வேதாளம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 14, 2018
பார்வையிட்டோர்: 4,093 
 

இந்தக் கதைக்குள் போவதற்கு முன்பு ஒரு குறிப்பு.

சிவன் கோயில் ஒன்றின் கருவறையில் சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறிய ரகசியங்களை அர்ச்சகர் ரகசியமாக ஒட்டுக் கேட்டமையால் அவரை வேதாளமாகப் போக இறைவன் சாபமிட்டார் என்றும், சாபவிமோசனமாக விக்கிரமாதித்த மன்னன் உதவுவான் என்றும், அதன் படியே முருங்கை மரத்தில் தொங்கி கொண்டிருக்கும் வேதாளத்தினை விக்கிரமாதித்த மன்னன் கொண்டு வருவதாகவும், அந்த வேதாளம் மிகவும் அறிவுக் கூர்மை உள்ள கதைகளை கூறி விக்கிரமாதித்தனிடம் இருந்து தப்பி மீண்டும் முருங்கை மரத்திலேயே தஞ்சம் அடைவதாகவும் பிற்காலத்தில் விக்கிரமாதித்தன் அதைக் கைவிட அது முருங்கை மரத்தில் இருப்பதில் இனி எந்த அர்த்தமும் இல்லை என்பதை விளங்கிக் கொண்டு, அந்த மரத்தை விட்டு இறங்கி, சிறிய உருவம் எடுத்து, மனிதர்களை முருங்கை மரமாக நினைத்துத் தொங்கத் தொடங்கியதாகவும் அறிந்த பின் இந்தச் சம்பவம் சம்பவித்து இருப்பதாகவும் வருகிறது..

விக்கிரமாதித்தியன் காலத்து வேதாளம் ஒருவரின் கூட்டிற்குள் புகுந்து கொண்டு முருங்கை மரத்தில் தொங்கியது. இந்த வேதாளம் நவீன காலத்திற்கு ஏற்ப வித்தியாசமாக மூர்ப்பு எய்தி தனது இருப்பிடத்தை விட்டு வேறு இருப்பிடம் தேடியது. அது எப்படி வந்து என்னோடு சேர்ந்தது என்பதை பின்பு நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

நான் சிறுவனாக இருந்த போது எங்கள் வீட்டில் நாய்க்குட்டி வளர்த்தேன். பூனை வளர்த்தேன். நாட்டுக் கோழிகள் எங்கும் உலாவித் திரியும். சில வேளை அதன் எச்சத்தை மிதிக்காது நடப்பதற்குப் பாம்பு நடை நடப்பேன். பாம்பு மட்டும் வீட்டில் வளர்ப்பது கிடையாது. பாம்பு என்று கேட்ட உடனேயே பயத்தில் அங்கம் நடுங்கியதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. நான் வளர்த்த நாய்க் குட்டிக்கு பாசமிகுதியால் பிறத்தியாரின் ஆட்டைப் பிடித்துப் பால் கறுந்து பருகக் கொடுத்து இருக்கிறேன். வீட்டில் மாடும் நின்றது. அதனிடம் பல் கறக்க நான் போக முடியாது. அது கறுப்பு நிறமான ஊர் மாடு. அம்மா மாத்திரம் கால்கட்டு போட்ட பின்பு அதனிடம் இருந்து பால் கறப்பா. கால் கட்டுப் போடாவிட்டால் காலனை அது தன் காலிற் காட்டும். இதை விட இயற்கையாகக் கிளிக் குஞ்சைப் பனங்கொட்டில் ஏறி மடக்கி வந்து கூண்டில் அடைத்து வளர்த்த இருக்கிறேன். காகம் குயிலின் குஞ்சைக் கண்டாலும் அதற்கு அருகே செல்லப் பயந்து அதை விட்டு விடுவேன். சும்மாவே அது கலைத்துக் கொத்தும் என்பது எனக்கு நன்கு தெரியும். குஞ்சைப் பிடிக்கப் போனால் விமானம் போல திரும்பி ஏவுகணை போல் பாயும் என்கின்ற பயம். அதனால் வந்த ஒரு வித மரியாதை அதனிடம். அதனால் எந்தச் சேட்டையும் விடுவது இல்லை. அதே வேளை அதன் மீது அன்பும் இல்லை. பாட்டியின் வடைக் கதை எனக்கு ஏற்கனவே தெரியும். இப்படி இருந்தும் எனக்கு ஒரு நல்ல செல்லப் பிராணி கிடைக்கவில்லை என்கின்ற ஒரு ஏக்கமும் என்னிடம் இருந்தது. இப்படியாக இருக்கும் போது இடையில் தான் அந்த வேதாளம் என்னை எப்படியோ தனிமையில் கண்டு பிடித்து ஒரு மடையன் அகப்பட்டான் என்று என்னிடம் வந்த சேர்ந்தது. முதலில் அதை எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பார்க்கப் பயமாகவும் இருந்தது. பாவமாகவும் இருந்தது. அதை வைத்து இருக்க வேண்டுமா இல்லையா என்பதுகூட எனக்கு முதலில் விளங்கவில்லை. ஆனால் அது என்னை விட்டு விலகுவதாக இல்லை. முருங்கை மரத்தை அல்லது புளியமரத்தை தேடிப் போவதாகவும் இல்லை. அது முருங்கை மரத்தை அல்லது புளியமரத்தை தேடிப் போய் இருந்தால் நான் சந்தோசமாக விட்டிருப்பேன். விக்கிரமாதித்தியன் போல் அதை இழுத்து தோழில் போட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இந்த வேதாளம் அப்படியான உருவம் இல்லாதது. இது என்னோடு மறைவாகத் தொங்க நினைத்த வேதாளம்.

நான் ஐந்தாம் வகுப்பு வரையும் சக்கட்டை என்று வெற்றிகரமாகப் பெயர் எடுத்தவன். கடைசி மேசையில் எனக்கு எப்போதும் நிரந்தர இடம். அதற்குத் தேர்தல் எல்லாம் கிடையாது. நித்தமும் அடி வேண்டிப் பெருமை சேர்த்த எனக்கு ஓரே ஒரு நாள் பாம்பு ஒன்று வயலில் போடப்பட்டு இருக்கும் தகரக் கொட்டிலில் இருந்து ஓடுவது போன்று வரைந்ததிற்குப் பாராட்டுக் கிடைத்தது. அடிக்கும் அதே ஆசிரியை பாராட்டியதில் அளப்பரிய ஆனந்தம். பெருமை. அது தான் எனக்கு வாழ்கையில் கிடைத்த நினைவிருக்கும் முதற் பாராட்டு. அன்றில் இருந்து எனக்குப் பாம்பு மீதும் பாசம் ஏற்படத் தொடங்கியது. அது எப்போது என்னோடு வாழத் தொடங்கியது என்பது எனக்கு சரியாகத் தெரியாது. அதனால் அதைப்பற்றி இப்போது பிரஸ்தாபிக்காமல் மேலே செல்வோம்.

அன்று நான் பாடசாலை முடிந்து தனியே வரும்போது இந்த வேதாளம் என்பின்னால் பயந்து பயந்து வந்தது. நான் முதலில் அதைக் கண்டு கொள்ளவில்லை. சூ என்று கலைத்துக்கூடப் பார்த்தேன். அது பௌவியமாகத் தலையைக் குனிந்து வாலைப் பதித்துக் குழைந்தது. நிலத்தில் படுத்து என்னிடம் சரண் அடைவதாய் நடித்தது. மன்னிப்புக் கேட்டு மண்டி இடுவதாய்க் கூறியது. எனக்கு மிகவும் பாவமாக இருந்தது. வேதாளம் நடிக்கும் என்று எல்லாம் நான் படித்திருக்கவில்லை. ஆனால் அது இயல்புக்கு மாறாய் செய்தது எனக்கு வியப்பைத் தந்தது.

நான் மீண்டும் நடந்தேன். வேதாளம் மெதுவாக என்னைத் தொடர்ந்தது. சூ என்றேன். நிலத்தில் படுத்து ம்… என்று பாவமாக அனுங்கியது. உதவி செய்யாவிட்டாலும் இம்சிக்காமல் விடுவோம் என்று நான் நடந்தேன். அது என் பின்னால் என்னைத் தன் எசமானான ஏற்றுக் கொண்டதாய்த் தொடர்ந்தது. ஒரு புளியமரம் வந்தது. நான் அதை அதில் ஏறித் தொங்குமாறு கேட்டேன். அது அதற்கு மறுத்து விட்டது. சிறிது தூரம் நடந்த பின்பு திறந்த வளவு ஒன்றில் முருங்கை மரம் ஒன்று நின்றது. அதில் ஏறித் தொங்குமாறு நான் அதற்குப் புத்திமதி சொன்னேன். அது அதற்கும் மறுத்து விட்டு என் பின்னால் செல்லப் பிராணி போல் வந்தது. அதைத் தோழில் தூக்கிப் போடும் அளவிற்கு நான் மடையன் அல்ல. என்னை விட்டு விடும் அளவிற்கு அதற்கும் மனதில்லை.

நான் பிழை செய்து விட்டேன் என்பது எனக்குப் பின்பு தான் விளங்கியது. என் பின்னால் அது தொடர்ந்தும் வந்தது. எந்த மரத்திலும் ஏறவில்லை. எனக்கு இரக்கம் ஆகிற்று. நான் அதைப் பின்பு துரத்திக் கலைக்க விரும்ப வில்லை. பயமுறுத்த வில்லை. அது எனக்கு மிகவும் அருகாக வந்தது. நண்பன் ஆகியது போன்று என்னோடு விளையாடிக் கொண்டு வந்தது. கடைசியாக எனது வீட்டிற்கே வந்து விட்டது. வீட்டிற்கு வந்தது போதாது என்று அது எனது அறைக்குள்ளும் வந்தது. துணிந்து எனது கட்டிலில் ஏறிப் படுத்தது. தன்னால் தொங்காது படுக்கவும் முடியும் என்றது.

அதன் பின்பு நான் எங்கு சென்றாலும் அது என்னைப் பிரியாது என்னோடு கூடவே வந்தது. அது என்னைப் பிரியாதது போல நானும் அதைப் பிரிய முடியாத நட்பு எங்களிடம் வளர்ந்தது. இந்த நட்பின் உண்மைத் தன்மை பற்றி நான் சிந்திக்க வில்லை. அப்படிச் சிந்திக்க வேண்டும் என்றுகூட எனக்கத் தோன்றவில்லை. நான் அதை வீட்டிற்குக் கூட்டி வந்ததைவிட வேறு எந்தப் பிழையும் செய்ததாகப் பின்பு எனக்குத் தோன்றவும் இல்லை. வேதாளம் என்னோடு வாழ்வது பற்றி எனக்கு எந்தப் பயம் இருக்கவில்லை.

எனக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதுதான் கொஞ்சம் அறிவு வந்தது. பின்னக் கணக்கில் நான் சாதுவாகப் பின்னி எடுக்கத் தொடங்கிய நேரம். பின்வாங்காரில் ஒருவன் முன்பாக கணக்குக் கொப்பியை ஆசிரியரிடம் சரி பார்க்கக் கொடுத்த ஆச்சரியம் எல்லோர் முகத்திலும். எனக்கு அது பெருமை. இல்லைத் தாங்க முடியாத பெருமை. என் வேதாளத்திற்கு அதைவிட அது பெருமை. பார்த்தாயா உன்னை என்றது என் வேதாளம். எனக்கு அதன் மீது அப்போது அதிக அக்கறை வந்தது. அது அதை நன்கு விளங்கிக் கொண்டு என் மீது சவாரி செய்தது. புளியமரத்தைத் திரும்பியும் பார்க்க மறுத்தது. துணிவாக முதலில் எனது புத்தகப் பைக்குள் ஏறிக் குந்தித் கொண்டது. அன்றில் இருந்து அது எனது அங்கத்தில் ஒன்று போல ஆகியது. அணில் குஞ்சைப் போல அல்லது எலிக்குஞ்சைப் போல என்றும் சொல்லலாம். அது எனக்குச் செல்லம் ஆகியது. எங்கு சென்றாலும் அது என்னுடன் எப்படியாவது வரும். பைக்குள், சட்டைக்குள் என்று எதற்கு உள்ளேயும் அது ஒளிந்து கொள்ளும். என்னை அது முருங்கை மரமாக நினைத்து விட்டது. என்னோடு அது எங்கும் சவாரி செய்வதை வாடிக்கை ஆக்கியது. முருங்கை மரத்தை அல்லது புளியமரத்தை அது என்னவாக நினைத்தது என்று எனக்கு நிச்சயமாகத் தெரியாது.

ஐந்தாம் வகுப்பில் அதிசயமாக என் மண்டைக்குள் பின்னக் கணக்கையும் விடச் சில பாடங்கள் கொஞ்சம் அதிகமாகவே ஏறியது. அதை விட அது ஆரம்பமாகும் அந்தக் காலம். வெள்ளையில் மடிப்புக் குலையாது சட்டையும் காற்சட்டையும் போட வேண்டும் என்கின்ற கவனம். குலையாத தலையைக் குலைத்துச் சீவிக் கொள்ளும் தவுனம். கை பிடிக்காது சைக்கிள் ஓட்ட வேண்டும் என்கின்ற வீரப் பிரஸ்தாபம். அவளைக் கண்டவுடன் அருகே சென்று சீட்டி அடிக்க வேண்டும் என்கின்ற அடக்க முடியாத ஆசை. இத்தினைக்கும் என் வேதாளம் முன்பு இருந்ததை விட என்னோடு நெருக்கமாகி என்னைப் பார்த்து எப்போதும் மோகமாய் புன்னகைக்கும். நீதான் ராசா என்று தனது செல்லக் கீச்சால் வாழ்த்துப் பாடும்.

பின்வாங்கார் பொதுவாகப் பலமானவர்கள். ஆனால் மொக்கர்கள் என்று பொதுவாகப் பெயர் எடுத்தவர்கள். பின்வாங்கில் கொஞ்சம் திறமையான நபர் இருந்தால் அது முன்வாங்கில் இருக்கும் நபரை விடத் திறமையான நபராகக் கணிக்கப்படும். அறிவோடு பலமும் சேர்ந்தால் அது தனி அந்தஸ்து என்பது அதற்கக் காரணம். எனக்கு நல்ல மரியாதை. அதனால் எனது வேதாளம் என்னிடம் இன்னும் மரியாதை காட்டியது. இப்போது நாங்கள் வகுப்பிற்கு வந்தால் முன்வாங்கார் எழுந்து நிற்காத குறை. அதனால் பின்வாங்கு முன்வாங்கைப் பின்வாங்க வைத்ததான பிரமை. என்றாலும் முன்வாங்கில் இருந்த ஓரிரு பெண்கள் மாத்திரம் அதற்கு விதி விலக்கு. அவர்களிடம் இருந்த அழகு அதற்கான காரணம். அதற்கு வேறு ஒரு தனி அந்தஸ்து. முடி சூட்டாத மகாராணிகள் போல. அவர்களிடமும் என்னைப் போன்று வேதாளம் இருப்பது எனக்கு இரகசியமாகத் தெரியும். என்றாலும் என் வேதாளம் அவற்றில் கொழுப்பாக இருப்பதாய் நான் நினைத்தேன். இப்படியாக நானும் வேதாளமும் பிரிய முடியாது வாழ்ந்து வந்தோம். இடையில் யுத்தம் வந்தது. இராணுவத்தைக் கண்டால் மாத்திரம் அந்த வேதாளம் என்னை விட்டுப் பிரிந்து ஓடிவிடும். அவர்கள் வைத்திருந்த துப்பாக்கியைப் பார்த்ததும் அதற்குப் பயம் வந்துவிடும். எனக்கு வேதாளம் என்னை விட்டுப் பிரிந்து ஓடுவது அவமானமாக இருந்தது. அது ஓடிப் போய் முருங்கை மரத்தில் அல்லது புளியமரத்தில் அல்லது கிடைக்கும் ஏதாவது ஒரு மரத்தில் தொங்கி விட்டு இராணுவம் போனதும் மீண்டும் என்னிடம் வரும். என்னிடமும் துப்பாக்கி இருந்தால் வேதாளம் என்னை விட்டு எங்கும் ஓடி எதில் ஆவது தொங்காது என்று எனக்குத் தோன்றியது. துப்பாக்கி வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்று எண்ணிப் பார்த்தேன். இறுதியாக அதற்கு இயக்கத்திற்குப் போக வேண்டும் என்று முடிவு செய்தேன். நான் இயக்கத்திற்கு அதற்காகப் போனேன். அப்போது வேதாளமும் மிகவும் பாசத்தோடு என்னை விட்டுப் பிரியாது என்னோடு அங்கும் வந்தது.

அங்கும் சில பதவிகள். அதனால் எனக்கும் வேதாளத்திற்கும் கொண்டாட்டம். அது பொதுப் பணத்திலும் கொழுத்தது. இருந்தும் ஒரு காலத்தில் பொதுப் பணம் வற்றியது. பொதுவுடைமைக்குப் புறப்பட்டவர்கள் இயக்கத்தைத் தனி உடைமை ஆக்குவதற்குப் போராடத் தொடங்கினார்கள். துப்பாக்கி முனைகள் யாரையும் குறிபார்க்கும். பார்த்தது. அந்த அமளியில் எனக்கும் என் வேதாளத்திற்கும் தப்பிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. இயக்கத்திற்குப் போவதற்கு துப்பாக்கி ஒரு காரணம் என்றால் அதைவிட இன்னும் ஒரு காரணமும் இரகசியமாக இருந்தது. இந்தியாவுக்குப் போனால் ஆப்பிள் அதில் தட்டும் என்றார்கள். ஐரோப்பா போனால் அதைவிடப் பெரிய ஆப்பிள் எல்லா இடமும் தட்டும் என்றார்கள். நானும் எனது வேதாளமும் நோர்வேக்கு வந்துவிட்டோம். வேதாளத்திற்குக் கடவுச்சீட்டு எடுத்தாயா என்று கேட்காதீர்கள். அதற்கு என்னோடு ஒட்டிக் கொள்ளும் சக்தி இருக்கிறது. அப்போது விமான நிலையங்களில் பெரிய கெடுபிடி கிடையாது. அது என்னோடு ஒட்டிய வண்ணம் நோர்வேக்கு வந்த சேர்ந்ததில் வியப்பில்லை.

நான் மேலும் படித்தேன். மேலும் உழைத்தேன். நல்ல வசதி வந்து சேர்ந்தது. வேதாளம் மெல்ல மெல்ல என்னோடு சேர்ந்து கொழுத்தது. அது தன் திமிரை முதலில் இடைக்கிடை காட்டியது. அடிக்கடி கோபமாக என்னை இடித்து உரைத்தது. பலர் பயந்து என்னிடம் இருந்து விலகிக் கொண்டனர். இருந்தும் எனக்கு அறிவு வரவில்லை. இப்போது நன்றாக நினைவு இருக்கிறது. வேதாளத்திற்குத் துணையாக அப்போது ஒரு சர்ப்பத்தை சேர்த்துக் கொண்டேன். அதனால் பலர் இன்னும் பயந்து ஒதுங்கினார்கள். அவர்கள் அப்படிப் பயப்பட்டு ஒதுங்குவதுகூட எனக்கு ஆனந்தமாய் இருந்தது. அப்படி அவர்கள் ஒதுங்குவது வேதாளத்திற்கு இன்னும் ஆனந்தமாய் இருந்தது. நான் தொடர்ந்தும் கண்மூடித்தனமாக வேதாளத்தோடு சேர்ந்து பல தீய செயல்களைத் திமிராகச் செய்து காலத்தைக் கழித்தேன். அதன் விளைவாக என்னிடம் இருந்து உறவுகள், நட்புகள் போன்றவை மெல்ல மெல்லப் பிரிந்து சென்றன. இருந்தும் நானும் வேதாளமும் பிரிக்க முடியாதவர்களாக மேலும் இறுகினோம். எங்களின் பிணைப்பு என்றும் மாறாது நிலைத்தது. சாகும் வரையும் அது நிலைக்கும் என்பது எனக்கு விளங்கியது. பிரிந்தவர்கள், பயந்தவர்களைப் பார்த்து அது எள்ளி நகை ஆடியது.

இப்படியாக வாழ்ந்து வரும் போது எனக்கு ஒரு நாள் திடீரெனக் கொடுமையான காய்ச்சல் வந்தது. நான் படுக்கையில் கிடந்தேன். செத்துப் போய் விடுவேனோ என்று அப்போது பயந்தேன். அதைப் பார்த்த வேதாளம் சோர்வுற்று அதுவும் என்னோடு படுத்துக் கொண்டது. அப்போது ஒரு தாதி எனக்கு உதவி செய்வதற்காக என் வீட்டிற்கு வித்தியாசமான உடையோடு வந்தாள். அவள் “ஓப்வோக்னிங்” என்று தனது இந்த நாட்டுப் பெயரைச் சொன்னாள். எனக்கு அது புதுமையான பெயராக இருந்தது. இருந்தும் நான் ஒன்றும் சொல்லவில்லை.

அந்தத் தாதி என்னைப் பார்த்து நீ மனிதனாக இருந்தவன். பின்பு வேதாளத்துடன் சேர்ந்து மிருகமாக மாறிவிட்டாய் என்று தயவு இன்றிச் சொன்னாள். நான் அவளைக் கோபமாகப் பார்த்தேன். எனக்கு நீ உதவத் தேவை இல்லை என்றேன். அவள் அதற்கு நீ நலமாக வேண்டும் என்றால் முதலில் உன்னிடம் இருக்கும் சர்ப்பத்தை விலங்கு பராமரிப்பவர்களிடம் கொடுத்துவிடு. அடுத்ததாக உன்னோடு இருந்து உனக்கு நோய் பரப்பும் இந்த வேதாளத்தையும் விலங்கு பராமரிப்பவர்களிடம் கொடுத்து விடு என்றாள் சிரித்த வண்ணம். உனக்கு நோய் தீரவேண்டும் என்றால் அதை நீ உடனடியாக இப்போதே செய்ய வேண்டும் என்றாள் சாந்தமாக. உனக்கு என்ன பயித்தியமா? என்று நான் அவளைக் கேட்டேன். இல்லை நீ பயித்தியம் ஆகாமல் இருக்க வேண்டும் என்கின்ற அக்கறையில் நான் சொல்கிறேன் என்றாள். உயிர் போனாலும் வேதாளத்தை என்னால் பிரிய முடியாது என்றேன். வேதாளத்தால் உன் உயிர் பிரியாது. நீ அதற்கு முருங்கை மரம் போல. சர்ப்பத்தின் விசமும் உன்னைக் கொல்லாது. ஆனால் நீ வாழும் வரையும் அவை உண்டு பண்ணும் நோயால் நீ துடித்துக் கொண்டே இருப்பாய் என்றாள். நோயால் துடித்தாலும் பருவாய் இல்லை என் செல்லப் பிராணிகளை நான் பிரியமாட்டேன் என்றேன். அவை செல்லப் பிராணிகள் அல்ல. செல்லப் பிராணிகள் போன்ற விச ஜந்துக்கள் என்றாள். உனக்கு அது தெரியாது. ஏன் என்றால் நீ சூரியனின் ஓளியின் கீழ் நின்றது இல்லை. அதில் நின்றால் அப்போது உனக்கு அது விளங்கும் என்றாள். சிறிது அமைதியின் பின் தொடர்ந்தும் அவள் பேசினாள். முதலில் உன் போர்வையை உன்னில் இருந்து தூக்கி ஏறி. பின்பு என்னோடு வெளியே வா என்றாள். இல்லை நான் வரவில்லை என்றேன். வாழ் நாள் முழுவதும் நீ நோயாளியாகவே இருக்கப் போகிறாயா என்றாள். இல்லை என்றேன். அப்போது வெளியே வா என்றாள். சரி நான் செல்லப் பிராணிகளையும் கூட்டிக் கொண்டு வெளியே வருகிறேன் என்றேன். இல்லை அப்படி என்றால் நீ என்னுடன் வெளியே வர முடியாது என்றாள். உன்னுடன் செல்லப் பிராணிகள் வெளியே வராது என்றாள். வந்தால் அவை சூரிய வெளிச்சத்தில் பொசுங்கிவிடும் என்றாள். அப்போது நான் என்ன செய்வது என்றேன். தயவு செய்து எழுந்து போர்வையை உதறிவிட்டு என்னோடு வெளியே வா என்றாள். நான் எழுந்தேன். அவள் போர்வையை என்னிடம் இருந்து பிரித்து எறிவதற்கு உதவி செய்தாள். எனக்கு அப்போதே இதுவரை இருந்து வந்த பாரம் குறைந்தது போல் இருந்தது. என்னோடு இருப்பதே தெரியாது இருந்து வந்த சர்ப்பம் அவசரமாக இருட்டுத் தேடிக் கட்டிலின் கீழ் ஓடியது. எனக்குத் தெரிந்தும் தெரியாமலும் அது பலரைத் தீண்டியது உண்டு. அதனால் பலர் நீ அதனுடன் எங்களிடம் வரவேண்டாம் என்பார்கள். இன்று அது அவசரமாக இப்படி என்னை விட்டு ஓடுவது ஆச்சரியமாக இருந்தது. அதை விட ஆச்சரியமாக வேதாளம் கத்திய வண்ணம் அவசரமாக ஓடி அலுமாரிக்குள் இருட்டில் தலைகீழாகத் தொங்கியது. எதற்காக? இவளைக் கண்டா? எப்படி அதற்கு என்னைவிட்டு விலக மனம் வந்தது? அவை அல்ல… நான் அவற்றை விட்டுப் பிரிய முடியாத சோகத்தோடும், நோயைப் பிரிய வேண்டும் என்கின்ற கட்டாயத்தோடும் அவள் துணையுடன் வெளியே சென்றேன். அவை இருட்டிற்குள் மேலும் மறைவாக ஒளிந்து கொண்டன.

வெளியே சூரியன். எங்கும் அவன் கரையற்ற கடலான ஒளி வெள்ளம். இருளை விரட்டும் இணை இல்லாத சுடராக நான்கு திசையும் அதன் வீரியமான பாய்ச்சல். பலகாலம் அந்த ஒளியைக் கண்டிராததால் கண்கள் கூசின. உடல் சிலிர்த்தது. அதை அடுத்து எனக்கு உடல் வியர்த்தது. உனக்குப் பிணி இப்போது தீர்ந்தது என்று அவள் என்னைப் பார்த்துச் சிரித்த வண்ணம் கூறினாள்.

வீட்டிற்குள்ளே விலங்கு பராமரிப்பவர்கள் புகுந்தார்கள். எனது வேதாளத்தை அவர்கள் எப்படிக் கொண்டு செல்லப் போகிறார்கள்? அவர்கள் கொண்டு செல்லாவிட்டால் நானே அதை முற்றாகக் கொன்றுவிட வேண்டும்.

– ஓகஸ்ட் 11, 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *