சொர்கமும் நரகமும் பூமியிலே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 12, 2024
பார்வையிட்டோர்: 1,840 
 

வாழ்க்கை என்பது ரோஜப்படுக்கை அல்ல என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவுக்கு அதில் படுத்தால் முட்களும் அவ்வப் போது குத்தும் என்பதும் உண்மை. இதைத் தான் சொர்கமும் நரகமுமாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிற மரணத்திற்குப் பின் போகும் இடமாகக் கற்பனை பண்ணினால் அது முட்டாள் தனம் என்பேன். இதற்கு ‘ஒரு பானைச் சோறுக்கு ஒரு சோறு பதம்’ போலச் சான்று பாபு லதாவின் அனுபவங்கள். உங்களில் பலருக்கு இதே அனுபவங்களோ அல்ல வேறு விதமாகவோ நிச்சயமாக ஏற்பட்டிருக்கலாம். கதையைப் படியுங்கள். புரியும்!.

கல்யாணமான புதிதில் பாபு வும் லதாவும் விசாகப் பட்டிணத்தில் குடித்தனம் நடத்தினார்கள். வீட்டில் தண்ணீர்க் கஷ்டம் என்று வீட்டை மாற்றினார்கள். அடுத்த வீட்டிலும் தண்ணீர்க் கஷ்டத்தோடு திருட்டுத் தொல்லையும் சேர்ந்தது. பாபுவின் சட்டை மட்டுமல்ல, சைகிள் பார்ட்ஸ்களும் வீட்டுக்காரர் பையனால் திருடப்பட்டன. தவிர வீடும் சௌகரியமாக இல்லை. மறுபடியும் வீடு மாற்றும் படலம். இந்தத் தடவை கடவுளுக்கே இரக்கம் வந்து நல்ல வீட்டைக் கொடுத்தார். நிம்மதியாக வாழ்க்கை ஓடியது.

சிறிது நாட்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள் அடுத்த பிரச்சினை வந்தது. பாபுவுடைய ஆஃபீஸில் மாற்றல் அடிக்கடி உண்டு என்பதால் அவனை ஸெகந்திராபாதிற்கு மாற்றி விட்டார்கள். வீடு பார்க்க வேண்டும், சாமான்களை எல்லாம் பேக் பண்ணணும், காஸ், ரேஷன் கார்ட் இத்யாதி மாத்தணும், அவனுக்கு மிகவும் சலிப்பாக இருந்தது. வீடு கிடைத்தது. ஆனால் ரொம்ப பழைய வீடு, தண்ணீர்க் குழாய் எதுவும் வீட்டிற்குள் கிடையாது, வீட்டிற்கு வெளியே இருக்கும் ஒரே குழாய் தான். வீட்டு உரிமையாளர் பக்கத்தில் இருந்தார்கள், அவர்களோடு பொழுது போக்கிற்காக லதா பேசுவாள். அவர்கள் தெலுங்கர்கள். கொஞ்சம் தமிழ் தெரியும். ஒரு நாள்

வீட்டுக்கார மாமி, இங்கே பாம்பு நடமாட்டம் உண்டு, ஆகையால் இருட்டியவுடன் பின் வாசலை உபயோகிக்க வேண்டாம் என்று சொன்னவுடன் லதாவுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிற மாதிரி இருந்தது பாபுவிடம் விஷயத்தைச் சொல்லி ’ஐயோ, இங்கிருந்தால் உயிருக்கே ஆபத்து போலிருக்கே! வேறு வீடு பாத்துக் கொண்டு போயிடலாம்’ என்றாள். அதுவுமல்லாமல் மாலை 6 மணிக்குள் வெளிச்சம் இருக்கும்போதே கதவைச் சாத்தவில்லை என்றால் கொசு ஆளைக் கொன்று விடும், ஆகையால் பாபு ஆஃபீஸிலிருந்து சீக்கிரம் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

இந்த கஷ்டத்திலிருந்து எப்பொழுது விடுதலை வரும்? என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பாபு, லதா தம்பதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்தனர். நல்ல வேளையாக அவர்களுக்கு ஆறே மாதத்தில் கல்கத்தாவுக்கு மாற்றல் கிடைத்தது. வீடும் நல்ல வீடாக கிடைத்தது. அங்கு போன பிறகு லதாவுக்கு ரெண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. அடுத்து அவர்கள் சென்ற விசாகப் பட்டிணமும் கவலையில்லாமல் இருந்தது. அங்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மூத்த பிள்ளைகள் இருவரும் ஸ்கூலுக்குச் சென்று படிக்கும் காலத்தில் மறுபடியும் கல்கத்தா மாற்றல். கொடுக்க முடிந்த வாடகைக்கு வீடு கிடைக்காமல், நல்ல வேளை, ஸ்கூலுக்கு பக்கத்தில் கிடைத்தது. வீடு. பரவாயில்லை பழைய வீடானாலும், சின்னதாக இருந்தாலும், வீடு நன்றாகத்தான் இருக்கிறது என்று எண்ணினாள் லதா.

ஆனால், அந்த வீட்டுப் பிரச்சினைகள் போகப் போக பூதம் மாதிரி கிளம்பி இவர்களுக்கு நரகத்தை நினைவு மூட்டின. அந்த வீட்டில் செவியான், ரத்தம் உறிஞ்சும் அட்டை, தேள், நத்தை, சுண்டெலி என்று எல்லா ஜீவ ஜந்துக்களும் குடி இருந்தன. வீட்டிற்கு மேற்கூரை தகரம் அடிக்கப்பட்டு இருக்கும் அதற்குக் கீழே மரத்தாலான கூரை இருக்கும் இரவில் தூங்கும் பொழுது வெய்யில் காலத்தில் சூடு தாங்காமல் மரப்பட்டையின் இடுக்குகளில் ஒண்டியிருக்கும் தேள் குட்டிகள் மேலிருந்து விழும். திடீரென்று சுரீரென்று கடுக்கிறதே என்று

தலையணை போர்வையை உதறிப் பார்த்தால் தேள்குட்டி ஓடும். மழைக் காலமாக இருந்தால் சுவரில் நத்தைகள் சிறியதும் பெரியதுமாய் ஓடுவதைப் பார்க்கலாம், அப்பொழுது தான் தேய்த்த பாத்திரமாகவே இருந்தாலும் அதை மறுபடியும் கழுவி விட்டு எல்லா பக்கத்திலும் எதுவும் இல்லையென்று உறுதி செய்த பின்னரே தான் உபயோகிக்கணும், அடுப்பில் சமைக்கும்போதும் மூடி வைக்கணும் இல்லாவிட்டால் நத்தை விழுந்து விடும் என்பது அனுபவம் கற்றுக் கொடுத்த பாடம்.

வெளியில் மழை என்றால் வீட்டிற்குள்ளும் மழை. சமையலறையில் குளம் உருவாகி இருக்கும், அதற்கு ஒரு மரத்தாலான பாலம் கீழே செங்கல்லை உயரத்திற்காக வைத்து நடப்பது வழக்கமானது ரோடில் வெள்ளம் வந்தால் வீட்டு டாய்லெட்டிலும் தண்ணீர் நிரம்பி விடும். உபயோகப் படுத்த முடியாது. நல்ல வேளை, பாபுவின் அக்கா வீடு பக்கத்தில் இருந்ததால் பிரச்சினை இல்லை. ஒழுகும் கூரையினால் பல சாமான்கள், தையல் மிஷின், அந்த காலத்து ஸ்டீல் டிரங்கு பெட்டி எல்லாம் துருப் பிடித்து வீணாயின. ஸ்டோர் ரூமில் எப்போது தேள் கொட்டும், பாத்ரூமில் தேள் இருக்கிறதா என்று மங்கலான விளக்கு வெளிச்சத்தில் தெரியாது. தவிற சில சமயம் மேலே மரக்கூறையின் மேல் ஓடும் சுண்டெலி சாப்பிடும் போது தட்டருகில் வந்து விழும். போதும் போதாதற்கு, சுண்டெலி குஞ்சுகள் சமையல் அறை ஷெல்ஃப் இடுக்கில் இருந்தன. தாய் எலி, வீட்டில் இருந்த நல்ல புத்தகங்களை எல்லாம் குதறிப் போட்டு இருந்தது. இதை விட நரகம் நல்ல சௌகரியமான இடமாகத்தான் இருக்கும் என்று லதா எண்ணினாள்.

சுவர்கள் ஈரமாக இருப்பதால் கரையான் தொல்லை வேறு. அங்கு அறையில் இருந்த பரண்களில் வைக்கப்பட்ட புத்தகங்களை எல்லாம் பதம் பார்த்தது/ நல்ல வேளை உடனடியாக கவனித்ததால் பெரும்பாலான புத்தகங்களைக் காப்பாற்ற முடிந்தது. ஊருக்குப் போவதென்றால் பாபுவுக்குச் சரியான வேலை, அந்த கரையான் தடத்தை எல்லாம் சுத்தம் செய்து அதன் மூலம்

எங்கு இருக்கிறதோ அதைப் பொத்து அதனுள் கரையான் மருந்தை அடைத்து பஞ்சை வைத்து மூடி விடுவான். மேலும் கிளம்புவதற்கு முன் வீடு முழுக்க ஃப்ளிட் அடித்து கதவைச் சாத்துவது வழக்கம்.

அவர்கள் ஒரு தடவை மெட்ராஸுக்கு செல்லும் பொழுது, பாபு அவன் பள்ளிப் பருவ நண்பன் தீபக்கைப் பார்க்க நேர்ந்தது. வெகு நாளைக்குப் பிறகு சந்தித்ததில் இருவருக்கும் ரொம்ப சந்தோஷம். தீபக் ஆஃபீஸ் விஷயமாகத் தனியாக வந்திருந்தான் பாபு அவனுக்கு தன் குடும்பத்தை அறிமுகப் படுத்தினான். பாபுவை, ’நீ எங்கு, எந்த கம்பெனியில் வேலை செய்கிறாய்? வாழ்க்கை எப்படி ஓடுகிறது?’ என்று கேட்க, ”அதையேன் கேட்கறே, கம்பெனில அடிக்கடி மாத்தல். ஒரு இடத்தில நிம்மதியா இருக்க விடறதில்ல, கொழந்தைகளும் பெரிசாயிண்டு வரா. படிப்பு கெடறது, கெடச்ச வீடாவது நன்னாயிருக்கா? போன ஜென்மத்தில ஊர்வனவா இருந்தேனோ என்னவோ அந்த பழைய பந்தம் விடாம தொடர்ந்து வறது, ஸகல வித ஜீவராசிகளுடனும் குடித்தனம் நடத்தறோம், இதுல சுண்டெலி வேற தன் கை வரிசையைக் காட்டறது. அது மூடின அலமாரிக்குள் வாசம் பண்ணிண்டிருக்கும், ஒரு நாள் என் மூத்த பிள்ளை ’அம்மா, அலமாரில பெரிய புழு இருக்குன்னு சொன்னவுடன் இவ போய்ப் பாத்தா அது எலிக் குஞ்சு, அலமாரி முழுக்க சுத்தம் செய்து பாத்தா 6 எலிக்குஞ்சுகள் இருந்தது, அது புத்தகங்கள் வைத்த அட்டைப் பெட்டிக்குள்ளும் நிறைய குட்டி போட்டிருந்தது, நல்ல புஸ்தகங்களைக் கடிச்சுக் கொதறியிருந்தது”.

“இது போதாதுன்னு வீட்டுக்காரன் வீட்டைப் பெரிசு பண்ணப் போறேன்னு எங்களோட பாதி வீட்டை இடிச்சுத் தள்ளிட்டான், பாத்ரூம், டாய்லெட் கிடையாது, வீட்டுக்காரன் வீட்டு பாத்ரூம், டாய்லெட் தான் உபயோகிக்கணும்.ஒரு ரூமும் ஒரு சமையலறையும் தான், அந்த ரூமுக்கு கதவு கூட ஒரு உதை விட்டால் திறக்கிற மாதிரி இருக்கும், இன்னொரு ரூமைப் பாதியாக்கி அதுக்கு ஒரு பெரிய ப்ளாஸ்டிக்கை திரைச்சீலை மாதிரி

போட்டிருக்கான். ரோடிலிருந்து யார் வேணா உள்ளே நுழைந்து விடலாம் அவன்.இடிச்ச இடத்தைச் சரியாக்கிற வரை இந்தக் கஷ்டம் தான். மொத்தத்தில செத்துப் போய்த் தான் நரகமோ, சொர்க்கமோ பாக்கணும்கறது இல்ல, பூலோகத்திலேயே நரகத்தைவிட மோசமான இடத்தை வேற வழியில்லாம பாத்துண்டு இருக்கோம்.”

”இவ்வளவு கஷ்டத்திலும் நாங்க சந்தோஷமா இருக்கோம்னா அதுக்குக் காரணம் எங்கள் கொழந்தைகள் தான். சொல்லி வெச்சாப்பல மூணும் பசி, தாகம், எனக்கு இது வேணும், அது வேணும்னு எந்த ஒரு விஷயத்திலும் படுத்தினதே இல்ல அது சரி, நான் என்னைப் பத்தியே இத்தனை நாழி பேசிண்டு இருந்துட்டேன், உன்னைப் பத்தி சொல்லு.” என்று பாபு கேட்க, “உனக்கு நரக வாழ்க்கைன்னா, என் வாழ்க்கை சொர்க்கத்தில் ஒரு நரகம்னு சொல்லுவேன். என் மனைவி பணக்கார இடத்திலேந்து வந்தவ, நான் கை நிறைய சம்பாதிச்சாலும், எல்லா சௌகரியங்கள் இருந்தாலும் அவ என்னை மதிக்க மாட்டா. எப்ப பாரு லேடீஸ் க்ளப், ஸ்நேகிதிகள்னு ஊரைச் சுத்துவா. வீட்டில சமையல் எல்லாம் ஆள்காரி தான் பண்ணுவா, நான் காலையில் ஆஃபீஸ் போய் ராத்திரி வர நேரமாகும். குழந்தைகளுக்கு நல்லது, பொல்லாதது யார் சொல்லித் தருவா? அதுவும் அதுகள் அம்மா செல்லம், அவ கண்டிக்கவே மாட்டா, அதனால படிப்பு சரியில்ல, டி.வியே கதின்னு ரெண்டு பிள்ளைகளும் காலத்தைக் கழிக்கறது, தட்டிக் கேட்டா எதிர்த்துப் பேசறது, எனக்கு குழந்தைகளை அடிக்கப் பிடிக்காது, சரி, நம்ம மரியாதையைக் காப்பாத்திக்க வாயை மூடிண்டு இருப்பது தான் நல்லதுன்னு விட்டுட்டேன். வீட்டிற்குப் போகணுமேன்னு இருக்கும். அங்கு அன்பா ஆதரவா பேச யார் இருக்கா? இப்ப உன்னைப் பாத்து பேசினதில கொஞ்சம் பாரம் கொறஞ்சா மாதிரி இருக்கு’ என்றான் தீபக். இருவரும் தங்கள் விலாஸங்களைப் பரிமாறிக் கொண்டனர்.

லீவு முடிந்து எல்லோரும் ஊர் திரும்பினர். பாபு ஆஃபீஸுக்குப் போய் விட்டான். அவன் மாலை வீட்டிற்கு வந்ததும் காஃபி எல்லாம் குடித்த பின் லதா, ’இங்கே பாருங்கோ, இவ்வளவு கஷ்டததைத் தாங்கிண்டு இனி மேலும் இங்கே இருக்க வேணாம், அதிக வாடகையாக இருந்தாலும் பரவாயில்ல, இன்னும் உடும்பு, பாம்பு, முதலைன்னு வறதுக்கு முன்னாடி, வேற வீடு பாத்துடுவோம் என்று சொல்லக் கேட்டு, ‘நானே அதைப் பத்தித் தான் சொல்ல வந்தேன், எங்க ஆஃபீஸ்ல ஒரு பெரிய பில்டிங்கை லீஸுல எடுத்திருக்கா. ஆஃபீஸர்கள் யாருக்கெல்லாம் வீடு வேணுமோ அப்ளை பண்ணச் சொன்னா, நானும் என் பேரைக் குடுத்திருக்கேன், கூடிய சீக்கிரம் வீடு கிடைக்கும், பொறுமையா இரு, ஆமாம், இன்னிக்கி என்ன பிரச்னை? இவ்வளவு அவசரமா வீடு மாத்தணும்னு சொல்றே?” என்றான் பாபு.

”நான் வழக்கம் போல கொழந்தைகளை ஸ்கூல்லேருந்து கூட்டிண்டு வரப் போனேன், திடீர்னு மழை பெரிசா பிடிச்சிண்டுடுத்து. கொஞ்ச நாழி காத்துப் பாத்தேன் . மழை நிக்கற வழியா இல்ல, எனக்கே முழங்கால் அளவு வெள்ளம் வந்துடுத்து. மெட்றாஸ் போல கல்கத்தாவிலும் நிரந்தர ட்ரைனேஜ் ப்ராப்ளம். ரிக்ஷாவும் கெடக்கல. இதுகள் சின்னதுகள்ங்கறதாலே இன்னும் லேட் பண்ணினா கழுத்தளவு தண்ணி வந்துடுத்துன்னா கஷ்டம், அதனால் ஒரு ஸ்கூல் பொண்ணு குடுத்த ப்ளாஸ்டிக் பேப்பரை கொழந்தைகள் தலையில் போத்தி வீட்டுக்குக் கஷ்டப்பட்டுக் கூட்டிண்டு வந்துட்டேன், வெள்ளத்தில என்ன அசிங்கமெல்லாம் இருக்குமோன்னு கொழந்தைகளை வீட்டுக்கு வந்த உடனே குளிக்கச் சொன்னேன், பெரிய பசங்க குளிச்சு வந்தப்புறம் சின்னவனைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த போது ’அம்மா, காலில் என்னமோ கடிக்கிறது’ன்னு சொன்னான். ஒண்ணுமில்லடான்னு சொல்லிட்டு ஸோப் தேய்க்கும் போது மறுபடி அவன் கடிக்கிறதுன்னு குதிக்க ஆரம்பிச்சான், அவனைத் தள்ளி நிக்கச் சொல்லிட்டுப் பாத்தா பெரிய தேள். ஐயோ, பாவமே! அது தான் அவன் கடிக்கிறதுன்னு சொல்லியிருக்கான்னுட்டு எனக்கு வந்த ஆத்திரத்தில் இரும்பாலான அந்தத் தண்ணி வாளியாலே ஒரே

போடு, அது செத்துடுத்து அப்பறமா உங்க அக்கா சொன்னபடி அவன் காலில் எங்கே கடிச்சுதோ அங்கே பெருங்காயம், சுண்ணாம்பு தடவினேன்’ அதுவுமில்லாமல் வீட்டுக்காரன் ஒயர்களை சரியாக பாதுகாப்பு இல்லாம தொங்க விட்டிருக்கான், அதுலேந்து அப்பப்போ நெருப்புப் பொறி வறது, மழைக் காலம் வேறே, ஷாக் அடிச்சதுன்னா என்ன பண்ணறது?” என்றாள் லதா.

”இவ்வளவு நாள் பொறுத்தோம், இன்னும் கொஞ்ச நாள், ஆஃபீஸ்ல வீடு கெடச்சிடும். அதுக்கப்பறம் இந்த கும்பீபாகாத்துலேர்ந்து விடுதலை,” என்று ஆறுதல்லகச் சொன்னான் பாபு. சிறிது நாட்கள் கழிந்தது. இவ்வளவு கஷ்டத்தைக் கொடுத்த வீட்டுக்காரன் வீட்டைக் காலி செய்யும்படி சொன்னான் நல்ல வீடுக்காகக் காத்திருக்கிறோம். என்று சொல்லி விட்டு அந்த ஒயர்களைச் சரிப் படுத்தச் சொன்னான் பாபு. அவன் பண்ணுகிறேன் என்று சொன்னானே தவிற ஒன்றும் செய்யவில்லை இவர்களும் அவன் எதிர்பார்த்தபடி உடனே வீட்டைக் காலி செய்யவில்லை. பெங்காலி வீட்டுக்காரர்கள் குடியிருப்பவர்களை விரட்ட எடுக்கும் ஒரே ஆயுதம் தண்ணீர் தான். அவன் உடனே மெயின் வால்வை மூடித் தண்ணீரை நிறுத்தி விட்டான். வெளியில் இருந்து காசுக்குத் தண்ணீர் வாங்கிக் காலத்தை ஓட்டினார்கள்.

பாபு எதிர் பார்த்தபடி ஆஃபீஸில் வீடு கொடுக்கவில்லை. விதிகளின் படி பாபு வுக்குத் தான் கொடுக்க வேண்டும் என்றாலும், சேர்மனுடைய உறவினன் ஒருவனுக்கு, விதிகளுக்குப் புறம்பாகக் கொடுத்து விட்டார்கள். இருந்த ஒரு நம்பிக்கையும் போய் விட்டது. 19 வருஷம் கம்பெனிக்கு உழைத்துக் கண்ட பலன் தான் என்ன? தன்னை மதிக்காத கம்பெனிக்கு தானும் உழைக்கத் தேவையில்லை என்று தீர்மானித்து விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டான். கல்கத்தாவில் ஸ்கூல் நன்றாக இருந்தாலும் ட்யூஷனுக்கு ஆசைப்பட்டு ஆசிரியர்கள் வகுப்பில் சரியாக பாடம் நடத்த மாட்டார்கள். ஆனால் கான்வென்ட் அளவிற்கு பாடத் திட்டம். அதனால் மாணவர்கள் சிரமப்

படுவார்கள். மெட்ராஸ்ல படிப்பு நன்றாக இருக்கும் என்று பலரும் சொல்லக் கேட்டு அங்கே குடியேறினார்கள்.

இங்கும் வந்த புதிதில் எந்த பிரச்னையும் இல்லை ஆனால் சிலருக்கு ஜாதக விசேஷம் நிம்மதியாக இருக்க விடாது. மழைக் காலம் ஆரம்பமானவுடன் வீட்டிற்குள் தண்ணீர் வந்து விடும், பாவம் அவர்களுக்கு இது தெரியாது, ஒரு நாள் தூங்கும் போது தலைப் பக்கம் ஈரமாக உணர்ந்து எழுந்து விளக்கைப் போட்டால் அது எரியவில்லை. ஒவ்வொரு ஊரில் ஒவ்வொன்று மோசம் என்றால், மெட்ராஸில் மோசமானது மின் துறை தான், அடிக்கடி கரண்ட் போகும், அல்லது தேவதாசிகள் வீட்டு விளக்குப் போல மங்கலாக லோ வோல்டேஜ், இல்லையென்றால் அறிவுப்பு இன்றி ட்ரான்ஸ்ஃபார்மரை செக் செய்கிறோம் அல்லது பராமரிப்பு என்று காலை ஒன்பதிலிருந்து மாலை ஐந்து வரை மின்சாரம் இருக்காது என்று முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென்று அணைப்பார்கள். அணைப்பதில் பக்காவாக இருந்தாலும் திருப்புவதில் இஷ்டம் போல ஐந்து மணிக்குப் பதில் ஆறு அல்லது ஆறரை என்று ஆக்குவார்கள். வேறு எந்த மானிலத்திலும் இல்லாத வழக்கம் இது. வழக்கம் போல் கரண்ட் போயிருந்தது, டார்ச் வெளிச்சத்தில் பார்த்தால் பாதி ரூம் வரை மழைத் தண்ணீர் வந்து எல்லாம் ஈரம், பிறகு குழந்தைகளைக் கட்டிலில் படுக்கச் சொல்லி டார்ச் வெளிச்சத்திலேயே அறையைத் துடைத்து மேலும் தண்ணீர் வராதிருக்க வாசற்படிக்கும் கதவுக்கும் உள்ள இடை வெளியை ஒரு தடித் துணியால் அடைத்துப் பிறகு படுத்தார்கள் பாபு தம்பதிகள்.

மெட்ராஸ் வீட்டுக்காரன் படிக்கட்டு வரந்தையைச் சரியான உயரத்துக்குக் கட்டாததால் வந்த வினை. மேலும் அடுத்த வீட்டு பாத்ரூம் சுவர் இவர்கள் வீட்டோடு ஒட்டியிருந்ததாலோ; என்னவோ சுவரிலிருந்து துர் நாற்றமான தண்ணீர் ஊறி வரும். அதற்குப் புடவையை அண்டக் கொடுத்தாலும் அது நிமிஷத்தில் ஈரமாகி விடும், அதைப் பிழியும் போது, தண்ணீரின் துர் நாற்றம் குடலைப் பிடுங்கி எடுக்கும். பாபு குடியிருந்தது மாடி வீடு. கீழே

இருப்பவர்கள் வீட்டில் கரையான் புற்று படர்ந்து இவர்கள் வீட்டிற்கும் கரையான் வந்து விட்டது. அது புது வீடு என்பதால் வராது என்று நினைத்தவனுக்கு கரையான் சரியான வேலை கொடுத்தது. வீட்டுக்காரன் காசுக்கு சோம்பி மணலை அதிகம் போட்டுச் சுவர் கட்டி இருப்பன் போல. அப்ப இந்த வீடும் லாயக்கு இல்லை. சின்னதாக வெள்ளைப் புழு மாதிரி தரையில் அட்டைப் பெட்டி பக்கத்திலிருந்து ஓடி வருவதைப் பார்த்து சந்தேகம் எழுந்து பெட்டி மேல் இருந்த போர்வையை உதறினால் அது மேல் பக்கம் நன்றாக இருந்ததே தவிற உள்ளே அப்படியே அரித்து நாசம் பண்ணியிருந்தது அதன் அடியில் இருந்த அட்டைப் பெட்டியில் இருந்த புத்தகங்கள், மர சாமான்கள் எல்லாம் வீணாய்ப் போயின. ஒரு சமயம் மிகப் பெரிய தவளை கூட வந்து விட்டது. தாவித் தாவி குதிப்பதால் அதை விரட்டுவது மிகவும் கஷ்டமாக இருந்தது. வெளியே சென்று திரும்பி வந்த பாபுவின் மூத்த பிள்ளை கையாலேயேப் பிடித்து வெளியே விட்டு வந்தான். அவன் மிகவும் தைரியசாலி.

பக்கத்து வீட்டில் இருக்கும் முருங்கை மரத்திலிருந்து கம்பளிப் பூச்சி, மேலே இருக்கும் ஜன்னல் வழியாக வரும். ஓணான் வரும். அது டாய்லெட்டை மூட மறந்து விட்டால் அதற்குள் போய் ஒளிந்து கொள்ளும். தண்ணீர் ஊற்றினால் உள்ளே போய் விடும், சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் தலையை மட்டும் நீட்டிப் பார்த்து இருக்கும். அதை விரட்டாத வரை வெளியில் இருக்கும் காமன் டாய்லெட் தான் உபயோகிக்க வேண்டும். பிறகு டாய்லெட்டிற்குள் ஒரு கம்பைச் செருகி வைத்து டாய்லெட் வெண்டிலேட்டரைத் திறந்து வைத்து கதவை மூடி விட்டான் பாபு. அது எப்பொழுது அந்த கம்பின் மேல் ஏறி ஜன்னல் வழியாக தப்பித்ததோ தெரியாது. பிறகு வரவில்லை. போதும் போதாதற்கு இங்கும் சுண்டெலித் தொல்லை வேறு.

வீட்டைப் படைத்த வீட்டுக்காரர்கள் சிலருக்கு குடித்தனக்காரர்களிடம் ஒத்துப் போகும் சுபாவம் இருப்பதில்லை. நம் பக்கம் நியாயம் இருந்தாலும் மற்ற

குடித்தனக்காரர்கள் அவர் பக்கம் சாய்ந்து விடுவர். இந்த வேலையில் மெட்ராஸில் சில தமிழர்கள் பலே காரிய வாதிகள். இதைச் சாக்கிட்டுத் தங்கள் வீட்டில் சௌகரியம் செய்து தருவதற்காக வீட்டுக்காரனைத் தாஜா செய்வார்கள். பாபுவை வீட்டைக் காலி செய்யச் சொன்னார் வீட்டுக்காரர். பாபுவின் கடைசிப் பையன் படிப்பு முடிய ஒரு வருடம் இருக்கிறது, அது முடிந்தவுடன் நான் வேறு வீடு பாத்துக் கொள்கிறேன் என்று சொல்லியும் அவர் தண்ணீர் பாபுவுக்கு வராத மாதிரி செய்து விட்டார். பாபுவுக்கு ஆதரவாகப் பேச யாரும் முன் வரவில்லை. பாவம் வெளியிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து காலம் ஓட்ட வேண்டியதாகி விட்டது.

மறுபடியும் வீடு தேடல், சாமான்களை ஏறக் கட்டுவது ஆகிய வேலைகள் தொடர்ந்தன. நல்ல பெரிய வீடாக கிடைத்தது ஆனால் பழைய வீடு. பாபு வீடு பார்த்த போது விடுமுறை. அதனால் அடுத்த வீட்டில் ஸ்கூல் இருப்பதோ, அங்கு எழும் சத்தங்களைப் பற்றியோ தெரியவில்லை. வீட்டுக்காரரும் சொல்லவில்லை. காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை சந்தைக்கடை இரைச்சல் தோற்று விடும், அதாவது குழந்தைகள், போடும் – ஆசிரியர்கள் அதட்டும், ஸ்கேலால் லொட்டு லொட்டு என்று தட்டும் – சத்தம், மைக்கின் சத்தம், ஸ்கூலுக்கு வரும் வண்டிகள் எழுப்பும் ஹார்ன் ஒலி) இவை யாவும் இருக்கும் என்பது பிறகு தான் தெரிந்தது. யாராவது ஃபோன் பேசினால் சரியாகக் காதில் விழாது. கூப்பிட்டால் கேட்காது. மத்யானம் கொஞ்சம் கண் அசர முடியாது. பள்ளிக்கூட பாத்ரூம்களை சுத்தம் செய்யாமல் அவற்றில் இருந்து எழும் மூத்திர வாசனை, அதனால் கொசுத்தொல்லை. மழைக் காலத்தில் வீடு ஒழுகி சுவரிலிருந்து தண்ணீர் ஊறும். சுவரை ஒட்டித் துணியைக் கட்டித் தொங்க விட்டு அதற்குக் கீழே வாளியை வைப்பார்கள் பாபு தம்பதிகள். மழையெல்லாம் ஓய்ந்த பிறகு சிறிது நாட்கள் கழித்துப் பார்த்தால் சுவர்கள் எல்லாம் பூஞ்சை பிடித்து பச்சையாகக் காட்சியளிக்கும், அவற்றையெல்லாம் துடைத்து சரி பண்ணுவதற்குள் பாபுவின் கைகள் புண்ணாகி விடும், லதா

கீழே துடைப்பாள். ஆனால் மேலே தான் நிறைய இருக்கும். ஏணி மேல் ஏறி துடைக்கணும்.

பாபு தூங்கிக் கொண்டிருந்தான். சமையலறையில் எதோ கீழே விழுந்த சத்தம் கேட்டது. மனைவி லதாவும் விழித்துக் கொண்டு விட்டாள். தூக்கத்தை விட்டு எழ மனமில்லாமல், ”நீ போய் என்னன்னு பாரு” என்று சொன்னான். அவளுக்குப் பயம், திருடனாக இருக்குமோ என்று எண்ணி கையில் பெரிய தடி, டார்ச் லைட் சகிதம் அடி மேல் அடி வைத்து சத்தமில்லாமல் போய் சமையலறை விளக்கைப் போட்டுச் சுற்றிலும் பார்த்தாள். ஒன்றும் தெரியவில்லை. தண்ணீர் குடத்தின் மேல் இருக்கும் தட்டு கீழே கிடந்தது. பல்லி அதன் மேல் ஏறி தட்டி விட்டிருக்கும் என்று சமாதானம் செய்து கொண்டு தட்டை மறுபடியும் மூடி விட்டு வந்து படுத்தாள்.,

கொஞ்ச நாட்கள் ஆயின. இந்த சம்பவத்தை பாபுவும் லதாவும் மறந்தே போயினர். லதா பொரியல் செய்ய உருளைக்கிழங்கை நறுக்க எடுத்த பொழுது அவற்றில் சில சுரண்டப்பட்டது மாதிரி இருந்தன. அப்பொழுது கூட அவளுக்கு இது எலியின் வேலையாக இருக்கும் என்று தோன்றவில்லை. பல்லியோ அல்லது கரப்பான் பூச்சியோ தான் கடித்திருக்கிறது என்று எண்ணி டுகான் பைட்டை வாங்கி வந்து சமையலறையில் ஓரமாக வைத்தாள், அதைத் தின்று நிறைய கரப்பான்பூச்சிகள் செத்து விழுந்தன. கண்ணில் படும் பல்லிகளை விளக்குமாறால் துரத்தி வெளியில் தள்ளி விட்டாள். வாடகையில்லா இந்த விருந்தாளிகளால் என்ன நோய் வருமோ, நல்ல வேளை, ஒழித்துக் கட்டியாயிற்று, அப்பாடா, இனி நிம்மதி, என்று படுத்தவள் சிறிது நேரம் கூட தூங்கி இருக்கமாட்டாள், மறுபடியும் உருட்டும் சத்தம் பெரியதாக கேட்கவே (அவர்கள் இது நாள் வரை குடியிருக்கும் அந்த வீட்டில் எலியே வந்ததில்லை என்பதால்) அது எலியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழவே இல்லை. ’நாம் தான் எல்லாவற்றையும் ஒழித்தாயிற்றே. அப்புறம்

எப்படி சத்தம் வருகிறது? அப்பொழுது இந்த தடவை திருடனாகத் தான் இருக்கும்’ என்று பயந்து கணவனை எழுப்பிப் போய் பார்க்கச் சொன்னாள்.

அவனும் சமையலறையில் விளக்குப் போட்டுப் பார்த்தான். அங்கு குப்பை வாளி உருண்டு கிடந்தது, விளக்கு வெளிச்சத்தைப் பார்த்த எலி குப்பை வாளிக்குள்ளிருந்து வெளியே வந்து ஜன்னல் வழியாக தப்பி ஓடி விட்டது. மறு நாள் எப்படியாவது அதைப் பிடித்து விட வேண்டும் என்ற உறுதியோடு வந்து படுத்தான். அவன் எதிர்பார்த்தபடி எலி வந்தது. பாபு கையில் கம்பு வைத்துக் கொண்டு சமையலறைக் கதவு தவிற பாக்கி எல்லாக் கதவையும் சாற்றி விட்டு அதைத் துரத்தி அடிக்க முற்பட்டபோது அது மேலே துணிக்காக கட்டிய கம்பியில் போய் உட்கார்ந்தது. அது கீழே எங்காவது ஒளிந்திருக்கக் கூடும் என்று இவன் தேடுகையில் மேலே உலர்த்தியிருந்த துண்டு கீழே விழுந்தவுடன் மேலே பார்த்த பாபு ”ஓஹோ, நீ இங்க இருக்கியா? இதோ வந்துட்டேன்” என்று கம்பால் அடிக்க அது அருகிலிருந்த அலமாரி மேல் குதித்து அங்கிருந்த கோதுமை மாவு டப்பாவைத் தள்ளி விட அதில் இருந்த மாவு இவன் தலையில் கொட்டி கண்ணுக்குள் எல்லாம் மாவு போக அவனுக்கு பெரிய அவஸ்தையாகி விட்டது. இதற்குள் எலி தப்பித்து ஓடி விட்டது. தன் முயற்சி வியர்த்தமான கோபம் ஒரு பக்கம் மாவை தரையிலிருந்தும் தன் உடம்பிலிருந்தம் சுத்தம் செய்வது இன்னொரு பக்கம் என்று இரவு கழிந்தது.

காலையில் எழுந்தவுடன் தான் லதாவிற்குப் புரிந்தது எல்லாம் எலியின் வேலையென்று. ”எந்த எலியாய் இருந்தா என்ன நான் அதன் மூக்கு மேலே ஒரே போடா போட்டேன்னா, அது செத்துப் போயிடும், எங்கிட்டேயிருந்து இன்னிக்கு தப்பாதுன்னு வீர வசனம் பேசினேளே’! கோட்டை விட்டுட்டேளே?” எனவும், ”வயத்தெரிச்சலக் கெளப்பாதே, அது என்னல்லாம் என்னைப் படுத்தித்துன்னு உனக்குத் தெரியுமா? நீ நன்னா தூங்கிண்டு இருந்தே, அது கோதுமை மாவெல்லாம் கொட்டி அதெல்லாம் சுத்தம் பண்றதுக்குள்ள என்

பிராணனே போயிடுத்து.” என்றான் பாபு. ”அடப் பாவமே, அத்தனையும் போச்சா?” லதா பதறினாள். ”ஆமாண்டி கீழே ஈரமா இருந்தது, நான் தண்ணின்னு கண்டேனா, இல்லை எலி மூத்திரம்னு கண்டேனா! சந்தேகம் எதுக்கு? எலி மூத்திரத்தால லெப்டோஸ்பைரோஸிஸ் வரும். அது வந்தா சாவு தான். அதனால கொட்டிட்டேன்,” பாபு பதில் கொடுத்து விட்டு எலி மருந்து வாங்கி வரத் தீர்மானித்தான்.

பாபு. ”லதா இன்னிக்கு வெங்காய பக்கோடா பண்ணு,” என்று சொல்ல, அவள், ”ஒங்களுக்குத்தான் எண்ணையே ஆகாதே, அப்பறம் எதுக்கு பக்கோடா கேக்கறேள்?” என்றவுடன், ”உனக்கு எல்லாம் வெவரமா சொல்லணும், நீயே புரிஞ்சுக்க வேண்டாமா? எல்லாம் எலிச் சனியனுக்குத் தான். அப்படியே நாமும் ஒண்ணோ ரெண்டோ திங்கலாம். இப்ப காரணம் புரிஞ்சுதா?” என்றான் பாபு. பக்கோடாவை எலி மருந்துடன் கலந்து எலி வரும் இடத்தில் வைத்து விட்டுப் படுத்தான். இன்று எலிக்கு முடிவு வந்து விடும் என்ற நம்பிக்கையில் நிம்மதியாகத் தூங்கினான். காலையில் எழுந்து பார்த்தால் எங்குமே எலி செத்து விழுந்ததாகத் தெரியவில்லை. அதற்குள் லதா, ”எந்த இடுக்கிலயாவது செத்துத் தொலைஞ்சுதுன்னா நாத்தம் உடனே தெரியாது, நாலு நாள் கழிச்சுக் கொடலைப் பிடுங்கறச்சே தெரியும்,” என்றாள். அவள் சொன்னது பாபுவுக்கு சரியாகப் படவே பீரோ, கட்டில் என்று எல்லாவற்றையும் நகர்த்திப் பார்த்து விட்டு, .’எங்கேயும் காணலியே! அது ஒரு வேளை எலி மருந்துக்கும் டிமிக்கி கொடுத்து விட்டதா?’ என்று யோசிக்கும் பொழுது, தொட்டியில் தேய்க்கப் போட்ட பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பியிருப்பது கண்டு, ஓஹோ, அது தண்ணீரைக் குடித்து விட்டு தப்பி இருக்கும் என்று எண்ணி, ”லதா, நேத்திக்கி ஒரு நாள் பாத்திரங்களை ஒரு வாளியில் போட்டு மூடி வைக்கக் கூடாதா? இப்ப பாரு, அது தண்ணியக் குடிச்சுட்டு தப்பிச்சுடுத்து” என்று சொல்ல, ”ஆமாம், எனக்கென்ன தெரியும்? நீங்க சொன்னேளா? அதுவுமில்லாம அது நம்மாத்துல இல்லாம வெளில எங்கயாவது செத்துப் போயிருக்கும், யாருக்குத் தெரியும்? கொஞ்ச நாள் பாப்போம், மறுபடியும் வந்ததுன்னா

அதுக்கு ஆயுசு கெட்டின்னு அர்த்தம்,” என்றாள் லதா. அப்புறம் சிறிது நாட்கள் எலி வரவில்லை. இவர்களும் தங்கள் தூக்கத்திற்கு வந்த பகைவன் ஒழிந்த நிம்மதியில் எலியை மறந்து விட்டார்கள்

தீபாவளி வந்தது. லதா பட்சணங்கள் செய்து வைத்திருந்தாள். பாபுவின் நண்பனுக்கு குழந்தை பிறந்திருக்கிறது, புண்யாஹவசனம், தொட்டில் எல்லாவற்றிற்கும் வர வேண்டுமென அழைத்ததால் பாபு, லதா இருவரும் சென்றார்கள். வீட்டிற்குத் திரும்பி வர வெகு நேரம் ஆகி விட்டது. வீட்டிற்கு வந்து சமையலறையில் தண்ணீர் குடிக்கப்போன லதா, ”இங்கே சீக்கிரம் வாங்கோ,” என்று கூப்பிடுவதைக் கேட்டு என்னவோ ஏதோ என்று ஓடி வந்த பாபுவிடம் கீழே கிடக்கும் ப்ளாஸ்டிக் டப்பாக்களைக் காட்டி, ”இந்த எலி பண்ண அக்கிரமத்தை பாருங்கோ, டப்பாக்களோட மூடியை நன்னா சொரண்டி ஓட்டை போட்டுருக்கு, நான் கஷ்டப் பட்டு பண்ண அதிரஸம், மிக்ஸ்சர் எல்லாம் வீணாப் போச்சே? அது சொரண்டற போது அதோட எச்சில் உள்ளே சொட்டி இருக்கும், எப்படி சாப்பிட முடியும்? தூக்கித்தான் கொட்டணும்,” என்றாள் லதா. “நீ திருகு மூடி போட்ட ஸ்டீல் டப்பாவில் வெச்சிருக்கணும், அது தேய்க்கறதும் ஈஸி, ப்ளாஸ்டிக் டப்பாவில் எண்ணைப் பிசுக்கு லேசுல போகாது, எலி உனக்குப் பாடம் கத்துக் கொடுத்திருக்கு,” என்று பாபு சொல்ல, ”போதும், ஜோக் அடிக்காதேங்கோ, என் கஷ்டம் ஒங்களுக்குப் புரியாது. அந்த எலியைக் கண்டந் துண்டமா வெட்டிப் போடணும்னு ஆத்திரமா வறது’ என்றாள் லதா. ”சரி, கவலைப் படாதே, நாளைக்கே ஒரு எலிப் பொறியை வாங்கிண்டு வறேன், அதுலேந்து எலி தப்பிக்கவே முடியாது, ”என்றான் ஆறுதலாக பாபு.

எலிப் பொறியில் தேங்காய்த் துண்டைச் சுட்டுக் கொக்கியில் மாட்டி வைத்தான். அது தேங்காய் வாசனையில் உள்ளே போய் அதை இழுத்தால் மூடி டப்பென்று மூடிக் கொள்ளும், ஜீவ வதையும் இருக்காது என்று எண்ணி பாபு தூங்காமல் எலி மாட்டிக் கொள்ளும் சத்தத்தை எதிர்பார்த்துக்

காத்திருந்தான். எலி வந்து மாட்டிக் கொண்டது. போய்ப் பார்த்தான் நல்ல பெரிய வயல் எலி தான். இவனுக்கு படு சந்தோஷம், எலியைப் பிடித்தது ஏதோ நாட்டையே பிடித்த மாதிரி இருந்தது. உள்ளே மாட்டிக் கொண்ட எலி இரவெல்லாம் பொறியைச் சுரண்டிக் கொண்டே இருந்தது. காலையில் எழுந்து பார்த்துக் கொள்ளலாம் என்று தூங்கி விட்டான். பொழுது விடிந்ததும் லதாவிடம் தன் வெற்றியைப் பற்றிப் பெருமையாகச் சொன்னான். அவள் தன்னை இவ்வளவு பாடு படுத்திய அந்த எலியைக் காண போய்ப் பார்த்தாள். ”என்னவோ எலியை ஜெயிச்சுட்டேன்னு சொன்னேள். ஆனா பொறியில் எலியைக் காணமேன்னு,” லதா சொல்வதைக் கேட்டு பாபு போய்ப் பார்த்தான். எலி என்னவெல்லாமோ ஐடியா பண்ணி கடைசியில் பொறியின் பின் பக்கத்தில் இருந்த கம்பியை வளைத்து தப்பி விட்டது தெரிந்தது. பொறி வாங்கின போதே பார்த்து இருக்கணும் இவ்வளவு மெல்லிய கம்பி லாயக்கு இல்லையேன்னு. அடடா, இந்த தடவையும் எலி ஏமாற்றி விட்டதே!” என்று நொந்து கொண்டான்.

”அந்த எலி மருந்தையே வைங்கோ, இந்த தடவை தண்ணியே வெக்க வேண்டாம், பார்ப்போம், என்ன சாமர்த்தியம் பண்ணறதுன்னு.” லதா சொன்னவுடன், பாபு, ”ஆமாம், இப்ப இப்படிச் சொல்லு, அன்னிக்குச் சொன்னே, மருந்தைத் தின்னுட்டு வீட்டிலேயே எங்கயாவது செத்துப் தொலைச்சுதுன்னா நாறித் தொலைக்கும்னு, அதனால் தான் எலிப் பொறி வாங்கிண்டு வந்தேன், மாட்டிண்டா ஒரே இடத்தில இருக்கும், தவிற அதைக் கொலை பண்ணின பாவம் வேண்டாம்னு. அப்புறம் அதைக் கண் காணாத இடத்துல விட்டுடலாம்னு, இப்பவும் ஒண்ணும் பிரச்சினை இல்லை, அந்தக் கம்பியைக் கழட்டி அதுக்குப் பதிலா தடிக் கம்பி போட்டா அது தப்பிக்க முடியாது. நான் ஒரு ஐடியா வெச்சுருக்கேன்,” என்றான்.

சாக்கடைக்குப் போடும் ஜாலி மூடியை வாங்கி வந்து எலிப் பொறியில் பொருத்தி ஆணியும் அடித்து விட்டான். அன்று இரவு எலியின் வரவுக்கு

காத்திருந்தான். பாவம், மனித மூளைக்குச் சரியாக எலி மூளை வேலை செய்யுமா? வந்து மாட்டிக்கொண்டு தப்பிக்க முடியாமல் பயத்தில் கீச்சு, கீச்சென்று கத்திப் பார்த்தது. காலையில் எழுந்து ஸ்கூட்டரில் போய் அது திரும்பி வர முடியாத தூரத்தில் கொண்டு விட்டான். ஆனால் அடிக்கடி எலி வருவதும், அதைப் பொறியில் பிடித்துக் கொண்டு விடுவதுமாய் பாபுவுக்கு எக்ஸ்ட்ரா வேலை தொடர்ந்தது. கடைசியில் இதன் மூல காரணம் சமையல் உள் ஜன்னல் அருகே இருந்த மரம் என்றும் அதில் ஏறி ஜன்னல் வழியாகக் குதித்து வருவதைக் கண்டு பிடித்து மரத்தை வெட்டிய பிறகு தான் இந்தத் தொல்லை நிரந்தரமாக நீங்கியது.

இது போதாதென்று அணில்கள் தொல்லை வேறு. அது வீட்டிற்குள் வந்து பரணில் கூடு கட்டி குட்டி போட்டு வைத்திருக்கும்.. பரணிலிருந்து குட்டி ஒரு நாள் கீழே விழுந்து விட்டது. தாய் அணில் வந்து பார்த்து ஏமாந்து போயிற்று. குட்டி அணில் பாலுக்காக கத்திக் கொண்டிருந்தது. பார்க்கப் பாவமாக இருந்தது. பாபு அதை மெதுவாக எடுத்துப் புழக்கடைக் கதவோரம் தாய் அணில் பார்க்கும் படி வைத்து ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தான். தாய் வந்து, வந்து பார்த்து யாரும் இல்லை என்று உறுதி செய்து கொண்டு குட்டியை வாயில் கவ்வி எடுத்துச் சென்றது. அப்பொழுது தான் பாபுவுக்கு நிம்மதியாயிற்று. மேலும் பாபு வீட்டு வாசற்கதவோரம் தெரு நாய் மற்றும் பூனைக்குக் கழிப்பிடம். தினமும் வந்து மலம் கழித்து விட்டுச் சென்று விடும். ’போன ஜென்மத்தில் நான் நகராட்சி துப்புரவாளனாக இருந்தேனோ என்னவோ’ அந்த வேலை இந்த ஜென்மத்திலும் தொடருகிறது,’ என்று நொந்த வண்ணம் சுத்தம் செய்வான். வீட்டுகாரரும் அவர் குடும்பத்தினரும் நல்லவர்களாக இருந்து, அவ்வப்போது கவனித்து உதவியதால் இந்த வீடு நரகமாகத் தெரியவில்லை. தவிற வீடு பெரியதா சௌகரியமாக இருந்தது.

பெரிய பையனும் கடைசிப் பையனும் வெளிநாடு சென்று விட்டார்கள். நடுப்பையனும் வேலை நிமித்தமாக வெளியூரில் இருந்தான். அப்பாடி,,

விருப்ப ஓய்வு பெற்று, வேலையும் அடுத்து கிடைக்காமல், கடன் வாங்காமல் கடவுள் அருளால் எல்லோரையும் ஒரு நிலைக்கு கொண்டு வந்தாயிற்று என்று பெருமூச்சு விட்டான். குறைந்த பட்சம் இதில் ஆண்டவன் கருணை நன்றாக இருந்தது. அடுத்தபடியாக அவர்களுக்குக் கல்யாணம் செய்வித்து பேரக் குழந்தைகளையும் பார்த்தாயிற்று. மனிதர்களாகப் பிறந்து விட்டால் நடுவில் கொஞ்சம் மூச்சு விடுவதற்கு கிடைக்கும் நேரத்தைத் தவிறக் கடைசி வரை ஓட்டம் தானே?

வீட்டுக்காரர் வீட்டை விற்று அடுக்கு மாடி வீடாகக் கட்டப் போவதால் போவதால் காலி செய்யும்படி சொன்னார். பாபுவுக்கும் வயதாகி விட்டதால் மறுபடியும் வாடகை வீட்டுக்குக் குடித்தனம் மாற்றுவது கஷ்டம் தான். சரியான வீடும் கிடைக்கவில்லை. பெரிய பிள்ளை, ’அப்பா, நீங்க கவலைப் படாதேங்கோ, நானே ஒரு ஃப்ளாட் வாங்கறேன், நீங்க அங்கு இருங்கோ, வீட்டுக்காரர் போகச் சொல்லுவாரே, மூட்டையைத் தூக்கணுமே, மற்ற நரகத் தொல்லைகள் என்கிற கவலைகள் இனிமேல் இருக்காது’ என்றான். சொந்த வீட்டில் சில தொல்லைகள் இருந்தாலும் வாடகை வீட்டு நரகத்துக்குச் சொந்த வீடு சொர்கம். பாபுவுக்கும் இந்த யோசனை சரியாகப் படவே, அவனும் நடுப்பிள்ளையும் சேர்ந்து ஒரு வீடு பார்த்தார்கள். பையனிடம் கார் இருந்ததால் பதிவு செய்வது, பத்திரப் பதிவு மற்றும் வீட்டு சம்பந்தமான அனைத்து வேலைகளுக்கும் பாபுவைக் கூட்டிப் போய் வந்தான். குடித்தனம் வைப்பதிலும் கூடமாட அவனும் மருமகளும் ஒத்தாசை செய்தார்கள்.

சொந்த வீடு. சுதந்திரமான காற்றை அனுபவித்தனர் பாபு தம்பதிகள்.வாடகை வீட்டு நரகக் கஷ்டங்கள், மனகிலேசம், உடல் உபாதைகள், ஜன்னல்களுக்கு நெட் போட்டு, இன்வெர்டரும் இருந்தால், கொசுத் தொல்லை, பல்லிகள் நடமாட்டம், சிலந்திகள் போன்ற ஜீவஜந்துக்கள் தொல்லைகளும், மின் வெட்டுத் தொல்லையும் இல்லை. நிம்மதியாகக் காலம் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் வாழ்க்கை என்றாலே முட்களும் உண்டு தானே.

பாபுவுடன் இருந்த அவன் அக்காவிற்கு முதுகில் ராஜ பிளவை வந்து அதன் சிகிச்சைக்காக ஆசுபத்திரியில் சேர்த்தும் சரியாகாமல் அவரைப் படுக்கையில் தள்ளிவிட்து. அதனால், அவரைக் கவனித்துக் கொள்வதில் நிறைய உடலுழைப்பும், நேரமும் தேவைப் பட்டது. ஆஸ்பத்திரியில் ஒரு நாள் தீபக்கைப் பார்க்க நேர்ந்தது. பாபு, ”நீ குடுத்த விலாசத்திற்கு நிறைய கடிதம் எழுதினேன், எல்லாம் திரும்பி வந்து விட்டது,” என்று சொல்ல, தீபக், ”ஆமாம், நான் வேறு ஊருக்கு மாத்தலாகிப் போயிட்டேன், உன் கிட்ட சொல்லலாம்னு பார்த்தால் விலாசத்தைத் தொலைச்சுட்டேன். அதனால ஃபோனும் பண்ண முடியலை. ரொம்ப வருஷம் கடந்து போச்சு. எவ்வளவோ மாறுதல் வந்துடுத்து. இப்ப எல்லார் கையிலும் மொபைல் ஃபோன். நிறைய சௌகரியங்கள் வாழ்க்கையை சுலபமா ஆக்கி விட்டன,” என்றான். பாபு, ”நான் என் அக்காவிற்காக இங்கு வந்தேன். உன் வீட்டில் யாருக்கு என்ன உடம்பு?” என்று கேட்க, ”என் மனைவிக்குத்தான்,” என்ற தீபக், ”இப்போ எப்படி இருக்கே? வாழ்க்கையே நரகமா இருக்குன்னு முன்னே பார்த்தபோது அலுத்துண்டயே? நரகத்திலேந்து தப்பிச்சுட்டியா?” என்று கேட்க, ”ஆமாம்,’ இப்போ எந்தக் கவலையும் இல்ல, நன்றாக இருக்கிறேன் இந்த வாடகை வீட்டு பிரச்சினையே வேண்டாம்னு என் பிள்ளை சொந்த ஃப்ளாட் வாங்கிட்டான். அதில் தான் நிம்மதியாக இருக்கோம். அட்லீஸ்ட் வயஸுக்காலத்துல இது ரொம்ப அவசியம். ஆமாம், உன் மனைவிக்கு என்ன ஆச்சு?” என்றான் பாபு.

”என் மனைவிக்கு அவளுடைய அகம்பாவத்துக்கு கெடச்ச தண்டனைன்னு தான் நான் சொல்லுவேன், தீபக் சொல்ல ”விவரமாச் சொல்லு,” பாபு கேட்டான். ”ஏற்கனவெ சொல்லியிருக்கேன் அவ ஒரே பொண்ணு, ரொம்ப செல்லம்னு. பணக்கார அப்பா, அம்மா. நல்ல குணங்கள் எதுவும் கிடையாது, சினிமா தியேட்டர்ல எங்கள் பழக்கம் ஆரம்பிச்சுது. அவ என் அழகைப் பாத்து கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டா. இது பெரிய இடங்கிறதினாலே நட்போடு நிறுத்திக்கலாம் கல்யாணமெல்லாம் வேண்டாம்னேன். அவ அப்பா, அம்மாவைக் கூட்டிண்டு வந்து எப்படியோ எங்கப்பா,அம்மாவை மயக்கிட்டா. அதனால அவாளும் என்னை வற்புறுத்திக் கல்யாணம் செஞ்சு வெச்சா.

ஆரம்பத்தில் கொஞ்ச வேஷம் போட்டு நல்லவளா காட்டிண்டா. ஒரு கொழந்தை பிறந்தப்புறம் தன் சொரூபத்தைக் காட்ட ஆரம்பிச்சுட்டா.. என் அப்பா, அம்மாவை வீட்டிலே அண்ட விடறதில்ல. அவாளும் வயசான காலத்தில எதுக்கு வம்புன்னு ஒதுங்கிட்டா. சமீபத்தில அவளோட பெத்தவாளும் போய்ச் சேந்துட்டா. மொத்த சொத்துக்கும் அதிபதியானவுடனே இவளுக்கு தலை கால் புரியலை. இவ மூலமா தன் தேவைகளைப் பூர்த்தி செஞ்சுக்கும் தனி ஃப்ரெண்ட்ஸ் பட்டாளம் அவளுக்குன்னு.”

”ஒரு நாள் இவா எல்லாருமா கார்ல பிக்னில் கிளம்பினா, பிக்னிக் முடிஞ்சு திரும்பி வரச்சே பெரிய டிரக்குடன் மோதி கார் நசுங்கிப் போச்சு. இவளோட போனவா சில பேர் செத்துப் போயிட்டா, சில பேர் உயிருக்குப் போராடற நெலமையில ஆசுபத்திரியில் இருந்தா. இவ நினைவில்லாம கிடந்தா, யாரோ விபத்தைப் பாத்தவா, இவளை ஆசுபத்திரில சேர்த்து விட்டு இவ கைல இருந்த ஹேண்ட் பேக் கிழிஞ்சு அதில இருந்த லேடீஸ் க்ளப் விஸிடிங் கார்டுல இருந்த நம்பருக்கு ஃபோன் பண்ணியிருக்கா. அவா எனக்கு ஃபோன் பண்ணிச் சொன்னா.. நான் உடனே போனேன், டாக்டரைப் பார்த்து அவள் நிலைமையை விசாரிச்சேன். அவர், உயிருக்கு ஆபத்து இல்லை, ஆனால் அவளுக்கு கழுத்துக்கு கீழே உடலில் உணர்வு இருக்காது என்ற குண்டைத் தூக்கிப் போட்டார். ஒரு வருஷம் ஆயிடுத்து ஒரு முன்னேற்றமும் இல்லை வீட்டிலே சமையல்காரியைத் தவிர்த்து இவளுக்குன்னு பிரத்தியேகமாக ஒரு வேலைக்காரி, ஒரு நர்ஸ் போட்டிருக்கேன். அவர்களில் யாராவது ஒருவர் வரலைன்னாலும் என் பாடு திண்டாட்டம் தான். இந்த விபத்துக்குப் பிறகு, அவ ஃப்ரெண்ட்ஸ் ஒருத்தி கூட எட்டிப் பார்க்கலை. இவ ஃபோன் பண்ணினாக் கூட எடுக்க மாட்டேங்கறா.. பணம் வாழ்க்கைக்கு அவசியம்னாலும் பணத்தால் அன்பையோ அல்லது பாசத்தையோ வாங்க முடியாதுன்னு இப்பத் தான் அவளூக்குப் புரியறது.” ஒரு காலத்தில் கிள்ளுக்கீரையாக என்னை நடத்தினதுக்கு இப்ப வருத்தப்படறா. காலங்கடந்த ஞானோதயம்.”

இவ தான் இப்பிடின்னா என் பெரிய பிள்ளை போதை மருந்துக்கு ஆளாகி கையில் காசில்லைன்னா போதை மருந்து வாங்க வீட்டிலே இருக்கிற பணம், நகை, வெள்ளின்னு திருட ஆரம்பிச்சுட்டான். இரண்டாவது பையன் குடிச்சுட்டு காரைத் தாறுமாறாக ஓட்டி பிளாட்ஃபாரத்தில் தூங்குற கூலித் தொழிலாளிகள் மேல ஏத்தி அவா செத்துப் போயிட்டா. போலீஸ்ல பிடிச்சுட்டா. அவா கிட்டயும் வாக்குவாதம் பண்ணி வாய்க்கு வந்தபடி ஏசினதாலே போலீஸ்காரா அவனை உள்ளே தள்ளிட்டா. இதெல்லாம் பாத்து எனக்கு ஞானம் வந்துடுத்து, நான் எதுக்கும் கவலைப்படறதில்ல. சொல்லித் திருத்த முடியாததை அடி பட்டுத் திருந்தட்டும்னு விட்டுட்டேன். வழக்கமான நர்ஸ் வராததால் வேற ஒருத்தியை அழைத்துப் போகத் தான் நான் இப்ப இங்க வந்தேன்,” என்று தீபக் சொல்லி முடித்தான்.

”வாழ்க்கையில் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கிறதில்ல. உன்னைப் போல என்னிடம் வசதியோ பணமோ இல்லை ஆனால் நிம்மதி இருந்தது, அதனால நரகத்தைப் பார்த்தும் எங்களுக்கு வாழ்க்கையில் வெறுப்பு வரலை. நம்மை விட கீழ் மட்டத்தில் இருக்கிறவாளைப் பாத்தா நம்ம கஷ்டம் ஒண்ணுமே இல்லன்னு தோணும். மேலும் நம்ம கடமையை விடக் கூடாது. தன்மானம் கருதி நீ ஒதுங்கியது தப்பு. அவாளை நீ தலை முழுகி இருக்கணும். உன் மனைவியையும் கொழந்தைகளையும் ஆரம்பத்திலேயே கண்டிச்சிருக்கணும், காலம் அறிஞ்சு எதையும் செஞ்சா வாழ்க்கை சுகமாத் தான் இருக்கும், முதல் சந்திப்பிலேயே என்னோட இந்த அறிவுரையைச் சொல்லியிருக்கணும், அப்ப ஒரு வேளை உன் குடும்பம் உருப்பட்டிருக்கும், என்னோட கவலை பெரிசுன்னு நானும் இருந்துட்டேன், என்ன பண்ணறது? எல்லாத்துக்கும் மேல விதின்னு ஒண்ணு இருக்கு’ என்று முடித்த பாபுவை பாசத்தோடு கட்டிக்கொண்டு விடைபெற்றான் தீபக்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *