நடுவர் தீர்ப்பு

0
கதையாசிரியர்: ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 2, 2023
பார்வையிட்டோர்: 4,365 
 

(1990 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்).

நடுவர் தீர்ப்பு

நியாயம் சொல்ல முன் வந்த அந்த ஊர்க்காரன் முன்பு ஒரு நாள் தனக்கு நேர்ந்த அனுபவம் ஒன்றை முதலில் அவர்களுக்கு விளக்கமாகக் கூறினான்.

ஒரு நாள் அவன் தொலைவிலிருந்த ஓர் ஊருக்குப் பயணப்பட்டுப் போனான். அன்று இரவு வழியிலே ஓர் விடுதியில் தங்கினான். அந்த விடுதியில் தங்குவதற்கு வாடகைக்கு இடம், உண்பதற்கு உணவு முதலிய வற்றைப் பணத்திற்குக் கொடுத்து வந்தார்கள்.

அவன் கையிலே உணவைக் கட்டிக் கொண்டு போயிருந்தான். எனவே அவனுக்கு விலைக்கு உணவு தேவைப்படவில்லை. இரவைக் கழிக்க இடம் மட்டும் தேவைப்பட்டது. அதற்கு வாடகைக்கு இடம் பிடித்துக் கொண்டான்.

“உண்பதற்கு ஏதாவது வேண்டுமா?” என்று விடுதிக்காரர்கள் அவனை வினவியபோது, அவன் வேண்டாம் என்று சொல்லி விட்டான். கறிமட்டும் வாங்கிக் கொள்வதற்கும் கூட அவனிடம் காசு இல்லை.

அங்கே தங்கியிருந்த மற்றவர்கள் எல்லாரும் விதம் விதமாக உணவு வகைகளை உண்டு மகிழ்ந்தார்கள். சிலருக்குச் சுடசுடச் மாமிச வகையறாக்கள் உண்ணக் கிடைத்தன. அப்போது ஓர் ஆட்டின் தொடைப் பாகத்தை அறுத்துப் பக்குவப் படுத்த அதன் மேல் நெய்தடவி, தீயில் பொசுக்கிக் கொண்டிருந்தார்கள். அந்த வாசனை அவன் மூக்கைத் துளைத்தது. வாயில் நீரைச் சுரக்க வைத்தது. வாங்கித் தின்ன ஆசை ஆசையாக இருந்தது. காசுதான் இல்லையே!

அந்த வாசனையைப் பிடித்துக் கொண்டே தன் கட்டுச் சாதத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக உண்டு முடித்திட வேண்டும் என்று எண்ணினான். ஆனால் பாதி உண்பதற்குள் மாமிசத்தைப் பொசுக்குவது நின்று விட்டதால் வாசம் இல்லாமல் போய்விட்டது.

அந்த மணம் அவனுக்கு மிகவும் பிடித்துப் போனது. உப்புச் சப்பில்லாத் தன் உணவையும் வெகுவாக ரசித்து ருசித்து உண்ண வைத்திருந்தது. அது தடைப்பட்டுப் போகவே, அவன் விடுதிக்காரனிடம் சென்றான்.

“ஐயா! அந்த ஆட்டு மாமிசத்தை இன்னும் கொஞ்ச நேரம் சுட்டுக் கொண்டிருங்களேன். அந்த வாசனையை அனுபவித்துக் கொண்டே நான் என் உணவை முடித்து விடுகிறேன்” என்று கேட்டுக் கொண்டான். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். அவனும் தன் உணவை முடித்துவிட்டுச் சந்தோஷமாக ஏப்பம் விட்டான்.

அன்று இரவு கழிந்து, பொழுது விடிந்தது. அவன் விடுதியை விட்டுப் புறப்பட்டான். தங்கியிருந்ததற்காக இடத்துக்குப் பேசிய வாடகைப் பணத்தைக் கொடுத்தான். ஆனால் அவர்கள் அவன் பிடித்த மாமிச வாசனைக்கும் பணம் கொடுக்க வேண்டும் என்றார்கள். அவன் அந்த அநியாயத்தை எதிர்த்து வாதிட்டான்.

அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. உச்சஸ்தாயியில் கூச்சல் போட்டார்கள். இவனும் பதிலுக்கு உரக்கக் கூவினான். கூட்டம் கூடிவிட்டது. எல்லாரும் அவர் களை அந்த ஊர் நியாய அதிகாரியிடம் அழைத்துக் கொண்டு போனார்கள்.

அந்த அதிகாரி எல்லா விவரங்களையும் கேட்டு அறிந்து கொண்டார். சிறிது நேரம் வரை யோசித்தார். அவருக்கு ஒரு நல்ல முடிவு தென்பட்டது. நியாயம் வழங்குவதிலே சிறந்தவர் என்று பேர் எடுத்தவர் அவர். நிறையப் படித்தவர்; பல கலைகளில் புலமை பெற்றவர். நல்ல புத்திமான் என்றும் சகலகலா வல்லவர் என்றும் அவரை எல்லாரும் போற்றினார்கள். பல சிக்கலான வழக்குகளிலே சாமர்த்தியமாக அவர் தீர்ப்பு வழங்கியிருக்கிறார். அந்த வழக்கிலும் அவர் அப்படித்தான் அருமையாக நியாயம் வழங்கினார்.

“கறியைத் தின்றவர்கள் அதற்கு விலையைக் கொடுத்தார்கள். கறியின் வாசனையைத்தான் இவர் பிடித்திருக்கிறாரே தவிர, கறியையே இவர் தின்ன வில்லை. கறியைத் தின்றவர்கள் விலையாகப் பணம் கொடுத்தார்கள். கறியின் வாசனையை அனுபவித்தவர் அதற்கு விலையாகப் பணத்தின் வாசனையை தருவது தான் நியாயம். ஆகவே, விடுதிக்காரர் மூக்கிலே பணம் நிறைந்த பையை எடுத்துத் தேய்த்து அந்த வாசனையை அனுபவிக்க விட்டால் போதும்!”

இதுதான் அவர் வழங்கிய தீர்ப்பு. உடனே பணப் பையைக் கொடுத்து, விடுதிக்காரன் மூக்கிலே அதை அழுத்தித் தேய்க்குமாறு உத்தரவிட்டார். அவனும் பலம் கொண்ட மட்டும் அழுத்தித் தேய்த்தான்.

தேய்த்துத் தேய்த்து அவன் மூக்கே தேய்ந்து விடும் போலிருந்தது. எரிச்சலோ எரிச்சல்… தாங்க முடியாத எரிச்சல்! “போதும் போதும்! என்னை விட்டு விடுங்கள்” என்று துடியாய்த் துடித்துக் கூவினான் விடுதிக்காரன்.

தனக்கு நேர்ந்த அனுபவத்தைக் கூறி, இதே மாதிரி தீர்ப்புத்தான் இந்த வழக்கிலும் கிடைக்கும் என்று அந்த ஊர்க்காரன் உரைத்தான்.

“உண்மையிலே அன்றைக்கு அந்தப் பண்டிதர் வழங்கியது மிகமிக நியாயமான தீர்ப்பு தானே! அது போலவே இப்போது உங்கள் வழக்கில் நான் கூறப் போவதும் பொருத்தமான நியாயமான பாரபட்ச மில்லாத நல்ல தீர்ப்புதான். அதாவது மாட்டின்மேல் ஏறி வந்ததற்கு வாடகை ஏற்கனவே பேசியபடி மூன்று பணம் அது சரி. ஆனால் மாட்டின் நிழலில் தங்கியதற்குப் பணம் கேட்பது நியாயம் ஆகாது. அதற்குப் பணத்தின் நிழல்தான் கூலியாகும். ஆனால் இந்த இரவு நேரத்தில் பணத்தின் நிழல் கிடைக்காது. அதற்குப் பதில் பணத்தின் சப்தத்தைக் கூலியாகப் பெற்றுக் கொள்ள ஒப்புக் கொள்” என்று கூறிவிட்டு, “மாட்டுக்காரனை நன்றாகப் பிடித்துக் கொள்ளுங்கள். பணப்பையைத் தூக்கி வந்து, அவன் காதில் பணத்தின் ஒலி நன்றாகக் கேட்குமாறு மோதி மோதி அடியுங்கள். அப்போது கேட்கும் பணச் சப்தம்தான், மாட்டின் நிழலில் தங்கியதற்கு ஏற்ற கூலியாகும்.” என்றான்.

உடனே அவ்வாறே செய்ய ஏற்பாடு ஆகியது. பணப்பையால், மாட்டுக்காரன் காது கிழியும்படி மோதி மோதி அடித்தார்கள்.

“ஐயா! போதும், போதும்! பணச் சப்தம் கேட்கிறது. எனக்குக் கூலி கிடைத்து விட்டது. என் காதே பிய்ந்து போகும் போலிருக்கிறது. இத்துடன் என்னை விட்டு விடுங்கள்” என்று கூவினான் மாட்டுக்காரன். அவர்கள் விடவில்லை. மாட்டுக்காரன் வலி பொறுக்காமல் கேவினான். “ஐயோ…. உங்களுக்குப் புண்ணியமாகப் போகிறது. என்னை என்னை விட்டு விடுங்கள்’ என்று கதறினான் மாட்டுக்காரன். அதற்குப் பிறகுதான் அவனை விட்டு விட்டார்கள்.

‘ஐயா மாட்டுக்காரா! நீ கேட்டது கிடைத்து விட்டது. எங்களுக்கும் புத்தி வந்தது. உனக்கும் புத்தி வந்திருக்கும். இனி உன் மாடும் வேண்டாம். அதை நடத்திச் செல்ல நீயும் வேண்டாம். கொஞ்ச தூரம்தான் நாங்கள் போக வேண்டும். பொழுது விடிந்ததும் நாங் கள் புறப்பட்டு, மெல்ல மெல்ல நடந்து போய்க் கொள் கிறோம். இதுவரை வந்ததற்கு உனக்குக் கோடி புண்ணி யம்” என்று கையெடுத்துக் கும்பிட்டார் குருதேவர்.

“ஐயா! என்னை விடுங்கள் உங்களுக்குக் கோடி புண்ணியம்” என்று மாட்டை ஓட்டிக் கொண்டு புறப்பட்டு விட்டான் மாட்டுக்காரன்.

“ஐயா! எங்கள் பிரச்சினைக்கு நல்ல முடிவு சொன்னீர்கள்'” என்று அந்த ஊர்க்காரனுக்கு நன்றி செலுத்திப் பாராட்டினார் பரமார்த்த குரு.

குதிரைக்குத் தூண்டில்

வெயிலுக்கு முன்னே புறப்பட்டால், பிரயாணக் களைப்பு இல்லாமல் இருக்கும் என்று அவர்கள் மறுநாள் அதிகாலையிலேயே அங்கிருந்து கிளம்பினார் கள். இருந்தாலும் தள்ளாத குருவோடு அவர்கள் தளர் நடைதான் போட முடிந்தது. எனவே கொஞ்ச தூரம் போனதுமே வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது.

வழியிலே ஒரு சோலை தெரிந்தது. அங்கே பச்சைப் பசேலெனப் பல மரங்கள் தெரிந்தன. உள்ளே போனால் குளுகுளு என்றிருக்கும் போலிருந்தது. அங்கே சென்று சற்று நேரம் இளைப்பாறினார்கள்.

அந்நேரத்தில் மிலேச்சனுக்கு வயிறு என்னவோ செய்தது. பக்கத்திலே ஓர் ஏரி தெரிந்தது. அதனுள் நீரும் தெரிந்தது. கரையோரமாகப் போய் ஒதுங்கினான். கால் கழுவ ஏரியில் இறங்கினான்.

அந்த ஏரியின் கரையில் ஓர் ஐயனார் கோயில் இருந்தது. அந்தக் கோயிலின் எதிரே ஒரு குதிரை நின்று கொண்டிருந்தது. அது மண் குதிரை. பூஜை செய்து அந்தக் குதிரையைக் கொண்டு வந்து காணிக்கையாக்கி அங்கே நிறுத்தியிருக்கிறார்கள்.

அது பார்ப்பதற்கு அழகாக இருந்தது. பெரியதாக இருந்தது. புதியதாக இருந்தது. பல வண்ணங்கள் தீட்டப்பட்டு நேர்த்தியாக இருந்தது. கம்பீரமாக நின்று கொண்டிருந்தது.

அது ஏரிக் கரையில் இருந்ததனால் அதன் பிம்பம் தண்ணீரில் தெரிந்தது. கால் கழுவச் சென்ற மிலேச்சன் ஏரி நீரில் குதிரையைக் கண்ட அதிசயத்துப் போனான். நிமிர்ந்து கரையை நோக்கினான். அங்கே மண் குதிரையிருப்பதைக் கண்டான். ஏரி நீர் கண்ணாடி போல் தெளிவாக இருப்பதனால் அதன் உருவம்தான் நீரில் தெரிகிறது’ என்று தான் ஆரம்பத்தில் நினைத் தான். ஆனால் அப்போது வீசிய காற்றில், நீர் அசைந்தது. நீருக்குள் இருந்த குதிரையும் அசைந்தது. ஆனால் கரையிலேருந்த குதிரை அசையவே இல்லையே!

அதன் பிம்பமாயிருந்தால் அது அசையாமல் நீரில் உள்ள இது அசையாதே! ‘நீருக்குள் இருக்கிற குதிரை அசைகிறது என்றால் அது உயிருள்ள குதிரையாகத்தான் இருக்க வேண்டும். ஏரிக் கரையில் கோயிலுக்கு எதிரே யிருப்பது உயிரில்லாத மண் குதிரையே. தண்ணீருக்குள் இருப்பது உயிருள்ள குதிரையாயிருந்தால், கல்லை எடுத்து வீசினால் ஓடும் இல்லையா?” என்று எண்ணி ஒரு கல்லை எடுத்து கூச்சல் போட்டு ஏரி நீரில் தெரியும் குதிரையை நோக்கி வீசினான்.

கல் விழுந்ததும் தண்ணீர் அசைந்தது. தண்ணீரில் தெரிந்த குதிரையும் அசைந்தது. அது தலை எடுத்து கால் உதறி, துள்ளிக் கொண்டு நிற்பதாக அவனுக்குத் தோன்றியது. அடுத்த கணமே, அது எங்கே தண்ணீரை விட்டுத் தன்மீது பாய்ந்துவிடுமோ என்று பயந்து காலைக் கூட கழுவமுடியாமல், அங்கிருந்து ஓட்டமாக ஓடி, மடத்தை அடைந்தான்.

பதறிக் கொண்டு ஓடி வந்தவனைப் பார்த்த பரமார்த்த குரு பகலிலேயே எதைப் பார்த்துப் பயந்தானோ என்று பரிவுடன் விசாரித்தார். மிலேச்சன், தான் ஏரி நீரில் கண்ட குதிரையைப் பற்றிக் கூறினான்.

அதைக் கேட்டதும் அவர்கள் அத்தனை பேருக்கும் ஆர்வம் அதிகரித்தது. எல்லாரும் ஓடிப் போய் ஏரி நீரில் பார்த்தார்கள்.

‘அட ஆமாம்! மிலேச்சன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மைதான்!” என்று அதிசயித்தார்கள்.

மட்டி பொதுவாகத் தண்ணீருக்குள் இறங்கக் காலை எடுத்தான். அப்போது அந்தப் பக்கமாக ஒரு பெரிய தவளை தத்திக் குதித்தது. அதையடுத்து பல தவளைகள் தண்ணீரிலும் தரையிலும் இருந்ததைப் பார்த்தான். அவனுக்குப் பயமாகி விட்டது.

“தண்ணீரில் இறங்கினால் தவளைகள் கடித்து விடும்” என்றான் நடுங்கிக் கொண்டு. மற்றவர்களும் “ஆமாம், ஆமாம்” என்று பயந்து தள்ளி நின்று கொண்டார்கள்.

‘இந்தக் குதிரையைப் பிடிக்க வேண்டுமே, இது குருதேவருக்கு ஏற்ற குதிரையாகவே இருந்தது. விலை கொடுக்கும் செலவு இல்லாமலும் இருக்கும். பிடித்துவிட வேண்டும்.

அவர்கள் தீவிரமாக யோசித்தார்கள். ஆளுக்கு ஒரு யோசனை கூறினார்கள்.

“குதிரைக்குப் பிடித்தது கொள்ளு அல்லவா! கொள்ளைப் பார்த்தால் குதிரை கொள்ளை ஆசை யோடு வாயைத் திறக்குமே.” என்றான் மடையன்.

“ஆமாம்… கொள்ளைக் காட்டினால் அதைத் தின்ன வாயைத் திறந்துக் கொண்டு மேலே வரும். அப்போது பிடித்து விடலாமே சுலபமாக!” என்றான் மூடன். “பச்சைப்புல் என்றாலும் குதிரைக்கு ஆசை தானே. ஆகவே பச்சைப் புல்லைத் தண்ணீருக்கு மேலே காட்டினால் அதைத் தின்னத் தாவிக் கொண்டு மேலே வரும்” என்றான் பேதை.

“ஆமாம்…அப்போது ‘கபக்’ என்று பிடித்துக் கொள்ளலாம். எல்லாரும் சேர்ந்து” என்றான் மிலேச்சன்.

“ஏன்…. எந்தக் கஷ்டமும் இல்லாமல் இப்படிச் செய்யலாமே!” என்று ஆரம்பித்தான் மட்டி.

“எப்படி?” கேட்டான் மடையன்.

“நாம் கரைமேலிருந்து கொண்டே குதிரை கனைப்பதைப் போல் கனைத்தால், இந்தக் குதிரை மேலே வரும். தன் ஜாதி மிருகங்களோடு சேர்ந்து கொள்ள ஆசையிருக்குமே! மேலே வந்ததும், ஒரே சமயத்தில் நாம் ஓடிப்போய் சரியாக அமுக்கிப் பிடித்துக் கொள்ளலாமே” என்றான் மட்டி.

“இந்த ஏரியிலே இறங்கித் தண்ணீரை இப்படியும் அப்படியும் கலக்கினால், உபத்திரவம் தாங்காமல் குதிரை வெளியே ஓடிவருமே! தண்ணீரை விட்டு வெளியே வந்தால் எல்லாரும் சேர்ந்து சுலபமாகப் பிடித்து விடலாமே!” எ;னறார் குருதேவர். “இதெல்லா வற்றையும் விடச் சுலபமான வழி ஒன்று சொல்கிறேன் கேளுங்கள்” என்று உரத்த குரலில் ஆரம்பித்தான் மிலேச்சன்.

“தண்ணீருக்குள் இருக்கிற மீனைத் தூண்டில் போட்டுக்குள்ளே பிடிக்கிறார்கள்? ஆகவே தண்ணீருக் குள் இருக்கிற இந்தக் குதிரையையும் தூண்டில் போட்டே பிடித்துக் கரையில் இழுத்து விடலாம்” என்றான் அவன். கடைசியாக எல்லாருக்கும் தூண்டில் யோசனையே சரி என்று தோன்றியது.

நொண்டிக் குதிரை

தூண்டில் போட்டுக் குதிரையைப் பிடிக்க முடிவு கட்டியபின், அவர்கள் தூண்டிலைத் தயார் செய்ய முனைந்தார்கள். தங்களிடமிருந்த ஒரு கருக்கரிவாளை எடுத்து அதைத் தூண்டில் முள்ளாகப் பயன்படுத்தவும், தங்களிடம் உள்ள கட்டுச் சோற்றைக் கட்டி, அதை தூண்டில் முள்ளின் முனையில் இரையாகப் பயன் படுத்தவும், குருநாதர் தம் கரத்தில் தாங்கி நடக்கும் ரிஷப முகமும் பித்தனைப் பூணும் பொருந்திய தடியைத் தூண்டில் கோலாகப் பயன்படுத்தவும் திட்டமிட்டுச் செயல்பட்டார்கள்.

அவ்வாறே அவர்கள் புதுமையாகத் தூண்டிலை அமைத்து அதை நீரில் குதிரை உருவம் தெரிந்த இடத்தில் வீசினார்கள். அவர்கள் வீசிய விசையினால் தண்ணீர் கலைந்து அலைந்தது. அப்போது அந்தக் குதிரையுந் துள்ளி எழுந்து உடலை நெளித்துக் குதித்து வேகமாக எழும்பியதைப் போல் அவர்களுக்குத் தோன்றியது. அவர்கள் உடல்கள் நடுங்க அங்கிருந்து ஓட்டமாக ஓடிப் போனார்கள். ஆனால் தூண்டிலைத் தண்ணீரில் போட்டுவிட்டு, முனையைத் தன் கையில் பிடித்திருந்த மட்டி மட்டும் தன் பிடிப்பை விடாமல் எப்படியோ அங்கேயே தைரியமாக அமர்ந்திருந்தான்.

சிறிது நேரத்தில் ஏரி நீரில் அசைவு ஏதும் இல்லாமல், அமைதியாக இருந்தது. தூண்டில் கோல் மட்டும் இலேசாக இழுப்பதைப் போல் தோன்றியது மட்டிக்கு. முனையில் கட்டியிருந்த கட்டுச் சோற்றை, தண்ணீரிலிருந்த மீன்கள் கடித்து இழுத்துக் கொண்டிருந்தன.

குதிரை தான் தூண்டில் சிக்கிக் கொண்டு விட்டது என்று நினைத்து மட்டி மெதுவாகக் கையை உயர்த்தி, கரையிலிருந்தவர்களை அருகே சைகையால் அழைத்தான். அவர்கள் அருகே வந்ததும் ‘குதிரை இப்போது தான் இரையைக் கடிக்கத் தொடங்குகிறது என்றான் இரசியக் குரலில்.

சற்று நேரம் பொறுத்து, தூண்டிலை மேலே இழுத்தான். அது அழுத்தமாக, கனமாக இருப்பதாகத் தோன்றியது. காரணம் அது ஏரியின் அடியில் வளர்ந் திருந்த கோரைப் புற்களில் மாட்டிக் கொண்டு விட்டது தான். ஆனால் மட்டி அது குதிரைதான் வாயில் மாட்டிக்கொண்டதென எண்ணிவிட்டான்.

“இனி, குதிரை நமக்குக் கிடைத்த மாதிரி தான்! தூண்டிலில் சிக்கிய பிறகு துள்ளிக் கொண்டு ஓடிவிட விட்டு விடுவோமா!” என்று பெருமை ததும்பப் பேசினான் மட்டி.

மற்றவர்களுக்கும் மட்டமற்ற மகிழ்ச்சியே! ‘எப்படியோ..குதிரை நமக்குச் சொந்தமாகப் போகிறது! குருநாதருக்கு நடந்து செல்லும் உடல் உபாதை இருக்கப் போவதில்லை’ என்று எண்ணி ஒவ்வொருவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தார்கள்.

அந்த மகிழ்ச்சியோடு சிஷ்யர்கள் எல்லாருமாகச் சேர்ந்து தூண்டில் கோலை மேலே இழுத்துத் தூக்க முயன்றார்கள். அப்போது கட்டு சாதத்தைக் கட்டியிருந்த துணி அறுந்து போய், தடி மட்டும் திடீரென்று மேலே எழும்ப அவர்கள் அப்படியே மல்லாந்து விழுந்து விட்டார்கள். விழுந்த அதிர்ச்சியினால் அவர்களுக்கு மயக்கமே வரும் போலிருந்தது.

அந்தச் சமயத்தில் ஏரிக் கரையின் மீது ஒருவன் அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்தான். விழுந்த கிடந்த அவர்களைப் பார்த்து, “ஏன் எல்லாரும் மொத்த மாக விழுந்து கிடக்கிறீர்கள்?” என்று மெத்தவும் பரிவோடு விசாரித்தான்.

அவர்கள் நடந்ததையெல்லாம் விடாமல் சொல்வதற்கு ஒருவரையொருவர் முந்தினார்கள்.

“அப்பனே! எங்கள் குருநாதரைப் பார். எவ்வளவு தள்ளாதவராக இருக்கிறார். அவரால் நீண்ட தூரம் நடக்க முடியுமா? ஆகவேதான், எப்படியாவது அவ ருக்கு ஒரு குதிரையைத் தேடிக் கொடுக்க வேண்டும் என்று பாடாய்ப் படுகிறோம். குதிரை சரியாக குதிர மாட்டேன் என்கிறது. விலை கொடுத்து ஒரு நல்ல குதிரை வாங்கவோ எங்களிடம் போதிய பணம் இல்லை. வாடகை மாடு ஒன்றைப் பார்த்தோம். மாட்டுக்காரன் வஞ்சகம் பிடித்தவனாக, நெஞ்சிலே ஈவு இரக்கம் கொஞ்சமும் இல்லாதவனாக எங்களைக் கொடுமைப்படுத்தி விட்டான். இப்போது தண்ணீரிலே தெரிந்த குதிரையைச் செலவில்லாமல் பிடித்துக் குருவுக்குத் தரலாம் என்று பார்த்தால், எங்கள் கதி இப்படியாகி விட்டது!”

அவர்கள் சொன்னதைக் கேட்டு, அவர்களுக்காகப் பரிதாபப்பட்டான் வழிப்போக்கன். குருவின் மேல் அவர்களுக்குள்ள பக்தியை அவன் மெச்சினான்.

கள்ளங்கபடு தெரியாத நல்ல சிஷ்யர்களுக்கு உதவி செய்ய எண்ணினான்.

“சுவாமிகளே! உங்கள் நிலையைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. உங்களுக்கு உதவி செய்ய நினைக்கிறேன். என்னிடம் ஒரு குதிரை உள்ளது. என்றாலும் உங்கள் குருவின் வழிப்பயணத்துக்கு அது ஓரளவு உதவியாகவே இருக்கும் என்னோடு வாருங்கள் நான் அதைத் தருகிறேன்” என்றான் உருக்கமாக.

“ஐயா… அதற்கு விலை கொடுக்கும் நிலையில் எங்களிடம் பணம் இல்லையே” என்றார் குரு. “எனக்குப் பணம் ஏதும் வேண்டாம். உங்களுக்கு உதவ முடிகிறதே என்ற மகிழ்ச்சி ஒன்றே எனக்குப் போதும்” என்றான் அவன் மகிழ்ச்சி யோடு.

இலவசமாக ஓரு குதிரை கிடைத்தால் அந்தக் குதிரையை அவர்கள் வேண்டாமென்று மறுத்து விடுவார்களா? மகிழ்ச்சியோடு அவர்கள் அவனுடன் சென்றார்கள்.

பரமார்த்த குரு பரியேற்றம்

குருவோடும் சிஷ்யர்களோடும் சென்ற நொண்டிக் குதிரைக்காரன் அவர்களை அருகே இருந்த தன் ஊருக்கு அன்போடு அழைத்துச் சென்றான். அவன் தனவந்த னாக இல்லாதவன் என்றாலும் சொல்லைக் காப்பாற்றக் கூடிய நல்ல குணம் கொண்டவனாக இருந்தான்.

அன்றிரவு அவர்களைத் தன் வீட்டில் தங்கச் செய்து, உணவு, இடம் முதலியவை கொடுத்து மரியாதையுடன் தகுந்தபடி உபசரித்து மகிழ்ந்தான். பலவித உணவு வகைளைப் படைத்ததோடு, பாக்கு வெற்றிலை தாம்பூலம் கொடுத்து மகிழ்வித்தான்.

மறுநாள் பொழுது புலர்ந்ததும் அவர் தன் வயல் வெளிக்குச் சென்றான். அங்கே மேய்ந்து கொண்டிருந்த தன் குதிரையைப் பிடித்துக் கொண்டு வந்தான். அதைப் பரமார்த்த குருவுக்குப் பக்தியோடு காணிக்கையாகக் கொடுத்தான்.

அவனுக்குச் சொந்தமாக இருந்த அந்த ஒரே குதிரை, வயதானதாக, ஒரு கண் பொட்டையாக, ஒரு காது மூளியாக, முன்னங்கால் ஒன்று நொண்டியாக, பின்னங் கால் ஒன்று முட்டிக்காலாக, பார்கப் பரிதாபமாக இருந்தது. ஆனாலும், பரிதாபமான கிழகுரு பரமார்த் தருக்கு ஏற்றதாகத்தான் இருந்தது. அந்தக் குதிரை எப்படி இருந்தாலும் அது பணம் ஏதும் செல வில்லாமல் இலவசமாகக் கிடைப்பதுதானே என்ற மகிழ்ச்சி அவர்களுக்குள் நிறைந்திருந்தது.

சிஷ்யர்கள் அந்தக் குதிரையைச் சுற்றிலும் நின்று கொண்டு சிறிது நேரம்வரை நோட்டம்விட்டார்கள். மட்டி அதைச் சுற்றி வந்து அதன் மேனியைத் தடவி மகிழ்ந்தான். அதன் நொண்டிக் காலைப் பாசத்தோடு தொட்டு மகிழ்ந்தான் மடையன். அதன் மொட்டை வாலை அன்போடு பற்றி உருவி மகிழ்ந்தான் மூடன். அதன் நொள்ளைக் கண்ணிலிருந்து வழிந்து கிடந்த ஊளையைப் பற்றொடு துடைத்துப் பரவசப்பட்டான் பேதை. பச்சைப்பசேல் என்று இருந்த புல்லை நிறையப் பிடுங்கிக்கொண்டு வந்து பாசத்தோடு அதற்கு உண்ணக் கொடுத்து இன்புற்றான் மிலேச்சன். அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பரமார்த்த குருவுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

அதற்குப் பிறகு அவர்கள், குதிரையின் மேல் ஏறி அமர்ந்து சவாரி செய்வதற்கான சாதனங்களுக்கு வழி தேடினார்கள். அந்தக் குதிரைக் காரனே, தான் ஒரு காலத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்த பழைய சேணத்தைக் கொண்டு வந்து கொடுத்தான். குதிரை வாலின் கீழ் மாட்டுவதற்காக இருக்கும் பின்தட்டு வாரானது அந்தக் சேணத்தில் காணாமலிருந்தது. அதற்குப்பதிலாக அவர்கள் பாலைக்கொடியைத் திரித்துப் பயன்படுத்திக் கொண்டார்கள். கடிவாளமும் காணவில்லை வைக்கோலைத் திரித்து ஒருமாதிரி கயிறாக்கி, அதனைக் கடிவாளமாகப் பயன்படுத்தினார்கள்.

‘வழியிலே கண்ட குதிரைக்கு வைக்கோல் புரியே கடிவாளம்’ என்ற பழமொழி அவர்களுக்காகத்தான் ஏற்பட்டது போலிருந்தது. மற்ற கருவிகளையும் எப்படி எப்படியோ சமாளித்துச் சரி செய்து கொண்டார்கள்.

ஒரு வழியாகக் குதிரையின் மேல் அமரக் கூடிய சாதனங்களும், குதிரையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளவேண்டிய கருவிகளும், சமாளித்தாகிவிட்டது. பிறகு ஒரு நல்ல நேரத்தில் குதிரை மேலே குருவை ஏற்றவேண்டும்! ஜோதிட முறைப்படி வாரசூலை இருக்க கூடாது. அமிர்த யோகமாக இருக்க வேண்டும். சுப முகூர்த்த நாளாக இருப்பது சிலாக்கியம். அந்த நாளையும் நிச்சயித்துக் கொண்டார்கள்.

அத்தகைய நல்ல நாளிலே, நல்ல நேரத்திலே ஊரெல்லாம் திரண்டிருந்தது. பரமார்த்த குருவைக் குதிரையின் மேல் ஏற்றினார்கள். அப்போது எல்லாரும் கூச்சல் போட்டு மங்கலமாகக் குரல் கொடுத்தார்கள். சிஷ்யர்கள் ஐவரும் குதிரையைச் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

மட்டி, குதிரையின் முன்புறமிருந்து கடிவாளத்தை யிழுத்தான்; மடையன் பின்புறமிருந்து குதிரையின் மொட்டை வாலைப் பிடித்து முறுக்கினான். மிலேச்ச னும், மூடனும் குதிரையை அதட்டி ஓட்ட, இரு பக்கங்களிலும் இருந்தார்கள். பேதை குதிரைக்கு முன்னே, “பரமார்த்த குரு வருகிறார்! பராக்! பராக்!” என்று எச்சரிக்கைக் குரல் எழுப்பிக் கொண்டு கம்பீரமாக நடந்து சென்றான். இத்தகைய அலங்கார ஆரவாரத்துடன் கிழக் குருவான பரமார்த்த குரு நொண்டிக் குதிரையின் மீது ஆனந்தமாக அமர்ந்து சவாரி மேற்கொண்டார்.

சுங்க வரி

நடந்தாலே வேகமாகச் சென்றுவிடலாம் நடக்க முடியவில்லை என்று தானே குருநாதரைக் குதிரையின் மேல் ஏற்றினார்கள். பாவம்… அது இருந்த நிலையில் எப்படியோ மூச்சைப் பிடித்துக் கொண்டு நடந்தது.

கொஞ்சதூரம் போனதும் சாலையின் குறுக்கே நின்று அவர்களை வழிமறித்தான் ஒருவன். திடுக்கிட்டுப் போனார்கள் குருவும் சிஷ்யர்களும்.

“நான் ஆயக்காரன். சுங்கவரி வசூலிப்பவன். நீங்கள் வரி செலுத்த வேண்டும்” என்றான் அவன்.

“வரியா? எதற்கு?” என வியந்தும் பயந்தும் நயந்தும் கேட்டார்கள் அவர்கள்.

“இந்தக் குதிரையின் மேல் இந்த வழியில் செல்வதற்கு ஐந்து பணம் ஆயம் கட்ட வேண்டும்” என்றான் அவன்.

“இது என்ன விந்தை? இந்தக் குதிரையே எங்களுக்கு இலவசமாகத்தான் கிடைத்தது, எங்கள் குருநாதருக்காக ஒரு புண்ணியவான் பெரிய மனசு வைத்துக் கொடுத்த காணிக்கை இது! இதற்குமா வரி?” என்று கேட்டான் மட்டி.

“ஆமாம். வரி கட்டித்தான் ஆகவேண்டும். வரி கட்டாமல் இந்த இடத்தை விட்டு ஓர் அடிநகர முடியாது நீங்கள்” என்றான் ஆயக்காரன் கடுமையாக.

“இது அக்கிரமம்! அடுக்காது! அநியாயம்!” என்று ஆளுக்கு ஆள் கொக்கரித்தார்கள்.

“அநியாயமோ… நியாயமோ எனக்குத் தெரியாது, என் கடமை வரி வசூலிப்பது. கொடுக்காமல் போகவிட மாட்டேன்” என்று குறுக்கே நின்று கூச்சல் போட்டுத் தடுத்தான் அவன்.

குருவும் சிஷ்யர்களும் எவ்வளவோ கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்தார்கள். வரி வசூலிப்பவன் கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை.

அங்கிருந்து தப்பிப் போக முடியுமா வேறு வழியிருக்கிறதா என்று சுற்றிலும் நோட்டம் விட்டுப் பார்த்தார்கள். ஒரு வழியும் தோன்றவில்லை. அவன் அவர் களை நீண்ட நேரமாகத் தடுத்து நிறுத்தி வைத்தான்.

கடைசியில் “நாம் கொடாக் கண்டன்களாக இருந் தால் அவன் விடாக் கண்டனாகவே இருக்கின்றான்” என்பதைக் கண்டு கொண்டார்கள். மேலும் வாதாடிக் கொண்டிருப்பது வீண்தான் என்பது புரிந்தது அவர்களுக்கு.

“இது ஒரு வீண் தண்டம்” என்று மூக்கால் அழுது கொண்டே ஐந்து பணத்தை ஆயக்காரனிடம் கொடுத்துத் தொலைத்தார்கள். அதற்குப் பிறகுதான் அவன் அவர்களை மேலே நகர்வதற்கு அனுமதித்தான்.

பரமார்த்த குருவுக்கு மிகவும் வேதனையாகி விட்டது. ‘இருக்கிற கொஞ்சம் பணமும், கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து போகிறதே’ என்று அவர் வருந்தினார். ‘இந்தக் குதிரை இல்லை என்றால் ஐந்து பணத்துக்கு நஷ்டம் வந்திருக்காதே. அதனால் மனத்துக்கும் கஷ்டம் வந்திருக்காதே!’ என்று எண்ணி எண்ணிக் கலங்கினார்.

இந்த வேதனையோடு அங்கிருந்து அவர்கள் புறப்பட்டார்கள். உடலைவிட உள்ளத்தில் அதிக வேதனை தெரிந்தது அவர்களுக்கு. அருகே இருந்த ஒரு சிற்றூரை அடைந்தார்கள். அங்கே ஒரு சத்திரத்தைக் கண்டார்கள். சற்று இளைப்பாறிச் செல்லலாம் என்று அங்கே போனார்கள்.

அந்தச் சத்திரத்திலே இருந்த ஒருவன் அவர்கள் அருகே வந்தான். குருவுக்குத் தம் கஷ்டத்தை யாரிடமாவது வாய்விட்டுக் கொட்டித் தீர்க்கவேண்டும் என்று தோன்றியது. தாமே வலிய அவனை அழைத்து அருகே அமர்த்தி அவனிடம் முறையிட்டார் குரு.

“ஐயா! நான் பிறந்ததிலிருந்து இதற்குமுன் வரை ஒருபோதும் ஒரு குதிரையிலும் ஏறியவன் இல்லை. ஒரு நாளும் சிரிக்காதவன் திருநாளில் சிரித்த கதையாக, இன்றைக்குப் போய் நான் இலவசமாகக் கிடைத்த இந்தக் குதிரையின் மேல் ஏறிவர, வரியைக் கட்டு என்று வாதாடிக் கொண்டு வழியிலே வந்துவிட்டான் ஒரு வம்பன். இது அநியாயம் இல்லையா? வழியிலே மடக்கி வரி கேட்பது, வழிப்பறிக் கொள்ளையல்லவா? நீதியில்லாமல் இப்படிக் கடுமையாக மறித்து கொடுமையாகப் பிடுங்கிக் கொள்கிற பணம் யாருக்கு என்ன நன்மை செய்யும்? என் வயிறு எரிகிறது. அந்தப் பணம் அவனுக்கு உதவாமல் தான் போகும். அது அவனுக்கு ஜீரணமாகாது. நெருப்பாக, பெரிய ரணம் தான் ஏற்படுத்தும்” என்று தம் வேதனையை எல்லாம் வார்த்தைகளாக வடித்துக் கொட்டினார் பரிமார்த்த குரு.

அதைக் கேட்டு, சத்திரத்திலிருந்தவனும், கவலை யடைந்தான். குருநாதரின் நொந்த உள்ளத்துக்கு இதமாக, பதமாக நாலு வார்த்தைகள் சொல்லத் தொடங்கினான் அவன்.

“குருசுவாமி! இந்தக் கலி காலத்திலே இப்படி யெல்லாம் நடப்பது சகஜமாயிருக்கிறது. இந்தக் காலத்தில் பணம்தான் எல்லாம். பணம்தான் குரு. பணம்தான் தெய்வம்! உங்களுக்குத் தெரியாதா? பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்குமே! பணம் இல்லாதவன் நடைப்பிணம்தானே! பணம் பந்தியிலே கு ணம் குப்பையிலே என்று கேள்விப்பட்டதில்லையா? பணத்தைவிடப் பெரிய சொந்தமும் பந்தமும் உண்டா, என்ன? ஆகவே… நடந்து போனதை எண்ணிக் கலங்க வேண்டாம். போனது போனதுதானே! வருந்துவதால் திரும்பி வந்துவிடவா போகிறது?” என்றான் அவன்.

“ஆமாம் அப்பா! இந்தக் காலத்திலே அசிங்கத்திலே ஓர் அரைக் காசு கிடைத்தாலும் விட்டுவிட மாட் டார்கள். அதை அக்கறையோடு எடுத்து, நாக்கிலேயே நக்கிச் சுத்தம் செய்து கொள்வார்கள்!” என்றார் குருவும்.

“உண்மைதான். கொஞ்சம் கூட கூசாமல் அவர்கள் அப்படித்தான் செய்வார்கள். அசிங்கம் நாறுகிறதே என்று கூச்சப்படவே மாட்டார்கள். ஆசைதான் மீறுகிறதே… எது நாறினால் என்ன? பணம் தானே பிரதானம்! சந்தேகமே வேண்டாம். இதற்குச் சரியான சாட்சியாக ஒரு சம்பவத்தை நான் சொல்கிறேன் கேளுங்கள்” என்று ஆரம்பித்தான் அவன்.

பணம் நாறுமா?

ஒரு காலத்திலே ஓர் அரசன் மிகவும் பணத்தாசை பிடித்தவனாக இருந்தான். தன் மக்கள் மீது அதிகமாக வரிகளை விதித்தான். கட்டாதவர்களைக் கடுமையாகத் தண்டித்து வந்தான். இன்னதற்குத்தான் வரி விதிப்பது என்ற வரைமுறையில்லாமல் கண்டதற்கெல்லாம் வரி விதித்தான். அதிலே ஒன்று மூத்திரவரி. மூத்திரவரி செலுத்த வேண்டுமென்று ஆணையிட்டபோது ஆத்திரம் அடைந்தார்கள் மக்கள்.

அந்த அரசனின் மைந்தன் இளவரசனுக்கே ஆத்திரம் வந்தது. தந்தையின் போக்கு மைந்தனுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. இப்படியெல்லாமா குடிமக்களிடத்தில் நாறுகிற வரி வசூலிக்க வேண்டும். வெட்கக்கேடு.. அவமானம்’ என்று அவன் தன் தந்தைக்குப் புத்தி சொன்னான்.

ஆனால் அரசன் அதைப் பொருட்படுத்தவே இல்லை. அவன் வரிகளாக நிறைய வசூலித்து இரும்புப் பெட்டியை நிரப்பி வைப்பதிலேயே குறியாக இருந்துவந்தான். பணப் பெட்டிகள் எல்லாம் நிரம்பிவிட்டன.

அரசன் மகிழ்ச்சியோடு ஒருநாள் தன் மகனை அருகே அழைத்தான். “அன்புள்ள மகனே, அதோ பார்… பணம் எப்படி நிரம்பியிருக்கிறது என்று பார்! அவ்வளவும் சிறுநீர் வரி போட்டுச் சேர்த்ததுதான். நீ என்னவோ நாற்றம் அடிக்கிற வரி என்று சொன்னாயே…! இப்போது நீ போய் அந்தப் பணத்தை எடுத்து மோந்து பார்!” என்றான்.

இளவரசன் தட்ட முடியாமல் வேண்டா வெறுப்பாக, பணப் பெட்டியருகே சென்றான். கொஞ்சம் காசுகளைக் கையில் எடுத்து நாசிக்கருகே வைத்து முகர்ந்து பார்த்தான்.

சிரித்துக் கொண்டே கேட்டான் மன்னன் “என்ன மகனே பணம் நாறுகிதா?” என்று.

மகனுக்கு வேதனையாக இருந்தது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் வெறுப்பாகச் சிரித்து, “பணம் நாறவில்லை, மணக்கிறது!” என்றான். ‘குணம்தான் நாறுகிறது’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான்.

“பார்த்தாயா…? மூத்திர வரிப் பணம் ஒன்றும் முடை நாற்றம் வீசவில்லை. மணக்கவே செய்கிறது, பார்” என்று அட்டகாசமாகச் சிரித்தான் அரசன்.

வெறுப்பும் வேதனையும் பிடுங்கித் தின்ன, தவறி ஏதும் பேசாமல் மௌனமாகவே நின்றிருந்தான் இளவரசன்.

“இப்படித்தான் அந்த அரசன் தன் மகனுக்கு, எப்படிப் பணம் சேர்த்தாலும் ஒன்றுதான். அது ஒன்றும் நாறப் போவதில்லை என்பதை உணர்த்தினான்” என்று தன் பேச்சை முடித்தான் அவன்.

குதிரைக்குத் தோஷம்!

அந்தச் சத்திரத்தில் அன்றைய பொழுதைக் கழித்தார்கள். வெயில் சற்றுத் தணிந்ததும் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தார்கள். அந்தக் குதிரையின் மேல் குரு ஏறி அமர்ந்தார். வழக்கம் போல் சிஷ்யர்கள் குதிரையை நடத்தித் தாங்களும் நடந்து சென்றார்கள்.

அன்று இரவு நெருங்கும் போது ஒரு பட்டிக்காட்டை அடைந்தார்கள். அன்றைய இரவை அங்கேயே கழிக்க அந்தப் பட்டிக்காட்டில் தங்கினார்கள்.

அன்றிரவு அந்தக் குதிரையைக் கட்டிப் போட்டு வைக்காமல் மேயவிட்டார்கள். காலையில் தேடிய போது அதைக் காணவில்லை.

மூடன் வீடு வீடாகச் சென்று தேடிப் பார்த்தான். கடைசியில் ஒருவன் அதைத் தன் பட்டியில் அடைத்து வைத்திருப்பதைக் கண்டு பிடித்தான்.

அதை வெளியே விடும்படி கேட்டான் மூடன். அந்த வீட்டுக்காரன் மறுத்தான்.

“அது எங்கள் குதிரை ஐயா!” என்றான் மூடன்.

“ஆனால் இது எங்கள் பயிரை மேய்ந்து விட்டது. இரவு முழுவதும் மேய்ந்திருக்கிறது. முப்பது நாழிகை நேரமும் பயிரை மேய்ந்தும், மிதித்ததும் நாசமாக்கியிருக்கிறது. அதனால் தான் இதைவிடப் போவதில்லை” என்றான் அந்த மனிதன்.

மூடன் ஓடோடிப் போய் குருவிடமும் நண்பர்களிடமும் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு கூறினான். அவர்கள் வேகமாக வந்து, பாவமாகக் கெஞ்சினார்கள். அவன் ஒரேயடியாக விட முடியாது என்று மறுத்துவிட்டான்.

அடுத்த ஊர் நாட்டாண்மைக்காரர் சொன்னால் அவன் கேட்பான் என்று கேள்விப்பட்டு அவரைத் தேடி ஓடினார்கள். அவருக்கும் இரக்கப்பட்டு வந்து, அவனிடம் குதிரையை விட்டுவிடு என்று சொன்னார்.

“அது எப்படி விட்டுவிடுவேன்! என் பயிர் எவ்வளவு நாசமாகிவிட்டது? அதற்கு நஷ்ட ஈடு கொடுத்தால்தான் குதிரையை விடுவேன்” என்று பிடிவாதம் பிடித்தான் அவன்.

“எவ்வளவு சேதம்?” என்று கேட்டார்கள்.

“நாலு பேரை அனுப்பி மதிப்பீடு செய்யுங்கள்” என்றான் அவன்.

நான்கு பேர் சென்று குதிரை மேய்ந்த நிலத்தைப் பார்த்து மதிப்பிட்டார்கள். குதிரை மிதித்ததால் ஆன சேதம், மேய்ந்ததால் ஆன சேதம் என்று தனித்தனியாக மதிப்பிட்டு, மொத்தமாக பத்துப் பணத்துச் சேதம்… இருந்தாலும் எட்டுப் பணம் தந்தாலும் போதும் என்றார்கள். பரமார்த்த குருவுக்கும் சிஷ்யர்களுக்கும் வயிறு பற்றிக் கொண்டு எரிந்தது. அவ்வளவு பணமா …? ஐயய்யோ!

அவர்கள் மேலும் மன்றாடி, இறுதியில் நான்கு பணம் கொடுத்துவிட்டு, குதிரையை ஓட்டிக் கொண்டு சென்றார்கள். அதற்குப் பிறகு குருவுக்கு அதிகமாகச் சலிப்பு ஏற்பட்டுவிட்டது.

“இந்தக் குதிரையினால் எவ்வளவு செலவு? இப்படிப்பட்ட குதிரை நமக்குத் தேவைதானா? பண மெல்லாம் போய்க்கொண்டே இருக்கிறது. மனத்தில் நிம்மதியும் போய்க் கொண்டிருக்கிறது. எவ்வளவு கஷ்டங்கள்… நஷ்டங்கள்…? நம் கௌரவத்துக்கு எவ்வளவு சங்கடங்கள்… சஞ்சலங்கள்? இனி எனக்குக் குதிரையே வேண்டாம். கால்நடையாகவே செல்லலாம்!” என்று அலுத்துக் கொண்டார். அதைக் கேட்ட சிஷ்யர்களுக்குத் தாங்கிக் கொள்ள முடிய வில்லை.

“இப்படியெல்லாம் சொல்லாதீர்கள் குருதேவா! தாங்கள் இனி நடந்து வருவது என்பது நடக்கக்கூடிய காரியமா? உங்களுக்குத் தள்ளாமை வந்து எவ்வளவோ காலமாகிவிட்டது எங்கள் பேச்சைத் தள்ளாதீர்கள், நீங்கள் நடக்கவே கூடாது. நாங்கள் சம்மதிக்கவே மாட்டோம்” என்று பலவாறு அவரைச் சமாதனம் செய்தார்கள்.

“இல்லை…இல்லை… என்னால் நடக்க முடியும்! இந்தக் குதிரையினால் நாம் அடைந்த சங்கடங்கள் போதும்” என்று சலிப்புடன் சொன்னார் குரு.

அவர்கள் உரையாடல்களைக் கேட்டுக் கொண் டிருந்தான் ஒரு வள்ளுவப் பண்டாரம்! அவன் அவர் களை நெருங்கி வந்து, “ஐயா! உங்கள் யாருக்கும் எந்தக் கஷ்டமும் வராது. கவலைப்படாதீர்கள்!” என்றான்.

“அப்படியா? இனி எங்களுக்குக் கவலையே இல்லையா?” என்று அவனைச் சூழ்ந்து கொண்டார்கள் அவர்கள்.

“ஆமாம்! எனக்குத் தெரியும்…! உங்களுக்கு வந்த கஷ்ட நஷ்டங்களுக்கெல்லாம் இந்தக் குதிரையைப் பிடித்திருக்கும் தோஷம்தான் காரணம்! இந்தத் தோஷத்தை நிவர்த்தி செய்துவிட்டால் அப்புறம் உங்களுக்குச் சந்தோஷம் தான்! சந்தேகமே வேண்டாம்” என்று உறுதியான குரலில் உரைத்தான் பண்டாரம்.

“அப்படியா?” என்று அதிசயித்தார்கள் அவர்கள்.

“ஆமாம்! செலவோடு செலவாக நீங்கள் எனக்கு ஐந்து பணம் கொடுத்தால் நான் இந்தக் குதிரையின் தோஷத்தை நீக்கி விடுவேன். நான் கிரக சாந்தி செய்தேனானால் குதிரையின் தோஷம் நிவர்த்தியாகி விடும்” என்றான் அவன்.

அவன் பேச்சில் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. செலவுக்குப் பயந்து குதிரையை விட்டுவிடக் கூடாது என்று எண்ணி, பண்டாரத்துக்குப் பணம் தருவதற்கு இசைந்தார்கள்.

அந்தப் பண்டாரம் அவர்களைச் சரியான இளிச்சவாயர்கள் என்று முடிவுக் கட்டிக்கொண்டு, சாமர்த்தியமாக பணத்தை முன்னதாகவே வாங்கிக் கொண்டான்.

பிறகு அவர்கள் காணும்படியாக, பலவிதமான, சடங்குகளை அப்படி இப்படி என்று செய்தான். பச்சை லைகளைப் பறித்து வந்து ஏதேதோ சொல்லி முணுமுணுத்துக் கொண்டு குதிரையைச் சுற்றிச் சுற்றி வீசியெறிந்தான்.

அவர்களுக்கு அர்த்தம் விளங்காத வார்த்தைகளாக, ஆ,ஈ,ஊ, ஒள, செள என்று உச்சரித்துப் பலமுறை அந்தக் குதிரையை வலம் வந்தான்.

கையிலே பச்சிலைகளையும் சாம்பலையும் வைத்துக்கொண்டு அந்தக் குதிரையின் உச்சந் தலையி லிருந்து வால் வரை, மேலாகத் தடவியும் தூவியும் பலமுறை தட்டியும் விழித்தும் முறைத்தும் பல திசைகளிலும் பற்களைக் கடித்துக் கொண்டு பார்த்தான்.

ஏற்கெனவே அந்தக் குதிரைக்கு ஒரு காது மூளியாக இருந்தது. பண்டாரம் அடுத்த காதைத் திருகி மேலே தூக்கிப் பிடித்து, ‘இந்தக் காதில் தான் குதிரைக்குத் தோஷம் எல்லாம் தங்கித் தேங்கியிருக்கிறது. இந்தக் காதை அறுத்து எறிந்து விட்டால் தோஷம் வெறுத்து ஓடிப்போய்விடும். முன்பு, இதே குதிரைக்குத் தோஷம் அந்தக் காதில் தங்கியிருந்திருக்கிறது. ஆகவேதான் அதை அறுத்து எறிந்திருக்கிறார்கள். அதுபோலவே இந்தக் காதையும் இப்போது அறுத்து வீசி விட்டு தோஷத்தை ஓட்டவேண்டும்” என்று கூறியவாறே, எஞ்சியிருந்த அந்தக் காதையும் அறுத்துவிட்டான் பண்டாரம்.

அறுந்த காதை எடுத்துக் கொண்டு தொலைவாகப் போய் ஆழமான ஒரு குழி வெட்டி, அதில் போட்டு மண்மூடிப் புதைத்து அடையாளக் குறிசெய்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல் திரும்பி வந்து விட்டார்கள்.

அன்றையப் பொழுது, தோஷம் நிவர்த்திச் சடங்குக்கே சரியாகிவிட்டது. மறுநாள் தான் அவர்கள் தங்கள் மடத்துக்குப் போனார்கள்.

– தொடரும்…

– பரமார்த்த குரு கதைகள், முதற் பதிப்பு: செப்டம்பர் 1990, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *