யாரோ ஒருவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 8,558 
 

நேற்று முழுவதும் அக்காவின் ஞாபகம் ஒரு காரிய நிழலாக மனதில் படர்ந்திருந்தது. அந்த அடர் திரையை விலக்கி ஒரு ஒளிக்கற்றைகூட மனத்திரையில் பதியவேயில்லை. மனதின் இருளில் வழிதெரியாத நினைவுகள் அல்லாடிக் கொண்டிருந்தன. அம்மாவின் முகமே இருண்டிருந்தது. யாருடனும் அவர் சரியாகக் கதைக்ககூடயில்லை. கடந்த சில மாதமாகத்தான் அவர் வாழ்வில் ஒளி கொண்டிருப்பதாக ஓயாத சிரிப்புடன் சொல்லிக் கொண்டிருந்தவர், இன்று அனைத்தையும் இழந்துவிட்டார். அம்மா இவ்வளவு சீரியசாக இருக்கத் தேவையில்லையென்றுதான் எனக்குப்பட்டது. ஆனாலும் எதனையும் நான் சொல்லவில்லை. நீண்ட பிரிவின் பின் கடந்த சிலமாதமாகத்தான் அம்மாவுடன் சேர்ந்திருக்கிறேன். எதனையும் தனது விருப்பத்தின்படியே செய்து முடிக்கட்டுமென விட்டுவிட்டேன். இயக்கத்திலிருந்த கடந்த எட்டு வருடமாக எனது உயிருக்கு ஏதும் நேர்ந்துவிடக்கூடாதெனக் கோயில்களிற்கு அலைந்து, உள்ள விரதமெல்லாம் பிடித்து அவ உருமாறிப் போயிருந்தது ஒயாத குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதனால் அவரது விருப்பத்திற்கு மாறாக எதனையும் கதைப்பதில்லையென்ற முடிவிலுள்ளேன்.

நீண்டயுத்தத்தின் பின் ரணில் விக்கிரமசிங்கவும் தலைவரும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பயனாக ஊருக்குள் வந்த அரசியல்த்துறை, அரசியல்த்துறை மாதிரி ஊருக்குள் கலர்ஸ் காட்டிக் கொண்டு திரியாத ‘மற்றது’கள் என ஆமிக்காரா; நிறைந்திருந்த யாழ்ப்பாணமெல்லாம் இயக்கமும் ஓடித்திரிந்து கொண்டிருந்தது. இந்த இரண்டு வகைக்குள்ளும் அடங்காமல் வேறும் சில வகை இயக்கங்களும் திரிந்தனதான். கடைகளில் வரி வசூலிக்கிற ஆட்கள், லீவில் வந்த ஆட்கள் என அதிலயும் பெரிய பட்டியலிருந்தது. இப்படி எந்த வகைக்குள்ளும் அடங்காமல் நான் விலத்தி வந்திருந்தேன். ஆனாலும் ஊர்ச்சனம் அதனை நம்பவேயில்லை. ஏதோ இரகசிய வேலையாக வந்து நிற்பது மாதிரியான தொனியிலேயே கதைத்தாh;கள். சொந்தக்காரருக்கெல்லாம் குண்டியில் தட்டிய புளுகம். காலையிலொரு வீட்டில், மத்தியானமொரு வீட்டிலென சாப்பிடக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் போக, அயலட்டைச் சனமெல்லாத்தையும் கூட்டி வைத்துக் கொண்டு, ‘இவா; ஆள் கொம்பனி’ என்ற ரிதியில் அறிமுகம் செய்து வைத்துக் கொண்டிருந்தனர். கூட்டத்திலிருந்த இளவட்டங்கள் மிகுந்த மரியாதையாக கீழ்க்குரலில் சந்தேகங்களைக் கேட்பார்கள். இப்படித்தான் ஒருமுறை ஒருத்தன் கேட்டான். ‘அண்ணை.. தலைவா; பிரபாகரன் மாதிரி ஏழுபேரை உங்கட இயக்கம் வைச்சிருக்குதாமே.. உங்களிற்கே டவுட் வராதா எது ஒரிஜினல் பிரபாகரன் என்று’. இப்படி நான் அல்லாடிக் கொண்டிருந்த நாளொன்றில்த்தான் அந்தத் தகவல் வந்தது. அக்கா ஊருக்கு வரப் போகிறாளாம். மூன்றுநாளின் முன்னர் அவள்தான் சொல்லியிருந்தாள். ரெலிபோன் அடித்தால் அம்மா வழமையில் பதிலளிப்பதில்லை. நான் எடுத்து, மறுமுனையில் கதைப்பது அக்கா என்று தெரிந்து உற்சாகமாக கதைக்க ஆரம்பித்ததுமே அம்மா வெளியில் போய்விட்டார். கதைத்து முடிந்து வெகுநேரத்தின் பின்னர்தான் உள்ளே வந்தா. விசயத்தைக் சொன்னதும், நீளமான பெருமூச்சுடன் உள்ளே போய்விட்டா.

ஒரு வார்த்தை பேசாமல் சமைத்துக் கொட்டினார். பிறகு விறாந்தைச் சுவருடன் சாய்ந்து உட்கார்ந்துவிட்டார். அவர் இப்படித்தான். ஏதாவது மனம் கொள்ளமுடியாத சுமையுடன் தவித்தால், இந்த இடத்தில் இருந்துவிடுவார். எதிர்ச்சுவரில்த்தான் அப்பாவின் படம் தொங்குகிறது. கல்யாணமாகி சில வருடங்களிலேயே அப்பா இறந்து விட்டார். கல்யாணம் கட்டி ஐந்தாவது வருடத்தில் என்னை மூன்றாவது பிள்ளையாக அம்மா பெற்றெடுத்த அடுத்த வாரத்திலேயே அப்பா இறந்துவிட்டார். அம்மா என்னை பெற்றெடுத்த ஐந்தாம் நாள், எனது கன்னத்திலும் அம்மாவின் கன்னத்திலும் தட்டிவிட்டு அப்பா விடைபெற்று சென்றராம். அவர் அப்பொழுது மலைநாட்டுப்பக்கம் வாத்தியாராகயிருந்தார். இரண்டாம்நாள் வீட்டில் இழவு கொண்டாடினர்களாம். படிப்பித்த ஊரில், தனக்கிருந்ததாக நினைத்த மரியாதையை அப்பா அதிகமாக நம்பிவிட்டார் தீப்பற்றி எரிந்த வீடுகளை விட்டு ஓடிவந்த நான்கு குடும்பங்களை பாடசாலையில் தங்க வைத்து, வாசலிலே அப்பா காவல் இருந்தாராம். வெறிகொண்டலைந்த கூட்டத்தை தடுக்க தன் மீதான மரியாதையை கவசமாக்கி அவர் வாசலில் நின்றிருக்ககூடும். பாடசாலை முன் வளாகத்திலிருந்த வேப்பமரத்தில் அவரை கட்டி வைத்து, ரயர் போட்டு எரித்துவிட்டு கும்பல் உள்ளே நகர்ந்ததாம்.

நான்காம் நாள் மூடிய சவப்பெட்டியாக அப்பா வந்தாராம். பெட்டியைத் திறப்பதற்கு யாருக்கும் திராணியிருக்கவில்லை. எரிந்த மரக்குற்றியை நினைவூட்டிக்கொண்டு அவர் உள்ளே கிடந்திருக்கலாம்.

அப்பா மீது அம்மாவிற்கு மிகுந்த காதலிருந்திருக்குமென நினைக்கிறேன். விறாந்தையில் தொங்கிய அப்பாவின் படத்தைக் கடந்து செல்கையிலெல்லாம் நிமிர்ந்து பார்த்துக் கொண்டுதான் கடப்பார். எனக்கு நினைவு தெரிந்து அம்மா கோயிலுக்குச் சென்றதில்லை. சுவாமிப்படத்தின் முன் நின்றதில்லை. எல்லாமும் அப்பாவின் படமிருந்த சட்டகத்திற்குள் அடங்கியிருந்தது. காலையில் குளித்ததும் அப்பாவின் படத்திற்கு பூ வைத்து தலை கவிழ்ந்து நிற்பார் சின்ன வயதில் அது விளையாட்டாகத் தோன்றியது. இப்பொழுது, அந்த செய்கைகளின் மூலம் அப்பாவை பூமிக்கு இறங்க வைத்துவிட்டார் என்பது மாதிரியெல்லாம் சிந்திக்க வைத்தது. அப்பா அரூபமாக வீட்டினுள் நடமாடுகிறாரோ என்றும் நினைக்கத் தோன்றும்.

அம்மா என்ன பிரச்சனையென்றாலும். முதலில் அப்பாவிடம்தான் சொல்வார். விறாந்தையில் படத்தின் முன்பாக குந்தியிருந்துவிடுவார். இருவரும் பேசிக் கொள்வார்கள் என நினைக்கிறேன்.

எனக்கு நினைவு தெரிய அம்மா இப்படி, அப்பாவுடன் பேசிய முதல் சந்தர்ப்பம் அண்ணா வீட்டிற்கு வராமல் போன அன்று நடந்தது. மாலையில் விளையாடுவதற்கு ஏரிக்கரைக்கு போனவன் இருண்ட பிறகும் வரவில்லை. பிறகுதான் தெரிந்தது, விளையாடியவர்களை இந்தியன் ஆமி ரவுண்ட் அப் பண்ணி பிடித்தது. இந்தியன்ஆமி பிடித்தால் சுட்டுவிடுவார்கள் அல்லது சித்திரவதை செய்வார்கள் என ஞானம்மாமி முற்றத்தில் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார். எனக்கு அழுகை அழுகையாக வந்து கொண்டிருந்தது. குசினிக்குள் போயிருந்து கொண்டு சேட் கொலரை வாய்க்குள் வைத்து விக்கி விக்கி அழுதேன். வெளியே குழறல்களும், கூப்பாடுகளுமாகயிருந்தது. தனியாக இருக்கவும் பயம் வந்தது. சுவரில் தேய்பட்டபடி அழுது கொண்டு வெளியில் வர, அம்மா சுவருடன் சாய்ந்தபடி விறாந்தையிலிருந்தர் உடம்பில் அசைவில்லை. அப்பாவின் படத்தை வெறித்தபடியிருந்தா. கிட்டப் போகத்தான் தெரிந்தது, அவரின் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தபடியிருந்தது. அம்மாவின் மடியில் விழுந்தேன். அவவின் கை மட்டும் அசைந்து, என்னை வருடிவிட்டது.

அண்ணாவைத்தேடி இந்தியன் ஆமிக்காம்பிற்கு போன ஞானம்மாமா, தலையைத் தொங்கவிட்டபடி வந்தார். ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்த மாமியின் கன்னத்தைப் பொத்தி அறைந்தார். வீடு நிசப்தம் கொண்டது. அண்ணாவை இயக்கமொன்று தங்களிற்காக ஆட்பிடித்துவிட்டதாகச் சொன்னார். வீடு களையிழந்தது. யாரும் பேசிக்கொள்ளவில்லை. சிலர் மட்டும் கீழ்க்குரலில் பேசிக் கொண்டனார். ‘என்னன்டு இயக்கத்திற்கு வலுக்கட்டாயமாகப் பிடிக்கிறது.. உதென்ன கலிகாலம்.. இந்தியனின்ரபிளான் என்னன்டு தெரியயில்லை.. தான் அடிச்சப்பிடிச்சால் சிக்கலென்று பிடிச்ச ஆட்களைக் கொண்டு ஜே.ஆரோட பைற் பண்ணவைச்சு தமிழீழத்தை எடுத்துத் தரப்போறானோ’ என துரைமாமா கதைத்துக் கொண்டிருந்தார்.

எல்லோரும் அலமலாந்து திரிய, அம்மா அசையாமலிருந்தார். நானும் அக்காவும் அம்மாவின் ஒவ்வொரு காலில் படுத்துறங்கினோம். மாமி தட்டியெழுப்பி எதையோ வாய்க்குள் திணித்தா. நான் தலையை உதறிவிட்டு, முகம் குப்புற படுத்துவிட்டேன்.

விடிய எழும்பும் பொழுது வீடு பரபரப்பாகயிருந்தது. எதிர்ப்படுவார்கள் எல்லோரும் சிரித்தனார். ஆனால் பேசினார்கள் இல்லை. எவ்வளவு கேட்டும் ஒருவரும் கதைக்கவில்லை. மகிழ்ச்சியை மீறிய இரகசியத்தன்மை வீடெங்கும் நிறைந்திருந்தது. நேற்றிருந்த கனத்த துயரத்திற்கான தடயமெதுவுமேயிருக்கவில்லை. சற்று நேரத்தில் தோட்டத்தில் குளிப்பதற்கு கூட்டிக் கொண்டு போன அம்மா, மங்களம் மாமி வீட்டிற்குள் நுழைந்தா. வாணி மச்சாள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு உள் அறைக்குள் ஒடினா. அங்கே அண்ணா சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தலை மொட்டையடிக்கப்பட்டிருந்தது. ‘ஏலாவாளியளுக்குத்தான் மண்டையன் குறூப்.. எங்கட குடும்பத்தில கை வைக்க ஓமாமே.. அவன் விடிய வெள்ளனயே ஓடி வந்திட்டான்’ என்றா.

‘உந்தக் குறுக்கால போவாருக்கு நிம்மதியான சாவு வராது, ஐயன் வெடி வைச்சுத்தான் சாவான்கள்’ என மாமி திட்டினா. ஐயன் எங்கட ஊரிலிருந்த பேமசான இயக்ககாரன். ஊரின் ஆழங்களிற்குள்ளிருந்து பழைய சாரமும், சேட்டுமணிந்தபடி பைகளில் துப்பாக்கிகளை மறைத்தபடி ஊருக்குள் வருவார்கள். இயக்கம் வருகுதென்றால் சனங்கள் ஆமியின் நடமாட்டத்தைப் பார்த்து சொல்வார்கள். ஐயன் ஆட்கள் வருகிறார்கள் என்றால், நாங்கள் சின்னப்பொடியள் வீதிக்கோடிவந்து விடுப்புப் பார்ப்போம்.

ஓரிரு நிமிடம்தான். அங்கிருந்து அம்மா கூட்டிக்கொண்டு போய்விட்டா. அண்ணா ஒளிந்திருக்கும் விசயத்தை யாரிடமும் வாய்தவறியும் சொல்லக்கூடாதென குளிக்கும் பொழுது சொன்னா. நான் பேய்த்தனமாக கதைத்துவிடுவேன் என பக்கத்து வீடுகளிற்கும் போக விடவில்லை. ஒரு கிழமை பள்ளிக்கூடத்திற்கும் போகவில்லை. வீடு முழுவதும் மண்டையன் குறூப் பற்றிய கதைகள்தான் பயமூட்டியபடி அலைந்து கொண்டிருந்தன. அடுத்த வாரம் ஞானம் மாமாவுடன் அண்ணா கொழும்புக்குப் போனார். ஞானம் மாமா மட்டும் தனியாகத் திரும்பி வந்தார். அதன்பிறகு கொஞ்சநாள் மாட்டுத்தாள் என்வலப்பில் அண்ணாவிடமிருந்து கடிதங்கள் வந்தன. பிறகு, சிவப்பும் நீலமுமாக வரிவரியான கோடுள்ள என்வலப் ஒன்றில் கடிதம் வந்தது. அண்ணா ஏதோ ஒரு நாட்டில் இறங்கிவிட்டான், அவனிட்டச் சொல்லி ஒரு ரிவி வாங்கப்போறன் என அக்கா புளுகித் திரிந்தாள். அன்றும் அம்மா அப்பாவின் படத்தின் முன்னால் இருந்தா. ஆனால் வலு புளுகமாக, எதற்கென்றில்லாமல் எல்லாவற்றிக்கும் சிரித்தா.

கொஞ்ச நாளில் வீட்டுக்கு ரிவி வந்தது. விறாந்தையில் ரிவி வைக்கப்பட்டது. அக்கா புதிதாக வந்த படமொன்றின் பெயரைச் சொல்லி, அதனை எடுக்க வேண்டுமென்றாள். அவள் அதற்குச் சொன்ன காரணம், அந்தப் படத்தில் நல்ல ஆம்ஸ்பைற் இருக்குதாம். அம்மா மறுத்தவிட்டா. அப்பாவிற்கு விருப்பமான சிவாஜிகணேசன் நடித்த படமொன்றுதான் ரிவியில் முதலாவதாக போடுவது என்றுவிட்டா.

மாலையில் அயலட்டைச் சனமெல்லாம் திரண்டிருக்க சிவாஜியின் படமோடியது. அக்கா அழுது கொண்டு அறைக்குள் படுத்துவிட்டாள். நான் முற்றத்தில் பொடியளுடன் ஆமி, இயக்கம் விளையாட்டு விளையாடினேன். இரவு அக்கா என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு படுத்திருந்தாள். அவளிற்கு ரஜனியின் படமோடாதது சரியான கவலை. திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள். கூடவே, வோய்ஸ் என்றால் கையில ஆம்ஸ் வைத்திருக்கிறதுதான் அழகு என்றும், கெதியில பெரியவனாகி என்னையும் கையில ஆம்ஸ் எடுக்கச் சொன்னாள். எனக்கதில துப்பரவாக விரும்பமில்லையென்றன். ‘லூசுப் பொடியன்’ எனத் திட்டி, நான் இப்ப சின்ன ஆள்த்தானே. அதனால் விசயம் விளங்கயில்லையெனவும், பெருத்தாப்பிறகு விளங்கும் என்றாள். ஐயன் கொண்டு திரியிற மாதிரியான பெரிய துவக்கெல்லாம் என்னால தூக்க ஏலாதென்றன். உதட்டைச் சுழித்தபடி முன் தலையில் குட்டினாள். ‘அவங்கள் அன்டீசன்ட் பாட்டி.. எப்பவும் ஊத்தை உடுப்போட திரிவாங்கள்.. நீ டீசன்டான ஆளாயிருக்க வேணும்’ என்றா. அந்த நேரம் இயக்கப்பொடியள் சாரமும் சேட்டும்தான் போட்டிருப்பினம். மாற்று இயக்கம்தான் வலு கலாதியாக ஜீன்ஸ் சேட் போட்டிருக்கும்.

அடுத்தநாள் பள்ளிக்கூடத்திற்கு அக்காவுடன் போனேன். பெற்றோல்சற் சந்தியிலும், நெல்லியடிச் சந்தியிலும் இந்தியன்ஆமிப் பொயின்றுகள் இருந்தன. அண்ணாவைப் பிடித்த பிறகு, வீட்டிற்கு சுகம் விசாரிக்க வந்தவை போனவையெல்லாம் பயப்பிடுத்தியிருந்தினம். அந்தப் பொயின்றுகளில் ஆமியுடன் சோ;ந்து மண்டையன்குறூப்பும் நிற்கிறதென்றும், ஆமியை விடவும் அவர்கள்தான் வெறி பிடித்தவர்கள் என்றும்.

ஆனால் அக்காவிற்கு ஒரு பயமுமிருக்கவில்லை. சிரித்துக் கொண்டு வந்தாள். அடிக்கடி தலையை உதறி பின்னலை முன்பின்னாக மாற்றிக் கொண்டிருந்தாள். பொயின்றுக்குள்ளிருந்த ஒருவன் எங்களைக் கண்டதும் நன்றாகச் சிரிக்கத் தொடங்கினான். அவன் ஆமி உடுப்புப் போட்டிருக்கவில்லை. சாதாரண உடைதான் அணிந்திருந்தான். நிச்சயமாக மண்டையன் குறூப்பாகத்தானிருக்க வேண்டும். எனக்குப் பயம் பிடிக்கத் தொடங்கியது. ஆனால் அவன் சிரித்துக் கொண்டு நின்றான். வெள்ளையும் சுள்ளையுமாக நல்ல உயரமாகயிருந்தான். பொசுபொசுவென பத்தையாக இல்லாமல் மெல்லியதாடியுமிருந்தது. நெஞ்சுயரத்திலிருந்த காவலரண் மண்மூட்டையில் துவக்கை வைத்துவிட்டு, மண்மூட்டையில் கைகளையு+ன்றி முன்பக்கமாக சாய்ந்து உடல்ப்பாரத்தை கொடுத்துக்கொண்டு, வலதுகையினால் தாடியை வருடி சிரித்துக் கொண்டு நின்றான். அவன் மட்டுமல்ல, அவனது நண்பா;கள் எல்லோரிடமும் அந்தப் பழக்கமிருந்திருக்க வேண்டும். சாதாரண நேரங்களிலெல்லாம் தாடியை வருடியபடி அவர்கள் நிற்பதைக் கண்டிருக்கிறேன். ஒருமுறை ஊர் ரவுண்டப் பண்ணப்பட்டிருந்தது. மண்டையன் குறூப்தான் விசாரணைக்கு வந்தது. எங்கள் வீட்டிற்கு வந்து விசாரித்தவனும் தாடியை வருடியபடிதான் விசாரணை நடத்தினான்.

நான் அக்காவின் கையை இறுகப்பிடித்துக் கொண்டு, அவளுடன் ஒட்டிக் கொண்டு நடந்தேன். அவள் ஒரு பயமுமில்லாமல் அவனையே பார்த்துக் கொண்டு வந்தாள். கடந்து வந்ததும், ‘எப்பிடி… அவனை ஆம்சோட பாh;க்க ஹீரோ மாதிரி இருக்குதில்லோ’ என்றாள். எனக்கு அடிவயிறு முட்டியிருந்தது. எதுவும் கதைக்கத் தோன்றவில்லை. மறுநாள் வீட்டில் படமோடியது. அக்கா சொன்ன படம்தான் ஓடியது. யாரோ ஒருத்தன் படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை சுட்டுக் கொண்டிருந்தான்.

ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடம் போகும் பொழுதும் இந்த சம்பவம் மாறாமல் நடந்து கொண்டிருந்தது. எனக்குத்தான் பயம் தெளியவில்லை. சில நாட்களில் அவன் சீட்டியடித்து பாட்டுக்கள் பாடியும் கொண்டிருந்தான். எது செய்தாலும் வலது கையினால் தாடியை வருடுவதை மட்டும் விடமாட்டான். வழியில் அக்காவும் சீட்டியடிக்க முயன்று பார்த்து, முடியாமல் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டு வந்தாள்.

ஓருநாள் அந்தப் பொயின்றைக் கடக்கும் பொழுது, மனதைத் திடப்படுத்திக் கொண்டு நிமிh;ந்து அக்காவைப் பாh;த்தேன். அக்காவும் அவனைப்பாh;த்து சிரித்துக் கொண்டு வந்தாள். அவளது தொடையில் நுள்ளி ‘அவங்கள் மண்டையன் குறூப்.. அண்ணாவைப் பிடிச்ச மாதிரி உன்னையும் பிடிச்சால்த்தான் ..’ என்றேன். ‘ச்சா.. அந்தவோய் டீசன்டான வோயடா’ என்றாள்.

மத்தியானம் பள்ளிக்கூடம் முடிந்து திரும்பி வரும்பொழுது, இந்தியன்ஆமி ட்ரக்கில் சடலமொன்றை கட்டியிழுத்துக் கொண்டு தெருத்தெருவாகத் திரிந்தாh;கள். ட்ரக்கில் துவக்கைத் தூக்கி தோளில் போட்டபடி, பொயின்றில் நிற்கும் வெள்ளையன் கூட்டாளிகளுடன் நின்றான். எங்களைக்கண்டதும், ஹீரோ மாதிரி ஒற்றைக்கையினால் துவக்கை ஆகாயத்தை நோக்கிப் பிடித்தபடி நின்றான். சடலம் இழுபடுவதைப் பார்க்க அக்காவும் பயந்தாள். வீட்டுக்கு ஓடிவந்துவிட்டோம். மாலையில்த்தான் கதைவந்தது, சுருளியைத்தான் கட்டியிழுத்துக் கொண்டு திரிந்தாரிகளாம். ஐயனின் கூட்டாளி. கிழவி தோட்டப் பக்கம் பதுங்கியிருந்து வெடி வைத்தார்களாம்.

ஓருநாள் மாலையில் குலம்மாமாவின் தோட்டத்தில் பட்டம் ஏற்றி விளையாடிவிட்டு, பொழுதுபட வீட்டுக்குவர, இன்னும் விளக்கேற்றப்படாமலிருந்தது. என்ன நடந்தாலும் ஆறுமணிக்கே அம்மா விளக்கு ஏற்றிவிடுவா. மெல்லிய வெளிச்சத்தில் நடமாட்டங்கள் அதிகமாகயிருந்தது தெரிந்தது. நான் வீட்டிற்குள் நுழைவதைக் கண்டதும் கதைப்பதை நிறுத்திக் கொண்டனா;. எல்லோரும் பாவமாக என்னைப் பார்ப்பது மாதிரியிருந்தது. வீட்டுக்குள் ஓடினேன். அம்மா விறாந்தையில் உட்கார்ந்திருந்தா. முழங்கால்களை உடம்புடன் சோ;த்துக் கட்டிப்பிடித்தபடி சுவருடன் சாய்ந்து உட்கார்ந்திருந்தா. முகத்தை முழங்கால்களுள்; புதைத்து, அப்பாவின் படத்தையே பார்த்தபடியிருந்தா. அம்மாவின்; முகத்தையே பார்க்க முடியாமலிருந்தது. அவ்வளவு பயங்கரமாகயிருந்தது. எனக்குப் பயம்பிடித்துக் கொண்டது. எதையும் கேட்கத் துணிச்சலற்று, அங்குமிங்குமாக அலைந்துவிட்டு அறைக்குள்ப் போய் பார்த்தேன். அக்கா இல்லை. பின்பக்கம், நெல்லிமரத்தடி ஒரு இடமுமில்லை. மாமியிடம் கேட்டேன். அதுவரை அடக்கி வைத்திருந்தது மாதிரி, நீளமான பெருமூச்சொன்று விட்டா. மாடு மூசினது மாதிரியிருந்தது. பிறகு கீழ்க்குரலில், ‘அவள் ஓடுகாலி.. செத்துப் போனாளென்டு நினை’ என்றுவிட்டுப் போனா. அழுகை பொத்துக் கொண்டு வந்தது. அக்கா செத்தால் ஏன் இன்னும் செத்தவீடு கொண்டாடயில்லை. ஒருதரும் குழறயில்லை. என்ன செய்வதென்றே தெரியாமல் விறாந்தை மூலையில் ஒடுங்கியிருந்தேன். அன்று யாருமே வீட்டில் தூங்கவில்லை. நான் முழுஇரவும் முழித்த முதல்ச் சந்தர்ப்பமது.

அக்காவின் நினைவு மெல்லிய காற்றைப் போல, மெதுமெதுவாக தடயமின்றி கரையத் தொடங்கியது. வீடு மெல்லமெல்ல இயல்பானது. நானும் வளரவளர சோலிகள் கூடின. பள்ளிக்கூடம், ரியுசன், மைதானமென பகலெல்லாம் அலைந்துவிட்டு பொழுதுபட வீட்டுக்கு வந்தேன். இடையிடையேதான் கலைவாணியென்ற அக்காவின் பெயர் இரகசியமாக உச்சாரிக்கப்பட்டது. அப்பொழுதெல்லாம் அது வேறுயாருடையதோவைப் போலிருந்தது. அண்ணாவிற்கு பொம்பிளை பார்த்து எல்லாம் சரியென்று ஆகி, கடைசி நேரத்தில் குழம்பிப் போனது. அப்பொழுதெல்லாம் அவளது பெயர் அதிகமதிகம் உச்சரிக்கப்பட்டது. பிறகும் இரண்டொரு இடங்கள் குழம்பி, கடைசியில் உடுப்பிட்டியிலிருந்து அண்ணி வந்தா. கலியாணவீடு இந்தியாவில் நடந்தது. வீட்டிலிருந்து யாரும் போகவில்லை. எனக்குப் பாஸ்பிரச்சனை. இயக்கம் இளந்தாரிப் பொடியளிற்கு பாஸ்தரமாட்டுது. என்னைத் தனியாக விட்டிட்டு அம்மா போகவில்லை. நேமிப் பொடியப்பாதான் நின்று செய்து வைத்தார்.

ஆரம்பத்தில் இரவில் படித்தேன். பின்னா;, அரிக்கன் லாந்தாரின் பின்னாலிருந்து வான்மதி எழுதிய கடிதங்களைப் படிப்பதும், அவளிற்கு பதிலெழுதுவதுமாகயிருந்தேன். கொப்பிகளை மார்போடு அணைத்தபடி காலிற்கும் நோகாமல் நிலத்திற்கும் நோகாமல், கால்களை அதிகமும் மடிக்காமல் அவள் நடக்குமழகிற்காகவே அவளை காதலிக்கலாமென்று சங்கரிடம் சொல்லியிருந்தேன். ‘அப்ப, அவளது லுக்கிற்கு’ என்று பதில் கேள்வி கேட்டான். அதற்காக கலியாணமே கட்டலாமென்றேன்.

விரைவிலேயே பாடசாலை, ரியுசன் மலசலகூடச் சுவா;களில் நிh;வாணப்படங்கள் வரையப்பட்டு எங்கள் இருவரின் பெயர்களும் எழுதப்பட்டன. யார் என்று தெரியவில்லை, அவளது வீட்டு மதிலிலும் இது முளைத்தது. அதன் பிறகு அவள் வீட்டைவிட்டு வெளிவரவில்லை. அவளது தகப்பன் ஞானம்மாமாவிற்கு தெரிந்தவராம். பிலாமரத்தில் என்னைக் கட்டிவைத்து முதுகுத் தோல் உரித்தார்.

மறுநாள் நான் இயக்கத்திற்குப் போனேன்.

அப்பொழுது அது பற்றிய எந்த சிந்தனையுமிருக்கவில்லை. அம்மா உடைந்துபோய் விறாந்தையில் சாய்ந்து உட்கார்ந்திருக்கக்கூடும். முற்றத்தில் யார்யாரோவெல்லாம் கூடிக்கலைந்திருக்கலாம். அப்பாவின் படத்தின் முன்பாக இருந்த அம்மாவின் முகம் இருண்டிருக்குமா, விகாரமாகியிருக்குமா, கண்களுடைந்து பெருகியிருக்குமா தெரியவில்லை. அது பற்றி நான் சிந்திக்கவிரும்பியிருக்கவில்லையென்பதெல்லாம் பொய். உண்மையில் சிந்திக்கவேயில்லை. அதற்கான அவகாசங்களுமிருக்கவில்லை. போதாத கணங்களின் பின்பாக நான் ஓடிக் கொண்டிருந்தேன்.

யுத்தம் இறுகி வன்னிக்கும் யாழ்ப்பாணத்துக்குமான தரைத் தொடா;புகளும் இல்லாமலாயிற்று. வன்னி உலகத்திலிருந்தே வெகுதொலைவாயிற்று.

ஓருநாள் எதேச்சையாக தெருவில் விநாயகம்;மாமாவை கண்டேன். ஊரில் எப்பொழுதாவது கண்டிருக்கிறேன். கதைத்ததில்லை. தூரத்துறவு. இயக்க உடுப்புடன் புதுக்குடியிருப்புச் சந்தியில் நின்ற என்னை ஓடி வந்து பிடித்து, ‘பரமண்ணையின்ர பொடியன்தானே’ என சந்தேகமாக கேட்டார். தனது உறவினான ஒருவன் இயக்க உடுப்புடன் நின்றது அவருக்கு புளுகத்தை கொடுத்திருக்க வேண்டும். நடுச்சந்தியென்றும் பாராமல் என் இரண்டு கைகளையும் பிடித்தபடி உரத்த குரலில் கதைக்கத் தொடங்கினார். இடையிடையே பிடியை விடுவித்து, கைகளைச் சுழற்றிக் கதைத்தார். அவரது செய்கைகளைப் பார்க்க சின்ன வயதில் நாங்கள் நடத்தும் நாடகங்கள்தான் நினைவுக்கு வந்தன. அவர் உடையார் கட்டிலிருக்கிறாராம். விலாசத்தைத் தந்து, கட்டாயம் வரும்படி சொன்னார்.

கொஞ்சநாள் கழித்து போனேன். அவரது நாடகங்களைக் காண விருப்பமில்லாத பொழுதும், நான் போனது சாப்பாட்டுக்கு மட்டுமே. உப்பு புளியில்லாத இயக்கச் சாப்பாட்டை சாப்பிட்டு நாக்குச் செத்துப் போயிருந்தது. கனபொடியளிற்கு சொந்தம் பந்தம் வன்னியிலயிருந்ததினால் பிரச்சனையிருக்கவில்லை. எங்கட சொந்தங்கள் ஒன்றும் யாழ்ப்பாணத்தைவிட்டு நகரவேயில்லை. அதனால் நினைத்த மாதிரி வீட்டுச்சாப்பாடு கிடைக்கவில்லை.

நாங்கள் போன அன்று மாமா ஊர்க்கோழி அடித்திருந்தார் நாக்கைச்சுழற்றிச் சுழற்றி சாப்பிட்டேன். மாமா இன்னொரு காரியமும் செய்திருந்தார். என்னைக் கண்ட உடனேயே வீட்டிற்கு கடிதமெழுதி விசயத்தைச் சொல்லியிருந்தார். எனக்காக மூன்று உறைகளில் கடிதங்கள் காத்திருந்தன. அம்மா உடனேயே எனக்கொரு கடிதம் அனுப்பிவிட்டு, அண்ணாவுக்கு சொல்லியிருக்கிறா. அண்ணாவும் ஒரு கடிதம் அனுப்பியிருந்தான். அந்தத் தாளின் பின்பக்கத்தில் ஐந்து வரிகளில் அண்ணியும் என் நலம் விசாரித்திருந்தா. இன்னொரு தாளில் பிள்ளைகள் இருவரும் ஒவ்வொரு பக்கத்தில் படம் வரைந்து, hi ரnஉடந hழற ச ர? எனக் கேட்டிருந்தனா;. மூத்தவள் தமிழ்மொழி, புலிக்கொடியொன்றை வரைந்து வர்ணம் தீட்டியிருந்தாள். இளையவள் செம்மொழி, தமிழீழப்படம் வரைந்து வர்ணம் தீட்டியிருந்தாள். அவள் வரைந்த தமிழீழம், கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் பெரும் பகுதியைப் பிடித்து, அம்பாந்தோட்டையை அண்டிய சிறு துண்டைத்தான் சந்திரிக்காவிற்கு வழங்கியிருந்தது.

அண்ணா; எனக்கு கடிதம் அனுப்பிவிட்டு; அக்காவிற்கு விசயத்தைச் சொல்லியிருந்தார். அதன் பின்னர்தான் எனக்கும் விசயம் தெரியும். அக்கா கனடாவில் இருப்பதும், அண்ணரும் அக்காவும் கதைப்பதும், அண்ணா; ஒரு முறை குடும்பமாக கனடா போய் வந்ததும்.

அக்கா மணிமணியான எழுத்தில் கடிதமெழுதியிருந்தாள். ஓன்றுவிட்ட ஒரு வரியில் எப்படியிருக்கிறாயடா எப்பிடியிருக்கிறாயடா, எனக் கேட்டிருந்தாள். என்னைச் சிறுவயதிலேயே பிரிந்தது தன் மனதில் ஆறாவடுவாகப் பதிந்துள்ளதாக கண்ணீர் வடியும் வரிகளில் கேட்டிருந்தாள். தான் எவ்வளவு முயன்றும் அம்மா முன்னா; மாதிரி தன்னுடன் கதைப்பதில்லை, நீயும் அப்படித்தான் இந்தப் பாசக்கார அக்காவை புறந்தள்ளுவாயா என இரத்தம் வடியும் வரிகளில் கேட்டிருந்தாள். இப்படியாக கண்ணீராலும், இரத்தத்தினாலும் எழுதிய கடிதத்தை, ‘உனதும் உனது சக போராளிகளினதும் தேகசுகத்திற்கு எல்லாம் வல்ல கரவை வெல்லனிற்பிள்ளையார் அருள்பாலித்து, உங்கள் இலட்சியதாகம் விரைவில் தணிய துணையிருக்கட்டும்’ என முடித்திருந்தாள்.

அங்கிருந்தே மூவருக்கும் கடிதமெழுதினேன். ஒழுங்கில்லாத கப்பலோட்டம், எப்பொழுது என்றில்லாமல் பூட்டும் வவுனியா-வன்னிப்பாதை போன்ற பிரச்சனைகளிருந்த பொழுதும் மாதமொரு அம்மாவின் கடிதம் வந்தது. அவ்வளவு பெரிய இடைவெளியில்லாமல் அக்காவும் கடிதம் போட்டுக் கொண்டிருந்தாள். ஆரம்பத்தில் அவளுக்கு எழுதம் கடிதங்களை திரும்பவும் வாசித்துப் பார்த்தால் வேறு யாருக்கோ எழுதியது மாதிரியிருந்தது. ஆனால் வலு சீக்கிரத்திலேஆய அந்த இடைவெளிகள் இல்லாமல்ப் போனது. ஏதும் பிரச்சனைகளில் அம்மாவிடமிருந்து கடிதம் வராவிட்டாலும் அக்காவிடமிருந்து கடிதம் வந்தது.

ஒருமுறை என்னை மிகவும் பாராட்டி கடிதமெழுதியிருந்தாள். சின்ன வயதில் உனக்கு இந்த பாசமுள்ளஅக்கா இட்ட அன்புக்கட்டளையை தட்டாமல் ஆம்ஸ் தூக்கிய நீதான் என் செல்லத்தம்பி. நீ சரியான முடிவைத்தான் எடுத்திருக்கிறாய். நீ சேர்ந்துள்ள இடம் மிகச்சரியானது. எனக்கும் பெருமை. முந்தி மாதிரியில்லாமல் உங்கள் இயக்கம் இப்பொழுது வலு டீசன்ட். ஜீன்ஸ் அணிவதுதான் இயக்கத்திற்கு அழகு. வரிப்புலியுடுப்பில் படமெடுத்து உடனடியாக அனுப்பி வை.

போகப்போகத்தான் என்கொரு உண்மை தெரிந்தது. எங்கள் குடும்பத்திலேயே போராட்டம் பற்றிய தெளிவுடனிருந்தது அக்கா ஒராள்த்தான். அவள் எழுதிய கடிதங்கள் இதற்குச் சாட்சி. அன்ரன் பாலசிங்கத்திற்கான சிறுநீரக மாற்றுச்சிகிச்சைப் பயணத்திற்கான இழுபறி நடந்து கொண்டிருந்த பொழுது அக்கா எழுதிய கடிதமொன்றில் கீழ்வரும் பகுதியிருந்தது..

‘தம்பி.. எவ்வளவு படிச்சென்ன, சந்திரிக்காவும் ஒரு மோட்டுச் சிங்களத்திதானே. பாலா அண்ணையின் பயணத்தை தடுப்பதன்மூலம் ஒரு வரலாற்றுத் தவற்றை இழைக்கிறார். இதனை நாம் உரிய முறையில் ஐ.நா சபையின் முன்றலில் முறையிட்டு அவருக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கலாம். எது எப்படியோ, ஒன்று மட்டுமுண்மை. அவர்கள் பயணத்திற்கு அனுமதிக்காமல் விட்டால், அண்ணை கட்டுநாயக்காவை கைப்பற்றி அங்கிருந்து பாலா அண்ணையை அனுப்பி வைப்பாh; என்பது மட்டும் நிதர்சனமான உண்மை’

கூடவே, அக்கா கொக்கி போட்டு இயக்க உள்ரகசியங்களை அறிவதற்கும் முயன்று கொண்டிருந்தாள். அவளை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. சனங்களிற்கு ஒரு ஆவல் இருக்கும்தானே. ஒருகடிதத்தில், எப்பொழுது தமிழீழம் கிடைக்குமென்பது மாதிரியான கேள்வியொன்றைக் கேட்டிருந்தாள். இயக்கத்தின் உள்இரகசியங்கள் வெளியாகாமல் நாம் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் அக்கா விடயத்தில் நான் கொஞ்சம் தாராளமாகவே நடந்து கொண்டேன்.

அது ஜெயசிக்குறு நடந்து கொண்டிருந்த நேரம். அப்பொழுது கலைக்கோன் மாஸ்ரர் வாரமொரு அரசியல் வகுப்பு எங்களிற்கு எடுத்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு வாரமும், இரண்டாயிரமாவது ஆண்டு தமிழீழம் என்பதை அடித்துச் சென்னார். நானுமதனை தீவிரமாக நம்பினேன். ஆயிரம் வருட அடிமை வாழ்வில் மாற்றமொன்று ஏற்படுவதற்கான ஏதுநிலையொன்று நிலவிய சூழலது.

ஒரு குத்துமதிப்பாக, ‘புத்தாயிரம் வருடத்தில் புதுவாழ்வு பிறக்கும்’ என்றொரு பதிலனுப்பினேன்.

எவ்வளவுதான் நேசம் கொண்டாடினாலும் அக்காவினது குடும்பம் பற்றி நான் பொடியள் மட்டத்தில் விரிவாகக் கதைத்திருக்கவில்லை என்பதொரு பக்கமிருக்க, அக்காவிடம்கூட அவ்வளவாகக் கேட்டதில்லையென்பதே உண்மை. காரணம், அத்தான். இப்பொழுது எந்த இயக்கத்திலிருக்காவிட்டாலும் அவா; துரோகிதானே. அண்ணாவைப் பிடித்த மண்டையன்குறூப்பில் இருந்தவா; என்பதை விட்டாலும், எங்கள் இயக்கத்திலிருந்த சுருளியைச் சுட்டு கட்டியிழுத்துக் கொண்டு போன ட்ரக்கில் நின்றதை நானே கண்டிருக்கிறேன்.

புதுவருடம் பிறந்த கொஞ்சநாளில் அக்கா ஒரு வாழ்த்து அட்டையனுப்பியிருந்தாள். வெளிநாட்டுக்குப் போனதும் அவள் தமிழ் வருடப்பிறப்பை மறந்துவிட்டாள் போல என நினைத்துக் கொண்டேன். வாழத்து அட்டையுடன் வந்த கடிதத்தில் வலு புதினமான சங்கதியொன்று எழுதப்பட்டிருந்தது. அதாவது அத்தான் இயக்கத்தின் கனடாக்கிளையின் முக்கிய பொறுப்பாளிகளில் ஒருவராம். அவர் வைத்துள்ள கடையிலிருந்து கொடுக்கப்படும் நிதிதான் கனடாவிலேயே தனியொருவரால் கொடுக்கப்படும் அதிகபட்ச தொகையாம். அத்தான் எது சொன்னாலும் இயக்க மேல்மட்டம் கேட்குமாம். எது எப்படியோ, எங்கள் குடும்பத்திலுள்ளவர்கள் எல்லோரது பங்களிப்பும் போராட்டத்திற்குள்ளது என பூரித்திருந்தாள்.

இறுதியில் நாங்கள் எல்லோரும் நினைத்ததற்கு மாறான சம்பவங்கள் நிகழ்ந்து, புத்தாயிரத்தில் தமிழீழம் கிடைக்காமல் போனது. சந்திரிக்காவின் செற்றப்பில்த்தான் ஒசாமா பின்லேடன் அந்த மோட்டு நடவடிக்கையை செய்திருக்க வேண்டுமென்ற வலுவான அபிப்பிராயமொன்று அக்காவிடமிருந்தது. வாசமில்லாத ஒரு பூவாகவே அந்த சமாதானப்பூ மலர்ந்தது. (இந்த வரி என்னுடையதல்ல. அக்கா எழுதிய கவிதையொன்றிலிருந்து சுட்டது.) கதையுடன் கதையாக ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன். எனது அக்கா ஒரு கவிஞர். நல்ல கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார். தனது கவிதைகளை வன்னியில்த்தான் வெளியிடுவேன். அதற்காக விரைவில் வருவேன், உனக்கும் நிறைய உடுப்பு வாங்கி வைத்திருக்கிறேன், சண்டை தொடங்கினால் நன்றாக வெளிக்கிட்டுக் கொண்டு ஹீரோ மாதிரி சண்டைக்குப் போ எனப் பலதரம் சொல்லிக் கொண்டிருந்தாளே தவிர இன்னும் வந்தபாடில்லை. குடும்பம் என்றால் சும்மாவா. ஓன்றுமாறி ஒன்றாக ஆயிரம் சோலிகள் வந்து கொண்டிருந்தன. அவளது வருகை இழுபட்டுக் கொண்டே போனது. இன்னும் கொஞ்சம் தாமதித்தாயெனில் எனக்காக வாங்கிய உடுப்புக்களை உன் பிள்ளைகளிற்குத்தான் கொடுக்க வேண்டுமென ஒருநாள் சொன்னேன். ஊருக்கு வந்த ஒருவரிடம் அடுத்த மாதமே அவற்றைக் கொடுத்துவிட்டிருந்தாள். கனடா உடுப்பென்ற சந்தோசத்தில் பையைத் திறந்தால் எல்லா உடுப்பும் இரண்டேயிரண்டு நிறத்தில்த்தனிருந்தன. ஒன்று பச்சை. மற்றது கறுப்பு. .எனக்குச் சீயென்று போனது. ரெலிபோன் பண்ணித் திட்டினேன். அடுத்த மாதம் இன்னொருவரிடம் இன்னும் கொஞ்ச உடுப்புக்கள் கொடுத்துவிட்டாள். அதிலும் வேறு இரண்டு நிறத்தில்த்தான் உடுப்புக்களிருந்தன. ஒன்று சிவப்பு. மற்றது மஞ்சள்.

ஆத்திரத்தில் மோட்டாh;சைக்கிளையெடுத்துக் கொண்டு கொமினிக்கேசனிற்கு பறந்தேன். அக்காவை ஒரு கிழிகிழித்துவிட வேண்டும். முகாம் ஒழங்கைக்குள்லிருந்து வீதிக்கு வேகமாக ஏறி, எதிர்ப்பக்கத்திலிருந்து சைக்கிளில் வேகமாக ஒரு பெட்டை வந்தாள். என்னால் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியவில்லை. அவளிற்கும் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமலிருந்திருக்க வேண்டும். மோதுப்பட்டு வீதியில் விழுந்துவிட்டோம். எனக்கு ஐந்தும்கெட்டு அறிவும் கெட்டுவிட்டது. வாகனங்களினால் மோதி சனப்பிள்ளைகளிற்கு சேதாரம் விளைவித்தால் அவர்களைத்தான் கலியாணம் கட்ட வேண்டுமென்பது மாதிரியான ஒரு நடைமுறையை இயக்கம் வைத்திருந்தது. பதட்டத்துடனெழுந்து அவளிற்கேதாவது சேதாரமாவெனப் பாh;த்தன். அவள் என்னைவிட பதட்டத்துடனெழுந்து எனக்கேதாவது சேதாரமாவெனப் பார்த்தாள். தாயகத்திற்காக குருதி சிந்த வந்தவர்களின் குருதியை, வீணே நிலத்தில் சிந்த வைத்த பாவம் தன் மீது விழாமல் பதுவைப்பாதிரியாரான அடிச்சிட்ட அந்தோனியார் காப்பாற்றிவிட்டதாக சிலுவையடையாளம் வைத்தாள். இதிலென்ன பகிடியெனில் அதன் பின் அந்த சிலுவையை நான்தான் சுமக்க ஆரம்பித்தேன். சாதாரண சிலுவையல்ல. காதல்ச்சிலுவை.

இருவருக்குமிடையிலான காதல் பெரிய புதினமாகப் பாதிக்கப்படவில்லை. சமாதான நேரத்தில் கன பொடியளிற்கு இந்த மாதிரியான சங்கதியிருந்தது. யாழ்ப்பாணத்திலயிருந்து தொடர்பறுந்த பழைய காதலிகள், மச்சாள்மாரெல்லாம் உறவைப் புதுப்பித்தார்கள். அக்சிடன்ற்பட்டதும் அவ்வளவு படம் காட்டியவள், கொஞ்ச நாளிலேயே என்னை விலத்தி வரச் சொன்னாள். ஓரு மனசன் ஒரு குறிப்பிட்ட காலம்தான் நாட்டிற்காக வாழலாம், உங்கட வாழ்க்கையையும் பாருங்கோ. இயக்க மாப்பிளையைக் கட்ட எங்கட வீட்டில சம்திக்கமாட்டினம் என நச்சரிக்கத் தொடங்கினாள். நானும் விலத்திறதென்ற முடிவெடுத்தேன்.

ஓருநாள் அக்காவிடம் விசயத்தைச் சொன்னேன். கொஞ்சநேரம் எதிர்முனையிலிருந்து சத்தம் வரவில்லை. பிறகு கரகரத்த குரலில் அக்கா எதுவோ அணுங்கினாள். எனக்கு விளங்கவில்லை. கடைசியாய் முணுமுணுத்தது மட்டும் விளங்கியது. ‘எங்கட பிள்ளைக்கு மட்டும் இப்பிடியொரு புத்தியைக் குடுத்தாய் வெல்லனிற் பிள்ளையாரே’

மறுநாள் வௌ;ளைத்தாளொன்றில் வீட்டுக்குப் போக விரும்பும் விசயத்தை இரத்தினச் சுருக்கமாக எழுதிக் கொடுத்தேன். இயக்கம் என்ன முடிவெடுக்குமென்று சரியாய்த் தெரியாததினால, கொஞ்ச நாளைக்கு தொடர்பிருக்காது என்ற விசயத்தை அம்மாவுக்கும் எழுதிப் போட்டிருந்தேன். நான் நினைத்தது மாதிரியே நடந்தது. இன்று இரவு என்னை வேறு இடத்திற்கு ஏற்றினார்கள். ஆறுமாதப் பனிஸ்மன்ற். காட்டுக்குள்ளே ஒரு முகாம் அமைக்கிறதுதான் பனிஸ்மன்ற்காராரின் வேலை. அந்த நேரம் நிறைய ஆட்கள் பனிஸ்மன்ற் செய்ததால் வேலைப் பிரச்சனையிருக்கவில்லை.

ஆறுமாதம் என்று சொன்னாலும், சமாதான காலமென்றதால இயக்கம் பொடியளோட தாராளமாக நடந்து கொண்டது. நாலரை மாதம்தான் பனிஸ்மன்ற். பனிஸ்மன்ற் முடிய, நடுவப்பணிமனைக்கு கொண்டு வந்தார்கள். பதிவு வேலைகள் முடிய இரண்டொரு நாளில் விட்டுவிடுவார்கள். அதுவரை முகாம் வேலைகள் செய்ய வேண்டியிருந்தது.

திடீரெனப் பொறுப்பாளா; கூப்பிட்டு, இன்னொருவனையும் கூட்டி வந்து முற்றத்தை கூட்டச் சொன்னார். நீளவாக்கில் இழுத்து இழுத்து கூட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்து திட்டினார். லோக்கல் பார்ட்டிகள் வரயில்லை. எங்களிற்கு நிறையக் காசு தாற வெளிநாட்டு ஆட்கள் வரப் போகினம், ஒரு ஸ்டைல் வேண்டாமோ என்று, ஏ வடிவில் இழுத்து இழுத்து கூட்டச் சொன்னார்.

கூட்டிக் கொண்டு நிற்கையிலேயே ஆட்கள் வந்துவிட்டனா;. ஓரு கயஸ் வாகனத்தில் ஒரு குடும்பம் வந்திறங்கியது. வெள்ளையாக குண்டாக வந்திறங்கிய பெண்ணைப் பார்க்க அப்படியே அக்கா மாதிரியிருந்தது. எனக்கு இரத்தம் உறைந்தது மாதிரியிருந்தது. இந்தக் கோலத்தில் கண்டாளென்றால் மரியாதை கெட்டுப் போய்விடும். உள்ளே ஒடிவிட்டேன்.

உள்ளுக்கிருந்து கொண்டு நன்றாகப் பார்த்தேன். அக்கா அனுப்பிய புகைப்படத்திலிருந்தவர்களிற்கும் இவர்களிற்குமிடையில் நிறைய வித்தியாசமிருந்தது. நல்லவேளை அக்கா குடும்பமல்ல. ஆனாலும் மனசு அடித்துக் கொண்டுதானிருந்தது. தணியவேயில்லை. வந்தவர்களிற்கு தண்ணீர், சோடா கொண்டு வா என பொறுப்பாளா; கூப்பிட்டால் பிரச்சனையாகிவிடுமென நினைத்து, தப்பிப்பதற்காக வேறொரு திட்டம் போட்டேன். மலசலகூடத்தை நோக்கி ஒடினேன்.

மலசலகூடத்தினுள் நுழைவதற்கு முன்னர், வந்தவர்களை ஒருமுறை எட்டிப் பார்த்தேன். பெண்மணி முதுகைக்காட்டிக் கொண்டு உட்கார்ந்துவிட்டாள். கணவன் போலிருந்தவன்தான் தெரிந்தான். நல்ல வெள்ளையாக, உயரமாக, மெல்லிய தாடியுடனிருந்தான். நன்றாகச் சிரித்தபடி வலதுகையினால் தாடியை வருடியபடியிருந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *