ஒரு ப்ரீகுவல் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 2, 2024
பார்வையிட்டோர்: 236 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வட்டகிரி, அப்படின்னு ஒரு மலைக்காடு. அங்கே ஒரு முனிவர் முனிவராகவே வாழ்ந்து வந்தார். அவருக்கு பொன்னாசை, பெண்ணாசை எதுவுமே கிடையாது. கடுமையா தவம் செஞ்சு இந்த பிறவிலேயே கடவுளை அடையணும் அப்படிங்கிறதுதான் அவர் ஆசை. அவர்கிட்ட ஒரு சீடன் இருந்தான். முனிவருக்கு வேணுங்கிற எடுபிடி வேலையெல்லாம் செஞ்சிட்டு மிச்ச நேரத்தில் தானும் தவம் செய்வான்.

முனிவரோட உண்மையான தவத்தை பார்த்த தேவர்கள் அவரை சொர்க்கத்துக்கு கூப்பிட்டாங்க. ரொம்ப வருஷம் கூடவே இருந்ததால சீடனுக்கும் அனுமதி கிடைச்சது. சொர்க்கத்துக்கு போற வழில சீடனோட சந்தோஷம் அளவு கடந்ததா இருந்தது. பேசிக்கிட்டே வந்தான். “குருவே! சொர்க்கத்துல பணிவிடை செய்ய தேவதைகள் இருப்பாங்க. அவங்கள மாதிரி அழகு நாம பூமில பார்க்கவே முடியாது. இயற்கையாகவே அவங்க மேல ஒரு நறுமணம் இருக்கும். இனிமையான பாடலெல்லாம் பாடுவாங்க”. முனிவர் பதிலேதும் சொல்லவில்லை. உணர்ச்சி எதுவுமே இல்லாமல் வந்தார்.

சொர்க்கத்தில் முனிவருக்கு சரியான வரவேற்பு. தேவாதி தேவர்களெல்லாம் வந்து வாழ்த்தினாங்க. முனிவருக்கு ஒரு சிறப்பான இடம் கொடுக்க முடிவாயிற்று. அங்கே தங்கத்திலான மரங்கள் நிழல் கொடுத்தன. அதன் இலைகளெல்லாம் மரகதம். வைரங்கள் பூக்களாய் பூத்திருந்தன. மணக்க மணக்க அறுசுவை சாப்பாடு. வசதியான படுக்கை. கை கால் அமுக்கி விட முற்றும் துறந்தவளாய் ஒரு அழகான தேவதை.

முனிவருக்கு கிடைத்த உபசாரங்களை பார்த்த சீடனுக்கு ஆனந்தக் கண்ணீர். “வாழ்நாள் முழுவதும் நீங்க செஞ்ச தவத்துக்கு கெடச்ச வரத்த பார்த்தீங்களா.”

இதைக் கேட்ட அவருக்கு ஒரே கோபம். சீடனை பார்த்து “இவ்வளவு வருஷம் என் கூட இருந்து உனக்கு எதுவுமே புரியலை. உனக்கு என்னைப் பத்தியும் தெரியலை. இங்கே நடப்பதும் புரியலை.”

இன்னும் சொன்னார் “ஒண்ணு புரிஞ்சுக்கோ. இதெல்லாம் எனக்கு கெடைக்கிற பரிசு இல்லை. அந்த தேவதைக்கு கெடைக்கும் தண்டனை.”

– சிறுநனி சிறுகதைத் தொகுப்பு, ஜூலை 2014, வெளியீடு: Freetamilebooks.com

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *