தகப்பனின் பெண்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 20, 2023
பார்வையிட்டோர்: 2,189 
 

கோயமுத்தூர் ஏரோ ட்ராமுக்கு எதிராக இருந்த ட்ராவல்ஸ் சுமார் நாற்பது வயது மதிக்கத்தகுந்த பெண் உள்ளே வர சினேகமாய் சிரித்தாள் ரிசப்ஷனில் இருந்த பெண்.

வெல்கம் மேடம், வருசம் ஒரு முறை எங்க ஊர் உங்களை இங்க அழைச்சிட்டு வந்துடுது, எங்கயிருந்து வர்றீங்க மேடம்?

இப்ப நாக்பூர்ல இருக்கேன், நேத்து போன் பண்ணிருந்தேனே, வண்டி ரெடியாயிருக்கா?

உங்க பேவரிட் கார் ரெடியா இருக்கு மேடம், ஆனா டிரைவர் இரண்டு நாளா லீவு, அதுக்கு பதிலா வேறொருத்தர் வருவாரு. அவரும் நல்ல எக்ஸ்பீரியன்சானவருதான், ஹில்ஸ்ல எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு.

சிறிது யோசித்தவள், ஓ.கே, நான் வெயிட் பண்ணறேன், தனது பெரிய பேக்கை அங்கு போடப்பட்டிருந்த நாற்காலிக்கருகே தள்ளிக்கொண்டு போய் வைத்து அருகில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள்.

கார் பொள்ளாச்சியை தாண்டி வால்பாறையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த காரினுள் அமர்ந்திருந்த பெண்மணி அமைதியாக கண்ணை மூடியபடி அந்த சூழ்நிலைகளை உள்வாங்கியபடி இருந்தாள்.

மேடம் இது வழியாகவா? திரும்பி கேட்டவனிடம் யெஸ், இதுக்குள்ள மூணு கிலோ மீட்டர் போங்க, இப்பொழுது காரின் கண்ணாடியை சற்று கீழிறக்கி சுற்றி வர ஆர்வமாய் பார்த்தாள்.

காரை ஓட்டிக்கொண்டிருந்தவனுக்கோ, இந்த காட்டின் அடர்த்தியும், அதனுள் இருந்த அமைதியும் மனதுக்குள் பயத்தை உண்டு பண்ணிக்கொண்டிருந்தது. கார் ஓட்டும் ஓட்டுநர் விடுமுறையானதால், இவனுக்கு மலைச்சரிவில் கார் ஓட்டி பழக்கம் இருப்பதால் இவனை அழைத்திருந்தார்கள். கொஞ்சம் காட்டு பகுதி என்று சொன்னார்கள். ஆனால் இந்தளவு காட்டுக்குள் செல்வது முதன் முறை.

ஓரிடத்தில் காரை நிறுத்த சொல்லவும் நிறுத்தி விட்டு திரும்பி பார்த்தான். அந்த பெண்ணின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். காரை விட்டிறங்கி சுற்றும் பார்த்து மகிழ்ந்தாள், இவனும் தயக்கத்துடன் கீழிறங்கி மேடம் இங்க ரொம்ப பயங்கரமா இருக்கு, சட்டுன்னு காருக்குள்ள உட்காருங்க, மிருகங்க ஏதாவது வந்துடும் சொல்ல, சொல்ல, அந்த பெண் சற்று தொலைவில் மேடான பகுதியை சுட்டி காட்டினாள்.

அங்கு பார்த்தவன் வியந்தான். இருபது முப்பது குடிசைகள் இருந்தன. கைக் குழந்தைகளுடன் பெண்களும் ஆண்களும் நின்று இவர்களை பார்த்தபடி நின்று கொண்டிருந்தனர்.

அதோ தெரியுது பார்த்தியா அதுதான் நானும் எங்க அப்பாவும் வாழ்ந்த ஊர், இதுக்கு மேல கார் உள்ள வராது, அதனால நீ இங்கேயே இரு, இல்லையின்னா என் கூட வா, மேற்கொண்டு அவனிடம் பேசாமல், கார் கதவை திறந்து ஒரு பெரிய பையை வெளியில் எடுத்து அந்த காட்டுக்குள் செல்லும் ஒற்றயடி பாதை வழியாக அந்த மலை மேட்டில் இருந்த குடிசைகளை நோக்கி சென்றாள். இருங்க, இருங்க, எனக்கு இங்க தனியா இருக்க பயமாயிருக்கு, அவளிடமிருந்த பையை வாங்கி கொண்டு அவளை பின் பற்றி இவனும் ஏற முடியாமல் ஏறினான்.

அந்த குடிசைகளின் வாசலில் நின்று கொண்டிருந்தவர்கள் அனைவரும் இவளை சூழ்ந்து கொள்ள, ஒவ்வொருவராய் அழைத்து பையில் இருந்து கை நிறைய மிட்டாய்களையும், விளையாட்டு பொருட்களையும் கொடுத்தாள். பெரியவர்களுக்கும் துணி மணிகளை எடுத்து கொடுத்தாள்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம், அவர்களுடன் பொழுதை கழித்தவள், அவர்களிடம் ஏதோ மலையாளம் கலந்த தமிழில் ஏதோ சொல்லி விட்டு ஒரு சிதிலமடைந்த குடிசையின் முன்னால் போய் நின்றாள். ஐந்து நிமிடம் கண்ணை மூடி நின்றவள், நான் போயிட்டு வர்றேன், அவர்களிடம் சொல்லி விட்டு வா போகலாம், அவனை அழைத்து அந்த மலைச்சரிவில் இறங்கி கார் நின்று கொண்டிருந்த பாதைக்கு வந்தாள்.

அவளின் பரவசமான முகத்தை பார்த்த கார் டிரைவர் எதுவும் பேசாமல் கார் கதவை திறந்து விட்டான்.ஏறு முன் அந்த காட்டை சுற்று முற்றும் பார்த்து விட்டு ஓரு ஏக்க பெருமூச்சுடன் காரில் ஏறி உட்கார்ந்தாள் அந்த பெண்மனி.

கார் அமைதியாக கோயமுத்தூரை நோக்கி செல்ல ஆரம்பித்திருந்தது. உள்ளிருப்பவளின் நினைவுகளோ அவளது இருபது வருட பின்னோக்கிய வாழ்க்கைக்கு போயிருந்தது. அப்பன், அப்பன். வாய் முணு முணுத்தது.

வானம் இருட்ட தொடங்கியிருந்தது. சிறிது நேரம் போனால் நன்கு இருட்டி விடும். கோவிந்தன் தன் நடையை வேகப்படுத்தினான். இன்னும் இரண்டு கிலோ மீட்டர் நடக்க வேண்டும். குறுக்கு வழியில் இறங்கலாமா என்று யோசித்தான். வேண்டாம், யானை கூட்டங்கள் நின்று கொண்டிருக்கலாம். யானையின் வாசத்தை அறிந்தாலும் அந்த இருட்டில் அடையாளம் கண்டு பிடிக்க முடியாது.

ஏற்கனவே போனவாரம் ஒருவனை சிதைத்து போட்டு விட்டது. இதே போலத்தான் வேலை முடிந்து லாரிக்கு காத்திருக்காமல் நடந்து வந்து கொண்டிருந்தவன், குறுக்கு பாதையில் இறங்கியிருக்கிறான், அந்த மலைச்சரிவில்

வேகமாக இறங்கி நேராக அதன் வயிற்றருகே போன பின் தான் அது யானை என கண்டு பிடித்திருக்கிறான், அப்படியும் சமாளித்து ஒரு மரத்தை கெட்டியாக பிடித்து நகரத்தான் முயற்சித்திருக்கிறான்.

யானைக்கு எப்பொழுதுமே கூர்மை அதிகம், சட்டென திரும்பிய நொடியில் அதன் தும்பிக்கையில் அகப்பட்டு கொண்டு விட்டான். அவ்வளவுதான் போட்டு சிதைத்து விட்டது.

திருமணம் ஆகி இரண்டு மாதம்தான் ஆகியிருந்தது. அவனால் லாரிக்கு இரண்டு மணி நேரம் காக்க வேண்டும். அதற்கு பொறுமையில்லாமல் முன்னர் பொண்டாட்டியை பார்க்க ஆவலாய் பறந்தவன் மொத்தமாய் பறந்து விட்டான்.

காட்டு இலாகாவில் இருப்பவர்கள் இரண்டு மூன்று நாட்கள் வந்து வெடி வைத்து அதை விரட்டுவார்கள். அவை போவது போல போக்கு காட்டி இரண்டு மூன்று நாட்களில் இங்கு வந்து விடுகிறது.

முடிந்தவரை இங்கு தங்கியிருந்து காட்டை ஒட்டி இருக்கும் அக்கம் பக்கம் இருக்கும் எஸ்டேட்டுகளின் வேலிகளை உடைத்து உள்ளே புகுந்து விடுகிறது. அங்கு கடைகளில் வைத்திருக்கும் அரிசி, பருப்பு, உப்பு இருப்பதை எடுத்து கபளீகரம் பண்ணி விடுகிறது.

கோவிந்தனும் இந்த நேரத்தில் கிளம்பி வந்திருக்க மாட்டான், ‘குடியில்’ தன் பெண்ணுக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல், நேற்று அங்கிருந்து காட்டு வழியாக கீழ் பஸ் போகும் பாதைக்கு வந்திறங்கி, வால்பாறைக்கு செல்லும் பஸ்ஸுக்கு கை காட்டி ஏறிக் கொண்டு வால்பாறை கவர்ண்மெண்டு ஆஸ்பத்திரியில், டாக்டரிடம் காண்பித்து மருந்து மாத்திரை வாங்கி வந்தான்.

காலையில் மகளுக்கு கொஞ்சம் பரவாயில்லையாக இருந்தது. சரி இன்னைக்கு வேலைக்கு போய் விட்டு வந்துடலாம், நினைப்பில் கிளம்பி வந்து விட்டான்.

அவன் பொஞ்சாதி அவனை விட்டு போய் விட்டாள், இவனது முரட்டுத்தனத்துக்கு சரி சமமாக இருந்தாள் அவள். எதற்கெடுத்தாலும் சண்டை, சண்டை. அடிக்கடி கோபித்து பக்கத்து எஸ்டேட்டில் இருக்கும் தகப்பன் வீட்டுக்கு போய் விடுவாள்.

கோவிந்தனுக்கு அவள் மீது சந்தேகம் கூட உண்டு. அவள் யாரையோ பார்க்க கூட அடிக்கடி அங்கு போகிறாளோ என்று, அதற்காக அவளிடம் எதிர்த்து கேட்க முடியாது, அவள் ‘ஆமாம்’ அப்படித்தான் என்று சொல்லி விட்டால் இவன் முகத்தை எங்கு கொண்டு போய் வைத்து கொள்வது? அதற்கு பதிலாக அவளை ஏதோ காரணம் சொல்லி சண்டையிட்டு அடித்து உதைப்பான். அவளும் சலிக்காமல் கையில் கிடைத்ததை வைத்து அவனை மொத்துவாள். இவர்களின் சண்டையை ஆறு வயது மகள் பூவரளி பயத்துடன் விழித்து பார்த்து மருளுவாள்.

மகளிடம் முரட்டுத்தனத்தை காட்டமாட்டான். அதென்னவோ அவளை கண்டால் அப்படி ஒரு பாசம் வைப்பான். அவனுடன் வேலை செய்து கொண்டிருந்த ரங்கன் ஒரு முறை கோவிந்தா உங்காத்தா மாதிரியே இருக்கறா உன் பொண்ணு என்று சொல்லி விட்டான். அதிலிருந்து மகள் பூவரளியை அவனும் ஆத்தா.. ஆத்தா என்றுதான் அழைக்கிறான்.

அவளுக்கு காய்ச்சல் என்று தெரிந்தவன் முதல் நாள் ஏதேதோ மருந்தை காய்ச்சி கொடுத்து பார்த்தான். ஆனால் கேட்கவில்லை. மறு நாள் ஆஸ்பத்திரியில் பார்த்து மருந்து வாங்கி வந்த பின்னால்தான் நிம்மதி.

காலை பக்கத்து குடிசை பார்வதி அக்காவிடம் சொல்லி விட்டு வந்தான். அவளுக்கு மதியம் கஞ்சி காய்ச்சி கொடுத்துடக்கா என்று.

சட சடவென்று சத்தம் இவன் காதுகளில் விழ உஷாரானான். பக்கத்தில் எங்கோ யானைகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. அதன் மணம் இவன்

நாசிகளில் ஏறியது. அவரசரப்பட்டு வந்து விட்டோமோ? மனம் கலங்க மேற்கொண்டு போலாமா, இல்லை இப்படியே திரும்பி விடலாமா என்று நினைத்தான். திரும்பினாலும் இருட்டு சுற்றி விட்டதால் வந்த வழியில் என்ன இருக்கிறதென்று தெரியாது.

நடு வழியில் திகைத்து நின்றவன், சரி ஆனது ஆகட்டும், மெல்ல முன்னால் நடப்போம், வண்டி செல்லும் பாதையிலேயே போலாம், நேரமானாலும் பரவாயில்லை, குறுக்கு வழி வேண்டாம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவன் நெஞ்சு தடக் தடகென அடித்துக்கொள்ள அந்த ஊரின் எல்லையை தொட்டபின்னால்தான் அவனுக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது. அப்படியும் ஊர் எல்லையிலிருந்து அரை பர்லாங்க் நடக்க வேண்டும் இவன் குடிசைக்கு வர, அது பெரிய பயமாக தோன்றாது. வழியெங்கும் புதர் காடுகள்தான் என்றாலும் அங்கங்கு குடிசைகள் இருக்கும் ஒற்றை வெளிச்சத்துடன் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருக்கும். அதனை பார்த்தபடியே குடிசையை அடைந்து விடலாம், இந்த எண்ணத்திலேயே வேகு வேகுவென்று நடந்தான்.

பாதையிலிருந்து முப்பது படிகள் ஏறி இவன் இருந்த குடிசையை அடையும்போது எட்டு மணியை தொட்டு விட்டது. லாரிக்கு காத்திருந்து வந்திருந்தாலும் இந்நேரத்துக்கு வந்திருக்கலாம், தனக்குள் முனகியபடி குடிசைக்குள் நுழையவும் பாதைக்கு கீழே லாரி நிற்கும் சத்தமும், பக்கத்து குடிசை ஆட்கள் இறங்கி மேலே வருவதும் தெரிந்தது. எல்லாம் ஒண்ணுதான், நாமளும் லாரியிலேயே வந்திருக்கலாம், தனக்குள் முணங்கியபடி ஆத்தா..ஆத்தா..மகளை பாசமுடன் அழைத்தான்.

அப்பாவ், அப்பாவ், வெளியிலிருந்து சத்தம் வரவும் எட்டி பார்த்தான். அப்போவ் நான் பாரவதி அத்தையானண்ட இருந்தேன். லாரி சத்தம் கேட்டு எட்டி பார்த்துட்டு வாறேன். ஆமா நீ லாரியிலயா வந்தே? மகள் கேட்டாள்.

அதை ஏன் கேக்கற புள்ளே, உனக்கு என்னாச்சோன்னு நடந்து ஓடியாறேன், யானைக வழியில நின்னுடுச்சு, வந்து சேர்றதுக்குள்ள லாரியே வந்துடுச்சு, மகளிடம் ஆற்றாமையாய் சொன்னவன், சரி கஞ்சி காச்சிடட்டா? பரிவுடன் கேட்டான். நீ மதியம் சாப்பிட்டயா ? ம்..பார்வதி அத்தை வூட்டுல மதியம் சாப்பிட்டுட்டேன். இப்ப உடம்பு எப்படியிருக்கு? பரிவுடன் கேட்டான்.

ம்..நல்லாயிருச்சு, சொன்னாலும் அவள் குரலில் காய்ச்சலின் சோர்வு தென்பட்டது. கோவிந்தனுக்கு தன் மனைவியின் மேல் கோபம் கோபமாக வந்தது, சண்டாளி குழந்தைக்காகவாவது இங்க இருந்தா என்ன?

இரவு இவன் ஆக்கியிருந்த சாதத்தை இருவரும் உண்டு விட்டு படுத்தனர்.

கோவிந்தனுக்கு பயமாக இருந்தது. தான் வேலை செய்வது ‘காட்டு கூப்பில்’ மரம் அறுப்பது. என்றைக்கு வேண்டுமானாலும் யானையோ, புலியோ அடித்து போட்டு விட்டால், தன் குழந்தை கதி என்னவாகுமோ? இரவு முழுக்க புரண்டு புரண்டு படுத்தவன் நாளை பொண்டாட்டி ஊருக்கு போய் பார்ப்பது என்று முடிவு செய்தான்.

வாசலில் சத்தம் கேட்டு வெளியே வந்த மாமியார் இவனை கண்டதும், புலம்ப ஆரம்பித்தாள். என் புள்ளைய இப்படி பாடாபடுத்தறியே, நீ நல்லா இருப்பியா? அவளின் பும்பலை கேட்டு வெளியே வந்த கோவிந்தன் பொஞ்சாதி மாரி அவனை கண்டதும் முகம் சுழித்தாள் “இந்த ஆள் எதுக்கு இங்க வந்திருக்கான்” தன் மகள் கூட நின்று கொண்டிருப்பதை பார்த்தவள் “வாடி உங்கப்பனை நம்பி அங்க இருந்தியே, இப்ப என்னாச்சு? இப்ப என்னாத்துக்கு உன்னைய கூட்டியாந்துருக்கான்.

அதற்குள் மாரியின் அப்பா வெளியே சென்றிருந்தவர் அப்பொழுதுதான் வீட்டிற்கு வந்தவர், கோவிந்தனை பார்த்ததும், வா, வா என்ன வெளியவே நின்னுட்டே, அவனை கையை பிடித்து உள்ளே அழைத்து சென்றார். கோவிந்தன் மகளை இழுத்து அணைத்து கொண்டே உள்ளே சென்றான்.

ஏதோ முணங்கியபடி மாரியும் அவள் அம்மாவும் உள்ளே நுழைந்து தங்களுக்குள் குசு குசுவென ஏதோ பேசிக்கொள்வது கோவிந்தனுக்கும் கேட்கத்தான் செய்தது.

என்னால முடியலீங்க, மாரியும் என் கூட குடும்பம் நடத்தறதுக்கு வர மாட்டேங்கறா, நான் ஒத்தை ஆளு கூப்புக்கு போயிட்டு பொட்ட புள்ளைய தனியா வச்சுட்டு பயமாயிருக்கு. என்னைய வேணா அவ கழட்டிகிட்டடும், இந்த புள்ளைய அவ கூட வச்சுக்கட்டும், அம்மாவோட இருந்தா அது நிம்மதியா இருக்கும், நீங்கதான், அவ கிட்ட சொல்லி ஏதாவது ஏற்பாடு செய்ய சொல்லணும். மாமனாரிடம் அழுவது போல சொன்னான்.

அவருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. தன் மகள் செய்வது சரியில்லை என்று நன்றாக தெரிந்தது, என்ன செய்ய முடியும்? அவள் அம்மா அவளுக்கு ஒத்து ஊதும்போது. சரி பேத்தியவாவது கூட்டி வச்சுக்கணும்னு அவளுக்கு தோணவே மாட்டேங்குதே, இருங்க, உள்ளாற போய் பேசிட்டு வாறேன். உள்ளே காச் மூச்சென்று ஒரே கூப்பாடாய் இருந்தது. அவனுக்கு பொறந்தவளை என் கூட நான் எதுக்கு வச்சுக்கணும்? மாரியின் குரலும், அதற்கு அவளின் அப்பா அவளை கடிந்து கொள்வதும் கேட்டது. முக்கால் மணி நேரம் கழித்து வெளியே வந்தவர், சரி பொண்ணை விட்டுட்டு போங்க, இனிமேல் அவ உங்க கூட வந்து வாழற மாதிரி தெரியலை, சொல்லி விட்டு மீண்டும் உள்ளே போனார்.

உள்ளே போன மூவரும் வெளியே வருவதாக தெரியவில்லை. பூவரளி தனித்து நின்று நின்று பார்த்தாள். அம்மாவாவது தன்னை பார்க்க வெளியே வருவாள் என்று எதிர்பார்த்தாள். ஆனால் உள்ளே அமைதியாக இருந்தது. இவளுக்கு பயமாக இருந்தது. உள்ளே போகலாமா? யோசனை தோன்றினாலும் அவர்கள் ஏதாவது சொல்லி விட்டால்..!

கோவிந்தன் சொல்லிவிட்டு சென்றது ஞாபகம் வந்தது. ஆத்தா என்னால உன்னைய தனியா வளர்த்த முடியும்னு தோணலை, அப்பனுக்கு ‘காட்டுல வேலை’ ஏதாவது ஒண்ணு கிடக்க ஓண்ணாயிடுச்சுன்னா, அப்புறமா உன்னைய யார் வச்சு காப்பாத்துவா சொல்லு? அதுதான் உங்கப்பன் இப்பவே உங்கம்ம கிட்ட விட்டுட்டு போறேன். அவங்க குணம் உனக்கு தெரியும்தானே. எப்படியாச்சும் இருந்து பழகிக்க. எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லம் உன்னை எங்கியாவது

தனியா வந்து பாத்துட்டூ போறேன். அழுகையுடன் சொன்னவன், அப்படியே சடக்கென்று எழுந்து வெளியே வந்து அந்த தோட்டத்து வழியாக விரைந்து நடக்க ஆரம்பித்தான்.

நடக்க நடக்க அவனுக்கு அழுகையாக வந்தது. தன்னோட ஆத்தா உயிரோட இருந்திருந்தா இப்படி பெத்த புள்ளைய இவங்க வீட்டுல கொண்டு வந்து விட்டிருப்பமா? அவ போயி சேந்துட்டாளே, நான் என்ன பண்ணுவேன், தனக்குள் புலம்பியபடியே நடந்தான்.

அவனுக்கு தன் குடிசைக்கு போகவே பிடிக்கவில்லை, யாரிருப்பார்கள் அவனுக்காக காத்திருக்க…! மாமனார் ஊரிலிருந்து ஏழு கிலோ மீட்டர் காட்டு வழிக்குள் செல்ல வேண்டும். ஒரே ஒரு பேருந்து நாளில் மூன்று முறை வந்து அவர்கள் ஊரை சுற்றி செல்லும். பஸ்ஸுக்காக காத்திருக்க அவனுக்கு விருப்பமில்லை. நடக்க ஆரம்பித்தான்.

ஊர் எல்லையை தொடவும் பேருந்து அவனை தாண்டி சென்று ஊருக்குள் சென்று நின்றதும் இங்கிருந்து பார்க்கையில் தெரிந்தது. குடிசைக்கு போய்த்தான் என்ன செய்வது? காத்தமுத்து அவன் பங்காளியாக வேண்டும், அவன் அரை பர்லாங் தள்ளி காட்டுக்குள் சாராயம் காய்ச்சி கொண்டிருப்பான். இந்த நிலைமையில் அது போட்டால் மனசு கொஞ்சம் சமாதானமாகும் என்று தோன்றியது, அந்த பக்கம் அவன் கால்கள் திரும்பியது.

காலையில் எழுந்தவனுக்கு தலை வலித்தது, தான் எப்பொழுது குடிசைக்கு வந்து படுத்தோம்? படுத்தவாறே யோசித்தான். ஞாபகம் வரவில்லை. சரி எழுந்து கூப்பு வேலைக்கு கிளம்பலாம், தடுமாறி எழுந்தான்.

“தளக்” “புளக்” சத்தம் அடுப்பில் ஏதோ கொதிப்பது போல கேட்டது? யாரு அது கண்ணை கசக்கி பார்த்தான் அடுப்பின் முன் ஒரு உருவம்? சே..போதை இறங்கலையோ, தலையை உதறியபடி உற்று பார்க்க, பூவரளி அடுப்பு முன் உட்கார்ந்து சோறு கொதிப்பதை உற்று பார்த்து கொண்டிருந்தாள்.

ஏ” புள்ளை’ நீ எப்ப வந்தே? உங்காத்தா வீட்டுலயிருந்து, நான் நேத்தே வந்துட்டேன் அப்போவ், எனக்கு அங்க புடிக்கலை, யாரும் என்னை உள்ள வான்னு கூட கூப்பிடமாட்டேங்கறாங்க.

எப்படி வந்தே? பஸ்ஸுலதான் வந்தேன். நீ புல்லா ஊத்திக்கிணு வூட்டுக்கு வந்தே, உன்னைய படுக்க வச்சுட்டு பார்த்துட்டு இருந்தேன். ‘பார்வதி அத்தை’ இராத்திரி சோறு கொண்டு வந்து கொடுத்துச்சு.

காலையில அத்தையே அரிசி பொங்க சொல்லி அடுப்பை பத்த வச்சுட்டு போச்சு, சோரு பொங்குனா வந்து கூப்பிடு, வந்து அடுப்பை அணைச்சுடறேன்னு சொல்லிட்டு போச்சு.

சுத்தமாக போதை எல்லாம் இறங்கியிருக்க, போய் முகம் கை கால் எல்லாம் கழுவி வந்தவன் அடுப்பை அணைத்து சாதத்தை அப்படியே கலக்கினான். பூவரளி இரண்டு தட்டை எடுத்து வர அதில் ஊற்றி ஆற வைத்தவன் ஏதோவொரு முடிவுடன் ஆத்தா உன்னைய ‘ஸ்கோல்ல’ சேர்த்து விட்டா படிப்பியா ராசா?

ஐயா ஸ்கூலுலயா..!

ஆமா சாமி, இன்னைக்கு அப்பன் டவுனுக்கு போயி அங்க உன்னைய சேர்த்துக்கறதுக்கு கேட்டுட்டு வாறேன். நீ அங்கயே தங்கி படிக்க வைக்க போறேன். வார கடைசியில உன்னை கூட்டி வந்து இங்க வச்சுக்கறேன், என்ன சரியா?

பூவரளிக்கு என்ன சொல்வது என்று புரியாவிட்டாலும், ‘ஸ்கோல்லு’ எனும் வார்த்தை அவளுக்குள் புது வித கிளுகிளுப்பை ஊட்டியிருந்தது.

கோவிந்தன் யார் யார் கையை காலை பிடித்து பூவரளியை டவுனில் இருந்த பள்ளியில் சேர்த்து அங்கேயே தங்கி கொள்ளவும் ஏற்பாடு செய்து விட்டான். பள்ளி ஆரம்பிக்கும் வரை மகளை தன்னுடன் வைத்து கொண்டவன், பின்னர் அவளை கொண்டு போய், பள்ளியிலும், ஹாஸ்டலிலும் சேர்த்து விட்டான்.

அவனுக்கு பெரிய பாரம் ஒன்று இறங்கியிருந்தாலும், வாரக் கடைசியானால், அந்த பள்ளி கூடத்து வாசலில் அவளுக்காக திண்பண்டங்களுடன் நிற்பதும் மாதம் ஒரு முறை அவளை குடிசைக்கு கூட்டி வந்து வைத்து கொண்டு, இரண்டு நாள் கழித்து பள்ளிக்கு கொண்டு போய் விட்டு விடுவதும் நிற்காமல் நடந்தன.

வருடங்கள் வேகமாக ஓடித்தான் போயிருந்தது.

இன்றும், அவள் ஒரு அரசு அதிகாரி ஆகி, பல இடங்களுக்கு மாற்றலானாலும், இவள் அப்பன் கோவிந்தன் யானை மிதித்து உயிரிழந்து போயிருந்தாலும், வருடத்திற்கு ஒரு முறை இந்த காட்டுக்குள் அமைந்திருந்த கிராமத்துக்கு வந்து கோவிந்தனும் இவளும் வசித்து வந்த குடிசையை வந்து பார்த்து மெளனித்து பார்வையால் வருடி செல்வதை மறக்காமல் செய்து கொண்டிருந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *