குந்தியிருக்க ஒரு குடிநிலம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2022
பார்வையிட்டோர்: 5,269 
 

வானம் கருமை பெறத் தொடங்கியதும் இராசதுரை துடித்துப் போனான். நிச்சயமாக இன்று வானத்தில் பரவிய கருமுகில் நேற்றுப் போல வாடைக்காற்றுடன் அள்ளுண்டு செல்ல வாய்ப்பில்லை. மூன்று நான்கு நாட்களாகப் பயமுறுத்திக் கொண்டிருந்த வானம் இன்று அவன் பிரார்த்தனைக்கு இரங்கும் என்ற நம்பிக்கையைச் சீர்குலைத்தபடி குளிர்காற்றுடன் இறங்கிய துமிகள் மழைத்துளிகளாகி வானத்திலிருந்து கோடானுகோடி நீர்விழுதுகளை மண்ணில் அழுத்தின.
“ஐயோ… பிள்ளைகள் என்ன பாடோ?”

மழைத்துளிகள் பெருந்தாரைகளாகி முகத்தில் ஊசிகளாகக் குத்தின. இராசதுரை கரத்தில் காவிய பாண் சரையுடன் தன் இருப்பிடத்தை நோக்கி ஓடத் தொடங்கினான். நிலவொளியும் சூரிய ஒளியும் மண்தரையில பொட்டுக்கள் இட இடமளிக்கும் குடிசைக்கூரை, சென்ற வருடமே கூரை வேய்ந்திருக்க வேண்டும். அதற்கான பணத்தைத் திரட்ட அவனால் முடியவில்லை. அரசு தருகின்ற உலர் உணவு எத்தனை நாட்களுக்குப் போதும்? தாயில்லாத ஐந்து பிள்ளைகளையும் படித்து ஆளாக்கிவிட வேண்டுமென்ற ஆவேசம், அவன் உழைப்பினைப் படிப்புத் தேவைகளுக்காக விழுங்கிக் கொண்டிருந்தது. கூரை வேயவென பணத்தினை ஒதுக்க முடியவில்லை. கரையான் தின்று ஈக்குகளாக எஞ்சியிருக்கும் கூரை யூடாக வானம் தெரியும்.

“பாக்கியத்தின் ஆத்மா அங்கு திரியுமா?”

மாவிட்டபுரத்தில் அவன் வாழ்ந்த வாழ்கை என்ன? அப்பு கட்டிவிட்ட இரண்டறைகள் விறாந்தை, தலைவாசல் கொண்ட கல்வீட்டில் வெற்றிலைத் தோட்டத்தின் சூழலில் வாழ்ந்தவன்.

பாயில் படுத்துக்கிடந்தபடி எத்தனை இரவுகள் அவன் வானத்தில் கண்சிமிட்டும் விண்மீன்களைத் துயரத்துடன் வெறித்துப் பார்த்தபடி கிடந்திருக்கிறான். மாவிட்டபுரம் கோயில் வீதியில் அமைந்திருந்த அவன் தகப்பனாரின் கல்வீட்டில் வெளித் திண்ணையின் வெறும் சீமேந்துத்தரையில் வானத்தையும் நிலவையும் பார்த்தபடி படுத்துக் கிடப்பதில் அவனுக்குப் பெரு விருப்பம். சிலவேளைகளில் அவன் அருகில் வந்து பாக்கியம் அமர்ந்து கொள்வாள்.

“என்னப்பா…ஆகாயத்தில் தேடுறியள்?” என்று கேட்டுவிட்டு ஒரு நாள் சிரித்தாள். அவள் சிரிப்பில் அவன் கரைந்து போனான். அவனைத் தான் கலியாணம் செய்தால் கட்டுவேனெனப் பிடிவாதமாக நின்று அவனுக்கு வாழ்க்கைப்பட்ட அம்மான் மகள் அவள். அவன் மெதுவாகத் தன் தலையைத் தூக்கி அவள் மடியில் சாய்த்துக் கொண்டான்.

“உள்ளை அம்மான்… இன்னமும் நித்திரைக்குப் போகவில்லை.”

“அதிலை என்ன? அவர் செய்யாததே?”

தன்மடியில் அவன் தலைவைத்துப் படுத்திருப்பதில் அவளுக்கும் சம்மதந்தான். மகிழ்ச்சிதான். அவன் தலைமயிரைக் கோதிவிட்டாள்.

“வானத்தில் இந்த மண்ணில் உடலைக் கழற்றிவிட்ட ஆத்மாக்கள் உலவுவினமாம். அவர்களில் என் அம்மாவும் இருப்பா. குருக்கள் சொன்னார்” என்றான் அவன்.

“விசர்… இப்ப மாமி எங்கை பிறந்திருக்கிறாவோ?”

எங்கையும் பிறக்கமாட்டா. உன் வயிற்றில தங்கி எங்களுக்கு மகளாகப் பிறப்பதற்குக் காத்திருக்கிறா…” அவன் இவ்வாறு கூறியபடி அவள் மணி வயிற்றினைப் பாசத்தோடு தடவிவிட்டான். அவள் அவன் தலையைத் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டாள்.

“மெய்யாகவா அப்பா… அப்படி ஒருபேறு எனக்குக் கிடைத்தால் என்னைவிடப் பாக்கியசாலி வேறு எவருமில்லை”

பாக்கியம் விரும்பியபடி அவர்களுக்கு முதலில் பிறந்தது பெண் தான். மாவிட்டபுரத்திலிருந்து இராணுவத்தால் திடீரெனத் துரத்தப்பட்டு அனைத்தையும் இழந்து உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி அளவெட்டியில் முதலில் குடியேறி பின்னர் வலி காமத்தின் பெரிய இடப்பெயர்வின் போது சாவகச் சேரிக்கு ஓடினார்கள். அங்கு தான் மூத்தவள் பிறந்தாள். துயரத்திலும் வாழவேண்டுமென்ற பிடிப்பை வசந்தி ஏற்படுத்தினாள். யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய இராணுவம் தென்மராட்சியை நோக்கி வருவதாகக் கேள்விப்பட்டதும் கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு கிழவரையும் அழைத்துக்கொண்டு வன்னிக்கு ஓடினார்கள். அங்கு அவர்கள் கிழவரை மலேரியாவுக்குத் தொலைத்துவிட்டனர். ஆனால் சத்தியன் அங்குதான் பிறந்தான்.

“அம்மானும் வந்திட்டார்” என்று பாக்கியம் பூரித்துப்போனாள். அவன் சிரித்தான். அவன் நடேஸ் வராக்கல்லூரியில் கல்வி கற்றவன். பகுத்தறிவால் ஏற்கக்கூடியவை எவை, பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை எவை என்பது அவனுக்குத் தெரியாதவையல்ல. ஆனால் பாரம்பரியமாக நிலவுகின்ற பகுத்தறிவற்ற நம்பிக்கைகள் மக்களின் வாழ்க்கைத் துன்பங்களை மறக்கவும் வாழ்வின் திருப்திக்கும் உதவுமாயின் அவற்றினால் பாதகமில்லை என்பது அவனின் வாதம். நிறைய நூல்கள் வாசிப்பான். பாரதியார் கவிதைகள் மீது அளப்பரிய பிரேமை. அடிக்கடி பாரதியின் வரிகளைப் பாக்கியத்திற்குப் பாடிக்காட்டுவான்.

“தனிமனிதனுக்கு உணவில்லையெனில் இந்த உலகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி.”

“ஒருவனுக்காக உலகத்தை அழிக்கிறதே” என்று பாக்கியம் சிரிப்பாள்.

“அப்படியல்ல பாக்கியம் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கவேணும் என்று அவாப்பட்டார்.”

சத்தியனுக்குப் பிறகு வசந்தன், மாலினி, ரூபி மூவரும் வன்னியில் பிறந்தவர்கள். குடும்பத்தில் எண்ணிக்கை அதிகரித்ததும் பிரச்னைகளும் தோன்றத் தொடங்கின. வன்னியின் காட்டுச் சூழலின் காங்கைவெக்கையில் அவன் குடும்பத்திற்காக ஓயாது உழைக்க நேர்ந்தது. வேளாண்மைக்காலத்தில் தொழில் கிடைத்தது. ஏனைய நாட்களில் கனகசபையோடு பட்டவிறகு தேடி சேகரிக்கக் காட்டிற்குள் அலைந்தான்.

பாக்கியம் மெலிந்து உருக்குலைந்து போனாள். அடிக்கடி கடும் காய்ச்சலில் படுத்துக் கொள்வாள். அந்நேரங்களில் குடிசையில் தங்கி அவளையும் பிள்ளைகளையும் பராமரித்துக் கொள்வது அவன் பணியாகிறது. எப்படி வாழ்ந்தவர்கள்? மாவிட்டபுரத்தில் வெற்றிலைத் தோட்டத்துடன் கூடிய விட்டார்தியான காணியில் அப்பு கட்டிய வீட்டில் அமிர்தம் போன்ற கிணற்றுத் தண்ணீருடன் வாழ்ந்து சுகித்த குடும்பம், இன்று வன்னிக்காட்டிற்குள் பத்தடிக்கு பத்தடிக் குடிசைக்குள் மண் தரையில் பாய்களில் கிடக்க நேர்ந்து விட்டது.

“எங்கட ஊருக்கு எப்படியாவது திரும்பிப்போய்விடணும், அப்பா. பிள்ளையளைப் படிப்பித்து ஆளாக்கிவிட வேணும். பாவம் செய்ததுகள். இங்கை வந்து எங்களுக்குப் பிறந்திருக்குதுகள்.”

பாக்கியத்தின் ஏக்கம் மாவிட்டபுரமாகத் தான் இருந்தது. பிறந்த மண்ணைவிட்டு அகதிகளாக ஓடி வந்து எத்தனை வருடங்களாகிவிட்டன? மண் மீட்பிற்கான யுத்தம் நாலரை இலட்சம் மக்களை சொத்துச் சுகமிழக்க வைத்துவிட்டது. அறுபதினாயிரம் மக்களைக் காவுகொண்டுவிட்டது என்பதை எண்ண மனம் வலித்தது.

“கெதியல போவம் பாக்கியம். சமாதானப் பேச்சு வார்த்தை நடக்குது. எங்களைப் பழைய விடங்களில் இருக்க விடுவினமாம்” என்றான் நம்பிக்கையோடு இராசதுரை, அந்த நம்பிக்கையோடுதான் கண்டிவீதி திறக்கப்பட்டதும் யாழ்ப்பாணத்திற்கு ஓடி வந்தார்கள் பூனை குட்டிகளைக் காவுவதைப் போல பிள்ளைகளைக் காவிக்கொண்டு ஓராயிரம் ஆசைக் கனவுகளோடு ஓடிவந்து ஏமாந்தார்கள் இருக்க இடமின்றி நடுத்தெருவில் நின்றார்கள்.

“இனி சண்டையில்லை. சமாதானமாம். அவையவை அவையினர் வீடுகளில் இருக்கலாம் என்றினமே?”

பெரும் ஏமாற்றம் அவர்களைத் தாக்கியது. இராணுவத்தினரின் முகாமுள்ள விடங்களிலும் உயர் பாதுகாப்பு வளையங்களுள்ளும் எவருக்கும் மீளக் குடியமர அனுமதியில்லையாம். யாழ்ப்பாணக் குடா நாட்டின் வடபெரும்பகுதி. அவர்களின் மாவிட்டபுரம் உட்பட இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வளையத்தினுள் அடங்கிக்கிடந்தது.

“வன்னியிலேயே இருந்திருக்கலாம்” என பாக்கியம் விம்மினாள்.

“கெதியில விடுவினமாம். இங்கினேக்க இருப்பம்.”

மாவிட்டபுரத்தினை இராணுவம் ஆக்கிரமித்ததும், அவர்கள் அடைக்கலம் தேடி அளவெட்டிக்குச் சென்றார்கள். அவர்களை முதலில் ஆதரித்த வெளிநாட்டுக்காரர் ஒருவரின் வீட்டில் அவனைப் போல ஆறுகுடும்பங்கள் இப்பொழுது குடியேறியிருந்தன. அங்கும் இருக்க இடம் கிடைக்கவில்லை. பரிதவித்து நின்றபோது, பழைய தோழன் பொன்னுத் தரை உதவ முன் வந்தான்.

“கவலைப்படாதை இராசதுரை. நாங்கள் களமேடு அகதி முகாமில் இருக்கிறம். எங்களுக்கு அங்க ஒரு நிறுவனம் சின்ன ஒரு வீடு கட்டிக் கொடுத்திருக்குது. நான் முதலில் இருந்த குடிசையைப் பிரிக்காமல் வைச்சிருக்கிறன். அதில் வந்து இப்போது பிள்ளையோடு இரு. பிறகு பார்ப்பம்.”

மீண்டும் குடிசைக்குள் முடங்கிக்கொள்ள நேர்ந்தது. எட்டுப்பரப்புக் காணிக்குள் முப்பதுக்கு மேற்பட்ட குடும்பங்கள் முடங்கிக்கிடந்தன. அசைய இடமில்லை. ஒரு குழாய்க்கிணறு நூற்றியிருபது பேருக்கு நாள் முழுவதும் நீரிறைத்து சிலவேளைகளில் காற்றினைக் குழாய் வழி கக்கியது. நான்கு மலசல கூடங்கள் காலை வேளைகளில் திணறின. மலக்குழிகள் வேறு அடிக்கடி நிரம்பிப் பிரச்னை தந்தன.

சிறிது நேர மழைப் பொழிவில் நிரம்பிய வீதி வெள்ளம் பாதங்களை மூடிவிட்டது. இராசதுரை வேகமாக ஓடிவந்தான். ஈர்க்கும் கூரைக்குடிசைக்குள் பிள்ளைகள் என்ன பாடோ? இப்படி மழைபொழிந்த ஒரு மாரிப் பொழுதில் தான் நெஞ்சு வலிக்கிறதென்று மார்பினைப் பற்றியபடி சரிந்த பாக்கியம் மீண்டும் எழுந்தமரவில்லை. மாவிட்டபுரத்தில் மீளக்குடியேறும் கனவு நிறைவேறாமலே மண்ணில் எரிந்து சாம்பலாகிப் போனாள்.

எப்படி வாழ்ந்தவள்? ஐந்து பிள்ளைகளையும் அவன் பொறுப்பில் கொடுத்துவிட்டு மறைந்து போனாள். முழுப்பொறுப்பும் மூத்தவள் வசந்தி தலையில் விழுந்ததும் அவள் பாடசாலைக்குச் செல்லல் முற்றுப் பெற்றது. மாதாமாதம் கிடைக்காமல் உலர் உணவுப் பொருட்கள் அவர்களுக்குப் போதுமானதாகவில்லை. அவன் நேர காலம் பார்க்காமல் உழைக்க நேர்ந்தது.

மாரி மழை இரைசலுடன் மீண்டும் பாட்டம்பாட்டமாகப் பொழியத் தொடங்கியது. தூரத்தில் அவன் வாழ்கின்ற அகதி முகாம் வெள்ளத்துள் மூழ்கிக்கிடப்பது தெரிகிறது. கூரையை மழைக்கு முன்னர் வேய்ந்துவிட அவன் எவ்வளவோ முயற்சிகள் செய்தான். அவை பலிதமாகவில்லை. கிராம சேவகர் மூலம் ஏதாவது உதவிகள் கிடைக்குமா என்று பலதடவைகள் ஓடியலைந்தான்.

“இதோ பார் இராசதுரை. நீ உரியமுறையில் பதிந்து இந்த முகாமிற்கு வரவில்லை. அடாத்தாகத் குடியேறியிருக்கிறாய். அதனால அரசு சார்பற்ற நிறுவனங்கள் வழங்குகின்ற உதவிகள் உனக்குக் கிடையாது. பாய், பிளாஸ்ரிக் பாத்திரங்கள், செமிபேமனன்ற வீட்டிற்கான பணம். எதுவும் கிடையாது” என்றார் விதானையார்.

எனக்கு அலையள் கிள்ளிக்கொடுத்துவிட்டு அள்ளிக் கொண்டு போகிற சங்கதிகள் பிரச்னையில்லை. எங்கட துயரத்தை அந்த வெளிநாட்டு நிறுவனங்கள் வியாபாரமாக்கிவிட்டன. மீளக்குடியேற வருபவர்களுக்கு இருபத்தையாயிரம் அரசு கொடுக்குது. அதுதான் எனக்கு வேணும். தந்தியள் எண்டால் குடிசையைத் திருத்தி கிடுகு வாங்கிக் கூரையை வேய்ந்திடுவேன்.”

“நீ உன்ர சொந்தவிடத்தில் குடியேறினால் தான் அது உனக்குக் கிடைக்கும்”.

அவன் விக்கித்துப்போய் அவரைப் பார்த்தான்.

“குடியேற விடுங்களேன்? நாங்களா வேணாமென்றம்?”

இவன் பாதிக்கப்பட்டவன். அவன் ஆவேசத்தின் காரணம் கிராமசேவையாளருக்குப் புரியாமலில்லை. அவனைப்போல எத்தனை மனிதர்கள் அங்குள்ளனர்? பார்த்துப்பார்த்து அவர்களின் துயரங்களைக் கேட்டுக்கேட்டு நெஞ்சமும் அவருக்கு மரத்துவிட்டது.

இராசதுரையை வியப்புடன் கிராம சேவையாளர் ஏறிட்டார். எவ்வளவு அற்புதமாக வெளிநாட்டு நிறுவனங்களை அவன் கணித்திருக்கிறான்.

“இராசதுரை, அப்படி முற்று முழுதாகச் சொல்லிவிடாதை. அந்த நிறுவனங்கள் இல்லாவிட்டால் இருக்கவும் இடமில்லாமல் எத்தனை குடும்பங்கள் தவித்திருக்கும் தெரியுமா?”

“விதானையார் இப்ப இருக்கவிடமில்லாமல் தவிக்கிறது. வலிகாமம் வடக்கு மக்கள் தான். நீங்கள் அல்ல. யாழ்ப்பாணத்தவரல்ல வன்னி மக்கள் இல்லை. நீங்க எல்லாரும் உங்கட உங்கட வளவுகளில் வீடுகளில் இருக்கிறியள். நாங்க… இருபது வரியமாக அலையிறம். உயர் பாதுகாப்பு வளையம் என்று ஒரு எல்லையை வகுத்து எங்கட வளவுகளையும் வீடுகளையும் அநியாயக்காரர் ஆக்கிரமித்ததால் அகதிகளாகியது நாங்கதான். வலி உங்களுக்கல்ல. எங்களுக்குத்தான். எங்களது போராட்ட உணர்வை மழுங்கடிக்க அகதி முகாம். உலர் உணவு, பிளாஸ்ரிக் பாத்திரங்கள், கூரை விரிப்புகள் என்று பிச்சை தந்து உணர்ச்சியை அடக்கிவிட்டினம். எங்களைத் தவிக்க விட்டிருந்தால் தெரிந்திருக்கும் எங்கட ஊருக்கு புகுந்திருப்பம்.” என்றான் இராசதுரை ஆவேசமாக.

“ஆமி சுட்டுத் தள்ளியிருக்கும்.”

“எத்தனை பேரை? ஒரு நூறு பேரை? ஆயிரம் பேரை? அதுக்கும் கூட? நாங்க அறுபதினாயிரம் பேர் எங்கட குடிநிலத்தை இழந்து தவிக்கிறம் விதானையார். நான் வாறன் விதானையார்.”

அவனைப்பார்த்தபடி அவர் நின்றிருந்தார்.

மழைவிடுவதாகவில்லை. பொழிந்து கொட்டியது.

அவன் வீட்டை அடைந்தபோது குடிசை வெறிச்சிட்டுக்கிடந்தது. “ஐயோ” என இதயம் பதறியது பிள்ளைகளின் பெயர் சொல்லி கூச்சலிட்டான். எவரையும் காணவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தான். வெள்ளக்காடாக எங்கும் விரிந்து கிடந்தது எவரையும் காணோம்.

“தம்பி இராசதுரை… எல்லாரும் பள்ளிக்கூடத்தில். ஒதுங்கிவிட்டனம் ஆங்க போ..”

“நீயும் வானை ஆச்சி…”

“நான் வாறன் நீ போ,”

மனம் அமைதி கண்டது.

இரவு முழுவதும் விறைக்கும் குளிரில் நடுங்கியபடி அவர்கள் அப்பாடசாலைக் கட்டடத்தில் அமர்ந்திருந்தனர். இராசதுரை நனைந்திருந்த பாணைப் பிள்ளைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். நாளை காலை பாடசாலை அதிபர் பிரதேசச் செயலரிடம் ஓடிப்போகப் போகிறார்.

“சேர் வந்து ஒருக்காப் பாருங்கோ…. பள்ளிக் கூடமிருக்கிற நிலையை. அதுகள் அதுக்குள்ள வந்து தங்கி நாறிப்போய் கிடக்குது. இனித் துப்பரவாக்கிறதென்ன? பள்ளிக்கூடம் நடத்துறதென்ன?

“அப்படிச் சொல்லிப் போட்டு வரட்டும். நாயை அடிக்கிற மாதிரி உதைக்கிறன். சொந்த வீட்டில் சொகுசாக இருந்துகொண்டு….”

அடுத்தநாள் பலர் வாகனங்களில் பாட சாலைக்கு வந்திறங்கினர். பிரதேசக் செயலாளர், கிராம சேவகர், சமூகசேவை அதிகாரி… இன்னும் ஒரு வெள்ளைக்காரர்… அரசு சார்பற்ற நிறுவனத்தின் ஒரு லொறி நிறைந்த பொருட்களுடன் வந்திறங்கினர். பிரதேசச் செயலரின் விழிகளில் பரிவு தெரிந்தது.

“எங்கட சொந்தவிடங்களில் போய் இருக்க அனுமதி பெற்றுத் தாருங்க சேர்” என்று வேண்டினான். பொன்னுத்துரை. “நாங்க இருபது வரியமாக அனுபவிக்கிற வேதனை காணும். ஏங்களுக்கு ஒன்றும் வேண்டாம் சேர்… எங்கட இடம் தான் வேணும்.

“இப்ப சமாதானம் வந்திட்டுதானே?”

“ஆருக்கு சேர் வந்திருக்குது?” என இராசதுரை சத்தமிட்டான். “உங்களுக்குத் தான் வந்திருக்குது. யாழ்ப்பாணத்தின் வாழுகிறவைக்கு வந்திருக்குது… வன்னியில இருக்கறவைக்கும் வந்திருக்குது… எங்களுக்கல்ல. வலிகாமம் வடக்குக்காரருக்கல்ல. அகதி முகாம்களில் வாழுகிற எங்களைப் போன்ற பரதேசிகளுக்கல்ல. யுத்தமில்லாத இந்தக் காலத்தில் உங்களுக்குத் தான் கொண்டாட்டம்

அவ்விடத்தில் அமைதி நிலவியது. அவனை எல்லாரும் வியப்புடன் பார்த்தனர்.

“ஓலைக்கூரை வீட்டுக்காரர் வாருங்கோ… தறப்பாள் கொண்டு வந்திருக்கிறம். கூரைக்குப் போட்டு ஒழுகாமல் செய்திட்டு இருங்கோ.

ஏல்லாரும் வரிசையாக வந்து வாங்கிக் கொண்டனர். இராசதுரை எழுந்து வந்தான்.

“இராசதுரைக்கு இரண்டு தறப்பாள் வேணும் சேர். குடிசை அப்படிக் கூரையில…” என்ற விதானையார் பரிந்துரைத்தார்.

“எனக்கெதுவும் வேணாம் சேர்.” என்றான் இராசதுரை.

“தம்பி… கெதியில் பேச்சு வார்த்தை புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் மீண்டும் தொடங்க இருக்குது. சரியாக வந்திடும். எல்லாரும் அவரவர் இடங்களுக்குப் போகலாம்.

இராசதுரை பிரதேசச் செயலாளரை ஏளனமாகப் பார்த்தான்.

“நம்பச் சொல்லுறியளா சேர். எத்தனை வரியமாகச் சொல்லிறியள். எந்தச் சிங்கள அரசாவது நீங்க கேட்கிறதைத் தூக்கிக் கொடுத்து விடப் போவதில்லை. சமாதானம் வந்திட்டுது எல்லாரும் அவரவர் இடத்திற்குப் போகலாம் எண்டியவள். நம்பி ஓடிவந்தம். இப்ப பேச்சு வார்த்தை… முடியட்டும் என்கிறியள்…. இந்தச் சமாதானம் பேச்சுவார்த்தை எதுவும் எங்களுக்கு வேணாம். எனக்கு என்ற மாவிட்டபுரம் வேணும்… அங்க என்ற வளவு வேணும். இவங்க ஒரு போதும் தரப்போவதில்லை. நாங்களாத்தான் எடுத்துக் கொள்ள வேணும். என்னைப் பொறுத்தவரையில் இன்னமும் சண்டை முடியவில்லை. சேர். சமாதான சுகத்தையும் போரில்லா இனிமையும் நாங்க அனுபவிக்கவில்லை. தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்த உலகத்தையே அழித்திடச் சொன்ன பாரதியைத் தெரியுமா சேர்? நீங்க எழுத்தாளர் உங்களுக்குத் தெரியும். நாங்க ஒருவரல்ல அறுபதினாயிரம் பேர்… எங்க பிரதேசத்தை மீட்டுத்தாருங்க. உங்களோட சேர்ந்து நாங்களும் சுகத்தை அனுபவிக்கிறம். இல்லாட்டில் எங்களோட சேர்ந்து நீங்களும் அழியத் தயாராகுங்க. போங்க சேர். நாங்க இப்பவும் அடிமைச் சாதியள்.”

“அதுகளைவிடு… இந்தா இந்தத் தறப்பாளை வாங்கிக் கொள் தம்பி” நீட்டிய தறப்பாளை வாங்கிய இராசதுரை அவற்றினை அப்படியே முற்றத்தில் தேங்கிக்கிடந்த வெள்ளத்தில் வீசிவிட்டு…. “வாருங்கோ பிள்ளையள்” என்றபடி மழையில் இறங்கி நடக்கத் தொடங்கினான்…

நன்றி: தீராநதி.

Print Friendly, PDF & Email

1 thought on “குந்தியிருக்க ஒரு குடிநிலம்

  1. “நிலவொளியும் சூரிய ஒளியும் மண்தரையில பொட்டுக்கள் இட இடமளிக்கும் குடிசைக் கூரையை சென்ற வருடமே நான் கூரை வேய்ந்திருக்க வேண்டும்.” – இந்த சொற்றோடர் ஒரு நல்ல வர்ணனையே. இதை நான் மிகவும் ரசித்தேன். அவருடைய இயலாமையையும் நன்கு சுட்டிக் காட்டுகின்றது அல்லவா?

    “மண்டகொளத்தூர் சுப்ரமணியன்.”

    ஜூலியட் கோர்ட் [ Cul de sac]
    சேப்பல் குன்று, வடக்குக் கரோலினா,
    யு.எஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *