தப்பிப் பிழைத்தல்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 18, 2014
பார்வையிட்டோர்: 7,981 
 

அந்தக் கழிவுகள், குப்பைகளைச் சேகரிப்பதற்கான தாங்கி அல்லது பெட்டி நாங்கள் குடியிருந்த தொடர்மாடிக் கட்டடத்திற்கருகாக சென்று கொண்டிருந்த வீதியில் மாநகராட்சியினால் அவைக்கப் பட்டிருந்தது. இவ்விதமான குப்பை சேகரிக்கும் பெட்டிகளை மேற்கு நாடுகள் பலவற்ற்¢ல் ஆங்காங்கே வைத்திருப்பார்கள். மூன்றாம் உலகத்து நாடுகள் பலவற்றில் இவற்றைக் காண்பதே அரிது. இத்தகைய பெட்டிக்குள் குப்பைகளைக் கழிவுப் பொருட்களைப் போடவேண்டுமென்றால் போடுவதற்கு வசதியாக கைகளால் உட்புறமாகத் தள்ளக் கூடியமூடியுடன் கூடியதொரு துவாரம் வைக்கப் பட்டிருக்கும். மனிதர்களால் மட்டும் தான் குப்பைகளைல் இதற்குள் போட முடியும். ஏனெனில் கைகளைப் பாவித்து மூடியை உட்புறமாகத் தள்ளுவதற்குரிய திறமையுள்ள உயிரினத்தால் தான் இது முடியும். ஒருவேளை நன்கு பழக்கப் பட்ட மனிதக் குரங்கான சிம்பான்ஸி அல்லது கொரில்லாக் குரங்குகளால் முடியக் கூடும்.

இந்தக் கழிவு சேகரிக்கும் பெட்டிக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம் என்று கேட்க வருகின்றீர்களா? அவசரப் படாதீர்கள். சிறிது பொறுமையாகத் தான் இருங்களேன். முக்கியத்துவம் இருப்பதால் தானே அது பற்றி இவ்வளவு தூரம் விபரிக்கின்றேன். இந்தப் பெட்டிக்கும் உயிர்களின் முக்கிய்மானதொரு இயல்புக்கும் மிகவும் தொடர்பிருக்கிறது என்பதை நான் கூறினால் ஒருவேளை நீங்கள் சிரிக்கக் கூடும். ஆனால் அவசரப்பட்டுச் சிரித்து விடாதீர்கள். பின்னால் நீங்களே உங்களது அவசரத்துடன் கூடிய அறியாமைக்காக வெட்கித்துக் கொள்ளவேண்டியேற்படலாம். ஜாக்கிரதை.

இந்தத் தொடர்மாடிக் கட்டடத்திற்கு நான் அண்மையில் தான் குடிவந்திருந்தேன். இருள் விலகா அதிகாலைப் பொழுதுகளில், இருள் கவியும் அந்திகளில் என் பெண் குழந்தையுடன் உலாவி விட்டு வருவதற்காக நான் புறப்படுவதுண்டு. அத்தகையதொரு சமயத்தில் தான் என் குழந்தை அந்தப் பெட்டியிலுள்ள அந்த விடயத்தை அவதானித்தாள். அவள் கூறித்தான் நானும் அவதானித்தேன். அவளது அவதானம் எனக்கு வியப்பினையும், பெருமிதத்தினையும் அதிகமாகவே அளித்தது. விளையும் பயிர் முளையில் தெரியுமல்லவா? அவ்விதமானதொரு பெருமை.

விடயம் இதுதான்… கழிவுகளைப் போடுவதற்காக அப்பெட்டியிலிருந்த துவாரத்தின் அருகில் ஒரு ஒழுங்கற்ற வட்டத்தில் இன்னுமொரு துவாரம் காணப்பட்டது. எதற்காக அப்பெட்டியில் அந்தத் துவாரம்? யார் போட்டார்கள்? இவை தான் என் மகளின் வினாக்கள். என்னால் உடனடியாகவே விடை கூறமுடியாமல் போன வினாக்களை என் மகள் கேட்டிருந்தாள். யார் அத்துவாரத்தினை உருவாக்கியிருப்பார்கள்? என்று என் மண்டையினை அதிகமாகவே போட்டுக் குடைந்தேன். உருப்படியான பதில் தெரியவில்லை. அச்சமயம் எனக்குச் சிறுவயதில் படித்த சே.ஐசாக். நியூட்டனின் வாழ்க்கைச் சரிதக் கதையொன்றின் ஞாபகம் வந்தது. நியூட்டன் வீட்டில் ஒரு பூனை இருத்ததாம். அது அவர் அறைக்குள் வருவதற்காக ஒரு துவாரம் சுவரிலிடப்பட்டிருந்ததாம். ஒரு நாள் அந்தப் பெண் பூனை குட்டியொன்றினைப் போட்டு விட்டதாம். அந்தக் குட்டி அவர் அறைக்குள் வரவேண்டுமே. பார்த்தார் நியூட்டன்.உடனடியாக பெரிய பூனை வரும் துளைக்கு அருகிலேயே சிறியதொரு துளையினையும் சுவரில் உருவாக்கி விட்டாராம் சிறிய பூனை வருவதற்காக. இவ்விதமானதொரு அறிஞனொருவரின் அற்புதமானதொரு ஏற்பாடோ இந்தக் கழிவு சேகரிக்கும் பெட்டியிலிருந்த கோணலான வட்ட வடிவத் துவாரமும். கைகளின் வலு குறைந்த குழந்தைகள் குப்பைகளைப் போடுவதற்கானதொரு ஏற்பாடோ?

அதிகாலைகளில், அந்திகளில் இவ்விதமாக உலா வரும் பொழுது நானும் குழந்தையும் ஒவ்வொரு நாளும் அந்தப் பெட்டியினை அவதானித்துக் கொண்டு வரலானோம். யாராவது அந்தத் துவாரத்தினைப் பாவிக்கின்றார்களாவென்று. ஒருவரும் பாவிப்பதாகத் தெரியவில்லை. யாராவது குறும்புக்காரச் சிறார்கள் அதனையிட்டு விட்டு மறந்து விட்டார்கள் போலும் என்றொரு முடிவுக்கு நானும் என் குழந்தையும் வரலானோம்.

இவ்விதமானதொரு பொழுதில் தான், எமது உலாவினை முடித்துக் கொண்டு சிறிது தாமதமாக நாம், நானும், எனது குழந்தையும், இருப்பிடம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த பொழுதுதான் மாநகரசபைத் தொழிலாளியொருவன், ஒரு போர்த்துகேயன், அந்தக் கழிவைச் சேகரிக்கும் பெட்டியிலிருந்த குப்பைகளை கழிவகற்றும் தனது வாகனத்தின் தாங்கியினுள் கொட்டிக் கொண்டிருந்தான்.

“அப்பா! அந்த மாமாவிடம் கேட்டாலென்ன?” என்று என் குழந்தை அந்தத் துவாரம் பற்றி ஞாபகமூட்டவே கேட்டாலென்னவென்று எனக்கு படவே நான் அந்தத் தொழிலாளியிடம் கேட்டேன்.

“ஹாய்! நண்பனே! உன்னிடம் கேட்டால் சிலவேளை இதற்கு விடை கிடைக்கலாம்//”

அதற்கவன் சிறிது வியப்புடன் “எதைப் பற்றிக் கூறுகின்றாய்?” என்று கேட்டான். நான் அந்தத் துவாரத்தினைக் காட்டி “இதுதான். இந்தத் துவாரத்தினை யார் போட்டது என்று உனக்குத் தெரியுமா? என் மகள் என்னைப் போட்டு நச்சரிக்கின்றாள். அவளுக்கு விடை தெரிய வேண்டுமாம்” என்றேன்.

அவன் என் மகளைப் பார்த்து “நல்ல அறிவுள்ள குழந்தை. இந்த வயதிலேயே அதிகமாகக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்து விட்டதே” என்று பாராட்டினான். அத்துடன் “உனக்கு இதற்குரிய விடை தெரிய வேண்டுமானால் பகல் முழுவதும் ஒரு நாள் இதனை அவதானித்து வந்தாயானால் புரிந்து விடும். நான் இப்பொழுதே இதற்குரிய விடையினைக் கூறி விட்டால் இதற்குரிய உன் சுவாரசியம் குறைந்து விடலாம். மாறாக நீயே காத்திருந்து அவதானித்து அறிந்து கொண்டால் அது உனக்கொரு மறக்க முடியாத நல்லதொரு அனுபவமாகவிருக்கலாம்.” என்று கூறி விட்டுச் சென்று விட்டான். எனக்கு அவன் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. வினாவுக்குரிய விடை தெரிந்தால் அதனைக் கூறவேண்டியது தானே. அடங்கிக் கிடந்த எனதும் என் மகளினதும் ஆவலினை இவ்விதம் பெரிதாக அதிகரிக்கச் செய்து விட்டுச் சென்று விட்ட அந்த மனிதன் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஆனால் ஆத்திரப் பட்டு என்ன செய்வது… இந்த விடயத்தில் என் குழந்தை தான் எனக்கு ஆறுதல் கூறினாள்: “அப்பா! நாளை சனிக்கிழமை உனக்கு விடுமுறைதானே. நாம் அந்த மனிதன் கூறியது போல் அவதானித்தாலென்ன?” அவள் கூறியதும் சரியாகப் பட்டது. வேறு வழி?

மறு நாள் காலையிலிருந்து எம் ‘பலகணி’யிலிருந்து அந்த பெட்டியினையே நானும் குழந்தையும் அவதானித்துக் கொண்டிருந்தோம். நண்பகல் வரையில் எந்த வித புதிய தகவல்களையும் அறிந்து கொள்ள முடியவில்லை. சரியாக பொழுது நண்பகலை அண்மித்த பொழுது தான் அந்த அற்புதம் அங்கே நிகழ்ந்தது. ஓர் அழகான, புஸ¤புஸ¤வென்று அடர்த்தியான கறுத்த உரோமத்துடன் கூடிய அணிலொன்று (எம் ஊர் மர அணிலின் அளவிலிருந்த அணில். இவ்விதமான கறுத்த உரோமத்துடன் கூடிய அணில்களைத் தாரளமாகவே டொராண்டோ மாநகரில் அதிகமாகக் காணலாம்.) மிகவும் மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து வந்தது. ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அந்தப் பெட்டியில் காணப்பட்ட அந்தத் துவாரத்தின் வழியாக உள்ளே சென்று மறைந்தது. மிக நீண்ட நேரமாக அந்த அணில் உள்ளேயேயிருந்து ஆனந்தமாக உள்ளே மனிதர்களால் எறியப்பட்ட உணவுக் கழிவுகளை உண்டு தீர்த்தது. அதன் பின் ஆறுதலாக வெளியே வந்து துள்ளிக் குதித்துச் சென்று மறைந்தது. “ஓ! இதுவா விசயம்” என்று என் மகள் ஆச்சரியப் பட்டாள். நானும் தான். அதன் பின் சமயம் கிடைக்கும் போதெல்லாம் அந்த அணிலினை அவதானித்து வந்தோம். அந்த அணிலுக்கோ அந்தக் கழிவு சேகரிக்கும் பெட்டி ஒரு காமதேனு. ஒவ்வொரு நாளும் தனியாகவே வந்து, யாரும் சந்தேகப் படாத விதத்தில், ஆனந்தமாக உண்டு விட்டுச் சென்று வந்தது. யார் கவலைப் ப்படப் போகின்றார்கள். எம்மைப் போன்ற வேலையற்ற முட்டாள்கள் சிலர்தான் கவனித்திருக்கக் கூடும்? ஆனால் முக்கியமாக எம்மைக் கவர்ந்த அம்சம் என்னவென்றால்.. அந்த அணில் இரகசியமாகவே அந்தக் கண்டு பிடிப்பினை வைத்திருந்தது. சக அணில்களுக்குக் கூட அது அந்த இருப்பிடத்தைத் தெரியப்படுத்தவில்லை. ஏனெனில் அது ஒவ்வொரு முறையும் தனியாகவே வந்து சென்று கொண்டிருந்தது. இவை எல்லாவற்றையும் விட மிக ஆச்சர்யமான விடயத்தை என் மகளே ஞாபகப் படுத்தினாள்.

“அப்பா! மிருகங்கள் சிந்திக்குமா?” என்று அவள் கேட்டதற்கு “நம்மைப் போல் அவை சிந்திப்பதில்லை?” என்றேன். அதற்கு அவள் பதில்க் கேள்வி கேட்டாள்:

“அப்படியென்றால்..எப்படி இந்த அணிலுக்கு இதற்குள் உணவு இருக்கிற விடயம் தெரிந்தது?”

“அதுதான் எனக்கும் தெரியவில்லை” என்றேன்.

“அப்படி உள்ளே உணவிருக்கிற விடயம் தெரிந்ததும் எவ்விதம் அதற்கு இவ்விதம் துவாரமொன்றினை ஏற்படுத்தி உள்ளே செல்லவேண்டுமென்ற விடயம் தெரிந்தது? அப்படியென்றால் அது சிந்தித்திருக்கிறது தானே?”
என்று கேட்ட என் மகளுக்கு என்னால் இவ்விதம் தான் பதிலினைக் கூற முடிந்தது:

“மகளே! அற்புதமானவிந்தப் பிரபஞ்சத்தில் நம்மால் அறிந்து கொள்ள முடியாத விடயங்கள் எவ்வளவோயுள்ளன. ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது உயிரினம் எத்தகைய சிரமமான சூழல்களிலும் தப்பிப் பிழைக்க வழியொன்றினைக் கண்டு பிடித்து விடும் என்பது தான் அது மகளே!”

அதற்கவள் சிரித்துக் கொண்டே “உன்னைப் போல அப்பா” என்றாள். என் மகள் எவ்வளவு சூட்டிகையான குழந்தையென்று தூக்கி அணைத்துக் கொண்டேன்.

நன்றி: திண்ணை, பதிவுகள்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *