திருநாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 29, 2024
பார்வையிட்டோர்: 452 
 
 

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஊரெல்லாம் பரபரப்பாக இருக்கிறது. காதுகளுக்குக் கேட்பதெல்லாம் அதிர்வெடிகள்; கண்களுக்குத் தெரிவதெல்லாம் மத்தாப்பு வாணங்கள்.

அதோ, மத்தாப்பு ஒன்று வெடித்து, மலர்த்து, பல வர்ணக் கட்டி களைக் கொட்டுகிறது. அவை கண்களுக்கு எத்தனை இன்பத்தைத் தருகின்றன!

‘தம்பி, இந்த வாண விளையாட்டு – அவிட்டு மத்தாப்பு இருக்கிறதே, இதெல்லாம் தமிழனின் வாகடத்திலேதான் தம்பி அனாதியாக இருந்தது. ஆதிகாலத்திலே எப்பவோ ஒருநாள், இந்த ஓலை வாகடம் ஆத்திலே விழுந்து, கடல்லெ போன போது வெள்ளைக்காறங்கள் கண்டெடுத்தெல்ல இப்ப சந்திரனுக்கு வாணம் விடுகிறானாம்!’

ஊரில் வயதேறிய ஒரு தாத்தா ஒரு நாள் சொன்ன வார்த்தைகள் என் ஞாகபத்திற்கு வருகின்றன. ரஷ்யர்கள் சந்திரமண்டலத்திற்கு ‘ராக்கெட்’ அனுப்பிய காலத்தில், மணம் தாங்கமாட்டாது தமிழன் பெருமையை எடுத்துச் சொல்லிய அந்தத் தாத்தா இன்னும் என் மனக்கண் முன்னே தான் நிற்கிறார்.

அந்தப் பெருமையின் வழிவந்த இன்பமான மத்தாப்புக் காட்சியை நான் பார்க்கிறேன்; ரசிக்கிறேன். கண்ணீர்த் துளிகள் என் கண்களில் திரையிட்டு நிற்கின்றன. அந்தத் திரைக்கும் ஊடாக வெடித்துச் சிதறிய இன்னொரு மத்தாப்பின் ஒளிச் சிதர்கள் பளிச்சிட்டு மின்னுகின்றன. திரையிட்ட கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, மறுபடியும் மறுபடியும் அந்தக் காட்சியைப் பார்த்து ரசிக்கத்தான் மனது ஆசைப்படுகிறது. இந்த வயசில் எனக்கே வருகிறதே இந்த ஆசை!

எனது மகன் புரட்சிதாசன், நித்திரையில் விம்மிப் புடைக்கும் ஓசை என் நெஞ்சுவரை அதிர்கிறது. நெஞ்சின் அந்தரத்தில் அந்த ஓசை இரைந்து மடிகிறது. சீ! நான் என்ன மனிதன்! மிருகத்தனமாக அவன் முதுகில் பளீரென அறைந்துவிட்டேன். கையாலாகாதவன்!

வெட்கத்தால் என் உள்ளுறுப்புக்கள் கூனிக் குறுகுகின்றன. சாய்மனைக் கட்டிலின் அழுக்குப்பிடித்த பகுதி, குளிர்ந்து, பிடரியை ஒட்டிக்கொண்டு இழுக்கிறது. முற்றத்து வெளிப்புறத்தில் இலயிக்க விட்ட கண்களை எடுத்துக்கொள்வதற்காகக் கழுத்தை மறுபுறம் திருப்ப முயலுகிறேன். வலுவில் அது முடியவில்லை!

என் இரண்டாவது குழந்தை ஜனதாவின் குரல் குடிசையின் அடியிலிருந்து எழுந்து வருகிறது. அவள் நித்திரையில் பிதற்றுகிறாள்.

இருட்டிக்கொண்டு வரும்போது அடுத்த வீட்டுப் பெண் குழந்தை அணிந்திருந்த உடையைப் பார்த்து, அதே நிறத்தில் ஒன்று வாங்கித் தரும்படி என்னை நச்சரித்தாளே! அதன் பிரதிபலிப்புதான் அவள் வாயில் இப்போது பிறக்கிறது.

சற்றுவேளை வீட்டின் எல்லைக்குள் அமைதி நிலவுகிறது. இப்போது என் கடைசிக் குழந்தை சுரதா பாலுக்காக அழுகிறாள்; பீறிடுகிறாள்.

பாவம், மனைவி நவமணி நன்கு தூங்குகிறாள்! அவளுக்குப் பகலெல்லாம் எத்தனை தொல்லைகள்! குடும்பப் படகை ஓட்டிச் செல்ல அவள் எத்தனை சிரமப்படுகிறாள்! அவள் மட்டும் எனக்குக் கிடைத்திரா விட்டால்…?

சுரதா பிடிவாதமாகவே கதறுகிறாள். அவளுக்குப் பசிக்கிறது.

‘நவமணி!’

நான் மெதுவாக அழைக்கிறேன். என் குரல் கம்முகிறது.

‘நவமணி!’

நான் மீண்டும் அழைக்கிறேன். இப்போது என் குரலில் சற்று அதிகாரமே தொனிக்கிறது.

பாழாய்ப்போன இந்த அதிகார மமதை இன்னுந்தான் சாக மாட்டேன் என்கிறது! என்னுடன் ஒட்டிக்கொண்டே இருக்கிறது. அதற்குத் தீர்க்காயுசு! சில வேளைகளில் எனது நிந்தனைக்கு உள்ளாகி, அப்படியே செத்து மடிந்து போனது போலக் கிடந்துவிட்டு, சமயா சமயங்களில் உயிர்ப் பெற்று ஓடி வந்து விடுகிறது. இதற்கு நான் என்ன செய்வேன்! தூ, மானங்கெட்ட மமதை.

சுரதா அழுதுகொண்டே இருக்கிறாள் என்று இலக்கிய மேதை’ யாகிய நான் கள்ளிப்பெட்டி மேல் கிடந்த ‘ஹரிக்கன் லாம்பை’ எடுத்துத் தூண்டிவிட்டுக் கொண்டு அவளை நோக்கிப் போகிறேன். லாம்பின் ஒளிக்குள் கண்களைக் கூசிக்கொண்டு, சுரதா என்னைப் பார்க்கிறாள். என்னைத் தகப்பன் என்று அடையாளம் கண்டு விட்டாள். அவளுக்கு வயசு ஒன்றுக்கு மேலாகிறது. இன்னுமா அடையாளம் தெரிந்து கொள்ளாமல் இருப்பாள்?

நவமணி அலங்கோலமாய் அசந்து போய்க் கிடக்கிறாள். லாம்பை நவமணியின் தலைமாட்டில் வைத்து விட்டு சுரதாவை அள்ளித் தோளில் போட்டுக் கட்டிலுக்கு வந்து படுத்து அவள் முதுகைத் தடவிக் கொடுக்கிறேன். பாரம் தாங்காது கட்டில் கிரீச்சிட்டு கதறுகிறது. சுரதா என் நெஞ்சை வருடிக் கொண்டு மறுபடியும் தூங்குகிறாள்.

கழுத்தை முறித்துக்கொண்டு நவமணியைப் பார்க்கிறேன். லாம்பின் ஒளியில் அவள் முகம் தெளிவாகத் தெரிகிறது. அவள் எவ்வளவு இளைத்துப் போய் விட்டாள்! பாதி அளவில் உடல் வற்றி, மஞ்சள் நிறமாகி, தேகம் உதிர்ந்து, செவ்விதழ்கள் வரண்டு, கதுப்புக் கன்னங்கள் சுருங்கி, மார்புத் தசைகள் சூம்பி கண்குழிகள் தாழ்ந்து பொலிவிழந்து விட்டாள்.

என் நெஞ்சைப் பிய்த்துக் கொண்டு ஒரு பெருமூச்சு வந்து மடிகிறது, அந்த மூச்சிலே ஓராயிரம் நினைவுப் படங்கள் மிதந்து வருகின்றன.

2

நவமணி என் கண்ணுக்கு முன்னே வாலைக் குமரியாக நிற்கிறாள். பளிச்சிட்டு மின்னும் விழிகளை மேலாகச் செருகி என் பரந்த மார்பில் சிரசைச் சாய்த்துக் கொள்கிறாள். தலை முழுகி உலர்த்திக் காண விட்டிருந்த மிருதுவான கேசம் என் மார்போடு உரசி, மெத்தென்ற இன்பத்தைத் தருகிறது.

குளிர்க்காற்று அலை அலையாக வருகிறது. அவள் மெல்லிய உடலை குளிர் அலைகள் தாக்கிவிடக் கூடாதே என்பதற்காகவோ என்னவோ என் வலிய கரங்களை வளைத்து அவளை இறுக்கிக் கொள்கிறேன்.

நீண்ட வேளை இரவின் மோனத்தோடு சேர்ந்து கொண்டு அவள் அசந்து நிற்கிறாள்.

எதையோ நினைத்துக்கொண்டு அவள் விம்புகிறாள். அந்த ஓசை என் மார்பைக் குடைந்து, என் இருதய பெண்டுலத்தைப் பிடித்து ஆட்டி அசைக்கிறது; பலமாக உந்தி உதைக்கிறது.

‘நவமணி நீ ஏன் அழுகிறாய்?’

‘நீங்கள் என்னை மறந்துவிட மாட்டீர்களே?’

‘பைத்தியக்காரி!’

காதோடு காது வைத்து நாங்கள் பேசுகிறோம். மென் கரங்களை மேலாக நீட்டி, வளைத்து, என் கழுத்தைக் கட்டிக் கொள்கிறாள்.

நிர்மலமாகக் கிடக்கும் வான முகட்டிலிருந்து இடம்பெயர்ந்த வெள்ளித் துண்டொன்று திசைமாறி ஓடுகிறது.

அந்தக் கதுப்புக் கன்னங்களின் சுவையிலே நான் மெய் மறந்து விடுகிறேன். செவிகளுக்கூடாக, கேசத்தினிடையே கைகளைச் செருகி, அவளின் முகத்தை நிமிர்த்தி…

கிளுகிளுப்பேறவே. அவளிடம் பெண்மையின் புரியாத புதிர்கள் ஓடி வந்துவிடுகின்றன. என் பிடியிலிருந்து விடுபட்டு ஓடிவிட அவள் போராடுகிறாள்.

‘நவமணி!’

‘உம்’

‘நாளைக்கு நாம் “ரிஜிஸ்தர்’ செய்து கொள்ளலாமா?’

‘அம்மாவிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு’

‘அவ மறுத்துவிட்டால்?’

‘நான் முன்னமே சொல்லி வைத்துவிட்டேன்.’

என் நெஞ்சு துணுக்குறுகிறது.

‘ஏன் அவசரப்பட்டாய்?’

‘அதனால் என்ன? அம்மா பாவம்; சம்மதித்துவிட்டா !’

பலங்கொண்ட மட்டும் அந்த உடலை நெரித்து என் மார்போடு ஒட்டவைத்துக் கொள்கிறேன்.

‘ஐயோ எலும்பெல்லாம் முறிந்து போகிறதே!’

செல்லமாக அவள் கன்னத்தில் அடிக்கிறேன்.

உடம்பெல்லாம் கொதித்துத் தகிக்கிறது; மின்சாரம் பாய்கிறது. நான் பெருமூச்சு விடுகிறேன்.

‘இதென்ன பெருமூச்சு?’

‘பெருமூச்சல்ல இது; உன்னிடம் கெஞ்சும் ஊமைக் குரல்.

அப்புறம்…?

3

நெஞ்சின் குமுறல் பெருமூச்சாக வெளியே வருகிறது. மனசை எங்கெல்லாமோ அலையவிட்டு, மறுபடியும் நெஞ்சுக் கூட்டுக்குள் பிடித்து வைத்துக் கொள்கிறேன். செத்துப்போய்விட்ட அந்த நாட்களை எண்ணிப் பூரிப்பதால் இப்போது என்ன வரப்போகிறது!

குழந்தை சுரதா நித்திரையாகிவிட்டாள். அதனால் என் நெஞ்சில் பாரம் அதிகரிப்பது போலிருக்கிறது. மெதுவாக எழுந்து சென்று, தாய்க்குப் பக்கத்தில் அவளைப் படுக்க வைக்கிறேன்.

சொல்லி வைத்தாற்போன்று அடுத்த வீட்டுக் கடிகாரம் ஒரு தடவை ஒலித்து ஓய்கிறது. அந்த ஓசை என் உடலைப் புல்லரிக்க வைக்கிறது. அந்த நாட்களில் என் நவமணியைப் பக்கத்துத் தென்னந்தோப்பில் சந்திக்கும் வேளையின் அடையாளக் குரல். இந்த ரீங்காரந்தான். இந்த ஓசை கேட்கும் போது நான் அவளுக்காக அங்கே காத்திருப்பேன். அவள் வருவாள்.

மறுபடியும் மனது குமைகிறது. நவமணியின் முகத்தை இப்போது பார்க்கிறேன். லாம்பொளியில் அந்த முகம் நன்றாகத் தெரிகிறது.

அவள் உதடுகள் எதையோ வேண்டித் துடிப்பது போல இருக் கின்றன. அதரபானம் ஊற்றெடுத்து மினுமினுக்கிறது.

புதுத் தாம்பத்திய உறவின் சுழிகள் அந்த முகத்திலே நெளிந்தோடு கின்றனவோ!

என் கரங்கள் வெளிச்சத்தை அணைத்துவிடுகின்றன.

அவளின் தூக்கத்தைக் கலைக்கிறேன்.

முனகிக்கொண்டே அவள் விழித்துக்கொள்கிறாள். ஐஸ் பெட்டியில் உரசுவதைப் போல அங்கமெல்லாம் குளிர்கிறது.

நான் மறுபடியும் சாய்மளைக் கட்டிலுக்கு வந்துவிடுகிறேன்.

இப்போது என் அங்கமெல்லாம் நடுங்குகிறது.

என் கண்களுக்கு முன்னே தனித் தனியாக ஆயிரம் காட்சிகள் அணிவகுத்து வருகின்றன….

கல்யாணத்தின் பின் பத்தாவது மாதம், மகன் புரட்சிதாசன் பிறந்த வீட்டுக்குள், நவமணி பாயும் படுக்கையுமாக அழல் வாதத்தால் வீழ்ந்து கிடந்தாளே!

அவளின் அம்மா செத்துப் போய்விட, அந்த வீட்டுச் சொந்தக் காரனிடம் சண்டை போட்டுக்கொண்டு தனிக் குடித்தனம் செய்ய வீடு தேடி அலைந்தேனே!

வேலையற்று வீதி அலைந்து, கடன்பட்டு வாழும் போது மகள் ஜனதா பிறந்தாளே, அப்போது நாங்கள் பட்ட வேதனை!

எத்தனையோ வீட்டுச் சொந்தக்காரரால் விரட்டப்பட்டு, இந்தக் குடிசையில் வந்து அடைக்கலம் புகுந்து சுரதாவைப் பெறும்போது பஞ்சத்தால் அவள் விட்டாளே கண்ணீர்!

சலுகைச் சம்பளம் கட்டாமல் பாடசாலையிலிருந்து விரட்டப்பட்டு மகன் புரட்சிதாசன் ஏக்கத்துடன் வீடு திரும்பிய நாட்கள்!

இலஞ்சம் வாங்காமல் கூப்பன் புத்தகங்கள் கொடுக்க மறுக்கும் விதானையிடம், மண்டியிட்டு, கைகட்டி, வாய் பொத்திக் கூனிக்குறுகி நிற்பேனே வருடா வருடம்!

பட்டினியோடு போராடிக் கொண்டு குழந்தைக்குப் பால் கொடுக்க அவள் பட்டபாடு…

எத்தனைதான் என் கண் முன்னே அணிவகுத்து வருகின்றன. என் நெஞ்சு விம்முகிறது. சுரதா பிறந்த ஓராண்டு காலமாக எப்படியோ சமாளித்து வந்து விட்டு இப்போது….

என் அரக்கத்தணத்திற்காக நான் வெந்து சாகிறேன். ஐயோ இந்த மனப்பாரத்தை நெஞ்சு தாங்காது போலிருக்கிறதே!

ஏதோ முனகல் குரல் கேட்கிறது!

நவமணி விம்முகிறாள். அழுது வடிகிறாள். அந்த ஒலி எங்கே எனக்குக் கேட்டு, என் தூக்கம் கலைந்துவிடுமோ என்று அதை அசை போட்டுக் கொள்கிறாள். பைத்தியக்காரி! நான் நிம்மதியாகத் தூங்கி விட்டேன் என்றுதான் எண்ணுகிறாள்!

இத்தனை காலமும் வாழ்ந்துவிட்ட நரக வாழ்வுக்குப் பின் இப்போது பைத்தியக்காரத்தனமான ‘உல்லாசம்’ செய்துவிட்டு என்னால் தூங்கத் தான் முடியுமா?

நான் ஒரு மானங்கெட்ட மனிதன்!

பத்தாண்டுகளுக்கிடையில் மூன்று குழந்தைகளுக்கு அப்பனாகி விட்டு விழிக்கிறேன். தூ, மானங்கெட்ட அப்பன்!

சொந்தமான ஒரு சதுர அடி நிலமோ, குந்திக்கொள்ள ஆன குடிசையோ, படுப்பதற்குத் துண்டுப் பாயோ, வழ்க்கை என்ற பெய ரோடு ஒட்டிக்கொண்டு செல்வதற்கு ஒரு நிரந்தர வருவாயுள்ள தொழிலோ இல்லை. இந்த இலட்சணத்தில் ‘தகப்பன் தொழில் மட்டும் ஒழுங்குபடச் செய்கிறேன், மானங்கெட்ட தொழில் குழந்தை களுக்கு அழகான பெயரிட்டு மகிழ்கிறேன்; மானங்கெட்ட மகிழ்ச்சி!

நாளைக்குப் புத்தாண்டு பிறக்கிறது. வருடத்தின் ஒரே ஒரு திருநாள். இதிலெல்லாம் யதார்த்தவாதியாகிய எனக்கு நம்பிக்கை இல்லை யென்று இத்தனை காலம்தான் தட்டிக் கழித்துவிட்டேன். இந்த வகையில் நான் புத்திசாலி. ஆனால், உலகத்தின் ஆசாபாசங்களுக் கிடையில் குழந்தைகள் உணர்வு பெறக்கூடிய அளவுக்கு வளர்ந்து விட்டார்களே!

பக்கத்து வீட்டைப் பார்த்து விட்டு மனம் குமைந்து போய்க் குழந்தைகள் அழுகிறார்களே. அதைத் தடுத்துவிட எனக்கு முடிந்ததா?

‘ஏனையா, உங்க குழந்தைகளுக்குப் புதுத்துணி வாங்கிக் குடுத்திருக் கிறீர்கள்? மத்தாப்பு வெடிகள் ஏன் வாங்கிக் கொடுக்கிறீர்கள்? நாங்கள் குழந்தை குட்டிகளை வளர்க்கவிட மாட்டீர்களா?’ என்று பக்கத்து வீட்டாரைக் கேட்டுவிட முடியுமா?

நான் எவ்வளவு முட்டாள்! ஒரு வெடிப் பெட்டி வாங்கித் தரும்படி கேட்ட மகனுக்கு முதுகில் நாலு வைத்து அவனின் ஆசையை அடக் கினேன்! அடக்கினேனா? சே, அது அவன் மனதுள்ளேயே அடங்கிக் கிடக்கிறது. விரியன் பாம்புக் குட்டிபோல அடங்கிப் போய் விட்டது போலக் கிடக்கிறது. ஐயோ! அது குழந்தை மனதின் மென்மையை யெல்லாம் பதம் பார்த்துத் தீர்த்து விடப் போகிறதே.

பசி, பட்டினி என்று நவமணி முன்பெல்லாம் குரல் கைக்கும்போது அவளுக்கு வேடிக்கைகள் காட்டி அவள் எண்ணத்தை வேறு வழியில் திருப்பியாவது வந்தேன். இப்போது அதற்குக்கூட என்னிடம் திராணியில்லை.

முன்பெல்லாம் அவளும் என்னுடன் சேர்ந்து இலக்கியம் பேசுவாள்; அரசியல் பேசுவாள். ஆரம்பத்தில் ஒரு நாள் எங்கோ ஒரு ‘குபேர’ நாட்டிலிருந்து வெளிவந்த மாத இதழில் இருந்த படங்களைக் காட்டி அதற்கு விளக்கம் கேட்டாள்.

அவளுக்கு ஆங்கிலமே தெரியாது. அதனால் நான்தான் விளங்க வைக்க வேண்டி இருந்தது.

ஒரு பஸ் வண்டி நிற்கிறது. மாணவ மாணவிகள் அந்த வண்டியில் ஏறிக்கொண்டு, குதூகலமாக நின்று கொண்டுமிருக்கின்றனர்.

பாடசாலைகளை அரசாங்கம் நடத்துவதால், பாடசாலை மாணவர் களைப் பற்றிய சகல பொறுப்புக்களையும் அரசாங்கமே கவனிக்கிறது. பாடசாலைக்கு மாணவர்களை அரசாங்க வாகனம் ஏற்றிச் செல்கிறது.’ இப்படி அந்தப் படத்தின் விவரத்தை அவளிடம் கூறினேன்.

வேறோர் படத்தைக் காட்டினாள்.

‘தொழில் நிலையங்கள் அரசாங்கத்திற்குச் சொந்தமாக இருப்பதால், தரகு கூலியோ, வெட்டுக் கொத்தோ இன்றி எல்லோருக்கும் நல்ல சம்பளம் கிடைக்கிறது. வேலைக்குப் போகும் தாய், இலவச பராமரிப்பு நிலையத்தில் தன் குழந்தையை ஒப்படைத்து விட்டு உற்சாகமாக வேலைக்குப் போகிறாள்’ என்றேன்.

புத்தகத்தில் வேறோர் படத்தைக் காட்டினாள்.

‘நாட்டில் அதிகமான குழந்தைகளைப் பெற்றெடுத்து முறைப்படி குடும்பம் நடத்திய ஒருத்திக்கு ‘வீரத்தாய்’ என்ற பதக்கம் சூட்டு விழா நடக்கிறது.

இந்த வார்த்தையை நான் சொல்லி முடிப்பதற்கிடையில், நான் சொல்வது பொய் என்று கூறுவது போன்று தலையை ஆட்டிக் கொண்டாள்.

குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியத்தைப் பற்றிப் பிரசாரகர்கள் வாய்விரியப் பேசித் திரியும் சூழ்நிலையில் வசிப்பவளுக்கு இதை அப்படியே நம்பிவிடத்தான் முடியுமா?

இப்படி அவள் என்னுடன் முன்பு பேசியதெல்லாம் இன்னும் எனக்குத் தெளிவாகக் கேட்கிறது. ஆனால் இப்போது அப்படி எதுவுமே இல்லை. வாழ்வைப் பற்றிய நம்பிக்கை அவளிடம் இருந்தால் தானே! மறுபடியும் மத்தாப்பு ஒன்று வானவெளியில் வெடித்துச் சிதறுகிறது. என் குடிசையைச் சுற்றியென்ன, உலகத்தைச் சுற்றியே அதிர் வெடிகள் கேட்கின்றன. என் குழந்தைகள் விழித்திருந்தால் இந்த வெடிகளின் ஓசையைக் கேட்டாவது திருப்திப்படுவார்கள் என்றுகூட நினைக்கிறேன். பைத்தியக்காரன்!

மறுபடியும் மறுபடியும் அதிர்வெடிகள், மத்தாப்புகள்!

புத்தாண்டு பொழுது சிரித்துக்கொண்டு வருகிறது. அதன் வரவுக் காக எல்லோருமே காத்திருக்கின்றனர்.

4

இரவோடிரவாக விழித்திருந்ததால் கண்கள் எரிவெடுக்கின்றன.

காகங்கள் கரைந்து கொண்டு விரைந்து செல்கின்றன. கோழிகள் குடிசையை விட்டுக் கொக்கரித்துக் குதிக்கின்றன.

ஜனதா எழுந்து தலையைச் சொறிந்து கொண்டு, படுத்த பாயிலேயே ஏங்கிப்போய் இருக்கிறாள். புத்தாண்டுத் திருநாளில் எல்லோருமே புத்தாடை அணிந்து கொண்டிருப்பார்கள்; அவர்களுக்கு முன் இந்தக் கோலத்தில் எப்படி நிற்பது என்று ஏங்கக்கூடிய வயதில் அவள் இல்லை. ஏதோ ஒன்றுமில்லாத ஒன்றைப் பற்றிய இனந் தெரியாத ஏக்கந்தான் அது!

மகன் புரட்சி, அவசர அவசரமாக எழுந்து முற்றத்திற்கு வருகிறான்.

குழந்தை சுரதாவின் ஜலம் தோய்ந்த சட்டையைக் கழற்றிக் கொண்டே நவமணியும் முற்றத்திற்கு வருகிறாள். அந்தச் சீவனின் பஞ்சடைந்த கண்களுக்கு முன்னால், என் சப்தநாடிகளும் ஒடுங்கு கின்றன. தோள் மூட்டுப் புறமாக வாய் கிழித்து நிற்கும் சட்டையைத் தாவணிச் சேலையால் மூடிக் கொண்டு அவள் முற்றத்தில் தன் அருமை மகளின் முகத்தைப் பார்த்தபடி நிற்கிறாளே அந்த நிலை!

பட்டுத் துணிகளின் உராய்வு எனக்குக் கேட்கிறது. எங்கே கேட்கிறது? தலை நிமிர்ந்து பார்க்கிறேன். அடுத்த வீட்டு வரோணிக்கா தன் நான்கு குழந்தைகளையும் நடத்திக்கொண்டு ஒழுங்கை ஓரமாகப் போகிறாள்.

மாதா கோவிலில் மணியோசை கேட்கிறது. புத்தாண்டுத் திருநாளின் பூசைப் பலியைக் காண்பதற்காக அவர்கள் போகிறார்கள்.

அந்தத் திசையையே பார்த்தபடி நவமணி ஏங்கிப் போய் நிற்கிறாள். ‘தான் ஒரு இலட்சிய எழுத்தாளனின் மனைவி’ என்பதை ஒரு கணம் மறந்துவிட்டுத்தான் அப்படி நிற்கிறாளோ!

புத்தாண்டுத் தேவனின் ஒளிக் கிரணங்கள் உலகில் நன்றாக வேரூன்றிவிட்டன.

காலைக் கடன்களை முடித்துக்கொண்டு வந்த எனக்குக் காப்பி தயாராக இருக்கிறது.

நவமணியின் மாமி முறையான ஒருத்தி பருத்தித் துறைப் பிரதேசத்தி லிருந்து இனாமாக அனுப்பிவைத்த பனங்கட்டி முடியும் தறுவாய்க்கு வந்துவிட்டது. இருந்தும் இன்னோர் பேணி காப்பிக் குடிக்க வேண்டு மென்ற ஆசையே பிறக்கிறது. ஆனாலும் பேராசை கூடாது.

அடுப்பங்கரைப் பக்கம் சுரதா அடம்பிடித்து அழும் குரல் கேட்கிறது. காப்பிக்குச் சீனி போட்டுக் கலக்கித் தரும்படி அவள் அடம் பிடிக் கிறாள். கடந்த ஒரு மாத காலம் இப்படியே குடித்து வந்தவளுக்கு இன்று மட்டும் புதிதாக ஒன்று வேண்டுமாம்!

நவமணியின் சீற்றத்திற்கும் முறைப்புக்கும் முன்னால் என்னால் அங்கிருக்க முடியவில்லை.

எழுந்து, வெளியே வருகிறேன். எதிர்த்தாற்போல கலாமன்றம் வாசகசாலை கண்ணுக்குத் தெரிகிறது. வாசகசாலைக்குள் செல்கிறேன். அப்போதுதான் தினசரியைப் போட்டு விட்டுப் பத்திரிகைப் பையன் போகிறான். உள்ளே யாருமேயில்லை.

‘பத்திரிகைகளையும், பாடசாலைகளையும் அரசாங்கம் பொறுப் பேற்கும். நாட்டின் சகல மாணவர்களின் கல்வியும் அரசாங்கக் கண்காணிப்பின் கீழ்வரும். கலைஞர்களுக்கெல்லாம் மான்யம் வழங்கப் படும். பத்திரிகை எழுத்தாளர்களுக்குச் சட்டபூர்வமான சம்பளம் வரையறுக்கப்படும்…’

இதற்குமேல் என்னால் அந்தப் பத்திரிகைச் செய்தியைப் படிக்க முடியவில்லை. கண்களில் கண்ணீர்த் திரைகள் மூடி நிற்கின்றன. மனம் உணர்ச்சியால் விம்முகிறது. அப்படியே மடித்துக்கொண்டு வீடு நோக்கி ஓடி வருகிறேன்.

‘நவமணி, நவமணி!’

என் அங்கலாய்ப்புக் கேட்டு நவமணி ஓடி வருகிறாள்.

அமைதியற்றிருக்கும் அவள் மனத்திற்குச் சாந்தி தேட அந்தச் செய்தியைப் படிக்கிறேன்.

அவள் கண்களில் தோன்றும் ஒளியை நிமிர்ந்து பார்க்கிறேன். கண்களிலே நீர் நிரம்பியபடி அவள் மரமாக நிற்கிறாள்.

‘நவமணி!’

பத்திரிகை படித்து முடிந்ததும் ஆசையோடு அவளை அழைக்கிறேன்.

என் குரல் கேட்ட பின்புதான் அவள் சுய நிலைக்கு வருகிறாள்.

‘நீங்க சொன்னீங்களே, அதிகம் பிள்ளை பெறுகிறவர்களுக்குத் தங்க மெடல் என்றும், விழா என்றும். அப்படி இங்கேயும் வந்து விட்டதே!’

உற்சாகத்தோடு இதைக் கேட்டுவிட்டு, அவள் தலையைத் தாழப் போட்டுக் கொள்கிறாள்.

‘ஆமா வந்து விடும்; சீக்கிரம் வந்துவிடும்; இன்னும் பத்தாண்டு களில் வந்துவிடும்!’

இவ்வார்த்தையை நான் முடிப்பதற்கிடையில் ‘பத்து ஆண்டுகளா?’ என்று ஏக்கத்தோடு கேட்டவள் அப்படியே மயக்கம் போட்டுச் சரிந்து போகிறாள்.

நல்ல காலம்! நான் அவளைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு விட்டேன்.

‘புரட்சி, புரட்சி!’

என அழைப்புக் குரல் கேட்டு ஓடிவருகிறான்.

‘தண்ணீர் கொண்டு வா!’

என் உத்தரவு கேட்டு உள்ளே ஓடுகிறான்.

நவமணி மயங்கிப் போய் என் மடியில் கிடக்கிறாள்.

என் மடி மீது அவளைக் கிடக்க வைத்து எத்தனை காலம்!

பத்தாண்டுகளுக்குப் பிறகு, தன்னால் பிள்ளைப்பெற்று ‘மெடல்’ வாங்க முடியாதே என்று ஏங்கிப் போய்விட்டாள். பைத்தியக்காரி இப்போதிருந்தே பெற்றுக்கொண்டே இரு! யார் வேண்டா என்கிறார்கள்? பத்தாண்டுக்கு முன் செத்தா போய்விடுவாய்?

– கே.டானியல் படைப்புகள் – சிறுகதைகளும் குறுநாவல்களும் (தொகுதி இரண்டு), முதற் பதிப்பு: 2016, அடையாளம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *