கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 3, 2023
பார்வையிட்டோர்: 2,349 
 

(1989 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரவு எட்டு மணியிருக்கும். சாப்பாட்டு மேசையில் இடியப்பம் சாப்பிட்டுக் கொண்டிருந்த கந்தையாபிள்ளை தலையை நிமிர்த்தி ‘தம்பி’ என்றார்.

அவர் ‘தம்பி’ என்றது அவரது மகன் ஒரே ஒரு செல்வ மகன் தமிழ்வேந்தனை. அவனும் அவருடன் கூட இருந்து இடியப்பம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

தமிழ்வேந்தன் தலை நிமிர்ந்து தகப்பனாரைப் பார்த்தான். பார்வையில் ‘என்ன?” என்ற விசாரிப்புத் தெரிந்தது.

‘தம்பி, உனக்கு அருட்செல்வத்தாரின் மகளைத் தெரியுந் தானே?’ என்று கேட்டார் கந்தையாபிள்ளை.

தமிழ்செல்வன் ஒரு நிமிஷம் நிதானித்து, அருட்செல்வரின் மகள் சுடர்விழியைத் தன் மனத்திலே இருத்தினான். அவன் மனத்துள் புகுந்த சுடர்விழி. மெல்லத் தலையைச் சரித்து ஓரக் கண்ணால் அவனைப் பார்த்து அழகாகச் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் கிறங்கிப் போன தமிழ்செல்வன் சற்றே மௌனிக்க-

அவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த கந்தையாபிள்ளை, என்ன தம்பி, அந்தப் பெண்ணை உனக்குத் தெரியாதா?’ என்று மீண்டும் கேட்டார்.

வாயில் அசைத்த உணவை விழுங்கிவிட்டு தமிழ்ச்செல்வன் ‘சுடர் விழிதானே? நன்றாகத் தெரியுமப்பா!’ என்றான்.

‘நல்ல வடிவும், குணமும், அறிவுமுள்ள பெண். அருட்செல்வருக்கு ஒரே மகள். அவருடைய சொத்து முழுவதும் அவளுக்குத் தான்!’

தமிழ்ச் செல்வனுக்கு விஷயம் விளங்கிவிட்டது. அவனுடைய உள்ளத்தில் ஒரு கிளுகிளுப்பு. ‘ஓ! கடர்விழி எனக்கா!’ ஏதோ வானத்தில் உயர்வது போன்ற ஒரு உணர்வில் திளைத்த அவன், அதைக் காட்டிக் கொள்ளாமல், ‘என்ன விஷயமப்பா?’ என்று சிரித்தான். அசட்டுச் சிரிப்பு!

கந்தையாபிள்ளை சொன்னார்: ‘அருட்செல்வத்தார் அந்தப் பெண்ணுக்கு உன்னைக் கேட்டிருக்கிறார். சாதகப் பொருத்தம் நன்றாக அமைந்திருக்கிறது… பட்டணத்தில் அவருக்கு ஒரு வீடு இருக்கிறது. மாதம் எழுநூறு ரூபா வாடகைக்குக் கொடுத்திருக்கிறாரென்று கேள்வி. அடைவு கடையிலும் லட்சக் கணக்கில் முதல் போட்டிருக்கிறார்…. அந்தப் பெண்ணை ஆருக்குத்தான் பிடிக்காமல் போகும்? இருந்தாலும் உன்னை ஒரு சொல் கேட்டுவிட்டு முற்றுச் சொல்வதாகச் சொல்லியிருக்கிறேன்.

கந்தையாபிள்ளை சொல்லிக் கொண்டே போக, இங்கே தமிழ்செல்வனின் இதயம் முழுவதும் சுடர்விழி நிறைந்து போனாள். அவன் மிகவும் நல்ல. அப்பாவுக்கு அடங்கிய பிள்ளையாகப் பதில் சொன்னான். ‘என்னை என்ன கேட்கிறீர்கள் அப்பா? நீங்கள் பார்த்து எல்லாம் திருப்தியென்றால் சரிதான்!’

கந்தையாபிள்ளைக்கு நிம்மதி. அருட்செல்வரின் பட்டணத்து வீடும், சில லட்சங்களும் இப்போதே தங்கள் வீட்டுக்கு வந்து விட்டதுபோலக் குதூகலிததார். ஆனாலும், ‘சே, பணம் மட்டும் தானா? அந்தப் பெண்ணைத் தேடியும் பிடிக்க இயலாது’ என்றும் நினைத்துக் கொண்டார்.

கந்தையாபிள்ளை அரச உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றவர். அவருடைய ஒரே மகன் தமிழ்ச் செல்வன் ஒரு பட்டதாரி. ஆனாலும் அவன் அரச உத்தியோகம் தேடிக் கொண்டிராமல், குடும்ப நண்பர் ஒருவரின் தொழிலகத்தில் நர்வாகியாகக் கடமையாற்றுகிறான். அரசாங்கத்தில் கிடைக்கக் கூடியதை விட இங்கே சற்று அதிகமாகவே வருமானம் கிடைக்கிறது. சுடர்விழிக்கு ஏற்ற தோற்றமும் அறிவும் அமைந்தவன்தான் தமிழ்ச்செல்வன்.

யாழ்ப்பாணத்தில் இருந்து சுமார் பத்து மைல் தூரத்திலுள்ள பொன்னாலையில் வீடு இருக்கிறது. இது பொன்னாலை கிழக்கில். அருட்செல்வரின் வீடு பொன்னாலை மேற்கில் வீட்டோடு அடைவுகடையும் உண்டு. இரண்டு வீடுகளுக்குமிடையில் தூரம் கூட இல்லை. இதனால் சிறுவயதிலிருந்தே சுடர் விழியைத் தமிழ்ச்செல்வன் அறிவான்.

***

1955ம் ஆண்டு சித்திரை மாதம்.

ஒரு நாள் இரவு பத்து மணியிருக்கும். பொன்னாலைக் கிராமம் அமைதியாக உறங்கத் தொடங்கியிருந்தது. அருட்செல்வர் படுக்கையில் கிடந்தபடியே ஏதோ யோசித்துக் கொண்டிருந்தார். அப்படியே அயருகிற நேரம்.

‘ஐயா! ஐயா!’ என்று யாரோ வெளியே கூப்பிடுகிற மாதிரிக் கேட்டது. அருட்செல்வர் எழும்பி ‘லைட்’டைப் போட்டார். யாராயிருக்கும் இந்த நேரத்தில்?’ என்று யோசித்த படி எழுந்து முன் ஹோலுக்கு வந்தார். ஊரில் கள்ளர் பயம் இருக்கிறது. ஆட்களைத் தெரியாமல் படலையைத் திறக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டே ஹோல் லைட்டைப் போட்டார். முன் பக்க யன்னலில் ஒரு தலை தெரிந்த மாதிரியிருந்தது.

ஓ! படலை பூட்டியிருக்கிறது. யாரோ மதிலால் ஏறி வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது’

ஆரது?’ என்ற அவர் குரல் தொண்டையை விட்டு வெளியே வரவில்லை. அதற்குள்.

‘டேய்! எங்கே பார்க்கிறாய் ? சத்தம் போட்டால் அந்த நிமிஷமே நீ பிணம்!’ குரல் வலது பக்கச் சுவர் யன்னலிலிருந்து வந்தது.

அருட்செல்வர் குரல் வந்த பக்கம் திரும்பினார். அங்கே,

யன்னலூடாக ஒரு நீண்ட துப்பாக்கி அவரைக் குறிபார்த்து நின்றது. என்ன செய்வது என்று அவர் யோசிப்பதற்கிடையில்,

“டேய்! சத்தம் போடாமல் முன் கதவைத் திற… என்ன நிற்கிறாய்? கெதியாய் ‘ என்று ஒரு கட்டளை இடது பக்கச் சுவர் யன்னலிலிருந்து வந்தது.

அருட்செல்வர் இடது பக்கம் திரும்பினார். அங்கேயும் ஒரு துப்பாக்கி அவரைக் குறிபார்த்து நீண்டிருந்தது.

என்ன செய்வது, ஏது செய்வது என்று தெரியாமல் திகைத்த நிலையிலும் அருட்செல்வர் முன் கதவை நோக்கி நடந்தார். இப்போது முன் பக்க யன்னலுக் கூடாகவும் ஒரு துப்பாக்கி தம்மைக் குறிபார்த்து நிற்பதைக் கண்டார்.

‘பெரியவர். நாங்கள் சொல்கிற மாதிரிச் சத்தம் போடாமல் கதவைத் திறந்தால் உங்களை ஒன்றும் செய்ய மாட்டோம். சொன்னது கேட்காவிட்டால் பூட்டைச் சுட்டுக் கதவைத் திறப்போம். பிறகு நீரும் உம்முடைய மகளும் உயிரோடு இருக்க இயலாது!’ என்று முன்பக்க யன்னலில் நின்றவன் சற்றே ‘தன்மை’யாகச் சொன்னான்.

என்ன செய்கிறேனென்ற உணர்வில்லாமலே அருட்செல்வர் கதவைத் திறந்தார். தட தடவென்று பத்துப் பதினைந்து பேர் அவரைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள்!

கதவைச் சாத்தினார்கள்.

முன் பக்க விளக்குகளை அணைத்தார்கள்.

‘உள்ளே போடா!’ என்று அருட்செல்வருக்கு ஒரு கட்டளை பிறந்தது.

அருட்செல்வர் மெதுவாக உள்ளே போனார். இதற்கிடையில் இரண்டு பேர் மட்டும் அவருடன் நிற்க, மற்றவர்கள் வீட்டிற்குள் ஓடினார்கள். தொடர்ந்து எல்லா அறைகளிலும் விளக்குகள் எரிந்தன.

‘ஐயோ….அப்பா….’ என்ற சுடர்விழியின் குரல் ஓங்கி எழுந்து பின்பு மெல்லத் தணிந்தது.

‘தங்கச்சி! சத்தம் போட வேண்டாம். சத்தம் போட்டால் உன்னையும் கொப்பரையும் சுட்டுத் தள்ளி விடுவோம். சத்தம் போடாமல் பேசாமலிருந்தால் ஒருவரையும் ஒன்றும் செய்ய மாட்டோம். நீ இந்த அறைக்குள்ளேயே இரு. வெளியில் வரவேண்டாம். கதவை வெளியில் பூட்டப் போகிறோம். பயப்படாதே. கொப்பரை ஒன்றும் செய்ய மாட்டோம். ஆனால் சத்தம் பேட்டாயோ…நடக்கிறது வேறை…’ இப்படி யாரோ ஒருவன் சொல்வது கேட்டது.

அருட்செல்வருக்குப் பக்கத்தில் நின்ற ஒருவன் அவரைப் பார்த்து, ‘திறப்பை எடுத்து இரும்புப் பெட்டியைத் திற!’ என்றான்.

அருட்செல்வர் வாய் திறந்து பேசாமலே, தாம் அப்படி செய்ய மாட்டேன் என்பது போல நிமிர்ந்து பார்த்தார்.

என்னடா பார்க்கிறாய்?’ என்ற அவன், துப்பாக்கியைத் திருப்பி அதன் அடிப்பாகத்தால் அருட்செல்வரின் தோள்மூட்டில் இடித்தான்.

‘அம்மா…’ என்று அருட்செல்வர் துடித்துப் போனார்.

பக்கத்தில் நின்ற மற்றவன், அடித்தவனின் துப்பாக்கியைத் தள்ளி ‘நீ கொஞ்சம் சும்மா இரு’ என்று அவனை ஒதுக்கி விட்டு, ‘பெரியவர், அவன் ஏதோ அந்தரத்தில் அடித்துப் போட்டான். மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்றான். தொடர்ந்து, ” ஐயா நாங்கள் ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எங்களுடைய கக வாழ்வையும் உயிரையும் கூடப் பொருட்படுத்தாமல் இந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆயுதங்கள் வாங்க எங்களுக்குப் பெருந்தொகையாகப் பணம் தேவைப் படுகிறது. எங்களுடைய சொந்தத் தேவைக்காக நாங்கள் உங்களிடம் கொள்ளையடிக்க வரவில்லை. விடுதலைப் போராட்டத்துக்குப் பணம் தேவைப் படுகிறது. பணம் வைத்திருக்கிற எங்கள் மக்களிடம் அதை எப்படியாவது எடுத்துக் கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை!’ என்று ஒரு சிறிய சொற்பொழிவே நடத்தினான்.

‘தம்பி, நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன். நீங்கள் என்னிடமிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் இரும்புப் பெட்டியில் இருக்கிற நகை முழுவதும் ஊரவர்களுடையது. நம்பிக்கைச் சொத்து. அவைகளை விட்டு விடுங்கள்.’

‘சரி, சரி இரும்புப் பெட்டியைத் திற முதலில்!’ இது முதலாமவன். விவாதத்துக்கு அங்கே இடமில்லை.

அருட்செல்வர் திறப்புகளை எடுத்து வந்து இரும்புப் பெட்டியைத் திறந்தார். இரண்டு பேர் அவரோடு நிற்க. வேறு இரண்டு பேர் இரும்புப் பெட்டியுள் இருந்த எல்லா வற்றையும் ஒரு சாக்கில் எடுத்துப் போட்டார்கள்.

தம்மோடு சற்றே பண்போடு பேசியவனைப் பார்த்து, ‘தம்பி, ஊரவரின் நகைகள்…’ என்று இழுத்தார் அருட்செல்வர்.

ஐயா, உங்களிடம் மட்டும் எடுப்பது நியாயமில்லை. ஊரவர்கள் எல்லாருமே எங்கள் விடுதலைப் போருக்கு உதவியதாக இருக்கட்டும். நீங்கள் அவர்களுக்கு ஒன்றும் திருப்பிக் கொடுக்க வேண்டாம்’ என்று ‘பண்பான’ பதில் வந்தது.

நகைகளையும் பணத்தையும் மூட்டை கட்டியதும், அருட்செல்வரை ஒரு அறையினுள் தள்ளிப் பூட்டினார்கள்.

‘விடியும் வரை ஒரு சத்தமும் போடக் கூடாது. எங்களில் ஒரு ஆள் இங்கே நிற்பான். சத்தம் கேட்டதோ…அவ்வளவு தான்’ என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து அவர்கள் வெளியேறும் சத்தம் அருட்செல்வருக்குக் கேட்டது!

***

‘எல்லாம் முடிந்து விட்டது! என்னை ஏன் உயிரோடு விட்டார்கள்? என்னையும் கொன்றிருக்கலாம்…அடைவு வைத்த அத்தனை பேருக்கும் நான் எப்படி மறுமொழி சொல்லப் போகிறேன்…’ அருட்செல்வர் அரை உயிரில் குமுறினார். இது நடந்து இரண்டு கிழமைக்குப் பின்னர் ஒரு நாள்-

அயலவரான திருநீலகண்டர், கந்தையாபிள்ளையின் வீட்டுக்கு வந்தார். ‘என்ன கந்தையாபிள்ளை, அருட்செல்வரின் நிலைமை இப்படியாகிவிட்டது… இனி எதற்காகத் தம்பியின் திருமணத்தை ஏன் ஆறப் போடவேண்டும்?…’

‘அதுசரி திருநீலர், அருட்செல்வரிடம் இனி என்ன இருக்கிறது. பட்டணத்து வீட்டைத் தவிர? தம்பியின் அந்தஸ்துக்கு அது போதுமே? யோசித்துச் செய்வம்’ என்றார் கந்தையாபிள்ளை.

‘நீங்கள் பெரிய மனிதர். அப்படியெல்லாம் பேசக் கூடாது. காசு பணம் வரும் போகும். அந்தப் பெண்ணைப் போல ஒரு பெண் கிடைக்குமா? அல்லாமலும் பேசி முற்றாக்கின விஷயம். இதற்காக நிறுத்தினால் ஊர் பகிடி பண்ணும்.

“யோசிப்பம் திருநீலர், பின்னேரம் தம்பியும் வரட்டும். யோசித்து நாளைக்கு முடிவு சொல்கிறேன்.

***

‘தம்பி. அருட்செல்வரின் நிலைமை பெரிய பரிதாபம், காசு போனாலும். அவருடைய பட்டணத்து வீடு இருக்கிறது. இல்லை இல்லையென்றாலும் இன்றைக்கு ஏழெட்டு லட்சம் பெறும். பேசி எல்லாம் பொருந்தின சம்பந்தத்தை விடாமல் செய்வோமென்றுதான் யோசிக்கிறேன். நீ என்ன நினைக்கிறாய்?’

‘நீங்கள் சொல்வது சரியப்பா. நீங்கள் சரி என்றால் எனக்கு மறுப்பில்லை!’

இரண்டு நாள் கழித்து

‘தம்பி, விஷயம் கேள்விப் பட்டாயோ? உலக்கை தேய்ந்து உளிப்படியான கதை தான்.காலையில் திருநீலர் வந்து சொன்னவர். கடைசியில் அந்தப் பெண்ணுக்கு ஒரு சொத்தும் இல்லைப் போலிருக்கிறது. அருட்செல்வர் என்ன செய்யப் போகிறார் தெரியுமோ?’

‘என்னப்பா, என்னவாம்?’

‘பட்டணத்திலிருக்கும் அவருடைய வீட்டை விற்று, தன்னிடம் அடைவு வைத்தவர்களுக்கு நட்ட ஈடு கொடுக்கப் போகிறாராம். திருமணம் நிச்சயமாகிவிட்டதுதானே என்ற துணிவில் அந்தப் பெண்ணை உடுத்த துணியோடு அனுப்பி வைக்கலாமென்று நினைத்து விட்டார் போலும்!…. நான் திருநீலரிடம் அடித்துச் சொல்லி விட்டேன், ‘இனி இந்தச் சம்பந்தக் கதை பேச வேண்டாம் என்று. உனக்கு இதிலும் பார்க்க…’

‘அப்பா!’ என்று சற்று உரத்த குரலில் இடைமறித்தான் தமிழ்ச்செல்வன்.

மகனின் குரலில் தெரிந்த ஒரு வேகத்தால் சற்றே அதிர்ந்து போன கந்தையாபிள்ளை, பேசுவதை நிறுத்தி நிமிர்ந்து பார்த்தார்.

‘அப்பா! நீங்கள் என்ன வார்த்தை சொல்லிவிட்டீர்கள்? இயக்கப் பொடியன்கள் சொன்னது போல. அருட்செல்வர் அடைவு வைத்தவர்களுக்கு ஒன்றும் கொடுக்காமலே விடலாம். அதற்கு ஒரு வித நியாயமும் இருக்கிறது. அப்படியிருந்தும்-

அப்படியிருந்தும் கூட, தன்னை நம்பி அடைவு வைத்தவர்களுக்கு நட்ட ஈடு கொடுக்க வேண்டுமென்று நினைக்கிறாரே அந்தப் பெரிய மனிதர்! அப்பா! அப்படிப் பட்ட அந்த மனிதருக்கா நீங்கள் இப்படி ஒரு வார்த்தை சொல்லி அனுப்பினீர்கள்? சுடர் விழி நல்ல பெண் தான். அதை விட அவளுடைய அப்பா மிக மிக உயர்ந்து விட்டார். அவருடைய பெண்ணைத் திருமணம் செய்வதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அப்பா இப்போதே போய் எங்களுக்குச் சம்மதம் என்று சொல்லிவிட்டு வாங்க…

மகனுடைய பேசாத பேச்சைக் கேட்டு, கந்தையாபிள்ளை ஒரு கணம் திகைத்து மௌனித்தார். பிறகு, ‘சரி தம்பி. நான் போயிட்டு வருகிறேன்’ என்று எழுந்து நடந்தார்.

– 24வது ஆண்டு மலர் ஜனவரி 1989, மல்லிகைச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூன் 2002, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *