கங்கை தேசத்து மங்கை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 7, 2024
பார்வையிட்டோர்: 1,225 
 
 

அந்நிய நாட்டுப்படைகள் அரண்மணையைச்சூழ்ந்து விட்ட செய்தியறிந்து அந்தப்புரத்தில் இருந்த மகாராணி பைரவி பயத்தால் நடுங்கவில்லை. மாறாக இடுப்பில் வாளை எடுத்து சொருகியவாறு அறைக்கதவருகே போய் நின்றதைக்கண்டு பணிப்பெண்களே நடுங்கினர்.

மன்னர் சிராந்தகன் படைகளை வழி நடத்தச்சென்று விட்டார். இளவரசி மாதவி கோட்டைக்காவலுக்குத்தலைமையேற்று எதிரிகளின் வரவுக்காகக்காத்திருந்தாள்.

வெளியே பல தலைகளை வீழ்த்திக்கொலைகள் அரங்கேறின. கத்தியோடு ரத்தம் வர யுத்தமொன்று நடந்தது. அந்நியப்படை பின் வாங்கியது. போரில் வெற்றி கிடைத்ததாக முரசு கொட்டப்பட்டது. இளவரசி அந்தப்புறத்துக்குத்திரும்பினாள். மன்னர் மாரில் விழுப்புண்களோடு ஒரு வீரராக வந்தார். 

படையெடுத்து வந்தவர்கள் பக்கத்தில் இருந்த சிற்றரசான வேங்கை நாட்டைச்சேர்ந்தவர்கள். காலங்காலமாக வேங்கைக்கும் கங்கை நாட்டிற்கும் தீராப்பகை. குறைந்த வீரர்களே இருந்தாலும் வேங்கை வீரர்கள் மிகவும் குரூரமானவர்கள். போர் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கவோ, பெண்கள், குழந்தைகள் என பாரபட்சம் பார்க்கவோ மாட்டார்கள். கண்ணில் பட்டதையெல்லாம் களையெடுத்துவிடுவார்கள்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன் வேங்கை பேரரசாகவும், கங்கை சிற்றரசாகவும் இருந்தது. பல ஆண்டுகளாக போரிட யாரும் வராததால், எதிர்க்க ஆட்களே இல்லையெனும் நிலையில் மன்னரும் படை பலத்தை அதிகரிக்காமல், சுகபோக வாழ்வில் ஈடுபட்டு வாழ்ந்த நிலையில் சிற்றரசான கங்கை தேசத்து மன்னர் வீரர்களைத்திரட்டி படிப்படியாக முன்னேறி பேரரசின் அரண்மனையையைச்சுற்றியுள்ள சிறிய பகுதி தவிர அனைத்தையுமே தனதாக்கிக்கொண்டார்.

பின்னர் விழித்துக்கொண்ட வேங்கை மன்னர் இருக்கும் வீரர்களை வைத்து கங்கை படையை அவ்வப்போது தாக்கி சேதப்படுத்தி வந்த நிலையில் அமாவாசை நாளான இன்று திடீரென தாக்கியதில் கங்கையின் தளபதி உள்பட பல வீரர்கள் மாண்டதை அறிந்த கங்கை மன்னர் தானே களமிறங்கி வேங்கைப்படைகளை அழித்து போரை முடிவுக்குக்கொண்டு வந்தார்.

அடிக்கடி போர் நடப்பது நாட்டினுடைய வளர்ச்சியைப்பாதிப்பதாலும், ஒவ்வொரு போரிலும் பல வீரர்கள் கொல்லப்படுவதாலும் நிரந்தரமாக போரை நிறுத்துவதற்கான மாற்று வழியை மந்திரிகளையும், முக்கியஸ்தர்களையும் அழைத்து ஆலோசித்தார் மன்னர்.

“இயற்கைச்சீற்றங்களை மனிதர்களால் தடுக்கவே முடியாது. ஆனால் பாதுகாத்துக்கொள்ள முடியும். மேடான பகுதியில் குடியிருப்பது, விலங்குகள் தாக்காமல் இருக்க வேலியமைப்பது, நில நடுக்கம் வந்தாலும் இடிந்து போகாத வீடுகளைக்கட்டுவது, அணைகளைக்கட்டி காட்டாற்று வெள்ளத்தினால் சேதம் வராமல், அதிகமான மழை வெள்ளம் வரும்போது தண்ணீரை சேமித்து வறட்சி காலங்களிலும் விவசாயம் செய்வது போன்ற ஆக்க பூர்வமான நடவடிக்கைகளில் வீரர்களையும், மக்களையும் பயன்படுத்தி மகிழ்ச்சியாக வாழ வழிவகுப்பது தான் சிறந்தது. அதை விடுத்து பகையை வளர்த்துக்கொண்டு அப்பாவி மக்களை, அவர்களது சொத்துக்களை போர் என்று சொல்லிக்கொண்டு அழிப்பது, எந்த நேரமும் இரண்டு பக்கமும் அச்சத்திலேயே வாழ்வது, வறுமையிலிருக்கும் மக்களிடம் போர் வரி வசூலிப்பது போன்ற செயல்கள் மனித இனத்துக்கே அவமானம். இதை தடுத்து நிறுத்த முடியும். தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் பழி வாங்கும் நடவடிக்கைகளால் ஒரு நாள் மனித இனமே முற்றிலுமாக அழிந்து போகும்” என மன்னர் பேசிய பேச்சு அனைவரையும் சிந்திக்க வைத்தது.

ஒரு மாலைப்பொழுதில் அரண்மனை நந்தவனத்தை ரசித்து பார்த்துக்கொண்டிருந்த மகள் மாதவியின் அருகில் வந்து அமர்ந்த மன்னர் சிராந்தகன், “ஏன் நேற்று முதல் என்னோடு பேச மறுத்து கோபமாக இருக்கிறாய்? ” என வினவினார்.

“கோபப்பட என்ன இருக்கிறது? நீங்களோ இந்த நாட்டின் சக்கரவர்த்தி. நீங்கள் எண்ணுவதை நாட்டில் உள்ளவர்களும், வீட்டில் உள்ளவர்களும் கேட்க வேண்டுமென்பது அரசாங்க சட்டம். சர்வாதிகார அமைப்பு கொண்ட மன்னர் ஆட்சியில் மற்றவர்களின் மன விருப்பங்களை கேட்டு முடிவெடுப்பது கனவிலும் நினைக்க இயலாதது” என பேசியது அதிர்ச்சியாகவும், மிகவும் வருத்தமாகவும் இருந்தது மன்னருக்கு.

“நிரந்தர போர் நிறுத்தம் என முடிவெடுத்திருப்பதை நாட்டு மக்களும், வீட்டு மகளும் ஆதரிக்கவே செய்கின்றனர். ஆனால் மகளை பகடையாக்கிய இந்த விளையாட்டை நாட்டு மக்களும் ஏற்க மாட்டார்கள். என்னை வைத்து இக்காரியத்தை சாதிக்க வேண்டுமா? எதிரி நாட்டு இளவரசனை நான் மணக்க வேண்டுமா? மணம் என்பது மனம் சார்ந்தது என்பதை மன்னர் அறிந்திருக்காதது துரதிஷ்டமானதுதான். ஒரு வேளை என்னை மணந்த பின்பு கூட நம்பிக்கையை ஏற்படுத்தி, வேங்கையின் திட்டங்களை நிறைவேற்ற நினைத்தால்…. சட்டங்களை சர்வாதிகாரங்கள் மதிப்பதுண்டா? இல்லையென்பது தான் உண்மையெனும் நிலையில் பழி வாங்க பயன் படுத்திக்கொண்டால்…. கங்கை எனும் பெயரே வரலாற்றில் இல்லாமல் போய் விடும். இதற்கு நான் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன். நீங்கள் எடுத்திருக்கும் முடிவு மக்கள் நலம் சார்ந்தது என்றால், நான் எடுத்திருக்கும் முடிவும் மக்கள் நலம் சார்ந்தது தான்” என மகள் உறுதியாகச்சொன்னதைக்கேட்டவர், “கோபத்தில் எடுக்கும் முடிவுகள் நிலையற்றவை. எனவே சற்று நிதானமாக யோசித்து வை. ஒரு நாள் அல்ல. ஒரு வருடம் கூட எடுத்துக்கொள். ஆனால் முடிவில் மாற்றமில்லை. எனக்கு இதைத்தவிர வேறு வழி தோன்றவில்லை. தவிர இது சபையில் தீர்மானிக்கப்பட்ட முடிவு” என்றவர் சட்டென எழுந்து சென்று விட்டார்.

நாட்கள் உருண்டோடின. மாதவி மனதில் மாற்றத்துக்கான அறிகுறிகள் தோன்றவில்லை. மந்திரிகள் மூலமாக இரண்டு நாடுகளுக்குமிடையே பலதரப்பு பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்தன. இளவரசி மாதவிக்கோ ஒரு முறை நகர்வலம் வந்த போது கோவில் திருவிழாவுக்காக உருவாக்கப்பட்டிருந்த கடையில் பலவித வைர, வைடூரியங்கள், ஆபரணங்கள், பழங்கால அரண்மனைப்பொருட்களைப்பிடித்திருந்ததோடு அதை விற்றுக்கொண்டிருந்த வாலிபனின் அழகிலும், பேச்சுத்திறனிலும் லயித்துப்போனவள் ஒரு முறை வீரர்கள் துணையுடன் மன்னருக்குத்தெரியாமல் தன் அந்தப்புரத்துக்கே வரவழைத்து வேண்டிய நவரத்தினங்களை வாங்கினாள். அதற்க்குரிய விலையைக்கொடுத்ததோடு சேர்த்து தன் மனதையும் அவனிடத்தில் தன்னையறியாமலேயே கொடுத்து விட்டாள்‌. திருமணம் என்றால் வாழ்வில் இவனோடுதான் என முடிவு செய்திருந்தாள். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற இயலாது என்பதை உணர்ந்து பல இரவுகளில் உறக்கமின்றித்தவித்தாள்.

அடுத்த முறை கோவில் விழா வரும் நாளில் அவனைச்சந்திக்க எதிர்பார்த்துக்காத்திருக்கிறாள் என்பது அவளுக்கு மட்டுமே தெரியும். மாறு வேடத்தில் நாட்டை விட்டே தூர தேசம் சென்று சாதாரண குடி மக்கள் வாழும் பகுதியில் தன் மனதுக்கு பிடித்த அவனோடு வியாபாரம் செய்தாவது வாழ்ந்திட வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள்.

விழா தொடங்கிய சில நாழிகை நேரத்தில் திடீரென அரண்மனையைச்சுற்றிலும் அதிகப்படியான வீரர்கள் வந்து பாதுகாப்புக்கு நின்றனர். அரண்மனையே பரபரப்பாக இருந்தது. 

அந்நியன் ஒருவன் அத்து மீறி அரண்மனையில் நுழைந்து விட்டதாக செய்தி பரவியது. இளவரசியும் தனக்கான வாளை எடுத்து தயாராக வைத்துக்கொண்டாள். இரவில் தூக்கத்தைத்தவிர்த்து எச்சரிக்கையுடன் காத்திருந்தாள் மாதவி.

நடு இரவில் புதிதாக ஒரு பணிப்பெண் அந்தப்புறத்தில் மாற்று வழியில் பிரவேசித்தாள். ‘இந்த வழி புதியவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இவளுக்கு எவ்வாறு தெரிந்தது?’ யோசித்த இளவரசி “யார் நீ…?” எனக்கேட்ட போது சில நவரத்தின மாலைகள் அவளிடமிருந்து கீழே விழுந்தன. இவை அபூர்வமானவை, வேங்கை தேச அரசியுடையவை என்பதை ஏற்கனவே ஓவியங்களில் பார்த்திருந்ததை வைத்துத்தெரிந்து கொண்டாள் மாதவி. இவளுக்கு எவ்வாறு கிடைத்தது….? பல ஆண்டுகளுக்கு முன் கங்கை சிற்றரசு வேங்கை பேரரசைப்போரிட்டுப்பிடித்தது கங்கையின் அப்போதைய இளவரசி மாதங்கி ஆசைப்பட்ட இந்த நவரத்தினங்களுக்காகவும் தான். அப்போது போரிட்டுக்கிடைக்காத இவை இப்போது எவ்வாறு பணிப்பெண் மூலமாக இங்கு வந்தது? ஒரு வேளை இவள் வேங்கை தேசத்து அந்தப்புரத்துப்பணிப்பெண்ணோ? அங்கிருந்து திருடி வந்து அதிக தொகைக்கு விற்கும் பேராசையில் தன்னைத்தேடி வந்தவளோ…‌? ‘ என நினைப்பதற்குள் அவள் கட்டியிருந்த சேலை முழுவதுமாக நழுவிய போது அவள் பெண்ணல்ல. தான் சந்திக்கக்காத்திருந்த அதே வியாபாரி….! அவனை வியாபாரி என சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. மாவீரனைப்போன்ற தோற்றமுள்ளவன். தன் மனதைத்திருடிய கள்வன் என்பதைத்தெரிந்து கொண்ட பின் அளவற்ற மகிழ்ச்சியடைந்தாள்.

அடுத்த நாள் அரண்மனையின் சபை கூடியது. மாதவியின் முடிவை எதிர் பார்த்து அனைவரும் காத்திருந்தனர். வேங்கை நாட்டு மகாராணி அணியக்கூடிய, கிடைப்பதற்கரிய, விலை மதிக்க முடியாத அபூர்வ ஆபரணங்களை அணிந்து வந்த இளவரசி மாதவியைக்கண்டு மன்னர் உள்பட அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட சபையின் முடிவை ஏற்றுக்கொண்டு வேங்கை நாட்டின் இளவரசன் மாதவனை மணந்து கொள்ள தனது மனப்பூர்வமான சம்மதத்தை தெரிவித்தாள் கங்கை பேரரசின் இளவரசி மாதவி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *