இருப்பிடம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 20, 2023
பார்வையிட்டோர்: 1,906 
 
 

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஐந்து வருஷங்களுக்கு முன்னே, கடற்கரைக்கு எதிரே யுள்ள அந்தப் பெரிய காணி நிலத்தை கணேசன் வாங்கிய போது எல்லோரும் அவரை ஒரு மாதிரித் தான் பார்த்தார்கள். ஓவென்று அலறி அலைகள் விழுகிற கடற்கரையிலே தனித்து வெறுமையாய் பரந் திருந்தது அந்தக் காணி. தென்புறத்தில் பதினைந்து தென்னை மரங்கள். காணி வாங்கியதும் காணியைச் சுற்றிச் சதுரமான உயர்ந்த மதிலினைக் கட்டிவிட்டார் கணேசன்.

கணேசன் ஐம்பது வயதிற்குள் வளர்முக நாடு களிலேயுள்ள இஞ்சினியர்கள் வட்டாரத்திலே பிரபல்யம் பெற்ற நபராகி விட்டார். அனேகமாக வெளி நாடு களுக்குப் பறந்து கொண்டிருப்பவர். ஜெனிவாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நகருக்கான அமைப்பினை வரைந்து திட்டமிட்டவர் அவர். கட்டிடக்கலையில் மிக நவீனத்துவமான வடிவமைப்புகளை எவ்வளவு நேர்த்தியாக இவரால் உருவாக்க முடிகிறது என்பதை வியக்கிறவர்களுக்கு புன்னகையினாலேயே பதில் சொல்கிற கணேசன், எல்லா அரசியல்வாதிகளுக்கும் செல்லப்பிள்ளை . இரண்டு மக்கள். இருவரும் ஆக்ஸ் போர்ட் பல்கலைக்கழகத்தில் அப்பாவின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறார் கள். இளையவன் ரமணன், உள் துறை அமைச்சரின் ஒரே மகளைக் காதலித்துக் கொண்டிருப்பவன். மூத்தவன் ஆனந்த். இந்திய தத்துவ ஞானத்தில் பிரியங்கொண்டு, ஹரே கிருஷ்ணா ஹரே ராமா இயக்கத்தவரோடு தொடர்பு வைத்திருப்பவன். கிழக்கின் ஆன்மீக ஒளியை முன்னெடுத்துச் செல்வதற் கான ஆற்றலும், திறமையும் தன்னிடம் நிறைந்தி ருப்பதாய் எண்ணுபவன். படிப்பை முடித்துக் கொண்டு தாயகத்தில் சீக்கிரமாக காலடி எடுத்து வைக்கத் துடித்தபடியே இருக்கிற ஆனந்த்தை மனதில் வைத்தே கணேசன் இந்தப் பெரிய காணி நிலத்தை வாங்கி விட்டிருக்கின்றார்.

வியன்னாவில் மூன்று மாத காலம் தங்கியிருந்த கணேசன் தனக்குக் கிடைத்த ஐந்து நாள் ஓய்விலே காணியைப் பார்க்கிற எண்ணத்தோடு தாய் நாடு வந்தி ருந்தார் அவருடைய நண்பர்கள் மூவர் மூத்த அமைச்சர்கள். விமான நிலையத்தில் அவர் இறங்கிய போதே விசுவம் கண்டுவிட்டார்.

“வேறெங்குமே நீ போவதற்கு நான் விட மாட்டேன்…என்னுடைய வீட்டிற்கு உன்னை அழைத்துப் போகிற பெருமை எனக்குத் தந்துவிடு. நகரத்திலே எனக்கு இரண்டு பங்களாக்கள் உண்டு. அதில் எது உனக்கு இஷ்டமோ அதில் இருந்து கொள். உன்னை டி. வி. காரர்களும் பத்திரிகைக்காரர்களும் வந்து சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்… உனக்காக மேனாட்டு சமையல் செய்வதில் திறமையுள்ள சமையல் காரர்களை எனது ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்தே அனுப்பி வைத்துவிடுகிறேன்… என்ன நான் சொல்லுகிறேன், பேசாமலே நின்றுவிட்டாய்….”

நண்பரின் உரிமை கணேசனைத் திணற வைத்தது. ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தவர் அதே வேகத்தில் தமிழுக்கு மாறினார்.

“கணேஷ்….எங்களுக்குள் என்ன பார்மாலிட்டீஸ்….. எது உங்களுக்குப் பிரியமோ அதை என்னிடம் கேட்டுக்கொள்ளலாம்… அது எதுவானாலும் சரி…”

விசுவம் கணேசனின் கைகளைப் பாசத்தோடு பற்றிக் குலுக்கிக் கொண்டார். பின்னர் கஸ்டம்ஸ் அதிகாரியைப் பார்த்தார். ஐந்து நிமிஷத்திலே இருவரும் விமான நிலையத்திலிருந்து வீட்டுக்குப் புறப்பட்டனர்.

2

மறு நாள் காலையில் விசுவத்தையும் கூட்டிக் கொண்டு கடற்கரைப் பக்கமாகச் சென்ற கணேசன் தனது காணியின் அருகே முளைத்திருந்த குடிசைகளைக் கண்டதும் திகைத்து அதிர்ந்து போய் விட்டார்.

குடிசைகளுக்கு அருகே செல்வதற்கு கணேசனுக்கு மிகவும் அருவருப்பாயிருந்தது. தற்செயலாக அந்தக் குடிசைவாசிகளிலிருந்து துணுக்களவு காற்று தன் மேலே சிதறிவிட்டால் அவ்வளவுதான்; நோய்ப் படுக்கை தான். அவரின் ஒவ்வொரு நிமிஷமும் எவ்வளவு டாலர் மதிப்பிற்குரியது. அந்த நினைவு வந்ததும் கணேசன் இரண்டு அடிகள் பின் வாங்கினார்.

இங்கிருந்து அவர் கடைசியாகப் புறப்பட்ட போதும் இந்தக் காணியை வந்து பார்த்து விட்டுத்தான் சென்றார். எவ்வளவு சுகாதாரமான, இயற்கைச்சூழல் மாசடையாத சூழ்நிலையிலே அவருடைய காணி அமைந்திருந்தது. இந்தப் பத்துப் பதினைந்து குடிசை கள் இவ்வளவோடு நின்று விடுமா? இல்லை. இவை ஆயிரம் காற்சிலந்திகளாய் இந்தக் காணியின் எல்லாத் திசைகளிலும் பரவிப் பெருகி விடும். இவருக்கு மூளை வெடித்து விடும் போலத் தகித்தது. தலையைப் பிடித்துக் கொண்டார்.

அமைச்சர் தொலை பேசியில் கணேசனோடு தொனித்த அசிரத்தையினைக் கவனித்து விட்டு எதையும் அவரிடம் கேட்காமல், உடனேயே அவரது பங்களாவுக்குப் புறப்பட்டுவிட்டார்.

கணேசன் விஷயத்தைச் சொல்லி முடிக்கு முன்னர் அமைச்சர் ஆத்திரத்தோடு படபடத்தார்.

“இந்த விஷயத்தை நீங்கள் என்னிடம் எப்போதோ சொல்லியிருக்க வேண்டுமல்லவா? ஒரு சொல்லுச் சொல்லியிருப்பீர்களாயின் உங்கள் காணியையும் அதன் சுற்றுச் சூழலையும் பாதுகாப்பதற்காக நான் ஒரு விசேட போலீஸ் படையையே இதற்காக நியமித்திருப்பேனே… சரி, சரி அதைப் பற்றி ஒன்று மில்லை. இப்போது கூட காலமொன்றும் கடந்து போய் விடவில்லை… நான் இப்போது ஐ.ஜிக்கே போன் செய்கிறேன்…”

தொலைபேசியை எடுத்தார்.

“நீங்கள் இவற்றையெல்லாம் கொஞ்சமும் கவனிப்பதில்லையா? இயற்கையை மாசுபடுத்துதல் என்பது எவ்வளவு பயங்கரமான குற்றம் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா?… என்ன செய்வீர்களோ, எப்படிச் செய்வீர்களோ என்பதைப் பற்றி எனக்கு கொஞ்சமும் அக்கறை யில்லை. நாளைக்கு காலையிலே உதயமாகின்ற சூரியனின் கதிர்கள் சுத்தமான சூழலில் தான் இந்தக் கடற்கரைப் பரப்பிலே விழ வேண்டும்…”

அமைச்சர் கொஞ்ச நேரம் நிறுத்தி விட்டு கணேசனைப் பார்த்தவாறே தொடர்ந்தார்:

“உண்மையாகச் சொல்லப் போனால் எனது நண்பர் இதனால் மிகவும் கவலையடைந்திருக்கிறார். கடற்கரையின் எதிரே ஓர் அழகும் கலைத்திறனும் வாய்ந்த பங்களாவைக் கட்டியெழுப்ப வேண்டு மென்பது அவரின் வெகுநாளைய இலட்சியம். அவரை உங்களுக்குத் தெரியுமா? உலகப் பிரசித்தி வாய்ந்த இஞ்சினியர்….ஆ… தெரியுமா… அவரேதான்….”

அமைச்சர் திருப்தியோடு கணேசனைப் பார்த்தார்.

“நீங்கள் இனி இதைப் பற்றியெல்லாம் கவலைப் படத் தேவையில்லை. நாளைக் காலையிலே உங்கள் காணிப்பக்கமாகப் போய்ப் பாருங்கள். ஒரு துளி கெட்ட காற்றுக் கூட அதைச் சுற்றி இருக்க மாட்டாது…. எல்லாம் சுத்தமாகவே இருக்கும். ஆனாலும் நீங்கள் இனியும் காலந் தாழ்த்துவது அவ் வளவு நல்லதல்ல. குடிசையிலுள்ளவர்கள் தான், இப்போதெல்லாம் நிறையவே அரசியல் பேசுகிறார்கள். அவர்களிடம் நிறைய வோட்டுகள் இருப்பதால் அவர் களை எப்போதும் நமது கட்சியில் வைத்திருக்க வேண்டியுள்ளது. நீங்கள் ஒன்று செய்தால் என்ன?….”

“சொல்லுங்கள்…” -கணேசன் பரபரத்தார். “நான் இங்கே இன்னும் நான்கு நாட்கள் தான் நிற்க முடியும். அதற்குள் எது செய்ய வேண்டுமோ செய்து விடுகிறேன். பின்னர் திரும்பிவர ஏழு மாதகாலம் ஆகும்…”

“உங்கள் பங்களாவுக்கு ‘பிளான்’ வரைந்து விட்டீர்களா?”

திருப்தியோடு புன்னகை செய்தார் கணேசன்:

“அது எப்போதோ முடிந்து விட்டது. ஆனந்த் மட்டும் தான் இங்கே வந்திருக்கப் போகிறான். அவனும் சம்மதித்து விட்டான்… இதோ பிளானை எடுத்துக் காட்டுகிறேன்…”

கணேசன் ‘பிளான்’ படங்களை விரித்தார்.

எல்லாமாக எட்டு படுக்கையறைகள், கழிப்பறை இணைப்போடு, அலுவலக அறைகள் நான்கு. நூலக அறை. இரண்டு சாமி அறைகள். சமையலறை இரண்டு. வரவேற்புக் கூடம். விருந்தாளிகளுக்கு பன்னிரெண்டு அறை, கழிப்பறை இணைப்போடு. மூன்று சாப்பாட்டுக் கூடம், பின் பக்கத்தில் தனியாக அவுட் ஹவுஸ் நீச்சல் குளம், நீச்சல் குளத்துக்கு அருகே பணியாளர்களுக்கு இரண்டு சிறிய அறைகள். முன்புறம் மிக நவீன வடிவில் அமைந்தது. கூம்பு வடிவக் கூரை. எந்தக் காற்றையும், புயலையும் சாமர்த்தியமாகவும் தைரியமாகவும் சமாளிக்க தக்கதான மேலமைப்பு. எப்படியும் முப்பத்தைந்து லட்சம் ரூபாவுக்குள் கட்டி முடித்து விடலாம்.

அமைச்சர் திகைத்துப் போயிருந்தார்.

“இதை நின்று கட்டி முடிக்க எனக்கு எங்கே நேரம் வரப்போகிறது…. ஆனந்த் கூட என்னோடுதான் மறுபடியும் இங்கு வருவான்…”

கணேசன் பெருமூச்சு விட்டார். அமைச்சருக்கு கணேசனைப் பார்க்கக் கவலையாயிருந்தது.

“இதற்கெல்லாம் ஏன் வீணாக யோசிக்கிறீர்கள்? நாங்கள் உங்களுக்கு இல்லையா?…. எனக்குத் தெரிந்த கட்டிட அமைப்பு நிறுவனம் ஒன்று இருக்கிறது. என் அரசாங்க கட்டிட வேலை செய்பவர்கள் நேர்மையானவர் கள். அதன் டைரக்டரை மாலையிலே இங்கு கூப்பிடுகிறேன். நீங்கள் அவரோடு பேசிக் கொள்ளுங்கள். உங்களைப் போன்ற உலகப் பிரசித்தி வாய்ந்த ஒருவரின் பிளானை நிர்மாணிப்பதற்கு அவர்கள் மிகவும் விரும்பு வார்கள். எல்லாவற்றையும் விட அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கு அவர் கட்சி டிக்கட்டை என் மூலம் தான் கேட்கவிருக்கிறார்… ஆகையால் நான் சொல்கிற எந்த விஷயத்தையும் அவர் ஒப்புக் கொண்டு செய்து தருவார்…”

“ஓ… நீங்கள் எவ்வளவு அன்புள்ள மனிதர்… இந்த உதவியை நான் என்றுமே மறக்க மாட்டேன். மறக்க முடியாது…”

கணேசனின் அந்த நெகிழ்வு அமைச்சரைப் பரவசப்படுத்தியது.

“ஒரு அறிவான, பணக்காரரான நண்பருக்கு இந்த உதவியைக் கூடச் செய்யவில்லை என்றால் நான் ஒரு அமைச்சர் என்று சொல்லி என்ன பெருமையிருக்கப் போகின்றது?…”

“மிக்க நன்றி” – கணேசன் அன்பு மிதக்க அமைச்சரின் கைகளைப் பற்றிக் கொண்டார்: “எப்படியும் ஆறு மாதத்திற்குள் இந்த பங்களாவைக் கட்டிமுடித்து விட்டால் பெரிய பாரம் நீங்கின மாதிரி இருக்கும்….. ஆனந்த் இங்கே வந்து விடுவான். அவனுக்கும் இனிமேல்தான் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்……”

“அப்படியா?” அமைச்சரின் மனதில் அவரது மகளான நீலலோசனி இப்போது நடந்து வந்தாள். இலேசான புன்முறுவலோடு அவர் அமைச்சரைப் பார்த் தார். திருமண விஷயம் தானே… அதைப் பற்றி யெல்லாம் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அதற்கான ஏற்பாடுகளையும் நானே பார்த்துக் கொள்ளுவேன்… நான் எந்த வேளையிலும் உங்களுக்குப் பக்கத்திலேயே துணை நிற்பேன்… நட்பென்றால் பிறகு என்ன? இக்கட்டான நிலைகளில் உதவுவதுதானே…”

3

உண்மையாகவே அந்தக் கடற்கரைப் பகுதிக்கு அவர்கள் புதிதாக குடியிருக்க வந்தவர்களல்ல. கிட்டத்தட்ட முப்பது வருஷ காலமாக அந்த இடத்திலிருந்து கொஞ்ச தூரம் தள்ளி அவர்களின் குடிசைகள் இருந்தன. பஞ்சம் பிழைக்க வந்து’ கடலிடம் தஞ்சம் புகுந்தவர்கள் அவர்கள். குடிசைகள் பெருகியதும் வேறிடத்துக்குப் போய் சிலர் வாழ வேண்டியிருந்தது. அங்குள்ளவர்களில் ஓரளவுக்கு விஷயம் தெரிந்தவன் தணிகைமலை. தேர்தல் காலங்களில் அந்தக் குடிசைப் பகுதியில் கட்சிக் கொடிக் கம்பம் அமைப்பவன் அவன் தான். தங்கள் இட நெருக் கடி பற்றி அண்ணன்’ கோவிந்தனிடம் சொன்னபோது உடனே பதில் வரவில்லை அண்ணனிடமிருந்து. இரண்டு மூன்று முறை வற்புறுத்தியதின் பிறகு அண்ணன் வாயைத் திறந்தார்.

“அதற்கோசரம் நெறையப் பணம் செலவாகுமே…”

அண்ணன் தணிகை மலையை ஊடுருவினார்.

“நெறையவா….?”

“ஆமா நெறைய… அது முடியுமா சொல்லு…”

“நூறு நூத்தைம்பது…”

அண்ணன் விழுந்து விழுந்து சிரித்தார். இயல் பாகவே இரத்தமாகச் சிவந்திருந்த அண்ணனின் கண் களிலே நீர் துளிர்த்தது. கடாமீசையை லேசாக பெருவிரலால் வருடிக் கொண்டார். நிலத்தோடு தொட்ட துண்டினை ஒற்றைக்கையால் தூக்கியவாறே சொன்னார்.

“டியூப் லைட் மாதிரியெலலாம் பேசாதை…. காதும் காதும் வைத்தாப் போல மேலிடத்தாரிடம் பேசிடலாம். ஆயிரம் ரூபா ரெடி பண்ணிக்கோ. அதுவும் சீக்கிரமா…”

“அண்ணன்…” – தணிகைமலை வார்த்தைகளை விழுங்கிக்கொண்டே பரிதாபகரமாக அண்ணனைப் பார்த்தான். அழுதுவிடுவான் போலிருந்தது. இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டே மௌனமாய் நின்றான்.

“சொல்லப்பா …”

“ஆயிரம் ரூபா…?”

“ஆமா… ஆயிரம் ரூபா கண்டிப்பா ஆயிரம் ரூபா வேணும். அப்புறம் என்னைத் தப்பாப் பேசப்படாது…”

“அண்ணனை நானே வந்து பார்த்துடறேன்…”

இதைச் சொன்னதும் எல்லோரும் ஆவென்று வாயைப் பிளந்து விட்டார்கள். ஆயிரம் ரூபாவென்றால் என்ன சாதாரண தொகையா? அந்தத் தொகையை ஒரே நேரத்தில் அவர்கள் யாருமே கண்டதில்லை. ஆனாலும் பதுங்கிக் கொண்டிருக்கிற அந்தப் பகுதியிலிருந்து அவர்கள் வேறெங்காவது சென்றாகவே வேண்டும். எங்கே செல்வது? அண்ணன் முயற்சி செய்தால் நிச்சயமாக அவர்களுக்குக் குடியிருப்புக்கு இடம் கிடைத்துவிடும், அண்ணனுக்கு போலிஸில் நல்ல செல்வாக்கு. அரசாங்க அதிகாரிகளோடு சுமூகமான பரிச்சயம். அண்ணனுக்கு விஷயத்தையும் சொல்லியாகி விட்டது. இந்தப் பிரச்சினையை இனி அண்ணனே தீர்த்து வைக்கவேண்டும். வேறு யாரிடமாவது இந்த விஷயம் போகுமானால் அவ்வளவுதான். சைக்கிள் செயின், சோடா பாட்டில், திருக்கைவால் போன்ற ஆயுதங்களைத் தரித்த அதிரடிப்படையினருக்கு பதில் சொல்லியாக வேண்டும். தவிரவும் அண்ணன் தொட்ட விஷயத்தை எக்காரணங் கொண்டும் வேறெவரும் செயற் படுத்த முன் வரவே மாட்டார்கள். அது சின்னண்ணனாயினும் சரி, பெரியண்ணனாயினும் சரி.

கடைசியில் எப்படியோ அந்த ஆயிரம் ரூபாவை சேர்த்து அண்ணனிடம் கொடுத்து விட்டான் தணிகைமைைல. மறுநாளே இரண்டு அதிகாரி களோடு வந்து அண்ணன் இந்த இடத்தை அவர்களுக்கு காட்டிவிட்டார். குடியிருப்புக்கு ஒரு பெயரை வையுங் கள் என்று அண்ணன் கூற, தணிகைமலை அண்ணனின் பெயரையே அந்தக் குடியிருப்புக்கு வைக்க வேண்டுமென்று முன்மொழிய அவர்களின் அன்புக் கட்டளையை அண்ணன் மறுப்பின்றி ஏற்றுக் கொண் டார். இவ்விதமே கணேசனின் காணிக்குப் பக்கத்திலே இந்தக் குடியிருப்பு உருவாயிற்று.

போலீஸ் அதிகாரிகள் ஜீப் வண்டிகளில் வந்து இறங்கியதும் அந்தக் குடியிருப்பிலுள்ள பெண்களும் குழந்தைகளும் கதி கலங்கிப் போய் விட்டார்கள். தொழிலுக்குப் போன ஆண்கள் இன்னமும் திரும்பி வர வில்லை . போலீஸ் அதிகாரி உரத்த குரலில், அந்த இடத்தை விட்டு மறுநாள் காலைக்குள் அவர்கள் வெளியேறாவிட்டால் எல்லாக் குடிசைகளையும் தீ மூட்டி விடுவதாகப் பயமுறுத்தினார். வள்ளியம்மை மட்டும் துணிவாக முன்னே வந்து, தலைவர்தான் அந்த இடத்திலே தங்களை வந்து குடியேறும்படி சொன்னார் என்று கூறினாள்.

இன்ஸ்பெக்டருக்கு ‘பயங்கரக் கோபம்’ வந்துவிட்டது. தடியடிப் பிரயோகம் செய்தாலென்ன என்று நினைத்துக் கொண்டார். பிறகு தனக்குப் பின்னால் இப்போது போதிய போலிஸார் இல்லாமையினால் அந்த முடிவினை மாற்றிக் கொண்டு கெட்ட வார்த்தையால் அவளை அதட்டினார்.

வள்ளியம்மை அதற்குப் பிறகு எதையும் பேசவியலா மல் தலையைக் குனிந்து கொண்டாள்.

“பன்னிரெண்டு மணி டயம்… அவ்வளவுதான்…” தொடர்ந்து எதையும் கூறாமல் ஜீப்பில் ஏறிக் கொண்டார் இன்ஸ்பெக்டர்.

அன்று அமைச்சர்கள் இருவர் அந்த இடத்திற்கு அதிகாரிகளோடு வந்தனர். கணேசனின் பெரிய காணியின் ஓரமாக அமைக்கப்பட்டிருந்த அந்தக் குடிசை கள் அவர்களுக்கும் மிகுந்த எரிச்சலை உண்டாக்கின. அதிகாலையில் ‘வாக்’ வருபவர்களுக்கு கூட அந்தக் குடிசைகள் இடைஞ்சல் தரலாம் என ஒருவர் யூகமாகக் கூறினார். மற்றவர் அமைச்சருக்கு கேட்கும் படியாகக் கூறினார்:

“கடற்கரைக்கு அதிகாலையில் எவ்வளவோ முக்கியஸ்தர்கள் வாக்’ வருகிறார்கள். மாலையில் அப்படியே. இந்தக் குடிசைப் பகுதிகளிலே நிறைய சமூகவிரோதிகள் இருப்பார்கள். அவர்கள் நிச்சயமாக இந்த முக்கியஸ்தர்களுக்கு இடையூறாக இருப்பார்கள்…. இவர்களை முளையிலேயே கிள்ளாவிட்டால் இந்தப் பகுதி அராஜகங்களின் கோட்டையாகி விடும்…”

ஆங்கிலத்திலே கூறிக் கொண்டு போன அதிகாரியை மிகவும் சந்தோஷத்தோடு பார்த்தார் அமைச்சர், எதிர்க் கட்சியினர் ஏதாவது இந்த விடயத்தைப் பற்றிப் புகார் எழுப்பினால் சொல்ல தக்க சரியான பதில் இது என அவர் நினைத்துக் கொண்டார்.

“உண்மைதான். பொதுமக்களின் அடிப்படை உரிமைகளையும், பாதுகாப்பையும் காத்திடுவதை மனத் திலே கொண்டு, இந்தக் குடிசைகளை நாங்கள் அகற்றித் தான் ஆக வேண்டும்…. இதனால் சில அசௌகரியங்கள் உண்டாகத்தான் செய்யும். பொது நன்மையைக் கருதி மக்கள் அதனைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்…”

மூத்த அமைச்சர் இளையவரைப் பார்த்தார்.

“நீங்கள் சொல்வது சரிதான். ஏதாவது பிரச்சினை வருவதற்கு முன்னர் இதனைப் பற்றி நாங்கள் மந்திரி சபைக் கூட்டத்தில் விரிவாக விளக்கிவிட வேண்டும். கணேசனின் பொருட்டு இதனை நாங்கள் செய்தே ஆக வேண்டும்… என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?”

இளையவர் உறுதியான குரலிலே கூறினார்:

“நீங்கள் சொல்வது சரியே… இந்தக் கடற்கரையின் அமைதியையும் தூய்மையையும் நாங்கள் பாதுகாத்தே ஆகவேண்டும்….”

4

தணிகை மலை படகைவிட்டு இறங்கிக் கரைக்கு வந்ததும் வயதான பெண்கள் எல்லோரும் வந்து அவனைச் சூழ்ந்து கொண்டு ஓவென்று பிரலாபிக்கத் தொடங்கினார்கள். தணிகைமலை அதிர்ச்சியால் வாயடைத்துப் போய் நின்றான். போலீஸைக் கண்டாலே அவனுக்குப் பேயைக் கண்ட பயம்.

“சரி…. அண்ண னைப் பார்த்துப் பேசிடலாம்…”

தன்னைச் சுதாரித்துக் கொண்டான் தணிகைமலை. அவசர அவசரமாகப் புறப்பட்டு அண்ணன் வீட்டினை நோக்கி நடந்தான். வீட்டிலே அண்ணன் இல்லை அண்ணியும் எரிச்சலோடு பிள்ளை களைத் திட்டிக் கொண்டிருந்தாள். தணிகைமலை புறப்படும் போதே இரண்டு கொழுத்த சுறாக்களைப் பெரிய பார்சலில் கட்டிக் கொண்டு வந்திருந்தான். அண்ணியாருக்கு ‘சுறாப் புட்டு’ என்றால் உயிர். பார்சலைப் பற்றிச் சொன்னதும் அண்ணியார் புன்னகையானாள். அண்ணன் இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு சென்றி ருப்பதை சொல்லியவள், “ஏன் ஏதாவது பிரச்னையா? சொல்லப்பா” என்றாள்.

சொன்னான்.

அண்ணியார், தான் இதைப்பற்றி உடனேயே பெருஞ்சேரல் இரும்பொறையோடு பேசுவதாகவும், கவலையின்றி குடிசைக்குப் போகும் படியும் கூறினாள். பெருஞ்சேரல் இரும்பொறை அண்ணனின் வலது கரம்.

மீண்டும் குடிசைப் பக்கமாக வத்தபோது, ஐந்தாறு பெண்கள் நிற்பதைக் கண்டான் தணிகைமலை, தணிகைமலையைத்தான் தேடிக் கொண்டு அவர்கள் வந்திருந்தனர். மூன்றாவது மீன்பிடிக் குடியிருப்பிலே யுள்ள பெண்கள் சங்கத்தின் உறுப்பினர்கள்.

அவர்களை – தனது குடிசைக்குள் அழைத்துச் சென்றான்.

மூலையிலே சாம்பலுங் கரியுமாய் முளியாய் உடைந் திருக்கின்ற அடுப்பு. பானை சட்டிகள். கிழிந்த பெட்டி. இடது புற மூலையிலே அரைகுறையாய் சுற்றி வைக்கப்பட்டிருக்கின்ற பாய். கிழிந்த கோணிகள். வடபுற மூலைப் பக்கச் சுவரிலே பொத்தல் விழுந்தி ருந்ததை தென்னங்கீற்றாலும் மறைக்கமுடியவில்லை. கூரையை கிழிந்த பாலித்தீன், கரும்புச் சோகை மேலும் பாதுகாப்பாய் மூடியிருந்தன. காரை பூசிய தரையில் நடுப்பகுதி குண்டும் குழியுமாயிருந்தது.

“உட்காருங்க…”

பாயை இழுத்துப் போட்டான் தணிகைமலை. விர்ரென்று நான்கைந்து கரப்பான் பூச்சிகள் அங்கு மிங்குமாய் சிதறின.

அவர்கள் உட்கார்ந்து கொண்டார்கள்.

“இப்ப என்ன செய்யப் போறீங்க?…”

கறுப்பான பெண் கேட்டாள்.

“அதுதான் ஒண்ணுமே புரியல்லீங்க…”

“வள்ளியம்மை அக்கா எல்லாமே சொன்னாங்க… போலீஸ் அப்படித்தான் பயமுறுத்துவாங்க. லத்தி சார்ஜ் பண்ணுவாங்க. ஈவிரமில்லாம ஓதைப்பாங்க….. அவங்க வெறும் ஏவல் நாய்களாத்தான் இருப்பாங்க, நாங்க அதுக்கெல்லாம் பயப்படத் தேவையில்லீங்க…”

“அதெப்படிங்க… அவுங்க குடிசையைக் கொளுத்து றதா சொல்லியிட்டுப் போயிருக்காங்க… அவங்க சொன்னபடியே செய்யக் கூடியவங்க… கவண்மென்ட் வேறே ஆர்டர் போட்டிருக்குங்க…”

மெலிந்த பெண் ஆதரவோடு அவனைப் பார்த்தாள்.

“நீங்க எதுக்குமே பயந்திடாதீங்க. நாங்க கடைசி வரை உங்களுக்கு உதவியாயிருப்பம்… உழைப்புக் கான இடத்திலே குடியிருப்பது மனிதனுக்குள்ள அடிப்படை உரிமையுங்க…. இதை யாருமே மறுக்க முடியாதுங்க… மீன்பிடிக்கிறவங்க கடற்கரையிலே இல்லாம கிராமப்புறத்திலையா குடிசை கட்டி இருப்பாங்க… நாங்க எல்லாமே ஒண்ணாச் சேந்தா யாருக்குப் பயப்படணும்?…”

அவளின் வார்த்தைகள் அவளைப் படித்தவளாக தணிகைமலைக்குத் தெரிவித்தன. அவளின் தீட்சண்ய மான பார்வையும் உறுதியான குரலும் அவளது வார்த்தை களிலே, தணிகை மலையை நம்பிக்கை கொள்ளச் செய்தன. மெலிந்த அவளையே பார்த்துக் கொண்டு யோசனையில் ஆழ்ந்திருந்தான் அவன். எவ்வளவுதான் துணிவு கொள்ள நினைத்தாலும் போலீஸ்காரரை நினைக்கவே தணிகை மலைக்கு வயிறு கலங்கிற்று.

“சாயந்தரத்துக்குள்ளே குடிசை எல்லாம் காலி பண்ணனும். காலி பண்ணேல்லையெண்ணா நெருப்பு வைப்போமெண்ணு போலீஸ் சொல்லியிருக்கிறாங்க… அதாங்க ஒரே பயமாயிருக்கு. அவங்க சொன்னாச் செய்வாங்க… பாருங்க எத்தினை ஆளுக இந்தக் குடிசையில இருக்கிறம்…”

வெளியே குடிசைவாசலில் நிறைந்திருக்கிற ஆண், பெண் குழந்தைகளை அவர்களுக்குக் காட்டினான் தணிகைமலை. பயம் பிதுங்கிய முகங்களாய் வெளியே நிற்கிற அவர்களை அந்தப் பெண்கள் அனுதாபத் தோடும் பரிவோடும் பார்த்தார்கள்.

“நீங்க ஒண்ணுக்கும் பயப்படாதீங்க…. நாங்க இன்னும் கொஞ்ச நேரத்திலை இங்கை வந்திடுவம்…”

5

அமைச்சருக்கு ஆத்திரம் தாளமுடியவில்லை. கவலை யோடு தன்னெதிரே உட்கார்ந்திருக்கின்ற கணேசனைப் பார்த்துக் கொண்டே அழைப்புமணியை அலறச் செய்தார்.

“முட்டாள் பயல்கள். மூன்று அமைச்சர்கள் இந்த விஷயத்தில் அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்த பின்னும் எவ்வளவு நேரம் கொடுத்து இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள். குடிசையைக் கொளுத்தி இடத்தைக் காலிபண்ணு என்றால் உடனே செய்யவேண்டியதுதானே… பிறகென்ன அந்தப் பிச்சைக் காரப் பயல்களுக்கு கால அவகாசம்?… கால அவகாசம் கொடுத்ததால்தானே இப்படி போராட்டம்-அது, இது என்று தொடங்கியிருக்கிறார்கள்….”

சிறிது ஓய்ந்தார்.

“இந்த விஷயங்களையெல்லாம் காதோடை காது வைத்தாற் போல முடித்துவிட வேண்டுமென்று எவ்வளவு தரம் இந்த ஐ. ஜி.க்கு சொல்லியிருப்பேன். இந்த விஷயத்தை அறிந்தால் எதிர்க்கட்சிக்காரர்கள் சும்மா இருப்பார்களா? போராடுவதற்கே விஷயமில் லாமல் இருக்கிற அவர்களுக்கு இப்படியொரு குழப்பம் கிடைத்தால் எவ்வளவு உற்சாகமாகி விடுவார்கள்…”

நேர்முக உதவியாளர் கைகளைப் பிசைந்தவாறே அமைச்சரின் முன்னால் வந்து நின்றார்.

“எங்கேயிருந்தாலும் சரி, உடனே போன் பண்ணி ஐ.ஜியை என்னை வந்து பார்க்கச் சொல்ல வேண்டும்…”

“சரி ஸார்…”

பிறகு சிறிது நேரத்தில் தணிந்து போனார் அமைச்சர்.

“இதைப் பற்றியெல்லாம் நீங்கள் ஒன்றும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. வருகிற புதன்கிழமையே நீங்கள் உங்கள் பங்களாவுக்கு அத்திவாரம் போட்டு விடலாம். அதற்கான ஏற்பாடுகளெல்லாம் செய்தாகிவிட்டது. டெலிபோனை உடனேயே பொருத்த முடியும். ஒவ்வொரு அறைக்கும் ‘இன்டர் காம்’ வைத்து விடுங்கள்…”

கணேசன் நன்றியோடு அமைச்சரைப் பார்த்தார்.

“உங்களைக் கேட்க வேண்டும் கேட்க வேண்டும் என்று அடிக்கடி ஒரு காரியத்தை நினைப்பேன். பிறகு மறந்து போய்விடுவேன்… ஆனந்த் என்ன நட்சத்திரம் என்று சொல்லுவீர்களா?”

வியப்போடு அமைச்சரைப் பார்த்தார் கணேசன்,

“மூல நட்சத்திரம். தனுராசி….”

அமைச்சர் பரவசமானார்.

“ஆண்மூலம் அரசாளும். நல்ல நட்சத்திரம்…. ஆனந்த்தின் திருமண ஒழுங்குகளை வேறு சீக்கிரமே செய்தாக வேண்டும்… நீங்களும் ஆனந்தும் இங்கே திரும்பிவருகிறபோது நான் அதைப் பேசி முடித்து விடுவேன்…”

கணேசன் சிரித்தார்: ”அதை உங்களுடைய பொறுப்பிலே நான் எப்போதோ விட்டுவிட்டேன்….”

இன்ஸ்பெக்டர் சூடாகவே நின்றார். தன்னைச் சந்திக்க வந்த பெண்களுக்கு உட்கார அனுமதி கொடுத்ததே மிகத் தவறான செயல் என்ற முடிவினுக்கு இப்போது அவர் வந்திருந்தார்.

“உங்களுக்குத் தெரியுமா? எத்தனை அமைச்சர்கள் அந்த அத்துமீறல் குடிசைகளைப் பற்றி எங்களுக்கு முறைப்பாடு செய்திருக்கிறார்களென்று. இன்று காலை யில் கூட அமைச்சர் தனது நாயோடு ‘வாக்’ போயிருக் கிறார்… அது ஆயிரம் ரூபா விலையுள்ள அல்சேஷன் நாய். அந்த நாயை சேரி நாய்கள் திடீரென்று பாய்ந்து கடித்துவிட்டன. இப்போது அந்த நாய் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது… போய்ப் பாருங்கள்… எவ்வளவு பேர் அங்கே கவலையோடு நிற்கிறார்கள்… அப்படியொரு நாய் இந்த ‘சிட்டி’ யிலேயே அமைச்சர் ஒருவரிடம் மட்டுமே நிற்கிறது தெரியுமா…?”

மெல்லிய பெண் புன்னகை செய்தாள்.

“ஸார்…. அதைப் பற்றியதல்ல இப்போ பிரச்னை . இந்தக் குடிசையை விட்டு அந்த மக்களை எப்படி நீங்க துரத்தியடிக்க முடியும்? அவர்களுக்கு உள்ள தெல்லாமே இந்தக் குடிசைதான். அவர்கள் எவ்வளவு கஷ்டமான நிலைமையிலை இருந்து கொண்டு இந்த மீன் பிடித் தொழிலைச் செய்கிறார்களென்று கொஞ்சம் யோசித்துப் பாருங்க….”

கறுப்பான பெண் தீட்சண்யமாக அவரைப் பார்த்தாள்.

“உல்லாசமாக வாழுறதுக்காக இந்தக் குடிசைகளை அவர்கள் போடவில்லை ஸார். அவர்களுக்கு ஒரு கூரை தேவைப் படுகிறது. அவ்வளவுதான்…..”

இன்ஸ்பெக்டர் சடாரென்று எழுந்தார்.

“அவர் அவர் வேலையை, பிரச்சினைகளை அவர் களே பார்த்துக் கொள்ளுவார்கள்…. உங்களுக்கு இதிலென்ன அக்கறை? பேசாமல் போய் விடுங்கள்…”

மெல்லியவள் இப்போதும் சிரித்தாள்.

“நாங்க இந்தக் குடிசைகளைப் பற்றி மட்டும் பேசுகிறவர்களில்லை ஸார்…. சராசரி ஐந்துபேர் ஒரு சின்னக்குடிசையையும், முன்னூற்றி இருபது பேர் ஒரு குழாயையும், முன்னூறுபேர் கழிப்பறை ஒன்றையுமே சொந்தமாகக் கொண்டிருக்கிற அவலப்பட்ட மக்கள் எல்லாரைப் பற்றியுந்தான் நாங்க அக்கறைப் படுகிற வர்கள்…. உங்களோடை பேசி நியாயம் கிடைக்கு மென்று நாங்க நம்பி வந்தோம் என்று மட்டும் நீங்க நினைச்சிடாதீங்க…. மாலா…. வா நாங்கள் போய் வருவோம்….”

இன்ஸ்பெக்டர் 846 ஐ உரத்துக் கூப்பிட்டார்.

“இந்தத் தேவடியாளுகளை வெளியிலை பிடித்துத் தள்ளய்யா…” என்றவர் கெட்டவார்த்தைகளை சத்தமிட்டுச் சொன்னார்.

பெண்கள் இருவரும் 846 வருமுன்னர் விறுவிறு வென்று போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியே போய் விட்டனர். அவர்களைப் பிடித்து ஏதாவது ஒரு குற்றச்சாட்டின் பேரில் ‘ரிமாண்ட்’ பண்ண முடியவில்லையே என்று எஸ்.ஐ. மிகவும் கவலைப்பட்டுக் கொண்டார்.

6

ஒரு மணி நேரத்தினுள் பூகம்பம் தாக்கினாற் போல அந்தக் குடிசைப் பிரதேசம் சிதறிச் சின்னாபின்னப் பட்டிருந்தது. துண்டான மீன்பிடி வலைகள். கரும்பு சோகை. கிழிந்த தார்ப்பாய்கள். துண்டு துண்டான பாலிதீன் காகிதங்கள். தகரங்கள். வைக்கோல் சிதறல் கள். பழைய பாய்கள். தூரிகள்…துணிமணிகள்.

போலீஸாரை கடமை செய்ய விடாமல் தடுத்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்ததில் இரண்டு பேர் செத்துப் போய், மூன்று பேர் உயிருக்குப் போராடிய படி, நாற்பத்தேழு பேர் மருத்துவமனையில், பாதுகாப்பு கருதி முப்பத்திரெண்டு பேர் போலீஸ் காவலில்.

எதிர்க்கட்சிகள், இறந்துபோன உதயணனும், ராஜனும் எங்கள் கட்சித் தொண்டர்களே என்று சண்டையிட்டு கடைசியில் இரண்டு பேரையும் ஆளுக்கொரு கட்சியாய் பங்கு போட்டுக் கொண்டனர். அவர்களின் மரண ஊர்வலத்தை எந்தெந்த வழியால் கொண்டு செல்வது என்பது பற்றிப் பேச கட்சியின் செயலாளர்கள் ஐ.ஜி. அலுவலகத்திற்குப் புறப்பட்டு கொண்டிருந்தனர். ஐ.ஜி. அலுவலகத்தில் இதைப் பற்றி பேசி முடித்த பின்னரே, ‘இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்குப் பொறுப்பான போலீசார் மீது உடன் நீதி விசாரணை மேற்கொள்ள வேண்டும்’ என்ற கட்சியின் காரசாரமான அறிக்கையினை பத்திரிகைகளுக்கு கொடுக்க வேண்டுமென்பதில் இரு எதிர்க் கட்சித் தலைவர்களும் ஒருமித்த தீர்மானமாயிருந்தனர்.

– 1985

அந்திப் பொழுதும் ஐந்தாறு கதைகளும், முதற் பதிப்பு: டிசம்பர் 1985, தமிழோசைப் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *