சிறுதுளி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 7, 2013
பார்வையிட்டோர்: 12,544 
 

திடீரென ஏதோ நெஞ்சில் கனமாக அழுத்துவது போன்ற பிரமையில் மனம் துணுக்குற்றது.

நாங்கள் புலம்பெயர்ந்ததனால் ஏற்படப்போகும் பாதிப்பை இந்தப் பிள்ளைகள்தான் அனுபவிக்கப் போகிறார்களோ? ஆதாம் ஏவாளின் பாவம் மனித இனத்தையே பற்றியதுபோல புலம்பெயர்ந்த தமிழரின் செயல் அவர்களின் சந்ததியையே பயமுறுத்தப்போகிறதா?

“அப்பா…!” என்று கூவியவாறு கையில் ஒரு கடதாசியுடன் ஓடிவந்தாள் சர்மிளா. பத்து வயது. என்னுடைய செல்ல மகள். இரண்டு பொடியங்களுக்குப் பிறகு பிறந்த பெட்டைப்பிள்ளை. அதனால் செல்லம் கொஞ்சம்கூட. பிள்ளைகளைத் தடியெடுத்து அதட்டினால் அவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகிவிடுவார்களோ என்ற அச்சத்தில் அவர்களின் சுதந்திரத்திற்கு அவ்வளவு கட்டுப்பாடு கிடையாது.

அதுவும் சர்மிளாவுக்கு அறவே கிடையாது. அதனாலோ என்னவோ அவளது துடியாட்டம் அளவுக்கு அதிகம். ஆனால் அந்தத் துடுக்குத்தனத்தில் பல சமயங்களில் என் மனச்சஞ்சலங்களை மறந்ததும் உண்டு.

“அப்பா…!”

“என்னடா?”

“இதைப் பாத்தீங்களா?”

கையிலிருந்த கடதாசியைத் தூக்கிக் காட்டினாள்.

“ஆரோ நல்லாய்க் கீறியிருக்கினம்…!” என்றபடி அந்தக் கடதாசியில் இருந்த படத்தை நோட்டமிட்டேன்.

வானத்திடையே சாந்தத்தை உமிழும் வதனத்துடன் ஒரு மாது. சாதாரண வீடொன்றின் தரையில் தலைவிரிகோலமாய் முழந்தாளில் முகம் புதைத்திருக்கும் பெண்ணொருத்தி. கசங்கிய ஆடையுடன் வெறுங்காலால் தரையில் தடம் பதித்து நேரிய பார்வையுடன் அவசரமாகச் செல்லும் நடுத்தரவயதான நங்கை. தூரத்தே தெரியும் அடர்ந்து ஓங்கி வளர்ந்த மரங்கள். இவைகள்தான் கரிய கிறுக்கல்களில் ஓவியமாகக் காட்சியளித்தது.

“அப்பா… இந்தப் படம் நல்லாயில்லை. நீங்கள் பொய் சொல்லுறீங்கள்!”

“ஏனடா…?”

“எல்லாம் கறுப்பாய்க் கிடக்கு. கலர் குடுத்திருக்கலாம்தானே.. நான் குடுக்கட்டே….”

“கறுப்பும் வடிவுதான்டா…”

“இல்லை…. கறுப்பு அழுகல். எனக்குப் பிடிக்காது. பள்ளிக்கூடத்திலை பெஞ்சமின்கூடச் சொல்லுறவன்…”

“என்னெண்டு…?”

“நான் கறுப்பாம். என்னோடை விளையாடமாட்டன் எண்டு.”

திடீரென ஏதோ நெஞ்சில் கனமாக அழுத்துவது போன்ற பிரமையில் மனம் துணுக்குற்றது.நாங்கள் புலம்பெயர்ந்ததனால் ஏற்படப்போகும் பாதிப்பை இந்தப் பிள்ளைகள்தான் அனுபவிக்கப் போகிறார்களோ? ஆதாம் ஏவாளின் பாவம் மனித இனத்தையே பற்றியதுபோல புலம்பெயர்ந்த தமிழரின் செயல் அவர்களின் சந்ததியையே பயமுறுத்தப்போகிறதா?

சர்மிளாவைக் கிட்ட இழுத்து அணைத்து முன்நெற்றியில் வழிந்த கேசத்தைக் கோதிவிட்டேன். என்னால் இதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்? வாழும்வரையில் அன்பு ஒன்றைத்தான் தர முடியும் மகளே!

“சம்மி…”

“ம்….”

“சிலருக்குக் கறுப்புப் பிடிக்காது. சிலருக்கு வெள்ளை பிடிக்காது.”

“எனக்கும் கறுப்புப் பிடிக்காது. சிவப்புத்தான் விருப்பம்…”

“உனக்குச் சிவப்பிலை விருப்பம்…. இப்ப ஊரிலை எல்லா இடமும் சிவப்பாய்த்தான் கிடக்கு…”

“அப்ப நாங்களும் ஊருக்குப் போவமப்பா….”

“இப்ப நாங்கள் அங்கை போனால் நாங்களும் சிலவேளை சிவப்பாய்ப் போய்விடுவம்…”

“ஐய…. என்னைக் கூட்டிக்கொண்டு போப்பா…”

“உனக்கு ஊருக்குப் போக விருப்பம். ஆனா ஊரிலை இருக்கிறவைக்கு எங்கை போறதெண்டு தெரியேலை…. அவைக்குச் சிவப்பெண்டால் சத்திராதி…”

“மொக்கு மொக்கு…. எனக்குச் சிவப்புத்தான் நல்ல விருப்பம்.”

“எங்களிலை கனபேருக்கும் சிவப்புத்தான் விருப்பம்…. அப்பதான் இங்கை இருக்கலாம்….”

“குழந்தையோடை என்ன கதைக்கிறியள்…. அவளுக்கு உதெல்லாம் விளங்குமே….” என்றவாறு வந்தாள் சாந்தி. எனது மனைவி.

“சம்மிக்கு இப்ப எத்தினை வயசு…? பத்து. இதுகளைச் சொன்னால்தான் கொஞ்சமாலும் விளங்கும். அவள் வளர வளர நாங்கள் ஆர்…. எங்கை இருந்து எப்பிடி வந்தனாங்கள்…. எதுக்காக இங்கை இருக்கிறம் எண்டதெல்லாம் தெரியவேணும்…”

“ஓமப்பா…. அம்மாவுக்கு ஒண்டும் தெரியாது….”

“ஓமோம்…. தேப்பனும் மேளும் மேதாவியள்தான்…. நேரகாலம் இல்லாமை தேவையில்லாத கதையள்….”

“அம்மா இதைப் பாத்தனீங்களே…!” படத்தைக் காட்டினாள்.

“அந்த அன்ரி ஏனம்மா மேகத்துக்கை இருக்கிறா…?”

“கொப்பரைக் கேள்!”

“குழந்தை கேக்கிறாளெல்லே….”

“அது சம்மி…. ஒரு அன்ரி குந்தியிருக்கிறாவெல்லே…?”

“ஓ…”

“அந்த அன்ரியின்ரை அம்மா தலையிலை சாமான்களைத் தூக்கிக்கொண்டு போய் சந்தையிலை வித்து வாற காசிலைதான் அந்த அன்ரியும் அம்மாவும் சாப்பிடுறவையாம்….”

“அன்ரியின்ரை அப்பா வேலைக்குப் போறேல்லையா…?”

“ஆருக்குத் தெரியும்….”

“சொல்லுங்கோ. உங்களுக்குத் தெரியும்…!”

“அப்பா…? ஆ…. சாமியிட்டைப் போவிட்டாராம்…!”

“பேந்து…”

“அம்மா உழைக்கிற காசு ரண்டு பேரும் சாப்பிடத்தான் காணுமாம். அந்த அன்ரிக்குக் கலியாணம் கட்டக் காசில்லையாம்…. பொட்டு வைச்சு வடிவாய் இருக்கிறதுக்கு வழியில்லையாம்…. அதுதான் அன்ரி அதை நினைச்சு அழுறா…”

“பாவம் அன்ரி…. அன்ரி கலியாணம் கட்டலாம்தானை….”

“அதுக்குக் காசெல்லே வேணும்…. காசு குடுத்தால்தான் அன்ரியைக் கலியாணம் கட்ட வருவினம்…”

சற்றுநேரம் தலையைச் சாய்த்தவாறு யோசித்தாள்.

“அம்மா…. நீங்களும் காசு குடுத்தே அப்பாவைக் கலியாணம் கட்டினீங்கள்…?”

“ஓம்…. உன்ரை பாட்டி கொஞ்சமே கேட்டவ…”

“இப்ப ஏனப்பா உதுகள்?”

“ஏன் இதுகளையும் அவள் அறிஞ்சு வைக்கட்டுமே…. எங்கடை ஆக்கள் என்னமாதிரி எண்டு…”

“ஓ… எங்கடை ஆக்களுக்கு டொக்டரோ இஞ்சினியரோ வாத்தியாரோதான் மாப்பிளையாய் வேணுமெண்டால் அவையளும் அதுக்கேத்தமாதிரிச் சீதனம் கேப்பினம்தானே…. ஆரையும் ஆரும் கட்டலாம் எண்டு பொம்பிளையள் வெளிக்கிட்டால் ஏன் சீதனப் பிரச்சினை வருது…? உத்தியோகத்தையும் வசதியானவையையும் சீதனம் குடுத்துக் கட்டப் பொம்பிளையள் இல்லையெண்டால் அவையளும் சீதனம் கேப்பினமே…”

“ஓமோம்…. நீங்கள் உங்களை விட்டுக்குடுப்பியளே…. தாய் தேப்பன் மேளோ மேனோ நல்ல இடத்திலை வாழவேணும் எண்டுதான் விரும்புவினம். அதுக்காகக் கேக்கிறதைக் குடுக்கினம். இதை ஆம்பிளையள் தங்களுக்குச் சாதகமாய்ப் பயன்படுத்தீனம்…”

“நீங்கள் கதைக்கிறது எனக்கு விளங்கேலை…” என்று சிணுங்க ஆரம்பித்தாள் சர்மிளா.

“அம்மா உப்பிடித்தான்…. கண்டதெல்லாம் கதைப்பா. படத்தைப் பாரடா சம்மி…. அந்த அன்ரி கலியாணம் கட்டேலை எண்டதுக்காக அழேலை….”

“அப்ப…?”

“அவவின்ரை அக்காவோ தங்கச்சியோ சாமியிட்டைப் போவிட்டாவாம். அதுதான் அழுறா…”

“செத்துப் போனாவோ?”

“ஓம். செத்துத்தான் போனா…”

“ஏனப்பா செத்தவ?”

“இப்ப ஊரிலை சனங்கள் செத்துக்கொண்டுதான் இருக்கினம்…”

“ஏனப்பா…?”

“அவையள் தமிழராய்ப் பிறந்துபோட்டினம். ஏனெண்டு கேக்கிறதுக்கும் ஆருமில்லை…. அதாலை செத்துக்கொண்டிருக்கினம்…!”

“ஆமிக்காரன் குண்டு போடுறானோ…!”

“ஓமடா…. ஆமிக்காரன் குண்டு போடுறான். சுடுறான்…. கனபேர் சாகினம்…. அப்பா அம்மாவைக் காணாமைக் கதறுகிற குழந்தையள்…. குழந்தையளைக் காணாமை அழுற அப்பா அம்மா…. கால் கையள் இல்லாமைத் துடிக்கிற பெரியாக்கள்…. சம்மியைப்போலை சின்னப் பிள்ளையள்…”

“காலில்லாட்டி…. எப்பிடி நடப்பினம் அப்பா?”

“ஆராலும் உதவி செய்வினம்…”

“கையில்லாட்டி எப்பிடிச் சாப்பிடுவினம்…?”

“ஆராலும் தீத்தி விடுவினம்…”

“தீத்திவிட ஆரும் இல்லாட்டி…?”

“யாரும் இல்லையெனில்…. எவரும் இல்லையென்றால்…?” நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது. நெஞ்சம் ஒருகணம் இயங்காமல் மரத்தது.

“இருக்கினம் சம்மி…. அவைக்குச் சாப்பாடு குடுக்க…. பக்கத்திலை இருந்து ஆறுதல் சொல்ல, இந்தக் கஸ்டங்களுக்கையும் ஆக்கள் இருக்கினம்….”

“ஏனப்பா…”

“ம்….”

“அவையள் நெடுக இருப்பினமோ….?”

“ஓமடா. நெடுக இருப்பினம்…. அங்கை தமிழாக்கள் இருக்குமட்டும் அவையளும் நெடுக இருப்பினம்…. எல்லாற்றை மனங்களிலையும் அவையள் நெடுக இருப்பினம்…”

தொண்டை அடைத்தது. குரல் கம்மியது.

“ஏனப்பா அழுறியள்…?”

“என்னாலை அழத்தான் முடியும் சம்மி….”

“நாங்களும் அங்கைபோய் அவையளுக்குச் சோறு தீத்திவிடலாம்தானே….?”

“அங்கை போற தைரியம் இருந்தால் நாங்கள் ஏன் இங்கை வந்திருக்கிறம்…? அங்கை போகாட்டாலும் சோறு குடுத்தால் காணும். அவை தீத்திவிடுவினம்…”

“அங்கை சோறில்லையே…!”

“சோறிருந்தாலும் வேண்டக் காசெல்லே வேணும்….”

“அப்ப காசை அனுப்பிவிடுவம்….”

“ஓம் சம்மி…. நாங்கள் காசைத்தான் அனுப்பலாம். அதையாலும் அனுப்பத்தான் வேணும்…. அந்த அன்ரியின்ரை அம்மாவைப் பாரடா…. என்ன நடந்தாலும் பரவாயில்லை எண்டு…. ஆமிக்காரன் குண்டு போட்டாலும் பரவாயில்லை எண்டு கடகத்தைத் தலையிலை சுமந்துகொண்டு போறாவே…. சோத்துக்காகத்தானடா போறா….”

சர்மிளா திடீரென உள்ளறையை நோக்கி ஓடினாள்.

“சம்மீ….”

“பொறு அப்பா….”

ஐக்கியம் ஒன்றியம் சமத்துவம் விழிப்பு
அதன் உரமாய்ப்போட்டிடுவோம்!
விடியல் என்ற கலப்பையைப் பூட்டி
விளைநிலம் உழுதிடுவோம்!
அதிலொரு பயிராய் உருவிடும் களையை
அறுத்தே வீசிடுவோம்!
அங்கே முளைக்கும் சுதந்திர பாலகர்
இனிதா யெழும்பயிர்கள்!

(கோசல்யா சொர்ணலிங்கம்)

“அப்பா, இதையும் அனுப்பிவிடுவம்!” என்றவாறு தனது உண்டியலுடன் வந்தாள் சர்மிளா.

பத்துப் பெனிக் ஐம்பது பெனிக் என்று சிறுகச் சிறுகச் சேர்த்த அவளது சேமிப்பு. என் சம்மிக்குட்டிக்கு இன்றைய நிலைமையில் என்ன செய்யவேண்டும் என்பது ஓரளவுக்காவது புரிந்துவிட்டது. அவளது இந்தச் சிறுதுளி வருங்காலத்தில் பெருவெள்ளமாக மாறும். ஏனெனில் அவள் ஒரு தமிழிச்சி.

(பிரசுரம்: பூவரசு,

வில்லிசைச் செம்மல் நாச்சிமார்கோயிலடி இராஜன் அவர்களின் ‘வில்லிசை வடிவத்திலும்” ஜேர்மன், நோர்வே போன்ற நாடுகளில் மேடைகள் கண்டது.)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *