கீரை படுத்திய பாடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 26, 2023
பார்வையிட்டோர்: 1,940 
 

இந்த கதையை வாசிக்கும்போது ஒரு முப்பது வருடங்கள் பின்னோக்கி போய் வாசியுங்கள் !

அப்பொழுதெல்லாம் புது மாப்பிள்ளைக்கு இருக்கும் மவுசே தனிதான். இன்றைய  கால புதுமாப்பிள்ளைகள் பொறாமை படவேண்டியதில்லை. காரணம் கதை முடிவில் தெரியும்.

நம் கார்த்திகேயனுக்கு “வாசவி” என்ற பெண்ணுடன் கல்யாணம் ஆகி ஒரு மாதம்தான் ஆகிறது. நல்ல இளம் காளை, வயது இருபத்தி ஐந்துதான் ஆகிறது. எந்த கெட்ட பழக்கமும் இல்லை, அவனிடம் உள்ள ஒரே பழக்கம் வயிறார, மன்மார, வாய்க்கு ருசியாக சாப்பிடுபவன். அவன் கல்யாணம் பண்ணிய சுருக்கோடு பொண்ணு வீட்டில் தங்காமல் கோயமுத்தூரிலிலுள்ள தன் வீட்டுக்கு பெண்ணை கூட்டி வந்து விட்டான். பெண் பெங்களூர் பெண். அழகாக வேறு இருந்து விட்டாள். நம் மாப்பிள்ளைக்கு கேட்கவா வேண்டும்.

அலுவலகம் ஐந்து மணிக்கு விடுவதும் தெரியாது, இவன் வீட்டுக்கு வருவதும் தெரியாது. அவ்வளவு வேகமாக வந்து விடுவான். இதற்கும் ஒரு ஹெர்குலஸ் சைக்கிள்தான் வைத்திருக்கிறான். அங்கு உட்கார்ந்து அழுத்த ஆரம்பித்தால், அவனுக்கு தன்னுடைய மனைவியின் முகம் மட்டும்தான் கண்ணுக்கு தெரியும். இதற்கும் அலுவலகத்திலிருந்து பத்து கிலோ மீட்டராவது அவன் வீடு இருக்கும். அப்பா, அம்மா,தம்பி, தங்கை எல்லோரும் உண்டு..பறந்தடித்து வந்தவுடன் அம்மா முறைப்பாள், முதலில் எல்லாம் அலுவல்கம் முடிந்து,, நண்பர்களுடன் அரட்டை, சினிமா எல்லாம் முடிந்து வீட்டுக்கு வரும்போது, மாலை மங்கி இரவு வந்து விடும். இப்ப சம்சாரம் வந்தவுடன் எப்படி வர்றான் பாரு என்று அம்மா முணுமுணுப்பாள். வீட்டிற்கு வந்து கை கால் கழுவி தயாராகி அம்மாவை தாஜா பண்ணி மனைவியை அழைத்துக்கொண்டு வெளியே கிளம்புவான், கோயில், இல்லாவிட்டால் சினிமாவுக்கு செல்வான்.அம்மாவிடம் முதலிலேயே “பர்மிசன்” வாங்கிவிடுவான்.

அவன் மனைவி “வாசவி”அவர்கள் வீட்டிற்கு கடிதம் எழுதினாள். தான் இங்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அப்புறம் வீட்டில் உள்ள எல்லாரையும் பற்றி… எழுதினாள். தன்னுடைய கணவனை பற்றியும் புகழ்ந்து எழுதியவள், அவருக்கு கீரை என்றால் மிகவும் பிடிக்கும் என்று ஒரு வரியும் எழுதி அனுப்பி விட்டாள். “அப்பாடி” கதைக்குள் இப்பொழுதுதான் நுழைகிறோம் !  

கார்த்திகேயனை அலுவலகத்திலிருந்து இரண்டு நாட்கள் பெங்களூக்கு அனுப்ப சொல்லி உத்தரவு வந்தது, இவனுக்கு  தன்னுடைய மனைவியையும் கூட்டிக்கொண்டு அலுவலக காரியமாகவே பெங்களூர் போய் விடலாம் என்று வீட்டுக்கு வந்தான். ஆனால் அவன் துரதிர்ஷ்டம், மனைவி வீட்டு விலக்காயிருந்தாள், அவ்வளவு தூரம் பயணப்பட உடல் ஒத்துழைக்கவில்லை. சரி நமக்கு இப்ப்டி ஒரு வாய்ப்பு வந்தும் மனைவியை கூட்டி செல்ல முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் இரவு கிளம்பினான். அவன் மனைவி அவனுக்கு தேவையான பொருட்களை எடுத்து அடுக்கி வைத்தவள், நேராக வீட்டுக்கு போயிடணும் நான் நேத்தே டிரங்கால் புக் பண்ணி சொல்லிட்டேன். அவங்க மாப்பிள்ளையை எதிர்பார்த்து கிட்டு இருப்பாங்க, அன்பாய் எச்சரித்தாள். காரணம் இவனது அக்கா ஒருத்தி பெங்களூரில் இருக்கிறாள். அவள் மூலம்தான் இவளை கல்யாணம் பண்ணிக்கொண்டான்.

சரி என்று தலையாட்டி விட்டு இரவு பஸ் ஏறினான். கார்த்திகேயனை பற்றி ஏற்கனவே உங்களுக்கு சொல்லியிருக்கிறோம்.அவனது பலவீனம், வகை வகையாய் விரும்பி சாப்பிடுபவன், என்ன..! கொஞ்சம் கீரை அதிகமாக எடுத்து கொள்வான். அவனுக்கு எப்படியும் சம்சாரம் வீட்டில “பெங்களூர் ஸ்பெஷலாய்” ஏதாவது செய்து தருவார்கள், திருப்தியாய் சாப்பிடலாம், என்ற மகிழ்ச்சியும் இருந்தது. வீட்டில் நிறைய பேர் இருப்பதால் இவனுக்கு மட்டும் தனியாக எதுவும் கிடைக்காதே ! மனைவி இவனுக்கு செய்து கொடுக்க ஆசைப்பட்டாலும் !

காலையில் போய் மனைவி வீட்டில் இறங்கியவனுக்கு ஒரே தடபுடல் வரவேற்பு.

குளித்து முடித்து “டைனிங் டேபிள்” வரவும் அவனுக்காக ஸ்பெஷலாக கீரை குழம்பு செய்து தோசை சுட்டிருந்தார்கள். இதென்ன “தோசைக்கு கீரை குழம்பா” வியந்தாலும் இதுவும் பெங்களூர் ஸ்பெஷல் போலிருக்கிறது என்று சாப்பிட்டான். அப்படியே அலுவகல்ம் கிளம்பியவனை “மாப்பிள்ளை மதியம் சாப்பாட்டுக்கு வந்துடணும்” மறந்துடாதீங்க ! மாமனாரின் அன்பான கட்டளையை தலையாட்டல் மூலம் தெரிவித்து விட்டு கிளம்பினான். அலுவலகத்தில் நண்பன் பாலு இவனுடன் கோவையில் பணியில் இருந்தவன் இங்கு மாற்றலாகி வந்திருக்கிறான். அவன் “காண்டீன்” போகலாம் என்று சொன்னான். சரி என்று போனவனுக்கு அங்கு போட்டிருந்த “போர்டை” பார்த்தவன் சற்று முகம் சுருக்கினான். “இன்றைய ஸ்பெஷல் “கீரை வடை” என்று போட்டிருந்தது, காலையில் “கீரை குழம்பு” சாப்பிட்டோமே என்று நினைத்தாலும் பாலு இங்க “கீரை வடை”டேஸ்டா இருக்கும் என்று ஆளுக்கு இரண்டாக வாங்கி வந்தான். சங்கடப்பட்டுக் கொண்டே சாப்பிட்டான்.

மதியம் அடித்து பிடித்து மாமனார் வீட்டுக்கு சென்றான். அவனது இலையில் வைத்த பொருட்களை பார்த்து இவனுக்கு கண்ணீர் எட்டி பார்க்க ஆரம்பித்தது. பாலை கீரை பொறியல், பருப்பு கீரை கூட்டு, அப்புறம் என்னவோ கீரையுடன் தேங்காய் சேர்த்து ஒரு விதமான பொறியல், பொன்னாங்கன்னியாம். கீரை குழம்பு தனியாக,..சாப்பிடுங்க மாப்பிள்ளை, உங்களுக்கு கீரை ரொம்ப பிடிக்குமுன்னு “வாசவி” சொல்லியிருக்கு, பெருமையுடன் சொன்னார் மாமனார். இவனுக்கு எரிச்சல் பக பகவென வந்தாலும் தான் ஒரு முறை ஏதோ ஒரு மயக்கத்தில் அவளிடம் “கீரை” என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்னது ஞாபகம் வந்து தொலைத்தது.

மதியம் எப்படி சாப்பிட்டானோ தெரியாது, அலுவலகத்திற்கு அடித்து பிடித்து ஓடினான். மாலை காண்டீன் பக்கம் தலை வைத்து படுக்கவில்லை. மாலை அலுவலகம் முடிந்து கீரைக்கு பயந்து கொண்டே மாமனார் வீட்டுக்கு வந்தான்.

இரவு சுடசுட தோசை கொண்டு வந்து வைத்தவுடன் சந்தோஷப்பட்டான், ஆனால் பக்கத்தில் கீரை மசியலுடன் சட்னியும் கொண்டு வந்து வைத்தார்கள். மாப்பிள்ளை இது புது மாதிரியான் ரெசிபி, தொட்டு சாப்பிட்டு பாருங்கள் டேஸ்ட் ஏ ஒன்… மாமனார் அவன் முன் சொல்லிக்கொண்டு சப்பிக்கொண்டு சாப்பிட்டார். இரவு அவன் சாப்பிடும்போது கண்ணீர் வந்ததை கண்டு மாமியார் சட்னியில் கொஞ்சம் காரம் அதிகமாக போட்டு விட்டோமோ என்று கவலையுடன் பார்த்தாள்.

காலை எழுந்தவுடன், குளித்து முடித்து டிபனுக்கு உட்கார போகும்போது எல்லா கடவுளையும் வேண்டிக்கொண்டான், கீரை மட்டும் கண்களுக்கு காட்டிவிடாதே என்று. ஆனால் கடவுள் கருணை காட்டாமல் மாமியார் ஸ்பெஷல் அயிட்டம் இது என்று கீரையுடன் கலந்த உப்புமாவை கொண்டு வந்து வைக்க மனசெல்லாம் விண்டு போக சாப்பிட்டு அலறி பிடித்து அலுவல்கம் கிளம்பினான். அப்படியே மாமனாரிடம் மாலை வேலை முடிந்தவுடன் கிளம்புகிறேன், என்று சொன்னான். ஏன் மாப்பிள்ளை இன்னும் இரண்டு நாள் இருந்துட்டு போலாமில்லை, அவர் அன்பாக சொன்னாலும், இவன் அரக்க பரக்க “ஐயோ”..அங்க வேலை எல்லாம் நிறைய கிடக்கு, மனைவி கட்டி கொடுத்த துணி மணிகளை எடுத்துக்கொண்டு அலுவலகத்துக்கு பறந்தான்.

அலுவல்கத்தில் நண்பன் பாலு “வர்றியா காண்டீன்ல இன்னைக்கு கீரையிலயே ரெசிபி ஒண்ணு செஞ்சிருக்கான், சாப்பிட்டு வரலாம், சொன்னவனிடம் “நான் வரலை”ஏன் இவ்வளவு ஆத்திரமா சொல்றான் என்று பாலு வியப்பாய் பார்த்தான்.

வேலைகள் முடிய மதியம் மூன்று மணிக்கு மேல் ஆகிவிட இந்நேரத்துக்கு பஸ் ஏறுவதை விட மாலை ஏறினால் வீட்டிற்கு விடியற்காலை போய்விடலாம், முடிவு செய்தவன் அக்கா வீட்டிற்கு போகலாம், அக்கா வீட்டிலாவது ஏதாவது வித்தியாசமாய் சாப்பிடலாம், நினைத்துக்கொண்டு வேக வேகமாய் பறந்தான்.

அக்கா அவனை பார்த்தவுடன் முகம் எல்லாம் மலர கணவனிடம் ஏங்க நான் சொல்ல்லை, நான் கீரையில குழம்பு வச்சு, கீரை பொறியலை வைக்கும்போதே என்ன சொன்னேன்?

 “இந்நேரத்துக்கு என் தம்பி இருந்திருந்தான்னா” எவ்வளவு சந்தோஷமா இருந்திருக்கும் அப்படீன்னு சொல்லிக்கொண்டிருந்தேன், அவனுக்கு கீரையின்னா உசிறு ஆச்சே அப்படீன்னு. அது எப்படிடா கரெக்டா வந்து நிக்கறே? பொத்தென்று கார்த்திகேயன் அங்கிருந்த சோபாவில் சரிந்ததை அக்கா பாவம் வேலை செய்த களைப்பென்று நினைத்துக்கொண்டாள்.

கொசுறு செய்தி : ஒரு வெறியுடன் கோயமுத்தூர் வந்து வீட்டிற்கு சென்றவன் அங்கும் அன்று கீரையில் ஏதோ செய்திருக்க அவனுக்கு வந்த கோபத்தை வியப்புடனும், ஆச்சர்யத்துடனும் பார்த்து கொண்டிருந்தார்கள் அவனது மனைவியும், குடும்பத்தாரும். (இந்த கால மாப்பிள்ளைகள் சந்தோஷப்பட்டுக்கொள்ளட்டும்) 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *