கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம் முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: December 2, 2023
பார்வையிட்டோர்: 1,979 
 

(1988ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4

அத்தியாயம்-1

விடிவேளையின் சில் காற்று அந்தப் பள்ளத்தாக்கில் அலைகையில், திரைச் சீலையில் தீட்டிய ஓவியம் பெருமூச் செறிவது போன்றிருந்தது. கமுகும், தென்னையும், பலாவும் அடர்ந்த அணைப்புள் என்குடிசை, செல்லத் தங்கை போல் ஒடுங்கியிருக்கிறது. நாற்புறமும் குன்றுகள் கோட்டை போல் சட்டென்று கண்ணுக்குப் படாமல் அதைக் காக்கின்றன. தங்க முகில் ஒன்று, கம்பீரமாய், பெரிய பட்சிபோல் மேலே தவழ்கிறது. இது சொர்க்கம். ‘உயிரே போ’ என்று சொல்லி, சொன்ன சொல் கேட்டு உயிர் போவதாக இருந்தால், குளுகுளுவென்று ஏதேனும் ஒரு மரத்தடியில் படுத்து உயிரை விடுவதற்கு இந்தச் சீமையைவிட உகந்த இடம் இருக்காது. அமைதியின் உச்சக் கட்டமே என்உயிர் என் கட்டில் இருத்தல்தானே! 

யதார்த்தத்தை நேருக்கு நேர் சந்திக்க அஞ்சித் தேடும் பொய்மை நிலை எஸ்கேபிஸம் என்கிறார்கள். எஸ்கே பிஸத்தில்தான் இங்கு வந்தேன். வந்த இடத்தில் அதையே யதார்த்த சித்திகண்டபின், வேண்டுவதற்கே வேறு இல்லை. 

முழுமறதி எனக்குச் சாத்தியமில்லை. எனக்கே நெஞ்சிலே வைத்துப் புழுங்கும் சுபாவம். அம்மா என்னை ஒரு முறை ‘கார்க்கோடகன்’ என்றிருக்கிறாள். 

இங்கு என்றுமே தாங்க முடியாத வெய்யிலோ, புழுக்கமோ இருந்ததில்லை. இருக்கபோவதுமில்லை.ஆனால் மழை பெய்தால் வானம் விண்டு கொள்ளும், வேனிலில் வெள்ளக்காடுதான். நனைந்த குருவிபோல். இந்தக் குடிசை மட்டும் ஜலத்தில் தனித்து நிற்கையில், பரிதாபமாகக் கூட இருக்கும். 

ஆனால், வெய்யில் தலைகாட்டியதும் என்குடிசை ராஜாத்திதான். பூமியின் ஓதமும், சூரிய ஒளியும் புதிதாய்க் கலக்கையில், குபீரென்று கிளம்பும் மண்ணின் ஆவியால் மணங்கமழ்கிறது. ‘என்னை ஆண்டு கொள்’ என்று பூமி சூரியனுக்குக் காட்டும் ஆராதனை, அர்ச்சனையில் வில்வ இலைகள் போல் புள்ளினங்கள் ஆகாயத்தில் பறந்து செல்வதே ஒரு கண்கொள்ளாக் காட்சி. 

மண்டியிட்டு பூமியில் காதை வைத்துக் கேட்டால், அருவி கேட்கும்.எங்கேயென நான் தேடிப் போனதில்லை. இங்குதான், இங்கோ, எங்கோ, எங்காயினும் தாவரங் களின் அடவியில் உள் பாவாடைக்குக் கட்டிய ஜரிகை போல் மடிமடியாய்ப் பாய்ந்து கொண்டிருக்கும். எந்த நதியிலிருந்து வழி தப்பிய ஸன்னப் பிரிவோ? உர்ஸுக்குத் தான் தெரியும். தினம் காலையில் பானையில் அவள் எடுத்து வரும் கற்கண்டு தீர்த்தம் அதிலிருந்துதான். 

எனக்கும் சாயா நேரம் வந்தாச்சு. சேறு போல் காப்பிக் குடியனாக இருந்தவன் நானா இப்போ சாயா, கஞ்சி வெள்ளம்? நினைக்கத்தான் ஆச்சரியமாயிருக்கிறதே ஒழிய, நினைத்துப் பார்க்கின் – என்ன குறைஞ்சு போச்சு? இதுவும் ஒரு ருசிதான். ஆரோக்கியம் கூடித்தான் இருக்கிறது. 

ஒன்று கண்டேன்; கண்டு கொண்டேயிருக்கிறேன். ஒரு பழக்க சூழ்நிலையிலிருந்து புதுசுக்கு மாறுவது – ஏற் றமோ தாழ்வோ – பரமபத சோபான படம் மாதிரி. மாறு வதற்கு மனதைத் திடம் பண்ணிக் கொள்ளும்வரை- அந்தத் தடம்கூட பூரா தன் முயற்சி என்று சொல்வதற் கில்லை. கட்டாயம் தன் வழிக்கு வந்தால் மனதை முறித் தாக வேண்டும் அல்லது மனத்தின் வழிக்கு இடத்தை முறித்தாக வேண்டும். மாறுதலை மனம் ஏற்றுக் கொண்ட துமே, புதுக்கோலத்தில் மனம்படிவதைத் தவிர வேறு வழி? எல்லாமே அவ்வளவுதானே! தன்னிரக்கத்தினின்று விடு வித்துக்கொள்ள வேண்டும். அதுவே ஒரு நித்ய சாதகம். பிறகு அவ்வளவு கஷ்டமில்லை. 

மற்றும், இருப்பதுதானே மாறி மாறிப் பங்கு சுற்றி வருகிறது! ஒன்று வேணுமானால், வேறு ஒன்றை இழக் கத்தான் வேணும். கிடைப்புக்கும் இழப்புக்கும் வித்யாச எடைதான் தீர்ப்பு, தண்டனை, வெகுமதி எல்லாமே… 

உர்ஸ் வருகிறாள்… 

நான் ஓவியன் அல்ல. என் கவிதைகளும் சொற்களற்று, நானே மகிழ்ந்து கொள்ளும், உள்ள எழுச்சியின் புனைதல் கள். அவைகளில் அவள் இடம் என்னவென்று எனக்கு இன்னும் நிச்சயமாகவில்லை. அதுவும் பரமபதப்படம் தான். ஒரு சமயம் பெரிய ஏணி, மறு சமயம் பாம்பு. நாம் எல்லாருமே ரசாயன முடிச்சுகள். அவ்வப்போது மாறுதல் களுக்கு உட்பட்டவர்கள். 

அரையில் முண்டு, மேலே ரவிக்கை ; இடுப்பில் மண் குடம், தோளில் தாழங்குடையுமாய் – கொங்கு நாட்டின் தந்தி விலாசம் திடீர் மழை. அழுத குழந்தை சிரிச்சுதாம்; திடீர் மழை பெஞ்சுதாம்; உடனே வெய்யில் காஞ்சுதாம். கன்னத்துக் கண்ணீர் கக்கடகட சிரிப்பில் பப்பளப்பள என்கிற மாதிரி – அவள் வருகையில், பி.யு.சி. வரை எட்டிப் பார்த்திருக்கிறாள் என்று யார் நம்புவார்? முதல் பரீட்சையிலேயே ‘கோட்டு என்று நினைக்கிறேன். அதற்கு மேல் படிக்க வைக்க வசதியில்லையோ. படிப்பில் முனைய அவளுக்கு மனம் தளர்ந்து போச்சோ எது வென்று அறியேன், ஆனால், உர்ஸ் பற்றி ஒன்று தெரிந்து கொண்டேன். 

உர்ஸ் புத்திசாலி. ஆனால், அவளுக்கு உடம்பு வணங்க வில்லை. அவளுடைய கவர்ச்சியே அதுதானோ என்னவோ? படித்துவிட்டுச் சும்மாயிருக்கும் மலையாளி உண்டோ? மலையாளிகளில் சோம்பேறி உண்டோ? ஆனால் உர்ஸ் சோம்பேறி. எதிலும் அவளுக்கு ஊக்கம் கிடையாது. வேலைக்குப் போய், பத்திலிருந்து ஐந்து வரை மேசையில் அமர்ந்து பேனா உழைப்புக்கு உடலும் மனமும் இடம் கொடுக்கவில்லை. உடம்புக்கென்ன கேடு, சரியான, கடைத் தெடுத்த உருட்டுக்கட்டை! எல்லாம் மனசுதான். 

வீட்டுக்கு ஒரே பெண், ஒரே குழந்தை. பெற்றோர் களுக்கும் அவளை உழைப்புக்குப் பழக்க வேண்டும் என்கிற எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. தேவை நிறைய இருக்கிறது. கிடைத்தால் ஆடு அன்றைக்கு மாடு மத்தி யானம். கிடைக்காவிட்டால் கிடைக்கும் வரை எங்காணும் உருண்டு உறங்கிக்கிட. அதுவே தத்துவம் என்றால் பிறகு அவர்களை என்ன செய்ய முடியும்? 

மிஸ்டர் ஜியார்ஜ் தண்ணி போடுகிறார். 

மிஸஸ் ஜியார்ஜ் தண்ணி போடறாங்கோ. 

மிஸ் உர்ஸ் லா ஜியார்ஜ் என்னிக்குப் போடப் போகி றாளோ. அல்ல, ஏற்கெனவே தொடங்கி ஆச்சோ தெரியாது. தெரிந்து எனக்கு என்ன ஆகணும்? 

குடிசை உள் போகிறாள். 

குடிசை என்றால் இதுதான் அசல் குடிசை. நான்கு மண் சுவர்களின் தடுப்புள் ஒரு கணிசமான கூடம்; அவ்வ ளவுதான். போன வருடத்துக்கே தடதடவென்று சரியான ஊற்றல். ஓலைகளை அடியோடு மாற்றுவதென்று கை வைத்தால் இப்போதைய விலைவாசிக்கு நான் எங்கே போவேன்? மிஸ்டர் ஜியார்ஜ் மனசு வைக்கணும்.மேலே ஏறி இருப்பதையே அங்கே இங்கே நகர்த்திக் கொஞ்சத் துக்குக் கொஞ்சம் சரி பண்ணினால் உண்டு. அப்படித்தான் செய்யணும். இரண்டு மொந்தைகள் சூத்திரக் கயிரை இழுத்து விடும். ஐயா காயற சமயமாப் பார்த்துத் தூத்திக் கணும். நரகத்துக்கு அவரை நான் இழுத்துச் செல்கிறேனா? ஆமாம்… ஆமாம் அவர் ஏற்கனவே பார்க்காத இடமோன்னோ? இனி அங்கு இல்லாத இடம் அவருக்கு நரகம். அவர் அந்தக் கட்டத்துக்கு வந்தாச்சு. ஒரு தடவை ஆஸ்பத்திரியில் சேர்த்து, பத்து நாள் அங்கு தண்ணிக்குப் போட்ட பட்டினியில், நடத்திய சிகிச்சையில், உட ல் எல்லாம் ஜன்னி உதறல் கண்டு இந்தத் தடவைதேறினால், இனி தண்ணி பக்கம் தலை வைத்துப் படுப்ப தில்லை என்று பைபிள் மேல் பாதிரியிடம் சத்தியம் பண்ணி விட்டு, குடல் வெந்து போச்செனும் எச்சரிக்கையுடன் மீண்டாச்சு. அப்புறம்?எஸ், அப்புறம் என்ன? சத்தியங்கள் என்ன சங்கிலியா?
 
குடிசையைச் சேதம் பாக்கச் சொல்ல எனக்கு உரிமை உண்டு. ஆனால் பார்ப்பாரோ, மாட்டாரோ, இனிமேல் தான் பார்க்க வேணும்.குடிசைக்கு சொந்தக்காரர் அவர் தான். எனக்கு வாடகைக்கு விட்ட மறுநாளே, பள்ளத்தாக் குக்கு வெளியே இன்னொரு குடிசை எழும்பத் தொடங்கி யாச்சு, ஓலைகளை வெட்டி, வீழ்த்தி – உலகம் படைத்தது எனக்காக- முடைந்து வேய்ந்து – சேறைக் குழைத்து எழுப்பி – அப்படியே கூரைமேலேயே கதகதவென்று, அல்லது சுள்சுள்ளென – போதையில் வித்யாசம் என்ன தெரிகிறது? – புரண்டு – சரிந்து தொப்பென்று கரடிபோல் கீழே வீழ்ந்து அப்பவும் தூக்கம் தெளியாமல் நெற்றியில் ஒரு முண்டு முண்டிக்கொண்டது – அவருக்கென்ன கவலை? 

குடிசையின் சனி மூலையில் ஒருபெரிய மண் அடுப்பு அத்துடன் இழைத்த மேடையுடன். உர்ஸ் எனக்குச் சமையல் செய்து போடணும் என்று பேச்சு. அவளாக ஏற்றுக் கொண்டது தான். அதற்கு வேண்டிய பாத்திரம், பண்டங்கள் மேடை மீதே இருக்கின்றன. ஆனால், பாதி நாளைக்கு – ஒரு தட்டின் மேல் துணியைப் போட்டு மூடி உர்ஸ் கொணர்ந்து விடுவாள். 

“அம்மை செய்தது”. 

“என்ன உர்ஸ், இங்கே கத்தரிக்காய்க் குழம்பு செய்ய நான் சொல்லிக் கொடுக்கிறேன் என்றேனே!’ 

“கத்தரிக்காய்க் கூட்டான் அம்மையே ஆக்கிட்டிது”.  

என்னவோ காமா சோமா, கோணாமணா கொக்கர மணா, பூண்டு,சோம்பு, வெங்காயம் எது எதில் என்பது கிடையாது. காய்கறித் துண்டங்கள் குழம்புடன் ஒன்று சேராமல், குழம்புத் தண்ணியாய் தான்கள் விரக்தியாய் ஒட்டாமல் தனித்து…நீ பொருமேன், சீறேன், சத்தம் போடேன் ஊஹும் – அந்த முகத்தின் நிர்ச்சலனம் சற்றே னும் கலங்கினால்தானே! கனத்த ஜலம்…கண்ணில் ஒரு தனிக் கபடு வந்து விடும். அழுத்தம், ஆயிரம் குதிரை கட்டி இழுத்தாலும் அசைக்க முடியாது. 

நத்தை நத்தையாக அரை வேக்காட்டில் புழுங்கலரிசிச் சோறு. ஆனால், அதற்கு அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அவர்களுக்கு அதுதானே பழக்கம். அதுதானே பிடிக்கும். அதுதானே செய்யத் தெரியும்! 

நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது எனக்குக் கிடைக்காமல், எனக்கு வயிறு நிறையாது. மேலும், மோதல் தவிர்க்க என் புத்தக அரணுள் பின் வாங்கி விடுவேன். 

அடுப்பு அடைத்த இடம் போக கூடத்தில், போர் கட்டி, கூறுகட்டி, தனித்தும் பரவலுமாய், புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள், – புத்தகங்கள் பலசாரி .கட்டி லுக்கடியில் இருக்கும். ஒற்றை ஜன்னலில் இருக்கும். ஒரே பெட்டிமேல் அங்கங்கே, எங்கெங்கும்.. இடத்தைப் பெருக்கி எத்தனை காலமாச்சோ? (உர்ஸுக்குச் சௌகரியம் தான்) அத்தனையுமா படிக்கப் போகிறேன்? ஆனால், புத்தகங் களை இப்படி என்னைச் சுற்றி வழிய விட்டுக் கொண்டு நடுவில் உட்கார்ந்து கொண்டோ, படுத்துக் கொண்டோ- தலைக்குயரத்துக்கு இரண்டு கட்டைப் புத்தகங்கள் – படிப் பதில் எனக்கு ஒரு தனி ஆனந்தம். நான் ‘ஓடிப்போகுமுன் ‘அவர்கள்’ என் மேல் கண்ட குற்றங்களில் இதுவும் ஒன்று. 

அவர்கள் பாஷையில் நான் இருக்குமிடமெல்லாம் குப்பை கூளம். அவர்கள் படிக்கும், சேர்க்கும் சினிமாப் பத்திரிகை, ஸ்போர்ட் பத்திரிகைகளுக்கு என் புத்தகங்கள் ஈடாகுமா? 

மூணுமாதங்கள், ஆறு மாதங்களுக்கொருமுறை கருணாகரனைப் பார்க்க திருவனந்தபுரம் போகும்போதெல் லாம் புத்தகக் கடைகளையும், ப்ளாட் பாரங்களையும் சூறையாடுவேன். தவிர கருணாகரனும் அவரிடம் அதற்குள் சேர்ந்து விட்ட புத்தகங்கள், பத்திரிகைகளை வழங்குவார். அவருக்குப் பத்திரிகை ஆபிசுகள் பழக்கம். பிஸினெஸ்மேன் மட்டுமல்ல; அவர் எழுத்தாளரும் கூட. நிறைய வாங்கியும் படிப்பார். உர்ஸ் ஒத்தாசைக்கு வந்து கோணி மூட்டையை இறக்குகையில் அவள் கழுத்து வளைவிலிருந்து இளமை நெடி அடிக்கையில்… 

“புஸ்தகம் ஒரு நாள், வீட்டைப் பிடிச்சுண்டு சாமியை வெளியே தள்ளிடப் போறது, வாசலில் கயிற்றுக் கட்டிலடியில் சட்டிபானை; அப்படித்தான் வெட்ட வெளியில் தாமசம் ; ஞான் பறைஞ்சாச்சு”. 

அவளுடைய பறைகொட்டலில் பாதி நிஜம், என்று முழுசாகப் போகிறதோ? 

புத்தகங்கள் இழுத்து விடுவதால், வயிற்றுச் செலவு இழுப்பாகி விடும். ஓரொரு சமயம் கலத்தில் சோற்றுக்குப் பதில் மரவள்ளிக்கிழங்கோ, சோளமாவோ, சொல்லிக் கொள்ளாமல் முனகினாள். ஷோக்காகச் சொல்லிடிப்பாள். 

“காரணம் உங்கள் புது ஜே. கிருஷ்ணமூர்த்தி, பழம் ஜீன் கிறிஸ்டோபீயை, சாமியே விளிச்சுக் கேட்கட் டும்!” 

“இரண்டுமே நான் வாங்கலியே! கருணாகரன் கொடுத் ததல்லோ?” 

“அப்போ சாமி சாலையில் மிலிட்டெரி ஓட்டலில் வறுத்த மீன்- கோவளம் காச் – மொச்சைப் பருப்பு சுண் டலும் ஒரு கை பார்த்ததோ?” 

கண்ணை இறுகமூடி, காதைப் பொத்திக் கொள்ளும் என் அருவருப்பு கண்டு, அவள் சிரிப்பு உருட்டோடும். என் செவிமண்டலத்தில், ஏதேதோ இனித்த கோலங்கள் போட் டுக்கொள்ளும். 

ஒன்று போனால் ஒன்று உண்டு. ஒன்று வேணுமானால் ஒன்று இழக்கணும். 

ஒரே சமயத்தில் எல்லாமே நீ இருத்திக் கொள்ள  முடியாது… 

அத்தியாயம்-2

உர்ஸ் வெளியே வருகிறாள். 

குனிவதும், நிமிர்வதும், வளைவதும், நெளிவதும் நாட்டிய மற்று, இயல்பான நடமாட்ட அங்க அசைவுகளில் உர்ஸ் பெரிய டெக்னிஷியன்- அதில் ஸ்வயம்பு. 

“ஸாமி நித்திரையில் தாமஸிச்சதோ?” Garbo வின் கட்டைக்குரல். 

“ஸாமி நேரத்துக்கு எழுந்தாச்சு. மை மான் ஃப்ரைடே தான் தாமஸம்.” 

“தேஷியம் வேண்டா. சாயாவுக்கு வெள்ளம் சுடுகைக்கு வெச்சாச்சு.” 

அவளிடம் நான்தான் மலையாளம் பயில்கிறேனோ? அல்ல… அவளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கிறேனோ? இந்த பாஷைக் கொலையில் எங்களிடையில் ஒரு வௌவால் (பறவையுமில்லை – மிருகமுமில்லை) பாஷை உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் ரீதியில். 

“ஸாமி ஜாக்கிரதை செய்யட்டும். பாதையில் ஞான் இப்போ ஒரு ஸர்ப்பம் கண்டது. 

என்னை அறியாது கைகள் கூப்பிக் கொள்கின்றன. நேற்றே அம்மா கனவில் வந்தாள். மனம் வேகமாய் ஏதேதோ கணக்குப் போட்டது. 

நாள், கிழமை, பக்ஷம், திதி சரிதான் ஆச்சரியமில்லே. “இன்று என் தாயாரின் சிரார்த்த திதி.” 

அம்மா பேர் நாகலக்ஷ்மி. இதற்கு முன் இங்கு பாம்பு நடமாட்டம் பார்த்ததில்லையா? இனிமேலும் இல்லாமல் இருக்கப் போகிறதா? ஆனால் உர்ஸ் தெரிவித்ததும் மனம் இப்படித்தான் ஓடிற்று. 

”ஓ!” தன்மேல் சிலுவைக் குறியைச் செய்து கொண் டாள். “அப்போ ஸாமி திதி கொடுக்க, வேண்டா? ஞான் நம்பூரி ஸாமியே அழைச்சு வரட்டோ?” 

‘சரி’யில் தலையை ஆட்டவே பயம்.மறுப்பில் அசைக் கவும் பயம். 

ஊமையானேன். 

பிதுர்த் தேவதைகள் பிண்டத்துக்கு என்னை போன்ற வம்சப்ரதிநிதியிடம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கையில் நெஞ்சு திக்கென்றது. பிதுர்ப் பசி, பிதுர்ப் பட்டினி, பிதுர் சாபம்… 

‘பகுத்தறிவு சாக்கில் எல்லாம் பெரியவர்கள் காட்டும் ‘ஜதல்’ என்று சவால் அடிக்கலாம். இரண்டு சாஸ்திரி களுக்குத் தக்ஷணை கொடுத்து சாதம் போடுவதற்குப் பதி லாக இருபது ஏழைகளுக்கு பந்தி போஜனம் செய்வது என்று கொடி நாட்டலாம். இரண்டுபேர் வேண்டாம் என்று உதறித் தள்ளிவிடலாம். ஆனால், பரம்பரையாக ரத்தத்தில் ஊறிப்போன பழக்கத்தின் மூட்டதினின்று விடுபட, தப்பி யோட (யாரிடமிருந்து ஓடுகிறாய்?) – தப்பியோடப் பெரிய வர்களே குறுக்கு வழி வைத்திருந்தால்கூட – பெரிய சொர்க்கவாசற் கதவில் வெட்டிய சின்னக்கதவு மாதிரி அவ்வளவு எளிதில் ஏற்க மனம் மறுக்கிறது. நான் ஒழுங் காக எல்லாம் செய்து கொண்டிருந்தவன் தானே! மதுரம் அன்று மட்டும் பாங்காகக் கொசுவம் கட்டி,என் தோள் குறுகுறுக்கப் புல் பிடிக்கவில்லையா? ஓமப் புகையின் கரிப்பு இன்னும் அடங்காக் கண்ணுடன் இலையில் குடும் பத்துடன் உட்கார மணி மூன்றாகி விடும். (ஸாஸ்திரிகள் “மாமி, மாமாவுக்கு இனிமேல் ஒரு தம்ளர் காப்பி கொடுக்க லாம். நீங்களும் சாப்பிடுங்கோ.”) எடுத்தவுடனே அந்தக் கறிவேப்பிலைத் துவையலில் சாதத்தைப் பிரட்டுகையில்- அப்பப்பா! அந்த இதவான காட்டும் புளிப்பும் அவ்வளவு நன்றாயிருக்கும். அடுத்தாற் போல் கஷாயம் போல் ஆவி பறக்க அந்த மிளகு ரஸம்! – போச்சு, எல்லாமே போச்சு. ஒன்று வேணுமானால் ஒன்று இழந்தாக வேண்டும். எல் லாமே ஒரே சமயத்தில் நீ இருத்திக்கொள்ள முடியாது. 

அம்மா! நிச்சயமாக எனக்கு நரகம்தான். எனக்கு நரகத்தில் நம்பிக்கை உண்டு. நான் என் இளைய தலை முறையைப் போல் பகுத்தறிவாளன் அல்ல. ஆனால், அத னின்று மீட்சி கூட உன் அகண்ட பாசத்தால்தான் கிடைக் கணும். ஆனால், வாய்ப்பந்தல் நிழல் தருமா? அம்மாவின் திதி இன்று மிஸ் உர்ஸ் ஜியார்ஜ் காய்ச்சின சாயத்தண்ணி யுடன் ஆரம்பமாகிறது. இது மாதிரி சமயங்களில் தான் ஏக்கம் கவ்விக் கொள்கிறது. 

உர்ஸ் உள்ளே போகிறாள். 

திருவையாறில் இன்று ஆராதனை. 8.00, 8-30க்கு ரேடியோவைத் திறந்தால் நாதஸ்வரம், பஞ்சரத்னக் கீர்த் தனைகள், வேத கோஷம். அம்மாவே ஒரு மஹான் தான். 

நான் இன்னும் ஆராதனையை நேரில் பார்த்ததில்லை 

ஒரு தடவை- இருந்திருந்து காத்திருந்து போனேன். அப்போ அம்மா இருந்தாள் – விடிகாலை, திருச்சியிலிருந்து ஸ்பெஷல் காரில், நானும் நண்பர்களும் ஊரில் நுழையும் போதே ஒரு விதமாயிருந்தது களையேயில்லை. கூடிக் கூடிக் குமைவோரும், சலித்த நடையோருமாய், பந்தல்களும், தோரணங்களும், வாழை மரங்களையும் பிய்த்துச் சாய்த்திருந்தன. 

லால்பகதூர் சாஸ்திரி தாஷ்கண்டில் மாரடைப்பு. ”மணவறையே பிணவறையாம்’- பழியஞ்சின படலத்திலிருந்து  நேர் படப்பிடிப்பு. மக்கள் எல்லாவற்றையும் சினிமா ஷாட்டாகத்தான் புரிந்து கொள்கிறார்கள். 

நான் பாபியென்பதற்கு வேறு ருசு வேண்டுமா? நினைத்துப் பயனில்லை. எனக்கு எப்பவுமே கர்ண சாபம்தான். 

ஆச்சு, இன்னும் ஒரு மணி நேரத்தில் ஸ்னானத்தை முடிச்சுண்டு திருவனந்தபுரத்துக்குக் கிளம்பியாகணும். இந்த பஸ்ஸை விட்டால், மறு பஸ் மதியம்தான். அதற்குள் எனக்குச் சோம்பேறித்தனம் வந்து விடும். 

நாளைக்குப் பார்த்துக்கலாம். ஆனால், பானையில் அரிசி காலி, டப்பாவில் டீ காலி, பேழையில் செல்லி காலி, ‘நாளை நாளையென்று நமனுடை நாளும் வருவது அறியீர்’ சொற்கள் இப்படித்தான் போகின்றனவோ? ஆனால் பொருள் என்னவோ அதுதான். அது பிசக வழியில்லை. 

எல்லாச். சாலைகளும் சாலைக்கு நடத்திச் சென்று சாலையில் முடிகின்றன. 

சென்னையில் நேத்தாஜி சாலை. 

டில்லி சாந்தினி சௌக் 

மதுரையின் வீதிகள். 

திருச்சியில் சின்னக்கடை வீதி, பெரியகடை வீதி. 

ஒரு கோடியிலிருந்து மறுகோடிவரை ஒரே மூச்சில்,இந்தத் திருவனந்தபுரம் சாலையைக் காட்டிலும் நீண்ட வீதிகள் இல்லையா? 

ஆனால், அந்தந்த ஊர் மக்களுக்கு அவரவர் வீதிகள் ஒசத்தி. 

ஆனால், சாலையும் நீளம்தான். நேரே பத்மனாப ஸ்வாமி கோவிலில் முடிகிறது. 

சாமியும் பெரிசுதான். க்ளைமேட்டுக்கேற்ற சாமி. படுத்திருக்கிறார். மூணுவாயில் கொள்ளவில்லை. 

சாலையின் அத்தனை கடைகளிலும் எனக்குக் கருணா கரன் கடைதான் பெரிசு. ஊருக்கெல்லாம் ஒரே காரணம். அவரவர்க்கு அவரவர் காரணம். 

கருணாகரன் கடையில் என் பணத்தைப் போட்டிருக்கிறேன். 

கருணாகரன் அலுமினியப் பாத்திர வியாபாரம் செய் கிறார். ஓட்டை உடைசல் வாங்கி ஃபாக்டரிக்கு சப்ளை செய்கிறார் (தராசு வேறு). கூடவே, மரச்சொப்புகள், ஓலை முடையல்கள் (கூடை, முறம், வெற்றிலைப் பெட்டி, தாளாக் கூடை இத்யாதி) அம்மி, ஆட்டுக்கல், பத்தமடைப் பாய் – இது என்ன காம்பினேஷன் எனக்குப் புரியவில்லை. ஆனால் வியாபாரம் நல்லா நடக்குது. 

நான் கடையுள் நுழையும் போது கஸ்டமரைக் கவனித்துக் கொண்டிருந்தார். 

“வாங்கோ ஸார் வாங்கோ, பரவாயில்லே கல்லாவில் ஒக்காருங்கோ. நல்ல உத்யோகம் பார்த்திருக்கேள். நீங்கள் உட்கார்ந்தால் எனக்கு ராசிதான். சௌக்யமா? என்ன இளைச்சாப்போல் காட்டறது?’ 

கருணாகரன் கன்யாகுமரி ஜில்லா. அவர் எழுத்தைப் பாராட்டி ஒரு முறை அவருக்கு எழுதினதிலிருந்து எங்க ளிடையில் தொடர்பு கண்டது. நட்பு முற்றிற்று. 

கருணாகரன் எழுத்தில் சித்து, வித்தை, பொடி ஊதல், வேலைப்பாடு எல்லாம் உண்டு. அவர் கதைகள் சிதறின கண்ணாடித் துண்டுகள் போல, தெறித்த பிம்பங் களைக் காட்டிக் கொண்டு லேசான குரூரம் படைத்தவை. ஆயினும் படிக்கச் சுவை. பொடியோ சில்லோ கிழித்தால் ரத்தம்தான். 

வந்த கஸ்டமர் ஏதேதோ சாமான்களை வாங்கிக் கொண்டு, பணத்தை என்னிடம் கொடுக்கிறாள். மழித்த புருவங்களின் மேல் சீரான பென்சில் கோடு வளைவு வரைந் திருக்கிறது. கடை முதலாளியிடம் ஏதோ மலையாளத்தில் பறைகிறாள். இது அசல். எனக்குப் புரியாது. கருணா கரன் பதில் சொல்கிறார். எனக்குக் கைகூப்பிவிட்டுக் கடை யினின்று இறங்குகிறாள். ‘ஜாஜ்வல்யமான புன்னகை. இடுப்பில் விழுந்திருக்கும் ரொட்டி சதை இன்னும் ஊழை யாகவில்லை. கவர்ச்சியாகவேயிருக்கிறது. 

நண்பர் என் எதிரில் உட்காருகிறார். பெருமூச்செறிகிறார். 

“இந்த அம்மை யார் தெரியுமோ? எங்கள் தேச பிலிம் ஸ்டார்- 

“லக்கி கை! (LUCKY GUY)! அப்போ நீங்கள் சொன்னதுதான் விலை!” 

என் முகத்தில் இடிப்பது போல் கையைக் காட்டிச் சிரித்தார்.”நல்லாச் சொன்னீங்க போங்க! நீங்கதான் மெச் சிக்கணும். பேரம் பேச அவாளிடம் நாம் கத்துக்கணும். சென்னையில் பனகல் பார்க் மார்க்கெட்டில், காரில் உங்கள் ஸ்டார்கள் வந்து இறங்கி, கொடுத்ததை வாங்கிட்டு சொன்ன விலையைக் கொடுத்துட்டுப் போறாங்களே… அதுமாதிரி நினைச்சுட்டிங்களா? அந்தக் காலமெல்லாம் அங்கே கூடப் போச்சு. எல்லாரும் இப்போ நல்லா கத்துக் கிட்டாங்க. இந்த லேவாதேவியில் எனக்கு அஞ்சு சதம் நஷ்டம். ரொடேஷனுக்கு ரொக்கம் கிடைச்சால் சரின்னு விட்டுட்டேன்.” 

“அப்படியா? சினிமா ஸ்டார் அலுமினியம் தேவுசா வாங்கறாஹ; அதுக்கு நேரிடையா கடைக்கு வாராஹ”. 

“பிரியாணி செய்ய அலுமினியம்தான் சரி. பிரியாணி தான் சரியான பப்ளிசிடி சரக்கு அடேயப்பா, இவாளைப் போல கெட்டி காண முடியாது. நம் ஸ்திரீகள் அசடுகள்”. 

எனக்கு மதுரம் நினைப்பு வந்தது. மாதாந்தரத்துக்கு என்று எவ்வளவு சாமான் வாங்கிப் போட்டாலும், அவளுக்கு ஆளவருவது பதினைந்து நாளைக்குத்தான், எல்லாக் குடும்பங்களிலும் அப்படித்தான் என்று வாரிசு வருபவர் கள் எத்தனை பேர்? அவர்கள் சொல்வதும் மெய்தான். வகைகள், ஆனால், அதற்காக நாலுகிலோ எண்ணெய் ரெண்டு கிலோ வெண்ணெயும், பதினெட்டு நாட்களில் காலியா? ‘நான் ஒண்டியே தின்னுட்டேனா? சரி அப்படித் தான் போங்கோ! விலைவாசி சாமான் வாங்குகிற மாதிரியா இருக்கிறது? மாதாமாதம் கலியாணத்துக்குச் சீர்வெக்கற மாதிரின்னா இருக்கு!” 

சம்பளம், வாங்க உருப்படியாக இருந்தாலும், காசு கிளிஞ்சல் மாதிரிதானே ஆகிவிட்டது. அதுவுமில்லாதவா குடித்தனம் பண்ணிக் கொண்டுதானே இருக்கா? உங்கள் மாதிரி, அந்தஸ்துக் கேற்ற கௌரவத்தைக் கடைப் பிடிக்காமல்,மூக்கால் அழுதுண்டாயிருக்கா? 

“அருமையான வாதம், ஆனால் அவரவர் வாசற்படி தாண்டினால், அவரவர் வீட்டில் என்ன நடக்கிறது என்று உனக்குத் தெரியுமா?” 

“எனக்கு ஏன் தெரியணும்? யார் வீட்டுக்குள் நான் நுழைஞ்சாகணும்?” அவளோடு பேசி ஜெயிக்க முடியாது. பேச்சை ட்ராக் மாற்றிக் கொண்டு போவதில் வரப்ரசாதி. நினைப்பு எங்கோ சகதிக்குள் புதைந்து கொண்டிருப்பதிலி ருந்து என்னை விடுவித்துக் கொள்ள முயன்றேன். 

“என்ன கருணாகரன் ஸார், நீங்கள் எழுதுவது எல்லாம் என்ன புது அலையா? பழைய அலையா? அலை களில் புதுசு, பழசு உண்டா?” 

‘அலையாவது, கடலாவது, எல்லாம் சாக்கடையைத் திறந்து விட்டாச்சு. புண்ணிய தீர்த்தமாய், ஜனங்கள்,  மூக்கைப் பிடிச்சுண்டு முங்கி முங்கி எழறதுகள். பக்கத்தி லேயே கடல் பாய்ந்தால் என்ன,நதி ஓடினால் என்ன? நம்ம புத்தகங்கள் எங்கே கடையில் நகர்ரது? அப்புறம்  என்ன? எழுதி என்ன பயன்? ஒரு சாகித்ய அகாடமி, ஒரு அறவாழிக் கட்டளை? ஊஹும் – ஒன்னு கிடைச்சால் கூட பிஸினெஸ்ஸில் போடலாம் – டே பையா!” பையன் அப் போதுதான் வந்தான். சினிமா ஸ்டாருடன் அவள் வாங்கின பாத்திரங்களைச் சுமந்து கொண்டு போனவன். “சாமிக்கும் எனக்கும் ரெண்டு கோப்பி வாங்கிவா. போற வழியில் வீட்டுக்குப் போய் அம்மைகிட்ட பறை. சாமி மதியம் ஊணுக்கு என்னோடு வரதுன்னு. வாழையிலை மறக்க வேண்டா.’ 

இடையில் தூக்கிய தண்ணிக் குடத்தின் கிளுகிளுப்புப் போன்று கருணாகரன குரல். எக்காரணமாயும் அவர் குரல் தூக்கியோ முகம் சுணங்கியோ நான் கண்டதில்லை. 

சரி…நிச்சயம் இன்று அவியலும்,பப்படமும் எதிர் பார்க்கலாம். எனக்காகச் சக்கைப் பிரதமன் செய்தாலும் ஆச்சரியமில்லை. எனக்கு அனுபவம்தான். கருணாகரன் நீங்கள் நீடூழி வாழ்க! எனக்கு இப்பவே வயிற்றில் எலி பிராண்டுகிறது, எனக்கும் நினைப்பு இப்போத்தான் வரு கிறது.உர்ஸ் கொடுத்த சாயாத் தண்ணியோடு நிற்கிறேன். கருணாகரன் நீ நீடூழி வாழி! உன் கைவாசம் எனக்குத் தெரியும், உனக்கு மனசும் மணம்தான். 

உர்ஸ், நீ நீடூழி வாழி! இன்று உன் சமையலிலிருந்து எனக்கு விடுதலை அல்லவா? 

ஆகவே, எல்லாரும் இன்புற்றிருக்கவன்றி வேறேதும் அறியேன் பராபரமே. 

“கருணாகரன், ஆசைப்படுவதில் கூட பிசினாறித் தனமா? ஞான பீடம் மறந்து விட்டேளா?” 

இப்படி இந்த நுனி நாக்குச் சிலம்பத்திலேயே கொஞ்ச நேரம் ஓடும். 

“கருணாகரன் அப்போ எல்லாமே வியாபார நோக்குத் தானா?” 

“ஸார் உங்களுக்குத் தெரியாது இல்லே. வியாபாரம்னு தனியா எதுவுமே கிடையாது. எல்லாம் பண்ட மாற்றல் தானே! கையால் தொடக்கூடிய பண்டங்கள்! கண்ணால் பார்க்கக் கூடிய பண்டங்கள், ஸ்தூலப் பண்டங்கள். ஸ்தூல மற்ற பண்டங்கள். எல்லா உறவுகளும் அரிசி கொடுத்து அக்கா உறவுதான். நீ அவல் கொண்டுவா நான் உமி கொண்டு வருவேன் கலந்து ஊதி ஊதித் தின்கலாம். 

பொருளாதாரத்தின் தத்துவம், தத்துவத்தின் பொரு ளாதாரம், எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் நீயே இருத் திக் கொள்ள முடியாது. ஒன்று வேணுமானால் ஒன்று இழந்தாக வேண்டும். இயற்கை அள்ளி அள்ளித்தான் கொடுக்கிறது. அதற்கு வேறு தெரியாது. ஆனால் ஆசை, இயற்கையின் உற்பத்தியையும் மீறியது. ஆகையால் இருப் பதுதான் பங்கு வளையம் வருகிறது. அப்படித்தான் வர முடியும். ஒருவன் சரிந்துதான் மற்றவனின் ஏற்றம். தேய் பிறை, வளர்பிறை, விதி, யோகம்,ராசி நம்பிக்கை,பேய், சாமி, பூதம், கடவுள். இந்தப் பங்கீடு நிலைமைக்கு என்ன பேர் வேணுமானாலும் வைத்துக் கொள். ஒரு பக்கம் செத்துக் கொண்டேயிருக்கிறோம். பக்கத்திலேயே பிறந்து கொண்டேயிருக்கிறோம். நிரவல், நிரவல் – காலம், பொழுது, ஏவல், இடம் -“.

– தொடரும்

– கேரளத்தில் எங்கோ… (நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1988, ஐந்திணை பதிப்பகம், சென்னை. 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *