எண்டே பேரு சுந்தரப் பணிக்கர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 16, 2024
பார்வையிட்டோர்: 10,157 
 
 

“காலமதில் கடியரவம் விடமும் ஏறா
கடுந்தீயின் சூடேறா சலமுங் கொல்லா
ஞாலமத்தில் சமாதிபெற மண்ணும் தின்னா
நடுவானவன் உன்னருகில் வரவே மாட்டான்”

“வேலணைய கத்திவாள் வெட்டுமேறா
விடந்தலை மேல் கொண்டவனும் விமலி
சீலமுடன் ஞாணப் பால் தந்து காத்தே
ஈரெட்டாம் வயதுமெப் போதிருந்து வாழ்வாய்!”
– கோரக்கர்.

காலை மணி எட்டிருக்கும். காலிங் பெல் சத்தம், போய் திறந்து பார்த்தால் ஒரு யுவனும் யுவதியும் நின்றிருந்தார்கள். அந்த யுவன் கையில் ஒரு தோல் bag.

“என் பேரு சுந்தராணு. சுந்தர பணிக்கர். இது எண்ட பார்யா. ” என்று பாதி மலையாளம் பாதி தமிழில் பேசிய அந்த இளைஞனை மேலும் கீழும் பார்த்தேன் . பார்த்தாலே கேரளம் என்று தெரியும் படியான தலைமுடி, நிறம். ஆனால் ஆள் ரொம்ப மாடர்னாக ஆடை அணிந்திருந்தான். அவனுடன் வந்திருந்த அவன் மனைவி அவனை விட மாடர்னாக உடை உடுத்தி இருந்தாள். தோள்பட்டைகளில் கிழிந்திருப்பது போன்ற ஒரு டாப்ஸ். மிகவும் இறுக்கமான கருப்பு நிற ஜீன்ஸ்.

“வாங்க உள்ளே வந்து உக்காருங்க” என்று உள்ளே அழைத்தேன்.

உள்ளே வந்த அவர்கள் சற்று தயக்கத்துடன் உட்கார்ந்தார்கள். “ஏதும் காப்பி டீ” என்று இழுத்த என்னைப்பார்த்து “ஏய்ய் அதொன்னும் வேண்டாம். ” என்று சொன்னான் அந்த யுவன். அதன் பிறகான உரையாடல்கள் ஆங்கிலத்தில் நிகழ்ந்தாலும் இங்கு தமிழில் தருகிறேன்.

“நீங்கள் தானே வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன்? கூளிமுட்டம் கிருஷ்ண சாஸ்த்ரிகளோட பேரன்?

என் வியப்புக்கு எல்லை இல்லாமல் போயிற்று. என்னை இந்தப் பெயரிட்டு அழைத்ததும் ஏதோ FB நட்பு என்று நினைத்தேன். ஆனால் என் தாத்தா பெயரைச் சொன்னது தான் எனக்கு வியப்பளித்தது. கிட்டத்தட்ட தர்பண நாட்கள் தவிர நானே மறந்திருந்த பெயர்.

கிருஷ்ண சாஸ்திரி என் தாத்தா. சொந்த கிராமம் பாலக்காடு அடுத்த ஒரு கிராமம். ஆனால் பல காலம் வாழ்ந்து மறைந்தது கோவை. அவர் ஒரு தேர்ந்த ஜோசியர் என்று என் பாட்டி சொல்லக் கேள்வி. மலையாளம் தவிர,ம் சம்ஸ்க்ருதம், ஆங்கிலம் தமிழ் என்று மூன்று மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர். கோவையின் பிரபல பணக்காரர்களுக்கு அவர்தான் ஜோசியர் என்று பாட்டி சொல்லியிருக்கிறாள்.

நாங்கள் கோவை விட்டு சென்னை வந்தது, பிறகு தில்லி சென்றது, நான் அங்கிருந்து லக்னோ கான்பூர் சென்றது, பின்னர் நாங்கள் எல்லாரும் திரும்பவும் சென்னை வந்து தாம்பரம் அருகில் செட்டில் ஆனது என்று ஒரு பெரிய பயணத்தில் தாத்தா பற்றி மறந்தே போயிருந்தது.

“ஆமாம். ஆனா உங்களுக்கு எப்படி என்னைத் தெரியும்?”

“அது ஒரு பெரிய கதை. உங்கள் கூளிமுட்டம் கிராமம் போய் அங்கிருந்த உங்க குலதெய்வம் கோவிலைக் கவனித்துக் கொள்ளும் பெரியவரிடம் விசாரித்து உங்கள் அண்ணா மற்றும் உங்கள் அட்ரஸ் கேட்டு வந்திருக்கோம்”

“சொல்லுங்க என்ன விஷயம்? “

“ஒண்ணும் இல்லை. உங்களுக்குச் சேர்ந்த ஒன்றை உங்ககிட்ட ஒப்படைக்க வந்திருக்கோம். உங்கள் தாத்தாவும் என் தாத்தாவும் பால்ய சிநேகிதர்கள். உங்கள் தாத்தா என் தாத்தாவுக்கு அந்தக் காலத்தில் ஒரு பெரிய உதவி செய்தாராம். பணமாக. சுமார் இருவதினாயிரம் ரூபாய். அதையும் சில புத்தகங்களையும் பழைய போட்டக்களையும் என் தாத்தா உங்களிடம் கொடுக்கச் சொன்னார். உங்கள் அண்ணாவிடம் தான் முதலில் சென்றோம். அவருக்கு ஏனோ என் மீது நம்பிக்கை வரவில்லை. அதனால் தான் உங்களிடம் வந்தோம். அன்றைய இருவதினாயிரம் ரூபாய் இன்றைக்கு பல லட்சம் பெறும். அதனால் இதில் சுமார் ஐந்து லட்சம் ரூபாய் இருக்கிறது. இது உங்கள் சொத்து. தயவு செய்து வாங்கிக்கொள்ள வேண்டும். அப்புறம் நீங்கள் விரும்பினால் உங்கள் அண்ணாவோடு ஷேர் செய்து கொள்ளுங்கள். ” என்று சொல்லி தன் கையில் வைத்திருந்த தோல் பையைக் கொடுத்தான்.

அதைத் திறந்து பார்த்தேன். உள்ளே இரண்டாயிரம் ரூபாய் கட்டுகள். உடன் சில புத்தகங்கள். சில போட்டோக்கள். அதில் என் தாத்தா! அவரோடு அவர் வயதொத்த ஒரு மனிதர்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட மனிதர்களா? ஆனால் ஒன்று மட்டும் சங்கேதமாகப் புரிந்தது. எனக்கு அன்றைய தேதியில் அதே தொகை தேவையாக இருந்தது. ஒரு மருத்துவச் செலவுக்காக. என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். இதோ கடவுள் அதைக் கொடுத்து அனுப்பி இருக்கிறார்.

இருந்தாலும் இவ்வளவு பெரிய தொகையை என்ன ஏது என்று கேட்காமல் வாங்க மனம் இடம் கொடுக்கவில்லை.

“என் தாத்தாவுக்கும் உங்கள் தாத்தாவுக்கும் எப்படிப் பழக்கம்? ஏதாவது தெரியுமா?” என்றேன்.

“உங்கள் தாத்தா பெரிய ஜோசியர். என் தாத்தாவுக்கு ஜோசியம் சொல்லித்தந்தாராம். பிறகு மும்பை பக்கம் சென்று பிழைத்துக்கொள் என்று அந்தப் பணத்தையும் தந்தாராம். அதைக் கொடுக்கத் தான் வந்தோம்.”

நான் தயக்கத்தோடு அந்தப் பையைப் பார்த்தேன். ” கூச்சப்படாமல் எடுத்துக் கொள்ளுங்கள். அதோடு சில புத்தகங்களும் இருக்கு. உடல் நலம் காப்பதற்காக. உங்களுக்கு உபயோகப்படும் ” என்று புன்னகைத்தவன் “எங்களுக்கு நேரமாகிறது நாங்கள் வருகிறோம்” என்று எழுந்தான். அவன் மனைவியும் எழுந்தாள்.

அவன் என்னருகில் வந்து ” என்னை நம்பி இதை வாங்கிக்கொண்டதற்கு நன்றி” என்று சொல்லி கை கொடுத்தான். நான் அவன் கையைக் குலுக்கிய போது தான் பார்த்தேன் அவனுக்கு வலது கையில் ஆறு விரல்கள். அதுவும் இரண்டு கட்டை விரல். நான் சட்டென்று நிமிர்ந்து பார்த்தேன். அவன் இடது காதின் கீழ் ஒரு பெரிய சதுர வடிவ மச்சம்.

கை கொடுத்தவன் சட்டென்று கிளம்பிப் போனான். நான் பிரமைப் பிடித்தவன் போல கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தேன்.

அப்புறம் அந்தப் பையைத் திறந்து பணத்தை எண்ணிப் பார்த்தேன். சரியாக ஐந்து லட்சம்! ஆண்டவா!

அப்புறம் அந்தப் போட்டோக்களை பார்த்தேன். முதல் போட்டோவில் என் தாத்தாவும் அவர் நண்பரும். இரண்டாவது போட்டோவில் அவர் நண்பரும் அவர் மனைவி(யாகத் தான் இருக்கவேண்டும்).

அவர் கைகளை தன் கால் முட்டிகள் மீது வைத்து உட்கார்ந்திருக்க அவர் மனைவி நின்றிருந்தார். என் பார்வை தன்னிச்சையாக அவர் கைகளைப் பார்த்தது.

அவர் வலது கையில் ஆறு விரல். அதுவும் இரண்டு கட்டை விரல். உடனே அவர் முகத்தைப் பார்த்தேன். இடது காதின் கீழ் அந்த மச்சம் பாதி தெரிந்தது. குழம்பியபடியே அந்தப் பெண்மணியின் முகத்தைப் பார்த்தேன். அப்படியே உறைந்து போனேன். சற்று நேரம் முன்னர் என் எதிரில் உட்கார்ந்திருந்த அதே பெண்ணின் முகம்.

போட்டோவின் கீழே இருந்த பெயர்களைப் பார்த்தேன். 1950ஆம் வருஷத்து தேதி போட்டிருந்தது. அருகில் சுந்தர ராம பணிக்கர் – லலிதை என்று பிரிண்ட் ஆகியிருந்தது.

எனக்கு வேர்க்க ஆரம்பித்தது. ஒன்றும் புரியாத ஒரு கயிற்றரவ நிலையில் அந்தப் பையில் இருந்த புத்தகத்தை எடுத்தேன்.

அதில் கோரக்கர் காயகற்பம் என்று பெரிய எழுத்துக்களில் எழுதியிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *