கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி நாடகம்
கதைப்பதிவு: January 14, 2024
பார்வையிட்டோர்: 1,960 
 
 

(2015ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காட்சி 9-12 | காட்சி 13-16

பதிமூன்றாம் காட்சி

(பின்னணியில் பேருந்து நிலையம் போன்ற தோற்றம். ஜனங்களின் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஜனாவும், சக்தியும் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் நின்று கொண்டிருக்கின்றனர். கீதா மேடையின் இடப் பக்கத்திலிருந்து வருகிறாள்.)

கீதா : வாங்க. எல்லாம் கச்சிதமா கில்லியா முடிச்சுக் கொடுத்துட்டீங்க. ரொம்ப தாங்க்ஸ்.

ஜனா : என்ன கீதா தாங்க்ஸ்ன்னு ஒரே வார்த்தையில முடிச்சுட்டே…?

கீதா : வேற என்ன செய்யணும்… நான் வீட்டுக்குப் போகணும். என்ன விஷயம் சொல்லுங்க… அப்பா என்னைக் காணோம்னு தவிச்சுப் போயிடுவாரு.

ஜனா : என்ன இப்படி சர்க்கஸ் ரிங் மாஸ்டர் மாதிரி விறைப்பா இருக்கே… சரி.. சார் எதிரே நாம வேறு எதுவும் பேச முடியாது. இவுரு மிஸ்டர் சக்தி. நல்ல படிப்பாளி… இவுருக்கு ஒன்னால ஒரு காரியம் ஆகணும்.

கீதா : எனக்கு ஒரு காரியம் செஞ்சதுக்கு பதில் நான் ஒரு காரியம் செய்யணுமா? இதுக்குப் பேரு க்யுட் ப்ரோகோன்னு இங்க்லீஷ்ல சொல்வாங்க.

ஜனா : அப்படியா? என்ன அர்த்தம்?

கீதா : சார் படிப்பாளின்னீங்களே.. அவர் கிட்டேயே கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க.

ஜனா : சரி தெரிஞ்சுக்கறேன். கிருஷ்ணவேணி மேடம் உனக்கு அம்மா மாதிரி.

கீதா : அந்த விஷயம் தெரிஞ்சு போச்சா… டெக்னிக்கலாப் பார்த்தா ஈன்று புறந்தந்த அன்னை அவங்கதான்.

ஜனா : செந்தமிழ் நல்லா பேசறே. அதே மாதிரி அவங்க அஸிஸ்டென்ட் வீணாவுக்கும் அவங்க அம்மா மாதிரி.. அப்படின்னா வீணா உனக்கு அக்கா…

கீதா : எதுக்கு சுத்தி வளைக்கறீங்க. அவரு என்ன மௌன விரதமா பேசவே மாட்டேங்கறாரு.

சக்தி : அதெல்லாம் ஒண்ணும் இல்லம்மா. நீங்க ரெண்டு பேரும் பேசறீங்களேன்னு…

கீதா : சரி புதுசா ஒரு அக்காவைக் கொடுத்திட்டீங்க. சொல்லுங்க.

ஜனா : இவுரு அக்காவோட காதலர். ரெண்டு பேருக்குள்ள மனத்தாங்கல். நீதான் வீணாகிட்ட தூது போய் இவருக்காக பேசி…

கீதா : ரெண்டு பேரையும் பேசி ராசியாக வைக்கணும் அதானே?

ஜனா : சொன்னேன் இல்ல சார். என்னோட கீதா புத்திசாலிப் பொண்ணுன்னு.

கீதா : ஐஸ் வைக்க வேண்டாம்.

ஜனா : வாங்கிட்டு வரட்டுமா?

கீதா : கிருஷ்ணவேணி அம்மா ஒரு வாரம் ஆஸ்பத்தில இருந்தப்ப வீணா அங்கதான் இருந்தாங்க. இவுரு அந்த ஆஸ்பத்திரியிலதானே ஒர்க் பண்றாரு?

ஜனா : கில்லாடிப் பொண்ணு. எல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கா. காதலி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

கீதா : வழியாதீங்க… அப்ப பேசி ராசியாயிருக்கலாம் இல்ல. பொன்னான வாய்ப்பைக் கோட்டை விட்டுட்டாரே.

ஜனா : நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லைன்னு கண்ணதாசன் பாடல். இப்ப என்ன செய்யணும் அதைச் சொல்லு…

கீதா : சக்தி சார். நான் சின்னப் பொண்ணு. நீங்க படிச்சவரு. காதலிகிட்ட இன்னொருத்தரை அனுப்பலாமா? உங்களுக்குத் தெரியாதா?

ஜனா : ஆம்பிளைய அனுப்பினா கதை கதை மாறிடப் போவுதுன்னுதான் உன்னை அனுப்பறாரு.

சக்தி : ஜனா… இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு சொன்னேன். நீங்க கேட்டகலை. என்னை லீவு போட வெச்சு இந்த ஊர் பஸ் ஸ்டான்ட்ல நிற்க வெச்சு…

(மேடையின் வலப் பக்கத்திலிருந்து வீணா வருகிறாள். கீதா கையால் ஜாடை காட்டுகிறாள். கீதாவும், ஜனாவும் மேடையின் இடப்பக்கம் நோக்கிச் சென்று மறைகிறார்கள்.)

சக்தி : நீ இங்க எங்கே?

வீணா : நான் கேட்க வேண்டிய கேள்வி. ஞாயிற்றுக்கிழமை கூட ஆஸ்பத்திரில போய் உட்காருவீங்க. நீங்க தான் அதைத் தாங்கறா மாதிரி. இப்ப என்ன திங்கட்கிழமை இங்க இருக்கீங்க?

சக்தி : உன்னைப் பார்க்கத்தான் லீவு போட்டுட்டு வந்தேன். உங்க ஷூட்டிங் ஸ்பாட் எதுன்னு தெரியல. வீணா நடந்ததை எல்லாம் மறந்திடு. என்னை ஏத்துக்கோ… கெஞ்சிக் கேட்கறேன். ப்ளிஸ்.

(வீணாவின் கைகளைப் பற்றிக் கொள்கிறான்.)

வீணா : விடுங்க. இது பொது இடம். ஆனது ஆச்சு. மேம் கிட்ட சொல்லிட்டு வீட்ல வந்து பொண்ணு கேளுங்க. ரெண்டு மூணு வருஷம் காதலர்களாகவே இருக்கலாம்னு மறுபடியும் சொன்னீங்க… அவ்வளவுதான்.

சக்தி : ஒங்க அப்பா… அம்மா… மேடையின் வலப் பக்கத்திலிருந்து (கிருஷ்ணவேணி மேடையின் வருகிறாள்)

கிருஷ்ணவேணி : இப்பதானே… நீங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்து இருக்கீங்க. மத்தவங்கள சரிக்கட்டறதுக்குள்ளே நுரை தள்ளப் போவுது.

(கீதா மேடையின் இடப்பக்கத்திலிருந்து வருகிறாள்) கீதா : யாருக்கும்மா நுரை தள்ளப் போவுது?

கிருஷ்ணவேணி : எல்லாருக்குமே.. பாம்பு கடிச்சா நுரை வரும்.

கீதா : ஷாம்பு போட்டா நுரை வரும். அதானே?

கிருஷ்ணவேணி : நீ எங்கேடா இங்க வந்தே… சக்தி.

சக்தி : அத்தை… உன்னைப் பார்க்கத்தான் வந்தேன். தலையில அடிபட்டுச்சாமே எப்படி இருக்கு இப்ப…

கீதா : மாமா புள்ள பாசமா கேட்கறாரு சொல்லுங்கம்மா…

கிருஷ்ணவேணி : அது சரி. நீ எங்க இங்கே…? கீதா

கீதா : நான் காலேஜ் விட்டு வந்துகிட்டு இருந்தேன்ம்மா… நம்ம ஏரியா போறதுக்கு டவுன் பஸ் பிடிக்கணும்.

கிருஷ்ணவேணி : அப்படியா? நம்பிட்டேன். வீணா மெட்ராஸ் பஸ்ஸுக்கு டோக்கன் வாங்கிட்டு வர்றேன்னு போனே. ஆளைக் காணோம். உன்னை பஸ் ஸ்டான்ட் பூரா தேடிட்டு வந்தேன்.

வீணா : டோக்கன் கவுன்ட்டர் எங்கேன்னு பார்த்துகிட்டே வந்தேன் மேம். இங்க இவுரு நின்னுகிட்டு இருந்தாரு.

சக்தி : ஏன் அத்தை பஸ்ல போகணும்? கார் என்ன ஆச்சு…? கிருஷ்ணவேணி : நல்லா கேள்வி கேட்கற. ஆக்சிடெண்ட்ல கார் ரிப்பேர் ஆயிடுச்சு. யூனிட்காரங்க தங்கறதுக்கு பாண்டிச்சரி போறாங்க… எங்கள இங்க கடலூர் பஸ் ஸ்டான்ட்ல விட்டுட்டாங்க.

சக்தி : முன்னேயே தெரிஞ்சிருந்தா நான் பாண்டிச்சேரி போய் இருப்பேன்.

கிருஷ்ணவேணி : டேய்…

சக்தி : இல்ல அத்தை… பாண்டிச்சேரி அழகான நகரம்…ன்னு சொல்ல வந்தேன்.

கீதா : அம்மா… இவுரு பாண்டிச்சேரியும் போக முடியாது. நீங்க சென்னைக்கும் போக முடியாது.

கிருஷ்ணவேணி : என்ன சொல்றம்மா?

கீதா : அரசியல் தலைவர் காலமானதால நைட் பஸ் எல்லாம் கேன்சல் பண்ணிட்டாங்க. எங்க வீட்டுக்கு வாங்க… நான் அன்னிக்கே கெஞ்சிக் கெஞ்சிக் கூப்பிட்டேன். அப்புறம் வரேன்னு தட்டிக் கழிச்சீங்க…

கிருஷ்ணவேணி : இப்ப வேற வழி இல்ல. இன்னிக்கு நைட் உங்க வீட்லதான் தங்கணும். ஒங்க அம்மாகிட்ட சாரி நர்மதா அம்மா கிட்ட சொல்லிடு.

கீதா : தாங்க்ஸ்ம்மா…

(கீதா கிருஷ்ணவேணியின் கையைப் பிடித்துக் கொள்கிறாள்.) கிருஷ்ணவேணி : சரி. போய் டாக்சி அரேஞ்ச் பண்ணு. வீணா, லக்கேஜோட நிக்கற நம்ம டிரைவர் சண்முகத்தை இங்க வரச் சொல்லு.

(கீதா போகிறாள்)

கிருஷ்ணவேணி : கீதா, நில்லு. நான் பார்த்தேனே… அந்தக் கடையில உன் கூட கூல்ட்ரிங்ஸ் குடிச்சுகிட்டு இருந்தானே ஒரு வாலிபன் உயரமா வாட்டசாட்டமா… யார் அவன்…? கீதா : அது வந்து… நான் போய் டாக்சிய கூப்பிட்டுகிட்டு வரேன்ம்மா.

(கீதா மேடையின் இடப்பக்கம் நோக்கி ஓடுகிறாள்.)

சக்தி : நான் சொல்றேன் அத்தை. அது வீணாவோட தங்கச்சியோட லவ்வர்…

கிருஷ்ணவேணி : அப்படியா? வீணாவோட தங்கை யாரு?

சக்தி : கீதா தான்..

வீணா : அவுரு மொக்கையா ஏதோ பேசணும்னு பேசறாரு மேம். அதோ டாக்சி வந்திடுச்சு. வாங்க மேம் போகலாம். சண்முகம் அண்ணனும் வந்துட்டாரு.

(மூவரும் மேடையின் இடப் பக்கம் நோக்கிச் செல்கிறார்கள்.)

(சில நிமிடங்களுக்குப் பின் ஜனா மேடையின் வலப்பக்கத்திலிருந்து வந்து நிற்கிறான். தனக்குத் தானே பேசிக் கொள்கிறான்.)

ஜனா : கீதாகிட்ட ஒரு அஞ்சு நிமிஷம் தனியாகப் பேச லையே இவங்க. எல்லாரும் ஒண்ணாப் போயிட்டாங்க. இப்ப மெட்ராஸுக்கு பஸ்ஸும் இல்ல. எங்க போய் தங்குவது? லாட்ஜ்ல ரூம் கிடைக்குமான்னுதான் பார்க்கணும். விடமாட்டாங்களே… ஏதாவது மெசேஜ்… இதை வாங்கு…அதை வாங்குன்னு… இது என்ன மெசேஜ்… சக்தியோட பேர்ல இருக்கு…

(மேடையின் இடப் பக்கத்திலிருந்து கையில ஒரு பெட்டியுடன் நம்பி வருகிறார்.)

நம்பி : என்னய்யா நீ இங்கே?

ஜனா : நான் விவரமா சொல்றேன் அண்ணே.

நம்பி : நான் இங்க ஒரு அறுபதாம் கல்யாணத்துக்கு வந்தேன். பழைய நண்பர்கள் கிட்ட பேசிகிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியல.

ஜனா : மெட்ராஸுக்கு பஸ் இயக்கல அண்ணே. கலவரப் அரசியல் தலைவர் மரணத்தாலா…

நம்பி : அப்படியா… ? சரி. லாட்ஜ்ல போய் தங்குவோம் வா. ஏன் உன் மூஞ்சி ஒரு மாதிரி இருக்கு…?

ஜனா : அண்ணே. என்னுடைய காதலி கீதா அவங்க அம்மா கிருஷ்ணவேணியோட டாக்சில போய்க்கிட்டு இருந்தா. கூட கிருஷ்ணவேணி மேடத்தோட அத்தை பையன் இருந்தான். அவன் பேரு சக்தி…

நம்பி : அதுக்கு என்னய்யா… இரு. கீதா டாக்டர் நர்மதாவோட பொண்ணுன்னு சொன்னே…

ஜனா : அது ஒரு பெரிய கதை. இப்ப சக்தி மெசேஜ் அனுப்பி இருக்கான். டாக்சிக்காரன் மாதிரி வந்து அவங்கள கடத்திட்டானுங்களாம்… எப்படியோ எனக்கு மெஸேஜ் அனுப்பிட்டான்.

நம்பி : ராத்திரி ஏழு மணி பஸ்ஸ்டான்ட்ல ஊர் ஜேஜேன்னு மும்முரமா இருக்கற நேரத்துல கடத்தியிருக்காங்க. இந்த ஊர்ல தெரிஞ்சவங்க யாருன்னு யோசிக்கறேன். வா டீ குடிச்சுகிட்டே பேசலாம்.

ஜனா : அண்ணே…

நம்பி : என்னய்யா நீ ஹீரோய்யா… கவலைப்படக் கூடாது. வா..

(திரை)

பதிநான்காம் காட்சி

(பின்னணியில் கிடங்கு போன்ற தோற்றம். மங்கலான வெளிச்சம். மேடையின் வலப் பக்கத்திலிருந்து நம்பியும், ஜனாவும் வருகின்றனர்.)

நம்பி : ஏம்பா.. இவ்வளவு இருட்டா.. இருக்கு. திகில் படம் மாதிரி லைட்டிங். கடத்தினாலே கிடங்குலதான் ஒளிச்சு வைக்கணுமா? இங்கேயா வரச் சொன்னானுங்க கிட்நாப் பார்ட்டி? நெல்லிக்குப்பத்துல தேடி கண்டுபிடிச்சிருக்கானுங்க இந்த கோடவுனை.

ஜனா : இங்கதான் அண்ணே வரச் சொல்லியிருக்காங்க. (மேடையின் இடப் பக்கத்திலிருந்து பரமேஸ்வரன் வருகிறான்)

பரமு : வாங்க அண்ணே. வாப்பா ஜனா.

நம்பி : டேய் பரமு. நீயா கிட்நாப் பார்ட்டி? அவங்க எங்கேடா?

பரமு : இருங்க அண்ணே. அவங்கள நீங்க வந்த உடனே ரிலீஸ் பண்றதுக்காகவா ஊர் விட்டு ஊர் வந்து கஷ்டப்பட்டு கடத்தினோம். டீல் பேசத்தான் வரச் சொன்னேன். டீல் பேசுவோமா?

ஜனா : நம்பி அண்ணன் கிட்ட இருந்தவன் எப்படிடா நீ இப்படி மாறிப் போய்ட்டே? இந்த ஆட்டம் வேணாம். பூமராங் ஆயிடும்.

பரமு : இவர்கிட்ட இருந்து நான் என்னத்தை கண்டேன்? எனக்கு வயசாயிகிட்டே இருக்கு. நான் பணத்தைப் பார்க்க வேணாமா? ஜனாவுக்கு பணக்காரங்களைப் பத்தி தெரியல. இவர் போய் சொன்னதும் விஸ்வம் வீட்டுப் பொம்பளங்களுக்கு ஞானோதயம் வந்திடுச்சாம். அதை இவன் நம்பிட்டடான். அந்தப் பொம்பளங்களுக்கு இவன் உபதேசம் பண்றதைப் பார்த்ததுமே இவன் வேலைக்கு ஆக மாட்டான்னு தெரிஞ்சுடுச்சு. திருந்திட்டா மாதிரி நடிச்சா… கொடுத்த பணம் திரும்பி வரும்னு கணக்குப் போட்டிருக்காங்க. பார்த்தியா பணக்காரப் பொம்பளங்க எவ்வளவு ஸ்மார்ட்டா இன்டலிஜன்ட்டா இருக்காங்கன்னு.

நம்பி : இப்ப நீ என்ன திட்டம் வெச்சிருக்கே?

பரமு : அண்ணன்னா அண்ணன்தான். கரெக்ட்ட பாயிண்ட்டுக்கு வரச் சொல்றாரு. சஞ்சனா, நாகலட்சுமி ரெண்டு பேரும் எப்படி வேணா பிழைச்சுப் போகட்டும். எனக்கு அந்தப் பணக்காரப் பொண்ணு ஹாசினி வேணும். ஒப்படைங்க. ஜனாவோட காதலி, ஒளிப்பதிவாளர் கிருஷ்ணவேணி, அவங்க அஸிஸ்டன்ட் வீணா, அவங்க அத்தைப் பையன் எல்லாரையும் பத்திரமா அழைச்சுகிட்டுப் போங்க. அவங்க மட்டுமா… அவங்களோட காஸ்ட்லி கேமிரா எக்ப்யூப்மென்ட்ஸ் வேற இருக்கு.

நம்பி : டேய்… பரமு…

பரமு : சும்மா கத்தாதீங்க அண்ணே. இரத்தக்கொதிப்பு மாத்திரை கூட கிடைக்காது இந்த ஏரியாவுல. இது ஒரு கோடி ரூபா டீலிங். ஜனா நீ உன்னைத் தேடி வந்த ஒன்றரை கோடிய கோட்டை விட்டே. ஹாசினிய புது செல்போன் மாதிரி கொண்டு போய் ஒப்படைச்சா எனக்கு ஒரு கோடி. அட்வான்ஸ் ஐம்பது இலட்சம். ஆமாம். விஸ்வம் கிட்ட நீ திருப்பி கொடுத்த ஐம்பது இலட்சம் பெட்டி என்கிட்ட வந்திடுச்சு. ஜனா… ஹாசினி மருத்துவர் நர்மதா வீட்ல இருக்கா… டாக்டர் கிட்ட போய் ஹாசினிய ஒப்படைச்சா கீதாவைக் கொடுப்பாங்கன்னு சொல்லு. அனுப்பி வைப்பாங்க. இங்க அழைச்சுகிட்டு வா. இதுதான் டீல். இந்த மாவட்டத்துல நாங்க வண்டிய வெச்சுகிட்டு அங்க இங்கன்னு சுத்திக்கிட்டு இருக்க முடியாது. நீங்க ரெண்டு பேரும் எப்படியாவது நர்மதா வீட்டுக்குப் போங்க. பக்குவமா கச்சிதமா வேலைய முடிச்சு திரும்பி வாங்க ஹாசினியோட.

ஜனா : பரமு. நீ இப்படி வில்லனா மாறுவேன்னு நெனக்கலே…

பரமு : நான் பணம் சம்பாதிக்க என்ன செய்யணுமோ அதைச் செய்யறேன்பா. இதுல வில்லத்தனம் எங்கே வந்தது? ஒங்க ஆளுங்க பத்திரமா இருக்காங்க. வேளா வேளைக்கு சாப்பிடறாங்க. என்டெர்டெயின்மெண்ட்டுக்கு டி.வி. இருக்கு. ஆமாம். உணவு இல்லாமல் கூட இருந்துடலாம். டி.வி. இல்லாம இப்ப எல்லாம் உயிர் வாழ முடியாதே… நம்பி அண்ணே, மாவட்ட நிர்வாகம், காவல்துறை எல்லாரும் சட்டம் ஒழுங்கு பராமரிக்கறதுல மும்முரமா இருக்காங்க. அவங்களப் போய் தொந்தரவு செய்யாதீங்க. அள்ளக்கை என்னிக்கும் அள்ளக்கையா இருக்காது ஜனா. வண்டியும் ஒரு நாள் ஓடத்துல ஏறும். ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும். நீங்க போய் கடலூர் பஸ் போவுதான்னு பார்த்து ஏறுங்க.

ஜனா : அண்ணே… இவனைத் தூக்கிப் போட்டு மிதிக்கட்டுமா….?

பரமு : நீ ஹீரோயிசம் செய்யணும்னு நெனக்காதே தம்பி. உன் ஆளு என் கஸ்டடில…

நம்பி : நீ வா ஜனா.

(நம்பியும், ஜனாவும் மேடையின் வலப்பக்கம் நோக்கிச் செல்கின்றனர். பரமு மேடையின் நடுவழியாகச் செல்கிறான்.)

(மேடையின் இடப்பக்கத்திலிருந்து சக்தியும், ஓட்டுநர் சண்முகமும் வருகிறார்கள்.)

சண்முகம் : சக்தி பேசாம அவங்களோட பாண்டிச்சேரி போயிருக்கலாம் ஒங்க அத்தை. இங்க வந்து இவனுங்க கிட்ட மாட்டிக்கிட்டோம்.

சக்தி : உரக்கப் பேசாதீங்க. அண்ணே, தப்பிக்க வழி இருக்கான்னு யோசிங்க.

சண்முகம் : நாம மட்டுமா தப்பிக்கணும்? அம்மாவுக்கு உசிரு காமிரா சாதனங்கள் அதெல்லாம் பத்திரமா எடுத்துகிட்டு நாம அத்தனை பேரும் பாதுகாப்பா தப்பிக்கணும்.

(மேடையின் நடுவழியிலிருந்து பரமு வருகிறான்)

பரமு : தப்பிக்க எல்லாம் முடியாதுப்பா. வெண்ணிறத் தலையதே. நீங்க தப்பிச்சு போறதுக்கா இவ்வளவு கஷ்டப்படறோம். போய் டிவி பாருங்க. போங்க. டிஃபன் சாப்பிடுங்க.

சண்முகம் : தம்பி. நீங்க நம்பிகிட்ட இருந்தவரு…

பரமு : நம்பியார் ஆயிட்டேன்னு சொல்றியா…?

சக்தி : பரமு… பின் விளைவுகள் தெரியாம விளையாடாதீங்க.

பரமு : இதெல்லாம் கேட்டுக் கேட்டு புளிச்சுப் போன வசனம். புதுசா ஏதாவது பேசு. எனக்கு என்டர்டெய்னிங்கா இருக்கும். ராத்தோர் இப்பவே தண்ணி அடிக்க ஆரம்பிச்சுடாதீங்க. இவங்க நம்ம கண்ல மண்ணைத் தூவிட்டு ஓடிடப் போறங்க. (நாற்காலியில் அமர்கிறான்)

(குரல் : நிம்பள் கவலைப்படாதீங்கஜீ. எவ்ளோ குடிச்சாலும் ஸ்டடியா இருப்போம் நாங்க.)

(சண்முகமும் சக்தியும் மேடையின் இடப்பக்கம் நோக்கிச் செல்கிறார்கள்.)

(மேடையின் வலப்பக்கத்திலிருந்து ஜனா, நம்பி, ராஜமாணிக்கம் மூவரும் வருகின்றனர். பரமு எழுந்து நிற்கிறான்.)

பரமு : என்னப்பா ஜனா… வயசுப் பொண்ணைக் கூட்டிக்கிட்டு வாங்கன்னு சொன்னா… தலை நரைச்ச கிழவனைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கீங்க.

ஜனா : நாங்க போய்க்கிட்டு இருக்கும்போது இவுரு எதிர்ல வந்தாரு பரமு. நர்மதா டாக்டர் இவரை அனுப்பி வெச்சாங்களாம்.

(ராஜமாணிக்கம் கிடுகிடுவென்று மேடையின் இடப்பக்கம் நோக்கிச் செல்கிறார். சற்று நேரத்தில் திரும்பி வருகிறார். அவர் பின்னால் கிருஷ்ணவேணி, வீணா, கீதா, சண்முகம், சக்தி ஆகியோர் வருகின்றனர்.)

பரமு : யாருண்ணே இவுரு. நீங்களே உள்ளே போகலை. இவுரு உள்ள போய் தில்லா அவங்களோட வர்றாரு.

நம்பி : சகுந்தலையோட மறுபடியும் சேர்றதுக்கு துஷ்யந்தன்தான்ய்யா வரணும்…

(பரமு அவர்களை மறிக்கிறான். நில்லுங்க என்கிறான். ராத்தோர் என்று குரல் கொடுக்கிறான்.)

ராஜமாணிக்கம் : நம்பி சார். இவரைப் பார்க்க பாவமா இருக்கு. முதல் தடவை சமூக விரோத செயல்ல இறங்கி எவ்வளவு பெரிய சிக்கல்ல மாட்டிக்கிட்டாரு.

பரமு : என்னய்யா பயமுறுத்திப் பார்க்கறியா? என்னோட அடியாள் பலம் தெரியுமா உனக்கு?

ரா.மா. : ராத்தோர் கோஷ்டி தானே. அதை நெனச்சாதான் அய்யோ பாவம்னு தோணுது.

பரமு : யோவ் என்ன இப்படி எல்லாம் பேசினா ஒங்க எல்லாரையும் ரிலீஸ் பண்ணிடுவேன்னு நெனக்கிறியா?

ரா.மா. : என்ன நம்பி சார்… சொல்லட்டுமா… வேணாமா?

நம்பி : உங்களுக்குத் தெரிஞ்ச தகவல சொல்லுங்க… நம்ம கிட்ட இருந்த பயபுள்ள ஒரு முடிவுக்கு வரட்டும். இல்லேன்னா அவனுக்கு எண்ட் கார்டு வந்திடுமே.

ரா.மா. : பெரிய மனுஷர் சொல்லிட்டாரு. தம்பி சுருக்கமா சொல்லிடறேன். கேட்டுக்கங்க. எங்க மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாத்தறதுக்கு நிர்வாகம் முனைப்பா செயல்பட்டு வருது. அந்த நேரத்துல வட இந்தியாவிலிருந்து வந்த இந்த இளைஞர்கள், விழுப்புரம் மாவட்டம், கடலூர் மாவட்டம், சேலம் மாவட்டம், புதுச்சேரி இப்படி எல்லா இடத்துலயும் நூதனமா வங்கிக் கொள்ளையில கைவரிசைய காமிச்சு கொள்ளையடிச்சதெல்லாம் இங்க பதுக்கி வெச்சிருக்காங்க. இந்த விஷயம் எல்லாம் போலீசுக்குத் தெரிய வந்திருக்கு. பண்ருட்டில இருக்கிற இந்த கோடவுன் ஓனர் ரத்தினத்தை இன்னிக்கு ஈவினிங் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. இந்த வட இந்திய இளைஞர்களை எப்படியாவது மடக்கிப் பிடிச்சு கொள்ளையடிச்ச பணத்தை மீட்கணும்னு இன்னிக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டத்துல முடிவு செஞ்சுட்டாங்க.

ஜனா : எப்படியாவதுன்னா என்கவுன்ட்டரா அங்கிள்?

ரா.மா. : அதைப் பத்தி எல்லாம் போலீஸ் அதிகாரிங்கதான் சொல்வாங்க. நாம பேசக்கூடாது தம்பி. என்கவுன்ட்டர் பண்ணனும்னு பண்றாங்களா இந்த வட இந்திய இளைஞர்கள் கிட்ட இல்லாத நவீன ஆயுதமா? போலீஸ் வந்ததும் இவங்க சுடுவாங்க. போலீஸ் தரப்புலயும் சுடுவாங்க. நடுவுல இந்தத் தம்பி.. பத்தரை மணி ஆயிடுச்சே… பன்னிரண்டு மணிக்கு போலீஸ் ஆபரேஷன்னு எனக்கு தகவல் வந்தது. வாங்க போகலாம். சக்தி…ஜல்தி… எல்லாரையும் அழைச்சுக்கிட்டுப் போங்க… சீக்கிரம்.. (சக்தியுடன் கிருஷ்ணவேணி, வீணா, கீதா, சண்முகம் ஆகியோர் மேடையின் வலப்பக்கமாக வேகமாகச் செல்கின்றனர். கிருஷ்ணவேணி, கிருஷ்ணவேணி, ராஜமாணிக்கத்தை வாஞ்சையுடன் திரும்பிப் பார்த்து விட்டுச் செல்கிறாள்.)

பரமு : நம்பி அண்ணே.. இவுரு சொல்றதெல்லாம் உண்மையா?

நம்பி : இந்த மாவட்டத்துக்காரர்பா இவுரு போலீஸ் ஆபீசர்ஸ் மீட்டிங்ல பேசினது என்னென்ன வரைக்கும் சொல்றாரு பாரு. அந்த அளவுக்கு அதிகாரிகளோட தொடர்பு. சரி. உயிரைக் காப்பாத்திக்க. நீ வாழ வேண்டிய குருத்து. ராஜமாணிக்கம். வாங்க போகலாம். நம்ம வேலை முடிஞ்சுது. ஜனா… வா.

ஜனா : பரமு போலீஸ் பன்னிரெண்டு மணின்னா அப்பத்தான் வருவாங்கன்னு நெனச்சுக்காதே. முன்னாடியே வந்து ரவுண்ட்-அப் பண்ணிடுவாங்க. பார்த்துக்க ஜாக்கிரதை. வாங்க அங்கிள்.

பரமு : ரவுண்ட் அப்-பா?

(மூவரும் நகர முற்படுகின்றனர்)

பரமு : (நம்பியின் கால்களைப் பற்றிக் கொள்கிறான்) அண்ணே இனிமேல் தகாத செயல்கள் செய்ய மாட்டேன். என்னை மன்னிச்சிடுங்க அண்ணே. என்னையும் அழைச்சுகிட்டுப் போங்க…

(நம்பி கால்களை விடுவித்துக் கொள்கிறார்)

நம்பி : வாங்க மாணிக்கம் போகலாம். ஜனா அவனையும் அழைச்சுகிட்டு வா..

(திரை)

பதினைந்தாம் காட்சி

(பின்னணியில் மாடித் தோட்டம் போன்ற அமைப்பு. மாலை நேரம். நாகலட்சுமி, சஞ்சனா, ஹாசினி மூவரும் நின்று கொண்டிருக்கின்றனர்)

நா.ல. : என்னடி இரண்டு பேரும் பேசாம இருக்கீங்க?

சஞ்சனா : நர்மதா மேம் இவ்வளவு வேலைக்கு நடுவுல மாடித் தோட்டம் பராமரிக்கறதை நெனச்சா ஆச்சரியமா இருக்கு. உங்க சின்னம்மா நேர நிர்வாகத்தைப் பிரமாதமாக பண்றாங்க.

(டாக்டர் நர்மதா மேடையின் வலப் பக்கத்திலிருந்து வருகிறார்)

நர்மதா : என்னைப் பாராட்டறது இருக்கட்டும். என்ன முடிவு செஞ்சு இருக்கீங்க..?

நா.ல. : சித்தி… எங்க ரெண்டு பேர் பிரச்சினையையும் கீதா, ஜனா கிட்ட சொல்லித் தீர்த்து வெச்சிருக்கா. அன்னிக்கு நான் கீதா கிட்ட கடுமையான பேசிட்டேன். என்னை வெட்கப்பட வெச்சுட்டா…

நர்மதா : ஏன் அப்படி எல்லாம் யோசிக்கறே. நானே தீர்த்து வெச்சிருக்கணும். உன் தங்கைக்கு எண்ணம் உதிச்சிருக்கு. ஜனா மூலம் செயல்படுத்திட்டா. சரி. என்ன செய்யறதா உத்தேசம்?

நா.ல. : சித்தி எங்க ரெண்டு பேர் ஆபீஸ்லயும் எப்ப வேணாலும் வேலைக்கு வரலாம்னு சொல்லியிருக்காங்க. ஹாசினிக்கு பிரச்சினை சுமூகமாத் தீரலை. அவங்க அண்ணன்மார்கள் பழிபாவத்துக்கு அஞ்ச மாட்டாங்க…

நர்மதா : அதான் தெரிஞ்ச விஷயமாச்சே.

நா.ல. : அவளை விட்டுட்டு எப்படி மெட்ராஸ் போறதுன்னுதான் கவலையா இருக்கு… யோசனையா இருக்கு.

ஹாசினி : நீங்க ரெண்டு பேரும் போங்க. நான் இங்க இருக்க அனுமதிப்பீங்களா மேம்…?

நர்மதா : என்னம்மா இப்படி கேட்டுட்டே… நான் யாரையும் போன்னு சொல்லையே. நீ எத்தனை நாள் வேணும்னாலும் இங்க இரு. மனசைத் தளர விடாதே. ஆனால் எனக்கு ஒரு யோசனை. நீங்க ஒத்துப்பீங்களான்னு தெரியல.

நா.ல. : சொல்லுங்க சித்தி.

நர்மதா ஹாசினி, நீ ஒதுங்கிப் போனாலும் ஒளிஞ்சுகிட்டாலும் ஒங்க அப்பாவோட முதல் தாரத்துப் பசங்க ஒன்னை சும்மா விட மாட்டாங்க. நீ லீகல் பேட்டில் ஆரம்பிச்சாகணும். வேற வழி இல்ல. நான் ஒரு டாக்டரா உனக்கு தைரியம் கொடுக்க முடியும். ஒரு இரக்கமுள்ள பெண்மணியா உனக்கு புகலிடம் கொடுக்க முடியும். ஆனா, பாதுகாப்பும் நியாயமும் நீதிமன்றத்துலதான் கிடைக்கும். நீ வழக்குப் போட்டா பின் வாங்கக் கூடாது. யார் வந்து கெஞ்சினாலும் மனசு மாறக் கூடாது. சட்டரீதியா அவங்கள் எதிர்கொள்ளணும். ஒங்க அப்பா உனக்கு எழுதி வெச்சதை அடையணும். சொத்து வந்தப்புறம் ஒரு அமைப்பு ஏற்படுத்தி ஒங்கள மாதிரி நெருக்கடிக்கும் உளைச்சலுக்கும் ஆளாக்கப்படற பெண்களுக்கு உதவி செய்யுங்க.

ஹாசினி : டாக்டர் மேம். நீங்க சொல்றதுதான் உகந்த வழி

நா.ல. : சித்தி…

நர்மதா : சென்னையில உங்களுக்குத் தங்க இடம் இல்ல, அதானே எனக்குத் தெரியும். கிருஷ்ணவேணி வீட்ல தங்குங்க. இந்தாங்க. வக்கீல் தருமதுரை அட்ரஸ். அவரைப் போய்ப் பாருங்க. ஹாசினி நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். மிரட்டலுக்கு அடிபணியக் கூடாது. கெஞ்சலுக்கும் மனம் இரங்கிடக் கூடாது.

நா.ல. : சித்தி…

நர்மதா : என்ன… பணம் ஏதாவது வேணுமா?

நா.ல. : நாங்க வெச்சிருக்கோம் சித்தி. இப்பத்தான் பல வருஷம் கழிச்சு கிருஷ்ணவேணி மேமும், ராஜமாணிக்கம் சாரும் ஒண்ணு சேர்ந்து இருக்காங்க… அவங்க இடத்தில…

நர்மதா : கடவுளாப் பார்த்துத்தான் ஒண்ணு சேர்த்து வைச்சிருக்கான். நீ சொல்றா மாதிரி அவங்க புதுமணத் தம்பதிகள்தான். ஒண்ணு செய்யுங்க. ராஜமாணிக்கம் இதுவரை தங்கின இடத்துல இருந்துக்கங்க. நான் அவர்கிட்ட பேசறேன். நீங்க மூணு பேரும் நீண்ட வாழ்வு நிறைவான வாழ்வு வாழ என்னுடைய ஆசிகள்.

(மேடையின் இடப் பக்கத்திலிருந்து கீதா வருகிறாள்)

கீதா : திருமணம் ஆகி பதினாறும் பெற்று பெரு வாழவு வாழ்கன்னு வாழ்த்தணும் மம்மி…

நர்மதா : காலாகாலத்தில நடக்கத்தான் போவுது. நம்மள கூப்பிடுவாங்க கல்யாணத்திற்கு.

கீதா : வருங்கால மாப்பிள்ளைகள் இப்பவே வந்துட்டாங்களே… அம்மா…

நர்மதா : என்ன உளர்றே…

(மூன்று இளம் பெண்களும் நெளிகிறார்கள்)

நா.ல. : (வாஞ்சையுடன்) என்ன கீதா… விளையாடறியா…

கீதா : இல்ல அக்கா… ஹனாரா வந்திருக்காங்க. கீழே வெயிட் பண்றாங்க.

நர்மதா : ஹனாரா வா…?

கீதா : ஆமாம் அம்மா. சஹானாவுக்கு ஹனாரா ஹரிஹரன், நாராயணன், ராமச்சந்திரன்… இவங்க மூணு பேரோட ஆளுங்க…. டிடெக்டிவ் ஏஜென்சி எல்லாம் வெச்சு இவங்க இருக்கற இடத்தை கண்டுபிடிச்சு வந்திருக்காங்க. அவங்ககிட்ட கூட சொல்லாம வந்துட்டாங்க போலிருக்கு…

நர்மதா : என்னடி கூத்து இது நாகு…

நாகலட்சுமி : சித்தி எங்களால அவங்களுக்கு ஆபத்து எதுவும் வரக்கூடாதுன்னுதான்…

கீதா : டிஸ்கனெக்ட் பண்ணிக்கிட்டு வந்துட்டீங்களா? சரி. யாரு யாரோட ஜோடி சொல்லுங்க. தெரிஞ்சுக்காட்டி எனக்குத் தலை வெடிச்சுடும். வம்புக்கு அலையற பழக்கம் விடலை.

நா.ல. : ஹரிஹரன்… காலேஜ் லெக்சரர். சஞ்சனாவோட ஜோடி.. நாராயணன் செல்போன் கம்பெனி வைஸ்பிரெசிடென்ட் ஹாசினியோட ஆளு…

கீதா : செல்போன் கம்பெனி ஆளையே பிடிச்சுட்டாங்க. அவருக்கு கவலை இல்ல. உங்களோட சேர்ந்து கோடில புரளப் போறாரு. பிஸினெஸ் மேக்நெட் ஆயிடுவாரு. எனக்கு ஒரு வேலை போட்டுக் குடுத்திடுங்க.

ஹாசினி : நீ நல்லாப் பேசற… ராமச்சந்திரன் நாகலட்சுமி லவ்வர். இளவேனில் தொலைக்காட்சி ஜி.எம். ஜீவாவோட பிள்ளை… ராமச்சந்திரனும் அதே சேனல்ல புரோக்ராம்ல இருக்காரு.

நர்மதா : மீடியாக்காரங்களை கைல வெச்சுகிட்டு இருக்கீங்க. தொல்லை கொடுக்கறவங்கள ஒரு உலுக்கு உலுக்காம… இப்படி ஓடி வந்துட்டீங்களே… சரி. போங்க. போய்ப் பாருங்க. ரொம்ப நாள் ஏங்க வைச்சுட்டீங்க.

கீதா : பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?

(நாகலட்சுமி, கீதாவை செல்லமாத் தட்டுகிறாள். சஞ்சனா, ஹாசினி, நாகலட்சுமி மூவரும் மேடையின் இடப் பக்கம் நோக்கிச் செல்கின்றனர்.)

நர்மதா : இது என்ன புரியலையே? ஆம்பிளைத் துணை இருக்கறவங்க ஏன் இப்படி ஓடி வந்தாங்க… சரி. அது போகட்டும். கிருஷ்ணவேணியையும், ராஜமாணிக்கத்தையும் எப்படி பேச வெச்சே?

கீதா : நெல்லிக்குப்பத்துலர்ந்து அன்னிக்கு நைட் கார்ல வர்றப்ப அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நான். மத்தவங்கள் எல்லாம் இன்னொரு கார்ல வந்தாங்க. ரெண்டு பேரும் பேசிக்கவே இல்ல… சின்னம்மா பார்க்கும்போது சித்தப்பா முகத்தைத் திருப்பிக்கறாரு. ரெண்டு பேரையும் மாத்தி மாத்தி கொஞ்சி கெஞ்சி பேச வைச்சேன்.

நர்மதா : உன்னைப் பார்த்தா எனக்குப் பெருமையா இருக்கு… இந்த வயசுல பக்குவமான பெண்ணா இருக்கே… என் கண்ணே பட்டுடும் போலிருக்கும்மா.

கீதா : எல்லாம் ஒங்ககிட்டேந்து வந்ததுதானம்மா. தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலைன்னு நீங்க தானே சொல்லுவீங்க.

நர்மதா : ஜனா ஒங்க அப்பாவோட நண்பர் மகன்ங்கறதுக்காத்தான் நான் சம்மதிச்சேன். ஜாக்கிரதையா இருக்கணும் திருமணம் வரைக்கும்.

கீதா : நான் ஒங்க பொண்ணும்மா. நெருப்பா இருக்க வேண்டிய நேரத்துல நெருப்பா இருப்பேன். பனிக்கட்டியா இருக்க வேண்டிய நேரத்துல பனிக்கட்டியா இருப்பேன்.

(நர்மதா என் செல்லம் என்று கட்டியணைத்துக் கொள்கிறாள்)

கீதா : அம்மா ஜனா பள்ளிக்கூட நிர்வாகம் பார்த்துக்கட்டுமா? நம்ம வீட்ல தங்க வேணாம். தங்குவதற்கு வேற இடம் பார்த்துக்கட்டும்.

நர்மதா : நீயே முடிவு பண்ணிட்டே. அப்பாகிட்ட பர்மிஷன் வாங்கிடு.

கீதா : அம்மான்னா.. அம்மாதான்.

(திரை)

பதினாறாம் காட்சி

(பின்னணியில் டாக்டர் கைலாசம் மணி விழா என்ற பதாகை காணப்படுகிறது. விழாவுக்கான அலங்காரங்கள், பலூன்கள், பூமாலைகள் உள்ளன. டாக்டர் கைலாசமும், அவரது மனைவி டாக்டர் ரேவதி கைலாசமும் பாரம்பரிய புத்தாடைகள் அணிந்து நிற்கின்றனர். டாக்டர் கைலாசம் கையில் மைக் வைத்துக் கொண்டு பேசுகிறார்.)

கைலாசம் : அனைவருக்கும் வணக்கம். என்னுடைய மகன் விக்னேஷ் மருமகள் திலகா தம்பதிகளின் வேண்டுகோளை ஏற்று என்னுடைய மணிவிழா வைபவத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றிகள். தங்களை எல்லாம் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சி பெருகுகிறது.

என் மனைவியாருடன் மருத்துவம் படித்த டாக்டர் நர்மதா கணவர் புருஷோத்தமன், தங்கள் மகன் மற்றும் மகளுடன் வந்திருக்கிறார். அவருக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்.

என்னுடைய புதிய நண்பர் தொலைக்காட்சியிலும், பத்திரிகைத் துறையிலும் கொடி கட்டிப் பறக்கும் எழுத்தாளர் ராஜமாணிக்கம் தம்முடைய மனைவி கிருஷ்ணவேணியுடன் வருகை தந்திருக்கிறார். புதுவாழ்வு தொடங்கியிருப்பதாகக் கேள்விப்பட்டேன். என் சுயசரிதையை எழுத அவர் முன் வந்தார். இன்னும் அதற்கு வேளை வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இணைந்த ஜோடிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இன்றுபோல் என்றும் வாழ்க. நற்செய்தி ஒன்று அவர்களின் அனுமதியுடன் தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். ஒளிப்பதிவில் சாதனைப் பெண்மணியாக ஜொலித்த கிருஷ்ணவேணி ஹோம்மேக்கராக கணவரின் வருகைக்கு காத்திருக்கும் இல்லத்தரசியாக இருக்க முடிவு செய்துள்ளார். அவருக்கு செயல்வாரிசாக அவரது சிஷ்யை வீணா அவரது பணியைத் தொடருவார். வீணாவின் கரத்தைப் பிடிக்கப் போகிற பாக்கியசாலி கிருஷ்ணவேணி அவர்களின் அண்ணன் மகன் எங்கள் அலுவலக அதிகாரி சக்தி.

பத்திரிகை அதிபர் ஆர்.கே. அவர்கள் குடும்பத்துடன் வருகை தந்துள்ளார். எங்களுக்கு ஆசி வழங்கிய அவருக்கு நன்றி. சஹானா என்ற பெயரில் எழுதி வந்த மூன்று இளம் பெண்களை இங்கு அனைவருக்கும் அவர் அறிமுகம் செய்து வைத்தார். வாய்ப்பு அளித்த ஆசிரியரிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சென்னையை விட்டுச் சென்ற சென்ற இந்த இளம்பெண்கள் மீது ஆர்.கே. கோபம் கொள்ளவில்லை என்பது அவரது உயரிய பண்பைக் காட்டுகிறது. மூன்று இளம் பெண்மணிகளின் இக்கட்டு நிலைமை பற்றி அறிந்தேன். ஹாசினி வழக்காடிக் கொண்டிருக்கிறார். வெற்றி பெற வாழ்த்துக்கள். அறுசுவை உணவு விருந்து உங்களுக்காக தயாரித்தவர்கள் சதாசிவம் ஜலஜா தம்பதிகள். பொருளாதார ஏற்றம் வந்தபோதும் சிக்கனமாக வாழும் சதாசிவம் – ஜலஜா தம்பதிகளைப் பார்த்து, சொல்லக் கூடாது இருந்தாலும் சொல்கிறேன் பொறாமையாக இருக்கிறது.

மற்றொரு பெருமைக்குரிய விஷயத்தை இங்கே உங்களிடையே பகிர்ந்து கொள்ள சதாசிவம் தம்பதிகள் அனுமதிப்பார்கள் என நம்புகிறேன்.

இங்கே எங்கள் மருத்துவமனையின் உணவகத்தில் ஜலஜாவின் தங்கை ஷோபாவைப் பார்த்த பெரிய மனிதர் ஒருவர், தம்முடைய வீட்டிற்கு ஷோபாவை மருமகள் ஆக்கிக் கொள்ள நினைத்திருக்கிறார். சதாசிவம் ஜலஜா தம்பதிகளை அவர்களது வீட்டில் சந்தித்துப் பேசியிருக்கிறார். சதாசிவம், ஜலஜா இருவரும் ஒப்புக் கொண்ட போதும், ஷோபா, சதாசிவத்தின் தம்பி மதுசூதனனை மனதில் வரித்திருக்கிறேன். வேறு யாரையும் ஏற்க முடியாது என்று தீர்மானமாகச் சொல்லியிருக்கிறாள். வசதி படைத்தவர்கள் தேடி வந்தபோதும் காதலில் மனஉறுதியோடு இருக்கும் ஷோபாவின் பெண்மையைப் போற்றுகிறேன்.

இதோ… மக்கள் தொண்டர் நம்பி அவர்கள் குடும்பத்துடன் வந்து கொண்டிருக்கிறார். நன்றி நம்பி அவர்களே. விருந்து தயாராக இருக்கிறது. சாப்பிட வாருங்கள். மனைவி கணவன் முன் பேச மாட்டாள் என்று நினைத்துவிடப் போகிறார்கள். ரேவதி இரண்டொரு வார்த்தைகள் பேசுவார்.

ரேவதி : வணக்கம். போராடும் பெண்மணிகள், வாழ்வை சிக்கலாக்கிக் கொள்ளாமல் குடும்ப உறவுகளைக் கொண்டாடும் பெண்மணிகள் என்று பலதரப்பட்ட பெண்மணிகள் இங்கே குடும்பத்தினருடன் குழுமி உள்ளீர்கள். ஆணும், பெண்ணும் ஒருவரை சார்ந்து வாழ வேண்டும் என்ற இயற்கை நியதியைப் பின்பற்றி பலர் வெற்றி கண்டுள்ளனர். இளம் தலைமுறையினர் அதைப் புரிந்து கொண்டு வாழ்க்கையைக் கொண்டாட்ட மாக்கிக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி.

(இருவரும் கை கூப்புகின்றனர்)

(விளக்குகள் சில நிமிடங்கள் அணைக்கப்பட்டு, மீண்டும் ஒளிர்கின்றன)

(ராஜமாணிக்கமும், கிருஷ்ணவேணியும் மேடையின் வலப்பக்கத்திலிருந்து வருகின்றனர்.)

கி.வே. : எழுத்தாளர் அவர்களே! நீங்களும் ஒன்பது வருஷம் கழிச்சு இப்படி மைக் வெச்சுகிட்டு பேசுவீங்க இல்ல… மணிவிழாவுக்கு வந்திருக்கும் மனிதகுலப் பூக்களே…ன்னு.

ராஜமாணிக்கம் : கிருஷ்ணவேணியம்மா… அதெல்லாம் புதல்வர்கள் உள்ளவர்களால்தான் கொண்டாட முடியும். டாக்டருக்கு அவரோட மகனும், மருமகளும் சேர்ந்து சீரும் சிறப்புமா மணிவிழா நடத்திட்டாங்க.. நமக்கு யார் செய்வாங்க… சொல்லுங்க… மனைவியாரே…

(கீதா மேடையின் இடப்பக்கத்திலிருந்து வருகிறாள்)

கீதா : ஏன் நான் இல்லையா… நான் உங்களுக்கு மணிவிழா நடத்த மாட்டேனா…?

(ஜனா மேடையின் வலப் பக்கத்திலிருந்து வருகிறான்) ஜனா : நான் நடத்த மாட்டேனா… ஜோரா நடத்திடலாம்… ஜமாய்ச்சிடலாம்.

கிருஷ்ணவேணி : நீங்க யாரு…

கீதா : அம்மா… இவுருதான்…

கி.வே : நர்மதா சொன்ன ஜனா இதானா…?

ஜனா : வணக்கம் மேடம்… நெல்லிக்குப்பம் ஆபரேஷன்ல பார்த்திருப்பீங்க..

கி.வே : இப்ப ஞாபம் வருது. அதுக்கு முன்னால கடலூர் பஸ் ஸ்டான்ட்ல இவளோட கூல்ட்ரிங்க்ஸ் குடிச்சுகிட்டே பார்வையால இவளையே விழுங்கினீங்களே…

கீதா : சின்னம்மாவுக்கு என்ன மாதிரி ஞாபகசக்தி… சான்ஸே இல்ல. சின்னம்மா.. சித்தப்பா… உங்களுக்கு நாங்க இருக்கோம் பக்கபலமா… பாச மலர்களா…

(மேடையின் வலப் பக்கத்திலிருந்து சக்தியும், வீணாவும் வருகிறார்கள்.)

சக்தி : எங்க அத்தைக்கும், மாமாவுக்கும் நாங்க பக்கபலமா இருப்போம். உறுதுணையா இருப்போம். மாமாவோட அறுபதை தூள் கிளப்பிடுவோம்.

ரா.மா. : அதெல்லாம் பிழைச்சுக் கிடந்தா…

கிருஷ்ணவேணி : பார்த்துக்கலாம்னு மாமா சொல்றாரு. முதல்ல நீங்கல்லாம் கல்யாண சாப்பாடு போடுங்க.

வீணா : இப்ப இந்த விருந்து சாப்பிடலாம் வாங்க அத்தை.

சக்தி : எனக்குத்தான் அத்தை. உனக்கு எப்படி அத்தை..?

கீதா : சக்தி அண்ணா… நீங்க சின்னம்மாவுக்கு மகன் மாதிரின்னா… எங்க சின்னம்மா வீணாவுக்கு அத்தைதானே…?

சக்தி : சரி. நான் உனக்கு எப்படி அண்ணன் ஆவேன்…?

கீதா : ஆமாம். வீணா எனக்கு அக்கான்னா.. நீங்க எனக்கு மாமா. அப்ப… சின்னம்மா வீணாவுக்கு அம்மாவா… அத்தையா…?

கிருஷ்ணவேணி : உன் உறவு முறை ஆராய்ச்சிக்கு முற்றுப்புள்ளி வை. அறுக்காதே. ரத்தம் வருது.

கீதா : சரி. வாயால ஆராய்ச்சி பண்ணலாம். என்ன பார்க்கறீங்க? விருந்து சாப்பிடப் போகலாம் வாங்க.

(அனைவரும் சிரித்தபடியே மேடையின் வலப்பக்கம் நோக்கிச் செல்கின்றனர்.)

(இப்பொழுது மேடையின் வலப்பக்கத்திலிருந்து சதாசிவத்தின் தம்பி மதுசூதனன் வந்து நிற்கிறான். மதுசூதனனின் கண்கள் கலங்குகின்றன.)

(மேடையின் இடப் பக்கத்திலிருந்து ஷோபா வருகிறாள்)

ஷோபா : என்ன சார்… ஒங்கள எல்லா இடத்துலேயும் தேடிக்கிட்டு இருக்கேன். இங்க என்ன பண்றீங்க. கண்ல என்ன தூசி விழுந்திடுச்சா?

(மதுசூதனன் ஷோபாவின் கைகளைப் பிடித்துக் கொள்கிறான்.)

மதுசூதனன் : எனக்காக பெரிய இடத்து மாப்பிள்ளைய வேணாம்னு சொல்லிட்டியாமே… ஷோபா… உனக்கு என் மேல அவ்வளவு பிரியமா? சொல்லவே இல்லையே…

ஷோபா : இதெல்லாம் சொல்வாங்களா… ? நீங்களே புரிஞ்சுக்கணும் சார்… எதுக்கு பொம்பள மாதிரி கண்கலங்கறீங்க… இனிமேல் நம்ம ரெண்டு பேரோட எதிர்காலத்தைப் பத்தி யோசிங்க… (மதுசூதனனின் கண்ணீரைத் துடைக்கிறாள்.)

(சதாசிவம் மேடையின் வலப்பக்கத்திலிருந்து வருகிறார்)

ச.சி. : ஷோபா… மதுசூதனா… என்ன பண்றீங்க.. ஷோபா என்ன…

ஷோபா : இல்ல அங்கிள்… இவரு கண்ல தூசி விழுந்திடுச்சு… ச.சி. சரி. அங்க பரிமாறதுக்கு ஆள் இல்லாம கஷ்டப்படறாங்க போங்க.

ஷோபா : போறோம் அங்கிள். வாங்க… சார்…

(இருவரும் வேகமாக மேடையின் வலப்பக்கம் நோக்கிச் செல்கின்றனர்.)

ச.சி. : என்ன இது? அவ வாங்கன்னு சொன்னாதான் இவன் போவானா…?

(மேடையின் இடப்பக்கத்திலிருந்து சதாசிவத்தின் மனைவி ஜலஜா வருகிறாள்)

ஜலஜா : அங்க வேலை மேல வேலை இங்க என்ன பண்றீங்க நீங்க?

ச.சி. : இங்க மதுசூதனனும், ஷோபாவும் ரொமான்ஸ்ல இருந்தாங்க… பந்தி பரிமாறப் போங்கன்னு அனுப்பி வெச்சேன்… ரொமான்ஸ் எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்னு சொன்னேன்.

ஜலஜா : சின்னஞ்சிறுசுங்க சந்தோஷமா இருந்தா உங்களுக்கு கண்ணு கரிக்குமே…

ச.சி. : ஆமாம். வடிவேலு சார் சொல்றா மாதிரி லைட்டா… பொறாமை… நமக்கு இளமை போயிடுச்சேன்னு…

ஜலஜா : கிருஷ்ணவேணி அம்மா கதையக் கேட்டாலே சினிமா கதை மாதிரி இருக்கு. கடைசில அவங்கதான் ஒங்க நண்பரோட மனைவின்னு தெரிஞ்சுதே…

ச.சி. : ஆரம்பத்துலேர்ந்தே அவங்கதான் அவரோட மனைவி. என்ன கொஞ்ச காலம் பிரிஞ்சு இருந்திருக்காங்க… எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கல…

ஜலஜா : என்ன…?

ச.சி. : ஒண்ணும் இல்ல…

ஜலஜா : கிருஷ்ணவேணி அம்மாதான் டாக்டர் நர்மதாவோட குழந்தையைப் பெத்துக் கொடுத்திருக்காங்க. வசுதேவர் தேவகி குழந்தை பலராமரை ரோகிணி பெத்துக் கொடுத்தா மாதிரி…

ச.சி. : உனக்கும் புராணம் எல்லாம் தெரிஞ்சுருக்கே…

ஜலஜா : எத்தனை வருஷம் கழிச்சு.. என்னென்ன உண்மை எல்லாம் வெளியே வருது பாருங்க…

ச.சி. : ஆமாம். நீ நல்ல மூட்ல இருக்கும்போது நானும் ஒரு உண்மையைச் சொல்லிடலாம்னு பார்க்கறேன்.

ஜலஜா : என்ன உளர்றீங்க..?

ச.சி. : இல்லம்மா… ஒங்க அப்பா மலையாளிக்குத்தான் பொண்ணு கொடுப்பேன்னு சொன்னதால நான் மலையாளி. ஸ்தலம் கோழிக்கோடுன்னு சொல்லி ஒன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

(ஜலஜா மேடையில் சுற்றும் முற்றும் பார்க்கிறாள். ஓரத்தில் இருக்கும் தடிமனான இரும்புக் கம்பியைக் கையில் எடுத்துக் கொள்கிறாள்.)

ஜலஜா : இத்தனை வருஷமா என்னை ஏமாத்திக்கிட்டு இருந்தீங்களா…?

(சதாசிவம் ஓடுகிறார். ஜலஜா அவரைத் துரத்துகிறாள். இருவரும் மறைகின்றனர்.)

பின்னணியில் குரல்கள் :

ச.சி. : நான் நான் மலையாளிதான். சும்மா சொன்னேன். சொன்னா கேளு ஜலஜா… விளையாட்டுக்குச் சொன்னேன். விட்டுடு.

டாக்டர் கைலாசத்தின் குரல் : என்ன சதாசிவம்… அவங்க துரத்தறாங்க…? நீங்க ஓடறீங்க.. ரேவதி பார்த்தியா… இதுவும் அந்நியோன்னியத்தின் வெளிப்பாடு.

(திரை)

(நிறைந்தது)

– சஹானா (நாடகம்), முதல் பதிப்பு: ஜூலை 2015, வெளியீட்டாளர்: எஸ்.மதுரகவி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *