கண்ணுக்குத் தெரியாதா…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 1, 2024
பார்வையிட்டோர்: 1,117 
 
 

அறவுஞ் சிறிய உயிர்தொறும்தான்
பரமகாட்டை யணுவாச் சென்று
உறையும் சிறுமை அணிமாவாம்
-சித்தர் பாடல்

“நல்லா யோசிச்சிட்டியா?”

“நல்லா யோசிச்சிட்டேன் சாமி! முன்ன வச்ச கால பின்ன வக்கப் போறதில்ல”

“என்ன செய்யப் போற?”

“இப்ப சொல்லத் தெரியல… என்னவோ செய்வேன்… எப்படியோ செய்வேன்.. நீங்க மந்திரம் மட்டும் சொல்லிக்கொடுங்க “

சித்தர் பெருமான் காசியை வாத்சல்யத்துடன் பார்த்தார். பதினெட்டு பத்தொன்பது வயதிருக்கும். உலக அனுபவம் பத்தாது. சட்டென்று கோவம் வருகிறது. அது தனக்கும் தீங்கு இழைக்கிறது என்பதை புரிந்துகொள்ள மறுக்கிறான்.

காசியின் அப்பா ராமலிங்கம் அவரது நெடுநாளைய பக்தர். முப்பது வருடங்களாக வந்துகொண்டு இருக்கிறார். சித்தர் பெருமானிடம் அளவிடமுடியாத பக்தி. அவர் எதிரே கைகட்டி வாய்மூடி நிற்பார். ஆரம்பத்தில் தனக்கென்று எதுவுமே கேட்டதில்லை. சொல்லப்போனால் இதுவரை தனக்கென்று ஒரு விஷயம் தவிர, அவர் எதுவுமே கேட்டதில்லை.

ஒரு நாள், சுமார் இருவது வருடம் முன்னர் இருக்கும், சித்தர் பெருமானுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளைச் செய்துவிட்டு அங்கிருந்து சென்று விடும் ராமலிங்கம் அன்று நின்றுகொண்டே இருந்தார்.

‘என்ன?’ என்று கண்ணாலேயே சித்தர் கேட்டதும் பொலபொலவென்று அழத் தொடங்கிவிட்டார். சித்தர் அவரை ஆசுவாசப்படுத்தி பின்னர் விஷயம் கேட்டறிந்தார். ராமலிங்கத்துக்கு கலியாணம் ஆகி பத்து வருஷமாகியும் குழந்தைப் பேறு இல்லை.

சித்தர் பெருமான் கண்மூடி தியானத்தில் சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து கையைக் காற்றில் வீசி எங்கிருந்தோ ஒரு சிறிய மந்தாரை இலைப் பொட்டலத்தை வரவழைத்தார்.

“இந்தா இதுல லேகியம் இருக்கு. மூணு நாள் உன் மனைவிய சாப்பிடச் சொல்லு. ஒரு நாளைக்கு சஷ்டி கவசம் பத்து முறை சொல்லச் சொல்லு. நல்லது நடக்கும்” என்றார்.

அவர் சொல்லைச் சிரமேற் கொண்டு ராமலிங்கம் அப்படியே செய்தார். எண்ணி பத்து மாதத்தில் அவர் மனைவி காசியைப் பெற்றெடுத்தாள். அவனுக்குக் காசி என்ற பெயர் வைத்ததற்கும் ஒரு காரணம் உண்டு. அது சித்தர் பெருமானின் பூர்வாசிரமப் பெயர்.

காசி சிறுவயதில் இருந்தே நல்ல அறிவாளி. நன்றாகப் படிப்பான். படிப்பை நிறுத்தி விவசாயம் செய்ய அவனை ராமலிங்கம் கட்டாயப்படுத்திய போதுதான் அவன் சித்தர் பெருமானிடம் ஓடி வந்தான்.

பின்னர் அவர் தலையிட்டு அவனைப் படிக்கவைக்கச் சொல்லி ராமலிங்கத்திடம் கூறினார். அவர் உதவியால் ஈர்க்கப்பட்ட காசி பின்னர் அவர் இருந்த இடத்துக்கு அடிக்கடி வர ஆரம்பித்தான். அவருக்குப் பணிவிடை செய்வான். அவரிடம் பல சுலோகங்கள் கற்றறிந்தான். அப்படிப்பட்ட ஒரு நாளில் சாமி அவனுக்கு கருட வித்தை போதித்தார். ‘ என்னிக்காச்சும் ஒனக்கு உபயோகப்படும்’ என்றார். படிப்பிலும் சுட்டியாக இருந்தவன் பத்தாவதில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று பிளஸ் டூவில் எம்பிபிஎஸ் படிப்புக்கான க்ரூப் எடுத்தான். அந்தப் பொதுத்தேர்விலும் நல்ல பர்சென்டேஜ் எடுத்து அந்த மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தான். அங்குதான் அவன் விதி அவனுக்காக வந்தனாவின் உருவில் காத்திருந்தது. அந்தக் கல்லூரி இருபாலரும் படிக்கும் கல்லூரி.

வந்தனா! இருவது வயது இளமங்கை. மெல்லிய திரேகமும் வெண்மை நிறமும் திரண்ட அங்கங்களும் என்று பார்ப்பவரைப் பாவம் செய்யத் தூண்டும் அழகு. காசிக்கு ஓராண்டு சீனியர்.

காலேஜில் ரேகிங் என்று பெரிதாக எதுவும் இல்லையென்றாலும் இலைமறைவு காய்மறைவாக கொஞ்சம் நடக்கத்தான் செய்தது. காசியும் மாட்டினான். என்னென்னவோ செய்யச் சொன்னார்கள். எல்லாமும் செய்தான். ஆனால் அவர்கள் இன்னமும் உற்சாகமானார்கள்.

காசி பார்ப்பதற்கு மிக மிக சுமார். கருப்பு. ஒல்லியான உடல்வாகு. கிராமப்புறத்தில் வசித்ததால் நேர்த்தியாக உடை அணியத் தெரியாது. ஆங்கிலம் நன்றாகப் புரிந்து கொள்வான் என்றாலும் பேசத் தயங்குவான். மேலும் உச்சரிப்பில் கிராம வாடை அடிக்கும்.

இப்படிப்பட்ட ஒருவன் சிக்கினால் விடுவார்களா? அவனைப் பிழிந்து எடுத்து விட்டார்கள். கடைசியாக ஒருவன் ஒன்று செய்யச் சொன்னான். கேட்டதும் காசி உடல் கூசியது. வெறும் உள்ளாடை அணிந்து (பனியனும் கூடாதாம்) கையில் ஒரு கம்புடன் அந்தக் கல்லூரி கிரவுண்டை மூன்று முறை சுற்றி வரவேண்டுமாம்.

காசி அழத்துவங்கினான். இங்குதான் விதி வந்தனா உருவத்தில் வந்தது. அந்தப் பக்கமாக வந்த சில பெண்களில் வந்தனாவும் இருந்தாள். நடப்பதை சட்டென்று யூகித்தவள் அந்தப் பையனுடன் சென்று ஏதோ இங்கிலிஷில் பேசினாள். காசிக்குப் பாதி புரிந்தது. பாவம் கிராமப் பையன் விட்டுவிடு என்று சொன்னாள்.

அந்தப் பையன் காதலுடன் வந்தனாவைப் பார்த்தான். பின்னர் காசியிடம் “இன்னிக்கு உனக்கு லக்கு! ஓடிப்போ! யாருகிட்டயாவது சொன்னியானா அப்புறம் இருக்கு ஒனக்கு” என்றான்.

அன்றிரவு காசிக்கு தூக்கம் வரவில்லை. ஒரு விதமான பயம் இருந்துகொண்டே இருந்தது. வந்தனா மட்டும் வந்திருக்கவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும்? நினைக்கவே கூசியது. அவள் தெய்வம் போல வந்து காப்பாற்றினாள். இப்படி அவன் நினைவு வந்தனா மீது குவியத்தொடங்கியது.

எவ்வளவு நல்லவள்! எவ்வளவு மனிதாபிமானம் உள்ளவள்! எவ்வளவு நன்றாக இங்கிலீஷ் பேசுகிறாள்! எவ்வளவு அழகாக இருக்கிறாள்! ஸினிமா நடிகை சாயிஷா போலத் தோற்றம். ரோஸ் நிறம். மிரண்ட விழிகள்! இப்படிச் சென்ற தன் எண்ணங்களை நினைத்து அவனுக்கு வெட்கமானது.

அப்புறம் காலேஜ் சற்று நார்மலாகப் போனது. படிப்பு படிப்பு படிப்பு என்று ஏக பிஸி ஆகிவிட்டான் காசி. அவ்வப்போது வந்தனாவை வழியில் சந்திப்பான். சிநேகமாகச் சிரிப்பாள். அவனுக்குச் சிறு சிறு உதவிகள் செய்வாள். தன்னுடைய நோட்ஸ் கொடுத்து உதவினாள். இப்படி அவன் உள்ளத்தை அவள் ஆக்கிரமித்தாள்.

சிக்கலில்லாமல் சென்றுகொண்டிருந்த நாட்களில் தான் காசி அந்தத் தப்பை செய்தான். அது நல்ல வெயில் காலம். காசி அந்தக் காலேஜ் மைதானத்தில் நாலைந்து முறை சுற்றி ஓடி உடற்பயிற்சி செய்வான். அன்றும் அப்படிச் செய்துகொண்டு இருந்தபோதுதான் அவன் வந்தனாவைப் பார்த்தான். அந்த மைதானத்தில் இருந்த ஒரு மரத்தின் கீழ் நின்றுகொண்டு அவள் யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தாள். இவனைப் பார்த்துக் கையசைத்தாள். இவனும் புன்னகைத்தான். பின்னர் அவள் அருகில் வந்ததும் “ஹலோங்க” என்று சொன்னவன் அப்படியே மயங்கி கீழே விழுந்தான்.

திடீரென்று முகத்தில் தண்ணீர் அடிக்கப்பட கண்விழித்தவன் தான் வந்தனாவின் மடியில் தலைவைத்துக் கிடப்பதை உணர்ந்தான். அவள் மெல்லிய தொடைகள் அவன் வீட்டில் இருந்த இலவம்பஞ்சு தலைகாணியை விட மெதுவாக இருந்தது. அவன் முகத்தருகில் அவள் இளமைகள்! அவன் தன்னை இழந்தான். செட்டென்று எக்கி அவள் கழுத்தைசுற்றி கை போட்டு அவளை இழுத்து அவள் உதட்டோடு உதடு பொருத்தினான்.

நிலைகுலைந்து போன வந்தனா அவனை ஓங்கி அறைந்து தன் மடியில் இருந்து தள்ளி விட்டாள். “யூ பாஸ்டர்ட்! கண்ட்ரி ப்ரூட்! இரு உன்ன என்ன பண்றேன்” என்று சொல்லி அங்கிருந்து ஓடினாள்.

அப்புறம் அவள் காதலன் (அதாங்க அந்த ரேகிங் பையன்) தன் பிரெண்ட்ஸ் உடன் வந்து இவனை நன்றாக அடித்ததும் அடித்து காலேஜ் பின்புறம் இருந்த காடு போன்ற இடத்தில் தூக்கிப் போட்டதும் ஒரு இரவு முழுக்க இவன் அங்கே வலியில் துடித்துக் கிடந்தது மறுநாள் ஆடு மேய்க்க வந்த சிறுவர்கள் பார்த்து இவனைக் காப்பாற்றியதும் சுருக்கமாக சொன்னால்தான் நல்லது.

விஷயம் காலேஜ் அதிகாரிகள் வரைச் சென்றது. ஆனாலும் இவன் நடந்த எதையும் சொல்லவில்லை. தான் அந்தக் காட்டுக்குச்சென்றதாகவும் அங்கிருந்த பாறை மீது ஏற முயன்றதாகவும் அதிலிருந்து வழுக்கி விழுந்ததாகவும் சொன்னான். இவன் சொன்னதை யாரும் நம்பவில்லை. இருந்தாலும் அந்த விஷயம் அத்தோடு விடப்பட்டது.

அதற்கு இரண்டு நாள் கழித்து தீபாவளி விடுமுறை ஆரம்பித்தது. காசி தன் ஊருக்குச் சென்றான். அவன் நிலையைப் பார்த்து வீட்டில் கேட்டதற்கும் அவன் அதே பதில்தான் சொன்னான். ஆனால் உள்ளுக்குள் எரிமலையாக கொந்தளித்துக் கொண்டிருந்தான்.

‘ராட்சசி! முத்தம் தானே குடுத்தேன்? அந்த அறையோடு விட்டிருக்கலாம். ஆள் வைத்து அடித்துவிட்டாள். அவளைச் சும்மா விடக்கூடாது. ஏதாவது செய்யவேண்டும்.’

இந்த எண்ணங்களோடுதான் அவன் சாமியிடம் சென்றான். எப்படி அடி பட்டது என்று சாமி கேட்டதுக்கும் இதே பதில்தான் சொன்னான். அதைக் கேட்டு சாமி சிரித்தது.

கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்தவன் திடீரென்று சாமியிடம் “எனக்கு ஏதாச்சும் மந்திரம் சொல்லுக் கொடுங்க சாமி “ என்றான். சாமி இன்னும் பெரிதாகச் சிரித்தார்.

“சிரிக்காதீங்க.. உங்களுக்குத்தான் அட்டமா சித்திங்க தெரியுமாமே! எங்க அப்பாரு சொல்லியிருக்காரு. எனக்கு அதுல ஒண்ணு சொல்லிக்கொடுங்க”

“அதெல்லாம் முடியாது”

“அப்ப நான் இங்கிருந்து கீழ குதிச்சுருவேன் சாமி” என்று சொன்னவன் சிறிதும் யோசிக்காமல் சுமார் ஐம்பது அடி உயரத்தில் இருந்து குதித்து விட்டான்.

சித்தர் பெருமான் பதறி விட்டார். கீழே ஓடிச்சென்று அவனைத் தூக்கிக்கொண்டு தன் இடத்துக்கு வந்தார். சில இலைகளை எடுத்து ஏதோ மந்திரம் சொல்லி கைகளில் வைத்து பிசைந்து சாறு எடுத்து அவன் உடலில் தேய்த்தார்.

அவன் உடல் காயங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்தன. “நான் உனக்கு ஒரு மந்திரம் சொல்லித்தரேன். ஆனா அது ஒரு தடவ தான் உனக்கு உபயோகப் படும். நீ அத உபயோகப்படுத்தற விதத்தப் பொருத்து உனக்கும் நல்லது கேட்டது நேரும்” என்றார் சித்தர் பெருமான்.

“இதும் பேரு அணிமா. பெரிய உருவத்தச் சின்னதா ஆக்கலாம். இது உனக்கு எப்படி உபயோகப்படும்னு தெரியாது. ஆனா இதத்தான் உனக்குச் சொல்லித்தர உத்தரவு. ஆனா நல்லா புரிஞ்சுக்க. இது ஒனக்கும் பாதகமாத்தான் முடியும். அப்புறம் ரொம்ப முக்கியமான விஷயம் இது சுமார் மூணுமணி நேரம்தான் கட்டுக்குள் நிற்கும். அப்புறம் வேலை செய்யாது. இப்பவும் சொல்றேன். கோவத்த விட்ரு. அது ஒனக்கு நல்லது. எல்லாம் ஈசன் செயல்” என்று சொல்லி முடித்தவர் சட்டென்று காசியின் நெற்றியில் தன் வலது கட்டைவிரலை வைத்தார். காசியின் எல்லா உணர்வுகளும் ஒரு கேந்திரவயப்பட்டன. சித்தர் பெருமான் அவன் வலது காதில் ஒரு மந்திரத்தை மூன்று முறை சொன்னார். பின்னர் காசியின் நெற்றியில் மீண்டும் தன் விரல் வைத்து அவனை பழைய நிலைக்குக் கொண்டுவந்தார்.

மீண்டும் அவனை ஒரு முறை பார்த்து ‘எல்லாம் ஈசன் செயல்’ என்றார். மந்திரோபதேசம் பெற்ற காசி சாமியை வணங்கிவிட்டு கீழே இறங்கிச் சென்றான். இறங்கிச் செல்லும் வழியில் ஒரு பாறை இடுக்கில் சரசரவென்று ஒரு அரவம். ஒல்லியாக நீளமாக நாகராஜன். படமெடுத்து நின்று அவனைப் பார்த்தது. காசி அருகில் இருந்த ஒரு மரத்தின் கிளையை ஒடித்து, மிக லாவகமாக ஒரு சுழற்று சுழற்றி அதை அந்தக்கல்லோடு அழுத்திப் பிடித்தான். நாகம் திமிர முயன்று தோற்றது. சட்டென்று அதன் கழுத்துப் புறத்தை கையில் பிடித்து மறுகையால் அதன் வால் பக்கமும் பிடித்து ஒரு கயிறு போல கோர்த்துப் பிடித்து அதை அந்தப் பாறையில் ஒரு விதமாக அடித்தான். நாகம் மயங்கியது. பின்னர் தான் கொண்டுவந்திருந்த ஜோல்னா பையில் அதை போட்டு ஒரு முடிச்சிட்டு அதை இறுக்கி மூடினான்.

பின்னர் தன் வீடு சென்றவனைப் பார்த்த ராமலிங்கம் அதிசயித்தார். “சாமி கிட்ட போயிருந்தயா கண்ணு?” என்று கேட்டார். “ஆமாம் அப்பா. சாமி என்னிய இன்னிக்கே கிளம்பிப் போயிரச் சொன்னாரு. அதனால நான் கெளம்பறேன்” என்று சொல்லி மடமடவென்று தன் பொருள்களை பேக் செய்தான். சூட்கேசில் துணிகளுக்கு இடையில் அந்த நாகத்தை வைத்தான்.

மூன்று மணி நேரப் பயணம். மதியம் மூன்று மணி சுமாருக்கு காலேஜ் சென்றடைந்தான். மறு நாள் கிட்டத்தட்ட எல்லா மாணவர்களும் லீவு முடிஞ்சு திரும்பி விட்டார்கள். வந்தனாவும் வந்துவிட்டாள்

அந்தக் காலேஜின் ஜிம்முக்கு வந்தனா ரெகுலராக போவாள் என்பது காசி அறிந்து வைத்திருந்தான். அவள் மாலை வேளைகளில் செல்வாள். அன்றும் அதுபோலவே போனாள் அவள் சென்ற சிறிது நேரத்தில் காசி தன் சூட்கேஸ் திறந்து அந்த ஜோல்னா பையை எடுத்தான். உள்ளே அரவம் துள்ளித் திமிறிக்கொண்டு இருந்தது.

காசி சட்டென்று அந்தப் பையோடு நாகத்தைப் பிடித்தான். சித்தர் பெருமான் போதித்த அந்த மந்திரத்தை அவன் உச்சரிக்க ஆரம்பித்தான். சரியாக மூன்றாவது முறை சொல்லும் போது அந்த மாற்றத்தை உணர்ந்தான். அவன் கையில் இருந்த நாகம் நழுவி பைக்குள் விழுந்தது. மந்திரம் சொல்லி முடித்த காசி அந்தப் பையை திறந்தான்.

உள்ளே ஒரு இஞ்ச் அளவில் அந்த நாகம் படமெடுத்து நின்று கொண்டிருந்தது. காசி சிரித்தான். அந்த நாகத்தின் கண்களில் ஒரு வெறி. அதை ஒரு சிறிய துணியில் சுற்றி எடுத்துக்கொண்டு ஜிம்முக்குப் போனான். அங்கே வந்தனா ட்ரெட்மில்லில் workout செய்துகொண்டிருந்தது கண்ணாடி வழியே தெரிந்தது. வெளியில் எல்லாரும் தங்கள் பைகளை வைத்திதிருந்த shelf மீது அவன் கண்கள் படிந்து வந்தனாவின் handbagஐத் தேடியது.

அந்தச் சந்தன நிற handbag மூன்றாவது படியில் இருந்தது. தன் பாக்கெட்டில் இருந்து அந்தத் துணியை எடுத்தான். பிறகு வந்தனாவின் handbag இருந்த இடம் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

‘எல்லாம் ஈசன் செயல்’ என்று அவன் காதில் சாமியின் குரல் கேட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *