இன்னொரு முகம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 24, 2024
பார்வையிட்டோர்: 1,767 
 
 

கம்ப்யூட்டரில் டைப் பண்ணிக்கொண்டிருந்தான் சாரங்கபாணி. அப்போது ஃபோன் அடிக்க ரிஸீவரை எடுத்தவன், “ஹலோ , குட் மார்னிங். ஐயம் சாரங்கபாணி, பி.ஏ. டு ஜி.எம். ஸ்பீக்கிங்! மே ஐ நோ ஹூ ஈஸ் ஆன் தி லைன்?” என்றான்.

மறுமுனையில் கர கரவென்ற குரல். “ஹலோ! குட் மார்னிங்கல்லாம் இருக்கட்டும். சக்ரவர்த்தி இருக்கானா? இருந்தா கூப்பிடு”.

குரலில் அதட்டலும், மிடுக்கும் தென்பட சாரங்கபாணிக்கு கோபம் தலைக்கேறியது. தன்னை அந்த நபர் ஒருமையில் அழைத்தது பிடிக்கவில்லை. இருந்தாலும் பல்லைக் கடித்துக் கொண்டு, “எந்த சக்ரவர்த்தி?” பொறுமையாகக் கேட்டான்.

“அதான்யா…ஜி.எம்.மா இருக்கானே! அவனத்தான் கூப்பிடு! அவன் ஃபோன் எங்கேஜூடா இருக்கு. இவ்வளவு நேரமாகவா ஒருத்தன் ஃபோனில் பேசிக்கிட்டிருப்பான்? செல்ல வேறு ஆஃப் பண்ணி வச்சிருக்கான், ப்ளடி ஃபூல்!” ஆசாமியின் அர்ச்சனை வார்த்தைகள் தொடர்ந்து வந்தன.

என்ன ஒரு கொழுப்பு! பெரிய நிறுவனத்தில் டாப் போஸ்டில் இருப்பவர். ஆறு இலக்கம் சம்பளம் வாங்கும் உயர் அதிகாரி! அவரைப் போய் ‘அவன், இவன் அதுவும் ப்ளடி ஃபூல்’ என்று அழைப்பதா….ஆத்திரம் தலைக்கேறியது சாரங்கபாணிக்கு.

அவர் யார் வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். முதலில் தான் இன்னார் என்று கூற வேண்டும். பிறகு மரியாதையுடன் பேசவேண்டும். பேச்சில் பவ்யமில்லை. எடுத்த எடுப்பில் ‘ அவன் இவன் ‘ என்று அழைத்தது கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை.

மேற்கொண்டு எதுவும் பேசாமல் கோபத்துடன் ரிஸீவரை வைத்தான் சாரங்கபாணி. எத்தனையோப் பேர்கள் ஃபோன் பண்ணுகிறார்கள். அவர்கள் யாரும் இத்தனை கடுமையாக பேசியது இல்லை. இன்று இப்படி ஒரு ஃபோன்கால். காலையில் மூடு அவுட் ஆனது . அருகில் அமர்ந்து கொண்டிருந்தவாறு இதை கவனித்த லாவண்யா, ” என்ன பி.ஏ. சார் ! ஃபோன்ல யார் பேசினாங்க ? இவ்வளவு டென்ஷனோட இருக்கீங்க ?” என கேட்டாள்.

“அதை ஏன் கேட்குறீங்க! யாருன்னே தெரியலை. என்னை ஒருமையில் அழைக்கிறார். நம்ம ஜி.எம் மை அவன், இவன்னு சொல்றார். சே! மரியாதை தெரியாத ஜென்மம்!” கடு கடுத்தான் சாரங்கபாணி.

“சார், மனுஷர் இத்தனை உரிமையோடு பேசுகிறார் என்றால் ஒருவேளை ஜி.எம்.முக்கு வேண்டியவராக இருக்கலாம் இல்லையா? எதுக்கும் ஜாக்ரதையா இருங்க.” சந்துல சாக்கில் வெடிகுண்டைத் தூக்கிப் போட்டாள் லாவண்யா.

‘ இது ஏதடா வம்பு! ஒருவேளை லாவண்யா சொல்றது போல் ஃபோனில் பேசிய ஆசாமி ஜி.எம். முக்கு வேண்டிய ஆளாக இருக்குமோ ? அப்படி இருந்தால் ஆள் போட்டுக் கொடுத்து விடுவாரோ? ஏற்கனவே ஜி.எம். முசடு! சிடு மூஞ்சி வேறு. ஒண்ணுமில்லாத விஷயத்துக்கெல்லாம் எறிந்து விழுவார். இப்போது இது வேறயா..’ சாரங்கபாணி மனதில் அச்சம் தோன்றியது. தன் தலையை இரு கரங்களால் பற்றியபடி அமர்ந்திருந்தான்.

அடுத்த பத்தாவது நிமிஷம் ஜி.எம். அழைப்பதாக பியூன் வந்து சொன்னான். சரி தான் வந்து விட்டது வேட்டு என்று அஞ்சியபடி எழுந்து நடந்து ஜி.எம். அறைக்குள் நுழைந்தான் சாரங்கபாணி. “எக்ஸ்யூஸ் மி சார்!” குரல் கிணற்றுக்குள் இருந்து கேட்பது போல் இருந்தது.

ஃபைல் பார்த்துக்கொண்டிருந்த சக்கரவர்த்தி தலை நிமிர்ந்தார். சாரங்கபாணியை ஒரு மாதிரி பார்த்தார். அந்தப் பார்வையே நடுங்க வைத்தது சாரங்கபாணியை. “சாரங்கபாணி! கொஞ்ச நேரம் முன்னால எனக்கு ஃபோன் வந்ததா?”

ஜி,எம். இப்படி கேட்டதும் அவ்வளவுதான். சாரங்கபாணிக்கு வேர்த்துவிட்டது. நடுக்கமும் ஏற்பட்டது. மலங்க மலங்க முழித்தான். லாவண்யா கூறியது போல் யாரோ ஜி.எம்.முக்கு வேண்டியவ ர்தான் ஃபோன் செய்திருக்க வேண்டும். ஆத்திரத்தில் ரிஸீவரை வைத்து விட கோபம் கொண்ட நபர் ஜி.எம்மிடம் புகார் செய்து விட்டார். தான் இன்னார் என்று ஆரம்பத்தில் கூறியிருந்தால் சுதாரித்திருக்கலாம். சே! வகையாக மாட்டிக் கொண்டோமே… பயத்தில் நெஞ்சு பட படவென அடித்துக் கொண்டது.

“சார் ! …வந்து….” வேர்த்து விறு விறுத்துப்போய் தயங்கியபடி தொடர்ந்தான். “சார், ஃபோன்ல உங்களை ஒரு மாதிரியா அழைத்தார்.. அதோடு தான் இன்னார்ன்னு சொல்லாமல் ஒருமையில அவர் பேசினது என்னவோப்போல இருந்தது. அதனால பாதியிலேயே கட் பண்ணிட்டேன்….” கூறிவிட்டுத் தலை கவிழ்ந்தான். ஜி.எம்.மிடமிருந்து வரப் போகும் திட்டுகளுக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டான்.

“ஃபோன் பண்ணது யார் தெரியுமா….என்னோட ஃபாதர்!”

“சார்….” அரன்றுபோனான் சாரங்கபாணி. என்ன பேசுவது என தெரியாமல் திகைத்து நின்றவன், பிறகு ஒருவாறு சமாளித்து, “சார்! அழைத்தது உங்க ஃபாதர்ங்குறது எனக்கு தெரியாமப் போச்சு. தெரிஞ்சிருந்தால் நான் அப்படி நடந்து கொண்டிருக்க மாட்டேன். ஐயம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி சார்!” அப்படியே பீதியில் திக்கித் திணறியபடி பேசினான்.

“இட்ஸ் ஆல்ரைட் சாரங்கபாணி! தப்பு உங்க பேர்ல இல்ல. எங்கப்பா ரெயில்வேயில் ஒரு பெரிய போஸ்ட்லேர்ந்து ரிடையரானவர். சுபிரியாரடி காம்ப்ளெக்ஸ் ஜாஸ்தி. இன்னும் தான் பதவியில இருக்குறமாதிரி எண்ணிண்டு நடந்துக்கிறார். தன்னை யாரும் கேள்வி கேட்கக்கூடாது சொன்ன படி நடக்கணுங்குற ஒரு ஈகோ! அதனாலதான் ஃபோன்ல நீங்க ஒரு மூணாவது மணுஷர்ன்னு தெரிஞ்சிருந்தும் உங்கக்கிட்ட அப்படி பேசியிருக்கார். ஒண்ணும் ஒர்ரி பண்ணிக்காதீங்க. ஜஸ்ட் ஃபர்கெட் இட்!”

“தேங்க்ஸ் சார்!” சிடு மூஞ்சிக்குள்ளும் இன்னொரு முகம் இருப்பது கண்டு ஆச்சரியப் பட்டவன் மனதில் பரவாயில்லை ஜி.எம். ஒரு ரீசனபிள் பர்சன் என தோன்றிட, தான் ஒரு பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்த உணர்வுடன், மனசு லேசாகிப்போய் தன் இருக்கைக்குத் திரும்பினான் சாரங்கபாணி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *