கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: August 1, 2023
பார்வையிட்டோர்: 2,091 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 26 – 30 | அத்தியாயம் 31 – 35

31. சக்ரவர்த்தியின் தீர்க்க தரிசனம் 

பெரும் போர்களை வென்றதால் மஹாரதனென்று கொண்டாடப் பட்டவனும், அலெக்ஸாண்டருக்குப் பிறகு போரையும் பிராந்திய வெற்றிகளையுமே குறிக்கோளாகக் கொண்டவனும், அஞ்சாநெஞ்சமும், சாணைபிடித்த கத்தியைப் போன்று கூரிய அறிவும் படைத்தவனான சமுத்ர குப்தன் முகத்தில், என்றுமில்லாத திருநாளாக அன்று மட்டும் சிறிது வியப்பின் சாயை படர்ந்து கிடந்தது. அதைக்கூட பக்கத்திலிருந்த துறவி பார்க்கக் கூடாதென்ற நோக்கத்தாலோ என்னவோ, அதையும் கணப்பொழுதில் மறைத்துக் கொண்டு உதயகிரிச் சாரலின் மூன்று பக்கங்களிலும் அடுத்திருந்த பெரும் சமவெளியிலும் சமுத்திரம் போல் பரவிக் கிடந்த தனது பெரும் படையை நோக்கி னான். சிறிது நேரம் ஓரிடத்தில் நின்று சக்ரவர்த்தியின் கை தனது தோள்மீது இருந்ததால் அவர் நின்றவுடன் துறவியும் நின்று சக்கரவர்த்தியின் கண்கள் சென்ற திசையையும் அதன் விளைவாக அவர் முகத்தில் விரிந்த பெருமையையும் கவனித்தான். ஆகவே சொன்னான் ”யாரும் பெருமைப்படக்கூடிய படை என்று. 

சமுத்ரகுப்தன் சற்று தலையைத் திருப்பி நோக்கினான் துறவியை. ”துறவி! நீ சொன்ன கதை இந்தப் படையின் பெருமையைப் போக்கடித்துவிடும் போலிருக்கிறது.” என்றான். அத்துடன் அவன் மீண்டும் நடக்கவும் முற்பட்ட தால் துறவியும் நடந்துகொண்டே பேசினான்; “பிரபு! நான் சொன்னது கதையல்ல. உண்மையாக நடந்தது, நடப்பது” என்று கூறினான். 

“இத்தகைய நிலையில் விஷ்ணுகோபன் என்னுடன் போரிடுவது விவேகமா?” என்று வினவினான் சமுத்திர குப்தன். 

துறவி சிறிதும் சிந்திக்காமலே பதில் சொன்னான்: ‘பிரபு! வீரர்கள் விளைவுகளைக் கவனிப்பதில்லை. கடமையை செய்கிறார்கள். எதிரி அணுகும்போது பணிவது வீரமாகாது” என்று. 

சமுத்திர குப்தன் தனது ஆராய்ச்சி விழிகளைத் துறவி மீது திருப்பினான். “காரிய காரணமின்றிப் படைகளைப் பலி கொடுப்பது தர்மமா?” என்றும் கேட்டான். 

”காரிய காரணமில்லாமல் மகாராஜா எதுவும் செய்ய வில்லை.எதிரி வரும்போது தனது அரசைக் காப்பது அவர் செய்ய வேண்டிய காரியம். அது முடியுமா முடியாதா என்ற விசாரம் அர்த்தமற்றது. தங்கள் படையெடுப்பு கற்பிக்கிறது. செய்ய காரணத்தைக் வேண்டிய காரியத்தைக் கடமை உந்துகிறது” என்று விளக்கினான் துறவி. 

சமுத்திர குப்தன் துறவியை அழைத்துக் கொண்டே வெகுதூரம் நடந்து சென்று மலைச்சரிவிலிருந்த ஒரு தோப் யுக்கு வந்து தரையில் உட்கார்ந்தான். “சக்கரவர்த்தி மண்ணில் உட்காருகிறீர்கள், அதோ பாறை யிருக்கிறது” என்று ஆட்சேபித்த துறவி, பாறையைக் காட்டினான். 

“பாறையிலிருந்துதான் மண் உண்டாகிறது. மண்ணி லிருந்துதான் மற்றவர்களைப் போல மன்னனும் உண்டா கிறான். பாரத மண்ணை நான் நேசிக்கிறேன்” என்ற! சக் கரவர்த்தி, அருகில் உட்காரும்படி துறவிக்கு ஒரு இடத் தைக் காட்டினான். துறவி அமர்ந்ததும், “மேலே கதை யைச் சொல்” என்றான். 

“சொன்னது கதையல்லவென்று முன்னமே சொன் னேன் தங்களுக்கு” என்று துறவி கூறினான். 

“சரி. நிகழ்ச்சிகளைத் தொடர்ச்சியாகச் சொல்” என்று கேட்ட மன்னன், நன்றாக மல்லாந்து படுத்துக்கொண்டான் புல்தரையில். 

துறவி காஞ்சியில் நடந்ததையெல்லாம் தான் வந்த நாளிலிருந்து படிப்படியாகச் சொன்னான். அனைத்தையும் கேட்ட சமுத்திர குப்தன் நகைக்கவில்லை. ஒரு கேள்வி மட்டும் கேட்டான். “நீ என் படைத்தலைவனாக விரும்புகிறாயா?” என்று. 

இதைக் கேட்டதும் தூக்கிவாரிப் போட்டது துறவிக்கு. “பிரபு! என்ன சொல்லுகிறீர்சுள்?” என்று கேட்டான் அதிர்ச்சியுடன். 

“என் படைத் தலைவனாகிறாயா என்று கேட்டேன்.”

“என்னை எதற்காக இத்தனை தூரம் நம்புகிறீர்கள்? என்னைச் சந்தித்து இரண்டு நாட்கள்கூட ஆகவில்லை”. 

“ஒரு மனிதனை எடைபோட நாட்கள் வேண்டிய தில்லை; விநாடிகள் போதும்.”

‘“எப்பொழுது வந்தீர்கள் இந்த முடிவுக்கு?” 

“இப்பொழுதுதான்.”

“ஏன்?”

சமுத்திரகுப்தன் படுத்தபடியே நகைத்தான். ”இந்தத் தோப்புக்கு நான் அடிக்கடி வருவது வழக்கம்” என்றான். 

துறவிக்கு விவரம் புரியாததால் விழித்தான். “அதற்கும் என்னைப் படைத் தலைவனாக்குவதற்கும் என்ன சம்பந்தம்?” என்று வினவினான் குழப்பத்துடன், “இவர் சக்கரவர்த்தியாயிருப்பதில் விந்தை இல்லை. என்னையே குழம்பச் செய்து விட்டார்” என்று மனத்துக்குள்ளும் சொல்லிக் கொண்டான். 

சமுத்திர குப்தன் தொடர்ந்தான். “இந்தத் தோப்பு என் அமைதிக்காக ஏற்பட்டது. இங்கு யாரும் வர உத்தரவில்லை” என்று கூறினான். 

“அது புரிகிறது. நாம் வந்ததிலிருந்து ஒரு காவல்கூட இங்கு எட்டிப் பார்க்கவில்லை” என்றான் துறவி. 

“இந்தத் தனித்த இடத்தில் தனித்துப்படுத்திருக்கிறேன். நீ இஷ்டப்பட்டிருந்தால் உன் நாகசர்ப்பத்தை என் மார்பில் பாய்ச்சி இருக்கலாம்” என்று சமுத்திர குப்தன் பேச்சைக் கேட்ட துறவி, தேள் கொட்டியதுபோல் துள்ளி எழுந்திருக்க முயன்றான். 

“உட்கார்” என்ற சமுத்திர குப்தன் அதிகாரச்சொல் அவனை மீண்டும் உட்கார வைத்தது. “சோழன் சென்னியின் மகன் அத்தகைய இழி செய்கைக்கு உடன்பட மாட்டானென்பது எனக்குத் தெரியும். உன் முகத்திலுள்ள ராஜகளை உன் துறவறத்தை அர்த்தமற்றதாகச் செய்கிறது’ என்றும் கூறினான் சக்கரவர்த்தி. 

ஏதோ சொப்பனத்தில் வார்த்தைகளைக் கேட்டது போலிருந்தது துறவிக்கு. சமுத்திர குப்தன் மேலும் சொன் னான்: “விஷ்ணுகோபன் படை சிறியது. உன் யோசனைப் படி மற்ற ஐந்து அரசர்களும் சேர்ந்துகொண்டால் போரில் எனக்குச் சிறிது சிரமம் ஏற்படலாம். ஆனால் வெற்றியில் சந்தேகமில்லை. ஒன்று நிச்சயமாகச் சொல்லமுடியும். 

”உன் ஓலைப்படி அந்த ஐந்து மன்னர்களில் யாரும் விஷ்ணு கோபன் உதவிக்கு வரமாட்டார்கள். முகுந்தா! இந்த நாட்டில் ஒவ்வொரு மன்னனும் சுயநலக்காரன். இது ஒரு குடைக்கீழ் என்றுமே இருந்ததில்லை; புராணக்காலம் தவிர. அதனால் தான் மற்றவர்கள் துணிச்சலாக இந்த நாட்டின் மேல் படையெடுத்து வருகிறார்கள். அதைத் தடுக்கவும் இந்த நாட்டை ஒன்றுபடுத்தி ஒரு குடைக்கீழ் கொண்டுவரவும் போர்களில் இறங்கினேன். என் அநுபவத்தில் எந்த மன்னர்களும் கூட்டுச் சேர்ந்ததில்லை. சேரமாட்டார்கள்”. 

சக்கரவர்த்தியின் இந்த விவரத்தைக் கேட்ட துறவி திகைத்தான், பல விநாடிகள். “சக்கரவர்த்தி!” என்ற அவன் குரலில் மித மிஞ்சிய மரியாதையும் பணிவும் நிரம்பி நின்றன. 

“என்ன முகுந்தா?” சக்கரவர்த்தியின் முகத்தில் மந்த காசம் விரிந்தது. 

“சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்” என்ற துறவி எழுந்து நின்றான். 

சமுத்திர குப்தன் படுத்த நிலையிலிருந்து எழுந்து முழங் கால்களைக் கட்டிக்கொண்டு நின்றான். சட்டென்று அவன் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்தது. திடீரென மண்டியிட்ட துறவியின் தலை சமுத்திர குப்தன் தாள்களில் இருந்தது. 

சமுத்திர குப்தன் அந்தத் தலையின் குழல்களைத் தடவிக் கொடுத்தான். “எழுந்திரு முகுந்தா! இப்பொழுது சொல். நான் காஞ்சியை வெற்றி கொள்ள முடியுமா? முடியாதா?” என்று கேட்டான். 

சக்கரவர்த்தியின் பாதங்களிலிருந்து எழுந்த முகுந்தன், “முடியும்.தங்களால் முடியாதது எதுவுமில்லை” என்று பய பக்தியுடன் கூறினான். 

“நான் வடநாட்டவன்.” 

“தாங்கள் பாரத நாட்டவர், சக்கரவர்த்தி!” 

“எதனால் அப்படிச் சொல்கிறாய்?” 

“காரணம் இருக்கிறது”.

“என்ன காரணம்?” 

“விஷ்ணுகோபன் வீரத்தை உணர்ந்திருக்கிறீர்கள்.”

“ஆம். பாரதத்தின் மகா வீரர்களில் விஷ்ணுகோபனும் ஒருவன்”. 

“அப்படியிருந்தும் அவரிடம் போரிட மறுக்கிறீர்கள்.”

“யார் சொன்னது அப்படி?” 

“இல்லாவிட்டால் தாங்கள் என்னைத் தங்கள் படையின் தலைவனாகும்படி கேட்பீர்களா?” 

“விளக்கிச் சொல் துறவி. துறவிகள் சகலத்தையும் அகக்கண் கொண்டு பார்க்கிறார்களல்லவா?”  என்ற சமுத்திர குப்தன் புன்முறுவல் கொண்டான். 

“என் உள்ளத்திலுள்ளதைச் சொல்லச் சொல்கிறீர்கள். வேறு வழியில்லாததால் சொல்கிறேன்” என்று தொடங்கிய துறவி, 

“பிரபு! என் அகக்கண்ணில் பல காட்சிகள் தோன்றுகின்றன. எதிரியான விஷ்ணுகோபனை எதிர்த்து அழிக்க இஷ்டமில்லாத ஒரு பேரரசன் தோன்றுகிறான். காஞ்சி கையில் விழத் தயாராயிருப்பதை அறிந்ததும், அதை ஏற்க மறுக்கும் ஒரு மஹாவீரன் தோன்றுகிறான். தவிர, பெண்களை எதிர்க்க இஷ்டமில்லாத ஒரு பெருந்தகை தோன்றுகிறான் ….” என்று சொல்லிக் கொண்டு போனவனைச் சமுத்திர குப்தன் தடுக்க முயல, தனது கையின் சைகை யால், சக்கரவர்த்தியை இடைப்புக வேண்டாமென்று தடுத்த துறவி மேலும் சொன்னான்: “சக்கரவர்த்தி! என் ஊகம் சரியானால் தன்மீது குறுவாள் வீசிக் கொல்ல முயன்ற பலபத்ரனை உடன் அழைத்துக்கொண்டு வருவார் விஷ்ணுகோப மகாராஜா. அப்படி வரும்போது மாதவியைத் தளபதியாக நியமித்து விட்டு வருவார், காஞ்சியைக் காக்க. தான் அழிந்தாலும் காஞ்சி அழியாது, அதன் கலை அழியாது, அதில் துலங்கும் நான்கு மதங்கள் அழியா என்பது மகாராஜாவுக்குத் தெரியும். மாதவி படைகளை அழைத்துக் கொண்டு வந்தால், மஹாவீரரான தாங்கள் வாளை உறையிலிருந்து எடுக்க மாட்டீர்களென்பது காஞ்சி மகாராஜாவுக்கு மிக நன்றாகத் தெரியும்.” 

இதைக் கேட்ட சமுத்திர குப்தன் விழிகளில் ஒரு புத்தொளி பிறந்து மறைந்தது. “நல்லது நல்லது” என்று சொற்கள் சக்கரவர்த்தியின் இதழ்களிலிருந்து உதிர்ந்தன.. 

“என்ன சக்கரவர்த்தி!” என்றான் துறவி. 

“இந்தப் போருக்கு முடிவுகட்டும் திட்டம்” என்றான் சமுத்திர குப்தன். 

“திட்டத்தை நான் அறியலாமா?” என்று துறவி வினவினான். 

“துறவி இப்படி அருகில் வா” என்று அழைத்தான் சமுத்திர குப்தன். துறவி அருகில் வந்ததும், அவன் காதில் ஏதோ முணுமுணுத்தான் பல விநாடிகள். ‘“இது பேராபத்து!” என்று கூவினான் துறவி, உணர்ச்சி நிரம்பிய குரலில். 

“ஆபத்தைக் கண்டு அஞ்சுபவனல்லன் இந்த குப்தன்” என்று கூறிக்கொண்டு எழுந்திருந்த சக்கரவர்த்தி, மீண்டும் துறவியின் தோளின் மீது கையைப் போட்டுக் கொண்டு நடக்கலானான். சக்கரவர்த்தியின் தீர்க்க தரிசனத்தில் மனத்தைப் பறிகொடுத்த துறவி, மௌனமாகவே அவனுடன் நடந்தான், எண்ணங்கள் பல உள்ளத்தை உலுக்க. 


32. மந்திராலோசனை 

எங்கிருந்தோ வந்து திடீரெனச் சக்கரவர்த்தியின் பாசறையில் மூன்று நாட்களுக்கு மேல் தங்கியதன்றி, அவரது அந்தரங்க நண்பனாகவும் மாறிவிட்ட வாலிபத் துறவியைக் கண்ட குப்த ராஜ்யப் படைத்தலைவர்கள் வியந்து விட்டார்களா, பயந்து விட்டார்களா என்ற இரண்டுங்கெட்டான் நிலையில், சக்கரவர்த்தி தங்களைத் திடீரென ஆலோசனைக் கழைத்த அந்த ஆலோசனையில் பூனைபோல் அமர்ந்திருந்த துறவி அடிக்கடி தலையை ஆட்டி சக்கரவர்த்தி சொன்னதை ஆமோதித்ததும் பெரும் எரிச்சலாயிருந்தது, பல போர்களில் தங்கள் பலத்தையும், ராஜ பக்தியையும் நிரூபித்திருந்த படைத்தலைவர்களுக்கு. 

தோப்பில் துறவியும் சக்கரவர்த்தியும் நுழைந்து நீண்ட நேரம் வெளிவராதிருந்ததைக் கவனித்திருந்த படைத் தலைவர்களுக்கு மறுநாள் நடந்த மந்திராலோசனை பெரும் குழப்பத்தை அளித்தது. தவிர, துறவி,குப்த சக்கரவர்த் திக்கு ஏதோ சொக்குப் பொடி போட்டு விட்டானென்ற தீர் மானத்தை அளித்தது. இத்தனைக்கும் சக்கரவர்த்தி சர்வ சாதாரணமாகவே மந்திராலோசனையைத் தொடங்கினான். “பல்லவ காஞ்சியை வெற்றி கொண்டுவிட்டதும் நமது பாரத வெற்றி, பூர்த்தியாகிறது” என்று பூர்வ பீடிகை போட்ட சக்கரவர்த்தி, “அதை முதலில் கஷ்டமென்று எண்ணினேன். அப்படி ஒன்றும் கஷ்டமல்ல என்பது இப்போது தெரிகிறது’ என்று சொல்லித் துறவி மீது கண்ணைத் திருப்பினான். துறவி தலையை ஆட்டினான், ஆமோதிப்பதற்கு அறிகுறியாக. 

படைத்தலைவர்களில் சிறிது முதிர்ந்தவராகக் காணப் பட்டவரும், இருப்பினும் உடற்கட்டும் உறுதியும் தளாராத வருமான ஒருவர் எழுந்திருந்தார் ஆசனத்தை விட்டு. “இத்தனை நாள் கடினமாயிருந்தது இப்பொழுது எப்படிச் சுலபமாயிற்று?” என்று வினவினார். 

சக்கரவர்த்தி இதைக் கேட்டதும் பெரியவரைப் பார்த்தார், அன்பு ததும்பும் கண்களுடன். “முன்பு தெரியாத பல உண்மைகள் இப்பொழுது தெரிந்திருக்கின்றன” என்ற சக்கரவர்த்தி, துறவியையும் நோக்கினான். துறவி திரும்பவும் தலையை ஆட்டினான், ஆமோதிப்பதற்கு அறிகுறியாக. 

“அந்த உண்மைகளைக் கொண்டுவந்தவர் இந்தத் துறவி போலிருக்கிறது” என்று சற்று உஷ்ணத்துடன் கேட்டான் நடுத்தர வயதுள்ள இன்னொரு படைத்தலைவன். 

சற்று துடிப்புள்ள ஒரு வாலிபப் படைத் தலைவன் எழுந் திருந்து, “இந்தத் துறவியை எத்தனை தூரம் நம்பலாம்?” என்று வினவினான். 

சக்கரவர்த்தியின் அருட் கண்கள் அந்த வாலிபனின் துடிப்பான பேச்சை ரசித்தன. அந்த ரசனையுடன் வெளி வந்தது பதிலும்.’என்னை நம்புமளவுக்கு இவரை நம்ப லாம்’ என்ற மன்னன் சொல் மேற்கொண்டு ஆட்சேபணை களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. 

சமுத்திர குப்தன் தொடர்ந்தான்: 

தொடர்ந்தான்: “இப்பொழுது நமக்குப் புலனாகிறது, காஞ்சி நாம் நினைத்தது போல் அத்தனை பலமுள்ளது அல்ல என்பது. தவிர, காஞ்சிக்குள் நம்மை வரவேற்க நமது நண்பர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது” என்று சொல்லித் துறவியைப் பார்த்தான். துறவி இருமுறை தலையாட்டினான், சக்கர வர்த்தி சொன்னதை ஆமோதித்து. 

சக்கரவர்த்தி மேலும் சொன்னான்: “விஷ்ணுகோபன் இரு தாசிகளுடன் வசிக்கிறான். இதனால் மக்கள் விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். அதனால் தான் காஞ்சியில் இருந்து அதைக் காப்பாற்றாமல் சமவெளிப் போருக்கு வந்திருக்கிறான். தனக்கு உதவ, மற்றும் ஐந்து மன்னர்களையும் அழைத்திருக்கிறான்.” 

இதைச் சக்கரவர்த்தி சொல்லுகையில் துறவி திரும்பத் திரும்பப் பெருமாள் மாடு மாதிரித் தலையை ஆட்டினான். அதனால் மற்ற படைத்தலைவர்கள் எரிச்சல் கொண்டதைக் கவனித்த சமூத்திர குப்தன் புன்முறுவல் கொண்டான். பிறகு முதிய படைத்தலைவரை நோக்கி, “மற்ற ஐந்து முன்னர்கள் படை இன்னும் ஒருவார காலத்திற்குள் பல்லவர் படையுடன் சேரலாம்’ என்றான். 

“அப்படியானால் பல்லவனை உடனே தாக்கினால் என்ன?” என்று கேட்டார் பெரிய படைத் தலைவர். 

‘சில சங்கடங்கள் இருக்கின்றன” என்றார் சக்கரவர்த்தி. 

இதுவரை தலையாட்டிப் பொம்மையாயிருந்த துறவி “விஷ்ணுகோபனை வைத்துக்கொண்டு நாம் காஞ்சியில் நுழைந்தால் மற்ற ஐந்து அரசர்களின் படைகளால் காஞ்சி சூழப்படும், அந்த முற்றுகை ஏற்பட்டால், குப்த ராஜ்யப் படை காஞ்சியிலிருந்து நகர நாளாகும். அடுத்து வரப் போவது மழைக்காலம்” என்றான். 

துறவி போர் ஆலோசனையில் கலந்து கொண்டது, மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லையென்றாலும், துறவி மேலும் சொன்னான்: “அப்படியில்லாமல் ஐந்து அரசர்களையும் நாம் இங்கே சந்தித்தாலும் வெற்றி பெறலாம். ஆனால் நமது படை அனாவசியமான சேதத்துக்கு உள்ளாகும்.”

முதிய படைத் தலைவரின் எரிச்சல் அதிகமாகியது. “உனக்கும் இந்தப் படைக்கும் என்ன சம்பந்தம்?” என்று விசாரித்தார். 

”சக்கரவர்த்திக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? சக்கரவர்த்தி என்னை ஏன் நேசிக்கிறார்?” என்று துறவி வினவினான். 

இந்தப் பதில் முதியவர் வாயையும் அடைத்துவிடவே சமுத்திர குப்தன் தனது திட்டத்தை விவரிக்க ஆரம்பித்தான்.”காஞ்சி இங்கிருந்து ஐந்து நாள் பயணத்திலிருக்கிறது. நான் இங்கிருந்து எதிரிகள் அறியாமல் நமது படையின் சிறு பகுதியொன்றை அழைத்துக்கொண்டு, மேற்குப் புறமாகச் சென்று, பிறகு தென்புறத்தில் இறங்கி, காஞ்சியை அடைவேன். இங்குள்ள பெரும் படையைக் காணும் எதிரிகள், நான் இங்கிருப்பதாக நினைப்பார்கள். ஆகையால் போர் விளையாது. இங்கு அவர்கள் போரைப் பற்றி நினைக்கு முன்பு நான் காஞ்சியைக் கைப்பற்றி விடுவேன். காஞ்சிக்குள்ளிருக்கும் நமது நண்பர்கள் சித்தமாயிருக்கிறார்கள் நம்மை வரவேற்க” என்று கூறினான் சமுத்திர குப்தன். 

சக்கரவர்த்தியின் போர் முறையைக் கேட்ட மற்ற படைத் தலைவர்கள் ஸ்தம்பித்தனர். “இப்படித் துரோகி களைக் கொண்டு சக்கரவர்த்தி நாடுகளைப் பிடித்ததில்லையே. இப்பொழுது முறை மாறுகிறதே” என்று முதியவர் கேட்டார். 

“காலத்துக்கும் இடத்துக்கும் தகுந்தபடி போர் முறைகளை, போர்த் தந்திரங்களைக் கையாள சாஸ்திரம் அனுமதிக்கிறது” என்று சமுத்திர குப்தன் கூறியதும் துறவியின் தலை பெரிதும் ஆடியது. 

முதிய படைத் தலைவர் பொறுமை அடியோடு குலைந்து போகவே, “சக்கரவர்த்தி! இந்தத் துறவி தலையாட்டம் நிற்காவிட்டால்….” என்று சீறினார். 

“தலையைக் கொய்து விடுவீர்” என்று வாசகத்தை முடித்த துறவி லேசாக நகைத்தான். 

முதியவர் கல்லாய்ச் சமைந்து உட்கார்ந்து விட்டார். சமுத்திர குப்தன் அவரை நோக்கி, “துறவி வெறும் வெகுளி. அவரை மன்னித்து விடுங்கள்” என்று துறவிக் காக மன்னிப்பு கேட்டுக் கொண்டான். 

முதியவர் மிகுந்த வெறுப்புடன் தலையை ஆட்டினார்; ”பெரியவரே! என் வியாதி உங்களையும் பிடித்துவிட்டது” என்றான் துறவி. 

“என்ன வியாதி?” என்று கேட்டார் முதியவர். 

”மன்னர் சொல்வதற்குத் தலையாட்டும் வியாதி” என்றான் துறவி. முதியவர் ஏதோ சொல்ல வாயைத் திறக்கு முன்பாக, “கவலை வேண்டாம். இன்றே நான் இந்த இடத்தை விட்டுச் செல்கிறேன்” என்றும் சொன்னான். 

”ஏன்?” இளம் படைத்தலைவன் கேட்டான், அவனுடைய இயற்கையான துடிப்புடன். 

காஞ்சியில் சக்கரவர்த்தியை வரவேற்க ஏற்பாடுகளைச் செய்ய” என்று பதில் சொன்னான் துறவி. 

இளம் படைத் தலைவன் பெரும் துணிவையும் துடிப்பை யும் காட்டினான். “பல்லவனைக் காட்டிக் கொடுக்கும் துரோகி நீதானா?” என்று. 

இதைக் கேட்டதும் துறவி சினத்தின் வசப்படுவா னென்றோ, கொந்தளித்து எழுவானென்றோ நினைத்திருந்த தால், ஏமாந்து போனார்கள். துறவி மகிழ்ச்சியுடன் சொன் னான்; “துரோகி என்று என்னைச் சொல்வதற்கில்லை” என்று. 

“ஏன் சொல்வதற்கில்லை?” இளம்படைத்தலைவன் மீண்டும் கேள்வியை வீசினான் சினத்துடன். 

துறவி அந்த வாலிபன்மீது கண்களைச் செலுத்தினான். அந்தக் கண்களில் நகைப்பும் விஷமமும் தாண்டவமாடின. “சக்கரவர்த்தி என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டு விட் டார். ஆகையால் அவர் விரோதிகள் எனக்கும் விரோதிகள். விரோதிகளை எதிர்ப்பது, பணிய வைப்பது துரோகச் செயலாகாது. அது எனது குப்த பக்தியைக் காட்டும்” என்ற துறவியின் சொற்களிலும் விஷமம் ஊடுருவி நின்றது. 

அத்துடன் சக்கரவர்த்தி மந்திராலோசனையை முடித்தான். “பெரியவரே! என்னுடன் ஆயிரம் வீரர்கள் கொண்ட சிறுபடை வரட்டும். அப்போதுதான் நான் முன்னே செல்வது தெரியாது. நான் இங்கிருந்து புறப்பட்ட மூன்றாவது நாள் நான் சொல்லும் மார்க்கத்தில் நமது பெரும்படை தொடரட்டும். துறவி! நீ இன்று புறப்பட்டு நம் திட்டப்படி உன் பணியைக் கவனி. காஞ்சி வாயிலில் நாம் சந்திப்போம்” என்று உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டு அத்துடன் மந்திராலோசனை கலைந்து விட்டதைக் குறிப்பிட மளனம் சாதித்தான். படைத் தலைவர்கள் ஒவ்வொருவ ராகப் பாசறையிலிருந்து வெளி யேறினார்கள். 

அவர்கள் சென்ற பின்பு சமுத்திர குப்தன் எழுந்திருந் தான். துறவியின் தோள்மீது கையை வைத்தான். “துறவி! புறப்படு! நாம்….” என்று கூறி உற்று நோக்கினான். 

“சத்திரத்தில் சந்திப்போம்” என்று கூறினான் துறவி. குப்தன் தலையை அசைத்தான். இன்பப் புன்முறுவலும் செய்தான். 


33. காஞ்சியின் நிலை 

பல நாட்களுக்குப் பிறகு சூரிய அஸ்தமன வேளையில் காஞ்சியின் வடக்குப்புற வாயிலுக்கு வந்த வாலிபத் துற விக்கு வாயிற் கதவுகள் தாமாகவே திறந்தாலும், அவன் உள்ளே நுழையாமல் புரவியில் அமர்ந்த வண்ணமே பக்கத் திலிருந்த சுவர்களை ஏறிட்டு நோக்கினான்.”இம்முறை காவலரைக் கெஞ்ச வேண்டியதில்லை. கயிறு பிடித்து மேலே ஏற வேண்டியதில்லை. எத்தனை சீக்கிரத்தில் மனிதனின் அந்தஸ்து மாறுகிறது?” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு, ஆதி நாள் அனுபவத்தை எண்ணிப் பார்த்தான் முகுந்தன். அந்த எண்ணத்துடன் தனது முகவாய்க்கட் டைத் தாடியையும் தடவிப்பார்த்து, “இது நன்றாக வளர்ந் திருக்கிறது. படிக்க வந்ததற்கு இதுதான் பலன்” என்று கூறிக் கொண்டு லேசாக நகைக்கவும் செய்தான். பிறகு புரவியை தட்டிவிட்டு நகருக்குள் நுழைந்தான். 

நகரில் காவல் ஏற்பாடுகள் பலமாயிருப்பதைத் தெருக் களில் சென்ற போதே கவனித்தான் துறவி. எங்கும் ஆயுத பாணிகளான வீரர்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். குடிகாரர்களோ, குற்றவாளிகளோ அவன் கண்ணில் மருந் துக்குக்கூடப் படவில்லை. இதெல்லாம் யார் ஏற்பாடா யிருக்க முடியும் என்பது அவனுக்கு தெரிந்தே யிருந்ததால் அதைப் பற்றி அதிக சிந்தனை செய்யாமல் மாதவியின் மாளிகையை நோக்கி புரவியைச் செலுத்தினான். மாதவி அங்கில்லையென்பதை அறிந்ததும் வேகவதியின் கரையை நாடிச் சென்றான். 

அங்கு ஒரு பாறையில் மாதவி உட்கார்ந்திருந்தாள், கையில் ஒரு விகசித்த தாமரை மலரை ஏந்தி. இரவு நெருங்கி விட்டதால் அந்தத் தாமரை தனது இதழ்களை மூட முயன்றும், மூட விடாமல் தனது விரல்களால் அதைப் பிரித்தே வைத்திருந்த மாதவி, “எனக்கு உறக்கம் வர வில்லை, நீ மட்டும் கண்ணை மூடுவானேன்? விழித்திரு என்று அம்மலரை அதட்டினாள். அவள் பின்னால் ஒரு புரவி சித்தமாயிருந்தது, பயணத்துக்குச் சேணமிட்டு. 

மாதவி உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து சற்று எட்டவே புரவியிலிருந்து இறங்கிய துறவி, மெள்ள அவளை அணுகினானென்றாலும் அவள் முகத்தைத் தூக்கவில்லை. சோகம் அவளை ஆட்கொண்டிருப்பதைச் சந்தேகமறப் புரிந்துகொண்ட வாலிபத் துறவி ஓசைப்படாமல் பூனை போல நடந்து அவளுக்குப் பக்கத்தில் நின்றான். “மாதவி!” என்று மெள்ள அழைக்கவும் செய்தான். 

அந்தக் குரலைக் கேட்டதும் மாதவி துணுக்குற்று முகத்தை நிமிர்த்தினாள் எதிரே யாருமில்லாததால். வெறும் பிரமை” என்று சற்று பலமாகவே சொல்லிக் கொண்டு தலையை மீண்டும் குனிய முற்பட்டாள்.குனிய முடியவில்லை. அவள் தலையை இரண்டு முரட்டுக் கைகள் பற்றி நின்றன. அவை அவள் இரு கன்னங்களிலும் இறங் கிக் கழுத்தையும் தடவின. இது பிரமையல்ல” என்ற சொற்களும் தொடர்ந்தன பின்புறமிருந்து. இதனால் வேகமாக எழுந்து திரும்பிய மாதவி மறுகணம் துறவியின் அணைப்பிலிருந்தாள். 

அந்த அணைப்பின் பலம், அதனால் ஏற்பட்ட இம்சை, இரண்டும் அமுதத்தை அள்ளித் தெளித்தன அவள் உடல் பூராவும்.போதாக்குறைக்கு அணைத்த கைகள் அகன்று அவள் உடல் முழுவதையும் ஆராயவும் தொடங்கியதால் மாதவி சொர்க்க நிலைக்குச் சென்றாள். ”இப்பொழுது புரி கிறது எனக்கு” என்றும் சொன்னாள், துறவியின் முகம் அவள் கழுத்தில் புதைந்தபோது. 

”என்ன புரிகிறது?” துறவி கேள்வியை அவள் கழுத் துக்கே வீசினான் உதடுகளை எடுக்காமலே. 

“நரகத்தின் பக்கத்தில்தான் சொர்க்கமிருக்கிறது என்பது” என்று முணுமுணுத்தாள் அவள். கழுத்தையும் நன்றாகத் திருப்பிக் கொடுத்தாள் அவன் உதடுகளுக்கு உதவியாக. 

கழுத்துப் பிரசாதத்தை அமுது செய்து கொண்டிருந்த துறவியார் கேட்டார், “அது எப்படித் தெரியும் உனக்கு” என்று. 

“சற்றுமுன்பு நரக வேதனையிலிருந்தேன்.”

“காரணம்?”

”எங்கிருந்தோ வந்த போலி சந்நியாசி என்னைத் தொட்டு ஓடிவிட்டான்”. 

“அப்படியா!” 

“ஆம், அதனால் நரகத்தில் வாசம் செய்தேன்.” 

“அடுத்து?” 

“அவன் பக்கத்திலிருப்பது தெரியாது. திடீரென்று சொர்க்கம் வந்தது” என்ற மாதவி, “ஆமாம், சொர்க்கம் பின்னால்தான் இருக்குமா?” என்று கேட்டாள். 

“சுகம் எப்பொழுதும் நம் அருகில் தானிருக்கிறது. நாம்தான் அதைத் திரும்பிப் பார்ப்பதில்லை” என்று கூறிய துறவி, மாதவியைத் தழுவிய வண்ணம் நடக்க முற்பட்டு, 

“வா! உன் மாளிகைக்குச் செல்வோம்” என்றான். 

“என்ன அவசரம்? இங்குதான் நிம்மதியாயிருக்கிறதே” என்றாள் மாதவி. 

“காஞ்சியில் நிம்மதி எந்த இடத்திலும் இல்லை. எதிரி படையெடுப்பை எதிர்பார்க்கும் நகரத்துக்கு நிம்மதி ஏது?” என்று வினவிய துறவி, அவளை அழைத்துக்கொண்டு மாளிகைக்கு வந்துசேர்ந்தான். அங்கு மாதவியின் அறைக்குள் சென்று பயணக் களைப்பால் அவள் பஞ்சணையில் படுத்துக் கொண்டான். அவன் சோர்வு அவன் முகத்தில் எழுதி ஒட்டியிருந்ததால் மீண்டும் சோகத்தின் உருவாகிவிட்ட மாதவி, “உணவு அருந்திய பிறகு படுக்கலாம்” என்றாள். 

“வேண்டாம் உணவு” என்றான் துறவி. 

“ஏன்?” 

“இன்று ஏகாதசி. எனக்கு உபவாசம்”.

“பட்டினிதானா இன்று?”

”இல்லை” 

“என்னதான் சாப்பிடுவீர்கள்?” 

“பழம், பால், இதுதான் துறவிகளின் ஆகாரம். இவற்றால்தான் துறவிகள் சாதாரண மனிதர்களைவிடம் புஷ்டியாயிருக்கிறார்கள்.”

மாதவி நகைத்தாள் துறவியை நோக்கி. “சரி கொண்டு வருகிறேன்” என்று திரும்பினாள் வெளியே செல்ல, 

“நில் அப்படியே” என்ற துறவியின் சொல் அவளை நிற்க வைத்தது. 

தலையை மட்டும் திருப்பிப் பார்த்தாள் மாதவி. பஞ்சணையில் மல்லாந்து கிடந்த துறவியைக் கேள்வி ஏதும் கேட்கவில்லை. உற்று மட்டும் பார்த்தாள் சில விநாடிகள். 

“நன்றாகத் திரும்பு” துறவியின் குரல் அதிகாரத்துடன் ஒலித்தது. 

திரும்பிய மாதவி புன்முறுவல் காட்டி, “நான் போகாமல் பழம், பால் எப்படிக் கொண்டு வரமுடியும்?” என்று வினவினாள். 

“கொண்டு வரவேண்டிய அவசியமில்லை. இப்படி வா” என்றான் துறவி. 

திரும்பிக் கட்டிலை நோக்கி நடந்த மாதவியை கட்டிலில் உட்காரும்படி கூறிய துறவி அவளுக்கு இடம் விட்டு நகர்ந்து படுத்தான். ஏதும் பேசாமல் மாதவி உட்கார்ந்தாள் பஞ்சணையில். துறவியின் கைகள் அவள் இடையைச் சுற்றின. அவன் மார்பு அவள் பின்னெழிலின் புடைப்புடன் இணைந்தது. 

”கதவு திறந்திருக்கிறது” என்று மெள்ளத் துறவிக்கு மட்டும் கேட்கும்படி பேசிய மாதவி மெள்ள எழுந்திருக்க முயன்றாள்,கதவை மூட. 

“கதவை மூடவேண்டாம். நான் சொல்கிற செய்தியைக் காதில் வாங்கிக்கொள். நான் எதிர்பாராத பதிலை மட்டும் சொல்” என்ற துறவி, “மாதவி! காஞ்சி எந்த நேரத்திலும் தாக்கப்படலாம். ஆகையால் நீ தயாராயிருக்க வேண்டும்” என்றான். 

“நானா?” என்று வியப்புடன் கேட்டாள் மாதவி. 

“ஆம், உன்னைத்தானே மன்னர் தளபதியாக நியமித்திருக்கிறார்?” என்று கேள்வியை வீசினான் துறவி.

“அது உங்களுக்கு எப்படித் தெரியும்?” 

“மன்னர் சொன்னார்.” 

“எங்கு?” 

‘‘பாசறையில்.’ 

“என்று?”

“இரண்டு நாட்களுக்கு முன்பு. நீ சென்று மாதவியை எச்சரிக்கை செய். சமுத்திர குப்தன் வேறு வழியில் காஞ்சியை அணுகப்போவதாகக் கேள்வி என்று சொன்னார். அதனால்தான் வந்தேன் இங்கு.”

மாதவி சிந்தித்தாள். “அப்படியானால் காஞ்சியின் ஆபத்து வலுக்கிறது. வேகமாகப் போர் அணுகுகிறது” என்றாள். 

“ஆம்” என்று துறவி குதூகலித்தான். 

“இதில் மகிழ்ச்சியென்ன வேண்டிக் கிடக்கிறது?” என்று மாதவி கேட்டாள். 

“சமுத்திர குப்தனுக்கு இங்கு பெருத்த ஏமாற்றம் காத்திருக்கிறது” என்றான் துறவி. 

“என்ன ஏமாற்றம்?” என்று கேட்டாள் மாதவி. 

“இங்கு போரை எதிர்பார்த்து வருகிறான் சமுத்திர குப்தன். ஆனால் இங்கு போர் நடக்காது” என்று துறவி மீண்டும் குதூகலித்தான். 

“ஏன் நடக்காது? பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலமாகச் செய்திருக்கிறேன். அவ்வளவு சுலபமாகச் காஞ்சியில் நுழைய முடியாது” என்றாள் மாதவி. 

“முடியும்” என்றான் துறவி திட்டமாக. 

“எப்படி முடியும்?” என்று மாதவி வினவினாள்.

“குப்த சக்கரவர்த்திக்குக் கதவுகளைத் திறக்கக் காஞ்சியில் துரோகிகள் இருக்கிறார்கள்” என்றான் துறவி. 

மாதவி சினம் கொண்டு எழுந்தாள். ”இங்கு யாரும் துரோகிகள் கிடையாது” என்றாள் மாதவி. 

“இருக்கிறார் ஒருவர்.”

“யாரவர்?’’ 

“நான்தான்”

மாதவி திகைத்து நின்றாள். “நீங்களா!” என்று வினவினாள். 

“ஆம் சக்கரவர்த்தி எனது நண்பர்”. 

“என்ன உளறுகிறீர்கள்” 

”உளறவில்லை. உண்மை நான்கு நாட்களில் தெரியும்” என்ற துறவி ஏதோ சைகை காட்ட அவள் குனிந்தாள் அவனை நோக்கி. 

“உன் காவலரை அழைத்து என்னைச் சிறையில் தள்ளி விடு” என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி பேசினான் துறவி. 

மாதவியின் கண்கள் கேள்வியைத் தொடுத்தன. ”கேட்காதே! சொன்னபடிசெய்” என்றான் துறவி. 

அடுத்த வினாடி மாதவி இரு கைகளையும் தட்டினாள்; வந்த காவலரைநோக்கி, “இந்தத் துரோகியைச் சிறையில் தள்ளி விடுங்கள்” என்றாள். 

காவலரால் பலமாக இழுத்துச் செல்லப்பட்டான் துறவி. போகும் முன்பு, “நாளை சிறையில் சந்திப்போம்” என்றான் நகைத்து. 

“நாளைக்கு உன்னைச் சந்திக்கமாட்டேன்; தூக்கில் போட்டு விடுகிறேன்” என்று சீறிய மாதவி, “சரி இவனைக் கொண்டு செல்லுங்கள்” என்று உத்தரவிட்டாள் காவலருக்கு. 

துறவியார் காவலாளிக்கு அதிகச் சிரமம் வைக்காமல் நடந்து சென்றார். சிறையை அடைந்ததும் அங்கிருந்த கட்டிலில் நிம்மதியாகப் படுத்து உறங்கினார். 

நள்ளிரவு வந்தது. முக்காடிட்ட உருவம் ஒன்று சிறைக் கதவைத் திறந்துகொண்டு அவனிருந்த சிறை அறையில் நுழைந்தது. மெள்ளக் கட்டிலை அணுகிக் குனிந்து “சமுத்திர குப்தன் எங்கிருக்கிறான்?” என்று வினவியது. “வடகிழக்குச் சத்திரத்தில்” என்றான் துறவி ரகசியமாக. 

“போதிய படைவருகிறதா?”

“வருகிறது.”

“சரி; நீ போய் அவனை அழைத்து வா”. 

“காஞ்சியின் பாதுகாப்பு?” 

“மேல் பூச்சு. நகரம் அவர் கைகளில் விழத் தயாராயிருக்கிறது” என்று சொன்ன அந்த முக்காடிட்ட உருவம், “உன் புரவி எதிர்க் காட்டில் இருக்கிறது” என்று கூறி விட்டுச் சென்றது. 

அந்த உருவம் சென்றதும் மெல்ல நகைத்தான் துறவி. பிறகு எழுந்துகொண்டு எதிரேயிருந்த காட்டை நோக்கிச் சென்றான். சிறைக்காவலர் யாரும் அவனைத் தடுக்க வில்லை. 


34. மாதவி தொடுத்த போர் 

சிறைச்சாலைக்கு எதிரே இருந்த காட்டில் நுழைந்த துறவி, அங்கு தனக்கு ஒரு புரவி தயாராகச் சேணமிட்டு மரத்தில் கட்டியிருந்ததைப் பார்த்ததும் மகிழ்ச்சி வசப்பட்டு, மிகுந்த குதூகலத்துடன் அதன்மீது தாவி ஏறி வடபெரும் வாசலுக்கு வந்தான். அங்கு தனக்காகக் காத்திருந்த உபதளபதியைக் கண்டு, “இந்த நேரத்தில் நீங்கள் எதற்காக இங்கு காத்திருக்கிறீர்கள்?” என்று வினவினான். வடகிழக்குச் சாலைச் சத்திரத்தின் அதிபதியாயிருந்து, சமுத்திர குப்தனால் உபதளபதி ஆக்கப்பட்ட அந்த மனிதன், “காரணம் தங்களுக்கே தெரியும்” என்றான். 

“எனக்குப் புத்தி வரவர மந்தமாகிறது. விஷயத்தை விளக்கிச் சொல்லும்” என்றான் துறவி. 

“உமக்கு இந்தக் கதவுகளைத் திறந்துவிட” என்றான் புது உபதளபதி. 

“கதவைத் திறக்க எனக்கே அதிகாரமுண்டு” என்றான் துறவி. 

“இருந்தது.” அந்த மனிதனின் குரலில் ஏளனம் இருந்தது. 

“இப்பொழுது?” துறவி கேட்டான் சந்தேகக் குரலில், “இல்லை. நேற்று உங்களைச் சிறை செய்ததும் யாரும் இந்த நகரத்தைவிட்டு வெளியேறக் கூடாதெனத் தளபதி உத்தரவு அனுப்பிவிட்டார்கள் நான்கு வாயில்களுக்கும்.”

”யார் மாதவியா?” 

“தளபதியாரைப் பெயர் சொல்லி அழைப்பது குற்றம்”. 

இதைக் கேட்ட துறவி புன்முறுவல் கொண்டு, “உபதளபதி! கதவைத் திறவுங்கள். நான் மீண்டும் வருகிறேன் குப்த சக்கரவர்த்தியுடன். அப்பொழுது இவளைக் கவனித்துக் கொள்கிறேன்” என்று உஷ்ணத்துடன் கூறினான். 

அடுத்த விநாடி உபதளபதி கை காட்ட கதவுகள் திறந்தன. போகு முன்பு துறவி கேட்டான்: “உபதளபதி, இந்தப் பிரதான வாயிலைப் பாதுகாக்கும் பொறுப்பு உம் முடையதா?” என்று. 

”ஆமாம்.” புன்முறுவல் செய்தான் பழைய சத்திரக்காரன். 

“பாலுக்குப் பூனையைக் காவல் வைத்திருக்கிறார்கள்” என்றான் துறவி நகைத்து. 

“நான் பூனையல்ல”. 

“புலியா?’” 

“ஆம்.” 

”புலியாரே! நாம் மீண்டும் சந்திப்போம்” என்று சொல்லிவிட்டு, துறவி திறக்கப்பட்ட கதவுகளின் மூலம் வெளியே சென்றான். சத்திரக்காரன் அவன் போவதைப் யார்த்துக் கொண்டிருந்தான், நீண்ட நேரம். ‘நான்தான் விஷ்ணுகோபனுக்குத் துரோகியென்று நினைத்தேன். இவன் பரம துரோகியாயிருக்கிறான். இவனை எப்படி அர சன் நம்பினான்?” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டு கதவுகளை மூடச் சைகை காட்டினான். 

இந்தச் சம்பவம் நடந்த மறுநாள் சமுத்திர குப்தன் தனது படைபிடன் காஞ்சிக்கு அருகில் வந்துவிட்டதாகவும் அவனுக்குப் பின்புறத்தில் விஷ்ணுகோபன் படையும் வருவ தாகவும் மாதவிக்குச் செய்தி கிடைக்கவே, மாதவி காஞ்சி யின் பாதுகாப் பைத் திடப்படுத்தினாள். அவளே புரவியில் பூரண கவசமணிந்து நான்கு வாசல்களுக்கும் சென்று பாது காப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்டாள். பலவீனமான இடங்களைப் பலப்படுத்தினாள். காஞ்சியின் மதில்கள் மீதி ருந்த விற்பொறிகளையும் வேல்பொறிகளையும் பார்வையிட்டாள். ஆங்காங்கிருந்த வேலெறிவோரையும் வில்லவரை யும் எச்சரித்தாள். அன்றிரவு நேரம் கழித்து வந்த மாதவியைத் தேவகி கேட்டாள். “உனக்குப் போர்ப் பயிற்சி எதுவும் கிடையாது. நீ காஞ்சியைக் காத்துவிட முடியுமா?” என்று. 

”அக்கா! போர்ப் பயிற்சியுள்ள வீரர்கள் காஞ்சியி லிருக்கிறார்கள்”. 

“அவர்களை நடத்த.”

“நானிருக்கிறேன்”.

“நானில்லையா?” என்று கேட்டுக் கொண்டே மஹாயனர் உள்ளே நுழைந்தார். 

இரு பெண்களும் அவர் வந்தவுடன் எழுந்து நின்று வணங்கினார்கள். “மாதவி! நீ பெண். போர்களைத் தாங்க உன்னால் முடியாது. நான் பார்த்துக் கொள்கிறேன் காஞ்சியை. நீ சிரமப்படாதே” என்று தைரியம் கூறினார். 

”சுவாமி! நீங்கள் துறவி. அதுவும் சமணத் துறவி. போர்களை நீங்கள் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?” என்று வினவினாள் மாதவி. 

“நாம் ஒப்புக்கொண்டா போர் வருகிறது? போர் வந்த பின்பு இந்நகரத்தைக் காப்பது ஒவ்வொரு பிரஜையின் கடமை. நானும் ஒரு பிரஜை அல்லவா?’ என்று வின வினார். 

”ஆம் சுவாமி” என்றாள் மாதவி. 

“ஆகையால் நான்கு வாயில்களையும் சுற்றி வந்தேன். வடக்கு வாசலைக் காக்க இப்பொழுதுள்ள உபதளபதியுடன் வீரபத்ரப்பெருமாளையும் நியமித்து வந்திருக்கிறேன்” என்றார் குருநாதர். 

“தங்கள் அருளுக்கு நாங்கள் என்ன கைமாறு செய்யப் போகிறோம். தங்கள் தவத்தின் பயன் இந்தக் காஞ்சியும் பல்லவர் குலமும் பிழைக்க வேண்டும்” என்ற மாதவி அவரை வணங்கினாள். தேவகியும் வணங்கினாள். 

மஹாயனர் அவ்விருவரையும் ஆசீர்வதித்துச் சென்றார். செல்லும் முன்பு “குப்த சக்கரவர்வர்த்தி காஞ்சிக்கு அருகில் வந்துவிட்டதாகக் கேள்வி. இந்தச் சமயத்தில் சமுத்திர குப்தன் பாசறையில் என்ன செய்கிறான்?” என்று வினவினார். 

“தெரியவில்லை” என்றாள் மாதவி. 

அத்துடன் திருப்தியுடன் தலையை ஆட்டிவிட்டுச் சென்றார் மஹாயனர். 

அதே சமயத்தில் குப்தனின் ஆயிரம் பேர்கொண்ட சிறுபடை வடக்கிழக்குச் சாலையிலிருந்த சத்திரத்தை அடுத்து நின்றது. குப்த சக்கரவர்த்தியும் துறவியும் மிக்கமகிழ்ச்சியுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள் சத்திரத் துக்குள். 

சத்திரத்தின் முற்றத்துத் தரையில் சாதாரண வீரன் போல் படுத்துக் கிடந்தான் குப்த சக்கரவர்த்தி. அவன் பக் கத்தில் உட்கார்ந்திருந்த துறவி, ‘நாளை இதே நேரத்தில் காஞ்சி தங்கள் கையிலிருக்கும்” என்று கூறினான். 

“காஞ்சியைக் கைப்பற்றுவது அவ்வளவு திருப்தியா யில்லை எனக்கு” என்றார் சக்கரவர்த்தி. 

“அதுவாக அழைக்கும்போது தாங்கள் எப்படி மறுக்க முடியும்?” என்று துறவி கேட்டான். 

“உன்னைப் போன்ற ஒரு துரோகியை நான் பார்த்ததில்லை இதுவரையில்” என்று கூறிய சமுத்திர குப்தன் நகைத்தான் பெரிதாக. 

“அந்த வாய்ப்பைப் பல்லவ ராஜ்யம் உங்களுக்கு அளிக்கிறது” என்றான் துறவி. 

“எந்த வாய்ப்பை?” குப்தனின் கண்களில் சிரிப்பு விரிந்தது. 

“இணையற்ற ஒரு துரோகியைப் பார்க்கும் வாய்ப்பை” என்றான் துறவி. 

“எப்பொழுது நாம் புறப்படலாம்?” என்று குப்த சக்கரவர்த்தி வினவினார். 

“நாளை விடியற்காலையில்” என்றான் துறவி. புரிந்த தற்கு அறிகுறியாகத் தலையசைத்தான் குப்த சக்கரவர்த்தி. 

மறுநாள் பொழுது விடிவதற்கு முன்பே குப்த சக்கர வர்த்தியின் சிறுபடை புறப்பட்டு பிற்பகலில் காஞ்சியின் வடக்குச் சாலையை அடைந்தது. ஆயிரம் வீரர்கள் அணி வகுத்துப் பின்னால் வர, வீரத்தின் இலக்கணம் போல், தலையில் கிரேக்கர்களைப் போல் இரும்பு மகுடம் சூடி, மார்பை இரும்புக் கவசம் மறைக்க, இடையிலிருந்த பெரிய வாள் புரவியின் பக்கவாட்டைத் தடவ விரைத்து உட்கார்ந்திருந்த குப்த சக்கரவர்த்தியை வாசலின் மேல் தளத்திலிருந்து கவனித்த மாதவி, ‘சக்கரவர்த்தி மகாவீரர் சந்தேகமில்லை என்று மனத்துக்குள் சொல்லிக் கொண்டாள். 

சக்கரவர்த்தியைப் பற்றித் தான் சிந்தித்த சில நிமிடங்களில், அவர் வீரர்கள் லேசாகப் பிரிந்து கைகளில் பெரிய ஈட்டிகளுடன் விற்பொறிகளையும் வேற்பொறிகளையும் நோக்கிக் கொண்டு நின்றுவிட்டதைக் கவனிக்க மாதவி சக்கரவர்த்தி கையை அசைத்தால் தனது விற்பொறிகளும் வேல் வீசும் இயந்திரங்களும் விநாடி நேரத்தில் செயலற்றுப் போய்விடும் என்பதைப் புரிந்துகொண்டாள். அச்சமயம் வீரனொருவன் வந்து அவள் காதில் ஏதோ சொல்ல அவள் முகத்தில் பெருமகிழ்ச்சி தாண்டவமாடியது. அதனால் குப்த சக்கரவர்த்தியை நோக்கிப் பேச முற்பட் டாள், மதில் மீதிருந்து. அவள் பேசும் முன்பு மதில் மீதிருந்த முரசு ஒரு முறை மடமடவென சப்தித்தது, சம்பிரதாயப்படி. அதைத் தொடர்ந்து மாதவி பேசினாள் இரைந்து. “குப்த வம்ச திலகமே! தாங்கள் பெரும்போர் களில் வெற்றி கண்டவர்கள். ஆனால் காஞ்சியை வெற்றி கொள்ள முடியாது. அதுவும் ஆயிரம் வீரர்களைக் கொண்டு இம்மாநகரைக் கைக்கொள்வது வீண்பிரமை. ஆகையால் திரும்பிவிடுங்கள். உங்கள் மார்பில் கவசமிருப்பதால் எனது வில்லவரை உங்கள் கழுத்துக்குக் குறி வைக்க உத்தர விட்டிருக்கிறேன்” என்றாள். 

அவள் குரலையும் தோரணையையும் கண்ட குப்த சக்கர வர்த்தி, சற்று எட்ட பூரண கவசமணிந்து நின்ற துறவியை அருகில் அழைத்தார். துறவி அருகில் வந்ததும், “பெண்ணே! இதோ பார் உன் காதலன். இவனை இந்த நிமிஷமே நான் கொல்ல முடியும்” என்று துறவியைச் சுட்டிக் காட்டினார் சக்கரவர்த்தி. 

மாதவி நகைத்தாள் பெரிதாக.”ஒரு நாளும் அவரை நீங்கள் கொல்ல மாட்டீர்கள். கொன்றால் மகாவீரரனான சமுத்திர குப்தன் ஒரு பெண்ணின் காதலனைக் காட்டி மிரட்டிக் காஞ்சியைக் கைப்பற்றினான் என்ற சாசுவதமான அவப்பெயர் சரித்திரத்தில் நிலைக்கும்” என்றாள் நகைப்பின் ஊடே. திடீரென அவள் தொண்டையைத் துக்கம் அடைத் துக் கொண்டது. “நாட்டுத் துரோகியை எந்தப் பெண்ணும் கணவனாக ஏற்றுக் கொள்ளமாட்டாள்” என்று கூறிய மாதவி “தலையைத் துக்கத்தால் தாழ்த்திக் கொண்டாள். பிறகு சட்டென்று நிமிர்ந்து, “சக்கரவர்த்தி! இனி என்ன போரா? சமாதானமா? திரும்பிச் செல்கிறீர்களா, அல்லது விற்களை இயக்கட்டுமா?” என்று வினவினாள். 

அந்தச் சமயத்தில்தான் அந்த எதிர்பாராத நிகழ்ச்சி நடந்தது. வடக்கு வாசல் கதவுகள் திடீரெனத் திறக்கப் பட்டன. போர் முரசுக்குப் பதில் மங்கள வாத்தியங்கள் முழங்கின. “குப்த சக்கரவர்த்தி வருக! காஞ்சியின் வெற்றி வீரரே வருக!” என்ற கோஷம் வானைப் பிளந்தது. மாதவி அதிர்ச்சியடைந்தாள். வில் வீரர்களை நோக்கி, “உம் ஆகட்டும்! இயக்குங்கள் பொறிகளை” என்று பெரும் குரலில் உத்தரவிட்டாள். அதே சமயத்தில் வேற்கூடங்களுக்குத் திரும்பி, “கதவைத் திறந்த துரோகிகளை அழித்து விடுங்கள்” என்றாள். பெரும் அழிவு நெருங்க முற்பட்டது. வேல்கள் பாய்ந்தன கதவைத் திறந்த கூட்டத்தின் மீது. 

விற்பொறிகள் இயங்கியதால் அம்புகள் பறந்தன சமுத்திர குப்தனின் வீரர்கள்மீது. குப்த சக்கரவர்த்தியின் கழுத்தை நோக்கியும் பறந்தது ஒரு வாளி. 

இத்தனைக்கும் அசையாமல் குப்த சக்கரவர்த்தி தனது புரவிமீது அமர்ந்திருந்தான். 


35. தொலைந்த துறவறம் 

விற்பொறிகளையும் வேற்பொறிகளையும் இயக்கி மாதவி போரைத் துவங்கிவிட்ட பிறகும், குப்த சக்கரவர்த்தி சிறிதும் அசையாமலும், தமது வாளை உருவாமலும், தமது படை வீரருக்கு எந்தவிதச் சைகையும் செய்யாமலும், விரைத்துப் புரவிமீது உட்கார்ந்திருந்தார். தன்மீது பாய்ந்து வந்த ஒரு வாளியைக்கூட தமது முன் கைகளைப் பாது காத்திருந்த இரும்புக் கவசமொன்றால் அனாயாசமாகத் தட்டி அப்புறம் தள்ளினார். சக்கரவர்த்தியின் போக்கு அவர் வீரர்களுக்கும் புரிந்திருக்க வேண்டும். அல்லது உத்தரவு கள் ஏற்கனவே பிறப்பித்திருக்கப் படவேண்டும். கோட்டை மீதிருந்து பறந்து வந்த அம்புகளையும் வேல்களையும் ஏதோ விசையால் இயக்கப்பட்ட யந்திரங்கள் போலச் சக்கரவர்த்தி யின் பிரிந்து நின்ற படைப் பிரிவுகள் மூன்றும் கேடயங் களால் தடுத்துவிட்டன. அந்தச் சமயத்தில் வாயிற் கதவு கள் வேகமாகத் திறந்து மங்கள வாத்தியங்கள் முழங்கிய தால் கவனத்தைக் கதவில் திருப்பிவிட்ட மாதவி, வீர பத்திரப் பெருமாள் தலைமையில் அங்கு வந்த துரோகி களைக் கொல்ல உத்தரவு பிறப்பித்த உடனேயே அங்கு வீசப்பட்ட வேல்கள் பலரின் உயிரைக் குடிக்கவே, அந்த வீரர்கள் பலமாக அலறி விழுந்த கூச்சல் நாசத்தின் அவலக் கூச்சலாகத் தெரிந்ததேயொழிய போர் வீரர்களின் வீர மரணக் கூச்சலாகத் தெரியவில்லை. ஓரளவு காரணத்தைப் புரிந்து கொண்டாள் மாதவி. கோட்டை வாயில் பாதுகாப்பாளர்கள் முந்திய இரவில் தனக்கும் தெரி யாமல் மாற்றப்பட்டிருக்கவேண்டுமென்பதும், மாற்றப் பட்டவர்கள் சிறைச்சாலைக் குற்றவாளியாக இருந்து படை யில் சேர்க்கப்பட்ட, போர் அனுபவமற்ற வீரர்களே என் பதும் தெரிந்ததால். அவள் முகம் உள்ளே கொதித்த கோபத்தின் விளைவாகப் பெரிதும் சூரிய வெளிச்சத்தில் பள பளத்தது. அப்பொழுது தனது அருகிலிருந்த வில்லவரை யும் வேல் வீசும் வீரர்களையும் மேற்கொண்டு பொறிகளை இயக்க வேண்டாமென்று தடுத்துவிட்டுச் சக்கரவர்த்தியை நோக்கி ‘“சக்கரவர்த்தி இனி நீங்கள் உட்புகலாம். கதவு திறந்து விட்டது. மங்கள வாத்தியங்கள் முழங்கிவிட்டன. இங்குள்ள உங்கள் சதிகாரர்கள் சம்பாதித்துக்கொடுத்த வெற்றியை நீங்கள் அனுபவிக்கலாம்” என்று இரைந்தாள் மாதவி.கோட்டை மதில்மீதிருந்து, “ஏன் உங்கள் வீரர் களை விட்டு என்மீதும் வேலை வீசி உங்கள் போரை முடித் துக் கொள்ளலாமே” என்றும் சொல்லி நகைத்தாள். 

அப்பொழுது மாலை அணுகிவிட்ட நேரம். அந்திக் கதிரவன் பொற்கிரணம் மாதவியின் அழகிய வதனத்தைப் பொன்மயமாக அடித்திருந்தது. கோபத்தில் ஏற்கனவே சிவந்துவிட்ட அந்த முகத்துக்கு அதிகப் பொலிவையும் சிவப்பையும் அளித்தான் மாலைச் சூரியன். அவள் அழகை யும் வீரதோரணையையும் பருகிக்கொண்டு தனது புரவி மீது அமர்ந்திருந்த குப்த சக்கரவர்த்தி பக்கத்திலிருந்த துறவிக்கு மட்டும் கேட்கும்படி தலையை இப்புறமோ அப்புறமோ திருப்பாமல் சொன்னான்: ”துறவி; பிடித்தா லும் பிடித்தாய் புளியங்கிளையாகத்தான் பிடித்தாய். இவள் இஷ்டப்படி காஞ்சி இயங்குமானால் நூறு குப்த சக்கரவர்த்திகள் வந்தாலும் இந்தக் காஞ்சியைப் பிடிக்க முடியாது” என்று. 

அதை ஆமோதிக்கும் வகையில் துறவி தலையை அசைப் பதற்கும் மீண்டும் வடக்கு வாசலில் மங்கள வாத்தியம் முழங்குவதற்கும் சரியாயிருந்தது. இம்முறை மற்றொரு படை வெளியே வந்தது.பூர்ண ஆயுதமும் தரித்து, அதற் குத் தலைமை வகித்துப் புரவிமீது மஹாயனர் வந்தார். குப்த சக்கரவர்த்தியைக் கோபத்துடன் நோக்கிய மஹாயனர், தமது கையால் சைகை செய்ய அவர் பக்கத்தி லிருந்த முரசுகள் முழங்கின. அவை அடங்கியதும் பெரிய குரலில், சினம் மிகுந்த சொற்களை உதிர்த்தார் மஹாயனர். 

குப்த சக்கரவர்த்தி! உன் மூதாதைகள் மஹா வீரர்கள். பெரும் போர்க் களங்களில் வெற்றி வாகை சூடியவர்கள். ஒரு பெண்ணை எதிர்த்து ஒரு தலைநகரைப் பிடிக்க உனக்கு வெட்கமாயில்லை?’ என்று சீறினார். 

அப்பொழுதுதான் குப்த சக்கரவர்த்தி தனது படையி லிருந்து பிரிந்து தன் பாதுகாப்புக்கு வந்த காவலரையும் நிற்கச் சொல்லிவிட்டுத் தன்னந்தனியாக முன்னால் வந் தான். “மஹாயனரே! பெண் இங்கு தலைமை வகிப்பது யார் குற்றம்? பெண்ணை நகரத்துக்குக் காவல் வைக்கப் பல்லவ மன்னனுக்கு வெட்கம் கிடையாது, எனக்கு மட்டும் இருக்கவேண்டுமா? தவிர, பல்லவர் குருநாதரான நீர்தான் இதை எப்படி அனுமதித்தீர்?’ என்று வினவினான் பெருங் குரலில். அவன் குரலில் சிங்கத்தின் கர்ஜனை இருந்தது. கேள்வி திடமாகவும் பதட்டமற்றும் இருந்தது. 

“நான் துறவி. அதுவும் சமணத் துறவி, போர்களை விரும்புவதில்லை, அதனால் விஷ்ணுகோபன் செயல்களில் தலையிடவில்லை” என்றார் மஹாயனர் மிகக் கம்பீரமான குரலில். 

“அப்படியானால் இந்தப் போர்க்களத்துக்கு ஏன் வந்தீர்? துறவியான உமது வருகையைக் குறிக்க மங்கள வாத்தியங்கள் எதற்கு?” என்று கேட்டான் குப்த சக்கர வர்த்தி. 

தன் மீது வீசப்படும் வலையை உணராத மஹாயனர், “மங்கள வாத்தியம் எனக்கல்ல, உனக்கு” என்றார். 

“அப்படியானால் இந்த நகரத்துக்குள் துரோகிகள் இருக்கிறார்கள் என்று சொல்லும்” என்றான் குப்தன். 

அதுவரை பின்னடைந்து நின்ற துறவி, குப்த சக்கர வர்த்தியிடம் வந்து, “சக்கரவர்த்தி! துரோகிகள்” என்று பன்மையில் சொல்லாதீர்கள். கைப்பாவைகளைக் குற்றம் சொல்லி என்ன பயன்?” என்று வினவினான். 

குப்தன் முகத்தில் உணர்ச்சி ஏதுமில்லை “இந்தத் துறவி ஒரு துரோகி. இவனை என்ன செய்யலாம்?” என்று மஹாயனரைக் கேட்டான். 

மஹாயனர் முகத்தில் வெற்றிக்குறி தாண்டவ மாடியது. “இவனை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். சிறையில் தள்ளிக் கவனித்துக் கொள்கிறேன்” என்றார். 

அந்தச் சமயத்தில் துறவி தனது சொரூபத்தைக் காட்டினான். “நான் சீடன். என் குருநாதரை விட்டுப் பிரிய மாட்டேன்” என்றான். 

குப்த சக்கரவர்த்தியின் இதழ்களில் புன்முறுவல் அரும்பிற்று. சட்டென்று பின்புறம் திரும்பிப் பார்த்தான். நான்கு குப்த வீரர்கள் முன்னால் பாய்ந்து வந்தார்கள். சக்கரவர்த்தியின் புரவியையும் தாண்டி மஹாயனரிடம் சென்று நாற்புறமும் நின்றார்கள். தமது புரவிகளால் புரவியை இடித்து முன்னேற்றி குப்த சக்கரவர்த்தியின் அருகில் கொண்டு வந்தார்கள். 

குப்தன் மஹாயனரை ஆழ்ந்து நோக்கினான். “மஹாயனரே! எல்லாம் கற்ற நீர் ஒன்று கற்கவில்லை. துரோகிகளைக் கொண்டு எந்தக் குப்தனும் வெற்றியைச் சம்பாதித்த தில்லை. இதை உணர்ந்திருந்தால் காஞ்சியை – கலைகளின் இருப்பிடத்தை – நாசம் செய்ய ஏற்பாடு செய்திருக்க மாட்டீர். எந்த விஷ்ணுகோபனிடமிருந்து சமண மதத்தை ஏற்றீரோ அந்த விஷ்ணுகோபனை என்னிடம் காட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்திருக்க மாட்டீர்” என்ற குப்தன் வீரர்களை நோக்கி, “அழைத்துச் செல்லுங்கள்” என்றான். அடுத்த விநாடி மஹாயனர் குப்த வீரர்களின் பிடியிலிருந்தார். 

“குப்தா! உனக்காகத்தானே இத்தனையும் செய்தேன். சமணம் செழித்த வடநாட்டிலிருந்து உன்னை இதற்காகவா வரவழைத்தேன்? சமணம் விரியவும், நல்லுணர்வு தெற்கே .. பரவவும், காஞ்சி சமண சிற்பங்களுக்கும் ஓவியங்களுக்கும் இடமாகத் திகழவுந்தானே காஞ்சியின் கதவுகளைத் திறந்தேன்.குப்தா! நன்றி கெட்டவனே!” என்று கூவினார், பல ஆண்டுகளாகக் கடைபிடித்து வந்த நிதானத்தைக் காற்றில் பறக்கவிட்டு. 

குப்தன் சற்றே திரும்பி, “மஹாயனரே! மதங்கள் வெறியில் வளர்வதில்லை. துரோகத்திலும் வளர்வதில்லை. அன்பிலும் உறுதியிலும் வளர்கின்றன. பல பாடங்களைப் படித்த நீர் இதைப் படிக்காதது வருந்தத் தக்கது” என்று கூறிவிட்டு மதில் மீதிருந்த மாதவியை நோக்கி, “மாதவி! நீ நீ க்ஷத்திரியப் பெண் என்பதை நிரூபித்து விட்டாய். உன்னைப்போல் வீராங்கனைகள் எத்தனையோ பேர் இந்த நாட்டைக் காக்கச் சகல தியாகங்களையும் செய்திருக்கிறார்கள். மஹாயனர் துரோகத்தில் கதவுகள் இன்று திறக்காதிருந்தால் உன்னைப் போன்ற பெண்ணிடம் போரிடுவதைக் கௌரவமாக நினைத்திருப்பேன். பல போர்களில் எதிரிகளைப் புறங்கண்ட குப்தன், துரோகிகளால் பல்லவரை வென்றான் என்ற அவமதிப்பைப் பெற இஷ்டமில்லாததால் போரை நிறுத்தி விட்டேன். வருகிறேன்” என்று திரும்பியவன் மீண்டும்திரும்பி, “இந்தத் துறவியை உன்னிடம் ஒப்படைக்கிறேன். தகுந்த தண்டனையைக் கொடு” எனக் கூறினான் முகுந்தனை சுட்டிக்காட்டி. 

அப்பொழுது மீண்டும் வடக்கு வாசலில் புரவிக் கூட் டத்தின் காலடி ஓசை பலமாகக் கேட்டது. முரசுகள் பல மாக முழங்கின. சுமார் நூறுவீரர்கள் கூட்டத்தின் முன்னிலை யில் விஷ்ணுகோபன் வெளியே வந்தான். அவன் எந்த விதக் கவசத்தையும் அணியாமலும் முன்னறிவிப்புமின்றி யும் திடீரெனக் காட்சியளித்தபோது, 

“இன்னும் என்னென்ன விசித்திரங்கள் இந்தக் காஞ்சியில் இன்று நிகழப் போகின்றனவோ” என்று நினைத்த மாதவி கோட்டை மதிலின் மேல் செயலிழந்து நின்றாள். 

கோட்டையைவிட்டு வெளியே வந்த விஷ்ணுகோபன், குப்த சக்கரவர்த்தி முன்பு வந்தான், புரவியை நிதானமாக நடத்திக்கொண்டு, குப்த சக்கரவர்த்தி முன்பு தலையை லேசாக வணங்கினான். “காஞ்சிக்கு வரவேண்டும் குப்தர் கள் தலைவரே! உங்கள் வரவால் இந்த மாநகர் இன்று பெருமை பெற்றது” என்று அழைப்பு விடுத்தான். 

குப்த சக்கரவர்த்தியும் பதிலுக்கு தலைசாய்க்கவே இரு மன்னர்களும் காஞ்சிக்குள் நுழைந்தார்கள். அவர்களை வர வேற்க விஷ்ணுகோபன் வீரர்கள் சித்தமாயிருந்தார்கள். அப்பொழுது இருட்டும் நேரமாதலால் காஞ்சியின் விளக்கு கள் பெரிதாக எரிந்தன. வீரர்கள் வாட்களைத் தாழ்த்தி குப்த சக்கரவர்த்தியை வரவேற்றார்கள். குப்த வீரர்கள் ஆயிரம் பேரும் அவர்களிடையே சிறைப்பட்ட மஹாயனரும் பின் தொடரக் குப்த சக்கரவர்த்தி உலகத்தின் கலைக் களஞ்சியமான காஞ்சியின் பெரும் கோபுரங்களைப் பார்த்தும், ஆங்காங்கு கேட்பாரற்று நின்றிருந்த தனித் தூண்களின் சிற்பங்களை ரசித்துக்கொண்டும் விஷ்ணுகோபனுடன் சென்றான். மக்கள் மலர் தூவினர் சக்கரவர்த்தி மீது. 

இவையனைத்தையும் கவனித்துக் கொண்டு மதில் மீதிருந்த மாதவி சடசடவென இறங்கித் தனது புரவியில் தாவிப் பறந்து சென்றாள், தனது மாளிகையை நோக்கி. சக்கரவர்த்தி அங்கு வந்ததும் மாதவியும் தேவகியும் சக்கரவர்த்திக்கு ஆரத்தி எடுத்தார்கள். 

குப்தன் வியப்புடன் நோக்கினான் விஷ்ணுகோபனை. “மன்னவா! நான் காஞ்சியை வென்றுவிட்டது போலல்லவா வரவேற்பு நடக்கிறது?” என்று வினவினார். ‘ஆம், வென்றுதான் விட்டீர்கள். மக்கள் உடல்களை ஆயுதங்களால் சாய்த்து வெற்றி பெறவில்லை. தங்கள் பெருந்தன்மையால், அன்பினால் மக்கள் மனங்களை வெற்றி கொண்டீர்கள்” என்றான் விஷ்ணுகோபன். 

குப்தன் முகத்தில் முதன் முதலாக உணர்ச்சி புலனாயிற்று. “என்னை எதிரியின் நகரத்துக்குள் சிக்கவைத்து இந்தப் போலி வெற்றியைச் சம்பாதித்துக் கொடுத்த வருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?” என்று விசாரித்தான் மாளிகை வாசலில் நின்றபடியே. 

“எந்தத் தண்டனையை வேண்டுமானாலும் கொடுக்கலாம்” என்றான் விஷ்ணுகோபன் புன்முறுவல் செய்து. 

பின்னாலிருந்த துறவியை முன்னால் வரச் செய்த குப்தன், ”இவன் தான் சகலத்துக்கும் காரணம். இவன் அவ்வப்பொழுது ஓலைகளை எழுதியும், நடப்பதை அறிவித்தும் நேரிலேயே வந்தும் காஞ்சியைக் காப்பாற்றினான். மஹாயனர் அனுப்பிய ஓலைகளையெல்லாம் வழிமறித்துக் கைப்பற்றியதும் இவன்தான். உங்களையும் எங்களையும் ஒரே நாளில் காஞ்சிக்குள் வெவ்வேறு வாயிலுக்கு வரத் திட்டமிட்டவனும் இவன்தான். இவனை உங்களிடம் ஒப்படைத்து விடுகிறேன்…” என்று சற்று நிதானித்த சக்கரவர்த்தி, “உங்களுக்கு இந்தச் சிரமத்தை அளிப்பானேன்? உங்கள் படைத்தலைவரிடம் ஒப்படைத்து விடுகிறேனே” என்றான். 

விஷ்ணுகோபனும் மாதவியை நோக்கி, 

“இவனை உன்னிடம் குப்த சக்கரவர்த்தி ஒப்படைக்கிறார். சிறை செய்” என்றார். 

குப்த சக்கரவர்த்தி சொன்னார்: “இவன் சுத்தப் போலித்துறவி. மிகுந்த எச்சரிக்கையாயிரு, உறவாடிக் கெடுப்பவன். மஹாயனரையே ஏமாற்றியவன்” என்றார். மாதவியை நோக்கி. 

“இவன் வேஷத்தைக் கலைத்துவிடு முதலில்” என்றான் விஷ்ணுகோபன். 

துறவி தனது புரவியை முன்னால் நடத்தி தனது வாளை மாதவியிடம் நீட்டினான். அடுத்து இடையிலிருந்த நாகசர்ப்பத்தையும் நீட்டினான். இரண்டையும் வாங்கிக்கொண்ட மாதவி சட்டென்று திரும்பி உள்ளே ஓடினாள். 

குப்தன் அப்பொழுதே பயணமானான் தனது பாசறைக்கு. சிறைப்பட்ட மஹாயனரையும் உடன் அழைத்துச் சென்றான். விஷ்ணுகோபன் எத்தனையோ வேண்டியும் குப்தன் காஞ்சியில் தங்க சம்மதிக்கவில்லை. “மஹாயனரைக் கொண்டு பலபத்ரவர்மனையும் சிறை செய்து அழைத்துச் செல்கிறேன். பல்லவ மன்னரே! இனி நீங்கள் போரை மறந்து காஞ்சியின் கலையை வளர்க்கலாம். நிம்மதியாகப் போர் அணியிலிருந்த படைகளையும் திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டுப் புரவி மீது தாவினான். வாளை உயர்த்த அவன் ஆயிரம் வீரரும் யந்திரம்போல் திரும்பினார்கள். குப்தன் படை நகர்ந்தது. 

“அதோ ஒரு பெருமன்னன் போகின்றான். இவனைப் போல் எப்பொழுதோ ஒருவன் சரித்திரத்தில் தோன்றுகிறான்: கலையைக் காக்க வெற்றியைவிட்டுக் கொடுத்த வீரன் போகின்றான். அவனை இரண்டு நாள் வைத்துக் கௌரவிக்க காஞ்சி கொடுத்துவைக்கவில்லை” என்று பெரு மூச்சுவிட்ட விஷ்ணுகோபன் மாளிகைக்குள் நுழைந்தான். 

மறுநாள் துறவி மீசை தாடி ஏதுமில்லாமல் அரச உடை யணிந்து மன்னன் முன்பு தோன்றினான். “மாற்றம் நன்றாயிருக்கிறது” என்று பாராட்டினான் விஷ்ணுகோபன். 

“மாதவியின் உத்தரவால் என் துறவறம் அழிந்தது” என்று முறையிட்டான் மாஜித் துறவி. 

அப்பொழுது தேவகியின் அறையில் உட்கார்ந்திருந் தான் விஷ்ணுகோபன். அவனுக்கு அருகில் நின்றிருந்த ராணி தேவகி கூறினாள். “அவள் உத்தரவால் உங்கள் துறவறக்கோலந்தான் அழிந்தது” என்றாள். 

“அவள் உறவால் துறவறமே அழிந்துவிடும்” என்று மன்னன் கூறி நகைத்தான். 

அப்பொழுது உள்ளே நுழைந்த மாதவி கேட்டாள், “என்ன சொல்கிறீர்கள் மகாராஜா” என்று. 

“இவன் துறவறக்கோலத்தை ஏன் அழித்தாய்?”

“குப்த சக்கரவர்த்தியின் உத்தரவு” என்றாள் மாதவி.

“அப்படியானால் என் உத்தரவுக்கு மதிப்பில்லையா?” என்று விஷ்ணுகோபன் வினவினான். 

”ஏனில்லை? உத்தரவிடுங்கள்” என்றாள் மாதவி. 

“இவன் துறவறத்தை முழுவதும் அழித்துவிடு” என்று உத்தரவிட்டார் மகாராஜா. 

மகாராஜா சொற்களின் குறிப்பறிந்த மாதவியின் முகம் சிவந்தது. அத்துடன் புன்சிரிப்புக் கொட்டி வெளியேறினாள் அறையைவிட்டு. 

மாஜித் துறவியும் அவளைப் பின் தொடர்ந்தான் “எங்கு போகிறார் இவர்?” என்று விசாரித்தாள் தேவகி, ஏதும் அறியாதவள் போல. 

“துறவறத்தைப் பறிகொடுக்கப் போகிறார்.”

“இருவருக்கும் திருமணமாகவில்லையோ!” 

“காந்தர்வம் அரச குலத்தவர்க்கு அனுமதிக்கப்படுகிறது.” 

இதைக் கேட்ட தேவகி நகைத்தாள். அதே சமயத்தில் அடுத்த அறைக் கதவைத் துறவி திறந்து தலையை உள்ளே நீட்டினான் மெள்ள. 

சாளரத்தின் மூலம் வெளியே தெரிந்த வேகவதியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த மாதவி கதவு திறந்த சத்தம்கேட்டதும் சரேலெனத் திரும்பினாள்.”எங்கு வந்தீர்கள்?” என்று வினவினாள் கோபத்துடன். 

“மன்னர் உத்தரவை நிறைவேற்ற வந்தேன்” என்ற துறவி உள்ளே நுழைந்து கதவையும் மூடினான். 

உத்தரவு என்னவென்பதை அறிந்திருந்த மாதவி மிக மதுரமாகச் சிரித்தாள். சிரிப்பில் அழைப்பிருந்ததால் அவளை நோக்கி நடந்தான் மாஜித் துறவி. சோழ நாட்டிலிருந்து கொண்டு வந்த அவன் துறவறம் அன்று இரவு தொலைந்தது. 

“காஞ்சியிருக்கக் கலிங்கம் குலைந்த” பெருமையைப் பிற்காலத்தில் ஜெயங்கொண்டார் தெரியாமலா பாடினார்! 

-முற்றும்-

காஞ்சியிருக்க-இடையில் அணியும் ஆபரணம் இருக்க கலிங்கம்-ஆடை; குலைந்தது-அழிந்தது(‘கடைத்திறப்பு’)

– மாதவியின் மனம் (நாவல்), பாரதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *