தீர்ப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 2, 2024
பார்வையிட்டோர்: 238 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அவன் கொலையாளிதான்” என்று நீதிபதி தீர்ப்புக் கூறிவிட்டார். 

ஜூரர்களின் ஏகமனசான முடிவும் அதுவே. அவனுக்கும் அது தெரிந்ததுதான். ஆனால் அவன் அறிவு அதை ஒப்புக் கொள்ள மறுக்கிறது; நீதிபதிக்கும் தனக்கும் வித்தியாசம் இல்லை என்று வாதமிடுகிறது. ‘என்னைக் கொன்றுவிட வேண்டும் என்ற க்ஷாத்திரம் நீதிபதிக்கு இல்லை. எனக்கும் அப்படித்தான். வீரனை வேண்டுமென்றா கொன்றேன்? அவன்மீது எனக்குப் பகையோ, கோபமோ இல்லை. அவன் செய்த குற்றத்துக்குத் தண்டனை அது என்பதுதான் எனது தீர்ப்பு.’ ஆனால் அதை யார் கேட்கிறார்கள்?

நீண்ட பெருமூச்சு எறிந்தான் சின்னாண்டவன். அவன் கொலை காரன்! அது எப்படி நேர்ந்தது என்றாலோ… 

சின்னாண்டவனின் மாமனான வீரன் வம்புக்காரன்; முரடன். அவன் சும்மா இருந்தாலும் அவனுடைய வாயும் கையும் சும்மா இருப்பதில்லை. தினம் யார் காட்டிலாவது மாடு மேய்த்துவிடுவான். கதிரைக் கசக்குவான். புல் அறுத்துவிடுவான். சொந்தக்காரர் கண்டு கேட்டால் சண்டை பிரமாதமாக எழும். அதற்குப் பயந்து அவர்களும் கண்டாலும் காணாதவர்கள்போலப் போய் விடுவார்கள். 

அவன் மாத்திரம் அல்ல. அவன் குடும்பமே அப்படித்தான். ஊரார் அவர்களைக் கண்டாலே அச்சம் கொள்வார்கள். அந்தக் குடும்பத்துக்குச் சர்க்கார் தண்டனை புதிதல்ல.அடி,உதைபடுவது சகஜம். வீரன் மகள் கறுப்பாயியைத்தான் சின்னாண்டவன் கல்யாணம் செய்துகொண்டான். 

சின்னான் தூரத்து ஊர்க்காரன். வீரன் குடும்ப விஷயம் ஒன்றும் அவனுக்குத் தெரியாது. கல்யாணமான சிறிது காலத் திற்குப் பிறகு எல்லாம் அவன் காதில் பட்டன. தன்னைக் கண்டால் மற்றவர்கள் விலகிப் போவதும், ஜாடை மாடையாகப் பேசுவதும் தெரிந்தன. மனம் நொந்தான். 

அந்த ஊர்க்காரர்கள் வீரனிடம் வாய்ப்பேச்சுக்கூட வைத்துக் கொள்வதில்லை. அந்த ஊரில் பெரும்பான்மையான குடும்பங்கள் அவன் பந்துக்களே. கிராம நாட்டாண்மை, மணியம் முதலிய பதவிகளை வகித்தவர்களும் அவர்களே. அவர்களை வீரன் மதிப்பதே இல்லை. கட்டுப்பாட்டுக்கு அடங்காத முரட்டுக் காளை அவன். அதனால் ஊர்க்காரர்கள் அவனைக் கிராமப் பிரஷ்டம் செய்திருந்தார்கள். 

வீரன் குடும்ப இயல்பிற்கே விலக்கானவள் கறுப்பாயி. தாய் தந்தையரின் போக்கு அவளுக்குக் கொஞ்சங்கூடப்பிடிக்காது. அவள் தாய் வீட்டிற்கு வந்திருந்தாள். அவளை அழைத்துச் செல் வதற்காகத்தான் சின்னாண்டவன் மாமனார் வீட்டுக்கு வந்தான். 

அவனுக்கு அந்த ஊரில் இருப்புக் கொள்ளவே இல்லை. அவன் எந்த வீட்டில் போய் உட்கார்ந்தாலும், இங்கு வராதே அப்பா. உன் மாமியார் கண்டால் பிடி பிடி என்று சண்டைக்கு வந்துவிடுவாள். சண்டை பிடிக்க எங்களால் ஆகாது என்று சொல்லி அவனை அனுப்பிவிடுவார்கள். 

வழியில் எவரிடமாவது பேச்சுக் கொடுத்தால், “அதோ உன் மாமன் வருகிறான். நான் ஏதாவது சொல்லிக் கொடுத்து விட்டேன் என்று வீண் வம்பிழுப்பான். நான் வருகிறேன் என்று போய்விடுவார்கள். 

அவன் மனம் வேதனையுற்றது. நல்ல மனிதர் முகத்திலே விழிக்க அவன் அஞ்சினான். ஊருக்குப் புறப்படக் கறுப்பாயியைத் தூண்டினான். ஆனால் அவள் தந்தை, “நீ வேண்டுமானால் போ. என் மகள் இப்பொழுது வரமாட்டாள் ” என்று அதட்டி விட்டான். வீரன் கோபத்துக்கு அஞ்சிக் கறுப்பாயி ஒன்றும் பேசவில்லை. 

சிலநாட்கள் சென்றன. சின்னாண்டவன் மானம் தினம் பறி போயிற்று. தீர்மானமாகக் கிளம்பிவிட்டான் ஊருக்கு. வீரன் தன் பாடத்தைத்தான் படித்தான். கறுப்பாயி கணவனுடன் போகவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கவே மறுக்க முடியாமல் போயிற்று. 

சாப்பாட்டுக்குப் பிறகு பிரயாணப்படுவதாகத் திட்டம். வேலை மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. வீரன் பலாக்காய் நறுக்கக் கைக் கொடுவாளைத் தீட்டிக்கொண்டிருந்தான். 

திடீரென்று தெருவில் பெரிய சப்தம் எழுந்தது. வீரன் மகன் ஒரு சிறு பாத்திரத்துடன் வீட்டுக்குள் ஓடிவந்தான். அவனைத் துரத்தி வந்த பெண் தன் பாத்திரத்தை வாங்கித் தரும்படி வீரனிடம் முறையிட்டாள். அவள் வீண் பழி சுமத்து வதாக அவன் கோபித்தான். அவள் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. தன்னை அவதூறு செய்தால் வீண் கஷ்டம் விளையும் என்று வீரன் உறுமினான். 

சண்டை பிடிப்பதற்காக, கையில் இருந்த அரிவாளைக் கீழே போட்டுவிட்டு, தெருவில் நின்ற வண்டியில் வந்து அமர்ந்தான். கூச்சலைக் கேட்டுக் கும்பல் கூடிவிட்டது. அவன் வீண் சண்டை பிடிப்பதைக் கண்டு சின்னாண்டவன் மனம் நொந்தான்; பாத்தி ரத்தை அவளிடம் திரும்பக் கொடுத்துவிடும்படி சொன்னான். 

வீரனுக்கு அடக்க முடியாத கோபம். “போடா உள்ளே, வாயை மூடிக்கொண்டு” என உறுமினான். 

சின்னான் அஞ்சவில்லை. “ஏன் வீண் வம்பு? திருட்டுத் தொழில் நமக்கு எதுக்கு? சின்னப்பயல் தெரியாத்தனமாக அதை எடுத்து வந்தால், அவனைக் கண்டிப்பதல்லவா நியாயம்? அதை விட்டு ஊர் சிரிக்கும்படி வேலை செய்தால்?” என்றான். 

“சீ கழுதை! நீ யாருடா எனக்குப் போதிக்க? கொடுவாளை எடுத்தால் பலாக்கா கொத்தறாப்பலே கொத்திப்போடுவேன். யாருன்னு நெனச்சே?” 

வீரனின் வார்த்தைகளைக் கேட்ட சின்னான் ஒரு கணம் திகைத்துவிட்டான். உண்மையையும் நியாயத்தையும் சொன்ன தற்காகவா இவ்வளவு சீற்றம்? மீண்டும் பேசினான்: “என்ன மாமா, நான் என்ன சொல்லிவிட்டேன் ? நியாயத்தை…”

“நீ மகா பெரியவன்! நியாயத்தைக் கண்டு விட்டானாம் நியாயத்தை !” என்று கர்ஜித்துப் பாய்ந்தான் வீரன். சின்னான் அதற்குள் அரிவாளைத் தன் கையில் எடுத்துக்கொண்டான். 

வீரன், “வாளைக் கொடுடா இங்கே. முதலில் உன்னைப் பைசல் பண்ணுகிறேன். எனக்குப் போதிக்கவா பார்க்கிறே? அப் புறம் அந்தச் சிறுக்கியையும் தீர்த்து விடுகிறேன். என் மவன் கள்ளப் பயலா? ஊம்,எங்கே?” என்று முன் வந்தான். 

வெறிகொண்ட வேங்கை போலச் சிலிர்த்துநின்ற அவன் எதுவும் செய்யத் தயங்கமாட்டான் என்பதைத் தீக்கங்கு போன்ற அவன் கண்களும், துடிக்கும் மீசையும் காட்டின. சின்னான் மனத்தில் சலனம் ஏற்பட்டது. 

“இப்படி இவனை விட்டு வைப்பானேன்? மனிதனைக் கொல்லும் நச்சுப் பாம்பை நாம் கொல்லுகிறோம். புலியையும், வெறி நாயையும் சுட்டுத்தள்ளுகிறோம். இந்த மூர்க்கமிருகத்தையும் அப்புறப்படுத்திவிட்டால் சமூகத்துக்கு நல்லதுதானே?”

‘அதுதான் நியாயம்’ என்றது அவன் உள்ளம். அவன் அதற்கு மேல் சிந்திக்கவில்லை மின்னல்போல் வாள் வீரன்மேல் பாய்ந்தது. அவன் வீழ்ந்தான், இடிபட்ட நெடும்பனைபோல. 

சின்னாண்டவன் நேராகப் போலீஸ் ஸ்டேஷன் சென்றான்; தன் வாக்குமூலத்தைப் பதிவு செய்தான்; கைதியானான். வீரன் ஆஸ்பத்திரியில் மரணமடைந்தான். 

அந்தக் குற்றத்துக்காகவே சின்னான் மீது தீர்ப்புக் கூறப் பட்டது. தண்டனைக்காக அவன் வருந்தவில்லை; திடுக்குறவில்லை. 

“நான் கஷ்டப்பட்டால் என்ன? இனியாவது அந்தக் கிராமத்தில் அமைதியும் சுகமும் நிலவுமல்லவா? வீரன் குற்றம் செய்து கொண்டிருந்தான். அதைத் தடுப்பது என் கடமை என்று எனக்குப் பட்டது. குற்றத்துக்கு தண்டனை அளித்தது தவறா?” என்று அவன் அறிவு வாதாடியது. 

அவனது மனப் பண்பைக் கண்டு வியந்தார் நீதிபதி. அறிவின் வாதம் சரிதான். நாம் என்ன செய்கிறோமோ அதை அவனும் செய்தான். குற்றவாளி தண்டனைக்கு உரியவன் தான்” என்று அவர் உள்ளம் பேசியது. 

ஆனால் சட்ட ஞானம் சொன்னதாவது: “அது சரி; இப்படி ஒவ்வொருவரும் தீர்ப்புக் கூறுவதைத் தன் தலைமீது போட்டுக் கொண்டு, தண்டனை அளித்தால் அப்புறம் சமூக நிலை? சமூகம் கட்டுப்பாடு சட்டதிட்டம் எல்லாம் காற்றில் பறந்துவிடாவா? இவன் யார் தண்டனை கொடுக்க? அது அரசாங்கத்தின் உரிமை. உரிய இடத்தில் முறையிட வேண்டியதுதானே இவன் கடமை?” 

அவர் அந்தரங்கத்தில் நிகழ்ந்த போரின் வெற்றி போல் வார்த்தைகள் ஒலித்தன.-சின்னாண்டவன் குற்றவாளி. அவனுக்கு மரண தண்டனை. 

“வேண்டுமானால் கவர்னர் பிரபுவுக்கு மனுச் செய்து பார்க்கலாம். அவர் மரண தண்டனையை மாற்றித் தீவாந்தர சிக்ஷை கொடுப்பார்’ என்றும் அவர் சொல்லிவைத்தார். 

அதைக் கேட்டும் சின்னாண்டவன் பூரித்துவிடவில்லை.

– கதைக் கோவை (தொகுதி IV), 75 எழுத்தாளர்கள் எழுதிய 75 சிறந்த சிறுகதைகள், முதற் பதிப்பு: 1945. அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *