வியாபாரி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 24, 2023
பார்வையிட்டோர்: 1,712 
 
 

திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத்தந்தையான பின் வேலையை விட்டு விட்டால் குடும்பத்தை நடத்த முடியாது எனத்தெரிந்திருந்தும், ஒரு சிறு சம்பவம் பரமனை பழக்கடை ஆரம்பிக்கத்தூண்டியது. அலுவலகத்தில் சக நண்பர்களிடம் ஆலோசனை கேட்ட போது நஷ்டம், கஷ்டம், முடியாது எனும் வார்த்தைகளே அவர்களிடமிருந்து வெளிப்பட்டது.

ஒரு வாரம் விடுமுறையெடுத்துக்கொண்டு, நகரத்தில் குறைந்த வாடகையில் ஒரு கடையைத்தேடிக்கண்டு பிடித்து, தன் கிராமத்தில் விளையும் பழங்களை, தினமும் வேலைக்குச்செல்லும் போது ஸ்கூட்டரிலேயே எடுத்துச்சென்று கடையில் வைத்து விட்டு, மாலையில் வேலை நேரம் முடிந்ததும் கடைக்குச்சென்று பழங்களை விற்று விட்டு வீடு திரும்புவான்.

விடுமுறை நாட்களில் முழு நேரமாக தன் மனைவியையும் அழைத்துக்கொண்டு போய் கூடுதல் பழங்களை மொத்த வியாபாரிகளிடம் வாங்கி விற்பனை செய்ததில் தான் அலுவலகத்தில் வாங்கும் மாத சம்பளத்தைக்காட்டிலும் சற்று கூடுதலாக வருமானம் வியாபாரத்தில் லாபமாகக்கிடைக்க, பழக்கடைக்கு அருகிலேயே வாடகைக்கு வீடு பிடித்து குடும்பத்தையே கிராமத்திலிருந்து நகரத்துக்கு மாற்றி, குழந்தைகளையும் நகரத்தில் உள்ள பள்ளியிலேயே சேர்த்தவன், தான் வேலைக்கு போகும் நேரத்தில் மனைவியை கடையை பார்க்கச்சொல்லியதோடு, வேலையில்லாமலிருந்த தன் நண்பர் ஒருவரை கிராமத்திலிருந்து தினமும் பழங்களை வாங்கிவர வைத்து, அவருக்கு அதற்க்காக தின சம்பளத்தைக்கொடுத்த நிலையில் வியாபாரம் சூடு பிடித்தது.

கடைக்கு தினமும் வரும் வாடிக்கையாளர்கள் பரமனின் எதார்த்த குணத்தால் நிரந்தர வாடிக்கையாளர்களாக மாறியதோடு, பழங்களோடு மற்ற காய்கறிகளையும், மளிகைப்பொருட்களையும் விற்க்குமாறு யோசனை கூற, பக்கத்திலிருந்த ஒரு கடையையும் வாடகைக்குப்பிடித்து மளிகைப்பொருட்களை விற்றதோடு, வேலைப்பழு காரணமாக வேலையையும் விட்டு விட்டு முழுநேரமாக வியாபாரத்தில் கவனம் செலுத்தினான்.

மற்ற கடைகளுக்குச்செல்லும் வாடிக்கையாளர்களும் தன் கடைக்கு வர, மற்ற கடைக்காரர்கள் பரமனை போட்டியாளராக எண்ணி பொறாமை கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

பரம்பரையாக மளிகைக்கடை நடத்தி வந்தவர்களையே நேற்று வரை வேலையிலிருந்து, வியாபாரத்துக்கு சம்மந்தமே இல்லாத குடும்பத்திலிருந்து, அதுவும் கிராமத்திலிருந்து வந்தவன் கலங்கடித்திருப்பது விளம்பரமா? மந்திரமா? என்றால் அப்படியெல்லாம் இல்லை. யாரையும் வழுக்கட்டாயமாக தன் கடைக்கு வாருங்கள் என அழைப்பதும் இல்லை. பின்பு எப்படி? என பலரும் பலவாறு யோசித்தார்கள். அது ஒரு வகையான, வாடிக்கையாளர்களை ஏமாற்றாமல் வியாபாரி லாபமடையும் வியாபார தந்திரம் என்பது மட்டும் பலருக்கு புரியவில்லை.

பரமனுக்கு சிறு வயதிலிருந்தே வியாபாரத்தில் ஆர்வம் இருந்தாலும், தங்கள் மகன் படித்து வேலைக்குப்போக வேண்டும் என ஆசைப்பட, தனது பெற்றோரின் விருப்பத்துக்காகவே வேலையில் சேர்ந்தான்.

தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு போனாலும் தான் அடிக்கடி வீட்டிற்கு காய்கறிகளும், பழங்களும், மளிகைப்பொருட்களும் வாங்கும் கடைகளின் முதலாளிகளிடம் விற்காமல் தேங்கும் பொருட்களை விற்றுத்தீர்க்க தானாக யோசனை சொல்லுவான்.

‘வாடிக்கையாளர்களை மறைமுகமாக ஏமாற்றக்கூடாது’ என்பான். அதனை ஏற்பவர்கள் அடுத்த முறை அக்கடைக்கு பரமன் போகும் போது நன்றி சொல்வதும் உண்டு. சிலர் கண்டு கொள்ளாமல் நஷ்டப்படுவதும் உண்டு.

‘மளிகைக்கடையிலும் சரி, பழங்கள், காய்கறி கடைகளிலும் சரி காலாவதியாகும் பொருட்களை, காலாவதியாவதற்க்குள், கெட்டுப்போவதற்க்குள் விலையை மாற்றி விற்றுத்தீர்த்து விட வேண்டும்’ என்பான்.

எதிரே உள்ள கடைகளில் தினமும் கெட்டுப்போன பழங்கள், காய்கறிகளை கூடை, கூடையாக குப்பை வண்டிக்கு கொடுப்பார்கள். ஆனால் பரமனின் கடையில் கெட்டுப்போன பழங்களின் கழிவுகள் இல்லாதது கண்டு குப்பை எடுப்பவர்களே ஆச்சர்யப்படுவர்.

பழங்கள் கடைக்கு வந்தவுடன், ஒரு கிலோ மாம்பழம் அன்றைய விலை என்னவோ அந்த விலைக்கே விற்கும் பரமன், அடுத்தடுத்த நாட்களில் தினம் ஒரு விலையென குறைத்து விற்று லாபம் பார்த்து விடுவதோடு, கெடுவதற்க்கு முன் விற்றுத்தீர்த்து விடுவான். நன்றாகக்கனிந்த பழங்கள் அடுத்த நாள் உபயோகப்படாது எனும் நிலையில் அன்று சாப்பிடும் தரத்தில் இருக்கும் போது பாதிக்கு கீழ் விலை குறைத்து விற்பதால் கடையில் கூட்டமும் அலைமோதும், பழங்களும் தேங்காது. சில சமயம் கடை அடைக்கும் சமயத்தில் ஏழைகளுக்கு இலவசமாகவும் கொடுத்து விடுவான்.

‘இயற்க்கை நமக்குக்கொடுத்ததை இயன்றவரை உபயோகப்படுத்த வேண்டும். வீணடிக்கக்கூடாது’ என்பான்.

மற்ற கடைகளில் முதல் நாள் விலையையே நான்காவது நாளும் விற்பதால் கொள்முதலில் பாதி தேங்கி குப்பைக்கு போய்விடக்காரணமாகி விடுகிறது. அவர்களைக்கேட்டால் ‘விலை குறைத்துக்கொடுத்தால் அடுத்த நாள் புதிதாக வரும் பழங்களையும் வாடிக்கையாளர்கள் அதே குறைந்த விலைக்கு கேட்பார்கள். அதனால் ஒரே விலை தான். கெட்டுப்போய் குப்பைக்குப்போனாலும் பரவாயில்லை’, என்பர்.

ஒரு முறை மனைவிக்கு பூ வாங்கிய கடையில் வாடிய நிலையில் இருந்த பூக்களை யாரும் வாங்காமல் போனது கண்டு ஆலோசனை கூறினான்.

“பூ ஒரு நாள் தான் விற்பனைக்கு வைத்திருக்க முடியும். காலையில் விற்கும் விலையையே மாலையும் சொன்னால் அடுத்த நாள் குப்பைக்குத்தான் போகும். மிகுந்த சிரமப்பட்டு பறித்து, கட்டிய பூ யாருக்கும் உதவாமல் போவதால் எந்த பிரையோசனமும் இல்லை. மணிக்கு மணி விலை குறைத்து விற்றால் பூ தேங்காது. நஷ்டமும் வராது. பல பேர் பயனடைவதோடு நிரந்தர வாடிக்கையாளர்களாவர்” என கூறிய யோசனையை ஏற்று லாபமடைந்த பூக்கடைக்காரர், பரமன் எப்போது பூ வாங்கப்போனாலும் பணம் வாங்க மறுக்கும் மனநிலைக்கே மாறிவிட்டாலும் வாங்கும் பூவுக்குரிய விலையை தராமல் பரமன் வரமாட்டான்.

எடையைப்பார்க்காமல் பொருள் வாங்குபவர்களை வியாபாரிகளும், எண்ணிப்பார்க்காமல் பணம் பெறுபவர்களை கொடுப்பவர்களும் ஏமாற்றுவது பெரும் பாவம் என்பான்.

பரமன் முன்பெல்லாம் தானாகவே பழங்களை தேடி எடுக்காமல் கடைக்காரரையே போட்டுத்தரச்சொல்லுவதும், எடையைக்கூட பார்க்காமல் இருப்பதும், சொல்லும் விலையைக்கொடுத்து விட்டு பாக்கியை எண்ணிப்பார்க்காமல் வாங்குவதுமாக இருந்தவன், ஒருநாள் தான் வாங்கிய பழங்களில் அழுகல் பழங்கள் இருந்ததையும், எடை குறைவாகப்போனதையும், பணமும் கிழிந்த அழுக்கு நோட்டுக்களாக இருந்ததையும் கண்டு பல வருடங்களாக நம்பி வாங்கும் கடைக்காரரின் நம்பிக்கைத்துரோக செயலைக்கண்டு அதிர்ச்சியடைந்தவன், அன்று முதல் அந்தக்கடைக்குப்போவதையே நிறுத்திவிட்டான்.

இந்த அனுபவத்துக்குப் பின் தான் தாமே கடை ஆரம்பித்து, வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கைக்குரியவனாக வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கியதின் விளைவாகவே இன்று பிரபலமான, லாபகரமான நிறுவனமாக சிறுகடையை உயர்த்தியதோடு, அந்தப்பெரிய நகரிலேயே சொந்தக்கட்டிடத்தில், பெரிய பல்பொருள் அங்காடி திறந்து , குறைந்த சம்பளத்துக்கு வேலைக்குப்போனவன் இன்று பல வேலையாட்களுக்கு வேலை கொடுக்கக்காரணமானது. சிலரது சிறிய நம்பிக்கைத்துரோகமும் பலரது வாழ்வை மாற்றுவதுண்டு என்பதற்கு பரமனின் வாழ்வே சான்று.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *