கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: September 29, 2020
பார்வையிட்டோர்: 20,273 
 

பத்து வருடங்களுக்கு முன்பு நிரஞ்சன் குமார் ஒரு வளர்ந்து வரும் முன்னணி நடிகர். அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம். காசு பணத்திற்கு குறைவில்லை. ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை, பத்து வருடங்களில் அவரது மௌசு குறைந்து விட்டது. ரசிகர்கள் அவரது படங்களை ஒதுக்கினார்கள். தயாரிப்பாளர்கள் அவரை தவிர்த்தார்கள்.

அது குமாரை , ( நிரஞ்சன் குமாரின் உண்மைப் பெயர் குமார்), பெரிதும் பாதித்து விட்டது. அவர் தனிமையை விரும்ப ஆரம்பித்தார். , நாளாக நாளாக, தன்னை யாரோ அடிக்க வருவது போல, தன் மேல் பூச்சிகளும் , தேரைகளும், தேள்களும் ஏறி கடிப்பது போல , மேலே சுற்றும் மின் விசிறி அவர் மேல் விழுவது போல வித விதமான எண்ணங்கள் அவருக்கு ஏற்பட்டன. . வீட்டில் எல்லோரையும் ஒதுக்கினார், அறையின் மூலையில் ஒதுங்கினார்.. யாரோடும் பேச மறுத்தார்.

மன நல மருத்துவர்கள், பல பரிசோதனைகள் செய்து, அவருக்கு மனச்சிதைவு நோய் எனக் கூறி, மருந்து மாத்திரைகள் கொடுத்தார்கள். எதுவும் குணமளிக்க வில்லை.

ஒரு நாள், குமாரின் ஆப்த நண்பர் , ரகு , அவரைக் காண வந்தார். குமாரின் இளவயது நண்பர், ரகு ஒரு கல்லூரியில் மனத்தத்துவ ஆசிரியரும் கூட.

அன்று, குமாரின் மனநிலை கொஞ்சம் பரவாயில்லையாக இருந்தது. ரகுவை அடையாளம் கண்டு கொண்டார் . அவரோடு பேசவும் செய்தார். மனம் விட்டு இரண்டு நண்பர்களும் தனிமையில் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர்.

“இப்போ உனக்கு எப்படி இருக்கு குமார் ?” ரகு விசாரித்தார்.

“எனக்கு ரொம்ப பயமா இருக்கு ரகு ! எதை பார்த்தாலும் பயமா இருக்கு !”

“அப்போ, உனக்கு பயம் இருக்குன்னு உனக்கு தெரிஞ்சிருக்குன்னு சொல்லு” ரகு வினவினார்.

“ஆமா ரகு !” குமார் .இந்த தடவை கொஞ்சம் அழுத்தமாக சொன்னார்.

“குமார், எப்போ உன் பய உணர்ச்சி உனக்கு தெரியுதோ, அப்போ அதை யாரோ பார்க்கிறாங்கன்னு தானே அர்த்தம்? அதனாலே, கவலையை விடு, உனக்கு பயம் இல்லே ! உன் மூளை தான் பயப்படுது! என்றார் ரகு ஆணித்தரமாக.

குமாருக்கு கொஞ்சம் குழப்பம் . “ அது இல்லே ரகு ! சிலசமயம் எதை பார்த்தாலும் பயம், சில சமயம் இல்லே !”

ரகு சிரித்தார் “ அப்போ, நீயே சில சமயம் கழுதையாக இருக்கே , சில சமயம் குதிரையாக இருக்கேன்னு சொல்லு “

குமாரும் சிரித்தார். “ அப்பாடா ! இப்போ எனக்கு பயம் இல்லே . போயிடுச்சி !”

ரகு சொன்னார் “ அப்போ இதையும் யாரோ பார்க்கிறார்கள் இல்லியா? குமார். உன் மூளை தான் சில சமயம் பயப்படுது. சில சமயம் பயப்படலே. இதிலேருந்து என்ன தெரியுது, உன் மூளையை , வேறே ஏதோ ஒன்னு, பாக்குது. நீ பயப்படறே, பயப்படலேன்னு அது தான் உனக்கு சேதி சொல்லுது ! இல்லியா ?”

குமார் கேட்டார் “ நீ சொல்றது எதுவும் எனக்கு புரியலே குமார் ! கொஞ்சம் புரியும் படி சொல்லேன் ?”

ரகு சொன்னார் “ சரி சொல்றேன் ! கவனமா கேட்டுக்கோ ! முதல்லே ‘நான் யார்’னு தெரிந்துக்கோ ! இந்த உடம்பா, மூளையா, இதயமா, கணயமா, கிட்னியா , இப்படி உன்னை ஆட்டுவிக்கறது எது? “

குமார் : “ அதான் தெரியலையே . டாக்டர்கள் மூளை என்கிறார்கள் “

ரகு தனது பேனாவை எடுத்து மேஜையின் மேல் வைத்தார்.

“இப்போ இங்கே ஒரு பேனா இருக்கு. அது உனக்கு தெரியுதா “ ?

குமார் சிரித்தார் . “ தெரியுதே அதில் என்ன சந்தேகம் ?

ரகு தொடர்ந்தார் “ எப்படி தெரியும் ?”

“ என் கண்களால் பார்க்கிறேன் !- குமார்

“ ரொம்ப சரி, இப்போ இந்த பேனா, பார்க்கும் பொருள். சரியா ? அதை இந்த கண்கள் பார்க்கின்றன. சரிதானே ?” –

குமாருக்கு கேட்க ஆவல் வந்து விட்டது. என்ன சொல்ல வருகிறான் ரகு ? “ ஆமா !”

ரகு தொடர்ந்தார் “சரி ! இப்போ இந்த கண்கள் மூளைக்கு சேதி அனுப்புகிறது. இங்கே ஒரு பேனா இருக்கிறதென்று ! கண்கள் வெறும் புகைப்பட கருவி தானே! ஐம்புலன்களில் ஒரு புலன் . தான் பார்ப்பதை மூளைக்கு தெரிவிப்பது தான் அதன் வேலை . நான் சொல்வது சரியா ?

குமார் : “சரிதான்” .

ரகு : “ இப்போது பார்க்கும் பொருள் என்ன ? பார்ப்பது யார் ?”

குமார் : “ இப்போது கண்கள் தான் பொருள். அது ஒரு கருவி, புலன். அது சொல்லும் சேதியை பார்ப்பது, மூளை ! மூளை தான் இது பேனா என்று புரிந்து கொள்கிறது . அதனால் மூளை தான் இங்கே பார்க்கிறது !”

ரகு : “வெரி குட் குமார் ! முன்னே பேனா பொருளாக இருந்தது. கண்கள் பார்த்தது. இப்போ கண்கள் பொருளாகிவிட்டது. மூளை பார்க்கிறது. சரியா?”

குமார் : “நீ சொல்வது சரி தான் !”

ரகு : “சரி, இப்போ இந்த பேனாவை எடுத்துக்கலாம்னு உன் மூளை, அது தானே மனசு, அது சொல்லுதுன்னு வெச்சுக்குவோம். . மூளையின் கட்டளையால்,கை பேனாவை எடுக்கப் போகிறது. அப்போ, அதை திருடாதே, அது தப்புன்னு , நீ செய்வது பாவம்னு வேறு ஏதோ ஒன்னு சொல்கிறது. அதை மனசாட்சி என்று வைத்துக் கொள்வோம் . மூளை , மனசுன்னும் சொல்லலாம் , அதை ஏற்றுக் கொண்டு கையை இழுத்துக் கொள்ள கட்டளை இடுகிறது. நீட்டிய கையும் தானாக பின்னால் இழுத்துக் கொள்ளப் படுகிறது. . இப்போ சொல்லு குமார் இதில் எது பார்க்கிற பொருள், எது பார்க்கிறது ? மூளையா அல்லது அந்தராத்மாவா ? அது இதயம் இல்லே ! கிட்னியோ பெருங்குடலோ இல்லே ! பின்னே அது எது?”

குமார் : “ இப்போ, மூளை பார்க்கிற பொருள் , அந்தராத்மா பார்க்கிறது! என்ன அதிசயம் ? பார்க்கும் பொருள் எல்லாம், , அதாவது பேனா, கண், மூளை எல்லாம் மாறிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அத்தனையும் பார்ப்பது, , அந்தராத்மா மட்டும் தான் ! அது மட்டும் மாறவேயில்லை ! சரிதானே ?”

ரகு : “ரொம்ப சரி குமார் ! இதைத்தான் மனசாட்சி என்கிறோம் . இப்போ உன் மூளைதான் மின் விசிறி கீழே விழுவது போல தோன்ற வைக்கிறது. இதே உன் மூளை தான்,யாரோ உன்னை அடிக்க வருவது போல தோன்ற வைக்கிறது, இதே உன் மூளை, தான் பூச்சிகள் உன்னை கடிக்க வருவது போல தோன்ற வைக்கிறது. இது உனக்கு தெரிகிறது. எப்படி ? அப்போ அதையெல்லாம், ஒரு சாட்சி போல பார்த்துக் கொண்டிருப்பது, உன் மனசாட்சி தானே ?”

குமார் : “ நீ சொல்வதை ஒப்புக் கொள்கிறேன் ரகு ! அப்படிஎன்றால், மூளை சொல்வதை ஒதுக்கி விட்டு, இந்த அடிப்பது,கடிப்பது எல்லாம் பிரமை, மாயை என்று இருந்தால், ஒரு சாட்சி போன்று இருந்தால், நான் இந்த பயத்திலிருந்து விடு படலாமா ?”

ரகு : “எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது குமார் உனக்கு நீயேதான் சிகிச்சை அளித்துக் கொள்ள வேண்டும். உன்னை நீயே சுய சோதனை செய்து கொள்ள வேண்டும் உனக்கு நீயே கேட்டுக் கொள்ளவேண்டும். இந்த பய உணர்வு ஒரு பிரமை தான் என்று ஏற்று கொள்ள வேண்டும். முயற்சி செய்துதான் பாரேன்! மருந்து மாத்திரைகளும் உனக்கு உதவி செய்யும் . அதை விட்டு விடக் கூடாது. என்ன ?

குமார் : “செய்யறேன் ரகு. இன்னிக்கே செய்யறேன். எனக்கே ஒரு தைரியம் வந்தது போல இருக்கு! நிச்சயம் செய்யறேன் . உனக்கு மில்லியன் தாங்க்ஸ் ரகு .”

ரகு : “எனக்கு சொல்லாதே . இதை சொன்னது ட்ரிக்- த்ரிஷ்யா உபநிஷத் தான். அதைத்தான் நான் உனக்கு சொன்னேன். உன் நன்றியை அந்த உபநிஷத்துக்கு சொல்லு . அப்ப நான் வரட்டுமா ?”

***

இன்று குமார் ஒரு புது மனிதராகி விட்டார். மனச்சிதைவு நோய் குறைய வில்லை. ஆனால், அதனுடன் வாழப் பழகி விட்டார். எப்போதெல்லாம் பய உணர்வு வருகிறதோ, அப்போதெல்லாம் அதை ஒரு பொருள் போல், சாட்சி உணர்வுடன் (saakshi bhavam ) பார்க்க தொடங்கி விட்டார் . எல்லோருடனும் இன்முகத்தோடு பழக தொடங்கி விட்டார். தனிமையை தவிர்த்தார். ட்ரிக்- த்ரிஷ்யா உபநிஷத்திற்கும் , அதை சொன்ன ரகுவிற்கும், அடிக்கடி நன்றியை மனதில் சொல்லிக்கொள்வார்

நன்றி : சர்வப்ரியானந்தா சுவாமிகள், கூகிள்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *