கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: July 30, 2023
பார்வையிட்டோர்: 2,533 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 21 – 25 | அத்தியாயம் 26 – 30 | அத்தியாயம் 31 – 35

26. துறவியின் விடுதலையும் வேகமும் 

சோழநாட்டு வாலிபத் துறவி எதற்காக அந்த நாடகத்தை ஆடச் சொல்கிறான் என்பதை அறியாத மாதவி, அதற்கு உடன் படலாமா வேண்டாமா என்று சிறிது ஆலோசித்தாள். உடன்பட்டால் தன் பெயர் வாலிபத் துறவியின் பெயருடன் சேர்ந்து மிகக் கேவலமாக அடிபடும் என்பதை உணர்ந்தாள். உணர்ந்தும் துறவியிடம் இருந்த நம்பிக்கையால், ‘அனாவசியமாக இவர் எதையும் செய்ய மாட்டார்’ என்று தீர்மானித்து அவன் சொன்னவுடனே கலைந்த ஆடையுடன் வெளியே சென்று, “யாரங்கே,யாரங்கே?” என்று இருமுறை ஆத்திரத்துடன் கூவினாள். அவள் கூச்சலைக் கேட்டு ஓடிவந்த காவலர் இருவரையும் சுடும்விழிகளால் நோக்கி, “என்ன நீங்கள் உறங்குகிறீர்களா? விழித்திருக்கிறீர்களா? எத்தனைமுறை கூவுவது உங்களை அழைக்க!” என்றும் சீறினாள். 

காவலர் அவளை அச்சத்துடன் பார்த்தார்கள். அவள் கோபத்தைக் கண்டு திகைத்தார்கள். “அம்மணி, இதைத் தங்களுக்குச் செய்தது….” என்று வாசகத்தை முடிக்க முடியாமல் கண்களின் மூலமே கேள்வியை எழுப்பினார்கள். 

“உள்ளே இருக்கிறான் அந்தச் சோழ நாட்டுத் துறவி. அவன் கைகால்களைப் பிணையுங்கள். அவனைக் கடுங்காவலில் வையுங்கள். உணவு ஒரு நாளைக்கு ஒரு முறை அளித்தால் போதும். மாதவியுடன் விளையாடுவது எத்தனை அபாயம் என்பதை அவன் புரிந்து கொள்ளவேண்டும்” என்று உணர்ச்சியால் மார்பு எழுந்து தாள, உதடுகள் துடிக்க உத்தரவிட்டாள் மாதவி. 

இதைக் கேட்ட காவலர் விழித்தனர். பிறகு ஒருவன் மெள்ளக் கூறினான், “அம்மணி! இவர் மஹாயனரால் சிறை செய்யப்பட்டவர்….” என்று. 

“மன்னரால் சிறை செய்யப்பட்டாலும் சிறையில் முறை தவறி நடக்க யாருக்கும் உரிமையில்லை” என்று கடிந்து கொண்டாள் மாதவி. 

“மன்னர் சொல்லைக்கூட மீறலாம். மஹாயனர் சொல்லை மீற முடியாதே” என்றான் இன்னொரு காவலன். “காஞ்சியை ஆள்வது மன்னரா மஹாயனரா?”- இக் கேள்வியைச் சீற்றத்துடன் உதிர்த்த மாதவி, “உங்களுக்கு இங்கு வேலையிலிருக்க இஷ்டமா? விலக இஷ்டமா?” என்றும் விசாரித்தாள். 

அந்தச் சமயத்தில் அங்குவந்த சிறைக் காவலர் தலைவன், “உபதளபதியை எதிர்த்து என்ன பேசுகிறீர்கள்?” என்று கோபத்துடன் கேட்டதும், “உபதளபதியா?” என்று வாயைப் பிளந்த காவலருக்கு “மாதவி உபதளபதி யென்பதை விளக்கி அவர்கள் எதைச் சொன்னாலும் செய்ய அரசர் உத்தரவிருக்கிறது” என்றும் கூறவே காவலர் அறைக்குள் பாய்ந்தனர். 

அடுத்த சில நிமிடங்களில் துறவியின் கைகால்கள் பிணைக்கப்பட்டன. அப்படியே அவனைத் தூக்கிப் பஞ்சணையில் போடுமாறும், முக்கியமான காரியங்களுக்குத் தவிர தளைகளை அவிழ்க்கக் கூடாதென்றும் உத்தரவிட்ட மாதவி துறவி எதிரில் நின்று “இப்பொழுது என்ன சொல்கிறாய்?” என்று வினவினாள். 

“இதை என் குருநாதர் அறிந்தால் உங்கள் அனைவரையும் சிறையில் தள்ளிச் சித்திரவதை செய்வார்” என்று கூறினான் துறவி. 

அதைக்கேட்ட மாதவி தன் கையை ஓங்கினாள் துறவியை நோக்கி. பிறகு கையைக் கீழே போட்டு, “நீ துறவி. ஆகையால் தப்பினாய். இல்லாவிட்டால் இந்தக் கணமே சித்திரவதை செய்ய உத்தரவிட்டிருப்பேன்” என்று கூறிவிட்டு, “இந்த அறைக் கதவைப் பூட்டிச் சாவியை என்னிடம் கொடுத்துவிடுங்கள்” என்று உத்தரவிட்டு வெளியே வந்தாள். அறைக்கதவு பூட்டிச் சாவி அவளிடம் கொடுக்கப்பட அதைச் சிறைத் தலைவனிடம் மாதவி கொடுத்து, “ஏதாவது அதிகத் தொல்லை இருந்தால் ஒழிய கதவைத் திறக்க வேண்டாம். சாவி உங்களிடமே இருக்கட்டும்” என்று கூறிவிட்டுச் சென்றாள். 

அன்று இரவும் மெல்ல மெல்ல நெருங்கியது. இரவு உணவளிக்கப்பட்ட சமயத்தில் மட்டும் சிறைக் காவலன் துறவியின் கைகளை அவிழ்த்து விட்டான். பிறகு தளைகளை நன்றாகப் பிணைத்து அறையையும் பலமாகப் பூட்டிச் சென்றான். நள்ளிரவு வரை கட்டிலில் பலவித சிந்தனைகளில் படுத்திருந்த துறவி மெள்ள எழுந்து, பிணைத்த கைகளால் தலையணையைத் தள்ளி அதன் கீழிருந்த நாகசர்ப்பத்தை எடுத்தான். தளைகளை அறுக்காமல் கத்தியை முடிப்பில் கொடுத்து, கால் தளைகளை மெதுவாக, பிணைக்கப்பட்ட தனது இரு கைகளாலும் தளர்த்திக் கொண்டான். பிறகு பற்களில் கத்தியைக் கடித்து, கைத் தளைகளிலிருந்தும் விடுதலை அடைந்தான். அடுத்தபடி நாகசர்ப்பத்தை மடியில் செருகிக் கொண்டு நிலவறை இருந்த இடத்தை அடைந்தான். அந்த இடத்தை இருமுறை கத்தியால் தட்டிப் பார்த்து அகற்றினான். அறை விளக்கை ஊதி அணைத்துவிட்டு சுரங்கப் படிகளில் இறங்கிச் சென்றான். இம்முறையும் இரு வழிகளில் செல்லும் இரு கதவு களண்டை வந்ததும், மன்னர் இருந்த பழைய அறைக்குச் செல்லும் கதவைத் திறக்காமல் எதிர்ப்பக்கம் செல்லும் கதவைத் திறந்துகொண்டு நடந்தான். சுமார் ஒரு நாழிகை நேரம் நடந்த பின்பு மேலே ஏறிய படிகளில் ஏறிச் சென்றான். படிகளின் மேலே இருந்த அறைக் கதவுகளிடம் சில விநாடிகள் மௌனமாக நின்றான். 

உள்ளே இருவர் பேசும் அரவம் கெட்கவே, காதை இரு கதவுகளுக்கிடையே கொடுத்துக்கொண்டு பேசுவதைக் கேட்கலானான். 

மஹாயனர் தமது சுபாவத்துக்கு மாறாக இரைந்து கொண்டிருந்தார். “யார் அவனைப் பிணைக்கச் சொன்னது? அவன் என் சீடனென்பதை மறந்து விட்டீர்களா?” என்று வினவினார். 

“உபதளபதி மாதவி உத்தரவிட்டார்கள். இந்தத் துறவி அவளை அலங்கோலப்படுத்தி விட்டான்” என்றது பணிவான ஒரு குரல். அது சிறைத் தலைவன் குரலென்பது சந்தேகமறத் தெரிந்தது துறவிக்கு. 

“மாதவியை அலங்கோலப்படுத்தினால் என்ன கெட்டுப் போய்விட்டது? அவள்….” என்ற மஹாயனர் நிதானித்தார். 

“வேசியாக நாடகமாடினாலும் வேசியல்ல என்பது காஞ்சியின் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் தெரியும்” என்று சிறைத் தலைவன் பணிவுடன் சொன்னான். 

“அதைப்பற்றி உனக்கென்ன?’’

“எனக்கொன்றும் இல்லை. அவர்கள் உத்தரவை மீறினால்….” 

“தலை போய்விடுமா?” 

“அரசர் இஷ்டப்பட்டால் அதுவும் போய்விடும்.”

“அப்படியானால் என் உத்தரவுகளுக்கு மதிப்பில்லை?”

“இல்லையென்று சொல்ல முடியுமா? ஆனால் இது பெரிய இடத்து விஷயமாயிருக்கிறது. நாங்கள் சிறிய உத்தியோகஸ்தர்கள். முரண்பாடான இரண்டு உத்தரவுகளை நிறைவேற்றுவது கஷ்டம்.” இதைச் சொன்ன சிறைத் தலைவன் குரலில் நடுக்கம் தெரிந்தது. 

மஹாயனர் பேச்சு உடனடியாக வரவில்லை. சிறிது தாமதித்துக் கேட்டது. “சரி, நீ போ இந்த மாதவியின் ஆட்டம் எத்தனை நாள் நடக்கிறது பார்ப்போம்” என்று கூறினார். பிறகு சிறைத் தலைவன் வெளியே செல்லும் அரவம் கேட்டது. மேற்கொண்டு தனக்கு அங்கே வேலையில்லை யென்பதை உணர்ந்து கொண்டு திரும்ப யத்தனித்த சமயத்தில் வேறு ஒரு கதவு எங்கிருந்தோ திறக்கும் சத்தம் கேட்கவே சிறிது நின்றான் துறவி. 

அந்தக் கதவைத் திறந்து கொண்டு வந்தவனைப் பார்த்ததும் மஹாயனருக்குப் பெரும் எரிச்சல் உண்டாகியிருக்க வேண்டும். “சிறைத்தலைவன் சொன்னதை யெல்லாம் கேட்டாய் அல்லவா?” என்று வினவினார். 

“கேட்டேன்” தடிப்பாக இருந்தது அவன் குரல். குரலிலிருந்து அவன் பத்ரவர்மன் என்பதைப் புரிந்து கொண்டான் துறவி. 

“நீ இந்த நகரத்தின் பிரதான உபதளபதி.” இகழ்ச்சியுடன் சொற்களை உதிர்த்தார் மஹாயனர். 

“ஆம்” 

“உனக்குத் தெரியாமல் இன்னொரு உபதளபதி நியமிக்கப்பட்டிருக்கிறார்”

“யாரது?” 

“அதுவும் தெரியாதா உனக்கு?” மஹாயனர் குரலில் இகழ்ச்சி அதிகமாயிற்று. 

“தெரியாது”. பத்ரவர்மன் குரலில் குழப்பம் இருந்தது. 

“மாதவி” என்றார் மஹாயனர். 

“மாதவியா!” வியப்புடன் நகைத்தான் பத்ரவர்மன்.

“நகைப்பதற்கு எதுவுமில்லை. உன்னைவிட என்னை விட, அதிக அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது அவளுக்கு”. 

“எப்படித் தெரியும் உங்களுக்கு?” 

“இப்பொழுதுதான் சிறைத் தலைவன் சொல்லிவிட்டுப் போனான்.” 

இதைக் கேட்ட பத்ரவர்மன் மௌனம் சாதித்தான். “அவளைக் கொன்று விடட்டுமா?” என்று வினவினான். 

“கொலையால் நாம் எதுவும் சாதிக்க முடியாது. இதை முன்பே சொல்லியிருக்கிறேன் உனக்குப் பலமுறை. அதையும் நீ மீறி இருக்கிறாய்” என்று கண்டிப்பான குரலில் பேசினார் மஹாயனர். 

பத்ரவர்மனும் கொதித்துப் பேசினான். “விஷ்ணு கோபனுக்குப் பிறகு நான் மன்னனாக வேண்டும். அதற்குரிய எந்த நடவடிக்கையும் எடுப்பேன்” என்று சீறினான். 

“ஒரு நடவடிக்கை எடுக்கலாம்” என்று நிதானமாகக் கூறினார் மஹாயனர். 

‘“எது?”

“நீயே தூக்குப் போட்டுக் கொள்ளலாம்.”

“எதற்காக?’” 

“கொலை முயற்சி செய்து மன்னனால் வெட்டப்படுவதை விட அது நல்லது.” 

பத்ரவர்மன் மௌனம் சாதித்தான். மஹாயனர் நிதானமாகப் பேசினார்: ”பல்லவ மரபு பெரிய மரபு. அதில் வீரனாயிருப்பவன்தான் பிழைக்க முடியும். அரசாள முடியும். கொலையாளிகள் அரசாள முடியாதது. காஞ்சி கலைக் களஞ்சியம். அதைப் பாதுகாப்பவன் கலைஞனாக இருக்க வேண்டும். கொலைஞனாக இருக்க முடியாது. ஆகையால் நிதானமாகக் கேள். அரசர்மீது எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாதே. அவர் இன்னும் நான்கு நாட்களில் போர் முனைக்குப் போகிறார்….” இந்த இடத்தில் பேச்சை நிறுத்தினார் மஹாயனர். 

பத்ரவர்மன் மௌனமாய் இருந்தான். மஹாயனர் சொன்னார்: “பத்ரவர்மா, அவர் வெற்றிக்குப் பிரார்த்திப்போம்” என்று. 

பத்ரவர்மன் பெருவியப்பைக் காட்டினான். “மஹாயனரே! அவ்வப்பொழுது உங்கள் குரலும் மாறுகிறதே” என்றான். 

“என் குரலும் நோக்கமும் மாறுவதில்லை என் குரலும் குறிக்கோளும் ஒன்று’ என்று கூறிய மஹாயனர், “சரி நீ நீ போய் வா” என்றார். 

பத்ரவர்மன் சென்ற சில வினாடிகளுக்கெல்லாம் அறைக் கதவின் இடுக்கை அதிகப்படுத்தி உள்ளுக்குள் நோக்கினான் துறவி.மஹாயனர் ஒரு ஓலையில் ஏதோ வேகமாக எழுதிக் கொண்டிருந்தார். எழுதி. முடித்து ஒரு குழலில் போட்டு முத்திரையும் வைத்தார். பிறகு, “யாரப்பா அங்கே?’ என்று குரல் கொடுக்க ஒரு வீரன் தோன்றினான். அவனிடம் ஓலைக்குழலைக் கொடுத்தார். அவன் தலை வணங்கி அதனைப்பெற்றுச் சென்றதும் மஹாயனர் நிம்மதிப் பெருமூச்சுவிட்டார். அவர் இதழ்களில் புன்முறுவலும் அரும்பிற்று. அதற்குமேல் துறவி அங்கு நிற்கவில்லை. கதவை மெதுவாகச் சாத்திவிட்டு சுரங்கப்பாதையில் இறங்கிச்சென்றான். தனது அறைக்கு வந்ததும் சுரங்கப்பாதையை மூடி விட்டுப்பஞ்சணையில் உட்கார்ந்து கால்களைக் கயிறுகளால் பிணைத்துக்கொண்டான். கைகளிலும் கயிற்றை அரையும் குறையுமாகச் சுற்றிக்கொண்டு படுத்து நிம்மதியாக நித்திரை செய்தான். நித்திரை அதிக நேரம் நீடிக்கவில்லை. மாதவி வந்து சிறைக் கதவைத் திறந்தாள். அவன் கட்டுகளை அவிழ்க்கப் போனவள், கட்டுகளை உதறிய அவன் கைகளைக் கண்டு ஏதோ பேச இஷ்டப்பட்டாள். 

“பேச அவகாசமில்லை. என்னை விடுதலை செய்ய உத்தரவிடு. ஒரு புரவியைக் கொடு” என்றான் துறவி. 

அவன் அவசரத்தைப் பார்த்த மாதவி சிறைத்தலைவனை அழைத்து அப்படியே உத்தரவிட, புரவியில் ஏறிப் பறந்தான் துறவி, காஞ்சியின் பிரதான வாயிலை நோக்கி. 

27. ராஜோபசாரம் 

வாலிபத் துறவியின் விந்தை வழிகள் மாதவிக்கு வியப்பை அளித்தாலும், அவற்றுக்கு அஸ்திவாரமாக ஏதோ முக்கியக் காரணம் இருக்க வேண்டுமென்பதை மட்டும் அவள் புரிந்துகொண்டிருந்தாளாகையால், அவளே அவன் கால் தளைகளை அவிழ்த்துவிட்டு, சிறைக் காவலனை அழைத்துத் துறவி விடுதலை செய்யப்பட்டதாகவும், அவருக்கு ஒரு புரவியைக் கொடுக்குமாறும் கட்டளையிட்டாள். இந்தக் கட்டளையைக் கேட்ட சிறைக் காவலன் முதலில் வியப்பைக் காட்டினாலும் கடைசியில் மாதவிக்கு சிரம் தாழ்த்தி துறவிக்குப் புரவியைக் கொண்டுவரச் சென்றான். அவன் அறையைவிட்டுச் சென்றதும் ஒரு முறை மாதவியை இறுக அணைத்த துறவி, “மாதவி! காஞ்சியின் நாடகம் முடியும் நாள் நெருங்கிவிட்டது. ஆகவே துரிதமாக இதன் பாதுகாப்புகளைப் பலப்படுத்து. அதற்குத் தேவையான அதிகாரத்தை மன்னரிடமிருந்து பெற்றுக்கொள். விரிவாகப் பேச அவகாசமில்லை” என்று கூறிவிட்டு வெளியே சென்றான். அந்தச் சமயத்தில் புரவி வந்துவிட அதன்மீது தாவிப் பறந்தான். போகுமுன்பு தனது நாக சர்ப்பத்தை எடுத்துத் தனது உடையில் மறைத்தும் கொண்டான். 

பிரதான வாயிலை அடைந்த துறவி, காலை மெள்ள நெருங்கிவிட்டதால் கோட்டை வாயில் காவலரை நோக்கிக் கதவுகளைத் திறக்கச் சொன்னான். துறவியின் பிராபல்யம் ஏற்கனவே காஞ்சிமா நகர்க் காவலர்களிடம் பரவியிருந்தாலும், அவன் மஹாயனரின் சிஷ்யனென்பது எல்லோருக்கும் தெரிந்திருந்ததாலும், அவன் விருப்பப்படி கதவுகள்திறக்கப்பட்டன. கதவைத் தாண்டிச் சென்றதும் நேரான பாதையில் செல்லாமல், சற்றுத் திரும்பி வடமேற்குத் திசையில் சென்று சிறுபாதையில் புரவியைத் திருப்பினான் துறவி. அந்தப் பாதை முடியுமிடத்தில் திரும்பிய காஞ்சியின் பெருஞ் சாலையில் புரவியை வேகமாகத் தட்டிவிட்டான். இப்படிச் சுமார் நான்கு நாழிகை நேரம் பயணம் செய்த பின்பு வழியிலிருந்த சத்திரமொன்றில் நுழைந்த துறவி சத்திரக்காரனுக்குத் தன்னை மஹாயனர் தூதனென்று அறிமுகப்படுத்திக் கொண்டான். 

சத்திரக்காரன் முகத்தில் ஆச்சரியம் பெரிதும் பிரதி பலித்தது. ”சற்று முன்புதானே மஹாயனர் தூதன் ஒருவன் வந்துபோனான். அதற்குள் இன்னொரு தூதனா?” என்று கேட்டான் சத்திரக்காரன். 

“குருநாதர் கட்டளைகளைப் பற்றிக் கேட்கவோ சந்தேகப்படவோ நீ யார், நான் யார்?” என்று வினவினான் துறவி, சிறிது அதிகாரக் குரலில். 

முகுந்தனின் துறவி உடையை நோக்கிய சத்திரக்காரன் “உன்னைப் பார்த்தால் தூதனாகத் தெரியவில்லையே: துறவி மாதிரி இருக்கிறாயே!” என்று கேட்டான். 

“மஹாயனர் சீடன் எப்படியிருப்பான்?” என்று கேட்டான் துறவி. 

“நீங்கள் அவர் சீடரா?” என்று வினவினான் சத்திரக்காரன். 

“சற்றுமுன்பு அவரைக் குருநாதரென்று அறிவித்தேன்’ என்று சுட்டிக்காட்டினான் துறவி. 

“ஆம், ஆம்” என்று ஒப்புக்கொண்ட சத்திரக்காரன் “ஆனால் இதுவரை குருநாதர் எந்தச் சீடனையும் தூதனாக அனுப்பியது கிடையாது” என்றான். அவன் குரலில் சந்தேகமிருந்தது. 

“இருக்கலாம்.” 

“அப்படியானால் உன்னைத் தூதன் என்று எப்படி ஒப் புக் கொள்வது?” 

‘“சற்றுத் தனிமையில் வந்தால் அத்தாட்சியைக் காட்டுகிறேன்”. 

துறவியின் இந்தப் பதில் நியாயமாயிருக்கவே, சத்திரக்காரன் தனது பீடத்திலிருந்து எழுந்திருந்து துறவியை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றான். அறைக்குள் நுழைந்ததும் அதைத் தாளிடவும் செய்தான். விநாடிகள் பல ஓடின. தாழிட்ட கதவு திறக்கவில்லை. 

அவர்கள் இருவரும் தனித்து ஓர் அறைக்குள் சென்றதைச் சத்திரத்துக் கூடத்திலிருந்த பல வீரர்கள் கவனித்தாலும், அதைப்பற்றி முதலில் அக்கறை காட்டவில்லை யென்றாலும், விநாடிகள் ஓடிக்கொண்டே இருந்ததால் ஒரு வீரன் மட்டும் சந்தேகப்பட்டு உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்தான். மற்றவர்களை நோக்கி, “நான் கதவைத் தட்டிப் பார்க்கிறேன். நமது தலைவர் இத்தனை நேரம் தனிமையில் யாருடனும் பேசியதில்லை. இதில் ஏதோ சூது இருக்கிறது” என்று சொல்லிவிட்டு அறைக்கதவை நோக்கிச் சென்றான். 

அந்தச் சமயத்தில் அறைக்கதவு திறக்கப்பட்டு, சத்திரக்காரனும் துறவியும் பரஸ்பரம் தோள்மேல் கையைப் போட்டுச் சிரித்தவண்ணம் வெளியே வரவே, அறைக் கதவை நோக்கிச் சென்ற வீரன் திகைத்து நின்றான். அவனையும் சத்திரத் தலைவனையும் நோக்கிய துறவி, 

“இவன் யார்?” என்று விசாரித்தான். 

“நம்மவன்தான்’ என்ற சத்திரக்காரன், “வீரர்களே! மஹாயனரின் பிரதம சீடரைப் பாருங்கள். இவர் எப்பொழுது இங்கு வந்தாலும் எனக்குக் காட்டும் மரியாதையை இவருக்கும் நீங்கள் காட்டவேண்டும்” என்று உத்தரவிட்டான். துறவியை அழைத்துக்கொண்டு சத்திரத்து வாயிலுக்குச் சென்றான். 

வாயிலை அடைந்ததும், “நீங்கள் உணவருந்திவிட்டு போகலாம்.ஆனால் உங்கள் அலுவல் அதற்கு இடந்தரவில்லை” என்று வருத்தத்துடன் சொன்னான். 

“உணவு எங்கே போகிறது? இன்னொருமுறை நமது காரியம் நிறைவேறியதும் உணவருந்துவோம். அதுவும் இருவருமாக அரண்மனையில் அருந்துவோம்” என்று கூறிய துறவி, “நான் எழுதிக்கொடுத்த ஓலை பத்திரம். வேறு யார் கையிலும் சிக்கக் கூடாது. சிக்கினால் குருநாதர் கோபத்துக்கு இலக்காவோம்” என்று கூறிவிட்டுப் புரவியில் ஏறினான். புரவி மீண்டும் பறந்தது வடபெருஞ் சாலையில். அவன் புரவி கண்ணுக்கு மறைந்ததும், சத்திரக்காரன் தனது மடியிலிருந்த ஓலையை எடுத்துப் பார்த்தான். 

“உபதளபதியும், குருநாதர் சீடப்பெண்ணுமான மாதவி அவர்களுக்கு, துறவியின் வணக்கம். இதைக் கொண்டு வரும் சத்திரக்காரர் விஷயமறிந்தவர். இவரை நன்கு உபசரித்து ஆவன செய்யவும்” என்று கண்டிருந்தது. அடியிலிடப்பட்ட கையொப்பம் சுத்தக் கிறுக்கலாயிருந்தது. 

அதைத் திரும்பத் திரும்பப் படித்த சத்திரக்காரன் முகத்தில் சிந்தனை ரேகை ஓடியது. “எல்லாம் விசித்திரமாயிருக்கிறது. ஆனால் குருநாதரைக் கேட்க யாருக்கு உ உரிமை உண்டு? பெண்ணை உபதளபதியாக நியமிப்பது பெரு விந்தை. ஆனால் குருநாதர் ஆழ்ந்த திட்டமில்லாமல் எதையும் செய்யமாட்டார்” என்று கூறிக் கொண்டான். அந்த நினைப்புடன் உள்ளே சென்றவன், கூடத்திலிருந்த வீரர்களைப் பார்த்து, தான் காஞ்சி வரையில் செல்லப் போவதாகவும், எல்லோரையும் எச்சரிக்கையுடனிருக்குமாறும் பணித்தான். பிறகு உணவருந்தி இளைப்பாறி இரவு நெருங்கும். வரை காத்திருந்தான். இரவு நெருங்கியதும் ஒரு புரவியை எடுத்துக்கொண்டு காஞ்சி நோக்கிச் சென்றான். இரவின் முதல் ஜாமம் முடியும் தறுவாயில் காஞ்சியின் பிரதான வாயிலை அடைந்தவன், வாயில் காவலரை இரைந்து கூவி அழைத்தான். இரு காவலர் மதிள்மீது தோன்றியதும், சத்திரக்காரன் ஏதோ சைகை செய்யக் கதவுகள் திறந்தன. திறந்ததும் உள்ளே சென்ற சத்திரக்காரன் நேராகப் பல தெருக்களைத் தாண்டி மாதவியின் இல்லத்தை அடைந்து, முதல் பெருங்கதவைத் தட்டினான். 

கதவு திறக்கப்பட்டதும், தான் உபதளபதி மாதவியைக் காண வேண்டுமென்று கதவைத்திறந்த பணிப்பெண்ணி டம் சொன்னதும், அவள் அவனை முன்னறை ஒன்றில் உட்கார வைத்துவிட்டு உள்ளே சென்றாள். 

சில நிமிடங்களுக்கெல்லாம் அந்த அறைக்குள் புகுந்த மாதவி, “நீ யார், என்ன வேண்டும் உனக்கு?” என்று விசாரித்தாள், 

“நான் தங்களைப்போலவே குருநாதரைச் சேர்ந்தவன்” என்றான் சத்திரக்காரன். 

மாதவியின் முகத்தில் சந்தேகச் சாயை படர்ந்தது அதைக் கவனித்த சத்திரக்காரன், “எனக்கும் முதலில் சந்தேகமாகத்தானிருந்தது” என்றான். 

”எது?’” 

“குருநாதர் ஒரு பெண்ணை உபதளபதியாக நியமிப்பார் என்பது”. 

“குருநாதர் நியமித்ததாக யார் சொன்னது?” 

“அவர் சீடர்தான். இத்தனை வாலிப வயதில் அவர் துறவியானதுதான் விந்தை. ஆனால் அது உண்மைத் துறவறம் என்பது எப்படித் தெரியும்; என்னைப்போல் வேடதாரி யாகவும் இருக்கலாம்” என்றான் சத்திரக்காரன் விஷமமாகச் சிரித்து. 

“நீ வேடதாரியா?” என்று வினவினாள் மாதவியும் போலிப் புன்முறுவலுடன். 

“ஆம். முன்பு இங்கு உபதளபதியாயிருந்து மன்னரால் விலக்கப்பட்டவன். இப்பொழுது வடபெருஞ் சாலையில் சத்திரக்காரனாகப் பணிபுரிகிறேன். எல்லாம் குருநாதர் கட்டளை. காரணமில்லாமல் அவர் கட்டளையிடமாட்டார் என்பது தங்களுக்குத் தெரியும்”. 

இதைக் கேட்டதும் மாதவி சிந்தித்தாள். “ஆம்; ஆம். குருநாதர் மன விந்தையை, செயல் விந்தையை யார் அறிய முடியும்? சரி; நீங்கள் வந்த விஷயத்தைச் சொல்லுங்கள்” என்றாள். 

பதிலுக்கு, சத்திரக்காரன் தனது மடியிலிருந்த ஓலையை எடுத்து மாதவியிடம் கொடுத்தான். துறவியின் ஓலையை நிதானமாகப் படித்த மாதவி, “இங்கு தாங்கள் வந்தது யாருக்காவது தெரியுமா?” என்று வினவினாள். 

“தெரியும்படி நடந்துகொள்வேனா?’ என்று வினவினான் சத்திரக்காரன். 

“நல்லது. நீங்கள் இந்த அறையிலேயே தங்கலாம்; உணவு இங்கேயே அருந்துங்கள். நான் மஹாயனரைச் சந்தித்து விஷயத்தைச் சொல்லிவிட்டு உங்களைத் திரும்ப அனுப்பி வைக்கிறேன்” என்று கூறிவிட்டு, சத்திரக்காரனுக்குச் சகல மரியாதைகளும் செய்யுமாறு கூறினாள் ஒரு பணிப்பெண்ணை அழைத்து. 

சத்திரக்காரனுக்கு ராஜோபசாரம் நடந்தது. அங்கு இருந்த மஞ்சத்தில் படுத்து நன்றாக உறங்கினான். அறுசுவை உண்டி அருந்திய பின்பு, அன்று இரவு முடிந்து பகலும் விடிந்தது. அப்பொழுதும் யாரும் வரவில்லை. உறக்கம் விழித்த சத்திரக்காரன், ”யாரங்கே?” என்று இருமுறை குரல் கொடுத்தான். பதில் ஏதும் கிடைக்க வில்லை. மஞ்சத்திலிருந்து எழுந்து சென்று கதவை இழுத்தான் திறக்க; கதவு வெளிப்பக்கம் பூட்டியிருந்தது. 

28. மறைந்த துறவி 

கதவை இருமுறை இழுத்துப் பார்த்து வெளியே பூட்டப்பட்டிருந்ததை உணர்ந்த சத்திரக்காரன், தனக்கு அங்கு நடந்தது ராஜோபசாரமானாலும் அது உண்மையில் சிறைச்சாலை உபசாரமென்பதைப் புரிந்துகொண்டதால் பெரும் திகிலுக்கு உள்ளானான். தன்னை ஏமாற்றி இந்த இக்கட்டில் மாட்டிவைத்தவன் மஹாயனரின் சிஷ்யனா அல்லது மன்னரின் ஒற்றன என்பதை எண்ணிப் பார்த்து விடை காணாததால், பழையபடி மஞ்சத்தில் சென்று படுத்துக் கொண்டான். கதிரவன் நன்றாக உதித்து எட்டு நாழிகை ஆன பின்புதான் யாரோ வந்து கதவைத் திறக்கும் சத்தம் கேட்கவே மஞ்சத்தில் துள்ளியெழுந்து உட்கார்ந்த சத்திரக்காரன் ஒரு பணிப்பெண் உள்ளே நுழைந்ததைக் கண்டதும் சினத்தின் வசப்பட்டு, “இப்பொழுது எதற்காக வந்தாய்?” என்று சீறினான். 

பணிப்பெண் அவன் சீற்றத்தை லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை.”உங்களுக்கு நீராட இஷ்டமிருந்தால் அழைத்துச் செல்ல வந்தேன். இல்லாவிட்டால்….” என்று வாசகத்தை முடிக்காமல் கையிலிருந்த பூட்டில் சாவியை வைத்துச் சுழற்றினாள். 

அதன் பொருள் சத்திரக்காரனுக்குப் புரியவே, “இதோ வந்துவிடுகிறேன்” என்று கூறிப் பணிப்பெண்ணைத் தொடர்ந்தான். அவனை நீராட அறைக்குள்விட்ட பணிப்பெண், அவன் நீராடிப் புதுஆடை புனைந்துவரும் வரையில் வெளியிலேயே காத்திருந்தாள். பிறகு அவனை அவனது அறைக்கு அழைத்துச் சென்று, “உள்ளே செல்லுங்கள்” என்றாள். 

“மீண்டும் பூட்டப் போகிறாயா?” என்று திகிலுடன் வினவினான் சத்திரக்காரன். 

“இல்லை” – பணிப்பெண் சர்வ சாதாரணமாகப் பதில் சொன்னாள். 

“நேற்று ஏன் பூட்டினாய்?” 

“தங்களை யாரும் தொந்தரவு செய்யாதிருக்க.”

“இன்று தொந்தரவு செய்தால் பாதகமில்லையா?”

“இன்றும் யாரும் உங்களை அணுக முடியாது, நீங்கள் நிம்மதியாக ஓய்வு எடுக்கலாம்.”

“எனக்கு ஓய்வு தேவை என்று யார் சொன்னது?” 

“உபதளபதி.”

“யார், மாதவியா?” 

“உபதளபதியைப் பெயர் சொல்லி அழைத்தால் தண்டனை உண்டு”. 

இதைக்கேட்ட பின்பு சத்திரக்காரன் வாயைத் திறக்க வில்லை. பணிப்பெண் அவனுக்கு உணவு கொண்டு வருவதாகச் சொல்லி வெளியே சென்றதும், சத்திரக்காரன் மெள்ள வெளியே தலை நீட்டினான். இரண்டு ஈட்டிகள் வாயிற் படிக்குக் குறுக்கே பாய்ந்து அவனைத் தடுத்தன. தான் காவலில் வைக்கப்பட்டிருப்பதைச் சத்திரக்காரன் சந்தேகமற உணர்ந்து கொண்டானாதலால் அப்புறம் எந்தவித நடவடிக்கையிலும் இறங்காமல் மஞ்சத்தில் உட்காருவதும், பிறகு அறையில் நடப்பதுமாகக் காலங் கழித்தான். 

பகல் போஜனம் முடிந்ததும், அவனை அதே பணிப் பெண் வந்து அழைத்துப் போனாள். சித்திரக் கூடத்திலிருந்த மாடிப்படி ஏறி, மேல் அறையொன்றுக்கு வந்த தும் உள்ளே செல்லக்கட்டளையிட்டாள். அங்கிருந்த பெண்ணைக் கண்டதும் தலை வணங்கிய சத்திரக்காரன், “உபதளபதியார் என்னைக் காவலில் வைத்துள்ள காரணத்தை விளக்க வேண்டும்” என்று பணிவுடன் வினவினான். 

அந்தப் பெண் அவனை ஏறெடுத்து நோக்கினாள் வியப்புடன். “உபதளபதி நானல்ல” என்று சொன்னாள். 

“தாங்கள்தானே மாதவி அம்மையார்…?” என்று தடுமாறினான் சத்திரக்காரன். 

“இல்லை, நான் மாதவியின் உடன் பிறந்தவள்” என்றாள் அவள். 

“அப்படியானால் தாங்கள் தேவகி அம்மையாராயிருக்க வேண்டும்” என்றான் சத்திரக்காரன். 

இதைக் கேட்ட தேவகி புன்முறுவல் கொண்டாள். “அரண்மனை விவகாரம் முழுவதும் தங்களுக்குத் தெரிந்திருக்கிறது” என்று கூறினாள் புன்முறுவலின் ஊடே. 

“எல்லாம் குருநாதர் அருள்” என்று சத்திரக்காரன் கூறினான். 

“உண்மை’” என்றாள் தேவகி. 

“எது உண்மை” என்று வினவினான் சத்திரக்காரன். அதற்குத் தேவகி பதில் சொல்லு முன்பு, “நீ நம்மைச் சேர்ந்தவன் என்பது” என்ற ஒரு குரல் ஒலித்தது அந்த அறைக்கோடியில், அதுவரையில் அறையின் அந்தப் பகுதியைக் கவனிக்காத சத்திரக்காரன் அங்கு கண்களை ஓட்டினான். சட்டென்று மண்டியிட்டு வணங்கினான் மன்னர் பிரானை. “மன்னிக்க வேண்டும், மகாராஜா இருப்பதைக் கவனிக்கவில்லை’” என்று பணிவுடன் கூறினான். 

”எப்படிக் கவனிக்க முடியும்? தொழில் வேறாகி விட்டதல்லவா?” என்றான் விஷ்ணுகோபன். 

“தொழிலா மகாராஜா?” சத்திரக்காரன் குரல் சிறிது ஆட்டங் கண்டிருந்தது. 

“ஆம். தளபதியாயிருந்து, சத்திரக்காரனாக மாறுவது சாதாரணமாக நடக்கும் விஷயமா?” என்று சிரித்துக் கொண்டே சொன்ன விஷ்ணுகோபன், மண்டியிட்டுக் கிடந்த சத்திரக்காரனை, “எழுந்திரு உபதளபதி” என்றான். 

சத்திரக்காரன் எழுந்ததும், “சத்திரக்காரரே! பழைய உத்தியோகத்தை பெற உங்களுக்கு இஷ்டமா?” என்று வினவினான் மன்னன். 

“கரும்பு தின்னக் கூலி வேண்டுமா?” சத்திரக்காரன் குரலில் ஆவல் ஒலித்தது. 

“வேண்டியதில்லைதான். இருப்பினும் கூலியும் தருவோம்.” 

“சரி, மகாராஜா”. 

”கூலி எத்தனை என்று கேட்கவில்லையே?” 

“மகாராஜாவிடம் சம்பளம் கேட்க அத்தனை துணிவா எனக்கு?”

“உன் துணிவைப் பற்றி எனக்குச் சந்தேகமில்லை. அந்தத் துணிவினால்தான் முன்பே உபதளபதி பதவியை விட்டுச் செல்லாமல் ஓடிவிட்டாய். இனி ஓட முடியாது. தவிர சம்பளம்….” என்ற மகாராஜா அவன் காதில் ஏதோ ரகசியமாகச் சொன்னார். 

சத்திரக்காரன் முகத்தில் திகில் விரிந்தது, “பத்தாயிரம் பொற்காசுகளா! இத்தனை ஊதியம் தளபதிக்கே கிடையாதே” என்றான் திகில் குரலிலும் ஊடுருவ. 

”நீ செய்யக்கூடிய வேலையைத் தளபதி செய்ய முடியாது” என்றார் மகாராஜா. 

“அத்தனை கடுமையான வேலையா?” 

“ஆம்”. 

“ஆணையிடுங்கள். என் தலைபோனாலும் செய்து முடிக்கிறேன்.” 

“செய்து முடித்தால் தலை போகாது.” 

“இல்லாவிட்டால்….” சத்திரக்காரன் குரலில் கிலி அபரிமிதமாயிருந்தது. 

“சே, சே! அதைப்பற்றி இப்பொழுது பேசுவானேன்?” என்றார் மகாராஜா. 

சத்திரக்காரன் விழித்தான் ஆந்தைபோல் “மகா ராஜா ஆணையிடுங்கள்” என்றான். 

”நாளை மாலை உன் வேலை துவங்குகிறது” என்று மகாராஜா கூறிவிட்டு, நமது உபதளபதிக்குச் சகல உபசாரங்களும் நடக்கட்டும்” என்று பணிப்பெண்ணை அழைத்து ஆணையிட்ட விஷ்ணுகோபன் பழையபடி அறைக் கோடிக்குச் சென்று அங்கிருந்த சாளரத்துக்கருகில் உட் கார்ந்து கொண்டான். 

பணிப்பெண் மன்னன் கட்டளைப்படி சத்திரக்காரனை அழைத்துப் போனாள். அவர்கள் வெளியே சென்றதும் தேவகி கேட்டாள், “இவன்….” என்று. 

“பரம அயோக்கியன்” என்றார் மகாராஜா. 

“அப்படியிருக்க அவனை ஏன் மீண்டும் பதவியில் நியமித்தீர்கள்” என்று வினவினாள் தேவகி. 

“மாதவி நியமிக்கச் சொன்னாள்.” 

“எதற்காக?” 

”அவள் தலைவன் உத்தரவு.” 

“யார் அவள் தலைவன்?” 

“அந்த வாலிபத் துறவி.” 

“அவன் எங்கே இப்பொழுது?” 

“தெரியாது.” 

”தெரியாதா?”

‘தெரியாது”. 

”உங்களுக்குத் தெரியாமல் அவன் எப்படி மறைந்தான்?” 

“மறையவில்லை. மாதவி விடுதலை செய்தாள். போனான்!” 

“எங்கு?”

“எதிரியின் பாசறைக்கு”, இதைச் சொன்ன விஷ்ணு கோபன் திடீரென எழுந்தான் ஆசனத்தைவிட்டு. 

தேவகியின் கண்களில் அச்சம் துளிர்த்தது. “எதிரியின் பாசறைக்கா?’ என்று அச்சம் குரலிலும் ஒலிக்கக் கேட்டாள். 

“ஆம்” என்றார் மகாராஜா. 

“அப்படியானால் துறவியை நாம் இழந்து விட்டோம்.”

“இல்லை”

“எப்படி அத்தனை திட்டமாகச் சொல்கிறீர்கள்?” 

மகாராஜா தேவகியை அணைத்துக்கொண்டு அவள் விழிகளை உற்றுப் பார்த்தார். “தேவகி! பெரிய வீரர்கள் அனாவசியமாகக் கொலையில் இறங்குவதில்லை” என்றும் சொன்னார். 

தேவகி தனது தலையை விஷ்ணுகோபன் மார்பில் சாய்த்துக்கொண்ட வண்ணம் வினவினாள், “யாரைக் குறிப்பிடுகிறீர்கள்?” என்று. 

“சமுத்ரகுப்தனை’” என்ற விஷ்ணுகோபன் சொற்களில் மரியாதை மிதமிஞ்சி ஒலித்தது. 

தேவகியின் விழிகளில் ஆச்சரிய ரேகை அதிகமாகத் துளிர்விட்டது. ”உங்கள் எதிரியைப் புகழ்கிறீர்கள்” என்று சுட்டிக்காட்டினாள். 

பல்லவ மன்னன் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. சிறிது சிந்தித்துவிட்டுப் “பகைவனானாலும் பண்புள்ளவன். பாரதம் என்றே ஒருமுறை காணும் மகாவீரன். இவனை வட நாட்டு அலெக்ஸாண்டர் என்று மக்கள் அழைக்கிறார் கள். பல போர்களைக் கண்டவன், வெற்றி கொண்டவன்” என்று நிதானமாகவும் கண்ணியம் சொட்டிய குரலிலும் பேசினான். 

“அந்த அலெக்ஸாண்டர் எங்கே?” என்று தேவகி எரிச்சலுடன் கேட்டாள். 

காஞ்சிக்கு வெகு அருகில்” என்றான் விஷ்ணு கோபன். 

“எத்தனை அருகில்?” 

“இன்னும் இரண்டு நாளில் தெரியும்.” 

“எப்படி?’ 

“வாலிபத் துறவி வந்து சேதி சொல்லுவான்.” 

வாலிபத் துறவி வரவில்லை. இரண்டு நாள் கழித்து. நான்கு நாட்கள் ஓடிவிட்டன. துறவியின் சுவடுகூடத் தெரியவில்லை, அவனைப் பற்றிய தகவலும் ஏதுமில்லை. துறவி அடியோடு மறைந்து விட்டான். 

29. மாதவியின் மனம் 

நாட்கள் மேலும் நான்கு ஓடியும் துறவியைப் பற்றி எந்தச் செய்தியும் வராததால்.மகாராஜா விஷ்ணுகோபன் கவலை மிக அதிகமாகியதால், அவன் காஞ்சியைவிட்டும் புறப்பட்டு வடகிழக்கே உதயகிரிக்குத் தெற்கே இருந்த தனது படைத்தளத்துக்குச் செல்லத் தீர்மானித்து அதைப் பற்றித் தேவகியுடனும் மாதவியுடனும் கலந்து ஆலோசித் தான். அப்படிச் செல்வது விவேகமில்லையென்று தேவகி சொன்னாள். ‘உதயகிரியின் சரிவில் குப்த சக்ரவர்த்தியின் பெரும்படை தங்கியிருப்பதால், அது என்றும் பல்லவரின் சிறுபடையைத் தாக்கி அழிக்க முடியும். ஆகையால் தீர்க்காலோசனைக்குப் பிறகு தாங்கள் செல்வதுதான் சரி யாகும்” என்று காரணமும் காட்டினாள் தேவகி. 

மாதவி பதிலேதும் சொல்லவில்லை. கதிரவனின் காலைக் கிரணங்கள் அவள்மீது சாளரத்தின் மூலம் பாய்ந்து அவள் கன்னத்தைப் பொன்னிறமாக அடித்திருந்தன. அவள் இதழ்கள் இருமுறை அசைந்தன. அவள் ஏதோ சொல்ல முற்பட்டாலும் சொற்கள் வரவில்லை வாயிலிருந்து. அவள் வாயைக் கவனித்த விஷ்ணுகோபன் தனது கவலை யைக் கூடச் சிறிது மறந்து, “என்ன மாதவி! என்ன சொல்கிறாய் நீ ?” என்று கேட்டுப் புன்முறுவல் செய்தான். 

மகாராஜாவின் புன்முறுவலுக்குக் காரணம் புரிந்திருந்தது மாதவிக்கு. துறவியைப் பற்றித் தான் நினைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்ததாலேயே மகாராஜா தன்னைப் பார்த்து நகைக்கிறார் என்பதையும் மாதவி உணர்ந்து கொண்டாள். “அவரைப் பற்றி நான் எப்படி நினைக்கா திருக்க முடியும்?” இந்தக் காஞ்சியை அவர்தானே காப்பாற்ற முடியும்? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாளானாலும் உண்மைக் காரணம் காஞ்சியின் பாதுகாப்பு அல்ல என்பதும் அவளுக்குச்சந்தேகமறப்புரிந்திருந்ததால், 

“யாரையும் நெருங்கவிடாத என் மனம் இந்தத் துறவியிடம் ஏன் லயித்து விட்டது?” என்று வினவிக் கொண்டாள் தன்னை, “நானும் ஒரு துறவியல்லவா? துறவியாகிச் சமணமதத்துக்குப் பாடுபடுவதாக மஹாயனரிடம் சத்தியம் செய்து கொடுக்கவில்லையா?” என்றும் தன்னை விசாரித்துக் கொண்டாள். 

இந்தச் சமயத்தில் மகாராஜா இன்னுமொரு கேள்வி யையும் வீசினார், ”என்ன குழம்புகிறாய் மாதவி?” என்று 

மாதவி மகாராஜாவை நிமிர்ந்து நோக்கினாள். “குழப்பம் ஏதுமில்லை மகாராஜா” என்று தீனமான குரலில் பதில் கூறினாள். 

மகாராஜா மெல்ல நகைத்தார். ”உனக்கு இப்பொழுது என்னைப் பற்றிக் கவலையில்லை. காஞ்சியைப் பற்றியும் கவலையில்லை” என்றும் கூறினார் நகைப்பின் ஊடே. 

“வேறு எதைப் பற்றிக் கவலை மகாராஜா?” என்று கேட்டாள் மாதவி. தரையின் மீது கண்களை ஓட்டிய வண்ணம். 

“உன் மனத்தைக் கேட்டுப்பார்” என்றார் மகாராஜா. “என்ன தேவி! சரிதானே?” என்று தேவகியையும் பார்த்துக் கேட்டார். 

“வேறு யாரையும் கேட்கவேண்டியதில்லை, மகாராஜா; என் மனதைக் கூடக் கேட்க வேண்டியதில்லை. துறவியிடம் என் மனம் லயித்து விட்டதாக நினைக்கிறீர்கள்” என்றாள் மாதவி. 

“அது தவறா?” மகாராஜா வினவினார் அனுதாபத்துடன்.  

“தவறில்லை மகாராஜா. ஆனால் பலனளிக்க முடியாதது” என்றாள் மாதவி, 

“ஏன் மாதவி?” 

”நான் சமணத் துறவியாவதாக மஹாயனருக்கு முன்னரே  வாக்களித்திருக்கிறேன். துறவிக்குத் திருமணம் 
கிடையாது”. 

“உண்மை”

“என்ன உண்மை மகாராஜா?” 

“துறவிகளுக்குக் காதல் மட்டுந்தான் சாத்தியம்.”

”மகாராஜா!” மாதவியின் குரல் சினத்துடன் ஒலித்தது. 

“என்னைச் சினந்து பயனில்லை மாதவி. அவன் ஏற்கெனவே துறவி. நீ இனிமேல் துறவியாவதாக மஹாயனயிடம் ஒப்புக் கொண்டிருக்கிறாய். இரு துறவிகளுக்கும் சிறைச்சாலையில் நிகழ்ந்த தவம், சிறைச்சாலை அதிகாரிக்கும் மற்ற எல்லோருக்குமே தெரிந்திருக்கிறது” என்ற மகாராஜா புன்முறுவல் காட்டினார். இதில் தவறு ஏதுமில்லை” என்றும் சுட்டிக் காட்டினார். 

‘தவறில்லையா?” மாதவி மன்னனை ஏறெடுத்து நோக்கினாள். 

“இல்லை.” 

“வேறென்னவாம்?” 

“வயது முறைப்படி, சாதி முறைப்படி நடக்கும் தர்மம்”. 

“நான் என்ன சாதி?” 

“வெளிப்படையாகத் தாசி, உண்மையாக அரச குலத்தவள்.” 

“பத்ரவர்மன் என்னை வேசி என்றே அழைக்கிறான் “

“அவனுக்கும் உன் குலம் தெரியும், இருப்பினும் தன் கை ஓங்காததால், அதற்கு நீயும் அந்தத் துறவியும் இடைஞ்சலாக யிருப்பதால், கோபத்தில் வசைபாடுகிறான்” என்ற மகாராஜா எழுந்து மாதவிக்கு அருகில் வந்து “குழந்தாய்! உன் மனம் எனக்குத் தெரியும்; தேவகிக்கும் தெரியும். என்னைக் காக்க, இந்தக் காஞ்சியைக் காக்க, நீங்கள் இருவரும் தூஷணைகளை, எத்தனை அவப் பெயர் தாங்கியிருக்கிறீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும், மாதவி. நலன் என்னைப் பற்றி மட்டுமிருந்தால் நான் இத்தனை தியாகத்துக்கு ஒப்புக் கொண்டிருக்க மாட்டேன். காஞ்சி பாதுகாக்கப்படுவதற்கு அந்தத் தியாகம் செய்யப் பட்டதால் அதை நான் மறக்க முடியவில்லை” என்ற விஷ்ணுகோபன், “எதற்கும் நாளை நான் புறப்படுகிறேன்” என்று கூறினான். 

“வேண்டாம் மகாராஜா” திட்டமாகத் தடுத்தாள் மாதவி. 

“போர் வாசலுக்கு வந்துவிட்டது மாதவி. இந்தச் சமயத்திலும் மன்னன் கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பது ஆண்மைக்கோ க்ஷத்திரிய தர்மத்திற்கோ சரியாகாது மாதவி” என்ற மன்னன் குரலில் தீர்மானமிருந்தது. “எதற்கும் அவர் வரட்டும்.” என்ற மாதவியின் குரலிலும் தீர்மானமிருந்தது. 

“அவன் வராவிட்டால்?” என்றுகேட்டார் மகாராஜா

“வராமலிருக்க மாட்டார்.” 

“அவன் உயிருடனிருக்காவிட்டால்? இறந்திருந்தால்?” 

“இறக்கவில்லை” திட்டமாகச் சொன்னாள் மாதவி.

“எப்படித் தெரியும் உனக்கு?” என்று வினவினார் மகாராஜா. 

“என் மனம் சொல்லும்” என்றாள் மாதவி. 

“உன் மனதுக்கு ஜோதிடம் தெரியுமா?” என்றார் மகாராஜா. 

“இதற்கு ஜோதிடம் தேவையில்லை மகாராஜா. உணர்ச்சிகள் சொல்லும் செய்தி இது” என்ற மாதவி, 

“மகாராஜா! பெண்களின் மனத்திற்கு இந்தச் சக்தி எப் பொழுதும் உண்டு” என்று விளக்கினாள். அவள் குரலில் உணர்ச்சி மண்டிக்கிடந்தது. 

மகாராஜா விஷ்ணுகோபன் அறையில் அங்குமிங்கும் நடைபோட்டார், மிகுந்த சிந்தனையுடன். “சரி மாதவி, எத்தனை நாள் பொறுக்கச் சொல்கிறாய்?” என்று கேட்டார் சட்டென்று நடையை நிறுத்தி. 

“இன்னும் இரண்டே நாட்கள்” என்றாள் மாதவி.

”அதற்குள் துறவியை எதிர்பார்க்கிறாயா?” 

“அவரை அல்லது அவர் செய்தியை.” 

மகாராஜா மாதவியைக் கூர்ந்து நோக்கினார். பிறகு தேவகியை நோக்கி, “இப்பொழுது என்ன செய்யட்டும்?” என்று வினவினார். 

இதற்கு தேவகி பதில் சொல்லும்முன்பு ‘‘ஏதும் செய்ய வேண்டாம். இன்றிரவு நகர சோதனைக்குப் போவோம்” என்று மாதவி சொன்னாள். 

“அது எதற்கு?” என்று மகாராஜா கேட்டார். 

“ஒருவேளை காஞ்சி தாக்கப்பட்டால், நகரின் பாதுகாப்பு எப்படியிருக்கிறது என்பதை நீங்கள் பார்க்க வேண் டாமா?” என்று கேட்டாள் மாதவி. 

“நேற்றுக்கூடப் பார்த்தேன்; சரியாகதானிருக்கிறது” என்றார் மகாராஜா. 

“இன்று என்னுடன் வந்து பாருங்களேன்” என்று மாதவி சொன்னாள். 

‘’அதனால் தனிப் பயனுண்டா?” 

”உண்டு”. 

மகாராஜாவின் வியப்பு விழிகள் மாதவியின் மீது திரும் பின; ‘’என்னைவிட நீ எதையோ அதிகமாக அறிந்திருக்கிறாய்” என்று சொன்னார், வியப்பு குரலிலும் விரிய. 

“இல்லை மகாராஜா. வாலிபத் துறவியாருக்குச் சில சந்தேகங்கள் இருந்தன. அவை சரியா என்று பார்க்கலாமென்று நினைக்கிறேன்” என்றாள் மாதவி. 

“என்ன சந்தேகங்கள் மாதவி” மகாராஜாவின் குரலில் சற்றுக் குழப்பம் தெரிந்தது. 

“இரவில் பார்த்து விடுவோமே” என்ற மாதவி அந்த அறையை விட்டுப் பக்கத்திலிருந்த தனது அறைக்குச் சென்றாள். இரவுவரை அவள் அந்த அறையை விட்டு வெளியே வரவில்லை. இரவின் இரண்டாம் ஜாமம் தலை காட்டியதும் அறையைத் திறந்து முக்காடிட்டு வெளியே வந்தாள். மன்னனும் தேவகியின் அறையிலிருந்து வெளியே வந்தான். அவன் உடல் முழுவதையும் ஒரு போர்வை மறைத்திருந்தது. முகத்தின் முக்கால் பாகத்தைக் கூடப் போர்வை மூடியிருந்தது. “நல்லது மகாராஜா. வாருங்கள்” என்று மாதவி முன்னே நடந்தாள், 

மகாராஜா பேசாமல் அவளைப் பின் தொடர்ந்தார். அவள் எந்த ரகசிய வழியாலும் போகவில்லை. நேராக மாளிகைக் கதவைத் திறந்துகொண்டு வீதியில் சென்றாள். தடுத்த காவலருக்கு ஏதோ சைகை செய்ய, அவர்கள் விலகினர். மகாராஜா இதையெல்லாம் பார்த்து வியந்தாலும் அதை வெளிக்குக் காட்டிக்கொள்ளவில்லை. அவர், பேசாமல் மாதவியைத் தொடர்ந்தார். மாதவி பல தெருக்களைக் கடந்து சிறைச்சாலைக்கு எதிரில் வந்து அங்கிருந்த தோப்புக்குள் மறைந்து நின்றாள். 

சிறைச்சாலையின் பெருங்கதவு திறக்கப்பட்டு பத்துப் பதினைந்து குற்றவாளிகள் வெளியே வந்தார்கள். சற்று எட்ட புரவியிலிருந்த ஒருவன் அவர்களை தன்னுடன் வரும் படி சைகை செய்து புரவியை மெள்ள நடத்திச் சென்றான். குற்றவாளிகள் அவனைத் தொடர்ந்தார்கள். 

சற்று எட்ட மாதவியும் அவர்களைத் தொடர்ந்தாள், மன்னனுடன். சற்று தூரம் சென்றதும் ஒரு தோப்பில் குற்றவாளிகள் புகுந்தார்கள். அவர்களை அழைத்துச் சென்றவன் அங்கு நின்றான் சில விநாடிகள். அப்பொழுது தோப்புக்குள் மற்றும் நால்வர் விளக்குகளுடனும் ஒரு மூட்டையுடனும் வந்தார்கள். மூட்டை அவிழ்த்துக் கொட்டப் பட்டது. அதிலிருந்த கத்தி கேடயங்களைக் குற்றவாளிகள் எடுத்துக்கொள்ள, புரவி மேலிருந்தவன் அவர்களைப் பார்த்துக் கூறினான்: ‘உங்கள் கடமை உங்களுக்குத் தெரியுமல்லவா?” என்று. 

“தெரியும்” என்றான் ஒரு குற்றவாளி. 

மற்றவர்கள் தெரியும் என்பதற்கு அறிகுறியாகத் தலையசைத்தார்கள். “வடக்கு வாசலுக்குச் செல்லுங்கள்; அங்குள்ள சத்திரத்தில் உங்களுக்கு உணவு காத்திருக்கிறது” என்று புரவியிலிருந்தவன் கூறிவிட்டு, புரவியைத் தட்டிவிட்டுத் தோப்புக்குள் மறைந்தான். ஆயுத மூட்டை கொணர்ந்தவர்களும் மறைந்தார்கள். குற்றவாளிகள் வடக்கு வாசலை நோக்கிச் சென்றார்கள்; அங்குள்ள சத்திரத்துக்குள் நுழைந்தார்கள். 

மாதவியும் மன்னனும் ஏதுமறியாதவர்கள் போல் எட்டவே அவர்களைத் தொடர்ந்தார்கள். சத்திரத்துக்குள் அவர்கள் நுழைந்ததும் கதவு மூடப்பட்டது. சற்று நேரத் துக்கெல்லாம் பெரும் கூச்சலும் கொம்மாளமும் உள்ளே கேட்டன. 

மகாராஜாவும் மாதவியும் ஒருவரையொருவர் உற்றுப் பார்த்துக்கொண்டனர். மாதவி மகாராஜாவைச் சத்திரத்தைச் சுற்றி அழைத்துச் சென்று பின்புறக் கதவை இரு முறை லேசாகத் தட்டினாள். கதவு மெல்லத் திறக்கப்பட்டது. மகாராஜாவை உடன் வரச்சொல்லி மாதவி நுழைந்தாள் பின் வாயிலில். மகாராஜா ஏதும் பேசாமல் தொடர்ந்தார். 

வாயிலைத் திறந்தவன் பின்கட்டிலுள்ள ஒரு சிறு அறைக்குள் அவர்களை அழைத்துச் சென்றான். அந்த அறைக்குள் சென்றதும் மாதவி தனது முக்காட்டை எடுத்தாள். 

“செய்தி ஏதாவது உண்டா?” என்று வாயிலைத் திறந்தவனை நோக்கிக் கேட்டாள். 

“இருக்கிறது; ஆனால் உங்களுக்கல்ல” என்றான் அவன். 

“வேறு யாருக்கு?” 

“மகாராஜாவுக்கு”. 

“அப்படியானால் என்னிடம் கொடுக்கலாம்” என்ற மகாராஜா கையை நீட்டினார்; முக்காட்டையும் நீக்கினார். 

கதவைத் திறந்தவன் அதிர்ச்சி யடைந்தான். 

“தாங்களா!” என்றான், அதிர்ச்சி குரலிலும் ஒலிக்க. 

‘தாங்கள் இங்கிருப்பது….?”

“தெரியும். ஆபத்து.” 

“உடனே போய்விடுங்கள் மகாராஜா”. 

“போவதால் பயனில்லை; கொடு ஓலையை” என்று கேட்டு ஓலையை வாங்கிக் கொண்டார், அதை அந்த மங்கலான விளக்கிலும் பார்த்தார். பார்த்ததும் அவர் முகத்தில் விவரிக்க முடியாத வியப்பு விரிந்தது. திட்டமாயிருக்கிறது ஓலை. “உன் மனம் சொன்னது சரிதான் மாதவி ” என்று கூறி மாதவியிடம் ஓலையைக் கொடுத்தார். 

மாதவி ஓலையைப் பிரித்து ஆவலுடன் படித்தாள். பிறகு மன்னனை ஏறிட்டுப் பார்த்தாள். பார்வையில் பொருள் பூர்ணமாகப் பொதிந்து கிடந்தது. பெருமை நிலவிக் கிடந்தது. அதற்குக் காரணம் மகாராஜாவுக்கும் புரிந்திருந்ததால், ”மாதவி! நீ அதிர்ஷ்டக்காரி” என்ற சொற்கள் அவரிடமிருந்து உதிர்ந்தன. “உன் மனம் மிகுந்த அறிவு வாய்ந்தது. சத்தியத்தைச் சொல்கிறது” என்றும் சொன்னார் மகாராஜா. 

30. குப்தனும் துறவியும் 

சத்திரத்தின் அந்தச் சிறு அறையில் மகாராஜா அந்த ஓலையை ஒருமுறைக்கிரு முறையாகப் படித்துவிட்டு, மாதவியின் அதிர்ஷ்டத்தைப் பாராட்டிய பின்பு, தீவிர சிந்தனையில் இறங்கினார். ஓலையின் விஷயம் மிகத் தெளிவாயிருந்தது. 

“மன்னருக்கு அடிமை எழுதிக் கொள்வது: கோதாவரி முகத்துவாரத்துக்கும், கிருஷ்ணா நதி முகத்துவாரத்துக்கும் இடையில் அரசு புரியும் அவமுக்த நாட்டு மன்னர் நீல ராஜாவுக்கும், வேங்கி நாட்டு ஹஸ்திவர்மனுக்கும், பலாக்கா அதிபர் உக்ரேசன் மகாராஜாவுக்கும், தேவராஷ்டிரத்தின் குபேர மன்னருக்கும், குஷ்டபபுரத்தின் தனஞ்செய மகாராஜாவுக்கும் உடனடியாக ஓலைகளை அனுப்பிப் போருக்குச் சித்தமாயிருக்கச் சொல்லுங்கள். இவர்களெல்லாம் பல்லவர்களின் துணை நாடுகளின் மன்னர்களாதலால், இவர்கள் உதவத் தயாராயிருப்பார்கள். குப்த சக்கரவர்த்தியைக் கண்டு அஞ்ச வேண்டா மென்று தூது அனுப்புங்கள். தாங்கள் புறப்பட்டு உதய கிரிக்கு அருகாமையிலுள்ள நமது படைத்தளத்துக்கு இந்த ஓலை கிடைத்தவுடன் வாருங்கள். பயணத்தில் அதிக அவசரத்தைக் காட்டுங்கள். ஆனால் காஞ்சியைப் பற்றிக் கவலை வேண்டாம் என்று என் குருநாதர் மாதவியிடம் சொல்லுங்கள். – துறவி 

இந்த ஓலையைப் படித்ததால் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்த மன்னர் சத்திரக்காரனை நோக்கி, “நீ செய்து வரும் இந்தச் சேவையை மறக்க மாட்டேன்” என்று உபசார வார்த்தைகள் சொன்னார். 

“எந்தப் பலனையும் உத்தேசித்து இந்தப் பணியில் இறங்கவில்லை மகாராஜா” என்ற சத்திரக்காரன் குரலில் பணிவுமிருந்தது, சுய மதிப்பு மிருந்தது. 

இதைக் கேட்ட மகாராஜாவின் புருவங்கள் எழுந்தன கேள்வி கேட்பது போல். அவர் கண்கள் மாதவி மீதும் திரும்பின. சத்திரக்காரனுக்குப் பதில் மாதவியே பேசினாள். “மகாராஜா! காஞ்சியின் தற்கால அவல நிலையால் மக்கள் அவதிப்படுகிறார்கள். குற்றவாளிகள் படையில் சேர்க்கப் பட்டதால் படை பலம் குறைந்தது மட்டுமல்ல, எந்த வர்த்தக நிலையமும், பொதுஸ்தலங்களும் மானத்துடன் இயங்க முடியவில்லை. பழைய நாகரிக நிலையை மீண்டும் கொண்டு வர, காஞ்சியில் பிரபலஸ்தர்கள் பலரும் எந்தத் தியாகத்துக்கும் தயாராயிருக்கிறார்கள். அத்தகைய பெருந் தகைகளில் இவர் ஒருவர். நமது துறவியாருக்காக, தங்க ளுக்காக,உயிரையும் கொடுப்பார். எந்தப்பலனையும் இவர் எதிர்பார்க்கவில்லை. பலனை எதிர்பார்ப்பவர்கள் வேறு இடங்களில் இருக்கிறார்கள்” என்று மாதவி விளக்கினாள் மன்னனுக்கு. 

விஷ்ணுகோபனும் புரிந்ததற்கு அடையாளமாகத் தலையை அசைத்துவிட்டுப் புறப்பட்டான், அந்த அறையிலிருந்து. முதலில் வந்த வழியே மாதவியின் மாளிகைக்குத் திரும்பிய இருவரும் மாளிகையை அடையும் வரை ஏதும் பேசவில்லை. மாளிகையை அடைந்ததும், மன்னர் சிலசந் தேகங்கள் கேட்டார் மாதவியை. “மாதவி! இந்தக் கடி தத்தில் குறிப்பிட்ட ஐந்து அரசர்களும் நான் சொல்வதற்கு இணங்குவார்களென்பது என்ன நிச்சயம்?” என்று முதல் கேள்வியைத் தொடுத்தார். 

“சுய நலனை முன்னிட்டு இணங்குவார்களென்று துறவி எதிர்பார்க்கிறார்” என்றாள் மாதவி. 

“துறவியாவது மண்ணாங்கட்டியாவது, என்ன துறவி வேண்டி கிடக்கிறது? முகுந்தன் என்று சொல்” என்ற மகாராஜா,”சுயநலமிருந்தாலும் எதிரி பலத்தையும் பார்ப் பார்களல்லவா? சமுத்ர குப்தனின் பெரும்படை, வடக்கில் சகல மன்னர்களையும் வென்று இப்பொழுது தெற்கிலும் பெரும் வெற்றிகளை அடைந்திருக்கிறது, கோவல மன்னன் மந்தராஜா, பிஷ்டிபுர அரசன் மஹேந்திரன், மலைக் கோட்டையின் மன்னன் ஸ்வாமிதத்தன், எரந்தபள்ளியின் காவலன் தமானன் இவர்களையெல்லாம் முறியடித்துவிட்டு வந்திருக்கிறான் குப்த சக்ரவர்த்தி. அவன் பெரும்படை இப்பொழுது காஞ்சிக்கு வடமேற்கில், வடபெண்ணை யாற்றுக்கு மேலே நான்கு காத தூரத்திலுள்ள உதயகிரிச் சரிவில் தங்கியிருக்கிறது. அதை நாம் எதிர்த்து நிர்மூலம் செய்யமுடியுமா? முடியும் என்று முகுந்தன் தனது ஓலையில் குறிப்பிட்டுள்ள மன்னர்கள் கனவு காண்பவர்களா?” என்றும் வினவினார். 

மாதவி தனது அழகிய விழிகளால், விஷ்ணுகோபனை ஏறிட்டு நோக்கினாள். “படைப் பெருக்கம் மட்டும் வெற்றிகளைச் சம்பாதித்து விடுவதில்லை” என்றாள் மெதுவாக. 

அரசர் மாதவியின் பதிலைக் கேட்டுப் புன்முறுவல் கொண்டார். அது எனக்குத் தெரியும் மாதவி. இப்பொழுது குப்த சக்கரவர்த்தியிடமிருக்கும் படையில் பாதிப் படையிருந்தாலும் இந்தப் பாரதத்தை வெற்றி கொள்ள அவரால் முடியும். இந்தப் பல்லவ காஞ்சி இப்பொழுது எதிர்க்க முற்பட்டிருப்பது படை பலத்தை மட்டுமல்ல. படைகளை எப்படி நடத்தினால் வெற்றி கிடைக்கும் என்பதை உணர்ந்த ஒரு பெரும் போர்த் தந்திரசாலியை, பாரதத்தின் இணையற்ற ஒரு வீரனை எதிர்க்க முற்பட்டிருக்கிறோம். சக்கரவர்த்தி படைகளை அணிவகுக்கும் முறையையும், நட்ட நடுப் போரில் கூட அணிவகுப்பை மாற்றும் திறனையும் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்” என்றும் கூறினான் விஷ்ணுகோபன். 

அதுவரை அவ்விருவரையும் அணுகாமல் எட்ட நின்றிருந்த தேவகி மன்னன் அருகில் வந்தாள். “பல்லவ சிங்கமா இப்படிப் பேசுகிறது?” என்று வினவினாள். 

பல்லவ மன்னன் தேவகியின் மீது கண்களைத் திருப்பினான். “தேவகி! சிங்கத்தைச் சிங்கந்தான் அறிய முடியும். எதிரியைக் குறைத்து மதிப்பிடுவதாலோ குறைத்துப் பேசுவதாலோ நாம் வெற்றியடைந்துவிட முடியாது. எதிரியின் பலாபலங்களை அறிந்து, முடிவுகளை அறிந்து முடிவுகளை எடுப்பதுதான் பலன் தரும். சமுத்ரகுப்தனைச் சாதாரண மன்னனாகவோ, படையெடுத்துப் பிறநாடுகளைச் சீரழிக்கும் வெறியனாகவோ நினைக்க வேண்டாம். அவர் படையெடுப்புக்குக் கலாசார காரணமும் இருக்கிறது. தனது நிலம் பரப்பை மட்டுமின்றி, பௌத்த சமயத்தையும் விஸ்தரிக்கப் பார்க்கிறார் குப்தசக்ரவர்த்தி’ என்றான் விஷ்ணுகோபன். 

“நாம்?” என்று கேட்டாள் மாதவி. 

“நமது மதத்தை, கலாச்சாரத்தைக் காக்கப் பார்க்கிறோம். நாட்டிற்கு போரால் ஏற்படும் நாசத்தைத் தவிர்க்கப் பார்க்கிறோம். அதனால்தான் குப்த சக்ரவர்த்தியை உதயகிரிக்கு அருகில் சந்திக்கப் படைகளை அனுப்பியிருக் கிறேன். நானும் நாளை பயணமாகிறேன்” என்று பதில் கூறினான் விஷ்ணுகோபன். 

“நாளைக்கா?” தேவகியின் கேள்வியில் துன்பம் ஒலித்தது. 

“ஆம்.”

“ஏன் இத்தனை துரிதம்?” 

“அழைப்பு வந்திருக்கிறது”.

“யாரிடமிருந்து?” 

“எனது ஒற்றர்களிடமிருந்து” என்று கூறிய மகா ராஜா, “தேவகி! சமுத்திரகுப்தன் படையெடுப்பு முடியும் கட்டத்தை நெருங்குகிறது” என்றும் சொன்னான். பிறகு நான்கு அறைகள் தாண்டியிருந்த தனது அந்தரங்க அறைக்குச் சென்று ஐந்து ஓலைகளை எழுதி எடுத்துக் கொண்டு வந்து மாதவியை நோக்கி, “மாதவி! இந்த ஓலையை அனுப்ப வேண்டியவர்களுக்கு அனுப்பிவிடு. நாளை நான் பயணமாகிறேன்” என்றார். 

அந்த ஓலைகள் யார் யாருக்கு என்பதை உணர்ந்திருந்ததால், மாதவி ஏதும் கேட்கவில்லை மன்னனை. சரியென்பதற்கு அறிகுறியாகத் தலையை மட்டும் ஆட்டினாள். 

அத்துடன் மன்னன் மாதவிக்கு விடை கொடுத்தனுப்பி விட்டு, “தேவகி! கதவைத் தாழிடு. சிறிது நேரம் உறங்குகிறேன் விடிய அதிக நேரமில்லை. நாளைக்காலையில் புறப்படவேண்டும் பாசறைக்கு” என்று சொல்லிவிட்டுப் பஞ்சணைக்குச் சென்று படுத்துக் கொண்டான். 

மறுநாள் பொழுது புலர்ந்ததும் எழுந்து நீராட்டத்தை. முடித்துக் கொண்ட மன்னன் மஹாயனரையும், பத்ரவர்மனையும் தனது அறைக்கு வரவழைத்து, தனது திட்டங்களைச் சொன்னான். “குருநாதரே! இன்று நான் பத்ரவர்மனை அழைத்துக்கொண்டு பாசறைக்குச் செல்கிறேன். நான் திரும்பும்வரை இந்த நகரத்தைக் காக்கும் பொறுப்பை தாங்கள்தான் ஏற்கவேண்டும்” என்று வேண்டினான். 

மஹாயனரின் முகத்தில் திருப்தி மின்னல் வேகத்தில் தோன்றி மறைந்தது. பிறகு சிறிது கவலையுடன் கேட்டார். “மன்னா! இங்குள்ள திறமையான படைத்தலைவன் பத்ரவர்மன் ஒருவன்தான். அவனையும் நீ அழைத்துக் கொண்டு போய்விட்டால் நான் யாரைக் கொண்டு இந்த நகரத்தை குப்தனிடமிருந்து காக்க முடியும்?” என்று வினவினார். 

“குப்தன் இங்கு வரப்போவது அத்தனை நிச்சயமா?” என்று வினவினான் விஷ்ணுகோபன். 

மஹாயனரின் சிறிது சங்கடம் துலங்கிய புன்முறுவலைத் தமது வயோதிக உதடுகளில் படரவிட்டுக் கொண்டார். “குப்தன் வந்தாலும் வராவிட்டாலும் நாம் சித்தமாயிருக்க வேண்டாமா?” என்று வினவினார். 

”ஆம்; ஆம்! சித்தமாகத்தானிருக்க வேண்டும்” என்று ஒப்புக்கொண்ட பல்லவ மன்னன், “குருநாதரே! உங்களுக்கு இஷ்டமான திறமையான படைத்தலைவரைத் தருகிறேன்” என்று கூறியதன்றி, தனது மடியிலிருந்து ஒரு ஓலையையும் எடுத்து மஹாயனரிடம் அளித்தான். 

ஓலையை வாங்கிப் படித்த மஹாயனர் முகத்திலும் சிறிது அதிர்ச்சி தெரிந்தது. “மாதவியா! படைத்தலைவியா?” என்றும் கேட்டார் வியப்புடன். 

“ஆம்! மஹாயனரே! இப்பொழுது உபதளபதியாயிருக்கிறாள். பத்ரவர்மன் இல்லாதபோது தளபதி பதவியை வகிக்க உங்கள் சீடப் பெண்ணைத் தவிர வேறு யாரை நம்ப முடியும்? வீரபத்ரப் பெருமாள் இருக்கிறான். பெரிய பதவிக்குத் தகுதியற்றவன். நமது படைகளை எனக்கு சமதையாக. நடத்தி உதவக் கூடியவன் பத்ரவர்மனைத் தவிர வேறு யாரும் கிடையாது” என்று கூறி விஷ்ணுகோபன் மாதவியை நோக்கி, “மாதவி! குருநாதர் சொற்படி கேட்டு நட. எதைச் சொன்னாலும் செய். அப்பொழுதுதான் காஞ்சி பாதுகாக்கப்படும், காஞ்சியின் துரோகிகள் பலரிருக்கிறார்கள்” என்று உத்தரவிட்டான். 

மாதவி தலை வணங்கினாள். விஷ்ணுகோபனுக்கும், மஹாயனருக்கும், ”மகாசக்கரவர்த்தி உத்தரவு! குருநாதர் உத்தரவு!” என்று சொல்லவும் செய்தாள். 

இதற்குப் பிறகு அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு, விஷ்ணுகோபன் கிளம்பினான் காஞ்சியிலிருந்து. பத்ரவர்மன் அவனைத் தொடர்ந்து சென்றான். அதே காலையில் வாலிபத் துறவியும் உதயகிரிச் சரிவிலிருந்த சமுத்ரகுப்தனுடன் பேசி நடந்துகொண்டே அவன் படைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான். குப்த சக்ரவர்த்தி துறவியின் தோள்மீது கையைப் போட்டுக் கொண்டு படைகளின் ஊடே நடந்து சென்றான். 

– தொடரும்…

– மாதவியின் மனம் (நாவல்), பாரதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *