கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 14, 2024
பார்வையிட்டோர்: 1,737 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கதை மாந்தர் : பாத்திரப் படைப்பு (குறள்)

1 ஆறுமுகம் : “ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்”

2.தெய்வானை : “மனைத்தக்க மாண்புடையாள் ஆகித் தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை”

3.ஆதவன் : “உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர்”

4.மாதவி : “மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்”

5.இராமச்சந்திரன் : “ஆக்கம் அதாவினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை”

6.கண்ணம்மா : “தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்”

7.பழனிசாமி : “பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்”

8.பரிமளா : “இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை”

9.கதைக்கரு : “வரவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்”

விடியல்

உலகத்துக்கு ஒளி கொடுத்து உய்விக்கும் தன்னுடைய உன்னதப் பணியினை முடித்துக் கொண்டு மேற்றிசையின் கீழ்ப்படுகைக்கு விரைந்து கொண்டிருந்தான் ஆதவன்…. உலகத்தின் “கால மலர்” ஒன்று உதிர்ந்து விழும் நிலையில் உருமாறிக் கொண்டிருந்தது.

ஆதவன் அலுவலகப் பணிகளை முடித்துக்கொண்டு ஆயாசத்துடன் திரும்பிக் கொண்டிருந்தான். அவன் அமைதியான சூழலில் இருந்தான் என்று சொல்ல முடியாது. அவனுடைய அகத்தின் பிரதிபலிப்புகள் அத்தனையும் முகத்தின்கண் முத்திரைகளாய்ப் பதிந்து அதனை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. ஆம்; ஏதோ சிந்தனையில் மூழ்கி, இன்னுயிர் இழந்த ஒரு சடலம் இயங்குவது போன்று நடந்து வந்து கொண்டிருந்தான்.

“பிரச்சினைகளின் மொத்தக் கூட்டுருவமே மனிதன்” என்று கூறினார் ஒரு மேலை நாட்டறிஞர். மனித வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படலாம்; அது இயற்கை… ஆயின்: “பிரச்சினைகளே மனிதன்” என்று ஆகி விடலாமா? ஆதவன் இப்போது பிரச்சினைகளின் ஒட்டு மொத்தக் கூட்டுருவம் என்று ஆகி விட்டானா?

ஆம்; அப்படித்தான்… உலகத்திற்கு விடிவு ஆதவனின் உதயம். இது அடிப்படை தவறாமல் அன்றாடம் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. ஆதவன் தன் வாழ்க்கையில் ஒரு விடிவு காண விழைந்து தோற்றுப் போய் விட்டான். விடிவே காண முடியாது என்றதொரு முடிவுக்கு வந்து விதிர்ந்துப் போன நிலையில் தான் நடந்து வந்து கொண்டிருந்தான்.

ஆதவனுக்கு அப்படி என்னதான் பிரச்சினை…..? நிச்சயமாக அலுவலகத்துப் பிரச்சினையாக இருக்க முடியாது. ஆமாம்; அது எப்படி அவ்வளவு திட்டவட்டம்?

“கருமமே கண்ணாயினார்” என்று கூறும் சான்றோர்களின் நெறி முறைக்கு ஓர் இலக்கணமே ஆதவன்தான்..உடன் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் ஒரு முகமாகப் போற்றும் கடமை வீரனாகத் திகழ்பவன்; அலுவலகத்தின் முன் மாதிரியே ஆதவன்தான்.

ஆதவனின் அமைதியில்லா மனக் குழப்பத்துக்குக் காரணம் குடும்பத்தின் அமைதிப் பிரச்சினையில் தொடங்கிய பொருளாதாரப் பிரச்சினையாகும்.

ஆதவன் வரவு செலவுக் கணக்கு எழுதுகின்ற வழக்கம் உள்ளவன். ஆகவே, இன்று வந்து மறைந்த மாதத்தின் வரவு செலவுக் கணக்கை ஒருமுகப்படுத்தி, வந்தமைந்து நிற்கும் மாதத்தின் “உத்தேசக் கணக்கினையும்” இன்றைக்கே எழுதித் தீர வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டே வந்தான்.

அத்தகைய சிந்தனையினுடே ஆதவனின் உள்ளத்துக்குள் ஒரு “சுழிவு” வந்து நிழலாடியது. தீர்த்த பிறகல்லவா தீர்வுக் கணக்கு எழுத வேண்டும்? என்று சிந்தனையின் கீறல்களாய்த் தோன்றிய போது, சிக்கல்களாய் நெளிந்து வந்து சிரம் நெறிக்கும் தன்மையதாகிய கடன் தொல்லைகளைச் சமாளிக்கவும், வந்தமைந்து நிற்கின்ற மாதத்தின் குடும்பச் செலவுகளை “ஜீரணிக்கவும்” ஆன, வரவு செலவுத் திட்டம் (பட்ஜெட்) ஒன்றை மனத்துக்குள் போட்டுக் குழப்பிக் கொண்டு நடந்து கொண்டிருந்தான்.

”மனக் கணக்கின் மன்னன்” என்று மற்றவர்கள் போற்றும் ஆதவன் தன் மனத்துக்குள்ளேயே “பட்ஜெட்” ஒன்றை உருவாக்கிக் கொண்டும், உருவகித்துக் கொண்டும் இருந்ததனால் உணர்ச்சியற்ற ஒரு பிம்பம் போலத் தன் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தான்.

எப்படியோ ஆதவன் வழக்கம் போல் வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டான். அவன் வீட்டிற்குள் வந்து நுழைந்தபோது, வானொலியில் “மணிக் குவியல்” என்னும் நிகழ்ச்சித் தொடரில், “சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்; நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்; அழுது கொண்டே சிரிக்கின்றேன்” என்ற பாடல் ஒலியேறிக் கொண்டிருந்தது.

வானொலியும் சமயா சமயங்களில் மனத்தின் எழுச்சிகளைப் புலப்படுத்தும் “அசரீரியாய்” விளங்கி ஒலிக்கின்றது. இவ்வாறு ஆதவனின் உள்ளத்தில் ஓர் “உடன் நிகழ்வாகத் “தோன்றி மறைந்த சிந்தனைக் கருத்தை ஆதவன் நமட்டுச் சிரிப்பாகத் தனக்குள் சிரித்துக் கொண்டு, அந்த அசரீரியை அங்கீகரித்துக் கொண்டான்.

எப்போதும் போல் உடனே குளித்து, இறைவழிபாடு மேற்கொண்டு விட்டு, அமைதிச் சூழலாகப் பால்கனி முற்றத்தில் அமர்ந்து இதுகாறும் மனத்துக்குள் செரிமாணித்துக் கொண்டு வந்த வரவு செலவுக் கணக்குகளை ஏட்டில் வடித்துக் கொண்டிருந்தான்.

அப்போதைய அமைதிச் சூழலில் ஆதவனுடைய உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து உதித்து மலர்ந்த வாழ்க்கைத் தொடர்புகளின் வரைமுறையாக அமைந்த காட்சிகள் மனக்கண் முன் எழிலாடத் தொடங்கி விட்டன…

செம்பவாங் பகுதியில் வாழ்ந்து வந்த எத்தனையெத்தனையோ ஏழைக் குடும்பங்களில் ஆதவனின் தந்தை ஆறுமுகத்தின் குடும்பமும் ஒன்று.ஆறுமுகம் படிப்பறிவில்லாப் பாமரர்… அவர்தம் மனைவியும் அவரைப் போன்றே அமைந்த ஒரு கைநாட்டுப் பேர்வழி…அவர் பெயர் தெய்வானை.

ஆறுமுகம் நகர சுத்தித் தொழிலாளராகப் பணி புரிந்தார். அப்போதெல்லாம் வீட்டுக்கு ஒருவர் என்ற விகிதாச் சாரத்தில் கூட வேலை கிடைப்பது அரிது. ஆகவே, அவர்தம் மனைவி தெய்வானை பல வீடுகளில் துணி துவைத்துக் கொடுத்தும், பத்துப் பாத்திரம் தேய்த்துக் கொடுத்தும் குறைந்த பட்ச அளவிலான வருவாய் தேடிக் கொண்டு வருவார்.

ஆறுமுகமும் தெய்வானையும் ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பத்தைந்தாம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டு தம்பதியராய் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஏழைத் தம்பதியர்க்கு ஏக புதல்வனாய்ப் பிறந்தவன் தான் ஆதவன்.ஆறுமுகம் தம்பதியினர் ஒரு வங்காளியின் வீட்டில் “குடக் கூலிக்குக்” குடியிருந்து வந்தனர். வாடகை வீடு என்றாலே பிரச்சினைதான். அதிலும் ஒரு பெரிய வீட்டில் பல குடும்பங்கள் வாடகைக்கு வாழ்ந்து வருவதென்றால் சச்சரவுகள் தோன்றாமல் இருக்குமா? ஆதவன் பிறந்த அதிர்ஷ்டமோ என்னவோ “பார்ட்டான்” தெருவில் ஓலைக் குடிசையொன்றை வாங்கும் வாய்ப்பு ஆறுமுகம் குடும்பத்தினர்க்கு வாய்த்தது.

எலி வளையாக இருந்தாலும் தன் வளையாக இருப்பது தான் நல்லது என்ற உள்ளுணர்வு ஆறுமுகத்துக்கு எப்போதும் இருந்து வந்தது. அத்தாப்பு வீடுதான். அத்துக்கூலிக்கு வேலை செய்யும் ஏழைகளுக்கு அது ஒரு பெரிய காரியம்தான். அரும்பெரும் அஞ்சாமை தான் ஒரு மனிதனுக்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. அந்தத் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்தது தான் ஆறுமுகத்தின் வாழ்க்கை உயர்வு..

ஆறுமுகம் துணிந்து அந்த அத்தாப்பு வீட்டை வாங்கினார்; பாதிக்குப் பாதி கடன் என்ற நிலையில் தான். வயிற்றைக் கட்டி வாயைக் கட்டிக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேகரித்துக் கடனை அடைத்து விடலாம் என்று தெய்வானையும் ஊக்கமூட்டவே ஆறுமுகம் துணிந்து நின்று வாங்கினார். அன்றைய நிலையில் அந்த ஏழைத் தம்பதியர்கட்கு அது ஓர் இமாலயச் சாதனை என்று கூடத் தோன்றியிருக்கலாம். ஆறுமுகம் “கவர்ன்மெண்ட்”வேலை முடிந்த பிறகு, தோட்டவேலை செய்வது, காடி கழுவுவது போன்ற மிகை நேரப் பணிகள் செய்து உழைத்துக் கொண்டு கடனைத் தீர்க்கப் பாடுபட்டு வந்தார். உழைப்பினால் உயர்வு காணத் துடித்தார் ஆறுமுகம்.

ஆதவன் பள்ளிக்குப் போகும் பருவம் வந்தது. ‘பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை: மகனைப் படிக்க வைத்தே ஆக வேண்டும்” என்று ஆறுமுகமும் தெய்வானையும் தங்களுக்குள் ஓர் அறைகூவலே விடுத்துக் கொண்டனர். ஆதவனும் படிப்பில் ஆதவனாகவே” பரிணமித்து வளர்ந்தான்.

மனித வாழ்க்கையில் எது எப்போது எப்படி நடைபெறும் என்று இன்று வரை எந்தத் தீர்க்கதரிசியும் கணித்துச் சொன்னதில்லை. இந்த நிலையில் எதனையும் வரையறுத்துக் கூற முடியாது.

ஆதவனுக்கு இப்போது இருபது வயது ஆகி விட்டது. பள்ளித் தேர்விலும் சரி; கல்வியமைச்சுத் தேர்விலும் சரி… ஆதவன் தடுக்கி விழாமல் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டே வந்ததனால் இருபது வயது நிறைவில் பல்கலைக் கழகப் புகுமுகத் தேர்வு எழுதிக் கொண்டிருந்தான்.ஒரு சில தேர்வுகள் இன்னும் எழுத வேண்டியிருந்தன. அந்த நேரம் பார்த்துத் தான் அது நடக்க வேண்டுமா? ஆறுமுகம் ஒரு சாலை விபத்துக்குள்ளாகி அகால மரணமுற்றார். தெய்வானை அதிர்ந்து போய் விட்டார். ஆதவனுக்கு அண்ட சராசரங்களும் ஒருங்கே சுழல்வது போன்றதொரு மாயத் தோற்றம் மயக்க நிலை.. துக்கம் விசாரிக்க வந்த ஆசிரியர்கள் ஆறுதல் கூறியதோடு, மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு எஞ்சியிருந்த தேர்வுகளையும் எழுதி விடுமாறு அடிக்கடி ஆர்வமூட்டிக் கொண்டிருந்தனர். ஆதவனல்லவா? விதிப்பயனை நொந்து கொண்டு, ஆசிரியர்களின் அறிவுரைகளைத் தலைமேற் கொண்டு, கணப்போதில் புதிதாகத் திகழ்ந்து தன்னுடைய கவலைகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு, எல்லாத் தேர்வுகளையும் இயல்பாகவே எழுதி முடித்தான்…

காலத்தின் கரைசலில் நாட்களும், மாதங்களும் கனிந்து மறைந்தன. தேர்வு முடிவுகள் கல்வியமைச்சிலிருந்து வெளிவந்த போது ஆதவன் வெற்றித் திருமகனாகத் திகழ்ந்து விளங்கினான். தெய்வானைக்கு எல்லையற்ற மகிழ்ச்சி… ஆதவனுக்கு உள்ளுக்குள் ஓர் ஆதங்கம்…. இந்த அளவுக்குச் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டாமே என்று எண்ணிச் சோர்ந்தான். ஆதவனின் இந்த மனோநிலைக்குக் காரணம் என்ன?

பல்கலைக் கழகத்துக்குச் சென்று படிக்கும் அளவு தனக்கு வசதியில்லாக் குறையை எண்ணி வருந்தினான். தெய்வானை தெரிந்தவர்கள் சிலரின் ஆலோசனைகளைப் பெற்று நிரந்தரமான “கவர்ன்மெண்ட்” உத்தியோகம் பெற்றாள்.ஆறுமுகம் பார்த்த அதே வேலை; வீட்டமைப்பில் ஒருவருக்கு வேலை என்று, மனுச்செய்து வெற்றி பெற்று வேலையில் சேர்ந்து விட்டார்.

தெய்வானை தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்து விட்டார். தன் உயிரைப் பணயம் வைத்தேனும் தன் மகனைப் பட்டதாரியாக்கி மகிழ வேண்டும்; தன் வேண்டும்; தன் கணவரின் அபிலாசைகளை நிறைவேற்றுதன் மூலம் அவருடைய ஆன்மாவுக்கு ‘ஆத்ம சாந்தி” அளிக்க வேண்டும் என்று. சத்தியமும் சபதமும் செய்து கொண்டு விட்டார்.

ஆதவன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், தெய்வானை ஒரே பிடிவாதமாக இருந்து, ஆதவனைப் பல்கலைக் கழகத்தில் சேரும்படி செய்து விட்டார். தாய் மகன் தர்க்கவாதத்தில் தாய்மை தான் வென்றது.

இதற்கிடையில் ஆறுமுகத்தின் அகால மரணத்திற்கான இழப்பீட்டுத் தொகை வந்து சேர்ந்தது. இறைவன் ஏழைகளை ஒரேயடியாகச் சோதித்துவிட மாட்டான் என்பதற்கோர் எடுத்துக்காட்டு அது…

அத்தாப்புக் குடிலை வாங்கிய வகையில் அமைந்திருந்த கடன்: ஓரளவுக்குச் செப்பம் செய்து வைத்ததன் தொடர்பான செலவுக் கடன், ஆதவனின் படிப்புத் தொடர்பான கடன் என்றெல்லாம் ஆறுமுகம் விட்டுச் சென்ற கடன் தொல்லைகள் இழப்பீட்டுத் தொகையின் வரவால் தீர்ந்தன. இருந்து வந்த கடன் தொல்லைகளைத் தீர்ப்பதற்காகத் தான் இப்படிச் செத்து மடிந்தாரோ என்று கூட எண்ணிக் கொண்டு தெய்வானை கலங்கிச் சோர்ந்தார்.

புதுக்கடன் ஏற்படப் போவது பற்றி கவலையே படாமல் தன் மகன் பட்டதாரியாகி வந்துவிட வேண்டும். என்பதில் மட்டுமே கருத்தும் கவனமும் செலுத்தி வந்தார். நகர சுத்தித் தொழிலாளரும் நாட்டுக்கு ஒரு நற்குடி மகனை நல்லாண்மைக் கல்வியாளரை உருவாக்கி நல்க முடியும் என்பதற்குத் தெய்வானை ஓர் இலக்கணமாகத் திகழ்ந்தார்.

ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபத்தெட்டாம் ஆண்டு வரையிலும் ஆங்கிலேயர் தம் ஆதிக்கத்தில் இருந்து வந்த “நேவல்பேஸ்” என்னும் கப்பற்படை, “செம்பவாங் ஷிப்யார்ட்” என்னும் பெயரால், சிங்கப்பூர் அரசுக்கு உரியதாகித் தனியார் நிறுவனமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த காலக் கட்டம். உயர் பதவிகளெல்லாம் ஆங்கிலேயவருக்கே என்ற நிலை மாறிச் சிங்கப்பூர் தொழில் நுட்பக் கல்லூரியில் பயின்று, பட்டம் பெற்று வந்த பட்டதாரிகளுக்குக் கொடுக்கப்பட்டு வந்தது.

செம்பவாங் கப்பற் பட்டறையில் பொறியியல் துறை மேலாண்மை அதிகாரியாகப் பணிபுரியும் வாய்ப்பினை ஆதவன் பெற்று மகிழ்ந்தான். தெய்வானைக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இருப்பினும் ஒரே ஒரு கவலை. இந்தத் தனது பெருமகிழ்வினைப் பகிர்ந்து கொள்ளத் தன் கணவன் இப்போது உயிரோடு இல்லையே என்பதுதான். தெய்வானை தன்னுடைய ஆத்ம திருப்தியாகத் தன் கணவருக்கு சிறப்பு வழிபாட்டுக்குரிய எல்லாமும் செய்து, “நம் மகனை மனமார வாழ்த்துங்கள்” என்று மனத்துக்குள் நினைத்து வணங்கினாள். ஆதவனும் அந்த வழிபாட்டில் தன்னை மறந்த தார்மீகத்தோடு இயைந்து நின்றான்.

தெய்வானை “ஆறுமுகனை ” வேண்டிக் கொண்டு, தன் மகனை மாலையும் கழுத்துமாகப் பார்க்க ஆசைப்பட்டார்; அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

ஆதவன் அப்போது தான் முதன் முதலாகத் தன் தாயிடம் மறுப்பு தெரிவித்துப் பேசினான். தன்னைப் படிக்க வைப்பதற்காகப் பட்ட கடன், இடையிடையே வீட்டைச் செப்பனிடுவதற்காகப் பட்ட கடன் போன்றவைகளைத் தீர்த்த பிறகு, வீட்டையும் ஓரளவுக்குக் கூரை வீடாகவாவது கட்டி முடித்த பிறகு திருமண ஏற்பாட்டைச் செய்யலாம்… என்று ஆலோசனை கூறினான. தன்னுடைய ஆதங்கத்தை மகன் புரிந்து கொள்ளாமல் பேசுகின்றான் என்று தெய்வானை வருந்தினார். தாயின் மனப் புழுக்கத்தைப் பார்க்கச் சகிக்காதவனாய்த் திருமணத்துக்கு அரை குறை மனத்தோடு ஒப்புக் கொண்டு விட்டான். ஆதவனின் தந்தை ஆறுமுகத்தின் உறவு வழியில் அமைந்த மாதவி என்பாள் ஆதவனுக்குப் மணப் பெண்ணாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள். ஆதவன் மாதவி திருமணம் சீரும் சிறப்புமாக நிகழ்ந்தேறியது.

ஆதவனுக்குத் திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகியிருந்தன. அவன் சம்பாதிக்கத் தொடங்கி அதன் பயன் சேரும்போது அவன் தாய் தெய்வானை அகால மரணத்துக்குள்ளானாள் ஆதவன் அயர்ந்து சோர்ந்தான்.

வாழ்நாள் முழுமையும் வறுமை – உழைப்பு என்று வாட்டத்தோடு வாழ்ந்த தன்னுடைய தாயை மகிழ்ச்சி நிறைந்த சூழலில் பார்த்து மகிழ வேண்டும் என்று எண்ணிய போது அவர் இறந்து விட்டார். ஒரே ஒரு நாள் வயிற்று வலி, வாந்தி பேதியே தன் தாய்க்கு எமனாக வந்து சேரும் என்பது ஆதவன் எண்ணிப் பார்க்காத ஒன்று. மாதவி ஆதவனைத் தேற்றினாள்.

“பிறப்பென்றால் இறப்பு நிச்சயிக்கப்பட்ட ஒன்றுதான். என்றோ நிகழ வேண்டிய ஒன்று இன்றைக்கு நிகழ்ந்து விட்டது; இதற்குக் கலங்குவானேன்….?” என்று தத்துவார்த்த அடிப்படையில் மாதவி தன் கணவனுக்கு ஆறுதல் கூறி அமைதிப்படுத்தினாள். ஆதவன் வியந்து பார்த்தான். தனக்கு வாய்த்தவள் அறிவார்ந்த துணைவி, அன்பார்ந்த மனைவி என்று தனக்குள் தானே சிந்தித்துக் கொண்டு பெருமிதப்பட்டுக் கொண்டான்.

ஆதவனின் தாய் தெய்வானை இறந்து மூன்று மாதங்கள் முழுமையாக முடியவில்லை. மாதவியின் ‘தலையணைகள்’ மெதுவாக ஆதவனின் காதுகளில் ஒலிக்கவும் ஓதவும் தொடங்கின. ஆதவன் இதனை ஒரு நச்சரிப்பாகவே கருதினான். எனவே, வேண்டா வெறுப்பாகத்தான் சம்மதித்தான்.

கூரை வீட்டைக் கோபுரம் போல் உருவாக்கி அந்த மாளிகையில் மனமகிழ்ந்து வாழ வேண்டும் என்பதுதான் மாதவியின் விருப்பம். அதற்கான ஆரம்பப் பல்லவியைத் தொடங்கி, தொடர்ந்து பல அனுராக கீதங்களில் அன்றாடம் இசைத்துக் கொண்டிருந்தாள். ஆதவனுக்கும், தன் தொழில் தகுதிக்கேற்ப ஒளளவுக்குத் தரமாக வாழ வேண்டும் என்ற ஆதங்கம் இல்லாமல் இல்லை. ஆயின். தன்னுடைய பெற்றோர்கள் தங்களுடைய தகுதிக்கும் மேலான முயற்சியில் திளைத்து. தொடர்ந்து அவர்களைச் சூழ்ந்த பல்வேறு வகையான துன்பங்களின் கடமைகளின் மீட்சிக்காக அவர்கள் பெற்றிருந்த கடன் தொல்லைகளைத் தீர்த்த பிறகு, தன்னுடைய ஆதங்கத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். அதற்குள் அகலக்கால் வைத்து அல்லல் பட வேண்டாமே என்பதுதான் ஆதவனின் உள்ளக் கருத்து. ஆதவன் தன் உள்ளக் கிடைக்கையையும் ஒளிவு மறைவு இல்லாமல் தெள்ளத் தெளிவாகவே மாதவிக்கு எடுத்துச் சொன்னான்.

உலகில் சில பேருக்கு நினைத்த மாத்திரத்தில் குதிரை ஏற வேண்டும். என்ற அவசரம் தோன்றும். அந்த வகைப்பட்டவளாக ஆதவனின் மனைவி மாதவி இருக்கக் கூடுமோ? மாதவி பிடிவாதமாக இருந்தாள்.

ஆதவன் சிந்தித்துப் பார்த்தான். குடும்பத்தின் அமைதிச் சீர்குலைவுக்குத் தன்னுடைய “மறுப்பு’ ஒரு காரணமாகி விடக்கூடாது என்பதை எண்ணிப் பார்த்துக் கொண்டான். எப்படியும் சமாளித்துக் கொள்ளலாம் என்று மனத்துக்குள் “வேண்டா வெறுப்பை” வைத்துக் கொண்டு. ஏற்புடையை அமைப்பில் வீட்டை எடுத்துக் கட்ட ஒப்புக் கொண்டான்.

“வீட்டைக் கட்டிப் பார்; கல்யாணம் பண்ணிப் பார்” என்றொரு விளங்குமொழி காலம் காலமாக வழங்கி வரும் கருத்துக்களின் நுட்பத்தை ஆதவன் இப்போது தான் உய்த்து உணர்ந்தான்.

விரலுக்குத் தக்கதொரு வீக்கம் என்ற அமைப்பில் தான் வீட்டை எடுத்துக்கட்ட விருப்பம் கொண்டான். சம்மதித்தான்..ஆனால், மாதவியோ அழகுமணிமாளிகையின் அலங்காரத் திருவுருவாய் அமைந்திட வேண்டும் என்று ஆவல் கொண்டாள். இது ஓர் இலக்கிய விமர்சனம் ஆகிவிட்டது. எளிமையான நடையில் சொல்வதென்றால்; செம்பவாங் பகுதியில் பார்ட்டான் சாலையில் அமைந்துள்ள அண்மைக் காலத்தில் புதுப்பிக்கப் பெற்ற வீடுகளைக் காட்டிலும் தங்களின் வீடே தங்க மாளிகையாகத் திகழ வேண்டும். பார்ட்டான் சாலையில் மட்டுமல்ல; செம்பவாங் பகுதிக் கிராமப் புறச் சீரமைப்பு வீடுகளில் இதுபோன்ற எழில் மாளிகை எதுவும் இல்லை என்று எல்லோரும் வியக்கத்தக்க அளவு விரிவார்ந்த “வசந்த மாளிகையாக”த் தங்களின் வீடு விளங்க வேண்டும் என்று மனத்துக்குள் மாதவி ஒரு கோட்டை கட்டினாள். அப்படித்தான் செயல் வடிவம் பெற வேண்டும் என்ற ஆதங்கத்தில் விடாப் பிடியாக நின்றாள்.

ஆதவன் “இது மாதவிக்குத் தெரியாது” என்று கருதி, ஓர் உண்மையை எடுத்துச் சொன்னான். “மாதவி… நிலம் நமக்குச் சொந்தம் இல்லை; வாடகை நிலம்: கட்டப்படும் வீட்டின் மேற்கோப்பு மட்டுமே நமக்கு உரியது. நிலத்துக்குச் சொந்தக்காரரோ அல்லது அரசாங்கமோ நிலப் பற்றுமானம் செய்ய நேர்ந்தாலும் நேரலாம்; அப்போது நமக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று விளக்கம் சொன்னான். உடனே அவள். “அது எனக்கும் தெரியும். இப்போதைக்கு அப்படி ஒன்றும் நிகழ்ந்து விடாது; தைரியமாகச் செய்யலாம்” என்று சொல்லி,ஆதவனைத் திகைக்க வைத்து விட்டாள்.

அதே அந்த “பார்ட்டான்” சாலையில் ஆதவனின் தந்தை ஆறுமுகம் அத்தாப்பு வீட்டை வாங்கிக் கொண்டு குடியேறியதற்கு முன்னமே, அதே போன்றதொரு அத்தாப்பு வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்த இராமச் சந்திரன் குடும்பம் அக்கம் பக்கத்தார் என்ற வகையில் அறிமுகமாக. காலப்போக்கில் குடும்ப நண்பர்களாகவே பழகி வந்தார்கள்.

இராமச்சந்திரன் குடும்பத்தாருக்கும் ஒரே ஒரு மகன்தான்… அவன் பெயர் பழனிசாமி. ஆதவனைக் காட்டிலும் இரண்டு அல்லது மூன்று வயது மூத்தவனாக இருக்கலாம். பழனிசாமி செம்பவாங் பகுதியில் இயங்கி வந்த “வெஸ்ட் ஹில்” என்னும் ஆங்கிலத் தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டான். தொடக்கப் பள்ளிகளின் இறுதித் தேர்வு வெற்றிக்குப் பின் அதே சுற்றுச் சார்பில் அமைந்தொளிர்ந்த “நேவல்பேஸ்” உயர்நிலைப் பள்ளியின் முன் பின்னாகச் சேர்ந்து பயின்று வந்தனர்.

கல்வி வெற்றி என்பது பள்ளியில் இல்லை; கற்போரின் முயற்சிக்கேற்றாற் போல அமையும் என்பதுதான் தீர்க்க தரிசனம்… இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக பழனிசாமி, ஆதவனின் ஏற்றங்களைக் குறிக்கலாம். பழனிசாமி உயர்நிலைக் கல்வி இறுதித் தேர்வில் வெற்றி பெறாமல் கோட்டை விட்டு விட்டான். இதற்கு மூல காரணம் கெடு மதியாளர்களின் தொடர்பு. கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் போல் தேர்வின் தோல்விக்குப் பிறகு தான் புத்தி வந்தது. பழனிசாமி வேலை தேடி அலைந்த போது அவனுடைய கல்வித் தகுதிக்கு நகரச் சுத்திகரிப்புத் தொழிலாளர்களைக் கண்காணிக்கும் “சூப்பர் வைசர்” பதவி தான் கிடைக்கப் பெற்றான். தீய சகவாசத்திலிருந்து விடுபட்டு, செய்யும் தொழிலே தெய்வம் என்னும் அடிப்படையில் சிறந்து விளங்கித் திருந்தி வாழ்ந்தான்.

“இந்தத் தறுதலைக்கு யார் பெண் கொடுப்பார்கள்?” என்று பழனிசாமியின் தந்தை இராமச்சந்திரனே அவ்வப்போது தன் மனைவி கண்ணம்மாளிடம் சொல்லிச் சொல்லி அயர்ந்து போவார். “இவனுக்குன்னு எங்கோ ஒருத்தி பிறந்திருப்பாள். வந்து வாய்ப்பாள் கவலைப்படாதீங்க” என்று, கண்ணம்மாள் அடிக்கடி ஆறுதல் சொல்வாள்.

கண்ணம்மாளின் அருள்வாக்கு பலிதமாயிற்று. ஜாதகப்படி “செவ்வாய் தோஷம்” உள்ளவளாக இருந்த பரிமளாவுக்கு, செவ்வாய் தோஷம் உடைய மாப்பிள்ளையாகத் தேடிக் கொண்டிருந்தபோது, “செவ்வாய் தோஷம் நிறைந்த ஜாதகன் பழனிசாமிக்கும் இறைவன் திருவருளால் ‘மும்முடிச்சு” சடங்குகள் முறையே நடந்தேறின..

ஆதவன் அன்றாடம் வேலைக்குச் செல்லும்போது, அந்தப் பெண் பரிமளா வீட்டின் முகப்புப் பகுதியில் கோலம் போட்டுக் கொண்டிருப்பாள்; அல்லது துளசி மாடத்தைச் சுற்றிச் சுழன்று கொண்டிருப்பாள். அதிகாலைப் பொழுதில் மஞ்சள் குங்கும மலர் எழில் மங்களத்தோடு பரிமளாவை எதிர்கொள்வதைத் தன்னுடைய நற்சகுணமாக மனத்தில் பதித்துக் கொண்டு ஆதவன் நாளும் மகிழ்ந்து செல்வான்.

தந்தையின் காலந்தொட்டு தழைத்து வரும் நட்பல்லவா? போதாமைக்குப் பரிமளாவும் ஆதவனின் மனைவி மாதவியும் பள்ளித் தோழிகள் ஆவார்கள். அடிக்கடி என்றில்லாவிட்டாலும் அவ்வப்போது நிகழும் சந்திப்புகள் மங்கள நிகழ்வுகள் ஆகியவற்றின் மூலம் ஆதவன் நட்பையும் உறவையும் எப்போதும் போல் பாதுகாத்துக் கொண்டு வந்தான்.ஆதவனும் பரிமளாவும் அண்ணன் தங்கை உறவில் திளைத்திருப்பதைப் பழனிசாமி தெய்வீக உறவாகக் கருதி மகிழ்ந்தான்.

இராமச்சந்திரன் குடும்பத்தார் அத்தாப்புக் குடிசையைத் “தகர வீடு” என்ற அமைப்பில் மூன்றடி உயரத்துக் கற்சுவரும், மேற்பகுதிகள் அனைத்தும் பலகை அமைப்பிலும் தங்களின் பொருளாதாரத் தகுதிக்கேற்ப எளிமையாகவும் அழகாகவும் எடுத்துக் கட்டினார்கள். சம்பிரதாய பூர்வமான “பால் காய்ச்சுதல்” மட்டும் அடக்கத்தோடு நடைபெற்றது. அந்தப் புது மனை புகுவிழாவுக்கு ஆதவன் சென்றிருந்தான். குடும்பத்தார் அனைவரும் பெரு மகிழ்ச்சியோடு வரவேற்று மகிழ்ந்தனர்.

அப்போது தன் மருமகள் பரிமளாவைப் பற்றி இராமச்சந்திரனும் அவர் மனைவி கண்ணம்மாளும் வானளாவப் புகழ்ந்துரைக்கக் கேட்டு மகிழ்ந்தான். வேலைக்குப் போகா விட்டாலும் வீட்டில் இருந்த படியே தான் கற்ற கல்வியைப் பயன்படுத்தி மாணவர்களுக்குப் பிரத்தியேகக் கல்வி – டியூஷன்; கற்பிப்பதன் மூலமாகவும் பெண்களுக்கான ஆடைகளைத் தைத்துக் கொடுப்பதன் வழியாகவும் போதுமான அளவு வருவாய் பெற்றுத் திகழ்வதாகக் கூறினார்கள். எளிமையாகவும் இனிமையாகவும் வாழ்ந்து வரும் சிக்கன அடிப்படையைப் பற்றி அவர்கள் வெகுவாகப் புகழ்ந்தார்கள். வீட்டு வேலைகளையெல்லாம் பம்பரமாகச் சுழன்று அவளே செய்கிறாள் என்று கண்ணம்மாள் தன் மருமகளை மெச்சிக் கொண்டார்கள். இந்த வீட்டில் மருமகளாக மட்டும் இல்லாமல் எங்களுக்கு ஒரு மகளாகவும் விளங்கி வருகின்றாள் இந்த மகராசி என்று புகழ்ந்து கூறியபோது, ஆதவன். தனக்கு ஒரு தங்கை இருந்து அவளை அவள் புக்ககத்தார் இவ்வாறு புகழ்ந்தால் எத்தகைய பேருவகை எய்துவானோ அந்த வகை ஆத்மார்த்தத்தை அடைந்து கொண்டிருந்தான்.

ஆறு மாதங்களுக்குப் பின் ஆதவனின் அத்தாப்புக் குடில், செம்பவாங் பகுதிக் கிராமத்து மக்கள் வியந்து போற்றும் அழகுமணி மாளிகையாக விளங்கியது. அத்தனையும் மாதவியின் சிந்தனை; ஆடம்பரத்தின் தலை தூக்கல்…

மாதவிக்கு இப்போது ஓர் ஆசை. தங்களின் வீட்டுக் “கிரஹப் பிரவேசம்” என்னும் புது மனை புகுவிழா வட்டாரம் காணாத வண்ணம் வரலாற்றுச் சிறப்புடையதாக விளங்க வேண்டும் என்ற அமைப்பில் விரிவாகச் செய்து விட வேண்டும் என்ற அலாதியான மனப்போக்கு.

எளிமையாகவும் இனிமையாகவும் வாழ்ந்து பழக்கப்பட்ட ஆதவன் மாதவியின் இந்த ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் அமைந்தொளிரும் ஆரவார நிகழ்ச்சிக்கு மனம் இசைந்து ஒப்புக் கொள்ளாவிடில் குடும்பத்தில் “இராட்சதங்கள்’ தலை தூக்கி, அவமானம் நேர்ந்து விடாதிருக்கும் தன்மானத் தற்காப்பு முயற்சி தகைமைக்காகத் தலையை மட்டும் அவ்வப்போது ஆட்டிக் கொண்டான். அதனை ஆத்மார்த்த ரீதியில் அமைந்த அங்கீகரிப்பாக ஏற்றுக் கொண்டு மாதவி புதுமனை புகுவிழாவினை ஏக களேபரமாகக் கொண்டாடத் திட்டமிட்டுச் செயல்பட்டாள்.

இப்போது ஆதவனுக்கு இன்னொரு பேரிடியை மாதவி ஏற்படுத்தி வைத்தாள். கிரகப் பிரவேசத்தன்று இல்லத் தலைவனும் தலைவியும் பிறர் மதித்துப் போற்றும் அளவுக்குப் பட்டுப் புத்தாடையும் பரிணமிக்கும் வகையில் சில வைரப் பொன்னாபரணங்களும் அணிந்திருக்க வேண்டும்; இல்லையென்றால் இத்தனை முயற்சிகளும் வீணாகிப் போகும். கௌரவமே இருக்காது என்று அங்கலாய்த்தாள். இப்போது குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு விடுமே என்று அச்சம் மட்டும் அல்லாது, “ஊர் மெச்சல்” என்ற உன்மத்தம் இரண்டறக் கலந்து ஆதவனை அலைக்கழித்தது.

“முழுக்க நனைந்து விட்ட பிறகு முக்காடு தான் எதற்கு?” என்றொரு பழமொழி உண்டு. ஆதவன் அந்தப் பொன்மொழியை அர்த்த புஷ்டியோடு தன்னுள்ளச் சிந்தையில் அங்கீகரித்துக் கொண்டான். மாதவியின் அபிலாசைக்கு மனங்கனிந்து தலையாட்டுதலைத் தவிர ஆதவனுக்கு வேறு வழி ஏதும் புலப்படவில்லை.

ஆதவன் மாதவி தம்பதியினர் தம் புதுமனை புகுவிழா அதிகாலையில் சம்பிரதாயச் சடங்கு பூர்வமான நிகழ்ச்சியில் தொடங்கி, இரவில் ஏறக்குறை முன்னூறு பேர் கலந்து கொண்ட இறைச்சிப் பிரியாணி சகிதமான விருந்து நிகழ்ச்சியோடு இனிது நிறைவேறியது.

அன்று இரவு பத்து மணிக்கு மேலாகியிருக்கும். விழாக் களேபரங்கள் முடிந்த பின்னர் மாதவி மிகவும் குதூகலத்தோடு அன்பளிப்பாக வந்த பரிசுப் பொட்டலங்களை ஆவலோடும் ஆர்வத்தோடும் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆதவன் தனக்குரிய அறைக்குள் அமர்ந்து, இதுவரை வாங்கியுள்ள வட்டிக் கடன்களின் பட்டியலை எழுதிக் கொண்டு இருந்தான். மாதவி “மொய்ப்” பட்டியலை முடித்தாள்; ஆதவன் கடன் சுமைப் பட்டியலை முடித்தான். இருவருக்குமே தலை கனத்தது; மாதவிக்கு மகிழ்ச்சியால்… ஆதவனுக்கு கடன் சுமைக் கவலையா…

பெற்றோர்கள் விட்டுச் சென்ற கடன் தொல்லைகள் ஒரு பக்கம். பெரிது வந்து மனைவியின் பெரும் ஆடம்பரத்தால் விளைந்து மூண்ட கடன் சுமைகள் மற்றொரு பக்கம். எல்லாவற்றையும் எண்ணிப் பார்த்துக் கொண்ட போது ஆதவனுக்கு இலேசான தலைசுற்றல்…. இவற்றையெல்லாம் எப்படி நான் சமாளிக்கப் போகிறேன்? என்று ஆதங்கத்தோடு ஒவ்வொரு கடனையும் பற்றி சிந்தனை செய்து கொண்ட போது ஏதோ ஓர் அரூபம் வந்து தன் கழுத்தை நெறிப்பதாக உள்ளுணர்வுக்குள் தோன்றிய போது, இதயத்தின் அடித்தளத்தில் எங்கோ ஒரு மூலையில் “சுருக்” கென்று ஒரு வலி தோன்றியதை ஆதவன் மானசீகமாக உணர்ந்தான்.

மாதவி இப்போதும் மகிழ்ச்சிப் பிரளயத்தில் திளைத்துக் கொண்டிருந்தாள். ஆதவனுக்கு இலேசாக ஒரு மயக்கம்…. விரைந்து சென்று படுத்து விட்டான். மாதவி ஓடி வந்து காரணம் கேட்டாள் மிகவும் களைப்பாக இருக்கிறது என்று மட்டும் சொல்லிக் கொண்டான். மாதவி பரபரப்பாகத் தன் வேலைகளை முடித்துக் கொண்டு வந்து படுத்தாள்.

இருவருக்கும் தூக்கம் பிடிக்காமல் அந்தப் புதிய “டன்லப்” மெத்தையின் உந்துதலில் எம்பி எழும்பிப் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தனர். ஆமை புகுந்த வீடும் “அமீனா” நுழைந்த வீடும் உருப்படுவதில்லை… இது நமது பாரம்பரிய பண்பாட்டின் அடிப்படையில் அமைந்த தத்துவத்தை விளக்கும் வழக்காற்றுப் பழமொழியாகும். வட்டிக்குக் கடன் பெற்றார் வாழ்க்கையில் மீள்வதில்லை என்ற பேருண்மையை விளக்கும் தத்துவ அடிப்படையை உணர்த்தும் அமுத வாக்கின் பிரதிபலிப்பே அந்தப் பொன்மொழியாகும்.

ஆதவனின் மாதாந்திர வருமானம், அவன் குடும்பச் செலவுக்கும், நாணயம் தவறாத வட்டி செலுத்துதலுக்குமே அடிபட்டுக் கொண்டிருந்தது. இந்தச் சந்தர்ப்பங்களில் ஆதவன் அவ்வப்போது ஒன்றைத் தனக்குள் அசைபோட்டுக் கொண்டு இழைந்துவரும் இதழ்க் கடையோர “எள்ளல்” புன்னகையை எவருக்கும் தெரியாமல் மென்று விழுங்கிக் கொள்வான்.

ஏழை எளிய பாமரர்களுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்து உதவும் “வங்காளிகள்” தங்களின் வாடிக்கையாளர்களிடம் மலாய் மொழியில் சொல்லும் ஒரு சொற்றொடரைத் தான் ஆதவன் அவ்வப்போது சிந்தித்துக் கொள்வான்.

“பூங்கா” காசி, “பொக்கோ” தமோ சூசா… என்பது தான் அந்தப் “பூவராகன்” பொன்மொழியாகும். ஆதவன் அறிவு பூர்வமாகச் சிந்தித்துக் கொண்டு சிரித்துக் கொள்வான்.

அந்தப் பூவராகன் பொன்மொழியின் மொழியாக்கம் இதுதான்… “பூங்கா” என்பது பூ மலர் ‘வட்டி’ என்பதாகும். “பொக்கோ” என்பது மரம் தரு ‘கொள் முதல் கொடுத்த தொகை’ என்பதாகும். ஏழை…. எளியவர்களின் அவசரத் தேவைகளுக்கு “இருபது காசு” வட்டி விகிதத்தில் கொடுத்த வங்காளிகள், வட்டிகள் மட்டுமே பூக்களாக வந்து சேர வேண்டும்; கொள்முதல் என்பது என்றும் பூ மரமாக நிலைத்து நிற்க வேண்டும் என்னும் பொருளில் இப்படிக் கூறுவார்கள்.

ஆதவன் தன்னைத் தானே நொந்து கொண்டு கடன் தொகைகள் மரங்களாகக் கொழித்து நிற்க, அம்மரங்களின் எழிற் பூக்களாக மலரும் வட்டிகளை மட்டுமே செலுத்திக் கொண்டிருக்கும் தன்னுடைய பேதைமையைச் சிந்தித்துத் தனக்குள் தானே தன்னை வருத்திக் கொண்டிருந்தான்.

கற்றிருந்தும் கை நிறையச் சம்பாதித்தும் கடன் தொல்லைகள் குறையாமல் வட்டிகளுக்கே வருமானத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கும் தன்னுடைய வாழ்க்கை

அமைவுகளைப் பற்றி அவ்வப்போது நினைத்து ஆதவன் வருந்திக் கொள்வான்.

ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் ஓடி மறைந்து விட்டன… ன்னமும் “பொக்கோக்கள்” ஆடாமல் அசையாமல் தழைத்து நின்றன.. “பூங்காக்கள்’ மட்டுமே பறித்துக் கொடுத்துக் கொண்டிருக்கும் பரிதாபகரமான நிலையில் ஆதவன் சிக்குண்டு கிடைந்தான்.

ஆதவன் கெளரவம் கருதித் தன் நண்பர்கள் எவரிடமும் உதவி கேட்க விரும்பவில்லை. ஆதவனின் அன்றாடச் சோர்வு நடவடிக்கைகளை அணுக்கமாக நுனித்தறிந்து அவர்கள் தாங்களாகவே அழையாமல் முன்வந்து வட்டியில்லாக் கடன் அதாவது கைமாத்து அமைப்பில் கொடுத்துதவினார்கள். ஒரு சில ஆண்டுகளில் ஆதவன் தலைதூக்கத் தொடங்கி மகிழ்ந்தான்.

இந்த மகிழ்ச்சி ஒரு தற்காலிகச் சுமை இறக்கம் தான் என்று ஆதவன் உணர்ந்து கொள்ளத் தக்கதொரு காலக் கட்டம் நெரிந்து வந்து சூழ்ந்தது. ஆம்: ஆதவனின் நண்பர்கள் பெரும்பான்மையோர் அடுக்குமாடிக் கட்டிடங்களில் வீடுகள் கிடைக்கப்பெற்று விரைந்து கொண்டிருந்தனர்.

நண்பர்கள் உதவிக்கரம் நீட்டியபோது, “அடுக்குமாடிக் கட்டிட வீடு கிடைத்துப் போகும் போது கொடுத்து உதவினால் போதும்” என்றுதான் எடுத்து நீட்டினார்கள். இப்போது பெரும்பாலோருக்கு இல்லம் கிடைக்கப் பெறவே, ஆதவன் வேறு எதுவும் தோன்றாமல் மீண்டும் வட்டிக்குக் கடன் பெற்றே வாக்குறுதிகளைக் காப்பாற்றிக் கொண்டான்.

பட்ட காலிலே படும்: கெட்ட குடியே கெடும்… எத்தனையெத்தனை பட்டறிவார்ந்த பழமொழி… ஆதவனுக்கு இப்போது புதிய அதிர்ச்சி ஒன்று வந்து சேர்ந்தது. என்ன அது?

செம்பவாங் “நாட்டுப்புற” வீடுகள் அனைத்தும் எடுபடப் போகின்றன. புனர் அமைப்புக் குடியேற்றம் ‘ரீ செட்டில்மெண்ட்’ என்னும் அமைப்பில், அரசாங்கம் செம்பவாங் பகுதிகளை நிலப்பற்றுமானம் செய்து வரும் தொடக்க பூர்வத் தோராயப் பூர்வாங்கங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

ஆதவன் உள்ளபடியே அதிர்ந்து போனான். நடப்பது நடந்தே தீரும்; அதுதான் இயற்கையமைவு என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுடைய ஆதவன், காலச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு அடுக்குமாடி வீடொன்றைப் பதிந்து வந்தான்.

ஓரிரு ஆண்டுகள் மத்தாப்புகளின் எரிதழல் ஒளிப் பிரகாசம் போல் ஒளிர்ந்து ஓய்ந்து விட்டன. ஆதவனுக்கு, ஈசூன் புது நகரப் பொலிவின் அடுக்குமாடிக் கட்டிடத்தில் ஓர் இல்லம் கிடைக்கப் பெற்றது; ஐந்தறை வீடமைப்பு தான் அது.

அடுக்குமாடி வீடு கிடைக்கப் பெற்றதும் மாதவியின் மனத்தில் மீண்டும் “தன்னிகரற்ற தன்மை’ யொளிர் தருக்குமனப் போக்கு தலை தூக்கியது.

ஆதவன் தன் உழைப்பின் பயனாக அணிந்தொளிரும் சி.பி.எஃப் எனப்படும் மத்திய சேமநிதி இருப்பின் தொகையை முழுமையாகப் பயன்படுத்தியும் வீட்டை உரிமையாக்கிக் கொள்ள முடியவில்லை. எஞ்சியிருந்த தொகையை மாதாந்திரத் தவணையில் செலுத்துவதற்கு ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டான். அது மட்டும் தானா? வீட்டை அலங்கரிக்கும் பணிக்கு எந்தத் தொகையைப் பயன்படுத்துவது? ஆதவன் தர்மசங்கடத்துக்குள்ளாகித் தவித்தான்.

எப்போதும் போல் ஆதவனின் மனைவி எல்லாச் சுகபோக அமைப்புகளையும் எழிலுற வார்த்து விட வேண்டும் என்னும் துடிப்பில் இயங்கிக் கொண்டிருந்தாள். “இன்ஸ்டால் மென்ட் பேஸிஸ்” என்னும் ‘தவணைக்கடன்’ அமைப்பில் மாதவி தன் வீட்டை மாணுலகச் சொர்க்கம் போல் மாற்றியமைத்தாள். எளிமைக் கடன் தீர்வாம் இன்ஸ்டால்மெண்ட் ‘தவணைத் தீர்வு’ என்றாலும் ஆதவன் தானே செலுத்தித் தீர வேண்டும்.

ஆதவனுக்கு ஒரு நம்பிக்கைச் சுடரொளி ஆத்மார்த்தமாகத் துணிவைத் தந்து கொண்டிருந்தது. எடுபடப் போகும் தன் கிராமப்புற வீட்டுக்குக் கணிசமான அளவு இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் போது மனச்சுமையைக் குறைத்துக் கொள்ள முடியும். அல்லது நிவாரணம் காண முடியும் என்பதே… அந்த நம்பிக்கை…

செம்பவாங் வட்டாரத்திலேயே மிகவும் எடுப்பான ஒரு வீட்டைக் கட்டி, ஏறக்குறைய ஏழெட்டு ஆண்டுகள் ஆகியும் தீராக் கடன் தொல்லைகளுக்கு ஆளாகித் தவித்தாலும் கௌரவமாகவும் சுபிட்சமாகவும் வாழ்ந்து கொண்டிருந்த வீட்டைக் காலி செய்து கொண்டு, ஈசூன் தொகுதி அடுக்குமாடி வீட்டுக்குக் குடி புகுந்தது ஆதவனின் குடும்பம்.

ஆடம்பரப் பிரியையான தன் மனைவியின் ஆதங்கம் இப்போதும் கம்பளிப் பூச்சியின் உராய்வு போன்றதொரு நமைச்சலை ஏற்படுத்திக் கொண்டிருந்ததை எரிச்சலோடு உணர்ந்து வருந்தினான் ஆதவன். ஈசூன் புதுமனை புகு விழாவையும் இணையில்லாத அமைப்பில் எழிலுற நடத்துவதற்குத் துடித்தாள். இல்லறத்தில் கீறல்கள் விரிசல்கள் ஏற்பட்டு விட்டால் “உலகம்” பழிக்குமே என்பதில் மட்டுமே அக்கறை காட்டி இப்போதும் ஆதவன் தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மையானான். மாதவி ஏகபோகமாகத் “தாளித்துக்” கொண்ட அமைப்பில் தன்மன தன்மான உயர்வின் நிறைவு கொண்டாள்.

எங்கெல்லாம் கடன் வாங்க இயலுமோ அங்கெல்லாம் கடன் வாங்கியாயிற்று. மாதாந்திரம் கிடைக்கப் பெறும் வருமானம், வாழ்க்கைச் செலவுகளுக்கும், வட்டி கட்டுவதற்கும் ‘கிஸ்தி- ‘தவணைக் கடன் செலுத்துவதற்கும் சரியாக இருந்தது என்று கூறுவதை விடச் சரிக் கட்டுவதற்குச் சில்றையாகச் சிலரிடம் கடன் பெற்றுத் தீர வேண்டியிருந்தது. நாணயத்தைக் காப்பாற்றிக் கொள்ள ஆதவனுக்கு இதைத் தவிர வேறுவழி எதுவும் தோன்றவில்லை.

ஆதவனின் முன்னாளைய எடுபட்ட கிராமப்புற வீட்டுக்குக் கிடைத்த இழப்பீட்டுத் தொகை எதிர்பார்த்திருந்த இலக்குகளில் மூன்றில் ஒரு பங்கே கிடைக்கப் பெற்றது. காரணம் என்ன?

தன்னுடைய வீட்டின் வரிசைகளில் சாலையில் இருமருங்கிலும் அமைந்திருந்த வீடுகளுக்குக் கிடைத்த இழப்பீட்டுத் தொகையைக் காட்டிலும் தனக்குக் கிடைத்த தொகையில் சில ஆயிரங்கள் வித்தியாசம் இருப்பதைக் காரண காரியங்களோடு ஆதவன் சிந்தித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். மாதவியின் மனக் கொதிப்பு நச்சரிப்பால் ஆதவன் துணிந்து சென்று காரணம் கேட்டான். ஆதவனுக்குக் கிடைத்த அரசியலாரின் பதில் இதுதான். நிலத்தின் விஸ்தாரணத்துக்கும் மேற்கோப்பு அமைப்புகளுக்கு மட்டுமே இழப்பீடு, வீட்டின் உட்புறத்தில் அமைந்திருந்த பளிங்குக் கல் படாடோபத்துக்குப் “பணயம்” எதுவும் இல்லை. அத்துடன் பழ மரங்கள், பயிர்த் தொழில் அமைப்பு, கோழி வளர்ப்புக் கூண்டு, ஆகியவற்றுக்கெல்லாம் கடன் கணிப்புகள் உண்டு என்று விளக்கம் பொதிந்த கடிதமே வந்தது. மாதவி வாயடைத்துப் போய் நின்றாள்.

எல்லாம் முடிந்து விட்டது. இன்னமும் இருபதினாயிரம் அளவில் கடன் தொல்லைகள்… இயைந்து வந்து அடுக்குமாடிப் புதுவீட்டுத் தொடர்பான மாதாந்திரத் தவணைத் தீர்வு… மாதாந்திர வாழ்க்கைச் செலவுகள்…..

எத்தனைச் சாமார்த்தியமாகப் பட்டியல் இட்டுப் “பட்ஜெட்’ தீர்மானித்தாலும் வரவுக்கு மேலோங்கிய செலவினங்கள் இருப்பதை எண்ணிப் பார்த்துக் கொண்ட போது ஜீரணித்துக் கொள்ள முடியாத நிலையில்தான் ஆதவன் சோர்ந்து போய் வீடு திரும்பி வந்து அமைதியுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.

மனித வாழ்க்கை நிலைப்பாடும் உறுதிப்பாடும் கொண்டதல்ல என்பதற்கோர் கட்டியங்கூறுதலைப் போல். அமைந்தது ஆதவனின் உடல்நலக் குறைவு…. மிகவும் அமைதியாக வீடு வந்து சேர்ந்து, குளித்து இறைவழிபாடு முடித்துக்கொண்டு, மனக்கணக்கின் செறிமாணங்களை ஏட்டில் வடித்துக் கொண்டிருந்தபோது தான் ஆதவனுக்கு இருதய வலி ஏற்பட்டது. இதயத்தின் உந்துதல்தான் இருதய வலியா? எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்றுதான். ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டது. தோபாயோ மருத்துவமனையின் படுக்கையொன்றில் ஆதவன் மூர்ச்சையுற்றுப் படுத்துக் கிடந்தான். மாதவி அலறித் துடித்துக் கொண்டிருந்தாள்.

ஆதவன் தோபாயோ மருத்துவமனையில் “அட்மிட் ஆகி” ஏறக்குறைய ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்டது. ஆடம்பரப் பிரியை மாதவிக்கு இப்போது தான் “குடும்பச் சுமை” புரிந்தது. வாழ்க்கைச் செலவுகளுக்கு எப்படியோ சமாளித்துக் கொண்டு இல்லையென்று கூறாமல் கேட்ட போதெல்லாம் எடுத்து நீட்டிக் கொண்டிருந்த ஆதவன் இப்போது “ஆஸ்பத்திரியில்” நீட்டிப் படுத்திருந்தான்.

அன்று சனிக்கிழமை….. வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கி வருவதற்காக அக்கம் பக்கத்தில் கடன் பெற்றுக் கொண்டு, மாதவி சோகமே உருவாகச் சந்தைக்குச் சென்று கொண்டிருந்தாள். அங்கே மாதவியை அவளது பள்ளித் தோழி பரிமளா எதிர்கொண்டாள். மாதவியின் மனச் சோர்வைக் குறிப்பால் உணர்ந்துகொண்டு பரிமளா கனிவுடன் விசாரித்தாள். இதற்கு முன்னம் பல நாட்கள் பரிமளாவைப் பள்ளித் தோழி என்று கூட மதிக்காமல் பாராமுகமாக ஒப்புக்காக ஒரு “ஹலோ” சொல்லிக் கொண்டு நடந்து போய்விடும் மாதவி இன்று, நின்று பேசிக் கொண்டிருந்தாள்.

வாழ்க்கையில் துன்பத்தை எதிர்கொள்ளும்போது மனக்கனிவோடு விசாரிப்பவர்களிடம் சொல்லிக் கொள்வது என்பது ஒரு தற்காலிகச் சுமையிறக்கச் சுகமாக அமையக் கூடுமோ? ஆம். அப்படித்தான் இருக்க வேண்டும்.

நெடுந்தூரம் சுமந்து வரும் பெரும்பாரத்தைத் தோள் மாற்றித் துணை புரிய முடியும்: ஆனால் இதயத்துக் கனமான துன்பச் சுமையைத் தோள் மாற்றிக் கொள்ள முடியுமா? முடியாது. முடியவே முடியாது.

அத்தகைய முடிந்த முடிவுக்கு அறுதியிட்டுக் கொள்வது ஒரு தீர்க்கமானதாகாது. ஏன்? இதயத்தின் அடித்தளத்தை அழுத்திக் கொண்டிருக்கும் அந்தத் துன்பச் சுமையின் ஆதார பூர்வ அடிப்படைச் சுருதியைப் பொறுத்துத் தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

உறுதுணை நண்பர்கள் கை கொடுப்பதன் மூலம் அமையும் தோள் மாற்றும் தரத்து இதயச் சுமைகளும் இருக்கத் தான் செய்கின்றன. எடுத்துக்காட்டாக இப்போது நம் கண்முன் நிற்கும் மாதவியின் இதயச்சுமை என்பது பொருளாதாரத் தொடர்புடையது. உதவிக்கரம் நீட்டும் உள்ளம் இருந்தால் துன்பச் சுமையைத் தோள் மாற்றிக் கொள்ளும் தன்மையதாய்க் கொள்ளலாமே….

மாதவியும் பரிமளாவும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த பின் பிரிந்து சென்றார்கள். மாதவி மனச்சுமையின் இறக்கத்தை மானசீகமாக உணர்ந்தாள். நேரம் நகர்ந்த வேகத்தைப் பெருவிரைவுப் பயணத்தின் ?எம்.ஆர்.டியின் துரிதத்தோடு ஒப்பிட்டுக் கொள்ளலாம். அத்துணை விரைவாக அமைந்திருந்த இடைவெளிக் காலம் மணித் துளிகளாய் மறைந்து ஒளிர்ந்தன. தொடர் பணிகளில் தோய்ந்திருக்கும் போது காலத்தின் கரைசல் மிகு வேகத்தில் அமைந்து ஒளிரும். மாதவியின் இப்போதைய மனத்தின் சுமையிறக்கப் பரபரப்பில் மணித் தியாலங்கள் மணித் துளிகளாய் மறைந்தொளிந்தன.

மாலை நேரம்…ஐந்து மணி ஆகியிருக்கக் கூடும். மாதவி பரபரப்பாகத் தன்னுடைய ஆதங்கப் பணிகளை முடித்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில் “காலிங் பெல்” அலறியது. மாதவி வேண்டா வெறுப்பாகத் தான் நுண் தொலைப் பார்வைக் கண்ணாடியின் வழி யாரென்று பார்த்தாள். அற்புதப் பூரிப்பில் திளைத்துக் கொண்டே மாதவி கதவைத் திறந்தாள் என்று கூறலாம்.

பரிமளா வீட்டிற்குள் நுழைந்து வந்து நின்று கொண்டு, நானும் அண்ணனைப் பார்க்க வருகின்றேன்; போகலாமா? என்று கேட்டுக் கொண்டு நின்றாள். மாதவி அலைக்கழிந்து போனாள். உபசரிப்பதா? உடன் விரைந்து போவதா? பரிமளா தன் தோழி மாதவியைச் சமாதானப் படுத்தியதால் இருவரும் மருத்துவ மனைக்குப் பயணமானார்கள்.

ஆதவன் அபாயக்கட்ட நிலையிலிருந்து மீண்டு அமைதியாகச் சுய நினைவோடு படுத்துக் கொண்டிருந்தான். மாதவியும் பரிமளாவும் வந்தபோது ஆதவன் எழுந்து அமர்ந்தான்.

பரிமளா இருகரங் குவித்து வணக்கம் கூறிப் புன்னகை பொதிந்த முகத்தோடு தன்னருகில் வந்து நின்று நலம் விசாரித்தது, மஹாலெட்சுமியே தன்னை நோக்கி தனக்கு அருள் புரிய வந்து விட்டது போன்றதோர் உள்ளுணர்வைப் பெற்றான் ஆதவன்…

இன்று காலை பசாரில் தற்செயலாக மாதவியைச் சந்திக்க நேர்ந்த போது தான் விபரம் தெரிந்ததாகவும் பார்க்க வந்ததாகவும் பரிமளா சொல்லிக் கொண்டு உடல் நலம் பற்றி விசாரித்து அறிந்தாள். ஆதவன் தான் நலமாக இருப்பது பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான்.

சற்று நேரத்திற்கெல்லாம் இராமச்சந்திரன், கண்ணம்மாள், பழனிசாமி ஆகியோர் வந்து சூழ்ந்தனர். ஆதவன் படுக்கையை விட்டு எழுந்து நின்று வரவேற்றான். குடும்பத் தலைவன் என்ற முறையில் இராமச்சந்திரன் உடல் நலம் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார்.

அதன்பிறகு இராமச்சந்திரன் உரிமையோடு ஆதவனைக் கடிந்து கொண்டார். “என் மருமகள் பரிமளா சொல்லித்தான் எனக்குத் தெரிய வந்தது. பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்வது மனிதப் பண்பு: இது உனக்குத் தெரியாதா தம்பி….? நாங்கள் ஏழைகள் தாம்; பாமரர்கள் தாம்… ஆயினும் எங்களாலும் உதவ முடியும். ஒரு வார்த்தை கேட்டிருக்கக் கூடாதா?” என்ற அமைப்பில் அவரது கடிந்துரை அமைந்தது. ஆதவன் இதழ்க் கடையோரப் புன்னகையை மட்டும் பதிலாக்கிக் கொண்டிருந்தான்.

ஏறத்தாழ இருபத்தையாயிரம் வெள்ளிக் கடன்தானே… இதற்காகக் கவலைப்பட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்வானேன். வட்டிக் கடன் என்றால் தீராதுதான். எங்களின் உதவியை ஏற்றுக் கொண்டு முதலில் வட்டிக் கடனைத் தீர்த்துவிடு… பிறகு மாதாந்திரம் உனது வருவாயில் பாதியைக் கடன் தீர்வாகக் கொண்டால் இரண்டே வருடத்தில் தீர்த்துவிடலாம்; இதற்காகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்காதே; தைரியமாக இரு….” என்று, தன் குடும்பத்தின் சார்பில் பரிந்துரைத்துப் பேசினான்.

அமைதிப் புன்னகை மிளிரும் முகத்தோடு அனைவரையும் பார்த்துக் கொண்டான். ஆதவனின் விழிகள் நன்றிப் பெருக்கோடு தங்கை பரிமளாவின் தங்க முகத்தைப் பார்க்கத் தவறவே இல்லை. அந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆதவன் தன் மனைவி மாதவியையும் பார்த்தான்; அந்தப் பார்வையில் தான் எத்தனையெத்தனை அர்த்தங்கள் பொதிந்து மிளிர்ந்தன; மாதவி வெட்கித் தலைகுனிந்தாள்.

இருள் கிழித்து இவ்வுலகுக்கு விடிவைத் தந்து கொண்டிருந்தான் ஆதவன்… இன்றைய விடியலில் தன்னுடடைய வாழ்க்கையிலும் ஒரு விடிவு தோன்றி விட்ட மகிழ்ச்சியோடு ஆதவன் தோபாயோ மருத்துவ மனையிலிருந்து விடுபட்டுத் தெம்போடு வாடகை வண்டியில் ஏறி வீடு நோக்கி விரைந்து கொண்டிருந்தான்.

ஆதவன் தன் வீட்டுக்குள் நுழைந்தபோது இராமச்சந்திரன் குடும்பத்தார் அனைவரும் எழுந்து வந்து வரவேற்றனர். இதயத்தின் அடித்தளத்திலிருந்து ஊறிச் சுரக்கும் இதயப் பசுமை கலந்த நன்றிப் பெருக்கோடு கரம் குவித்தான்.

மாதவி பரிமளாவைப் பின்பற்றி மாணிக்கமாகத் திகழ்ந்தாள். இல்லறத்தை நல்லறமாகக் கண்டு ஆதவன் மகிழ்ந்தான். எதற்கும் ஒரு “விடியல்” எப்போதாவது நிகழ்ந்தே தீரும் என்பதுதான் உலகியலின் தீர்க்க தரிசனம் ஆகும்.

– கற்பனை மலர்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: டிசம்பர் 1995, தமிழவேள் நாடக மன்றம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *