கருகத் திருவுளமோ?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 2, 2023
பார்வையிட்டோர்: 2,288 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தேஷ்பாண்டேயின் முகம் கோபத்தால் சிவந்திருந்தது. என்ன செய்வதென்று தெரியாத செயலற்ற நிலை. விமானத்தாதி கொண்டு வந்த செய்தித்தாள்களை மனம் போல் மடித்து காலுக்கடியில் போட்டுக் கொண்டார்.

“தயவு செய்து….” என்று அவரருகில் வந்து நின்றாள் விமானத் தாதி புன்னகையுடன்.

“ஓ மன்னிக்கணும்” என்று சொல்லியவாறு பத்திரிகைகளை குனிந்து எடுத்து அவள் கையில் தந்தார் தேஷ்பாண்டே.

அவர் ஒரு முக்கியமான பிரயாணி. பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு லிஸ்பனிலிருந்து விடுதலையாகி பாரதம் வருகிறார். அவரை வரவேற்க டில்லியில் மந்திரிகள் காத்திருப்பார்கள். இந்த விவரங்களெல்லாம் விமானத்தாதிக்குத் தெரியும். செய்தித்தாள்களை படிப்பதற்கு முன்னால், சுமுகமாக எல்லாருடனும் சிரித்துப் பேசியவருக்கு திடீரென்று சினம் ஏற்படக் காரணம்? அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த இளைஞன் ஒருவன் அவரை ஏறிட்டு நோக்கினான். அவனும் இந்தியன்தான். அமெரிக்காவில் மூன்று ஆண்டுகளும், மேற்கு ஜெர்மனியில் ஓராண்டும் இருந்துவிட்டு பாரதம் திரும்பி வருகிறான்.

“ஏதாவது உங்களுக்கு வேண்டுமா?” என்று அவன் கேட்டான். அவர் பதில் சொல்லவில்லை. வெறுமனே புன்னகை செய்தார்.

“மன்னிக்கவும். நீங்கள்தானே மிஸ்டர் தேஷ்பாண்டே? உங்கள் அருகில் உட்காரும் பாக்கியம் எனக்கு ஏற்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி?”

அவர் தலையை அசைத்தார். “நீங்கள்?” என்று வினவினார்.

“என் பெயர் திலீப்.” அவன் தன்னைப் பற்றிய விவரங்களைச் சொன்னான். மேல்நாடுகளில் பயிற்சி பெற்ற எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர்.

“நீங்கள் உங்கள் எதிர்காலத்தைத் தேடிக் கொண்டு பாரதம் போகிறீர்கள். நான் என் கடந்த காலத்தைத் தேடிப்போகிறேன்” என்றார் தேஷ்பாண்டே.

“நன்றாகச் சொல்லுகிறீர்கள். நான் இத்தனை வருஷங்களாக வெளிநாடுகளில் கற்ற தொழிற்கல்வி என் தாய் நாட்டுக்குப் பயன்படுமா என்று முயற்சி செய்ய விரும்புகிறேன். ஆனால் எங்களைப் போன்றவர்கள் உங்களுக்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறோம். நிகழ்கால இன்பத்தை நாடாமல் நாட்டுச் சுதந்திரத்துக்காகப் போராடிய உங்கள் பரம்பரைதான் எங்களுக்கு இந்த வாய்ப்பைத் தந்திருக்கிறது என்று நான் கருதுகிறேன்.”

தேஷ்பாண்டேயின் மனம் நெகிழ்ந்தது. அவர் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார். கீழே வெண்மேகங்கள் முட்டைக்கோஸ் குவியல்களாக மிதந்து கொண்டிருந்தன. பாரதப் பத்திரிகைகளில் அவர் படித்த செய்திகள் நினைவுக்கு வந்தன.

“கல்கத்தாவில் பஸ்களும் பள்ளிக் கூடங்களும் எரிந்தன. காந்தி சிலைகள் உடைக்கப்பட்டன.”

“பீகாரில் துப்பாக்கிச் சூடு. “தமிழ் நாட்டுக்கு தனிக் கொடி வேண்டும்.”

“பஞ்சாப் சட்டசபையில் ஏழாவது தடவையாக கட்சி மாறி மந்திரி சபையைக் கவிழ்த்தார் ஸ்ரீ…”

“ஆயிரக் கணக்கான பொறியியல், மருத்துவப் பட்டதாரிகள் வேலையில்லாமல் இருக்கிறார்களே, அரசாங்கம் என்ன செய்ய இருக்கிறது?’-சட்ட சபையில் கேள்வி.”

“நிலப் பறி இயக்கத்தைத் தொடர்ந்து, வீடு பறி இயக்கம், தொழிற் பறி இயக்கம் என்று தொடர்ந்து நடக்க இருக்கின்றன.”

இதுதான் காந்தி கனவு கண்ட சுதந்திரமா? இதற்குத்தானா பகத்சிங் தூக்கில் தொங்கினான்? லஜபதிராயின் தியாகம் வீண்தானா? பாரதம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

அவர் லிஸ்பனில் சிறையிருந்த பதினேழு ஆண்டுகளிலும், பாரதத்தைப் பற்றிய ஒரு செய்தியும் அவரை எட்டவில்லை . போர்ச்சுகல் அரசாங்கம் செய்த இருட்டடிப்புக் காரணமாக அவர் தாய்நாட்டைப் பற்றி ஒரு தகவலும் அறியாமல் இருந்துவந்தார். இப்பொழுது இந்தப் பத்திரிகைகளை படித்தபோதுதான் தெரிகிறது, போர்ச்சுகல் சர்க்கார் தமக்கு நல்லதுதான் செய்திருக்கிறார்கள் என்று.

“உங்களை வரவேற்க பாரதம் திருவிழாக் கோலம் பூண்டிருப்பது போல் தோன்றுகிறது. பத்திரிகைகளை படித்தீர்களா?” என்று கேட்டான் திலீப்.

“பஸ்களைக் கொளுத்துவதும், காந்தி சிலையை உடைப்பதும் திருவிழாக் கோலமென்று எனக்குத் தெரியாது” என்றார் தேஷ்பாண்டே.

“ஓ! அதனால்தான் செய்தித் தாள்களை அப்படி கோபத்துடன் காலுக்கு அடியில் போட்டுக் கொண்டீர்களா? இப்பொழுது தெரிகிறது…”

“இத்தகைய நாட்டில் உனக்கு எதிர்காலம் இருக்குமென்று நம்புகிறாயா?”

திலீப் சிறிதுநேரம் பேசாமலிருந்து விட்டு பிறகு சொன்னான்: “பாரத கனரகத் தொழிலமைச்சர் போன மாதம் மேற்கு ஜெர்மனிக்கு வந்தபோது அவரை சந்தித்தேன். என்னைப் போன்ற தொழில்நுணுக்க வல்லுநர்கள் பாரதத்துக்குத் திரும்பி எங்கள் ஆற்றலை தாய்நாட்டுக்குப் பயன்படுத்த வேண்டும்” என்றார் அதனால்தான்.

“உன் நம்பிக்கை வீண் போகாமலிருக்க என் ஆசீர்வாதம்” என்றார் தேஷ்பாண்டே.

அவர் கண்களில் தூக்க மயக்கத்தைக் கண்ட திலீப் சொன்னான்: “நீங்கள் தூங்குங்கள். உங்கள் கண்களில் உறக்கம் தெரிகிறது.”

தேஷ்பாண்டே புன்னகையுடன் கண்களை மூடிக் கொண்டார்.

சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் மேல்நாட்டு அறிஞர்கள் பாரதத்தின் ஆன்மீகப் பரம்பரையைக் குறிப்பிட்டு, உலகத்துக்கே பாரதம் வழிகாட்டியாக இருக்கப் போகிறது என்றார்கள். விவேகானந்தர் கண்ட கனவும் இதுதான். ஆனால் எங்கோ தவறு நிகழ்ந்து விட்டது. யார் காரணம்? இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்த தேஷ்பாண்டே உறக்கத்தில் ஆழ்ந்தார்.

திடீரென்று விழிப்பு ஏற்பட்டது தேஷ்பாண்டேவுக்கு, பாரத மண்ணில் இறங்கிக் கொண்டிருந்தது விமானம். தாய் நாட்டில் காலடி வைக்கப்போகும் தருணம் வந்துவிட்டது. அவர் மனசு உற்சாகத்தினால் துள்ளியது.

விமானம் நின்றது. அவரை வரவேற்க பல அரசியல் கட்சித் தலைவர்களும், மந்திரிகளும் விமான நிலையத்துக்கு வந்திருந்தனர். ஒன்றுகூட அறிமுகமான முகமல்ல. அன்று விடுதலைக்காக போராடிய வீரர்கள் எங்கே?

மந்திரிகளின் பூதாகாரமான உடம்பு அவருக்கு எரிச்சலை ஊட்டியது. இது செல்வத்தின் வளர்ச்சியா அல்லது வறுமையின் வீக்கமா?

“தேஷ்பாண்டேஜிந்தாபாத்!” என்றது அவருக்காகக் காத்திருந்த மக்களின் கோஷம்.

ஒவ்வொரு கட்சித் தலைவரும் அந்த அந்தக் கட்சியின் சார்பாக அவருக்கு மாலையணிவித்தார்கள். செயற்கையான சூழ்நிலை உருவாகி கனத்து, அவர்கழுத்தில் மாலைகளாகத் தொங்குவது போல் அவருக்குத் தோன்றிற்று.

பத்திரிகை நிருபர்களின் சரமாரியான கேள்விகள். மின்னல் போல் தோன்றித் தோன்றி மறையும் காமிரா ஒளி, கண்ணைக் குருடாக்கும் வெளிச்சத்திலும், காதைச் செவிடாக்கும் ஆரவாரத் திலும், பதினேழு ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்பியிருக்கிறோம் என்ற தம்முடைய பிரத்தியேகமான, தனிப்பட்ட சந்தோஷத்தை அவரால் அனுபவிக்க முடியவில்லை.

இவர்களுக்கு என் மகிழ்ச்சியைப்பற்றி என்ன தெரியும்? பதினேழு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, ஒவ்வொரு நிமிஷத்தையும் ஒரு யுகமாகக் கழித்த பிறகு பிறந்த நாட்டுக்கு வருவதென்றால் அது எப்பேர்ப்பட்ட இன்பமென்று இவர்களுக்கு தெரியுமா? இந்த நாட்டு இக்கால அரசியல் தலைவர்கள் எக்கேடாவது கெட்டு போகட்டும். இப்போது நாம் அனுபவிக்கும் சுகமே சத்தியம். இந்த கணத்துக்காகத்தான் லிஸ்பனில் இத்தனை ஆண்டுகள் சிறையிருந்தோமோ? “போர்ச்சுக்கல்லே, நீ வாழ்க!” என்று வாய் முணுமுணுத்தது.

“கோவாவின் விடுதலைக்காகப் போராடி 1953-ல் கைது செய்யப்பட்டு லிஸ்பனில் சிறையிருந்த ஸ்ரீதேஷ்பாண்டேயை இன்று நாம் பாரதத்துக்கு வரவேற்கும் பேற்றினைப் பெற்றிருக்கிறோம். ஆணவம் மிக்க போர்ச்சுகல் அரசாங்கத்தோடு நம் சர்க்கார் இதுபற்றிப் பேச்சு வார்த்தைககள் நடத்தியதன் பலனை இன்றுதான் நாம் காண்கிறோம்” என்று தேஷ்பாண்டையே வரவேற்று ஒரு மந்திரி பேசினார். தேஷ்பாண்டே வியப்படைந்தார்: ‘பாரத சர்க்கார் எப்பொழுது போர்ச்சுகலோடு இதுபற்றிப் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்கள்? பச்சைப் பொய்யை வாய் கூசாமல் சொல்லு கிறாரே!”

“தேஷ்பாண்டே நம் பழம் பெருந் தலைவர்களில் ஒருவர். ஜனநாயக சோஷலிஸத்தில் நம்பிக்கை உடையவர். அவர் பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாட்டுக்கு வந்திருக்கிறார். நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், தொழில் முன்னேற்றமும் அவரை சந்தோஷத்தில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை.”

தாம் வரும்போது பாரதப் பத்திரிகைகளை படிக்கும் துர்ப்பாக்கியம் ஏற்பட்டது என்று சொல்லி இவர் வாயை அடைத்து விடலாமா என்று ஒரு கணம் நினைத்தார் தேஷ்பாண்டே. அப்பொழுது அவருக்குத் தம்முடன் பிரயாணம் செய்த இளைஞன் திலீப்பின் நினைவு வந்தது. சுற்றுமுற்றும் பார்த்தார். அவனைக் காணவில்லை. ‘பொய்யே நிறைந்த இந்த இடத்தில் அவனுக்கு என்ன வேலை? துடிதுடிப்பான இளைஞன். எனக்கு வயதாகி விட்டது. கனவுகளைத் தேடிக்கொண்டு வந்து நான் ஏமாந்தாலும் பரவாயில்லை. ஆனால், நம்பிக்கையை சிந்தனையில் தேக்கி ஒளிபூத்த கண்களுடன் வந்திருக்கும் அவ்விளைஞனை இந்த நாடு ஏமாற்றக் கூடாது. ஆனால் அதை நிச்சயமாக சொல்ல முடியுமா? வாயோசையையே தாரக மந்திரமென்று கொண்டிருக்கும் இந்த நாட்டுக்கு எதிர்காலம் உண்டா?

மந்திரி பேசி முடித்து விட்டார். அவர் தேஷ்பாண்டேயை பேசும்படி கேட்டுக் கொண்டபோது, தேஷ்பாண்டே தாம் பேச விரும்பவில்லை என்று கண்டிப்பாக மறுத்து விட்டார். மந்திரிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். ‘இதென்ன பைத்தியமாக இருக்கிறதே!’ என்ற கருத்தைப் பகிர்ந்து கொள்வது போல இருந்தது அந்தப் பார்வை.

“ஜனங்கள் ஆவலுடன் உங்கள் குரலைக் கேட்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றார் மந்திரி.

“பாரத நாட்டு மக்களின் பொறுமையைப்பற்றி எனக்குத் தெரியும். இருநூறு வருஷம் அடிமைப்பட்டு சுதந்திரத்துக்காகக் காத்திருந்தார்கள். இருபத்து மூன்று வருஷங்களாக சுதந்திரத்தின் பலனை அனுபவிக்கக் காத்திருக்கிறார்கள்” என்றார் தேஷ்பாண்டே.

“இவ்வளவு வருஷங்களாக சிறையில் இருந்ததனால் உடல் நலம் கெட்டு, பலவீனமுற்றிருக்கிறார் தேஷ்பாண்டே. அவர் உடல் நலம் சீர்பட்டவுடன், ஒரு வாரம் கழித்து, அவரை ராம்லீலா மைதானத்துக்கு அழைத்து வந்து பேசச் செய்வது என்னுடைய பொறுப்பு” என்று அறிவித்தார், அவரை வரவேற்ற மந்திரி.

“தேஷ்பாண்டே ஜிந்தாபாத்!” என்ற கோஷம் வானைப் பிளந்தது.

அவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த போது, நூற்றுக்கணக்கான போலீஸ்காரர்களைக் கண்டதும் ஆச்சரிய மடைந்தார் தேஷ்பாண்டே.

“இவ்வளவு போலீஸ்காரர்கள் எதற்காக?” என்று கேட்டார்.

“கூட்டத்தைச் சமாளிக்க” என்று விடையளித்தார் ஒரு மந்திரி.

“கூட்டத்தைச் சமாளிக்கவா? உங்களுக்குப் பாதுகாப்பா?”

“எல்லாவற்றுக்குந்தான்.”

“இருபத்து மூன்று வருஷங்களுக்கு முன்பு ஒரு மனிதர் இந்த நாட்டில் இருந்தார். அவர் ‘ராமராஜ்யம் ராமராஜ்யம்’ என்று அடிக்கடி சொல்வதுண்டு” என்றார் தேஷ்பாண்டே.

“அப்படிச் சொன்னவருக்கு போதிய பாதுகாப்பு இருந் திருந்தால் இன்று அவர் நம்மிடையே இருந்திருப்பார் அல்லவா?”

“அப்படி அவர் இல்லாமற் போனது அவருக்கும் நல்லது; நமக்கும் நல்லது.”

“ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்?” “இந்த இம்பாலா கார் உங்களுடையது தானே?”

“ஆமாம் ஏறுங்கள். உங்களை மோதிலால் நேரு மார்கில் கொண்டு விடுகிறேன். அங்கேதான் உங்களுக்கு வீடு ஏற்பாடாகி யிருக்கிறது. ‘காந்தி போனது நமக்கும் நல்லது, அவருக்கும் நல்லது’ என்றீர்களே; ஏன்?”

“அதோ அந்தக் கூட்டத்தில் முன் வரிசையில், விரலைசூப்பிக் கொண்டு கண்களே கனவாகக் கிழிந்த கமீஸ் அணிந்த ஒரு சின்னப் பெண் நிற்கிறது, பார்த்தீர்களா?”

“ஏன், கூப்பிட வேண்டுமா?”

“அது இங்கே வந்து உங்கள் இம்பாலாவை தொட்டு வைத்தால்? பளபளப்பான கார் அழுக்காகிவிடும்.”

மந்திரி பேசவில்லை. கார்க்கதவைத் திறந்து தேஷ்பாண்டேயை உள்ளே சென்று உட்காரும்படி கையால் சைகை செய்தார். அவர்களுடன் இன்னும் இரண்டு பேர் உட்கார்ந்து கொண்டார்கள்.

கார் கிளம்பியவுடன் சிறிது நேரம் கழித்து, மந்திரி கூறினார்: “நான் லிஸ்பனுக்கு ஒரு தடவை சென்றிருக்கிறேன்.”

‘அப்படியா? எப்பொழுது போனீர்கள்?” என்று கேட்டார், கழுத்தை மூடிய வெள்ளைக் கோட்டு அணிந்த ஒருவர். அவர் ஓர் அரசாங்க அதிகாரியாக இருக்கலாமென்று தேஷ்பாண்டேவுக்குத் தோன்றிற்று.

“போன வருஷம் ஐரோப்பாவுக்கு வர்த்தக ஒப்பந்த விஷயமாகச் சுற்றுப்பயணம் செய்யப் போயிருந்தேன். அப்பொழுது போர்ச்சுக் கலையும் ஸ்பெயினையும் பார்க்க வேண்டும் போல் தோன்றியது. போனேன். உங்களை லிஸ்பனில் பார்க்க வேண்டு மென்று முயன்றேன்; முடியவில்லை . அநுமதி தர மறுத்துவிட்டார்கள்.”

தேஷ்பாண்டே பேசாமல் வெளியே பார்த்துக்கொண்டிருந்தார். டில்லிக்கு அவர் இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் ஒரு தடவை வந்திருந்தார். அப்பொழுது பார்த்த டில்லி வேறு, இப்பொழுது காணும் டில்லி வேறு. பௌதிக ரீதியாகப் பல மாற்றங்கள். பெரிய பெரிய கட்டிடங்கள், அவற்றுக்கு கண்திருஷ்டியாகப் பல குடிசைகள். ஒரு பெரிய கட்டிடம் உருவாக வேண்டுமென்றால் பத்துக் குடிசைகளும் அதையொட்டி ஏற்பட வேண்டும் போல் இருக்கிறது. இது தான் இந்த நாட்டின் பொருளாதார அமைப்பு. ‘ஒரு நாட்டில் ஓர் ஏழை உணவில்லாமல் இருக்கிறான் என்றால், அவன் சோற்றை இன்னொருவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான் என்று அர்த்தம்’ என்று காந்தி ஒரு தடவை சொன்னது அவர் நினைவுக்கு வந்தது. இவ்வளவு கட்டிடங்களும் இவ்வளவு குடிசைகளும் இப்பொழுது இருக்கின்றன என்றால், இது இந்த நாட்டின் வறுமையா, வசதியா?

“லிஸ்பன் அழகான நகரம். அகலமான, நீளமான தெருக்கள். ‘அவென்யு ஆஃப் லிபர்ட்டி’ என்ற தெரு, ஒரு மைல் நீளம், முந்நூறு அடி அகலம். தெரு நடுவாக இருமருங்கும் வரிசை வரிசையாக மரங்கள். ஐரோப்பாவிலேயே மிகச் சிறந்த பூம்பொழில் லிஸ்பனில் இருக்கிறது. போக்குவரத்துக்கு சுரங்க ரெயில்வே வேறு உண்டு. சரித்திரப் பிரசித்தி பெற்ற ஊர் என்பதோடு மட்டுமல்லாமல், நவீன நகரம் என்பதுதான் இதன் தனிக் கவர்ச்சி” என்றார் மந்திரி.

“எங்கே அழகு இருந்தாலும் அதை நீங்கள் கவனிக்கத் தவறுவதில்லை” என்று சொல்லிக்கொண்டே கண்ணைச் சிமிட்டினார் மற்றொரு மந்திரி.

அவர் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாதது போல், லிஸ்பனுக்குப் போய்விட்டு வந்த மந்திரி தேஷ்பாண்டேயைக் கேட்டார்: “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், லிஸ்பனைப்பற்றி?”

“நான் லிஸ்பனின் அழகை அநுபவிக்க வேண்டும் என்பதற்காக போர்ச்சுகல் அரசாங்கம் என்னை அங்கே வைத்திருக்கவில்லை.”

“அது வாஸ்தவந்தான். என்னாலும் மன நிம்மதியுடன் லிஸ்பனைச்சுற்றிப் பார்க்க முடியவில்லை. நூற்றுக்கணக்கானகடல் கடந்த காலனிக் கைதிகள் லிஸ்பன் சிறையில் வாடிக்கொண்டிருந் தார்கள் என்பது எனக்குத் தெரியும். அங்கோ லியா….”

அவரை இடைமறித்தார் தேஷ்பாண்டே: “நான் எவ்வளவு நாள் டில்லியில் இருக்க வேண்டும்?”

வேண்டுமென்றே அவர் பேச்சை மாற்றுகிறார் என்பது மந்திரிக்குப் புரிந்துவிட்டது.

“முதலில் நீங்கள் உடல் நலத்தை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஒரு வாரம் ஆகலாம், இரண்டு வாரமும் ஆகலாம். அதற்குப் பிறகு….”

“மோதிலால் நேரு மார்க் வீட்டின் நான் இருக்க விரும்ப வில்லை” என்றார் தேஷ்பாண்டே.

“ஏன்?”

“லிஸ்பன் சிறையில் இருந்தது போதும். நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன். நான் என்ன என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி மற்றவர்கள் எனக்குக் கால அட்டவணை தருவது எனக்குப் பிடித்தமான விஷயமல்ல.”

“உடல்நல விஷயமாக…….”

“நான் பதினேழு வருஷங்கள் சிறையில் இருந்து செத்து விடவில்லை .”

கார் நின்றது, மோதிலால் நேரு மார்கில். தேஷ்பாண்டே வுக்காக ஏற்பாடு செய்திருந்த வீடு வந்துவிட்டது. பெரிய பங்களா. முன்புறத்தில் அழகான புல்வெளி. வாசலில் ஏழெட்டு கார்கள் நின்றிருந்தன.

“நீங்கள் வந்ததிலிருந்தே மிகுந்த கோபத்துடன் இருக்கிறீர்கள். என்ன காரணமென்று தெரியவில்லை” என்று காரிலிருந்து இறங்கிக்கொண்டே சொன்னார் மந்திரி.

“சொல்லட்டுமா?” என்று கேட்டார் தேஷ்பாண்டே. “உள்ளே போகலாம். பிறகு பேசுவோம்” என்றார் மந்திரி.

தேஷ்பாண்டேயை பார்க்க, ஆளும் கட்சியிலிருந்து சில பிரமுகர்கள் வந்திருந்தார்கள். மந்திரி அறிமுகப்படுத்தி வைத்தார்.

தேஷ்பாண்டே எல்லாரையும் பார்த்துப் புன்னகை செய்துவிட்டு சோபாவில் அப்படியே சாய்ந்து கொண்டார்.

“அசதி போலிருக்கிறது. அப்புறம் அவரோடு பேசிக் கொள்ளலாம்” என்றார் ஒருவர்.

“ஆமாம், அதுவும் சரிதான். ஸ்ரீ தேஷ்பாண்டே டில்லியில் இன்னும் இருபது நாள் இருப்பார். கவலை வேண்டாம். பிறகு வாருங்கள்” என்றார் மந்திரி.

எல்லாரும் போன பிறகு தேஷ்பாண்டே கேட்டார்: “நான் டில்லியில் இருபது நாள் இருக்கப் போவதாக யார் சொன்னார்கள்?”

“அப்படித்தானே ஏற்பாடு?”

“யாருடைய ஏற்பாடு?”

“அரசாங்கத்தினுடைய ஏற்பாடு.”

“அரசாங்கத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?”

மந்திரி திகைத்தார். என்ன பதில் சொல்வது? வரப்போகிற இடைத்தேர்தலுக்கு இவர் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளலா மென்றால் -? சரியான பிடிவாதக்காரக் கிழவராக இருக்கிறாரே?

“சரி, உங்கள் இஷ்டம். நீங்கள் இங்கே இருக்கும் வரையில் அரசாங்க விருந்தாளிதான்.”

“லிஸ்பனிலும் நான் அரசாங்க விருந்தாளியாகத்தான் இருந்தேன். அங்கும் தனி பங்களாதான். வாசலில் இருப்பது போலப் பெரிய புல்வெளி. ஆனால் பேசுவதற்கு ஆளும் படிப்பதற்கு செய்தித்தாளும் கிடையா. நீங்கள் என்னை அடைக்க விரும்பும் இந்த இடம் ஒரு தந்தக்கோபுரம் என்று வேண்டுமானால் வைத்துக் காள்ளுங்கள். இங்கிருந்து பூமியின் அழுக்கு கண்ணுக்குத் தெரியாது. நிர்மலமான ஆகாயமும், ஒளிபூத்த நட்சத்திரங்களும் தெரியும். இதுதான் பாரதம் என்று என்னை நம்பச் சொல்கிறீர்கள்; அப்படித்தானே?”

“பாரதம் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று வெளி நாட்டாரே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்” என்றார் மந்திரி சிறிது கோபத்துடன்.

“நடுத் தெருவில் புலிகளையும், அந்தரத்தில் நிற்கும் கயிறு வேடிக்கைகளையும், நிர்வாணமான சாதுக்களையும் எதிர்நோக்கி வந்த வெளிநாட்டார், ஒருவேளை, உங்களுடைய இம்பாலாக் களையும் குடும்பக் கட்டுப்பாட்டு விளம்பரங்களையும் பார்த்து பாரதம் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் பதினேழு ஆண்டுகளாக நான் என்ன கனவுகள் கண்டு வந்தேனோ, பாரதச் செய்தித்தாள்களை படித்ததும், எல்லாம் பொய்யாகிவிட்டன. இந்தப் பொய்க்கு ‘டெவலிப்பிங் எக்கனாமி’ என்ற பேர் கொடுத்து ஜனங்களை நீங்கள் ஏமாற்றி வருகிறீர்கள்.” * “இப்பொழுது ‘பர் காப்பிட்டர்’ வருமானம் எவ்வளவு தெரியுமா?”

“இந்தக் கதையெல்லாம் கல்லூரியில் படிக்கும் மாணவர் களுக்கும், பார்லிமென்டில் சொல்லுவதற்கும் வைத்துக் கொள்ளுங்கள். நான் காரில் உங்களுடன் வந்தபோது, கிழிந்த உடை அணிந்து அந்தச் சிறுமி நின்றிருந்தாளே, அது தான் எனக்குத் தெரிந்த உண்மை நிலை .”

“சரி, நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வசதிகளை கவனித்துக் கொள்வதற்காக இங்கே இரண்டு மூன்று பேர் இருக்கிறார்கள். கவலை வேண்டாம். உங்களுக்கு எது வேண்டு மானாலும் தயங்காமல் கேளுங்கள். சாயந்தரம் பிரதம மந்திரியிட மிருந்து அழைப்பு வருமென்று நினைக்கிறேன்” என்று கூறிக் கொண்டே மந்திரி எழுந்திருந்தார். அவருடன் மற்றவர்களும் புறப்பட்டார்கள்.

அன்று மாலை அவரை அழைத்துப் போக பிரதம மந்திரி தம் காரை அனுப்பியபோதுதான் தெரியவந்தது, தேஷ்பாண்டேயை காணவில்லை என்ற தகவல். எப்பொழுது போனார், எப்படிப் போனார் என்று யாருக்கும் தெரியவில்லை . சாப்பாடு முடிந்த பிறகு, சிறிது நேரம் தூங்கப் போவதாகத் தம் அறைக்குச் சென்றவர்தாம்; அதற்குப் பிறகு அவரை யாரும் பார்க்கவில்லை .

எதிர்க்கட்சித் தலைவர்கள் இதை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். ‘அரசாங்கம் தேஷ்பாண்டேக்குச் சரியான பாதுகாப்புத் தரவில்லை’ என்ற குற்றச்சாட்டை சுமத்தி, ‘தேஷ்பாண்டேயை விடுதலை செய்வது போல் செய்துவிட்டு மறுபடியும் போர்ச்சுகல் சர்க்கார் அவரை லிஸ்பனுக்குக் கொண்டு போய் விட்டார்கள்’ என்ற ஹேஷ்யத்தையும் பத்திரிகைகள் மூலமாகவும், பொதுக் கூட்டங்கள் வாயிலாகவும் பரப்பத் தொடங்கினார்கள். பார்லிமென்டில் இந்தக் கேள்வி எழுந்தபோது, தேஷ்பாண்டேயை விமான நிலையத்தில் சந்தித்த மந்திரி கூறினார்: “தேஷ்பாண்டேக்கு நான் பார்த்தபோது உடல்நலம் சரியில்லை. சித்த ஸ்வாதீனமற்ற நிலையிலும் இருந்தாரென்று நினைக்கத் தோன்றுகிறது. போர்ச்சுகல் அரசாங்கம் அவரை அப்படி கொடுமைப் படுத்தியிருக்கிறது. ஆகவே…”

“‘சித்த ஸ்வாதீனமற்ற’ என்று கூறியதை வாபஸ் பெற வேண்டும்” என்ற கூக்குரல் எழுந்தது.

“நான் அவருடன் பேசினேன்; அதனால் கூறுகிறேன்” என்றார் மந்திரி.

“இதையே அவரும் சொல்லலாம் அல்லவா?” என்றார் துடிப்பான ஓர் இளைஞர்.

சிரிப்பு.

‘தேஷ்பாண்டேயைக் காணவில்லை’ என்ற பிரச்னை இப்படிப் பதினைந்து நாட்கள், ‘உயிருடன்’ இருந்து பிறகு செய்தி முக்கியத்துவம் இழந்தது.

தேஷ்பாண்டே கோவாவில் பத்து நாள் ஒருவர் கண்ணிலும் படாமல் இருந்துவிட்டு பம்பாய்க்குப் போனார். கோவாவில் அவரால் தொடர்ந்து இருக்க முடியவில்லை . தினசரி உடைகளை மாற்றுவது போல், பதவிக்காக கட்சி மாறிக்கொண்டிருந்தார்கள் சட்டசபை அங்கத்தினர்கள். ‘இன்றோடு சரி பாந்தோட்கர் மந்திரிசபை’ என்ற செய்தி ஒரு நாள் வரும். அடுத்த நாள், அவரை எதிர்த்தவர்களில் நாலைந்து பேர் மறுபடியும் அவரை ஆதரிக்கத் தொடங்கியிருப்பார்கள். இத்தகைய அரசியல் சூழ்நிலையில் தேஷ்பாண்டே தம் வரவை கோவா மக்களுக்கு அறிவித்துக் கொள்ள விரும்பவில்லை .

அவர் பம்பாய்க்கு வந்தபோது, மகாராஷ்டிர – மைசூர் எல்லைத் தகராறு விஷயமாக பஸ்கள் எரிந்து கொண்டிருந்தன. தேஷ்பாண்டேக்கு இது புரியவே இல்லை. எல்லைத் தகராறு என்பது இரு வேறு நாடுகளுக்கிடையே ஏற்படுவது அல்லவா? எப்படி ஒரே நாட்டில் இரண்டு ராஜ்யங்களுக்குள்ளே எல்லைத் தகராறு உண்டாகிறது? அப்படியானால், ஒவ்வொரு ராஜ்யமும் தனித் தனி நாடா? தனித் தனிகொடி கேட்கிறார்கள். ஏன் தனித் தனி நாடாகச் சொல்லக் கூடாது?

கடந்த பத்து நாளாக அவர் 1953-இலிருந்து இன்று வரை பாரதத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைப்பற்றி புத்தகங்கள் மூலமும், பலருடன் உரையாடியும் தெரிந்து கொண்டார். அரசியல் அல்லது அந்தஸ்து லாபத்துக்காக மனச்சாட்சியை ஏலம் கூறுவதுதான் இந்த நாட்டின் இன்றைய ஒழுக்கம். இதற்குக் காரணம் என்ன?

தேஷ்பாண்டே இதைப் பற்றித் தீவிரமாகச் சிந்தித்த போதுதான் புரிந்தது. ஒரு காலத்தில் மதம் பெற்றிருந்த செல்வாக்கு இன்று அரசியலுக்கு ஏற்பட்டிருக்கிறது. விக்கிரக ஆராதனை பண்பாடாக வளர்ந்த இந்த நாட்டில், மதத்தலைவர்கள் ஒரு காலத்தில் வணங்கியது போல் அரசியல் தலைவர்களையும் வழிபடுவது என்பது சகஜமாகிவிட்டது. மதம் என்பது ஒழுக்கம் என்ற அஸ்திவாரத்தில் எழுந்த கட்டிடமாதலால், மதத் தலைவர்கள் மக்களுக்கு எல்லாத் துறைகளிலும் வழிகாட்டிகளாக இருந்தார்கள். அரசியல் தலைவர்களிடமும் இதே தகுதியை எதிர்பார்க்கும்போது தான், மக்களுக்கு ஏமாற்றமோ, அல்லது அரசியல் தலைவர்களிடம் பரவலாகக் காணப்படும் ஒழுக்கமின்மையை தாங்கள் வாழ்க்கைச் சட்டமாகக் கொண்டால்தான் முன்னேறலாம் என்ற தவறான மனப்பான்மையோ ஏற்படுகிறது. காந்தியைப்போல் மக்களை உணர்ந்தவர்கள் யாரும் இருக்க முடியாது. இதனால்தான் அவர், ‘இருபதாம் நூற்றாண்டின் சவாலுக்கு மதம் மட்டும் தனிப்பட்ட முறையில் ஏற்றதன்று’ என்று தெளிந்து, மதத்தையும் அரசியலையும் இணைத்து, புதிய கொள்கைப் பாதையை வகுக்க முயன்றார். புத்தரே தோற்றுவிட்ட சரித்திரப் பிரசித்தி பெற்ற இந்த நாட்டில் காந்தியைச் சுட்டோம் என்பது ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒரு காலத்தில் நம் தலைவர்களை ஸ்தாபனம் என்ற சிலுவையில் அறைந்து அவர்களுடைய போதனைகளைச் செயலற்றுப் போகச் செய்து பழகிய நமக்கு நம் தலைவர்களைச் சுடுவது என்பது மேல்நாடுகள் கற்றுத் தந்த பாடம். சுடுவதற்குத் தலைவர்கள் அகப்படாவிட்டால், ஒருவரை ஒருவர் சுட்டுக் கொள்வோம். இதுதான் ஜனநாயக வளர்ச்சிக்கு அடையாளம்.

லிஸ்பன் சிறையில் இருந்ததுதான் சொர்க்கம் என்று பட்டது தேஷ்பாண்டேக்கு. இந்த நாட்டைப்பற்றிக் கனவு கண்டவாறு, தியாகமே வாழ்க்கைத் தத்துவமாக இருந்த அந்த நாட்களை எண்ணி அசை போட்டுக் கொண்டே எஞ்சிய நாட்களைக் கழித்திருக்கலாம்.

மனம் கசந்த நிலையில் அவர் நாடெங்கும் தம் சிந்தனை போனபடி சுற்றினார். ஓர் இடமாவது அவருக்கு அமைதியைத் தரவில்லை. கிராமத்திலுள்ள நல்ல ஜனங்களையும் கெடுத்து விட்டதே இந்தக் கால அரசியல்! இந்த நாடு சீர்திருந்துவதற்கு வழியே இல்லை!

ஆறு மாதங்களுக்குப் பிறகு தேஷ்பாண்டேயின் அறிக்கை செய்தித் தாள்களில் வந்தபோதுதான், ‘அவர் எங்கும் காணாமற் போகவில்லை; பாரதத்திலேயே இருக்கிறார்’ என்று அனைவருக்கும் தெரியவந்தது. ஆனால் அந்த அறிக்கைதான் அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சியைத் தந்தது.

“போர்ச்சுகல் அரசாங்கம் என்னை மறுபடியும் சிறை செய்து லிஸ்பனில் காவல் வைக்காதா என்று ஏங்குகிறேன். இந்நாட்டு அரசியலும், மக்களின் ஒழுக்கமும் என்னை இவ்வாறு எண்ணத் தூண்டுகின்றன.”

தேஷ்பாண்டேக்குப் பாராட்டுத் தந்தி வந்தது. அவர் அவசர அவசரமாக அதைப் பிரித்தார்:

“நீங்கள் சொல்வது சரிதான். நான் மேற்கு ஜெர்மனிக்கு திரும்பப் போகிறேன். இந்த நாட்டுக்கு கடந்தகாலமும் இல்லை; எதிர்காலமும் கிடையாது. நிகழ்கால நரகத்தைத்தான் சொர்க்கம் என்று எண்ணி மகிழ்கிறார்கள்… திலீப்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *