கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 14, 2023
பார்வையிட்டோர்: 2,630 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

[நிலவின் ஒளி விழும் ஜன்னல் ஓரத்தில், மேஜை அருகில் பிரபா உட்கார்ந்து கதை எழுதிக்கொண்டிருக்கிறாள். அவளது வனப்பு அந்த நிலவில் அபூர்வமாய் இருக்கிறது. அவளுடைய கணவன் அப்பொழுதுதான் நண்பர்களுடன் ஆங்கிலப்படம் ஒன்றுக்குப் போய்விட்டு, உள்ளே வருகிறான்.]

ராமசந்திரன்: ஹல்லோ, பிரபா! இன்னும் தூங்கலையா நீ ? இதென்ன ஓயாமல் எழுத்து?

பிரபா: (புன்னகையுடன்) என்ன எழுத்தா? இப்பொழுது சொல்ல முடியாது,ஸார்!

ராம: (அவள் அருகில் சென்று உட்கார்ந்து) நமக்குக் கல்யாணம் நடந்து எத்தனை மாதங்கள் ஆகின்றன? சொல்லட்டுமா பிரபா? மார்ச், ஏப்ரல்,மே…

பிரபா: கொஞ்சம் பேசாமல் இருங்களேன்; இதை முடித்துவிடுகிறேன்.

ராம: (அவளுடைய முகத்தைப் பரிவுடன் திருப்புகிறான்) மே மாதம் அல்லவா இப்பொழுது? வசந்த ருது தானே? என்ன பேசமாட்டேன் என்கிறாய்? என் மனத்தின் தாபம் தெரியாமல் நீ ஏதோ எழுத ஆரம்பித்துவிடுகிறாயே!

பிரபா: (சிரித்துக்கொண்டே அவனிடமிருந்து முகத்தைத் திருப்பிக்கொள்கிறாள்.) கொஞ்சம் இருங்கள். கதை உடனே எழுதி அனுப்பும்படி ஆசிரியர் எழுதியிருக்கிறார். இன்னும் இரண்டு மணியில் முடிந்துவிடும். பிறகு பேசிக்கொள்ளலாமே?

ராம: ‘ கதை, ‘கதை’ என்று கதைக்கத்தான் தெரியும் உனக்கு. உன் கதைப்பில் மயங்கித்தானே நான் திண்டாடுறேன். இன்றைக்குப் படம் ரொம்ப ஜோர். மணியின் மனைவிகூட வந்திருந்தாள். ‘கதை எழுதுகிற பித்துக் குளியைப் போய்ப் பிடித்தாயேடா’ என்று கேலி செய்தாள். நீ வராமல் எனக்கு என்னவோபோல் இருந்தது.

[பிரபா பதில் பேசாமல் எழுதிக்கொண்டிருக்கிறாள்.]

ராம: (வேடிக்கையாக அவள் பேனாவைப் பிடுங்கிக் கொள்கிறான்) நீ என்னுடன் சரியாகப் பேசினால்தான் பேனாவைத் தரமுடியும். இல்லாவிட்டால் முடியாது.

பிரபா: பேசாமல் இருக்கிறேனா? எழுதும்போது தொந்தரவு செய்யாதீர்கள். கதை வேண்டுமென்று அவர் கேட்டிருக்கும்போது தாமதப்படுத்துவது மரியாதையா?

ராம: (கொஞ்சலாக) உன்னைப்போல் அழகான மனைவி அவருக்குக் கிடைத்திருந்தால், ஆசிரியர் உத்தியோகம் செய்யமுடியாது, தெரியுமா? உலகத்தில் எதையும் கவனிக்காமல் அவளையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்து விடுவார்.

[அவன் பேசிக்கொண்டிருக்கும்போது, பேனாவை விரல் இடுக்கிலிருந்து பிரபா எடுத்துக்கொள்கிறாள். பிறகு சிரித்து விட்டு, எழுத ஆரம்பிக்கிறாள்.]

ராம: (சற்றுக் கோபமாக) நான் ஆபீஸிலிருந்து வரும்போதெல்லாம், ‘கதை, கதை! எழுத்து, எழுத்து!!’ கொஞ்ச நேரமாவது உல்லாசமாக இருக்க முடிவதில்லை. தூ!

பிரபா: ஏன் கோபித்துக்கொள்கிறீர்கள்? கல்யாணம் ஆவதற்குமுன் என்னிடம் என்ன சொன்னீர்கள்? ‘உன் கதைகளைப் பத்திரிகைகளில் படித்து மயங்கிவிட்டேன்’ என்று சொன்னீர்களே. நான் மட்டும் அதைக்கேட்டு மயங்கிவிடவில்லை. ‘கதை எழுதும்போது தொந்தரவு பண்ணக்கூடாது’ என்று வாக்குறுதி வேறு வாங்கியிருக்கிறேன்….ஹும்… தெரியுமா?

ராம: தெரியும், தெரியும், பிரபா! நீ பார்வைக்கு இளங்கொடியைப்போல் மிருதுவாக இருந்தாலும் உன் மனதுமட்டும் கல்லைவிடக் கடினமாக இருக்கிறது.எப்பொழுதுமே வெளி அழகைக் கண்டு மயங்கக்கூடாது.

பிரபா: (சிரித்துக்கொண்டே) அதைத்தான் நானும் சொல்கிறேன். ‘பிரபா நீ அழகு: நீ சிரித்தால் நான் மெய் மறந்துபோய்விடுகிறேன்’ என்று நீங்கள் சொல்லக் கூடாது. என்னிடத்தில் என்ன நல்ல குணங்கள் இருக்கின்றன என்று தெளியவேண்டும்.

ராம: (கேலியாக) புருஷனை மகிழ்விக்காமல் ஊரில் நல்ல பேர் எடுத்து என்ன லாபம்? உன்னைப் போற்ற வேண்டியவன் நான்தானே?

பிரபா: என்னை நீங்கள் நன்றாக அறியவில்லை. தேனின் சுவையைச் சிறிது சிறிதாகச் சுவைக்காமல் தேன் பாத்திரத்தில் விழும் ஈயைப்போல்…

ராம: (கோபத்துடன்) உன் அழகில் நான் ஒன்றும் மயங்கிவிடவில்லை. பெண்களுக்கே கொஞ்சம் தெரிந்தவுடன் கர்வம் ஏற்பட்டுவிடுகிறது.

பிரபா: (கண் கலங்க) பெண்கள் மட்டும் புருஷர்கள் கையில் அகப்பட்ட பொம்மைகளா? நீங்கள் வேலை செய்யும்போது எங்கள்…ஏன் ஒன்றும் அறியாத சிசுவின் அழுகையைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாமல் கோபப்படுகிறீர்களே!

(ராமசந்திரன் வெறுப்புடன் நிலவைப் பார்த்தவாறு உட் கார்ந்திருக்கிறரன்.)

ராம: கல்யாணம் நடந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. ஒரு நாளாவது நீ என்னுடன் சிரித்துப் பேசியிருக்கிறாயா? சொல்.

பிரபா: நினைத்தவுடன் ஒரு வேலை முடியாவிட்டால் வாழ்க்கை பூராவும் ஏமாந்துவிட்டதாக ஏன் கற்பித்துக் கொள்கிறீர்கள்? விவாகமான இரண்டு தினங்களுக்கெல்லாம் மைசூர் போகவில்லையா? காவிரியில் படகில் எத்தனை களிப்பாகச் சென்றோம்? மறந்துவிட்டதா?

ராம: ஆமாம்; படகிலும் கற்பனையையும் கதையையும் பற்றித்தான் பேச்சு.

பிரபா: (புன்சிரிப்போடு) உங்களுக்கு என்னைக்கண்டு மயங்கத் தெரிகிறதே தவிர என் கருத்துக்களைக் கண்டு மயங்கத் தெரியவில்லை.

ராம: (படபடப்புடன்) நாளை முதற்கொண்டு என் உத்தரவு இல்லாமல் நீ எந்தப் பத்திரிகைக்கும் கதை எழுதக் கூடாது. என் ஆனந்தம் குறைவது அவர்களுக்குத் தெரியுமா?

பிரபா: நாளையிலிருந்துதானே? இப்பொழுது இல்லையே? அடக்குமுறை பிரமாதமாக இருக்கிறதே!

ராம: உண்மையாகத்தான், பிரபா,கேலியல்ல. இனிமேல் உன் இஷ்டப்படி நடக்க உன்னை நான் விடப் போவதில்லை.

[கையிலிருந்த பேனாவைப் பிடுங்கிக்கொண்டு, விளக்கை அணைக்கப்போகிறான்.]

பிரபா: (கெஞ்சும் குரலில்) வேண்டாம். சினிமாப் பார்த்துவிட்டு வந்த வேகமா இது? அப்புறம் நானும் வருகிறேன். ரண்டு பேருமாக நடிக்கலாம்.

ராம: (பதற்றத்துடன்) நான் சொல்லச் சொல்லத் தைரியமா உனக்கு? (கதை எழுதிய தாள்களைக் கிழித்துப் போடுகிறான்)

[பிரபா கண்ணீர் வழியப் படுக்கையில் வழியப் படுக்கையில் போய்ப் படுத்துக் கொள்கிறாள். ஒரே மெளனம். எங்கிருந்தோ ரேடியோவில் நல்ல சங்கீதம் கேட்கிறது. மாலையில் ராமசந்திரன் வாங்கி வந்த மல்லிகைப் பூவின் மணம் ‘கம்’ மென்று வீசுகிறது.]

ராம: (அறையில் உலாவிக்கொண்டே) சொன்னால் கேட்பதில்லை. உடம்பு இளைத்துத் துரும்பாய்ப் போகிறது. சதா மூளைக்கு வேலை கொடுத்து நாசஞ் செய்துகொள்ளுகிறாள், உடம்பை

[நிலவின் வெளிச்சம், கண்ணீர் வழியும் பிரபாவின் முகத்தில் விழுகிறது. தாம்பூலத்தால் சிவந்த உதடுகள் துக்கம் தாங்காமல் துடிக்கின்றன.]

ராம: (கட்டில் அருகில் சென்று குனிந்து) பிரபா! உன்னை நான் என்ன செய்தேன்? என் விரல்கூட உன் மேல் படவில்லையே. ஏன் இப்படி அழுகிறாய்?

[மௌனம்]

ராம: என்னைப் பாரேன். முதல் முதலில் உன்னைப் பார்த்த அன்றையிலிருந்தே என் வாழ்க்கையை உன்னைத் தவிர வேறு யாராலும் பிரகாசிக்க வைக்கமுடியாது என்று தீர்மானித்துவிட்டேன். பேச மாட்டாயா?

பிரபா: விளக்கைத் திரைபோட்டு மறைக்கீறீர்களே. பிரகாசம் எங்கிருந்து உண்டாகும்?

ராம: நான் என்ன செய்தேன்?

பிரபா: (நீர்வழியும் கண்களால் அவனை ஏறிட்டுப் பார்க்கிறாள்.) பசுவை விட்டுக் கன்றைப் பிரிப்பதுபோல் நான்…

ராம: (அவளுடைய கையைப் பிடித்து) பசுவை விட்டுக் கன்றையா? உண்மையாகவா, பிரபா? இன்னும் எத்தனை மாதத்தில் உனக்குப் ‘பரிசு’ கிடைக்கப் போகிறது?

பிரபா: (கைகளை விடுவித்துக் கொண்டு) போங்கள்; உங்களைப்போல் நான் கண்டதே இல்லை. நான் ஒன்று சொன்னால், நீங்கள் ஒன்று சொல்வது? என் கதை எனக்குக் குழந்தையைப்போலத்தானே?

ராம்: இதுதானா! வேறு என்னவோ நினைத்தேன்.

பிரபா: கற்பனை திடீரென்று வந்து விடுமா? அது கோவையாக வரும்போது தடுக்கீறீர்களே? (மறுபடியும் வருத்தத்தில் ஆழ்ந்துவிடுகிறாள்.)

ராம: என்னை நீதான் சீர்திருத்த வேண்டும். நான் தேனைப் பருகி மயங்கும் வண்டின் நிலையை ஒத்தவன். தேனீயைப்போல், நிதான புத்தியுடன் சேகரித்து உண்ணும் திறமை வண்டுக்கு இல்லை.

பிரபா: கொஞ்சம் நிதான புத்தியுடன், தீர்க்க திருஷ்டியும் வேண்டும்.

ராம: அதை நீதான் அபகரித்துக் கொண்டு விட்டாய், கள்ளீ ! என்னை நிலைகொள்ளாமல் இருக்கச் செய்பவள் நீதானே?

பிரபா: ஆனால் சரி; நிலை கொள்ளுகிறவரைக்கும் என் எதிரில் வராதீர்கள். நான் அடுத்த அறைக்குள் போகிறேன். (போகிறாள்.)

ராம: (அவள் பின்னால் சென்று) பிரபா ! உன் களை இந்த வீடு பூராவும் நிரம்பியிருக்கும்போது, நீ எந்த அறைக்குள் போனால் என்ன? என் கண்முன் உன் சுந்தர ரூபமே மின்னுகிறது, அன்பே!

பிரபா : கதை எழுத என்னை விடமாட்டீர்களா?

ராம : வேண்டியவரையில் எழுது. உன் புகழ் என்னுடைய புகழ்தான். உன்னைப்பற்றி வெளியார் புகழும்போது, என் உள்ளம் ஆனந்த வெறி கொள்ளுகிறது. எழுதுவதை நான் வேண்டாம் என்பேனா?

பிரபா: நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்.

[அறைக்கு வெளியே பன்னீர் இலைகளின் நடுவில் கூடு கட்டி வாழும் மைனா ஜோடிகளைக் காண்பிக்கிறான். பிரபா பேனாவை மூடி வைத்துவிட்டுத் தலைகுனிந்து நிற்கிறாள்.]

ராம: பிரபா! என்மேல் கோபமா? கற்பனைக்கு நான் தடங்கலா? அடுத்த அறைக்குள் போய் விடவா?

பிரபா: (வெட்கத்துடன்) வேண்டாம்.

ராம: கதை எழுத வேண்டாமா?

பிரபா : நாளைக்கு நீங்கள் ஆபீசுக்குப் போன பிறகு எழுதுகிறேன். வெளியில் கிடைக்கும் புகழுக்காக உங்கள் மனத்தில் குருத்துவிட்டுச் செழிக்கும் அன்பைக் கிள்ளிவிட நான் இனி முயலமாட்டேன்.

ராம: பிரபா! (ஆவலுடன் அவளது முகத்தைப் பார்க்கிறான்.)

பிரபா: (சிவந்த முகத்துடன்) ஆம், இந்த விலைமதிக்க முடியாத அன்பின்முன் நான் வாதாடுவது தகுதியல்ல. ஒழிந்த வேளையில் என் காரியத்தைச் செய்துகொள்கிறேன். உங்கள் மனத்தை நோக வைத்ததற்காக என்னை மன்னிக்கவேண்டும்.(நமஸ்கரிக்கிறாள்.)

ராம: (அன்புடன்) நிலவு வீணாகி விடும். மன்னிப்பை ஏற்றுக்கொள்ள நேரமில்லை. வா, போகலாம்.

[பன்னீர் மரத்தில் மைனாக்கள் இரண்டும் கிளையிலிருந்து கூட்டுக்குள் செல்வதை இருவரும் பார்த்துவிட்டுப் புன்னகை புரிந்துகொள்கிறார்கள்.]

– நவராத்திரிப் பரிசு, முதற் பதிப்பு: 1947 , கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *