விமானத்தில் வந்த பிரேதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்  
கதைப்பதிவு: November 2, 2013
பார்வையிட்டோர்: 31,827 
 

‘இந்தியன் ஏர்லைன்ஸ்’ என்ற சிவப்பெழுத்துக்கள் பக்கவாட்டில் பளிச்சிட, சுமார் நானூறு மைல் வேகத்தில் காற்றைக் கிழித்தபடி பறந்து கொண்டிருந்தது அந்த போயிங் விமானம்.

விமானத்தினுள் அவ்வளவாகக் கலகலப்பில்லை. சிலர் ஆசனத்திலே வசதியாச் சாய்ந்து கொண்டு கண்களை மூடியவாறிருக்க, வேறு சிலர் ஆங்கிலப் பத்திரிக்கைகளைப் பிரித்து வைத்துக் கொண்டு அதில் ஆழ்ந்திருந்தனர். இன்னும் சிலர் தங்களுக்கருகில் அமர்ந்திருந்த சக பிரயாணிகளிடம் மெல்லிய குரலில் விசாரித்துக் கொண்டிருந்தனர். மற்றும் சிலர் தங்கள் மனைவிமார்களிடம் சிரித்து சிரித்துப் பேசியவாறிருந்தனர். பலதரப்பட்ட நாட்டினரும், பல் வேறான பாஷையினரும் பிரயாணம் செய்து கொண்டிருந்த அந்த விமானம் சிங்கப்பூர் விமான நிலையத்தை விட்டுப் புறப்பட்டு 30 நிமிடங்களே ஆகியிருந்தன.

முன் வரிசையில் மூன்றாவதாய் அமர்ந்திருந்த அந்த நடுத்தர வயதுப் பெண்மணி, தன் கையில் முகம் கவிழ்த்தியபடியே வெகுநேரமாய் வீற்றிருந்தாள். விமானம் புறப்பட்டதிலிருந்து இதுவரை அவள் நிமிர்ந்து யாரையும் பார்கவுமில்லை. யாரோடும் பேசவுமில்லை. பெரிய குடும்பத்துப் பெண்மணி போல தடித்த உடலும், தக்காளி நிறமும் அவளுக்கிருந்தபோதும் ஆடம்பரமில்லாத எளியை முறையில்தான் காட்சி தந்தாள். காதுகளில் மினுக்கிய இரு வைரத்தோடுகளையும், கழுத்தில் பளிச்சிட்ட ஒரு மெல்லிய சங்கிலியையும் தவிர்த்துப் பொன் நகைகள் என்று எதுவும் கிடையாது. தும்பைப் பூ மாதிரி கண்ணை உறுத்தும் வெண்மையில் அவள் அணிந்திருந்த புடவையும் ரவிக்கையும் அவளை ஒரு விதவைப் பெண்மணி என்று சொல்லாமல் சொல்லின.

அவளுக்கருகில் விற்றிருந்த அந்த கலைஞனுக்கு வயது முப்பதுக்கு மேலிராது. சுருண்ட தலைக்கேசமும், கூரிய நாசியும் அழகிய மீசையும் அவனுக்கு ஒரு தனி கவர்ச்சியையும், விலையுயர்ந்த அந்த ட்வீட் பாண்ட்டும் டெர்லின் ஷர்ட்டும் பளபளக்கும் அம்பாசிடம் ஷூவும் ஒரு கம்பீரத்தையும் ஏற்படுத்தியிருந்தன. முகத்துக்குப் பொருத்தமாய் அவன் அணிந்திருந்த கூலிங் கிளாஸை அடிக்கொரு தரம் கழற்றிக் கடைவிழியைத் துடைத்துக் கொண்டிருந்தான்.

விமானப் பணிப்பெண் தன் கையிலிருந்த தட்டையைப் பணிவோடு அந்த பெண்மணியிடம் நீட்டியபோது அவள் நிமிர்ந்து பார்க்காமலே வேண்டாம் எனக் கையசைத்தாள். அருகே அமர்ந்திருந்த இளைஞன் ஒரு சாக்லேட்டை எடுத்துப் பிரித்தவாறே, “ஏனக்கா, காலையிலிருந்து எதுவுமே சாப்பிடாமல் இப்படி அழுது கொண்டே இருந்தால் எப்படி?” என்று கவலையோடு கேட்டான் அவளிடம்.

அவள் பதிலேதும் கூறவில்லை.

“கொஞ்சம் பழமாவது சாப்பிடக் கூடாதா?” என்று பரிவோடு அவன் கேட்டபோது, அவள் தனக்கு எதுவுமே வேண்டாமென்று கூறிவிட்டாள். இந்த உரையாடலைக் காதில் வாங்கிக் கொண்டே இரண்டொரு பிரயாணிகள் அந்தப் பெண்மணியை அனுதாபத்தோடு நோக்கினர்.

அவள் கம்மிக் கரகரத்த குரலில் கேட்டாள், “இது எத்தனை மணிக்கு தம்பி, சென்னை போய்ச்சேருகிறது?”

“இந்திய நேரப்படி சரியாக ஆறு முப்பதுக்கு” என்றான் அவன்.

அந்த இளைஞனை ஒட்டி வீற்றிருந்த ஒருவர் மெல்லிய குரலில் விசாரித்தார். “எதற்கு அந்த அம்மா அழுதுகொண்டே இருக்கிறார்கள்?”

இளைஞன் பெருமூச்செறிந்தான். “கண்ணுக்குக் கண்ணான ஒரே மகனை நாடுவிட்டு நாடு வந்த பறிகொடுத்து விட்டால் அந்த வேதனை சாமான்யப்பட்டதா? எல்லாம் எங்கள் தலைவிதி!”

மற்றவர் நெட்டுயிர்த்தார். “அடப்பாவமே!”

”ரொம்ப சூட்டிகையான பையன். அந்தப் பாழாய்ப்போன வயிற்றுவலி அவனைக் கொஞ்ச நாளாகவா வாட்டிக் கொண்டிருந்தது! டாக்டரிடம் காட்டினோம். ஆபரேஷன் செய்ய வேண்டுமென்றார். உயிருக்கே ஆபத்தான ஆபரேஷன். வேறு வழியில்லாமல் சம்மதித்தோம். அது உயிருக்கே ஆபத்தாகத்தான் முடிந்து விட்டது!” என்று கூறிவிட்டு தன் கூலிங் கிளாஸை ஒருமுறை கழற்றி கடைவிழியைத் துடைத்து மீண்டும் அணிந்து கொண்டான்.

”பிரேதம் இப்போது எங்கே?” என்று வினவினார் ஒருவர்.

“இதே விமானத்தில் ஐஸ் பெட்டியில் வைத்துத் தனியாகக் கொண்டு வருகிறார்கள். என்ன இருந்தாலும் பிறந்த மண் பிறந்த மண் தானே? சொந்த நாட்டில் சவ அடக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் அக்காவின் ஆசை. அதற்காக ஸ்பெஷல் சார்ஜ் கட்டி எடுத்துப் போகிறோம். செலவு கிடக்கிறது செலவு, பையனைவிடவா அது பெரிது?”

வேதனையும் விரக்தியும் மிகுந்த அவனது வார்த்தைகள் அனைவரின் அனுதாபத்தையும் சம்பாதித்துக் கொண்டன.

“எந்தப் பாசத்தை வேண்டுமானாலும் சகித்துக் கொள்ளலாம். இந்தப் புத்திர பாசத்தை மாத்திரம் சகிக்கவே முடியாது!” என்றார் ஒருவர்.

“உண்மைதான் இது எனக்குக்கூட பெரிய அதிர்ச்சி. அக்காவைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? கட்டிய புருஷனும் இல்லை, பெற்ற மகனுமில்லை. இதைவிடவா ஒரு துயரம் வரவேண்டும்?” என்று கூறி அந்த இளைஞன் வாய்மூடு முன்பு அந்தப் பெண்மணியிடமிருந்து ஒரு விம்மல் வெடித்தது. தொடர்ந்து குலுங்கிக் குலுங்கி அழுதாள் அவள்.

இப்போது அவளை சமாதானப் படுத்தவே பெரும் பாடாகிவிட்டது. மூலைக்கு மூலை ஆறுதல் வார்த்தைகள். ஆளுக்காள் உபச்சார மொழிகள். ஒருவருக்கொருவர் அனுதாபப் பார்வைகள்.

“சிங்கப்பூரில் நீங்கள் எங்கே?” என்று இழுத்தார் மற்றவர்.

“சொந்த பிசினஸ்தான். நார்த்பிரிட்ஜ் ரோட்டில்” என்றான் அந்த இளைஞன்.

நொந்து போயிருந்த அவர்களுக்கு தொல்லை தரக்கூடாதென்பதுபோல யாரும் அப்புறம் பேசவே இல்லை.

ஆயிரத்திருநூறு மைல் தூரத்தை நான்கே மணி நேரத்தில் விழுங்கி சீரணித்துவிட்டு சென்னை விமான நிலையத்தில் அந்தப் போயிங் வந்து இறங்கியபோது மாலை சரியாக மணி ஆறு முப்பது.

விமான நிலையம் பிரகாசமான ஒளித்திரளில் மூழ்கி நின்றது. வரையறுக்கப்பட்ட இரும்பு கேட்டுக்கு அப்பால், வந்திறங்கும் பிரயாணிகளின் உறவினர்களும், நண்பர்களும் கூடி நின்றனர். ஒலி பெருக்கியில் இனிய பெண் குரலொன்று போகிற வருகிற விமானங்களைப் பற்றி பல மொழிகளிலும் அறிவித்துக் கொண்டிருந்தது.

அந்த விமானத்தை விட்டு ஒவ்வொருவராகக் கீழே இறங்க, கடைசியில் அந்தப் பெண்மணியும், அவளோடு வந்த இளைஞனும் கையில் ஒரு சிறிய பெட்டியுடன் இறங்கினர். இன்னும்கூட் அந்தப் பெண்மணி அழுதுகொண்டுதானிருந்தாள்.

சுங்கப் பரிசோதனை அறைக்குள் அனுமதிக்கப்பட்ட பிரயாணிகள் அதை முடித்துக் கொண்டு வெளியேறியவாறிருந்தனர்.

தன் பெட்டியைத் திறந்து பாஸ்போர்ட், விசா, டிக்கட் முதலானவற்றை எடுத்து அதிகாரியிடம் நீட்டிய அந்த இளைஞன், விமானத்தில் வந்த பிரேதத்தைப் பற்றிக் கூறியதும், “ஓ! அது உங்களைச் சேர்ந்ததுதானா? தயவு செய்து சற்று நேரம் இப்படி உட்காருங்கள்” என்று அதிகாரி அருகே இருந்த ஆசனத்தைச் சுட்டிக் காட்ட, அனைவரும் அதில் உட்கார்ந்தனர். எல்லாவற்றையும் பரிசீலித்து விட்டு நகர்ந்தார் அந்த அதிகாரி.

சற்றைக்கெல்லாம் விமானத்திலிருந்து அந்தப் பிரேதம் கீழிறக்கப்பட்டு சுங்கப் பரிசோதனை அறைக்குக் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து நாலைந்து அதிகாரிகளும் வந்தனர்.

”ரொம்ப தேங்க்ஸ்” என்று முறுவலித்தவாறே எழுந்து கொண்ட அந்த இளைஞன், பாண்ட் பாக்கெட்டில் கையைவிட்டு சில கடிதங்களை எடுத்து நீட்டினான். அவைகள் பிரேதத்தைக் கொண்டு வர தனிக்கட்டணம் செலுத்தி அனுமதி பெற்ற கடிதமும், அந்தப் பிரேதத்தைப் பற்றிய விபரங்களைக் கூறும் டாக்டர் ரிபோர்ட்டும்தான்.

”ரொம்ப சரி, இனி சோதனையிடலாமல்லவா?” என்று கேட்டார் அதிகாரிகளில் ஒருவர்.

“ஓ யெஸ்” என்றவாறே தன் பெட்டியை அவரருகில் நகர்த்தி வைத்தான் அந்த இளைஞன்.

“உங்களையல்ல, அந்தப் பிரேதத்தை” என்றார் அதிகாரி.

துணுக்குற்றுப் போனான் அந்த இளைஞன். “என்னது பிரேதத்தையா?”

“ஆமாம், ஏன்” என்று கேட்டார் அதிகாரி.

அவன் விரக்தியாகச் சிரித்தான். “இறந்துபோன மனிதன் எதைக் கொண்டு வந்துவிடப் போகிறான்?”

அதிகாரி சொன்னார். “அப்படியில்லை. நாடு விட்டு நாடு வரும் எதுவாயினும் அதைச் சோதிப்பதுதான் எங்கள் கடமை”.

இப்போது அந்தப் பெண்மணி சொன்னாள், “எனக்கு மிகவும் களைப்பாயிருக்கிறது தம்பி, சீக்கிரம் அனுப்பச் சொல்லு..”

“இதோ பாருங்கள் சார், சிங்கப்பூர் விமான நிலையத்தில் எங்களுக்கு இரண்டு நிமிடம்கூடத் தாமதம் ஏற்படவில்லை. காரணம், அங்குள்ள அதிகாரிகள் எங்களை நிலையை உணர்ந்து கண்ணியம் கொடுத்ததுதான். நீங்கள்தான் இப்படித் தேவையில்லாமல் காலம் கடத்துகிறீர்கள்” என்றான் அந்த இளைஞன் அழுத்தமாக.

“எக்ஸ்க்யூஸ்மி, இதோ நொடியில் அனுப்பிவிடுகிறேன்” என்று கூறியவாறே நகர்ந்த அந்த அதிகாரியை தடுத்தி நிறுத்தினான் அந்த இளைஞன். “எங்களுடைய நிலையும் வேதனையையும் கொஞ்சம்கூட உணராமல் பேசுகிறிர்கள் நீங்கள். நாங்கள் மிகவும் நொந்துபோய் வந்திருக்கிறோம். இந்த சமயத்தில் நீங்கள் தேவையில்லாமல் பிரேதத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்கிறீர்கள். இது ஆபரேஷன் செய்யும்போது இறந்துபோன எங்கள் பையனின் சடலம் என்பதற்கான அத்தாட்சிகளெல்லாம் இருந்தும் இப்படிச் செய்வது நியாயமில்லை!” என்றான் கடுகடுப்போடு.

“உங்களுக்கு எத்தனை தூரம் வருத்தமும் வேதனையும் இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். அதற்காக சட்டப்படி செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருக்க முடியுமா? “ என்று கேட்டவாறே பிரேதத்தை நெருங்கிய அதிகாரி அதை மூடியிருந்த வெள்ளைத் துணியை நீக்கினார்.

அரைவிழி மூடி அவன் வாய்பிளந்து கையும் காலும் விறைத்திருக்க வெளுத்துப் போயிருந்த ஒரு இளைஞனின் சடலம். பார்க்கவே பயங்கரமாக இருந்தது அதன் நிலை.

பிரேதத்தை மூடியிருந்த துணியை அடியோடு நீக்கினார் அதிகாரி. அடிவயிற்றிலிருந்து நெஞ்சு வரை நீண்ட தையல் போடப்பட்டிருந்தது.

“இதோ பாருங்கள் நீங்கள் இப்படி நிதானமாய் ஒவ்வொரு காரியத்தையும் செய்வதில் எங்களுக்கு நேரம் விரயமாகிறது. சீக்கிரம் முடியுங்கள்” என்று சீறினான் அந்த இளைஞன்.
ற்றவர்கள் சிந்திக்கும் முன்பு பளிச்சென்று அந்தப் பிரேதத்தின் தையலை அறுத்தார் அதிகாரி.

“நில்லுங்கள், நில்லுங்கள்” என்று அந்தப் பெண்மணி கூவி முடிக்கும் முன்பு, பிளந்திருந்த வயிற்க்குள்ளிருந்து வைரங்கள் பளீரிட்டன!

“நீங்கள் இருவரும் எத்தனை பெரிய கள்ளக் கடத்தல் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் என்பதும், இந்தப் பிரேதம் எந்த ஆஸ்பத்திரியின் சவக்கிடங்கில் இருந்து பணம் கொடுத்துக் கடத்தப்பட்டது என்பதும் இந்த இருபது லட்ச ரூபாய் வைரம் எங்கே போகிறது என்பதும் உங்கள் கோஷ்டியைச் சேர்ந்த ஒருவனால் எங்களுக்குத் தகவல் தரப்பட்டு நான்கு மணி நேரமாகிறது. அருமையான திட்டம், அபாரமான நடிப்பு. என்ன செய்வது? உங்களைக் கைது செய்தாக வேண்டும் என்று சட்டம் கூறுகிறதே!” என்று கூறியவாறே நிதானமாய் பிரேதத்தைத் துணியால் இழுத்து மூடினார் அந்த அதிகாரி.

(விஜய கலா மந்திர் மலர் — வெளியான ஆண்டு தெரியவில்லை. 67-ஆக இருக்கலாம்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *