அப்பாவின் கோபம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 4, 2021
பார்வையிட்டோர்: 2,597 
 

இந்த பேப்பரை யார் இங்கே வச்சிரிக்கறது? கோபமான கேள்வி அந்த வீட்டில் ஒலிக்கவும் வீடே நிசப்தமாகியது. மீண்டும் அந்த கேள்வி ராமச்சந்திரனால் அங்கு நின்று கொண்டிருந்த மகன், மகள் மனைவியை நோக்கி வீசப்பட்டதும், நானில்லை..என்று தயக்கமாய் மகனிடமிருந்தும், மகளிடமிருந்தும் வந்தது. நீங்க இரண்டு பேரும் இல்லையின்னா இந்த பேப்பருக்கு கால் முளைச்சு இந்த இடத்துக்கு வந்திருக்குமா? மீண்டும் அவரிடமிருந்து கிண்டலான கேள்வி வர மனைவி மெல்ல முன் வந்து யாராவது படிச்சுட்டு மறந்து வச்சிருப்பாங்க.

இப்படி சொல்றதை பார்த்தா நீதான் படிச்சுட்டு இங்க கொண்டு வந்து வச்சிருக்க? அவரின் கேள்வியை கண்டு மிரண்டு போன மனைவி அய்யையோ நானில்லை, நான் காலையிலயே பேப்பர் படிச்சுட்டு அந்த இடத்துலயே வச்சிட்டேன். தப்பித்து கொண்டு விட்டு சரேலென உள்ளே போய் விட்டாள்.அம்மா இப்படி நம்மளை அம்போவென விட்டு உள்ளே போய் விட்டதை கண்டவர்கள் ஏம்மா? உண்மையை சொல்லு நீதானே படிச்சுட்டு அங்கே வச்சிட்டே ஏதோ அம்மாவிடம் பதிலை வாங்க முயற்சிப்பது போல் மகள் அம்மா கூடவே உள்ளே நுழைந்து கொண்டாள்.

இப்பொழுது மகன் திரு திருவென விழித்தான், அப்பாவின் கோபம் தேவையில்லாதது என்று அவனுக்கு தோன்றியது. காலையில் பேப்பர் படித்து விட்டு யாராவது மறந்து இங்கே வைத்திருக்கலாம், அதற்கு ஏன் இப்படி கூப்பாடு போகிறார். சாதாரண பேப்பர் விசயம் மட்டுமல்ல, எந்த விசயங்களை எடுத்தாலும் ஏதோ ஒரு கத்தல், இல்லாவிட்டால் அறிவுரை, போதும் போதும் என்றாகி விடுகிறது. சட்டென பேப்பரை கையில் எடுத்துக்கொண்டு நீயூஸ் பேப்பர் வைத்திருக்கும் அலமாரியில் கொண்டு போய் வைத்து விட்டு வெளியே வேலை இருப்பது போல வெளியே வந்து விட்டான்.

இப்பொழுது ராமச்சந்திரன் தனியாக நின்று கொண்டிருந்தார். சத்தம் இல்லாமல் மூவரும் தன்னை விட்டு சென்று விட்டதை உணர்ந்து கொண்டவர் மெல்ல பெருமூச்சுடன் போய் நாற்காலியில் உட்கார்ந்தார். சே இந்த ஞாயிறு வந்தால் அரை மணி நேரம் அமைதியாக இருக்க முடிகிறதா இந்த வீட்டில்? மனதுக்குள் புலம்பிக்கொண்டவர் அப்படியே சாய்ந்து சற்று கண்ணை மூடினார்.

முன்னறையில் ராமச்சந்திரனின் சத்தம் எதுவும் வராமல் இருந்ததால், உள்ளேயிருந்து எட்டிப்பார்த்த அம்மாவும், மகளும், அவர் நாற்காலியில் உட்கார்ந்து கண்ணயர்ந்து கொண்டிருப்பதை பார்த்து முன்னறைக்கு வந்தனர். அவர் உட்கார்ந்து கொண்டே உறங்குவதை பார்த்தவர்களுக்கு அவர் மேல் சற்று அனுதாபம் கொண்டனர். இருந்தாலும் இப்பொழுதெல்லாம் எடுத்ததெதுக்கெல்லாம் அவர் கோபப்படுவதாக தோன்றுகிறது. அப்பாவை தவிர்ப்பதற்காக வெளியே நின்று கொண்டிருந்த மகனும் உள்ளிருந்து சத்தம் எதுவும் வராமல் இருக்கவே முன்னறைக்குள் எட்டிப்பார்த்தான். அம்மாவும் தங்கையும் இருப்பதை பார்த்தவுடன் அவனும் வந்து இவர்களுடன் சேர்ந்து கொண்டான்.

அப்பா ஏம்மா தேவையில்லாததுக்கு எல்லாம் இப்படி கோபப்படறாரு?

அவருக்கு எல்லாம் கரெக்டா இருக்கணும், தேடற பொருள் அங்க இல்லையின்னா கோபம் வருமா வராதா? அம்மா அப்பாவுக்கு சாதகமாக பேசுகிறாள்

பொருளை மட்டும் கரெக்டா வச்ச இடத்துல இருக்கணும்னு கவலைப்படுங்க, மத்த விசயத்துல எல்லாம் ஒண்ணும் தெரியாம இருங்க மகள் முணுமுணுத்தாள்

அப்படி என்னடி இந்த வீட்டுல கரெக்டா நடக்காம போச்சு?

ஆமா, எல்லாம் கரெக்டா நடக்குதாக்கும், இந்த வீட்டுல? மகள் முணு முணுத்தாள்.

நீ குறை சொல்லற அளவுல உனக்கு என்ன செய்யாம போயிட்டோம்.அம்மா எகிறினாள்.

எனக்கு ஸ்கூலுக்கு இந்த மாசம் பதினைஞ்சாம் தேதியே டுயூசன் பீஸ் கட்டியிருக்கணும், இதுவரை கட்டவேயில்லை. கேட்டா எல்லாம் கரெக்டா இருக்கறீங்க,, மகள் சீறினாள்.

பனிரெண்டாவது படிக்கும் மகள் இந்த மாத்த்தில் முதல் தேதியே சொல்லியிருந்தாள், பட்ஜெட் ஒத்து வராததால் தள்ளி போட்டோம். இப்பொழுது கழுத்தை பிடிக்கிறாள் “பீஸ்” என்ற வார்த்தை கேட்டதும் அம்மா சற்று பின் வாங்கினாள், இன்னும் இரண்டு நாள் பொறுத்துக்கோ, அப்பா கண்டிப்பா ஏற்பாடு பண்ணிக்கொடுத்துடுவாரு.

கண்ணை மூடி உறங்குவது போல் படுத்திருந்தாலும் ராமச்சந்திரனுக்கு இவர்கள் பேசிக்கொள்வது கேட்டுக்கொண்டுதான் இருந்தது. மகள் கேட்பதும் நியாயம்தானே? எல்லாம் சரியாக நடக்கவேண்டும் என்று நினைக்கும் எனக்கு பெண்ணின் ஸ்கூலுக்கு டுயூசன் பீஸ் கட்ட வேண்டும் என்று தெரிந்தும் கட்ட முடியாமல் இருக்கிறேனே? மனதுக்குள் வருத்தம் வந்தாலும் அப்படியே தூங்குவது போல் சாய்ந்திருந்தார்.

என்ன பண்னறது, பணம் வேணும்னா தெரிஞ்சவன்கிட்டே கேட்டா அவன் இரண்டு நாள் கழிச்சு பணம் தர்றேன்னு சொன்னா காத்திருந்துதான ஆகணும்? மனதுக்குள் நினைத்து கொண்டவர் எதுவும் பேசாமல் கண்னை மூடிக்கொண்டார்.

காலையிலேயே மனைவியிடம் சொல்லிவிட்டு சென்றிருந்தார் ராமச்சந்திரன், பையனை மதியம் இரண்டு மணிக்கு ஆபிசுக்கு அனுப்பி வை.பணம் ரெடியாகி இருக்கும், கொடுத்து விடறேன்.

அம்மா சொல்லியிருந்தபடி ராமச்சந்திரனை காண அவர் மகன் மதியம் இரண்டு மணிக்கு அவர் அலுவலகத்தில் காத்திருந்தான். அவர் மானேஜர் அறைக்குள் சென்றிருப்பதாகவும், அவர் வரும்வரை அவர் டேபிள் எதிரில் உள்ள ஸ்டூலில் உட்கார்ந்திருக்கும்படி அலுவலக உதவியாளர் சொல்லிவிட்டு சென்றார். அப்பாவுக்காக காத்திருந்தான். அப்பொழுது மேனேஜர் அறையிலிருந்து சத்தம் கேட்டது.

என்னயா? இப்படி பண்ணியிருக்கறீங்க? கொஞ்சம் அறிவு வேணாம்? இத்தனை வருசம் அனுபவம் இருந்து என்ன பிரயோசனம்? சரமாரியாக கேள்விகள் கேட்பதும் அப்பா மெல்லிய குரலில் அதில்லை சார், அவங்க எந்த விசயத்திலயும் நம்ம கம்பெனிகிட்டே கரெக்டா இதுவரைக்கும் நடந்ததே இல்லை சார், அதனாலதான் அந்த பைலை நிறுத்தி வச்சேன்.இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கலே என்று மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டிருப்பதும் கேட்டது. அதற்கு மீண்டும் மேனேஜரின் குரல் உச்சஸ்தாயில் ஒலிக்க இவன் திக்பிரமையுடன் எதுவும் செய்ய இயலாமையாக உட்கார்ந்திருந்தான்.

சற்று நேரத்தில் வெளியே வந்த ராமச்சந்திரன், இவன் டேபிள் எதிரில் உட்கார்ந்திருப்பதை பார்த்து விட்டு தனது வேர்த்து விறுவிறுத்துப்போன முகத்தை அழுந்த துடைத்தவாறு தனது நாற்காலியில் உட்கார்ந்தவர், தலைகுனிந்து டேபிள் ட்ராயரை திறந்து வைத்திருந்த பணத்தை இவன் கையில் கொடுத்தார். இதை கொண்டு போய் தங்கச்சி ஸ்கூல்ல கட்டிடு, சாயங்காலம் பீஸ் கட்டியாச்சுன்னு அவகிட்ட சொல்லிடு.

அப்பா..இவன் மேற்கொண்டு பேச முற்படுமுன், நேரமாச்சு நீ கிளம்பு, அவனை அனுப்பி வைப்பதில் அவசரம் காட்டினார்.

அப்பாவின் கையில் வாங்கிய பணம் இப்பொழுது இவனுக்கு பாரமாய் இருந்தது. மனதில் ஒரு வலியுடன் தங்கையின் பள்ளிக்கு சென்றான்.

பணத்தை கொண்டு போய் தங்கையின் பள்ளியில் கட்டும்போது, இவனுக்கு அப்பாவின் அந்த வேர்த்துப்போன முகம் ஞாபகம் வந்தது.

இப்பொழுதெல்லாம் வீட்டில் அப்பா என்ன சத்தம் போட்டாலும், இவன் எதுவும் பேசுவதில்லை. அப்பாவின் கோபத்துக்கு அடிப்படை என்னவென்று அவனுக்கு புரிந்தது. கூடுமானவரைக்கும் அவருக்கு கோபம் வராமல் பார்த்துக்கொள்வதில் கவனமாய் இருக்கிறான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *