குயில்களும் கழுகுகளும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 28, 2022
பார்வையிட்டோர்: 4,208 
 

மதன மாளிகையில்
மந்திர மாலைகளாம்
உதய காலம் வரை
உன்னத லீலைகளாம்…

டி.எம்.செளந்தரராஜனுடைய ஆண்மை செறிந்த கம்பீரக் குரலில் ஞானசேகரன் மேடையில் பாடியதை நான் மேடைக்கு முன்னால் கூட்டத்தோடு கூட்டமாக நின்று ரசித்துக் கொண்டிருந்தபோது, ஜேம்ஸ் வந்து என் தோளில் கை வைத்தான். “சின்னையா, அடுத்தது ஒங்க பாட்டுதான். ஸ்டேஜுக்கு வாங்க…”

பேங்கோஸ் வாசிப்பதில் ஜேம்ஸ் ஓர் அசகாய சூரன். ‘ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்; நிலவில் குளிரில்லை…’ என்கிற எம்ஜிஆர். பாடலில் வருகிற நீளமான ஸோலோ பேங்கோஸ் அசத்தலை ஜேம்ஸ், முழங்கால்களுக்கிடையே இடுக்கிய தன் தோல் வாத்தியத்தில் வாசித்து அனைவரிடமும் அப்ளாஸ் வாங்குவான். ‘மதன மாளிகையில்…’ பேங்கோஸ் தாளம் இல்லையென்பதால் அவனும் மேடைக்கு எதிரே, என்னருகில் நின்று ஞானசேகரனை ரசித்துக் கொண்டிருந்தான். மேடையில் ஏறினேன். கலைந்திருந்த டையை சீர் செய்துகொண்டு, சீராயிருந்த தலைமுடியைக் கலைத்து விட்டுக் கொண்டு மைக்கைப் பிடித்தேன்.

‘சின்ன மாமியே, உன் சின்ன மஹலெங்கே
பள்ளிக்கு சென்றாலோ படிக்கச் சென்றாலோ
அட வாடா மருமக, என் அழகு மென்மத
பள்ளிக்கு தான் சென்றால் படிக்கத்தான் சென்றால்…’

நித்தி கனகரத்தினம் இலங்கைத் தமிழில் பாடியிருந்த பாடலை, அதே இலங்கைத் தமிழில், அதே பிசிறான உச்சரிப்போடு பாடி, மேடைக்கு முன்னே கூடியிருந்த ரெண்டாயிரத்திச் சொச்சம் தூத்துக்குடி ரசிகர்களை மெய்மறக்கச் செய்தேன். இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப்படுகிற அந்த ஈழத்துப் பாப் இசைப்பாடல், தென்கோடித் தூத்துக்குடியில் அநியாயத்துக்கு பிரபலமாயிருந்தது. நான் பாடி முடித்ததும், ‘கொன்னுட்டீக சின்னையா’ என்று கை கொடுத்தான் டெல்லஸ். ட்ரிப்பிள் காங்கோவில் சித்துவேலைகள் செய்கிறவன் டெல்லஸ். ஜேம்ஸுக்குத் தம்பி.

இந்தத் தாள வாத்திய சகோதரர்களைத் தவிர, பியானோ மேதை விக்டர், கிட்டாரில் மேஜிக் செய்கிற பார்த்திபன், வயலின் விற்பன்னன் திவாகர், கிஷோர்குமாரின் குரலாயிருந்த காதர் பாட்சா, இந்திப் பாட்டு பாடுகிற பெங்காலிப் பையனான ரோஹித் குமார் ஷெட்டி, பி.பி.நிவாஸ் மற்றும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரலாயிருந்த வில்ஃப்ரட், விஸிட்டிங் பாடகனாயிருந்த லிங்கம், தபேலாவில் சடுகுடு விளையாடுகிற துரையரசன், எல்லோருமே அற்புதமான கலைஞர்களாயிருந்ததோடு அழகான, அன்பான மனிதர்களாயுமிருந்தார்கள்.

எல்லோருமே என் வயதையொத்த இளைஞர்கள். சிநேகபூர்வமாக ‘வா மக்கா, போ மக்கா’ என்றும், அதிலும் ஒருபடி மேலே போய் ‘என்னல, ஏதுல’ என்றும் அப்பட்டமான ஏகவசனத்தில் தங்களுக்குள்ளே பேசிக் கொண்டார்கள். ஆனால், என்னை மட்டும் ‘வாங்க போங்க’ என்றார்கள். பெயரைச் சொல்லி அழைக்காமல் ‘சின்னையா’ என்று மரியாதை கொடுத்தார்கள். சிநேகத்தையும் மீறிய மரியாதை. தூத்துக்குடியில், ஸ்பிக் என்கிற உலகத்தரமான உரத்தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்தவன் நான் என்பது அந்த மரியாதைக்கு ஒரு காரணமாயிருந்திருக்கலாம்.

வாட்டசாட்டமாக, செக்கச்செவேலென்று, டெய்லி ஷேவ் மொழு மொழு முகத்தோடு, இந்திப் பட ஹீரோ மாதிரி இருந்தேன் என்பது ஒரு கூடுதல் காரணமாயிருந்திருக்கலாம். ‘ஜம்போ லைனர்ஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டிருந்த எங்களுடைய இசைக் குழுவுக்கு விக்டர் தலைவனாயிருந்தான். பியானோ மட்டுமின்றி, கிட்டார், அக்காடியன், வயலின் போன்ற எல்லா இசைக் கருவிகளிலும் புகுந்து விளையாடுகிற சகலகலா வல்லவன். எங்கள் எல்லோரை விடவும் வயதில் மூத்தவன் என்பதால் எங்களுடைய இசைக் குழுவில் என்னை உரிமையோடு பெயர் சொல்லி அழைக்கிற ஒரே கலைஞன்.

“வர்ற சனிக்கிழம ராத்திரி எல்லாரும் ஃப்ரீயா வச்சிக்கிருங்க மக்கா, வெளியூர் ப்ரோகிராம் ஒண்ணு வந்திருக்கு…” என்று விக்டரிடமிருந்து ஓர் அறிவிப்பு வந்ததும் எல்லோருக்கும் ஒரே உற்சாகம். தூத்துக்குடி ஊருக்குள்ளயே பாடிப் பாடி போரடித்து விட்டது. தூத்துக்குடியை விட்டால் பக்கத்தில் நாசரேத் அல்லது மணப்பாடு. அதிகபட்சமாய்த் திருச்செந்தூர். ‘சரி, வெளியூர் என்றால் எந்த ஊர்?’ என்று என் மனதிலெழுந்த கேள்விக்கு, “பாஸ், வெளியூர்ன்னா, மெட்ராஸ்தான?” என்று சொல் வடிவம் கொடுத்து ஜேம்ஸ், விக்டரிடமிருந்து மண்டையில் செல்லமாக ஒரு குட்டு வாங்கிப் பத்திரப்
படுத்திக் கொண்டான்.

“மெட்ராஸ்க்கெல்லாம் மொள்ளமாப் போவோம், அங்க ஏற்கனவே ஏ.வி.ரமணன், காமேஷ் ராஜாமணின்னு நாலஞ்சி ஆர்க்கெஸ்ட்ரா இருக்கு. நம்ம ஜம்போ லைனர்ஸ் அங்க போய்ப் பாடினா, பாவம் அவுகளுக்கெல்லாம் பொழப்பு கெட்டுப் போயிரும். எம்.எஸ்.விஸ்வநாதன் வேற கோவிச்சிக்குவார்…” என்று சிரித்தான் விக்டர். “முதல் கட்டமா இப்ப திருநெல்வேலிக்குப் போய்ட்டு வருவோம். ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர்கள் சங்கத்துலயிருந்து கூப்பிட்டுருக்காக. பப்ளிக் புரோகிராம். கன்னாபின்னான்னு ஏற்பாடு பண்ணியிருக்காக!”

திருநெல்வேலியில், தேரோடும் கீழரத வீதியில், சாலையை மறித்து, பிரம்மாண்டமாயொரு மேடை போட்டிருந்தார்கள். ‘மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்…’ என்று ஞானசேகரன் டி.எம்.எஸ்ஸுடைய பக்திப் பாடலைப் பாடி இசை நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்த பின்னால், இஸ்லாமிய பக்திப் பாடல் ஒன்றைப் பாட வேண்டியது என் முறை. ‘அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் தக்குபீர் முழக்கம் கேட்டால் உள்ளம்இனிக்கும் மக்கமா நகரின் வழி சென்றால் வாழ்க்கை மணக்கும்…’

நாகூர் ஹனிஃபாவுடைய வெண்கலக் குரலில், மேடையிலிருந்த அனைத்துக் கலைஞர்களின் கோரஸ் பின்னணியோடு நான் பாடிய போது, சாதி மத பேதமின்றி ரசிகர் கூட்டம் ஆர்ப்பரித்தது. தொடர்ந்து, ‘மேரா நாம் ஜோக்கர்’, ‘பாபி’ முதலிய படங்களிலிருந்து இந்திப் பாடல்களைப் பாடியபோது, மொழி இன பேதமின்றி ரசிகர் கூட்டம் விசிலடித்தது. அப்படியெழுந்த விசிலொலிகளில் ஒரு விசிலுக்குரியவன், எனக்குத் தம்பியாகக் கருதப்பட்ட, சித்தி மகன் என்பதைப் பார்க்க ரொம்ப சந்தோஷமாயிருந்தது.

அன்றைக்கு எனக்காக விசிலடித்து இசையை ரசித்தவன், பிற்காலத்தில் என் மேலே வசை பாடப் போகிறவன் என்கிற ஆரூடம் அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அவனுடைய அந்த வசையும், வில்லத்தனமும் இந்தச் சிறுகதைக்கு அவசியமில்லை என்பதால், அந்த எபிஸோடை ஓரங்கட்டி விட்டு மேலே தொடர்வோம். இசை நிகழ்ச்சி முடிந்த பின்னால், நள்ளிரவில், நியாஸ் ஹோட்டலில் பரோட்டா சால்னாவையும், டபுள் ஆம்லெட்களையும் ஒரு பிடி பிடித்துவிட்டு, விடிய விடிய தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தது மறக்கவே முடியாத ஒரு நிகழ்வு.

அந்த திருநெல்வேலி கச்சேரி தான் நான் மேடையேறிப் பாடிய கடைசி நிகழ்ச்சியாக அமைந்து போனது. அதன் பிறகு, சென்னைக்குப் புலம் பெயர்ந்தாக வேண்டிய நிர்ப்பந்தம். இனிமையான ஓர் இசை சகாப்தம் அன்றோடு முடிந்து போனது. பலப்பல மறக்க முடியாத மலரும் நினைவுகளை நினைவில் இருத்திக் கொண்டு சென்னைக்குப் புலம்பெயர்ந்த பின்னால், என் இசைத் தாகத்தைத் தணித்துக் கொள்வதற்கு, நம்ம க்ளப்புக்குள்ளேயே இசைத்துறையும், இசைத்துறைக்குள்ளே ஓர் இசைக் குழுவும் இருந்தன. க்ளப்பின் தலைவருடைய நியமனமாக, இசைத் துறைக்கு வருடத்துக்கொரு சேர்மன் என்றும் இருந்தது.

இளங்கண்ணன், ராஜசேகரன், சுந்தர், தேவநேசன், சோமு, அன்பழகி, வசந்தி, ஸ்ரீப்ரியா என்று பல பாடகர், பாடகிகள் க்ளப்பின் இசைக் குழுவில் இருந்தார்கள். எல்லோரும் பாடகர், பாடகிகள்தான். வாத்தியக் கோஷ்டியெல்லாம் கிடையாது. கிட்டார், அக்காடியன், வயலின், தபேலா, பேங்கோஸ், ட்ரிப்பிள் காங்கோ, டிரம்ஸ் என்று எதுவுமே கிடையாது. ப்யானோ? அட, ரசம் சாதம், மோர் சாதமே இல்லையென்கிறபோது மட்டன் பிரியாணி எப்படி இருக்கும்!

கேவலம், ஒரு கீ ேபார்டு கூடக் கிடையாது. கம்ப்யூட்டரில் கரோக்கே பின்னணி இசையை இசைக்க விட்டுத்தான் எல்லோரும் பாடினோம். ரஷ்யக் கலாசார மையத்திலும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் பெரிய அளவில் நடக்கிற நிகழ்ச்சிகளில் மட்டும் வெளியிலிருந்து தொழில்ரீதியான வாத்தியக் கலைஞர்களை அமர்த்திக் கொண்டோம்.

‘பம்பரக் கண்ணாலே காதல்
சங்கதி சொன்னாளே
தங்கச் சிலை போல் வந்து மனதைத்
தவிக்க விட்டாளே…’

என்று நான் மேடையில், சந்திரபாபுவின் குரலிலேயே பாடியபோது எல்லோரும் ரசித்துக் கை தட்டினார்கள். எல்லோருமா? இல்லை. சிலர் கை தட்டவில்லை. கை தட்டாதவர்களெல்லாம் ஆசனங்களிலிருந்து எழுந்து நடனமாடினார்கள்.

‘மூடித்திறந்த இமையிரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது…’

என்று ஸ்ரீப்ரியாவும் நானும் டூயட் பாடினோம். நான் டி.எம்.செளந்தரராஜன், ஸ்ரீப்ரியா பி.சுசீலா. தூத்துக்குடி ஞானசேகரனிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டு கொண்டு நான் டி.எம்.எஸ். குரலில் பாடினேன். ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் போய் பாடியதற்குப் பரிகாரமாக, முதியோர் இல்லங்களில் போய் பாடி, அவர்களை மகிழ்வித்தோம். ‘மக்களைப் பெற்ற மகராசி’ படத்தில் பி.பி.ஸ்ரீநிவாஸும், சரோஜினியும் இணைந்து பாடிய ‘ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா; உண்மைக் காதல் மாறிப் போகுமா…’ என்று அன்பழகியும் நானும் இணைந்து பாடியபோது, அந்த முதியோர் இல்லமே முழுமையாய் இளமைக் காலத்துக்குப் போய், திரும்பி வர மனசேயில்லாமல் ஒரு வழியாய் திரும்பி வந்து சேர்ந்தது.

டி.எம்.செளந்தரராஜனும், பி.பி.ஸ்ரீநிவாஸும் அரங்கத்தின் முன் வரிசையில் பார்வையாளர்களாக அமர்ந்திருக்க, அவர்கள் இருவரும் சேர்ந்து திரையில் பாடிய பாடலை அவர்கள் முன்னிலையிலேயே நானும் தேவநேசனும் பாடிக் கைதட்டல் வாங்கிய அதிசயம் கூட நிகழ்ந்தது. மேடை நிகழ்ச்சிகள், முதியோர் இல்ல விஜயங்கள் எல்லாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், பாடகர்களெல்லாம் ரெண்டு மாசத்துக்கொருதரம் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் சந்தித்துக் கொள்வது வழக்கமாயிருந்தது.

அரைநாள் வாடகைக்கு ஓர் அறையெடுத்து, எல்லாப் பாடகர்களும் பாடகிகளும் ஒன்று கூடி, கரோக்கேயின் பின்னணி இசையோடு காலை முதல் மதியம் வரை மாறி மாறிப் பாடி முடித்து, பசி தீர மதிய உணவு உண்டு விட்டு பிரிவோம். அறை வாடகையையும், உணவுச் செலவையும் எல்லா பாடகர், பாடகி களும் சரிசமமாகப் பங்கிட்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஏற்பாடு.

‘பாடலும் சாப்பிடலும்’ என்று பொருத்தமாய் இந்த பாடல் – கூடலுக்குப் பெயரிடப்பட்டிருந்தது. ஆங்கிலத்தில் ‘Beats and Eats’, இந்தியில் ‘கானா க்ஹானா’. ஒரு முறை ‘கானா க்ஹானா’ ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காலக்கட்டத்தில் நான் கொழும்பில், மாமியார் வீட்டிலிருந்தேன். செவ்வாய்க்கிழமை சென்னைக்குத் திரும்புவதற்கு விமான டிக்கெட் கைவசமிருந்தது. அதற்கு ரெண்டு நாள் முந்தி, ஞாயிற்றுக்கிழமையன்று ‘கானா க்ஹானா’ என்று, ஸ்ரீப்ரியாவிடமிருந்து இமெயில் வர, செவ்வாய்க்கிழமை கிளம்ப வேண்டியவன், ‘சண்டே ஃபிஷ் பிரியாணி’ என்று மாமி ஆசை காட்டியதற்குக்கூட மயங்காமல், டிக்கெட்டை முற்படுத்தி, சனிக்கிழமையே சென்னை வந்து சேரும் அளவுக்கு ஆர்வமும், உற்சாகமும், இசையில் ஈடுபாடும் இருந்தது எனக்கு.

இப்படி, நல்ல காரியங்களெல்லாம் ஆஹா ஓஹோவென்று நடந்து கொண்டிருந்தசமயம் யாருடைய கொள்ளிக் கண் பட்டதோ, நம்ம பார்ட்னராயிருந்த தேவநேசனுக்கு இருந்திருந்தாற்போலப் பித்தம் தலைக்கேறி விட்டது. அவன் ஏற்பாடு செய்திருந்த ஓர் இசை நிகழ்ச்சிக்கு, ஒத்திகைக்கு எனக்கு அழைப்பு வரவில்லை. ஒத்திகைக்கு அழைப்பில்லை என்றால், மேடையேற வாய்ப்பில்லை என்று அர்த்தம். தேவநேசனிடம் நான் விளக்கம் கேட்டதற்கு அவன், எனக்கு தருவதற்காக வினோதமான காரணமொன்றைக் கைவசம் வைத்திருந்தான் :

“ஒன்னோட கொரல் சரியே இல்லடா. இது ஒரு டிக்கெட் புரோகிராம். பப்ளிக் எல்லாம் பாட்டுக் கேக்க வருவாங்க. அவங்க முன்னால மேடைல பாடறதுக்கு நீ அப்படியொண்ணும் விசேஷமான பாடகன் இல்ல. அப்புறம், இன்னொரு விஷயம்…” “எவ்வளவோ சொல்லிட்ட. இதையும் ஏன் மிச்சம் வச்சிருக்க… துப்பிரு!””எங்கயாவது நீ ஆடிஷனுக்குப் போனா, பாஸாகவே மாட்ட!” ‘உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது? நிலைகெட்டுப்போன நயவஞ்சகரின் நாக்குத்தான் அது!’ என்று ‘சக்கரவர்த்தித் திருமகள்’ படத்தில் எம்ஜிஆரும், என்.எஸ்.கிருஷ்ணனும் பாடுகிற போட்டிப் பாட்டில் வரும்.

அந்த பயங்கரமான ஆயுதத்தை தேவநேசன் கைவசம் அல்லது வாய் வசம் வைத்திருந்தான். அந்த நாவாயுதத்தைப் பிரயோகித்து, என்னை இகழ்ந்தது மட்டுமல்லாமல், இசைக் குழுப் பாடகர்களையெல்லாம் வசியம் பண்ணித் தன் ஆளுமையின் கீழ் வைத்திருந்தான். சங்கத்தின் அந்த வருடத்துக்கு இசைத் துறைக்குச் சேர்மனாகவும் ஆகிவிட்டான். அவன் என்னை இழிவுபடுத்தி ஓரங்கட்டியதற்கு என்னுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கிற வகையில், தேவநேசன் சேர்மனாயிருக்கிற ஒரு வருட காலத்துக்கு, ‘கானா க்ஹானா’ உட்பட எந்த இசை நிகழ்ச்சியிலும் பங்கு கொள்ளாமல் புறக்கணிப்பது என்று முடிவு செய்து ஒதுங்கியிருந்தேன்.

என் ஒரு வருட அஞ்ஞான வாசம் நிறைவு பெற்று, தேவநேசனுடைய ஆதிக்கம் முடிவுக்கு வந்து, ராஜசேகரன் இசைத்துறைக்குச் சேர்மனாகப் பதவியேற்ற பிறகு, குரலைச் செருமிக் கொண்டு பாடுவதற்கு நான் தயாராயிருந்தபோது, ஸ்ரீப்ரியாவிடமிருந்து வந்திருந்த ஃபேஸ்புக் பதிவொன்றைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போனேன்.

‘எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த பாடல்களை நம்ம இசைக்குழுப் பாடகர்களும், பாடகிகளும் பாடிய நிகழ்ச்சியொன்று ரெண்டு நாளைக்கு முந்தி நடந்ததாக’ப் பதிவில் கண்டிருந்தது. நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் பதிவாகியிருந்தன. எனக்குத் தெரியாமல் ஒரு எம்.எஸ்.வி. நிகழ்ச்சியா?

ஸ்ரீப்ரியாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, “போன வருஷம் முழுக்க நீங்க ஒரு புரோகிராமுக்கும் வரல, அதனால உங்கள இசைக் குழுவுலயிருந்து சஸ்பெண்ட் பண்ணச் சொல்லி சேர்மனோட உத்தரவு…” என்று எகத்தாளமான பதில் வந்தது.”எந்த சேர்மனோட உத்தரவு? இந்த வருஷத்து சேர்மனா, இல்ல, போன வருஷத்து சேர்மனா?” “எப்படியும் வச்சிக்கலாம்!” என்று அலட்சியமான பதில் வந்தது.”யார் சேர்மனா வந்தாலும் நான்தான் செக்ரட்டரி. போன வருஷமும் இந்த வருஷமும் நான்தான் செக்ரட்டரி. எந்த சேர்மன் சொன்னாலும், அதைச் செய்ய வேண்டியது என் வேல…””இதுக்கு முன்னாடி எந்த ஸிங்கரையாவது இப்படி சஸ்பெண்ட் பண்ணியிருக்கீங்களா?””இருக்கலாம். இல்லாமலுமிருக்கலாம். ஞாபகமில்ல!””மூணு வருஷத்துக்கு முந்தி சுந்தர் சேர்மனாயிருந்தாரே… அந்த ஒரு வருஷமும் அவர் இசைத் துறைல தலையக் காட்டவே இல்ல. அவரையெல்லாம் யாரும் சஸ்பெண்ட் பண்ணலியே?”

“அதப்பத்தி எனக்குத் தெரியாது…””யாரக் கேட்டாத் தெரியும்?””யோசிச்சு சொல்றேன். இப்ப ஃபோன வைச்சுடறேன்…” “கடைசிக் கேள்வி. இது சஸ்பெண்ட் தானா, இல்ல டிஸ்மிஸ்ஸா?”” அத ெபாறுத்திருந்துதான் பாக்கணும்!” பொறுத்திருந்தேன். மேலும் ஒரு வருடம் பொறுத்திருந்தேன். ‘ஆடிப் பழகிய சரீரம், ஆடாதிருக்க இயலாது / பாடிப் பழகிய சாரீரம், பாடாதிருக்க முடியாது…’ என்று ‘வெள்ளி விழா’ படத்தில் வாணிஸ்ரீக்காக பி.சுசீலா பாடியதற்கிணங்க, பாடிப் பழகிய சாரீரத்தைப் பாடாதிருக்கச் செய்ய ரொம்பப் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. வீட்டில் யாரும் இல்லாத சமயம், தனிமையில், ஜன்னல் கதவுகளையெல்லாம் இறுகச் சாத்தி ரேடியோவோடும், டிவியோடும் உரக்கப் பாடுவது, சாலையில் காரோட்டிக் கொண்டு போகிறபோது ஸ்டீரி யோவோடு சேர்ந்து பாடுவது, ஸ்கூட்டரில் போகிறபோது ஹெல்மெட்டுக்குள்ளே பாடிக் கொண்டே போவது… போன்ற சுய கச்சேரிகளால் சாரீரத்தைத் தேற்றவோ, ஏமாற்றவோ முடியவில்லை.

ராஜசேகரனுடைய ஒரு வருட ஆட்சி முடிந்து இசைத் துறைக்குப் புதிய சேர்மன் நியமனம் பெற்ற பின்னும் என் ‘இடை நீக்கம்’ விலக்கிக் கொள்ளப்படுவதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. நிரந்தரக் காரியதரிசியான ஸ்ரீப்ரியாவிடம் கேட்டுப் பார்ப்பதற்கும் வெறுப்பாயிருந்தது. சங்கத்தில் அங்கத்தினராயிருந்த, ஸ்ரீப்ரியாவுடைய சிநேகிதி ஒருத்தியைத் தூது விட்டுப் பார்த்தேன். தூது சென்றவள் திரும்பி வந்தபோது கொச்சையான குற்றச்சாட்டைச் சுமக்க மாட்டாமல் சுமந்து கொண்டு வந்து சேர்ந்தாள்.”கானா க்ஹானாவுக்கு நீங்க வருவீங்களாம், பாட்டுப் பாடுவீங்களாம், நல்லா சாப்புடுவீங்களாம், அப்புறம் உங்க ஷேர் பணத்தைக் கொடுக்காம ஏமாத்திட்டு எஸ்கேப் ஆயிருவீங்களாம்…”

இந்த அபாண்டத்தைக் கேட்டு ஷாக் ஆகிவிட்டேன் என்று சொன்னால், அது அண்டர் ஸ்டேட்மென்ட். நொறுங்கிப் போய்விட்டேன்.ஸ்ரீப்ரியா, தன் வாயிலிருந்து உமிழ்ந்த நஞ்சல்ல இது என்பது புரிந்தது. அவளோடு சேர்ந்து, மூன்று வருட சேர்மன்களும், மற்ற மூத்த உறுப்பினர்களும் எனக்கெதிராகச் செய்த கூட்டுச்சதி இது என்பது புரிந்தது. இவர்களுக்கெதிராக என்ன செய்தேன் என்றுதான் புரியவில்லை.இனிமையான இசைத்துறையில் அசிங்கமாக அரசியல் பண்ணுகிற இந்த அபஸ்வர அஃரிணைகளோடு இணைந்தா இத்தனை வருடங்கள் ஒரு பாடகனாயிருந்திருக்கிறேன்? தூத்துக்குடியில் நானொரு மரியாதைக்குரிய மேடைப் பாடகனாகக் கொடி கட்டிப்பறந்த வசந்த காலம் நினைவுக்கு வந்தது.ஜம்போ லைனர்ஸ் இசைக்குழுவைச் சேர்ந்த அந்த இனிமையான நண்பர்களைப் பார்க்க வேண்டும். Before it is too late, அந்த அருமையான இசைக் கலைஞர்களை உடனே போய் பார்த்தாக வேண்டும் என்கிற வேகம் பிறந்தது.

முத்துநகர் எக்ஸ்பிரஸில் உடனடியாக ஒரு டிக்கட் போட்டு, ரயிலேறி, தூத்துக்குடி ஸ்டேஷனில் போய் இறங்கியபோது ஸ்பிக் சிநேகிதன் கலைமணி என்னை வரவேற்பதற்காக ஸ்டேஷனுக்கு வாகனத்தோடு வந்திருந்ததோடு தன் செலவிலேயே நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் எனக்காக அட்டகாசமான அறையொன்றையும் முன்பதிவு செய்து வைத்திருந்ததைப் பார்த்தபோது, ஆரம்பமே அமோகமாகவும், அமர்க்களமாகவும் இருக்கிறது, நம்முடைய முயற்சி நிச்சயம் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை பிறந்தது.இசைத்துறை சிநேகிதர்களில், லிங்கம் ஒருவனுடைய ஃபோன் நம்பர் மட்டுந்தான் என்னிடம் இருந்தது. தூத்துக்குடிக்கு நான் வருகிற தகவலை லிங்கத்துக்கு ஏற்கனவே தெரிவித்திருந்தபடியால் அவன் என் ஹோட்டல் அறையைக் கேட்டுத் தெரிந்துகொண்டு வந்து சேர்ந்து விட்டான்.பல வருடங்கள் கழித்துப் பார்க்கிற லிங்கத்துடைய முகம் ரொம்ப மாறிவிட்டிருக்கிறது. மாறியிருந்தது முகம் மட்டுமல்ல. ஒரு முஸ்லிம் பெண்ணைக் காதலித்து நிக்காஹ் செய்து கொண்டு மதம் மாறியும் விட்டான். இப்போது அவனுடைய பெயர் ஜெய்னுல் ஆபிதீன். இருபத்தாறாவது வயதில் கத்னா பண்ணிக்கொண்ட கதையை வெட்கத்தோடும், சிரிப்போடும் சொன்னான்.

இந்த சிரிப்பு சங்கதியை என்னோடு பகிர்ந்து கொண்டவன், தொடர்ந்து ஒரு சோகச் செய்தியையும் இறக்கி வைத்தான். ஞானசேகரன் இப்போது உயிரோடில்லையாம். டி.எம்.செளந்தரராஜனுடைய குரலாக வாழ்ந்தவன்.லிங்கத்திடம் துரையரசனுடைய மொபைல் எண் இருந்தது. அவனும் ஹோட்டல் அறைக்கு வந்து சேர்ந்தான். துரையரசனிடம் காதர் பாட்சாவுடைய நம்பர் இருந்தது. காதர் பாட்சாவிடம் பார்த்திபனுடைய நம்பர் இருந்தது. பார்த்திபனிடம் ஜேம்ஸுடைய நம்பர், ஜேம்ஸிடம் டெல்லஸுடைய நம்பர். இப்படியாய், மேலே குறிப்பிட்ட நண்பர்களோடு, எட்கர், செல்வின் என்று இசையாக இணைந்திருந்த சிநேகிதர்கள் கணிசமாக வந்து குழுமிவிட்டார்கள், இருபது நிமிடத்துக்குள்ளே!

“சின்னையா! எத்தன வருஷம் ஆச்சு…” என்று வந்த நண்பர்களெல்லாம் என்னைத் தழுவிக்கொண்டபோது, நெகிழ்ந்து போனேன். ரோஹித்தும், டிரம்மர் கிங்ஸ்லியும் சென்னையிலிருப்பதாகச் சொன்னார்கள். வில்ஃபர் எங்கேயிருக்கிறானென்று யாருக்குமே தெரியவில்லை. ஓசூரில் குடியேறிவிட்ட வயலினிஸ்ட் திவாகரோடு மொபைலில் பேச முடிந்தது. விக்டர் தூத்துக்குடியில்தான் இருக்கிறான் என்றார்கள். மொபைலில் திரும்பத் திரும்ப அழைத்தும், ‘தொடர்பு எல்லைக்கு வெளியே’ என்றுதான் கம்ப்யூட்டர் குரல் வந்தது. சரி, நேரிலேயே போய்ப்பார்த்துவிட்டு வந்துவிடுவோம் என்று, பார்த்திபனுடைய ஸ்கூட்டரில் தூவிபுரம் அஞ்சாவது தெருவுக்குப் போய், விக்டருடைய வீட்டையடைந்தால், அவன் வெளிநாட்டுக்குப் போயிருக்கிற தகவல் கிடைத்தது.விக்டருடைய இந்த வீட்டுக்கு எத்தனைமுறை ஒத்திகைக்கு வந்திருக்கிறேன் என்று நினைத்துப் பார்த்தபோது மலரும் நினைவுகளில் மனசு லயித்து வலித்தது.

அதோடு, இன்னொரு அழகான நிகழ்வும் நினைவுக்கு வந்தது. கல்யாணமாகி புத்தம்புது மனைவியோடு இந்த விக்டருடைய வீட்டுக்கு வந்தபோது, அவன் அம்மா, இந்த இஸ்லாமிய இளந்தம்பதிக்காக செய்த கிறிஸ்தவ ஜெபம் கூட என் விழிகளைப் பனிக்கச் செய்தது. அம்மாக்கள் எல்லோருமே கலப்படமில்லாத அன்பையும், பாசத்தையும் மொத்தக் குத்தகைக்கு எடுத்துக்கொண்ட உத்தமிகளாய்த்தான் இருக்கிறார்கள். எங்கேயும், எப்போதும்! விக்டர் வெளிநாட்டுக்குப் போய்விட்டான். அந்த அன்புத்தாய் இந்த உலகத்தை விட்டே போய்விட்டிருப்பார்கள்!ஹோட்டல் அறைக்கு நானும் பார்த்திபனும் திரும்பி வந்த பின்னால், எல்லோரும் கிளம்பிப்போய், தட்சிணமாற நாடார் மஹாஜன உணவு விடுதியில் மீன் குழம்பு சாப்பாட்டை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தபோது, “காதர் பாட்சா, நீ ஒரு பாட்டுப் பாடுல. நீ பாடினா, சாப்பாட்டு பில்லுக்குப் பணம் குடுக்க வேண்டாம்னு ஓனர் சொல்லிருவார்…” என்று ஒரு நேயர் விருப்பம் முன் வைக்கப்பட, “இப்ப நா பாடினா, ஓனர் டபுள் பேமென்ட் கேட்டுப்புடுவார் மக்கா…” என்று காதர் பாட்சா திருப்பியடிக்க, அங்கே எழுந்த குபீர்ச் சிரிப்பில் பல பேருக்குப் புரையேறப் பார்த்தது.

பொடி நடையாய் எல்ேலாரும் ஃபோட்டோ பார்க் ஸ்டூடியோவுக்குப் போய் ஒரு குரூப் ஃபோட்டோ எடுத்துக் கொண்டபிறகு, திரும்பவும் ஹோட்டல் அறைக்கு வந்ததும் டெல்லஸ், ஒரு கேள்வியை வைத்தான்.”இத்தனை வருஷங்கழிச்சி தூத்துக்குடிக்கு வரணும், எங்களையெல்லாம் பார்க்கணும்னு திடீர்னு எப்படித் தோணிச்சி ஒங்களுக்கு?”” காரணமிருக்கு. மெட்ராஸ்ல நா எங்க க்ளப் ஆர்க்கெஸ்ட்ரால பாடிட்டிருந்தேன்…””அப்படியா! வெரிகுட் சின்னையா!””பிரச்சன என்னன்னா, என் கொரல் சரியில்லன்னுட்டாங்க. ஆடிஷனுக்குப் போனா நா பாஸாக மாட்டேன்னு சக பாடகனொருத்தன் சாபம் குடுத்துட்டான்!””அடப்பாவி மக்கா! சின்னையா, இப்ப நீங்க ஒரு பாட்டுப் பாடுங்க, நாங்க சொல்லுறோம் ஆடிஷன்ல நீங்க பாஸ் பண்ணுவீங்களா இல்லியான்னு…”‘பாபி’ படத்தில் ஷைலேந்தர் சிங் பாடிய இந்திப் பாடலை அவர்களுக்காகப் பாடியபோது அறை நிசப்தமாயிருந்தது. பாடி முடித்த பின்னால், பல ஆதரவுக் குரல்கள் எழுந்தன.

“சின்னையா, அன்னிக்கு மாதிரியே இன்னிக்கும் ஒங்க கொரல் கிண்ணுன்னு இருக்கு!”

“ஒங்க மேல பொறாமைலதான் சின்னையா அவன் இப்டி ஔறியிருக்கான்…”

“இதுக்கே இப்படிக் கொதிக்கிறீங்களே, இதவிட மோசமான மேட்டர் ஒண்ணச் சொன்னேன்னா நீங்கல்லாம் துடிச்சிப் போயிருவீங்க..” என்கிற முன்னுரையோடு நான், கானா க்ஹானா கதையை அவர்களின் முன்னே அவிழ்த்து வைத்தவுடன், நான் எதிர்பார்த்திருந்த மாதிரியே, முன்னிலும் அதிகமாக உணர்ச்சிவசப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.

“சின்னையா, ஒங்களையா சொன்னாக…”

“ஒங்கள கேவலமாப் பேசினவுக வாயில வசம்ப வச்சித் தேக்க!”

“நண்பர்களே, இந்தக் கேவலங்களையெல்லாம் பாக்கறப்ப ஒங்க ஞாபகம் வந்தது. மெட்ராஸ் மேட்டுக் குடியையும், மேன்மையான இந்தத் தூத்துக்குடியையும் ஒப்பிட்டுப் பாத்தேன். நம்ம ஜம்போ லைனர்ஸ் ஆர்க்கெஸ்ட்ரால நீங்கல்லாம் என்ன ஒரு ராஜா மாதிரி வச்சிருந்தீங்க…”

“தப்பு சின்னையா, ராஜாவுக்கும் மேல, ஒங்கள நாங்க ஒரு இளவரசன் மாதிரி வச்சிருந்தோம். பிரின்ஸ்! நீங்கதான் சின்னையா எங்களுக்கெல்லாம் பிரின்ஸ் சார்மிங்!”

“ரொம்ப தாங்க்ஸ் ஃப்ரெண்ட்ஸ். இப்ப நா மேட்டருக்கு வர்றேன். நா ஒரு பாடகன் மட்டுமல்ல, நா ஒரு எழுத்தாளன் கூடன்னு ஒங்களுக்குத் தெரியும். என்ன கேவலப்படுத்தின மெட்ராஸ் இசைக்குழுவையும் என்ன இன்னும் கொண்டாடிட்டிருக்கிற தூத்துக்குடி இசை நண்பர்களையும் கம்ப்பேர் பண்ணி ஒரு கதையெழுதணும், அதுக்காக தூத்துக்குடிக்குப் போகணும், பழைய ஃப்ரெண்ட்ஸையெல்லாம் நேர்ல பாக்கணும்னு ஐடியா. இதோ தூத்துக்குடிக்கு வந்துட்டேன், ஒங்களயெல்லாரையும் பாத்துட்டேன். இனி கதையெழுத வேண்டியதுதான் பாக்கி!” ராத்திரி, முத்துநகர் எக்ஸ்பிரஸ்ஸில், பெர்த்தில் படுத்திருந்தபோது, தூத்துக்குடி இசை நண்பர்கள் ஒவ்வொருவருடைய முகமும் மனத்திரையில் தோன்றிக் கொண்டிருந்தது. அவர்கள் எல்லோருடைய குரலும் காதுகளில் ரீங்கரித்துக் கொண்டிருந்தது. பின்னணியில் கிட்டார், வயலின், அக்காடியன், பியானோ, தபேலா, ட்ரிப்பிள் காங்கோ, டிரம்ஸ், பேங்கோஸ் எல்லாம் ஆர்ப்பாட்டமாக இசைத்து, ரயிலின் ஓட்டத்தோடு போட்டி போட்டுக் கொண்டிருந்தன.

ரயிலின் ஸைரன் ஒருமுறை ஓங்கி ஒலித்து ஓய்ந்தபோது, புதிதாக எனக்கொரு தெளிவு பிறந்திருந்தது. ஓ! இனி அடிக்கடி நான் தூத்துக்குடிக்கு வரலாம். இனிமையான இந்த இசை நண்பர்களைச் சந்திக்கலாம். மேடையில் பாடாவிட்டாலும்கூட, ஹோட்டல் அறைக்குள்ளே நாங்கள் பாடிக்கொள்ளலாம். பாடவேண்டுமென்பதுகூட இல்லை, பேசிக் கொண்டிருந்தாலே போதும்.இனிமையான ஓர் இசை சகாப்தம் முடிந்துபோனது என்று நினைத்திருந்தது தப்பு. இனிமையான ஓர் இசை சகாப்தத்தின் இரண்டாம் அத்தியாயம், இன்றைக்கு ஆரம்பம்!

– Jul 2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *