எல்லாப் புகழும் இறைவனுக்கே!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 12,986 
 

அரசர் குளம், நாகர்கோவிலுக்கு மேற்கே 8 கி.மீ., தொலைவில் அமைந்திருந்தது. எட்டு தெருக்களும், ஊருக்கு வேலியாய் ஒரு குளமும் அங்கே இருந்தது. நான்கு தெருக்களில் முஸ்லிம்களும், இரண்டு தெருக்களில் இந்துப் பெருமக்களும், மீதி இரண்டு தெருக்களில் சமத்துவபுரம் போல் முஸ்லிம், இந்து, கிறிஸ்தவ மக்களும் கலந்திருந்தனர்.
எட்டு தெருவிலும் சேர்த்து 300 முஸ்லிம் குடும்பங்கள் வசித்தன. அந்த 300 குடும்பங்களுக்கும் ஒரேயொரு தொழுகைப் பள்ளி வேம்படிப் பள்ளி. மூன்று வருடத்திற்கொரு முறை நிர்வாகத்திற்கான தேர்தல் நடக்கும். இப்போது, அங்கே தேர்தல் காலம்.
எல்லாப் புகழும் இறைவனுக்கேவேம்படிப் பள்ளியின் நிர்வாகக் குழு, தேர்தல்களை கட்டியிருந்தது. 50 வருடம் தொடர்ந்து வசித்து வரும் குடும்பத்தில் உள்ள 25 வயது நிரம்பியவர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்பது விதி. இந்த விதிக்கு இணங்கி, ஒன்பது உறுப்பினர் பதவிக்கு இருபது பேர் போட்டியிட்டனர்; அதில், ஷாஜஹானும் ஒருவன்.
ஷாஜஹான் 10 ஆண்டு காலம், ரியாத்தில் பொறியாளராய் வேலை செய்து வந்தான். ரியாத் செல்லும் வரைக்கும் சராசரி முஸ்லிமாய் இருந்தவன், அதன் பின்னே அடியோடு மாறிப் போனான். 80களில் தமிழகத்தில் நுழைந்த நவீன சிந்தனையால் கவரப்பட்டான். ரியாத் வாழ்க்கை முறையும், அவனது மாற்றத்தின் காரணமாய் அமைந்தது. அவனது ஆளுமையும், செல்வாக்கும், நவீன வாதிகளின் தலைவனாய் அவனை உயர்த்தியிருந்தது. அனாச்சாரங்கள் இல்லாத சமூகத்தைப் படைக்க வேண்டும் என்பதில் வெறியாயிருந்தான். துரதிருஷ்டவசமாக அவனது அனாச்சார எதிர்ப்பு வெளிப்பட்டது போல, மனித நேயம் வெளிப்படவில்லை.
ஷாஜஹான் ஜெயித்தால் என்னாகும்? கூடவே, அவனது ஆதரவாளர்கள் ஆறு பேரும் ஜெயித்து, அவர்களது தயவில் மிக வலுவான செயலர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டால் என்னாகும்? குறிப்பாக, அரசர் குளம் ஊர் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாய் எல்லையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் உமரப்பா தர்கா என்னாகும்?
தர்காவைக் குறித்து மக்களிடம் இரண்டு வித மனநிலை இருந்தது. உமரப்பா போன்றோர் இறைவனின் நேசர்கள். அவர்களது அடக்கத் தலங்கள் புண்ணிய பூமி. அங்கே அவர்களை தரிசிப்பது நபி வழியும் கூட. அது, ஏழைகளின் சுற்றுலாத் தலம். இலவச மனநல மருத்துவமனை, முஸ்லிம் பெருமக்கள் அப்பகுதியில் வாழ்ந்ததற்கான வரலாற்று ஆவணம் – இப்படி ஒரு சாரார். தர்காவிற்கு போகக் கூடாது. அங்கே போய் பிரார்த்தனை செய்யக் கூடாது. நெய் விளக்கு ஏற்றுதல், சந்தனம் மெழுகுதல் போன்றவை மற்ற மதங்களில் உள்ளவை. அதைக் காப்பியடித்து, தர்காவிலும் செய்கின்றனர். தரிசனம் செய்ய வரும் ஆணும், பெண்ணும் கலந்து நிற்கின்றனர். இது, அறவே வெறுக்கும் செயல். எனவே, அனாச்சாரங்கள் நடக்கும் தர்கா வேண்டாம். உமரப்பா தர்கா முஸ்லிம்களுக்கு வேண்டாம்; அதை இடிச்சிரலாம் – இது மற்றொரு சாரார்.
இந்நிலையில், பெரியோர்கள் கவலைப்பட்டது போலவே நடந்தது; ஷாஜஹான் ஜெயித்தான். அவனது ஆதரவாளர்கள் ஓட்டளித்தனர். செயலர் பதவிக்கு தேர்வானான். ஷாஜஹானின் முதல் அறிவிப்பை எதிர்பார்த்து அரசர் குளம் காத்திருந்தது.
நிர்வாகக் குழுவின் முதல் கூட்டத்தில், “”அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். இந்த செயலர் பொறுப்பை வச்சிக்கிட்டு என்னால முடிஞ்ச நன்மைகளை இந்த ஜமாத்துக்குச் செய்வேன். என்னை எப்ப வேணும்னாலும் வந்து பார்க்கலாம். இத்தோட இந்த கூட்டம் முடிஞ்சுது. தேவைப்படுறப்போ அடுத்த கூட்டத்தைக் கூட்டுவேன்…” என்று ஷாஜஹான் பேசிவிட்டு வெளியேறினான்; கூட்டம் கலைந்தது. தர்கா எதிர்ப்பாளர்களுக்கு சப்பென்றிருந்தது.
அடுத்த கூட்டம் கூட்டுவதற்கு அப்போது அவசியம் எழவில்லை என்றாலும், தர்காவை மூடுவது தொடர்பாக அவனுக்குள் எண்ணம் இருந்தது. அது தொடர்பான நெருக்கடிகளும் இருந்தன. அந்த நேரத்தில் தான் ஹாஜியாரின் அறிமுகம் கிடைத்தது.
ஹாஜியார் என அழைக்கப்பட்ட இப்ராஹீம் ஹாஜியார், மெத்தப் படித்தவர். மார்க்க ஞானமும் உண்டு. மக்களுடன் நெருங்கிப் பழகி, மக்களைப் படித்தவர்; சிறந்த நிர்வாகி. அவரைச் சந்தித்த ஷாஜஹான், தர்கா விஷயமாய் ஆலோசனை கேட்டான்.
“”நீ என்ன நினைக்கிறே?”
“”உமரப்பா தர்காவில நிறைய அனாச்சாரம் நடக்குது. எனவே, அத இடிக்கணும்ன்னு நெறைய பேர் சொல்றாங்க. நான் ஜெயிச்சது கூட அதை நிறைவேற்றுவேன்ங்கற நம்பிக்கையில் தான். ஆனாலும், அதை இடிக்காமல் மூடி போட்டுறலாம்ன்னு நினைக்கிறேன்…”
“”இது மக்களோட உணர்ச்சிகரமான பிரச்னை. மார்க்க சம்பந்தமான பிரச்னையும் கூட. அதனால், சட்டுன்னு எதையாவது செய்திராதே. நிதானமா யோசிச்சி, ஒரு முடிவுக்கு வா.”
“”சரி… ஹாஜியார்,” என விடை பெற்று வீட்டுக்கு வந்தான்.
வீட்டில் மனைவியும், மகளும் உரையாடிக் கொண்டிருந்தனர். ஷாஜஹான் பிரச்னைகளை மறந்து, அவர்களது உரையாடலில் கவனமானான். ப்ளஸ் டூ படிக்கும் மகள் முபீனா எப்போதும் நேரடியாகப் பேச மாட்டாள்; சுற்றி வளைத்துப் பேசுவாள். குறுக்கெழுத்துப் போட்டி, சுடோகு போன்றவற்றில் விருப்பம் அதிகம். விடுகதைகளை போடுவாள். அதனால், எப்போதும் அவளது பேச்சு புரியாத புதிராகத் தான் இருக்கும். ஒருமுறை ஷாஜஹானின் தம்பி வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்திருந்தான். அவனிடம் முபீனா இப்படிக் கேட்டாள்.
“சாச்சா… ஆப்பமா, தோசையா?’
முபீனாவின் பேச்சை விளங்கிக் கொள்ளும் ஷாஜஹானால் கூட, இதை புரிந்துக் கொள்ள முடியவில்லை. முபீனாவே விளக்கினாள்.
“ஆப்பம்னா – ஒன்வே; தோசைன்னா – டூவே. நீங்க லீவுல வந்திருக்கிங்களா? கேன்சலா?’
“தோசை தான்…’ – ஷாஜஹானின் தம்பி சிரித்தான்.
“யோகா கிளாஸ்ல சேர்ந்தாச்சா?’ – இது மனைவி.
“யெஸ் மேம்…’ – ஜப்பானிய பாணியில் மகள்.
“டெய்லி கிளாஸா – வாரம் ஒருமுறையா?’
“தினமலர்…’
“உன்னோட யாரு வர்றா?’
“அபியும், நானும்…’
அவர்கள் இருந்த அறைக்குள்ளே நுழைந்தான் ஷாஜஹான். அவரது மனைவி, “என்னங்க… உங்க மக பேசுறத வழக்கம் போல மொழி பெயர்த்துச் சொல்லிடுங்க… தலை வெடிச்சிரும் போல இருக்கு…’ என்றாள்.
“நீங்க பேசினதை நான் கேட்டுக்கிட்டு தான் வந்தேன்…’
“தினமலர்னா என்ன?’
“தினமும் கிளாஸ்ன்னு அர்த்தம்!’
“அபியும், நானும்?’
“அவளோட பிரண்ட் சூபிதாவும், அவளும்ன்னு சொல்றா…’
“அப்படியா?’ என அப்பாவியாய் கேட்டு விட்டு நகர்ந்தாள்.
“”அடுத்த தெரு அப்பாஸ் சார், தன்னோட மகன்களை இன்னிக்கு தனிக்குடித்தனம் வைக்கப் போறாராம். நான் போயி பார்த்திட்டு வந்திடுறேன்,” ஷாஜகான் சொல்லி விட்டு, வெளியேறும் போது மனைவி இடைமறிந்தாள்.
“”என்னங்க… அப்பாஸ் சார் எந்த மகனோட இருக்கப் போறாராம்? எல்லாரும் சின்ன மகனோட தானே இருப்பாங்க.”
மகள் குறுக்கிட்டு, “”மாத்தி யோசி!” என்றாள்.
“”நீ சும்மாகிட. வாப்பா கிட்டே பேசும் போது, குறுக்கால பேசிகிட்டு, அதுவும் குதர்க்கமா.”
“”இல்லம்மா… அவ சரியாத்தான் சொல்றா.”
“”என்ன?”
“”எல்லாரும் சின்ன மகனோட இருப்பாங்க இல்லியா? இவரு தன்னோட மூத்த மகனோட இருக்கப் போறாரு.”
“”அப்படியா சொல்றா?” மனைவி ஆச்சரியப்பட்டு அகன்றாள்.
அப்பாஸ் சார் வீட்டிற்குச் சென்று விட்டுத் திரும்பினான் ஷாஜஹான். இரவில் படுக்கையில் உறக்கம் வராமல் புரண்டான். அப்போது மகள் சொன்ன வார்த்தை மின்னலாய் பளிச்சிட்டது.
“மாத்தி யோசி!’
“ஆமா, தர்கா பிரச்னைக்கும் மாத்தி யோசிச்சா என்ன?’ ஷாஜஹானின் முகம் பிரகாசமானது. உடனே, மொபைல் போனை எடுத்து இமாமை தொடர்பு கொண்டான்.
“”அஸ்ஸலாமு அலைக்கும்…”
“”வஅலைக்குமுஸ்ஸலாம்… என்ன இந்த நேரத்திலே?”
“”தர்கா விஷயமா உங்ககிட்டே ஆலோசனை பண்ணணும். இப்ப பேசலாமா? இல்லே நாளை பார்க்கலாமா?”
“”இப்பவே பேசலாமே…”
“”தர்காவுக்கு அறவே போகக் கூடாதா?”
“”ஏன் அப்படிக் கேக்கறீங்க?”
“”நம்ம உமரப்பா தர்காவிலே நிறைய அனாச்சாரம் நடக்குது. அதனால், அத இடிக்கணும்ன்னு மக்கள் விரும்பறாங்க…”
“”அனாச்சாரம் நடக்குதுன்னா அதைத் தடுங்க. அதை விட்டுட்டு ஏன் இடிக்கணும்ன்னு நினைக்கிறீங்க? நல்லடியார்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடங்களை தரிசிப்பது நபி வழி. இறைநேசர்கள் அடக்கமாகி இருக்கும் இடங்களில் வைத்து இறைவனிடம் கேட்டால், அது கிடைக்கும் என்பது நம்பிக்கை. அங்கே செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய சில ஒழுக்கங்களை நபி (ஸல்) கத்துத் தந்திருக்காங்க. அதைக் கடைபிடிக்கணும். ஆணும், பெண்ணும் கலக்காமப் பாத்துக்கிடணும். இதையெல்லாம் தாண்டி இறை நேசர்களின் அடக்கத்தலங்கள் முஸ்லிம் வாழ்ந்ததற்கான வரலாற்று ரீதியான அடையாளங்கள். அதனால, அதை இடிப்பதற்கான முகாந்திரமே இல்லை. அனாச்சாரம் செய்யாம போய் வரலாம். அறவே போகக் கூடாதுன்னு சொல்ல முடியாது…”
“”ரொம்ப நன்றி…”
“அறவே போகக் கூடாதுன்னு சொல்ல முடியாது…’
இமாமின் வார்த்தை திரும்பத் திரும்ப அவனுள்ளே ஒலித்தது. அப்படின்னா, உபயோகமான முறையிலே போகலாம். பளீரென யோசனை உதித்தது. மளமளவென செயலில் இறங்கினான் ஷாஜஹான்.
ஆறு மாதத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி பாதைகளும், ஒரு வருடத்தில் பஸ் நிறுத்தமும் அமைக்கப்பட்டது. மகளிருக்காக தையல், கணிணி வகுப்புகள் துவக்கப் பட்டன. இதோ இந்த இரண்டாம் ஆண்டில் ஆறு படுக்கைகளுடன் கூடிய மனநல மருத்துவமனை நிமிர்ந்து நிற்கிறது. நாளை அதை திறக்க வரும் வக்ப் அமைச்சரை வரவேற்க, ஊர் முழுக்க போஸ்டர்கள் மின்னுகின்றன.
“எந்த தர்காவாலே ஊரு ரெண்டு பட இருந்திச்சோ அதே தர்காவாலே ஊரு ஒண்ணா நிற்குது. அதுக்குக காரணம் ஷாஜஹான்தான்.’
— டீக்கடை பெஞ்சில் பெரியவர்கள் பேசிக் கொள்வது ஷாஜஹானின் காதில் விழுந்தது. விழியோரம் துளிர்த்த நீரை விரல்களால் துடைத்துக் கொண்டே சொன்னான்…
“மாத்தி யோசிக்க வெச்ச இறைவனுக்கே எல்லாப் புகழும்…’

– டிசம்பர் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *