எப்பொழுதோ படித்தது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 28, 2023
பார்வையிட்டோர்: 1,800 
 
 

அரட்டை-1

இதை கதையாகவோ துணுக்காகவோ படித்த ஞாபகம்.

கொஞ்ச நாட்களாக கணவனுக்கு ஒரு சந்தேகம் ! தன் மனைவிக்கு காது சரியாக கேட்கிறதா? என்று, காரணம் இவன் ஒன்று சொன்னால் அவள் ஒன்று சொல்கிறாள். உண்மையிலேயே அவளுக்கு காது சரியாக கேட்கிறதா ? என்று சோதனை செய்து பார்க்கவேண்டும்.

இப்படிப்பட்ட சிந்தனையில் இருந்த அவனுக்கு ஒரு நாள் வாய்ப்பு கிடைத்தது. ஏதோ சமைத்து கொண்டிருந்த மனைவியிடம் என்ன சமைக்கிறாய்? என்று கேட்டான்..

இப்பத்தான் வைத்திருக்கிறேன், என்றாள். நான் என்ன சமைக்கிறாய் என்று கேட்டேன்? அவன் உரக்கமாக சொன்னான். மீண்டும் அவள் இப்பொழுதுதான் வைத்திருக்கிறேன் என்று சொன்னாள்.

உடனே அவன் ஒரு பேப்பர், பென்சிலை எடுத்து வந்து வர வர உனக்கு காது சரியாக கேட்பதில்லை என்று நினைக்கிறேன். என்ன சமைக்கிறாய் என்று கேட்டால் வேறு ஏதோ சொல்கிறாய் என்று எழுதி காட்டினான்.

மனைவி அதே பேப்பரில் மட மடவென எழுதி அவனிடம் காட்டினாள். தயவு செய்து உங்கள் காதை பரிசோதியுங்கள், நீங்கள் என்ன சமைக்கிறாய் என்று கேட்டதற்குத்தான் உப்புமா சமைத்துக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லி (கத்தி) கொண்டிருக்கிறேன்.

யாருக்கு குறை?


இந்த சிறுகதையும் பத்திருபது ஆண்டுகளுக்கு முன்னால் படித்தது.

ஒரு கனவான், தினமும் ஒரு ஓட்டலுக்கு வந்து சாப்பிட்டு செல்வார், அப்படி சாப்பிடும் பொழுது எப்பொழுதும் ஒரு டேபிளை மட்டும் நாடுவார். காரணம் அங்கு சப்ளை செய்யும் சர்வர் ஒருவன், மிகுந்த பணிவாய், நேர்மையாய், அவர் கேட்டதை மனம் கோணாமல் கொண்டு வந்து தருவான், அதுபோல் “டிப்ஸ்” ஏதாவது கொடுத்தால் வாங்க மாட்டான். முக்கியமாக இவருக்கு “பில்” போடுவதிலும் கறாராக இருந்தான். அந்த கனவான் இவனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார், அதுவும் அவனின் நேர்மைக்காகவே.

ஒரு நல்ல இடத்தில், அவனைப்பற்றிய விவரங்களை சொல்லி ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்துவிட்டார். அதைப்பற்றி அவனிடம் இன்று சொல்லவேண்டும் என்று நினைத்து அங்கு வழக்கம்போல் சாப்பிட போகிறார்.

தம்பி உனக்கு நல்ல ஒரு வேலை ஏற்பாடு செய்திருக்கிறேன், அங்கு இது போல் இரு மடங்கு ஊதியம், மற்றும் எல்லா வசதிகளும் இருக்கு. அவர்கள் எதிர்பார்ப்பது நாணயத்தை மட்டும்தான்.

ரொம்ப நன்றி ஐயா, உங்களை மறக்கவே மாட்டேன்.

சாப்பிட்டு முடித்தவுடன் பையன் பில்லை கொண்டு வந்து தருகிறான், அதில் அவர் சாப்பிட்ட தொகையை விட குறைவாக போடப்பட்டிருந்தது.

தம்பி இங்கு வா, நான் சாப்பிட்டதற்கு பில் அதிகமாக வரவேண்டுமே? .

சார்..பையன் சுற்று முற்றும் பார்த்து இரகசிய குரலில் “நான்தான் குறைச்சு போடச் சொல்லியிருக்கேன், கட்டிட்டு போயிடுங்க

கனவான்: ???


இந்த சிறு கதையும் பத்திருபது வருடங்களுக்கு முன்னால் படித்த ஞாபகம்.

முகமது யூசுபுக்கு செய்தி வந்தது, அவனுக்கு குழந்தை பிறந்திருக்கிறதாம். அனைவரும் அவனை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். செய்தி கடிதம் வழியாக கிடைத்தாலும் அவனால் உடனே ஊருக்கு செல்ல முடியாது. இன்னும் இரண்டு மூன்று ஊர்களுக்கு அல்லாவின் மேன்மையை பற்றியும், அவரால் போதித்திருந்த இறை வாழ்க்கையை பற்றி மக்களுக்கு உபதேசிக்க செல்ல வேண்டும்.

முகமது யூசுப் நல்ல உத்தியோகத்தில் இருந்தாலும் ஆன்மீகத்திற்கு என்றே தனிப்பட்ட விருப்பமாக இதை செய்து கொண்டிருக்கிறான். தனக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்று செய்தி வந்தாலும் தான் ஒப்புக்கொண்டுள்ள பயணங்களை மாற்ற விரும்பவில்லை.

வீட்டு வாசலில் நின்ற அம்மா அவ்வளவு சுரத்தாக இல்லை என்பதாக பட்டது, யூசுபிற்கு காரணம் புரியாமல் விழித்தாலும் தன் குழந்தையை பார்க்க வேண்டி உள்ளே விரைந்தான். “ரோசாப்பூவாய்” படுத்திருந்த குழந்தையை கண்டவுடன் சற்று இவனும் தடுமாறினாலும், அவனை ஆசையாய் பார்த்து இது நம் குழந்தை என்று கண்களால் பெருமை வழிய பார்க்கும் மனைவி மும்தாஜை, இவன் அன்பு கனிய பார்த்தான்.

“எப்படி இருக்கிறாய் மும்தாஜ்?”

“நான் நல்லாத்தான் இருக்கேன், நம்ம குழந்தைய பார்த்தீங்களா?”, அவளுக்கும் குரலில் சற்று இடரல். அவன் மனைவியை நோக்கி “மும்தாஜ்! அம்மாவுக்கும், உனக்கும் நம்ம பாப்பா மாநிறமாய் பிறந்துவிட்டது கவலையா இருக்கு அப்படித்தானே?”.

“பின்னே இருக்காதா, நானும் நீங்களும் இரத்த சிவப்பாய் இருக்கும்போது…”, இழுத்த அவளை அன்புடன் அணைத்துக்கொண்டவன், “மும்தாஜ்! இது இறைவன் நமக்கு கொடுத்திருக்கும் செல்வம்., இனிமேல் நீயும் சரி அம்மாவும் சரி இதை பற்றி நினைக்க கூடாது!”.

அவன் மனதுக்குள் மெளலி, அவனது குரு, சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. “நீ இறைத்தொண்டில் இருக்கும்போது உன் மனம் நிர்மலமாய் இருக்க வேண்டும். உன்னுடைய எண்ணங்களில் சற்று சலனங்கள் ஏற்பட்டாலும் அது மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் ‘அல்லா’ அதை உனக்கு காட்டிக் கொடுத்து விடுவார்”.

ஆம் ஒரு முறை  தான் பிரசங்கம் செய்யும்போது சட்டென்று ஒரிடத்தில் மனம் சலனமுற்று பின் மனதை மீட்டு கொண்டு வந்தது ஞாபகத்துக்கு வந்தது. 

என் குழந்தை வாயிலாக அந்த மன அழுக்கை காட்டியிருக்கிறார்.


இந்த கதை படித்து இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு மேல் இருக்கலாம்.

வேலை கேட்டு வந்த வந்த வாலிபனை மசூதி மெளல்வி புன்சிரிப்புடன் பார்த்தார். “இங்கு என்ன வேலை இருக்குமென்று வந்திருக்கிறாய். இந்த சிறு கிராமத்தில் இருக்கும் மிக பழைய மசூதிக்கு?  அதுவும் இந்த புனிதமான மாதத்தில்!”

“ஐயா! எந்த வேலையும் செய்ய தயாராக இருக்கிறேன்”.

“சரி! நோன்பு மாத்த்தின் முதல் நாள் வந்திருக்கிறாய். செய், ஆனால் இந்த மசூதியால் நீ எதிர்பார்க்கும் சம்பளத்தை அளிக்க முடியாது!”.

“ஐயா! ஊதியத்தை பற்றி கவலைப்படவில்லை. தாங்கள் உண்ணும் உணவில் ஒரு சிறு பங்கை அளித்தால் போதும்!”.

ஆச்சர்யமுடம் பார்த்தார். களையான பையன், இருந்தால் இருபத்தி இரண்டு அல்லது அதற்கு மேல் இருக்கலாம். இவனுக்கு என்ன நோக்கம்? இந்த சிறு கிராமத்தில், அதுவும் அன்றாடம் விவசாய கூலிக்கு போகும் ஏழை மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் ?

நாட்கள் நகர்ந்தன!

வெறும் புதராய் மண்டிக்கிடந்த அந்த கட்டிடம், புதர்கள் அனைத்தும்  வெட்டப்பட்டு, சுத்தமாக்கப்பட்டிருந்தன. உடைந்து போயிருந்த கட்டிடத்தின் ஒரு சில  பகுதிகள் கூட செப்பனிடப்பட்டிருந்தது. மசூதிக்கு சொந்தமான தென்னை மரங்கள், மற்றும் விவசாய நிலங்கள் உழப்பட்டு, கிடைக்கும் தண்ணீரை பாய்ச்சியதால் பசுமை தெரிய ஆரம்பித்திருந்தது. சுற்றி வர தோட்டம் போட்டு ஆச்சர்யபடுத்தி இருந்தான்..

மெளல்வி அந்த இளைஞனை பார்த்து பெருமூச்சு விட்டார். யார் பெற்ற பிள்ளை? இவ்வளவு சிரத்தையாய், பணி செய்து கொண்டிருக்கிறான். எதைக்கேட்டாலும் வெறும் புன்னகை மட்டுமே புரிகிறான். காலை நாலு மணிக்கு எழுகிறான், தொழ வருபவர்களுக்காக தொட்டியில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றுகிறான், தோட்ட வேலை செய்கிறான். நோன்பு மாதமாக இருப்பதால் ஒரு வேளை உண்ணும் உணவு கூட இவரது ஏழ்மையில் கிடைக்கும் உணவே போதும் என்று சொல்லி விடுகிறான். பெருமூச்சுடன் நகர்கிறார்.

நோன்பு மாத்த்தின் கடைசி நாள் முடிந்த மறு நாள் அந்த மசூதி முன் விலையுயர்ந்த கார் ஒன்று வந்து நிற்கிறது. அதிலிருந்து இறங்கிய முகம்மதிய மாதுவையும், அவரது கணவரையும் பார்க்கையிலேயே செல்வம் படைத்தவர்கள் என்று தெரிகிறது. “சர்புதீன்” மாதின் குரலில் வெளிபட்ட குரலுக்கு ஒடோடி வந்த இளைஞன், அப்படியே அந்த மாதுவை கட்டிக்கொள்கிறான்.

வெளியே வந்த மெளல்வியை கண்டவுடன் இவர்கள் இருவரும் வணங்கி, “ஐயா! எங்கள் மகன் தங்களுக்கு ஏதேனும் தொல்லை கொடுத்தானா?”. 

“யா..அல்லா அருமையான பையனை பெற்றுள்ளீர்கள், இங்கே பாருங்கள், இவன் வருமுன் காடாய் கிடந்த இடம் இப்பொழுது எப்படி அழகுடன் இருக்கிரது பாருங்கள்”.

“ஐயா! நாங்கள் இந்தியாவிலிருந்து சவுதிக்கு போய் நிறைய வருடங்கள் ஆகி விட்டன. என்றாலும் ஒவ்வொரு நோன்பு மாதத்திலும், எங்கள் நாட்டுக்கு வந்து ஏதேனும் ஒரு மசூதியில் இறைத்தொண்டு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறோம். அதே நேரத்தில் எங்களுடைய வசதிகளை கொண்டோ, செல்வாக்கையோ உபயோகிக்காமல் அங்கு என்ன கிடைக்குமோ அதை மட்டுமே ஏற்று தொண்டு செய்யவேண்டும் என்று கடைபிடித்து வருகிறோம். இந்த முறை “சர்புதின்” தனியாக இந்த இடத்தை தேர்ந்தெடுத்து வந்தான். இப்பொழுது அவனை அழைத்து செல்ல அனுமதி கொடுக்கும்படி வேண்டுகிறேன்”.

மெளல்வி அவனை அருகில் அழைத்து, “ஆண்டவன் உனக்கு எல்லா அருளையும் கொடுக்கட்டும்” வாழ்த்தி விடை கொடுத்தார்.


இந்த கதை படித்து பல வருடங்கள் இருக்கலாம்

இரவு நேரம் ! பயணிகள் பேருந்து ஒன்று நிறைய பயணிகளுடன் அந்த கிராமத்து வழியாக செல்லும்போது சட்டென்று ஒரு குழந்தை குறுக்கே வர அதன் மீது மோதி நின்றது. அவ்வளவுதான், டிரைவர் வெல வெலத்து போய் விட்டான். இறங்கி ஓடவும் முடியாது. சட்டென்று உள்ளே வந்து பயணிகளோடு பயணிகளாய் உட்கார்ந்து கொண்டான். அனைவரையும் பார்த்த பார்வையில் “ப்ளீஸ்” காட்டிக்கொடுத்து விடாதீர்கள் என்ற கெஞ்சல் இருந்தது. பேருந்துக்குள் இருந்த பயணிகள் அப்படியே திகிலுடன் உட்கார்ந்திருந்தனர். இன்னும் சற்று நேரத்தில் என்ன நடக்குமோ என்று?  

திடீரென்று ஒருவன் அறுவாளுடன் ஏறினான். அவன் கண்கள் இரத்த சிவப்பாய் இருந்தன. பெரிய மீசை வைத்திருந்தான். “யாரடா டிரைவர்? எங்கே அவன்?”, அவன் கொடுவாளை கையில் வைத்துக்கொண்டு கேட்ட கேள்வியில் உட்கார்ந்திருந்த அனைவரும் அப்படியே பயத்தில் உறைந்து போய்விட்டனர்.

“ஓ!  ஹோ சொல்ல மாட்டீங்களா? அப்படீன்னா இந்த பஸ்ஸை நானே எடுத்துட்டு போறேன்”, சட்டென்று ஓட்டுநர் இருக்கையில் உட்கார்ந்து வண்டியை வேகமாக எடுத்து பேய் மாதிரி பறக்க ஆரம்பித்தான். உள்ளிருந்த அனைவரும் “ஐயோ! அம்மா!” என்று கூக்குரலிட்டனர். அவன் கண்டு கொள்ளவேயில்லை. கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் தாண்டி போன பேருந்தை சட்டென நிறுத்தி திரும்பி பார்த்து “யோவ் டிரைவர் வந்து வண்டியை எடுத்துட்டு போ, அங்கேயே நின்னுகிட்டு இருந்தியின்னா இந்நேரம் எங்க ஊர் ஆளுக பஸ்ஸை கொளுத்தி இருப்பானுங்க”. சொல்லிவிட்டு இறங்க எத்தனிக்கையில் பயணிகளுடன் உட்கார்ந்திருந்த டிரைவர் மெல்ல எழுந்து “அண்ணே! என்னை மன்னிச்சிருங்க”, அழுது கொண்டிருந்தவனை “யோவ் அழுவாதே, நம்மோட தொழில்ல இந்த மாதிரி இக்கட்டு நேரறது சகஜம், சரி வண்டிய எடுத்துட்டு போ, நான் போய் என் குழந்தைக்கு என்னாச்சுன்னு பாக்கணும்”, சொல்லிவிட்டு இறங்கி வந்த திசையில் ஓட ஆரம்பித்தான்.       

ஐயோ அடிபட்டது அவனது குழந்தையா?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *