பூச்செடிக்குள் பூத்த பூ

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 16, 2024
பார்வையிட்டோர்: 11,531 
 
 

காலையில் இருவரும் விரைவாக காட்டை நோக்கி புறப்பட்டுக்கொண்டிருந்தார்கள். பொடி நடையாக சென்று இருவரும் பூத்தோட்டத்தில் மல்லிகைப்பூக்களை பறித்துக் கொண்டிருந்தனர். ஏழு மணி ஆகிவிட்டது தோட்டத்துக்காரர் அனைவரையும் அழைத்தார்!

“வாங்கம்மா வாங்க! போதும் பூ பறிச்சது! சந்தைக்கு போகணும்! சீக்கிரம் வாங்கம்மா! இன்னைக்கு ஒரு கிலோ பூ 35 ரூபாய் வாங்க! பூவை எடுத்துட்டு சந்தைக்கு போகணும் வாங்கம்மா!

“இந்தா வந்துட்டோம் ணே”

“பார்வதி 5 கிலோ எழுதிக்கோடா தம்பி”

“மல்லிகா 3 கிலோ “

“ராசாத்தி அம்மா 6 கிலோ “

“கருப்பு 1 கிலோ” என்று அனைவருக்கும் பூவின் எடை போட்டு தோட்டத்துக்காரர் பணத்தை கொடுத்தார்.

அடுத்த வேலையாக பார்வதி களை எடுக்க தொடங்கினாள். மல்லிகா பள்ளிக்கு கிளம்பி விட்டாள்.

“அம்மா போயிட்டு வரேன் பள்ளிக்கூடத்துக்கு”

“சரிடி பாத்து பத்திரமா போயிட்டு வா”

பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டாள் மல்லிகா.

பார்வதி ஓர் கைம்பெண். கணவன் இல்லாமல் காலம் தள்ளுவது, இந்த காலத்தில் ரொம்ப கஷ்டம். வயித்து பொழப்புக்கு பூ பறிப்பாள், களை எடுப்பாள். இந்த வேலை பார்த்து தான் மல்லிகாவை படிக்க போட்டு அவளுக்கு நகை சேர்த்து கட்டிக் கொடுத்து கரை ஏத்தணும். சொந்த பந்தம் யாரும் இல்ல. ஒன்னே ஒன்னு! கண்ணே கண்ணு! ஒரே பொண்ணு மல்லிகா தான்! பழனி மலைக்கு பக்கத்துல கன்னிவாடி என்ற ஒரு கிராமம். அங்க பார்வதி தம்பி ஆடு மேய்க்கிறான். மல்லிகாவின் மீது நல்ல பாசத்துடன் இருப்பான்.அவனோட வயித்துக்கு போக அக்களுக்கு கொஞ்சம் கொடுத்து உதவுவான்.

களை எடுக்குற இடத்துல போன வாரம் பழனியம்மா மகளுக்கு நடந்த சடங்க பற்றி ஒரே பேச்சு.

“என்னக்கா சடங்கு நல்லபடியா முடிஞ்சிருச்சா?”

“ஆமக்கா நல்லபடியா முடிஞ்சிருச்சு! சடங்கு முடிஞ்ச உடனே என் மகளுக்கு பரிசத்த போட்டாச்சு! பொம்பள பிள்ளைகளை கால காலத்தில் கட்டி கொடுத்தா தான்! நமக்கு நிம்மதியா இருக்கும்.

குடிக்கிற கஞ்சி கூட்டுல சேரும்! பொம்பள பிள்ளைகளை வீட்டில வச்சுக்கிட்டு இருக்குறது. வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு இருக்காப்ல இருக்கு”

“அதுவும் சரிதான் க்கா”

களை எடுத்துக்கொண்டு பேச்சைக் கேட்டுக் கொண்டே கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் பார்வதி.

மல்லிகா பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். இன்னும் வயதுக்கே வரவில்லை . அவளுடைய சோட்டு பெண்கள் சிலர் வயதிற்கு வந்துவிட்டனர். அவர்களுக்கு திருமணமும் நிச்சயிக்கப்பட்டு விட்டது. பார்வதிக்கு ஒரே கவலை மல்லிகாவை பற்றியே இருந்தது. கோயிலுக்கு சென்றால் கூட மல்லிகா சீக்கிரம் பூக்கவேண்டும் என்றுதான் சாமி கும்பிடுவாள்.

மதியம் 2 மணி ஆனது எல்லோரும் ஆல மரத்து நிழலில் உட்கார்ந்து சாப்பிட தொடங்கினார்கள். கஞ்சிக்கு மிளகாய் வத்தலை கடித்துக் கொண்டு பார்வதி சாப்பிட்டு முடித்தாள். சிறிது நேரம் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சூரியன் மெல்ல மறையத் தொடங்கியது. பொழுது சாய்ந்தது. அனைவரும் வீட்டை நோக்கி படையெடுத்தனர் .

பார்வதி வீட்டுக்குச்சென்று சமைக்க தொடங்கினாள். வீட்டுப்பாடத்தை மல்லிகா எழுதிக் கொண்டிருந்தாள் .இரவானது இருவரும் வாசலில்

உட்கார்ந்து சாப்பிட்டு முடித்தார்கள். மண்ணெண்ணய் விளக்கு எரிந்து கொண்டிருந்தது .இருவரும் அயர்ந்து தூங்கி விட்டார்கள்.

அதிகாலை வேளை சேவல் கூவியது. காகங்கள் இரை தேடி சென்று கொண்டிருந்தன. பார்வதி எழுந்து சாணம் தெளித்து கோலம் போட்டு வீட்டு வேலைகளை முடித்துவிட்டு மல்லிகாவே எழுப்பினாள்.

“மல்லிகா எந்திரி டி மணி அஞ்சு ஆச்சு தோட்டத்துக்கு போகனும்”

“சரிம்மா”

என்று சொல்லி விட்டு எழுந்து முகத்தை கழுவிய பின்பு வீட்டிற்குள் வந்து வழக்கம் போல காலண்டரில் தேதியை கிழித்தாள். அன்று சித்திரை 10 ம் தேதி சித்திரை பௌர்ணமி என்று போடப்பட்டிருந்தது.

இருவரும் தோட்டத்திற்குச் சென்று பூப்பறித்துக் கொண்டிருந்தனர். திடீரென மல்லிகாவிற்கு வயிற்று வலி ஏற்பட்டது. எல்லா பெண்களும் கூடினார்கள். ராசாத்தி பாட்டி மல்லிகாவின் இடுப்பில் கை வைத்து தொட்டு பார்த்தார். அவள் இடுப்பில் உள்ள துணியில் சில அறிகுறிகள் தெரிந்தது. முகத்தில் ஒரே சிரிப்பு பாட்டிக்கு…….

“என்னாச்சு பாட்டி சொல்லுங்க”

“மல்லிகா சடங்காயிருக்காடி”

என்று சொன்னவுடன் பார்வதிக்கு அளவு கடந்த சந்தோசத்தோடு ஆனந்த கண்ணீர் வந்தது…

மல்லிகாவை பார்வதி வீட்டிற்கு அழைத்துச் சென்று வீட்டின் மூலையில் அமர வைத்திருந்தாள்.

மறுநாள் காலையில் செய்தி கேட்டு தாய்மாமன் காணியாளன் பச்சைமட்டை தென்னை ஓலையுடன் குச்சில் கட்ட வீட்டின் வெளியே வந்து நின்றான்!…

தம்பியை பார்த்து பார்வதியின் முகத்தில் ஒரே சிரிப்பு…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *