கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 11, 2024
பார்வையிட்டோர்: 216 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

“இந்த தமிழ் ஆட்கள் எல்லாம், இந்தியாவிற்கு பிரச்சினை வரும்படியாகவே பேசி, இந்தியா தேசியத்திற்கு எதிராகவே இருப்பார்கள், இந்தியை எதிர்ப்பார்கள், ராமரை மதிக்க மாட்டார்கள், இட ஒதுக்கீடை ஆதரிப்பார்கள்!!!”, அகர்வாலின் வழக்கமான சீண்டல் ஆரம்பமானது.

சபை நாகரீகம் எனக்கு தெரியுமாதலால், ஏனைய இத்தாலிய நண்பர்கள் மத்தியில், மெலிதாகப் புன்னகைத்துவிட்டு வைனை அடுத்த மடக்குக் குடித்தேன். அகர்வாலின் அறியாமைக்கு பதில் சொன்னால், அவனை எனக்கு சரிச்சமமாக வைப்பதுப்போல ஆகிவிடும்.

ஆட்டம்போடுவதற்கும் மது அருந்துவதற்கும் கூடியிருக்கும் இடத்தில், பதிலுக்குப்பதில் பேசி, என்னுடைய கொண்டாட்ட மனோநிலையை குறைத்துக்கொள்ள விரும்பியதே இல்லை. என்னுடைய அரசியல், என்னுடைய நிலைப்பாடுகளை, யாருக்கு சென்றடைய வேண்டுமோ, பேஸ்புக்கில் தகவல்களாக அவரவர் மொழிகளில் வைத்துவிடுவேன்.

“இந்தியா என்று சொல்வதேத் தவறு, பாரதம் என்றே சொல்ல வேண்டும், காலங்காலமாய் பண்பாடுகளைத் தொடரும் நாடு, இந்து மதத்தில் இல்லாத விசயங்களே இல்லை, அடுத்த வல்லரசு, ஊழலையும் இடஒதுக்கிட்டையும் ஒழித்துவிட்டால், இந்தியா சுபிட்சமடைந்துவிடும் என அவன்பாட்டிற்கு பேசிக்கொண்டேப் போனான்”

தன்னை தேசப்பற்றாளனாக காட்டிக்கொள்வதில் அவனுக்கு அத்தனைப்பிரியம்,. அது என்னமோ தெரியவில்லை, நான் பார்த்த தேசப்பற்றாளர்கள் எல்லாம் தீவிர வலதுசாரிகளாகவே இருக்கின்றனர். அகர்வாலின் அத்தனை புலம்பல்களுக்கு காரணம், புதிய இத்தாலிய நண்பர்களிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்ட பொழுது lo sono Tamil அதாவது நான் தமிழ் என்ற அர்த்தத்தில் இத்தாலிய மொழியில் என்று சொல்லிவிட்டேன்,

அகர்வாலுக்கு ஏதோ ஒரு கைபேசி அழைப்பு வர, அவன் வீட்டிற்கு வரவேண்டிய பணத்தை அடுத்த மாதம் அனுப்புவதாக பேசி முடித்துவிட்டு, எங்களை நோக்கிச் சொன்னான்.

“சமீப காலமாக இந்திய பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது, இப்பொழுது 66 ஆக இருக்கின்றது, அடுத்த மாதம் 75 ரூபாய் அளவில் வரும் என எதிர்பார்க்கின்றேன், சில வாரங்கள் கழித்து வீட்டிற்கு பணம் அனுப்பும்பொழுது, நல்ல லாபம் பார்க்கலாம், 100 ரூபாய் அளவிற்கு இந்திய பணம் வந்துவிட்டால் எத்தனை நல்லா இருக்கும், ” என பல்லிளித்தான்.

ஏனைய இத்தாலிய நண்பர்கள் உள்ளர்த்தத்துடன் என்னைப்பார்க்க, வழமைப்போல ஏதும் பேசாமல் அடுத்த மடக்கு வைனை எடுத்துக்குடித்தேன்.

– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு: http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *