கிருஷ்ணர் பாலகனிடம், நான்தான் உன் கண்களில் கண்ணீர் வரக்கூடாது என்று சொன்னேனே, இரண்டு கண்களிலும் கண்ணீர் வராமல், அதெப்படி உன் இடது கண்ணில் மட்டும்?” என்று கேட்டார்.

“ஆமாம் பகவான் கிருஷ்ணரே. என்னுடைய உடம்பின் வலது பாகத்தை மட்டும்தான் தாங்கள் கேட்டீர்கள். அதைக் கேட்டு வருந்திய என் இடது பாகம் ‘நான் என்ன பாவம் செய்தேன்?’ என்று தன்னையடக்க முடியாமல் அழுகிறது கிருஷ்ணா…”

இதைக்கேட்ட அங்கிருந்த அனைவரும் பாலகனின் பக்தியை நினைத்து சொக்கிப் போயினர்.

அர்ஜுனன் ‘இதுவல்லவோ ராஜாவின் பக்தி? தான் இவர்கள் முன் எந்த மூலை?’ என்று நினைத்து பயபக்தியுடன் பாலகனைக் கும்பிட்டான்.

பகவான் கிருஷ்ணர் ஒரு அர்த்தப் புன்னகையுடன் அர்ஜுனனைப் பார்த்தார். 

தொடர்புடைய சிறுகதைகள்
(இதற்கு முந்தைய ‘கருப்பட்டிச் சிப்பம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) அடுத்த திருப்பதி உண்டியல் கோழிக்கோட்டில் வைக்கலாம் என்று ஒரு கருத்துக் கணிப்பை நடத்திப் பார்த்துவிட்டு, வேணுகோபால் திம்மராஜபுரம் வந்து இறங்கினார். மூன்றாவது மகளுக்கு எந்த டாக்டருக்குப் படித்த பையனைப் பார்த்து ...
மேலும் கதையை படிக்க...
சடகோபன் ஒரு பண்பாளர். நான்கு பேர் அடங்கிய அந்த வீட்டில் அவர் தான் சம்பாதிப்பவர். அரசாங்க உத்தியோகத்தில் சென்னையில் ஒரு பெரிய கெசடட் அதிகாரி. நேர்மையானவர். கண்டிப்பானவர். திறமைசாலி. ஆனால் அவருக்கு அதிகாரி அவர் மனைவி காயத்ரி. வீட்டில் உள்ள அனைவரையும் ஆட்டிப் ...
மேலும் கதையை படிக்க...
நேற்றைய இரவு மிகவும் கொடுமையாக இருந்தது. இன்னமும் அது கடந்து போகாதது போலவே இருக்கு. என்னால அழுகையை நிறுத்த முடியல. இன்னிக்கி காலைல நான் கண்கள் எரிச்சலுடன் முழிச்சப்போ, என் கணவர் முந்தைய இரவு என்கிட்ட கேட்ட கேள்வியோட என் படுக்கை பக்கத்துல ...
மேலும் கதையை படிக்க...
அன்று ஒரு சனிக்கிழமை. அவளை நான் முதன் முதலில் பார்த்தது தி.நகர் வெங்கட் நாராயணா தெருவில் உள்ள பெருமாள் கோயிலில். அவளைப் பார்த்தவுடனே அவள் அழகில் சொக்கிப்போய் விட்டேன். வட்டமான அழகிய முகத்தில், நீண்ட கூந்தலுடன், சிவந்த நிறத்தில் பார்ப்பதற்கு மிகவும் செளந்தர்யமாக ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘டெய்லர் சிவன்பிள்ளை’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). முதன் முதலாக புது மனைவியை என் படுக்கையின் கொசு வலைக்குள் சந்தித்த போது ஒரு சின்ன மாயாபுரியின் நீரின் அடியில் இருந்தாற்போல இருந்தது. அந்தரங்கமான பாலுறவு வைத்துக் கொள்வதற்காகவே தயாரிக்கப்பட்ட ...
மேலும் கதையை படிக்க...
குண்டாஞ்சட்டி மனைவிகள்
அப்பாவிக் கணவர்கள்
விவாகரத்து
நவீனக் காதல்கள்
மனைவியின் அழுத்தம்

பக்தி மீது ஒரு கருத்து

  1. T. R. Mohan Bhat says:

    மிக தெளிவாக தீர்க்கமாக எழுத்தாசியர் திரு கண்ணன் அவர்கள் எழுதியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)