உண்மையில் உறுதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 17, 2024
பார்வையிட்டோர்: 844 
 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சத்தியாகிரகம் என்பதற்கு உண்மையில் உறுதி என்பது பொருள்.

ஒன்றுக் கொன்று சம்பந்தமற்றவனவாகத் தோன்றும் நான்கு நிகழ்ச்சிகளை உருவகப் பூக்களாக்கி,
அகிம்சை-
உறுதி-
நம்பிக்கை-
உண்மை
ஆகிய தொனிப் பொருளை நறுமனமாக ஏற்று, மிக இறுக்கமாகச் சந்தியாக்கிரகத்தின் தத்துவத்தை விளக்கி இடையில் ஆழமான நகைச்சுவையையும் இக்கதையில் புகுத்தியுள்ளார்.
-எஸ்.பொ.

***

அந்த அவசரநிலை குறித்து, பிராந்திய அரசியல் ‘தலை’கள் மயிர் பிளக்கும் விவாதங்களைப் பற்றி, இரவின் மையத்தைப் பிளந்துப் உறங்கா நோன்பு இயற்றி, ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். தலைவர்கள் என்ன முடிவெடுக்கப் போகின்றார்களோ என்பதை அறியத் தினவெடுக்குந் தோள்களுடன் பொதுமக்கள் கூடியிருந்தார்கள். அவர்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கத் தொண்டர்களுந் ‘தளபதி’களும் அரும்பாடு பட்டார்கள். நடுநிசி வைகறையாக வளர்ந்தது. அப்பொழுது தனிப்பெருந் தமிழ்த் தலைவர், கரங்குவிப்பே அவராக மக்கள் முன் தோன்றினார். நெடிதுயர்ந்த ஆரவாரம் அமைதியிற் கரையலாயிற்று. அவர் பேசத் தொடங்கினார்.

“மறக் கூட்டமே, தமிழ்ப் பெருங்குடி மக்களே! மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் அன்னார் தமிழ் இனம். துயர் துடைக்கக் களம் குதிக்கத் துணிந்தோம். ‘செய் அல்லது செத்துமடி’ என்பது நமது வேதம். நாம் வீர மறவர். அக்கிரமக்காரர்களுக்கு எதிராக நாம் அறப்போர் தொடுப்போம். நாளை மறுதினம் காலை ஒன்பது மணிக்கு நமது சத்தியாகிரகப் போராட்டம் ஆரம்பமாகும். பொழுது புலந்ததும் பட்டி தொட்டிகளிளெல்லாம் இது பற்றிய விபரங்களை நமது தொண்டர்கள் பிரசாரம் செய்வார்கள்…”

பிறிதொரு கணு

‘சுயேச்சைப் பிறப்பு’ என்ற நூலின் ஆசிரியர் ஜோய். அவள் கணவர் ஜோர்ஜ். அத் தம்பதிகள் கென்யாவிலுள்ள மேரு தேசீயக் காட்டினூடாகச் செல்கின்றார்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமான நண்பரைச் சந்திக்கிறார்கள். அது ஒரு சிங்கம். அவளுடைய நூல் படமாக்கப்பட்ட பொழுது, அதிலே நடித்த சிங்கங்களுள் அதுவும் ஒன்று. இன்று எலும்புக் குவியலாகக் காட்சி தருகின்றது. கால் ஒன்று முறிந்திருந்ததினாலும், மேலுதட்டில் எட்டங்குல நஞ்சு தீட்டிய இறகு ஏறியிருந்ததினாலும், அது மிகுந்த வேதனையுடன் காணப்படுகின்றது. ஜோர்ஜ் அந்த நச்சிறகினை அகற்றுகின்றார். ஆடு ஒன்றை வெட்டி அதற்கு விருந்து படைக்கிறார்கள். இரைக்கு அலையும் மிருகங்களிடமிருந்து அதனைக் காப்பாற்ற விடியும் வரை அத் தம்பதிகள் அதற்குக் காவல் செய்கிறார்கள்.

இன்னொரு கணு

பிரித்தானிய ‘சிங்க’த்தின் அடக்கு முறை ஆட்சி பாரத மண்ணிலே கவிந்திருந்த காலம். அதன் ஓர் அங்கமாகச் சென்னை அரசு அன்னிபெஸன்ட் அம்மையாரையும் மற்றும் தலைவர்களையும் சிறைப்படுத்திக் கோயமுத்தூரில் பாதுகாப்புக் கைதிகளாக வைத்திருந்தது. அவர்களை விடுவிப்பதற்கான வழிவகைகளை யோசித்தார்கள். சத்தியாக்கிரகமே சிறந்த மார்க்கமாகப் புலப்பட்டது. அதன் கர்த்தாவான காந்திஜியை பம்பாயிலிருந்து வரவழைத்து, சத்தியாக்கிரகத்தை எப்படி நடத்துவதென ஆலோசித்தார்கள். “போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்குக் குறைந்த பட்சம் எத்தனை தொண்டர்கள் தேவை?” எனப் ‘பிரபலம்’ ஒருவர் கேட்டார். அப்பொழுது காந்திஜியின் முகத்திலே மந்தகாச முறுவல் ஒன்று கழிந்தது. சிந்தனையிலே தரித்து, மறுகணம் அமைதியாக, “சத்தியாக்கிரகத்தை நடத்தக் கூடியவர்கள் நீங்கள் அல்லர். ஏனெனில், உங்களுக்கு அதில் நம்பிக்கையில்லை” என்றார் காந்திஜி. “வெற்றியின் சூக்குமம் எண்ணிக்கையிற் பெறப்படுவதில்லை. எண்ணிக்கைகளைப் பார்த்துக் கோழைகளே மகிழ்கிறார்கள்” என்று தொடர்ந்தவர் நிறுத்தினார்.

‘முழு உலகமே திரண்டு நின்றாலும் தன்னந்தனியாக எதிர்க்க முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். பிரிக்கப்பட இயலாத அகிம்சையிலும் சத்தியத்திலும் பூரண விசுவாசம் பூணுவதினால் இத்தன்னம்பிக்கை பிறக்கின்றது. ஒரு தடவை முகம்மது நபியின் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது…’ இவற்றைக் கூற உன்னினார். அதற்கிடையில் நபிநாயகம் அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி அவர் உள்ளமெல்லாம் வியாபித்தது.

நினைவுக் கணு

நபி பெருமானார், உத்தமத் தோழராம் அபூபக்கருடன் மக்காவிலிருந்து மதீனாவுக்குத் தமது ‘ஹ’ஜ்ரத்’தை மேற் கொண்டார். இடையில் எதிரிகள் வளைத்துக் கொண்டார்கள். பெருமானாரும் அபூபக்கரும் ‘தௌர்’குகையிலே பாதுகாப்புத் தேடித் தங்கினார்கள். குகையின் வாசலில் எதிரிகளின் நடமாட்ட ஆரவாரம் கேட்டது. “அல்லாஹ்வின் திருத் தூதரே! நம்மைப் பிடிக்க வந்துள்ள ஆள்களின் எண்ணிக்கையைப் பார்த்தீர்களா? இத்தனை பேரையும் எதிர்த்து நாம் இருவர் என்ன செய்ய முடியும்?” என அபூபக்கர் அச்சந் தெரிவித்தார். “யா! அபூ பக்கரிப்னுஸ’த்தீக், அஞ்சவேண்டாம். நாம் இருவர் மட்டுமல்ல, நம்முடன் அல்லாஹ்வும் இருக்கின்றான்.” இவ்வாறு இறுதி இறை தூதர் அமைதியாகவும், திட நம்பிக்கையுடனும் கூறினார்கள்.

நிகழ்ச்சிக் கணு

“…இவ்விதமாக அவரிடம் (நபிபெருமானிடம்) தன்னம்பிக்கை அதிகமாக இருந்த காரணத்தினால், எடுத்த காரியத்தில் அவர் வெற்றி பெற்றார்” என முகம்மது நபி அவர்கள் பற்றிய நினைவுக் கணுவை ‘யங் இந்தியா’ என்ற பத்திரிகையில் காந்திஜி எழுதி முடித்தார்.

நுனிக் கணுவின் தொடர்ச்சி

அக்கம் பக்கமாக இரண்டு கட்டடங்கள். ஆயிரம் சத்தியாக்கிரகிகள் அக்கட்டங்களை மறியல் செய்வது போல அமர்ந்து கெண்டார்கள். ‘குண்டாந்தடி முருங்கைத்தடி’ ‘துப்பாக்கிக் குண்டு விளையாட்டுக் குண்டு’ என்று சத்தியாக்கிரகிகள் இடையிடையே கோஷமிட்டு ஆர்ப்பரித்தார்கள். தனிப்பெருந் தமிழ்த் தலைவர் பெரியதொரு காரில் வந்திறங்கி, கரங்குவிப்பே அவராகச் சத்தியாக்கிரகிகள் முன் தோன்றினார். “தலைவரே! தொண்டர்களின் எண்ணிக்கை காணாது. படம்பிடிக்கிறவன் பின்னேரம் வருவான்” என்று தளபதி ஒருவர் அவருடைய செவிகளைக் கடித்துக் குசுகுசுத்தார். “இன்னும் சற்று நேரத்தில் தென் பகுதி ஊர்களிலிருந்து சுமார் ஐநூறு தொண்டர்கள் வந்து சேருவார்கள். அவர்களை பஸ்ஸ”களிலும், லொறிகளிலும் ஏற்றி விட்டு, அவர்களுக்கு முன்னதாகக் காரிலே வந்து சேர்ந்திருக்கின்றேன்” என்று தலைவர் அபயமளித்தார். அவர்களுடைய குசுகுசுப்பிலே ஒட்டிக் கொண்ட இன்னொரு தளபதி “இப்பொழுது வரும் தொண்டர்களுக்கு மத்தியானச் சாப்பாடு?” எனத் தமது சந்தேகத்தை விண்டார். வரும் வழியில் மாதவி ஓட்டல் முதலாளி கறுத்தாப் போடியைச் சந்தித்தேன். இறைச்சிக் கறியுடன் ஐநூறு சோற்றுப் பார்சல் அனுப்வுவதாக வாக்களித்துள்ளார்.” என்றார் தலைவர் உற்சாகத்துடன். “கறுத்தாப்போடி ஒரு மகான்” என்று இரண்டு தளபதிகளும் ஏக காலத்தில் கூறினார்கள். தென்பகுதித் தொண்டர்களை ஏற்றி வந்த முதலாவது பஸ் அவ்விடம் வந்து நின்றது. தொண்டர்கள் இறங்கினார்கள். ஒருவர் ஓடோடி வந்து தலைவருக்கு மலர்மாலை சூட்டினார். ‘குண்டாந்தடி முருங்கைத்தடி’ போன்ற கோஷங்கள் விண்ணதிர எழுந்து மடிந்தன….

“எதுக்காம் இந்தச் சத்தியாக் கிரகம்?” என்று கேட்டபடி, ‘புதிய’ சத்தியாக்கிரகி ஒருவர், பீடி ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டு ‘பழைய’ சத்தியாக்கிரகிகளுடன் கலந்து கொண்டார். “இந்த இரண்டு படமாளிகையிலும் இப்ப சிங்களப் படம் காட்டுறாங்கள். சிங்கள மொழியை நம்மீது திணிக்க நடத்தப்படும் சூழ்ச்சி இது” என்று பழையவர் ஒருவர் விளக்கினார். “முந்தி இந்தத் தியேட்டர்களில் இங்கிலீசுப் படங்கள்தானே காட்டினாங்கள்? சட்டையள உரிஞ்சு காட்டிற வடிவான படங்கள். நானும் மூன்று நாலு இங்கிலீசுப் படங்கள் பாத்தனான். வெள்ளைக்காரியள் நல்ல சாங்கம்…” என்றார் பீடிச் சுவைப்பாளர். “ஆங்கிலப்படம் காட்டினா பாதகமில்லை. சிங்கள படம் காட்டக் கூடாது என்பதுதானே எங்கள் கோரிக்கை” என்று விளக்கிய தளபதி ஒருவர் சிகரெட் ஒன்றைப் பற்றவைத்தார். லொறி ஒன்றிலிருந்து இன்னொரு சத்தியாக்கிரகிகளின் கோஷ்டி இறங்கியது. தலைவர் கரங்குவிப்பே அவராக வரவேற்றார். ‘குண்டாந்தடி முருங்கைத்தடி’ போன்ற கோஷங்கள் மீண்டும் விண்ணதிர எழுந்தன!

– சிறு கை நீட்டி, முதற் பதிப்பு: அக்டோபர் 1998, மித்ர வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *