யோகாசன ரங்கு மாமா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 14, 2022
பார்வையிட்டோர்: 3,419 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஏழு எட்டு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள், பக்கத்து காலனியில் உள்ள பொழுதுபோகாத நண்பர்கள் பிரைவேட்டாகப் போட்ட ‘பிடிசாபம்’ புராண நாடகத்தைப் பார்க்கப் போய் எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டேன் நான். அதில் ரிஷியாக நடித்தவர் ஆரம்பத்திலிருந்து கடைசி ஸீன் வரை விடாமல் ‘பிதி சாதம்’ என்றே ஏக மழலையில் சபித்துக் கொண்டிருந்த இம்சை தாளாமல், ஒரு கட்டத்தில் சொல்லாமல் கொள்ளாமல் எகிறிக் குதித்து தப்பியோடி இரவு வீடு திரும்பினேன்.

வீட்டின் நடுக்கூடத்தில் பார்வையைச் செலுத்தினால்…!

பேந்தப் பேந்த விழித்தபடி ஒரு பிரமாண்டமான ரிஷி, பிரம்பு நாற்காலி கொள்ளாமல் பிதுங்கி வழியக் குந்திக் கொண்டிருந்தார்.

தாடையிலிருந்து தரைக்குத் தார் ரோடு போட்டது போல நீண்ட கருகரு தாடியோடு தேஜஸான தீவட்டித்தடியன் கணக்கில் இருந்த அவர், என்னமோ சார்பட்டா பேட்டை ரவுடிக்குப் பிரும்மரிஷி மேக்கப் போட்டது போல சற்றே வித்தியாசமாக இருந்தார்.

பனிப்பிரதேசங்களில் காணப்படும் ஆதிமனிதனின் பாதம் சைஸுக்கு இருந்த அந்த ராட்சஸ ரிஷியின் இரண்டு கால்களும் (அது கால் அல்ல… முழுசு…) ஒரு வெள்ளித் தாம்பாளத்தை அடைத்தபடி பதிந்திருந்தன. என் மனைவி பெரிய பாத்திரத்தில் இருந்து அறுபத்திமூவர் நீர்மோர் விநியோகம் போல டம்ளர் டம்ளராகப் பாலை எ எடுத்துத் தர, என் வீட்டில் உள்ளவர்கள் க்யூவில் வந்து ஆளுக்கொரு டம்ளராக அதைக் கையில் வாங்கிக் கொண்டு, அந்தக் கடோத்கஜ பாதங்களை பாலால் அலம்பி பவ்யமாகப் பாத பூஜை செய்து கொண்டிருந்தார்கள்.

பாதபூஜையின் கிச்சுகிச்சு தாங்காமல் அவ்வப்போது கூச்சத்தால் கேலித்தனமாகச் சிரித்தபடி அருள்பாலித்துக் கொண்டிருந்தார் இதிகாச ரிஷி வேடம் போட்ட இடி அமீன் போல் இருந்த அவர்!

‘இதென்ன கலாட்டா?’ என்று விழித்த என்னைத் தரதரவென்று தனியே இழுத்துப் போய், ‘இவரை அடையாளம் தெரியலையா?’ என்று ரகசியமாக அவரது பூர்வாஸ்ரமப் பெயரைக் கூறினாள் என் மனைவி. தாயாருக்கும் தாரத்துக்கும் நடந்த கோரமான யுத்தத்தில் ரிஷிகேசத்துக்கு விரக்தியில் ஓடிப்போன ரங்கு மாமாவின் கதையையும் சொன்னாள் என் மனைவி. போன இடத்தில் ரங்கு மாமா போட்ட சந்நியாசி ரோல் தோல்வியைத் தழுவ, கடைச் டைசியில் ஏதோ ஒரு ‘கஜமுகபு ஜகபூஷணானந்தாவின் கையைக் காலைப் பிடித்துப் பல யோகாசனங்களைக் கற்றுக்கொண்டு வந்திருப்பதாகக் கூறினாள்.

சந்நியாசியாக ஆவதற்குப் பதினைந்து வருடங்கள் லோல் பட்டுவிட்டு பழையபடி சம்சாரியாகிவிட்ட ரங்கு மாமா, தற்சமயம் ஜீவனோபாயத்துக்காக ‘ரிஷிகேசத்தில் நான் போட்ட ஆசனங்களை சகாய விலையில் பெறுக இவ்வையகம்’ என்ற ஓரளவு லாபகரமான பரோபகார சிந்தனையில் ஒரு யோகாசனப் பள்ளி ஆரம்பித்துள்ளதை தேவையில்லாத ஏற்ற இறக்கத்தோடு கூறினாள் என் தாரம்.

சற்றுத் தள்ளியிருந்தாலும், நாங்கள் பேசியதை சூசகமாகச் செவியாசனம் போட்டு ஒட்டுக் கேட்ட ரிஷி ரங்கு மாமா, என் மனைவி கூறியதை ஆமோதிப்பது போல தெய்வீகமாகத் தலை ஆட்டிவிட்டு என்னைப் பார்த்து ‘நீயே கதி ஈஸ்வரி’ ராகத்தில் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். டார்ஜான் ஆகிருதி குலுங்கிக் குலுங்கி அழுவதைக் காணச் சகியாமல், அவருடைய யோகா பள்ளிக்கு ஆள் சேர்த்து உதவி செய்வதாக நான் ஒப்புக் கொண்டேன். உடனே உற்சாகமடைந்த ரங்கு மாமா, எனது பேராதரவைப் பெறுவதற்காக மூர்மார்க்கெட் மோடிமஸ்தான் போல தனக்குத் தெரிந்த அத்தனை கோணல்மாணலான ஆசனங்களையும் பத்துப் பதினைந்து நிமிடங்களில் நடுக்கூடத்திலே போட்டுக் காட்டி, என் வீட்டுச் சின்னப் பசங்களை ஜோராகக் கைதட்டி விசிலடிக்க வைத்தார். உடம்பை ஒரேடியாக வளைத்து உள்ளங்காலை உள்நாக்கால் தொடும் ‘பாதாதி கேசனாஆசனத்தை’யும் செய்து காட்டினார் அவர்.

மனைவியின் உறவென்று வந்த இந்த ரங்கு மாமா என்ற ரெண்டாங்கெட்டானை எப்படிச் சமாளிப்பது என்று நான் மவுனமாக மூளையைக் கசக்கி மனதுக்குள்ளேயே யோகாசனம் செய்து கொண்டிருந்தபோது, கிச்சா நினைவுக்கு வந்தான். ஒரு முறை இரண்டு வயது கூட நிரம்பாத தனது தம்மாத்துண்டு புத்திரியின் ‘தையாத் தக்கா’ பரதநாட்டிய அரங்கேற்றத்துக்காகக் கும்பலைக் கூட்டுமாறு என் பழைய ஆபீஸ் மானேஜர், தன் கையில் என் பிரமோஷனோடு என்னை ப்ளாக் மெயில் செய்தபோது, ஆபத்பாந்தவனாகக் கிச்சா அந்தப் பொறுப்பை எடுத்துக்கொண்டு மியூஸிக் அகாடமியில் ஒரு மகாமகம் அளவுக்குக் கும்பலைக் கூட்டிக் காட்டியது பளிச்சென்று எனக்கு நினைவுக்கு வந்தது.

உடனே நான் திருவல்லிக்கேணி சென்று ரங்கு மாமா பற்றி எச்சுமிப் பாட்டியிடம் சொல்ல, பொழுது விடிவதற்குள்ளாகவே பீச்சுக்குப் போய் பீடி, சிகரெட் பிடித்துக் கெட்டுப் போகும் தன் பேரனின் ஆரோக்கிய நலன் கருதி எச்சுமிப் பாட்டி யோகா பள்ளியைத் தன் வீட்டு மொட்டை மாடியிலேயே நடத்திக் கொள்ளச் சம்மதித்தாள். பள்ளிக்கு இடம் தந்தவள், அதோடு நில்லாமல் தன் பேரன் கிச்சாவையும் அதில் சேருமாறு காதைத் திருகிக் கட்டளையிட்டு அவனுக்கு யோகாசனத்தை கம்ப்பல்ஸரி எஜுகேஷனாகத் திணித்தாள்.

சிறு வயதிலேயே பள்ளிக்கூடம் என்ற வார்த்தையின் மீது ஏற்பட்ட பாகற்காய்க் கசப்பினாலும், தினமும் காலையில் நண்பர்களோடு பீச்சில் இருட்டு தம் அடிக்கும் சுதந்தரம் பறிபோன ஏக்கத்தாலும் வெகுண்டெழுந்த கிச்சா, தன்னைப் பலாத்காரம் செய்யும் பாட்டியின் மீது கொண்ட ஆத்திரத்தை அவளிடம் காட்ட முடியாத இயலாமையால் அதைச் சேகரித்து வைத்துக்கொண்டு இதற்கெல்லாம் மூலகாரணமாக தனக்குத் திடீர் வில்லனாக முளைத்த, இன்னும் அறிமுகம்கூட ஆகாத அந்த அப்பாவி ரங்கு மாமாவை ஜென்ம எதிரியாகப் பாவித்து அவருக்கு ஒரு முடிவு கட்ட தீர்மானித்தது அப்போது எனக்குத் தெரியாமல் போனது.

ஒரு சுபயோகாசன சுபதினத்தில் அதிகாலையில் கிச்சா வீட்டு மொட்டை மாடியில் ஜமக்காளம் விரித்து ரங்கு மாமாவின் யோகா பள்ளிக்கூடம் ஆரம்பமானது. முதல் கட்டமாக, ரங்கு மாமாவைப் பழிவாங்க கிச்சா எங்களோடு சேர்த்து யோகம் பயில்வதற்காகக் கூட்டி வந்த நாற்பத்தி இரண்டரை பேர் (நான்கு வயதில் ஒரு அரை டிக்கெட் சிறுவன்!) நொள்ளையும் சொள்ளையுமாக இருந்தார்கள். அதில் பத்துப் பேர் ‘இனிமேலாவது இதுமாதிரி யோகா கீகா என்று செய்தால்தான் அட்லீஸ்ட் இறக்கும் போதாவது இளம் தொந்தியோடு லட்சணமாக சாகலாம்…’ என்ற நப்பாசையில் பீடிங் வைத்தது போல் இடுப்பு மடிப்புகளும், பாய்லர் சைஸ் தொப்பை தொந்தியோடு, கதாகாலட்சேபம் கேட்க வரும் கிழங்களாக இருந்தார்கள். அடுத்த பத்துப் பேர் குதிகால் ஆணியில் ஆரம்பித்து கொலஸ்ட்ரால், பி.பீ. என்று எல்லா நோய்களோடும் ஏற்கெனவே அறிமுகமான நோஞ்சான்கள். மீதி உள்ளவர்கள் ‘புடலங்காய், யோகாவுல அப்படி என்ன இருக்கு. பாத்துடலாமே?’ கீரி – பாம்பு சண்டையைப் பார்க்கப் போகும் வேடிக்கை சுவாரஸ்யத்தில் வந்தார்கள்.

வீரியமான இளைஞர்களை எதிர்பார்த்து வந்த ரங்கு மாமாவுக்கு மொட்டை மாடியை அடைத்து நின்ற இந்த மோசமான கும்பலைப் பார்த்ததும் மறுபடி ரிஷிகேசம் போகும் அளவுக்கு விரக்தி ஏற்பட்டது. தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டு, எல்லோரையும் வரிசைக்கு ஐந்து பேர் மேனிக்கு ரோ செய்து ஒழுங்காக நின்று ஒத்துழைக்குமாறு வேண்டிக் கொண்டார்.

அவர்களை வரிசைப்படுத்துகிறேன் பேர்வழி என்று நவராத்திரி கொலுப்படியில் பொம்மைகளை மாற்றி மாற்றி வைப்பது போல சகட்டுமேனிக்கு ‘நீ இங்க வா, நீ அங்க போ.’ என்று சாவகாசமாக கிச்சா வரிசைப்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்த்த ரங்கு மாமாவுக்கு ‘இந்த அசட்டுக் கும்பல் செட்டில் ஆவதற்குள் தனக்கு ஆயுசு முடிந்து விடுமோ’ என்ற அச்சம் ஏற்பட்டது.

முதல் பாடமாக ரங்கு மாமா எல்லோரையும் கையைக் கூப்பியபடி ‘ஓம்’ என்று நாபிக் கமலத்திலிருந்து ஓசையை எழுப்பச் சொல்லிவிட்டு, பிறகு ‘ஏன் சொன்னோம்’ என்று வருத்தப்படவும் செய்தார். அதிகாலையில் நாஷ்டா துண்ணாமல் அவர்கள் எல்லோரும் காலி வயிற்றில் வந்திருந்ததால், அமிலம் சுரக்கும் அடிவயிற்றிலிருந்து ரங்கு மாமா சொன்னதுபோல மூச்சைப் பிடித்து ‘ஓம்’ சொல்ல ஆரம்பிக்க, அது, கேட்டவர்கள் வயிற்றைப் பிசையும் அளவுக்கு ‘ஏவ்’ என்று பசி ஏப்பமாக நாற்பது பேர் கோரஸில் நாராசமாக முடிவில் வெளிப்பட்டது.

இரண்டு கை விரல்களையும் இணைத்து நடுவில் இடைவெளி விட்டு அந்தத் தொண்டி வழியாக அண்ணாந்து சூரியனைப் பார்த்து நமஸ்காரம் செய்யும் அதிசுலபமான வித்தையை அடுத்ததாகச் செய்துகாட்டி, அவர்களைச் செய்யச் சொன்னார் ரங்கு மாமா. அங்கிருந்த நான்கு வயதுச் சிறுவனைத் தவிர, மற்ற அனைவரும் என்னமோ காதலனைப் பார்த்த காதலியின் சங்கோஜத்தில் பத்து விரல்களால் முகத்தை சுத்தமாக மூடிக்கொண்டதோடல்லாமல், கீழே குனிந்தபடி ‘ சூரியன் எங்கே?’ என்று சந்தேகம் வேறு கேட்டார்கள். தனக்கு வாய்த்த கேஸ்களை நினைத்து மனம் வெதும்பினார் ரங்கு மாமா. பத்தாக் குறைக்கு சூரிய நமஸ்காரம் செய்ய அவர்களுக்கு உதவி செய்ய விரும்பிய கிச்சா அவர்களின் விரல்களை ஏக சிக்கலில் இணைக்க, ‘பட்படார்’ என்று சொடுக்குப் போடும் சத்தம் காதைத் துளைத்தது. இதனால் எக்கச்சக்கமாக இணைந்த கைகளை ரங்கு மாமா பிரித்து விடுவதற்குள் சூரியனே அஸ்தமித்துவிட்டதால் வகுப்பு கலைந்தது.

மறுநாள் வஜ்ராசனத்தை அவர்களுக்குச் செய்து காட்டினார் ரங்கு மாமா. வரிசையின் பின்கோடியில் வஜ்ராசனம் பயின்ற கிச்சா பாலன்ஸ் தப்பி தனக்கு முன் இருந்த மணவாள ஐயங்கார் மீது குடை சாய, ஐயங்கார் நிலைகுலைந்து தன் பங்குக்கு முன்னே இருந்த மாருதிராவை முட்டித் தள்ள, வரிசையாக சீட்டுக்கட்டுப் போல வஜ்ராசனத்தில் இருந்த அந்த வரிசைக்காரர்கள் தலை குப்புறத் தரையில் விழுந்து, பாதி உட்கார்ந்த நிலையிலும் பாதி படுத்தவாக்கிலுமாக, ரங்கு மாமாவுக்கே தெரியாத ஒரு புது ஆசனத்தைப் போட்டார்கள்.

அந்த வரிசையின் முதலில் கோதுமை உருண்டை போல் இருந்த கோபால்தான் இந்த தடம்புரண்ட வஜ்ராசனத்தால் கோலிக்குண்டு போல உருண்டு போய், நிகழ்ந்தது எதுவும் தெரியாமல் நிஷ்டையில் இருக்கும் ரங்கு மாமாவை மோதித் தள்ளி, அவரது முன் பல்லை வலி தெரியாமல் உடைத்தார்.

மறுநாள் தரையில் பிணம்போல் மல்லாக்காகப் படுத்து கை, கால்களை அகலமாக விரித்து ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டபடி உடம்பை லேசாக்கி அதற்கு ஓய்வு கொடுக்கும் சவாசனம்… இதற்காகக் காத்திருந்தது போல் அனைவரும் பாய், தலையணை போடாத குறையாக மல்லாக்க, குப்புற, ஒருக்களித்து என்று விதவிதமான போஸ்களில் படுக்க ஆரம்பித்தார்கள். கிச்சா முதலில் குறட்டையை ஆரம்பித்து வைக்க, அது மெட்ராஸ்-ஐ போல அனைவருக்கும் பரவி, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அனைவரின் சேர்ந்திசையாக மாறிய ஆக்ரோஷமான குறட்டை சத்தம் தாங்காமல் திருவல்லிக்கேணியில் மட்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. கிச்சா உட்பட பலர் சொப்பனத்தில் கண்ட காட்சிக்கு ஏற்ப கெக்கேபிக்கேவென்று சிரித்து ரீ ஆக்ட் செய்யும் அளவுக்கு ஆழ்ந்து தூங்கி விட்டதால், இனி என்ன செய்வது என்று புரியாமல் முழித்த ரங்கு மாமா கன்னத்தில் கைவைத்து சோகாசனத்தில் அமர்ந்தார்.

தலைகீழாக நிற்கும் சிரசாசன வகுப்பின்போது கிச்சா தனக்கு அருகில் தலைகீழாக நின்று ஏற்கெனவே ஊசலாடிக் கொண்டிருக்கும் மணவாள ஐயங்காரிடம், ‘கோயிலில் ஆறாம் தேதி கருட வாகனம் என்று செய்தி கூறினான். கோயில் டிரஸ்டியான ஐயங்கார், ‘உளறாதே… கருடவாகனம் ஒன்பதாம் தேதிதான்’ என்று கோபமாக மறுத்ததில் சிறிது கோணலாக, ‘இல்லை சார், ஆறாம் தேதிதான். நீங்க தலைகீழா நிக்கறதால உங்களுக்கு இப்ப ஆறாம் தேதி ஒன்பதாம் தேதியாகத் தோணறது’ என்று கூறி கிச்சா அவரை உசுப்பிவிட, ஆவேசமான ஐயங்கார் தன் பக்கத்து வௌவால் மாருதி ராவ் மீது பைசா கோபுரம் போல சாய, தலைகீழ் மனிதச் சங்கிலி போல இருந்த அனைவரும் தொப் தொப்பென்று விழுந்து, இனி சாப்பிடும்போது சாதாரணமாகச் சம்மணமிட்டு அமரும் ஆசனத்துக்குக் கூட லாயக்கில்லாத அளவுக்குச் சேதமானார்கள்.

இப்படியாக கிச்சா அடித்த லூட்டியால் ‘யோகம் வருவதற்குள் தேகம் போய்விடும் போலிருக்கிறது’ என்ற பயத்தில் ரங்கு மாமாவின் யோகாசனப் பள்ளியிலிருந்து சத்தம் போடாமல் விலகிக் கொண்டார்கள். தைரியமாக வந்த மீதி சிலரிடம், ‘சொன்னா நம்ப மாட்டீங்க. இவ்வளவு ஆசனம் போடும் ரங்கு மாமாவுக்கு ஆசனவாயில் உபத்திரவம். அவருக்கே இப்படீன்னா உங்க கதி?’ என்று புரளி கிளப்பிவிட்டு அவர்களை வரவிடாமல் விரட்டி அடித்தான் கிச்சா.

திருவல்லிக்கேணி லேடீஸ் கிளப் கூட்டத்துக்கு இடம் தருவதாக முன்னாலேயே வாக்களித்துவிட்ட எச்சுமிப் பாட்டி என்னிடமும் கிச்சாவிடமும் ‘கத்துண்டவரை போதும்’ என்று காஷுவலாகக் கூறிவிட்டு, மொட்டை மாடியைக் காலி பண்ணித் தருமாறு ரங்கு மாமாவிடம் கூற, ‘யூ டூ புரூட்டஸ்’ பாணியில் எச்சுமிப் பாட்டியைப் பார்த்துவிட்டுப் படி இறங்கிப் போன ரங்கு மாமாவை அதற்குப் பிறகு நான் பார்க்கவில்லை.

யோகாசனப் பிடியிலிருந்து தப்பி பழையபடி சுதந்தரப் புருஷனான கிச்சா திருவல்லிக்கேணி பீச்சில், விட்டுப்போன ‘திருட்டு தம்’ வேள்வியைத் தொடங்கி வளையம் வளையமாகப் புகைவிட்டு அதன் நடுவே அம்புக்குறி செலுத்தும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றான்.

– மிஸ்டர் கிச்சா, முதற் பாதிப்பு: 2004, கிழக்கு பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *