சிநேகிதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 642 
 
 

இப்போதெல்லாம் சீக்கிரமே இருட்டி விடுகிறது. தெருவில் வருவோர், போவோர் குரல்களை வைத்தே அடையாளம் கண்டு பிடிக்க வேண்டியிருக்கிறது. பேசாமல் வந்து நிற்பவர்களை இனம் காண முடிவதில்லை.
சாலாவும் அதைத்தான் சொன்னாள். அவளுக்கும் இதே சிக்கல்தானாம்.

போன மாதம் ஒரு திருடன் வந்து சத்தம் போடாமல் அவள் அருகே நின்றிருக்கிறான்.

‘என்ன வேணும்’ என்றிருக்கிறாள்.

கரகரத்த குரலில் ‘செயினைக் கழட்டு’ என்றதும் ‘என் செயின் உனக்கு எதுக்கு’ என்று விரல்களை உயர்த்தி அண்டக் கொடுத்து பார்த்திருக்கிறாள்.

வியர்வை நாற்றம். பீடிப் புகை. கைலி மசமசவென்று கண்ணுக்குத் தெரிந்திருக்கிறது.

‘யாருடா நீயி..’

செயினைப் பிடித்து இழுத்தவனோடு போராடியபடி சத்தம் போட்டிருக்கிறாள். ஆட்கள் வரவும் ஓடிவிட்டானாம். சாலாவின் கழுத்தில் கீறல்கள்.

‘ரெட்டை வடம்டி.. ஏழு பவுனாக்கும். செயின் போறதுன்னு விட்டிருப்பேன். மிச்சம் இருக்கிறதே எனக்கு அது ஒண்ணுதான். (செத்துப்) போனா தூக்கிப் போட மனசு வருமே.. செயினைப் பார்த்து’

சாலாவின் வார்த்தைகள் யதார்த்தத்தில் அக்னிக் குழம்பு.

‘இருந்தாலும் உனக்கு அசாத்திய துணிச்சல்டி’

சிலாகிப்பில் மயங்குபவளல்ல சாலா. வயசும் அந்த போதையைத் தாண்டி விட்டது.

கணவர் தவறிப் போனபோது சிறுவயசுதான் அவளுக்கு. கைக்குழந்தையோடு அவள்.

‘கார்த்தால சமைக்க ஆரம்பிச்சா நாள் பூரா சமையக் கட்டுதான். அப்புறம் அம்பாரம் துணி.. இவன் அழுதாக் கவனிக்க ஓடணும். பாதிக் குழம்பு கொதிக்கும். இலையைப் போடுன்னு குரல் கேட்கும். எப்பவும் பத்து பேர் சாப்பிடத் தயாரா இருப்பா. நான் சாப்பிடறப்ப மிச்சம் மீதிதான்’

சாலாவின் பேச்சில் விரக்தி தொனிக்காது. நேர்முக வர்ணனை மாதிரி சரளமாய் வார்த்தைகள் கொட்டும். யாருக்கோ நிகழ்ந்ததை சொல்லும் த்வனி.

அவள் எப்போது வருவாள் என்று காத்திருந்த காலம் போய் இப்போதெல்லாம் சாலாவால் நடக்க முடியவில்லை என்று வருவதில்லை. கடைசியாய் அவளைப் பார்த்தபோது சொன்னாள்.

‘இப்பல்லாம் ரொம்பவே முடியலை. மூச்சு வாங்கறது. இன்னிக்கு வந்துட்டேன். நாளைக்கு வருவேனா தெரியாது. மரகதம்.. என்னை வழியனுப்ப நீ வர முடியுமோ.. தெரியலை. என் கையைப் பிடிச்சுக்கோயேன்..”

”என்ன சாலா..’

அடிவயிறு லேசாய்க் கலங்கிப் போனது. ஆனாலும் சாலாவின் கையைப் பிடித்துக் கொண்டாள். அத்தனை வேலை பார்த்த கை மெத்தென்று இருந்தது. நிமிஷங்கள் மெல்லக் கரைந்து ஒரு சொட்டு கண்ணீர்.. யாருடையது என்று தெரியவில்லை.. இருவர் கைகளிலும் பட்டுத் தெறித்தது.

‘வரேன்’

அடுத்தடுத்த நாட்களில் சாலா வரவில்லை. விசாரித்ததில் அவளுக்கு காய்ச்சல் என்றார்கள். திண்ணையில் படுக்கை என்றார்கள். சாப்பாடு வாசலுக்கே வருகிறதாம். அதே இடத்திலேயே மலஜலமாம்.

‘கிடக்காம போயிட்டா பரவாயில்லை’ என்று பையன் சொன்னானாம்.

‘எப்படிம்மா மனசு வருது’ என்று மரகதத்தின் பையன் கேட்டான்.

சாலாவை நாம கொண்டு வந்து வச்சுக்கலாமா என்கிற கேள்வி உதடு வரை வந்து செத்துப் போனது. சாத்தியமில்லை.

இத்தனைக்கும் சாலாவின் நட்பு கிடைத்து பத்தாண்டுகள்தான் ஆகிறது. இந்த ஊருக்கு மாற்றலாகி வந்ததும் கிடைத்த அறிமுகம்.

அப்போதெல்லாம் கோவிலுக்கு, கடைத்தெருவுக்கு என்று நடமாட்டம் இருந்த நேரம்.

சைக்கிளில் வந்தவன் இடித்துவிட்டு வேகமாய்ப் போய்விட மரகதத்தின் கையில் சிராய்ப்பு.

‘ரத்தம் வருதே’

பார்த்த சாலாவிடம்தான் எத்தனை பதற்றம்.

பக்கத்திலேயே ஒரு டாக்டரிடம் அழைத்துப் போனாள்.

மரகதம் ‘தனக்கு ஒன்றுமில்லை’ என்று மறுத்தும் கேட்காமல்.

‘வீடு வரைக்கும் வரேன்’ என்றாள் சாலா.

‘அய்யோ.. எனக்கு ஒண்ணுமில்லே.. நான் நல்லாதான் இருக்கேன்’

வீட்டுக்கு வந்து சொல்லிச் சொல்லி மாய்ந்து போனாள்.

‘என்ன மனசு.. என்ன மனசு’

அந்த மனசுதான் இருவரையும் நட்பாக்கி விட்டது.அதன்பின் இருவர் வீட்டில் எதுவானாலும் பரஸ்பரம் அழைப்பு. சந்திப்பு.

நேரங்கிடைக்கும்போதெல்லாம் சாலா இங்கே வந்து விடுவாள். பேசிக் கொண்டிருந்துவிட்டு போவாள்.

‘பாட்டி உன் ஃப்ரெண்டு வந்தாச்சு’

பேரன் இருந்தால் கத்துவான்.இப்போதும் அவன் தான் வந்து நின்றான்.

‘பாட்டி.. உன் ஃப்ரெண்டுக்கு உடம்பு சரியில்லையாம்..’

சொல்லிவிட்டு அவளையே பார்த்தான்.

‘ஆமாண்டா செல்லம்’

‘நீ போய் பார்க்கலியா’

‘எனக்கும் முடியலைடா’

‘பாவம் அந்தப் பாட்டி.. வாசத் திண்ணைல படுத்திருக்கா’

‘ம்’

‘நாத்தமா இருக்கு..’

சாலா. ஏண்டி கஷ்டப்படறே.. இன்னும் எதற்காக இந்த பூமியின் ஸ்பரிசம்? நீராடி நெருப்பில் குளித்து காற்றில் கலக்க நேரம் வரவில்லையா?

‘பாட்டி தூங்கிட்டியா’

‘இல்லைடா’

‘நான் வரேன் பாட்டி. ஹோம் வொர்க் இருக்கு’

உள்ளே போனான் பேரன். தொலைக் காட்சியில் கார்ட்டூன் அலறல் கேட்டது.

மரகதத்தின் அறைக்குள் லேசான வெளிச்சம்தான். முனகினால் வெளியே கேட்குமோ என்கிற சந்தேகம் எப்போதும் உண்டு. இரண்டு முறை சோதித்தும் பார்த்தாகி விட்டது.

இருமியதும் ‘வெந்நீர் வேணுமா’ என்கிற பரிவுக் குரல் கேட்டதும் மனசுக்குள் அமைதி.

‘பாட்டி..’

அருகில் பேரன் வந்து இரண்டு முறை அழைத்து விட்டான்.

‘அம்மா சாப்பிட கொண்டு வரலாமான்னு கேட்கறா’

‘ம்ம்’

‘சாப்பிட..’

பசிக்கல.. என்று சொன்னதாய் உணர்வு. ஆனால் வார்த்தை வெளிப்படவில்லை என்று தோன்றியது. தொண்டைக்குள் ஈரமற்றுப் போன மாதிரி.

‘அம்மா.. பாட்டி ஒரு மாதிரி முழிக்கறா’

பேரன் கத்திக் கொண்டே ஓடியது புரிந்தது.கட்டிலைச் சுற்றி மனிதர்கள். எனக்கு ஒண்ணும் இல்லை.. மரகதம் கத்திப் பார்த்தாள்.

ஊஹூம். யாரும் கேட்பதாக இல்லை. ஏன் பேசாமல் என்னைச் சுற்றி நிற்கிறார்கள்.. ஏதாவது கேட்கலாமே.. இப்போ பசிக்கற மாதிரி இருக்கே.. டேய் வருண் சொல்லேன்.. பாட்டிக்கு பசிக்கிறதுன்னு.

படு அமைதி. இத்தனை பேர் இருக்கிறபோது எப்படி சாத்தியம். வலி எதுவும் புரியாமல் உடலெங்கும் பரவிய நிம்மதி.

ஹப்பாடா.. என் வேதனைகள் எல்லாம் எப்படி மறைஞ்சு போச்சு.. சாலா கேட்டா சந்தோஷப்படுவா.. சாலா உனக்கும் இதே போல விடிவு வந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?

மரகதத்தின் முகத்தில் அசாதாரண தெளிவு வந்து விட்டது.

திண்ணையில் படுத்திருந்த சாலாவுக்கு தெருவில் போன மரகதத்தின் இறுதி ஊர்வலம் புரியவில்லை. புரிந்திருந்தால் சிநேகிதி தன்னை வழியனுப்ப வந்து விட்டது தெரிந்திருக்கும்.

– டிசம்பர் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *