விதி வசம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 26, 2024
பார்வையிட்டோர்: 670 
 
 

(1924ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குசிகர் குட்டிக் கதைகள் – மூன்றாம் பாகம்

சிவனார் சிரித்த திரிபுரம் போல் இந்நாள்
நவமாக எம்மை நலியும்-அவமெல்லாம்
நான் சிரிக்க வே அழிய நாவினின்று நீ மொழிக
தேன் சிரிக்கும் வெண்மலர் மா தே.

இவை

பத்மாவதி சரித்திரம், விஜயமார்த்தாண்டம், முத்து மீனாக்ஷி , 4 உதயலன், திருமலை சேதுபதி, சித்தார்த்தன், புத்தசரிதை, பால ரொமாயணம், பாலவிநோதக் கதைகள், பொது தர்ம சத்கீதமஞ்சரி, புதுமாதிரிக் கலியாணப் பாட்டு, ஆசாரச் சீர்திருத்தம், பாரிஸ்டர் பஞ்சந்தம், தில்லைக் கோவிந்தன் முதலிய பல பிரபலமான நூல்களின் ஆசிரியரும், பஞ்சாமிர்தம் பத்திராதிபருமான அ. மாதவையர் இயற்றியன.
சென்னை
ஆசிரியர் அச்சுப்பிரசுராலயம் – புஸ்தகசாலை,
எட்வர்டு எலியட் ரோடு–மயிலாப்பூர்
1924

விதி வசம்

பின் வரும் சிறுகதை பெயர்போன ஆங்கில வித்வான் ஒருவர் இயற்றி இயற்றியது :- அழகும் அந்தஸ்தும் ஐசுவரியமும் வாய்ந்த யௌவன கனவான் சவிலன் என்பவன், எவ்விதத்திலும் தனக் கேற்றவளான ஓர் யுவதியின் மேல் காதல் கொண்டு, மேல் நாட்டு வழக்கப்படி அவளுடன் பழகி, அவள் காதலையும் பெற்றானாக, மண முகூர்த்த தினமும் குறிக்கப்பட்டது. இதனிடையிலே, ஒரு நாள், ஒரு விருந்துக்கூட்டத்தில், பிறர் பலர் கைகளைச் சோதித்து உள்ளதை உள்ளவாறு கூறிய ரேகை சாஸ்திர நிபுணன் ஒருவன், சவிலன் கைரேகைகளையும் பரிசோதித்து, முடிவில், அந்தரங்கமாகச் சவிலனிடத்தில் மட்டும் தான் கண்ட உண்மையைத் தனித்துக் கூறினான். அதாவது, சவிலன் தன் வாழ்நாளில் ஒரு கொலை புரிவான் என்பதே. இரேகை சாஸ்திரியின் மேல் முழுநம்பிக்கை கொண்டுள்ள சவிலன், விலக்க முடியாத விதிவசமாக அதை முற்றிலும் நம்பி மனம் பதைத்துக் , கடைசியில், தன் காதலியை தான் மணந்த பின்னர் விதிவசப்படி யாரையோ கொலை புரிந்து அதனால் விளையும் துன்பத்துக்கு அவளையும் உட்படுத்துவதினும், தான் சிக்கிக்கொள்ளாத விதமாகச் சூழ்ச்சி செய்து, உடனே ஒரு கொலையைச் செய்து விட்டு, பின்பு அவளை மணம்புரிந்து சுகமாக வாழ்வதே உசிதமென்று தீர்மானித்துக்கொண்டான்.

உடனே அவன் தன்னுள் ஆலோசித்து, யாரும் அறியாமே, பைத்தியம் பிடித்த நாயைக் கொல்வதற்கென்று கொடிய விஷக்குளிகை ஒன்றை விலைக்குவாங்கி, அதை யோர் அழகிய செப்பில் வைத்து, எப்பொழுதும் சூலை நோயினால் வருந்திக்கொண்டிருந்த தன் சமீப பந்து வான ஒரு கிழவியிடம் அதைக்கொண்டுபோய்ச் சூலை நோய்க்கு அது கைகண்ட மருந்தென்று சொல்லி கொடுத்துவிட்டு, அயலூர் போய்விட்டான். சவிலன் எதிர்பார்த்த வண்ணமே, இரண்டு மூன்று நாள் கழித்து, அக்கிழவி அன்று காலை படுக்கையில் இறந்து கிடந்தனளாகப் பத்திரிகைகள் மூலமாக அறிந்தான். சூலை நோயினாலும் வயோதிகத்தினாலும் அவள் இறந்த தாகவே யாவரும் கொண்டார்கள். சவிலன் மேல் எவ ரும் சந்தேகப்படவில்லை. அக்கிழவியின் மாண சாசனப் படி, அவள் சொத்தெல்லாம் சவிலனுக்கே சொந்தமாயின. ஆகவே, சவிலன் சந்தோஷமாகத் திரும்பிவந்து, தன் காதலியுடன் அக்கிழவி யிருந்த வீடு சென்று, அவள் பண்டங்களை யெல்லாம் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது, அவன் காதலி, ஒரு பெட்டிக்குள் இருந்து ஓரழகிய செப்பைக் கண்டெடுத்து, சவிலனிடம் காட்டினாள். அதுவே சவிலன் கிழவிக்குக் கொடுத்த செப்பு. அதை அவன் திறந்து பார்க்க, அதற்குள் அவ்விஷ மாத்திரையும் அப்படியே இருந்தது. உடனே, கிழவி தன்னால் கொல்லப்படவில்லை, அகஸ்மாத்தாகவே இறந்தாள் என்று சவிலன் அறிந்து கொண்டு, மறுபடியும் பெருங்கவலை கொண்டான். தன் காதலியிடமோ ஒன்றும் சொல்ல முடியவில்லை. கிழவி மரணத்தை யறிந்தவுடன் நிச்சயிக்கப்பட்ட மண முகூர்த்தம் பின்னும் மாற்றப்பட்டது. இவ்வண்ணமே சவிலன் தன் புத்திக்கு எட்டியமட்டும் பலவாறு சூழ்ந்து, வெடி மருந்தினாலும், இயந்திரப் பொறியினாலும் ஒரு கொலை செய்ய முயன்றான்; ஒன்றும் பலிக்கவில்லை. அவன் காதலியைப் பெற்றோர், மண முகூர்த்தத்தை அவன் பலமுறை மாற்றித் தாமதம் செய்வதைப் பொறாதவராய், அவளை வேறொருவனுக்கு மணம் புரிந்து கொடுப்பதாகப் பேசலாயினர். சவிலன் பயந்து மனங்குழம்பி, தான் சிக்கிக்கொள்ளாமல் எவ்வாறு எவனாவது ஒருவனைக் கொலை செய்வது என்று ஆலோசித்துக் கொண்டு, ஒரு நாள் முன்னிரவில், தேம்ஸ் நதியின் பாலத்தின் வழியாய் நடந்து செல்லும் பொழுது, தனக்குக் குறி சொன்ன ரேகை சாஸ்திரி, அப்பாலத்தின் ஒரு பக்கத்துக் கிராதியின் மேல் குனிந்து, கீழே விரைவாய் ஓடும் நதியைப்பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். அக்கம் பக்கம் எவரும் இல்லை. உடனே, சவிலன், பூனை போல் பதுங்கிச்சென்று, திடீரென்று ரேகை சாஸ்திரியின் இரண்டு கால்களையும் மேலே தூக்கி, அவனைத் தலைகுப்புற நதிக்குள் தள்ளிவிட்டான். பின்பு சவிலன் கவலையெல்லாம், அவன் ஒருவேளை, நீந்திக் கரையேறிப் பிழைத்து விடலாம் என்பதே. இரண்டு நாள் கழித்து, ரேகை சாஸ்திரியின் பிரேதம் கரையில் ஒதுங்கிக் கண்டெடுக்கப்பட்ட தாகவும், அவன் தற்கொலை செய்துகொண்டிருக்க வேண்டுமென்றும் பத்திரிகைகள் கூறினதைச் சவிலன் வாசித்து, மனவேதனை நீங்கி, தன் காதலியை மணம் புரிந்துகொண்டு, சுகமாக வாழலானான்.

இக்கதையில் நாம் கவனிக்கத்தக்கது, விதிவசம் என்று கூறும் ஒன்றில் சிலர்க்குள்ள முழு நம்பிக்கையே. ஊழ், விதி, தெய்வம், பழவினை, தலையிலெழுத்து, பிரமனெழுத்து, லலாடலிபி, கர்மம், பிராரத்துவம் என்பன யாவும், “தன் வினை தன்னைச்சுடும்” “அவரை போட்டால் துவரை முளையாது” என்னும் முதுமொழிகளுக்கு இணங்க, இருவினைப் பயன்கள் செய்தவனையே சென்றடைதற்கு ஏதுவாகும் நீதியைக் குறிப்பனவே. பரத கண்டத்திலே, இக்கோட்பாடு, தோட்டி முதல் தொண்டமான் வரை, பாமரர் பண்டிதர் என்னும் பேதமின்றி, ஹிந்துக்களாவார் யாவராலும் கைப்பற்றி நம்பப்படுகின்றமை சொல்லாமே நன்கு விளங்கும். ஹிந்துக்கள், மேற்கூறிய கதையிலே சவிலனைப்போல, அதைக் குருட்டு விதியாகவேனும், அல்லது கடவுள் ஆக்கினையாகவேனும் நம்புவ தில்லை; விதியை எதிர்கொண்டு, விதிவசத்திலுள்ள நம் பிக்கையினால் தூண்டப்பட்டு, வேண்டுமென்றே கேடு செய்வதுமில்லை. ஹிந்துக்களது நம்பிக்கை: ஒவ்வொரு ஆன்மாவும் முத்திபெறும் வரை சகடக் கால்போல மாறி மாறிப் பிறக்கவும் சாகவும் செய்கின்றது; இருவினைப் பயனும் செய்தவனையே சேர, அவன் அதை அனுபவித்தே தீரவேண்டும், என்னும் கொள்கைகளை அடிப்படியாகக் கொண்டுள்ளது. “போன ஜன்மத்தில் என்ன பாவத்தைச் செய்தேனோ, இப்பொழுது இந்தக் கஷ்டத்தை அனுபவிக்கிறேன்”. “அவன் என்ன புண்ணியத்தைச்செய்தானோ, அந்தச் சுகத்தை அனுபவிக்கிறான்” என்னும் வசனங்கள், ” றத்தாறிதுவென வேண்டா, சிவிகை, பொறுத்தானோ டூர்ந்தான் இடை” என்னும் குறளிலே தொனிப்பது மாத்திரமோ, சாதாரணமாய் மனித சஞ்சாரமுள்ள எங்குமே பாக்கக் கேட்கப்படுகின்றன.

மேனாட்டு மேதையர் சிலர், ஆன்மா என்பது ஒன்று மாணத்துக்குப் பின்னும் நிலைத்துளதோ என்பதைப் பற்றி சந்தேகமாகக் கூறுகின்றனர், அத்தகைய ஆன்மா ஒன்றுளது என்று நிச்சயமாக நம்புவோரும், ஒரு பிறவிக்கு மேலில்லை என்பர். நமது நாட்டிலோ ஆன்ம விஷய ஞானம் மிக வளர்ந்தேறியுள்ளது. மேனாட்டில் சந்தேகத்துக்கும் வீண்வாதத்துக்குமே பொருளாகும் விஷயங்கள் பலவற்றை, நம்முள் பாமாரும் அறிந்திருக்கின்றனர். நமது முன்னோர் கண்டுபிடித்த அரிய பெரிய தத்துவங்கள், தொன்று தொட்டு இன்று மட்டும் கர்ண பரம்பரையாக வந்து, சாதாரண ஜனங்களுக்குள்ளும் வழங்குகின்றன. இவ்வாறு வழங்கும் கோட்பாடுகளுள், வினைப்பயனைக் குறிக்கும் விதிவசம் என்பது அதி முக்கியமானது. கர்மம், மறுபிறப்பு, இவ்விரண்டுமே ஹிந்து மதத்தின் மூலாம்சம் என்பார் பலர். ஆகவே, இவ்விஷயத்தில் நமது நம்பிக்கை சிறிதேனும் தவறாமல் இருப்பின், மிக்க கேட் டுக் கிடமாகும் என்பது கூறாமே விளங்கும்.

இதை எழுதப்புகுந்தது, விதிவசத்தைத் தழுவிய பொதுஜன அபிப்பிராயம் சிறிது தவறாக இருக்கின்றது ; அவ்வழுவினால் நமது நாட்டுக்கே பெருங்கேடு விளைந்திருக் கிறது; அவ்விதக் கேடு நீங்குவதற்கு, அவ்வபிப்பிராய பேதம் மாறிச் சீர்திருந்துவது இன்றியமையாதது, என் னும் இந்த எண்ணத்தினால் தூண்டப்பட்டே. விதியின் வலியைப்பற்றியும், தேவர்களாலும் விதியை விலக்க முடியாதென்பதை விளக்கியும், நமது இதிகாச புராணங்களில் ஆயிரக் கணக்கான கதைகள் உளவெனினும், பரமாத்மா வின் கிருபை மட்டு முண்டாயின், சீவாத்மாக்கள் கர்ம பலனை எளிதில் விலக்கி விடலா மென்பது பக்தியோக மார்க் கத்தின் அடிப்படையாகும். “கர்மமானது கோடி கூடி நின்றாலும் நின் கருணைப்ரவாக அருளைத், தாகமாய் நாடினரை வாதிக்கவல்லதோ?” என்றார் தாயுமானவர். அவ் வருள் எவ்வாறு உண்டாகும் என்பது, தமியேற்கு அருள் தாகமோ சற்றுமிலை” என்னும் அடுத்த வாக்கியத் தால் வெளிப்படையாகும். அதாவது: மனிதனது இரு வினைக்கும் மனமே காரணமாகின்றமையால், அம்மனத்தின் போக்குப்படியே வினையும் நிகழும் என்பது தெளிவு. கடவுளினது அருளை மனது வேண்டினால், அதற்கேற்ற செயல்களைச் செய்வித்து அவ்வருளைப் பெறும் என்பது திண்ணம். ஆகவே, மேனாட்டு மேதை ஒருவர் கூறியது போல, இவ்வுலகத்திலே, “மனிதனிற் பெரிய தொன் றில்லை; மனிதனுள், மனதிற் பெரிய தொன்றில்லை” என்பது, கேவலம் உண்மையே. இது நிற்க,

ஒவ்வொரு மனிதனும் தான் செய்த வினையின் பயனை அனுபவித்தல் நியாயமே; ஆயினும், மனிதனது ஆத்மா அவ்வினைப் பயனுக்கு அடிமையாகவே ஒழுகக் கடவது என்பது தவறு. எப்படி மனிதன் தன் வினையினால் ஒரு பயனை விளைக்கிறானோ, அப்படியே அவன் தன் வினையினால் அப்பயனை மாற்றவும் கூடும். இருவினைப் பயன் தத்தம் சக்திக்குத் தக்கபடி மனிதனை ஆட்டுவிக் கும் என்பது மெய்யே; ஆயினும், ஆக்கும் வன்மையுள்ள விடத்து, தான் ஆக்கியதை மாற்றவும் அழிக்கவும் வன்மை யிருக்கு மென்று நம்புவதே பொருந்தும். உதாரணமாக, ஒரு தோட்டக்காரன் நிலத்தைப் பண்படுத்தி புல்லை விதைத்ததாக வைத்துக்கொள்ளுவோம். அப்புல் முளைகிளம்பு முன்னரோ, முளைகிளர்ந்து வளரும் பொழு தோ, அதை மாற்றி எள்ளைப் பயிர்செய்ய வேண்டு மென்ற எண்ணம் அவனுக்குண்டானால், அவன் அப்படியே செய்யக்கூடாதோ? வெறும் நிலத்தைப் பண் செய்து எள் விதைப்பதினும், புல்லடர்ந்த நிலத்தைக் களை பிடுங்கி பண் படுத்தி, எள் பயிர் செய்து, பூமியின் சாரமெல்லாம் எட்பயிரையே சேரவும், புற்பயிர் ஒன்றுமே இல்லாத தாகவும் பயிர் செய்தல், அதிக சிரமமான வேலையே, அதில் சந்தேகமில்லை. ஆயினும், மனவூக்கமும் விடா முயற்சியும் உளவாயின், அது முடியாத காரிய மன்று. வி திவசம் என்னும் முன் வினைப்பயன் விஷயத்திலும் இது பொருந்தும். ஊழ் வலியைப் பற்றிக் கூறும் பொழுது, திருவள்ளுவர், ஊழானது முயற்சிக்கும் மடிக்குமே காரணமாகு மென்றும், மற்றொன்று சூழினும் தான் முந்துறும் என்றும், அறிவையே பேதைப் படுக்கவும் விரிக்கவும் செய்யுமென்றும் கூறியுள்ளாராயினும், அவரே, “தெய்வத்தானாகா தெனினும், முயற்சி, தன் மெய்வருத்தக் கூலி தரும்” என்றும், “ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவின்றித் தாழாது ஞற்றுபவர்” என்றும் கூறியிருப்பது, மறக்கற் பாலதன்று, ஆகவே, மனிதன் விதிக்கு அடிமை யல்லன், அதை முன் வினையால் விளைத்தது போலவே பின் வினையால் மாற்றவும் வலிமை யுடையான் என்பது, யுக்தி புத்திக்கு மாத்திரமோ, பெரியோர் அபிப்பிராயத்துக்கும் ஒத்ததாகும். மகுடாபிஷேகத்துக் குக் குறிப்பிட்டிருந்த முகூர்த்தத்திலேயே வனவாசம் விதிக்கப் பெற்ற ஸ்ரீராமன், கோபமுற்ற தன் தம்பியை நோக்கி:

“நதியின் பிழையன்று நறும்புன லின்மை; அற்றே:
பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழையன்று; மகன் பிழை யன்று ; மைந்த!
விதியின் பிழை; நீ இதற் கென்னை வெகுண்ட தென்றான்”

இவ்வாறு விதிவச மென்று கூறிய அண்ணனுக்கு இலக்குமணன் அளித்த விடை கவனிக்கத்தக்கது:

‘கோளிழைத்தாள் மதிக்கும் மதியாய், முதல் வானவர்க்கும் வலீ இதாம் விதிக்கும் விதியாகும் என் வில்தொழில் காண்டி என்றான்.” ஆகவே, தேவர்கட்கும் வலிய தான தெய்வ சங்கல்பம் என்று சொல்லப்படும் விதியும் கூட, மனுஷப் பிரயத் தனத்துக்கு அடங்காத தில்லை என்பது மலையிலக்காயிற்று. விதியென்று சொல்லப்படும் வினைப்பயனது வலியை எடுத் துக்காட்டும் கதைகள் பல உளவேனும், தமது ஊக்கத் தாலும் விடா முயற்சியாலும் விதியை வென்று மேம் பட்டவரது சரித்திரங்களும் எத்தனையோ உள ஆதலால், இயற்கையில் அமைந்த புத்தியும் தேகவலியும் உள்ள மட்டும், என்ன கேடு நேரினும், என்ன இடையூறுகள் குறுக்கிடினும், விதிவசத்தை நொந்து சும்மா இருத்தல் ஆண்மைக் கழகன்று, பெண்மைக்குப் பெருமையு மன்று. விதிவசத்தையே முழுதும் நம்பி ஒரு மனிதனுமே நடக்க வில்லை என்பது திண்ணம். ஏனெனின், விதிபோல் நடக்கிறதென்று, தான் இருந்த இடத்திலேயே மண் சுவர் போல வீற்றிருப்பான் எவனையும் கண்டிலேம். சாதாரண முயற்சியுடன் செய்யும் வினைகளில், தடைகளும் நிர்ப்பந்தங்களும் சங்கடங்களும் நேரும்பொழுது தான், மாந்தர் மனந் தளர்ந்து விதியை நொந்து மலைக்கின்றனர். அத்தறு வாயில்தான் முயற்சியின் வன்மையையும் ஊக்கத்தின் பெருமையையும் ஊன்றி நினைந்து ஒழுகவேண்டுவது. விதிவசம் என்பதின் போலிக்குணம் சொற்ப யோசனைக் கும் வெளிப்படும். தம்மனம் போனபடி, கடவுள் ஒருவர் சிலரைச் செல்வராகவும், சிலரை வறியராகவும், சிலரை யஜமானராகவும், சிலரை அடிமைகளாகவும் சிருஷ்டித்தார் என்று கூறுவது, கடவுளின் குணத்தையே இகழ்வதாகும். ஆதலின், உலக வாழ்க்கையிலே காணப்படும் ஏற்றத் தாழ்ச்சிகள், மாந்தரது முன் வினைப்பயனென்று கூறுதலே பொருந்தும். அங்ஙனம் கூறுவதில், மனுஷப் பிரயத்தனத்தை மிஞ்சியதும், ஊக்கத்துக்கும் விடாமுயற்சிக்கும் எட்டாததுமான ஒன்று உளதென்று நம்புவது, யுத்தி புத்திக் கேனும் அனுபவத்துக் கேனும் பொருந்தவில்லை. ஆகவே, விதிவலியதே எனினும், மதி அதனினும் வலியதென்பதை மறவாமே ஒழுகும் மாந்தரே மக்களுட் சிறந் தோராவர்; மற்றோர், மக்கட் பதடிகளாகவே எண்ணப் படுவர்.

நமது நாட்டார் யாவரும் இவ்வுண்மையை ஒரு கணமும் மறவாது, தமக்கும் தம் தாய் நாட்டுக்கும் எக்குறையும் நேராத வண்ணம், ஊக்கத்தோடும் விடாமுயற்சியோடும் ஒழுகுவாராக!

– குசிகர் குட்டிக் கதைகள் – மூன்றாம் பாகம், 1924, ஆசிரியர் அச்சுப்பிரசுராலயம் புஸ்தகசாலை, மயிலாப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *