கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 18, 2021
பார்வையிட்டோர்: 5,308 
 

தீராப்பகைஅந்த ஆலமரம் கம்பீரமாக தன் பெரிய கிளைகளையும், விழுதுகளையும் பரப்பி, பெருநிழல் தந்து கொண்டிருந்தது.அதன் கீழே பெருங் கூட்டம். அதில் அனலும், புழுதியும் பறந்து கொண்டிருந்தது. கூடவே கூச்சலும், குழப்பமும்.

நடுநாயகமாக இருந்த தலைவர் யூதநாதருக்கு சம்பிரதாய வணக்கம் போட்டுவிட்டு, பெரியவர் நாக மதோற்கடர் எழுந்து நிற்க முயற்சித்தபோது தன் பெருத்த உடம்பு கோபத்திலும் வயதின் மூப்பிலும் ஆடுவதைக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடினார்.

பல இக்கட்டான சமயங்களில் இவரது யோசனைகள் பலன் தந்திருக்கின்றன என்றாலும் இப்போது இவருக்கு இறங்குமுகம்தான். இருந்தாலும் எந்த கூட்டத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி வேண்டியதை சாதித்துவிடுவார்.

இப்போதும் அப்படித்தான்.‘‘ஏன்பா… இப்படியே கத்திக்கிட்டும்… அங்க இங்கனு அலைஞ்சுகிட்டும் இருந்தீங்கனா எப்படி கூட்டத்த நடத்துறது? மட்டு மருவாத வேண்டாம். கொஞ்ச நேரம் எல்லாம் அடங்குங்க…’’ நாக மதோற்கடர் சத்தம் போட்டதும் கொஞ்சம் கொஞ்சமாக அமைதி திரும்பியது.

தன் குரலுக்கு இன்னும் பவர் இருந்ததைக் கண்டு அவருக்கே ஆச்சரியம். தொடர்ந்தார்.‘‘அவங்களுக்கும் நமக்கும் ஏற்கனவே பகை மண்டிக் கிடக்கு. இதுல இவன் வேற பிரச்னை பண்ணிட்டு இருக்கான்… அன்னைக்கே இவன நாலு தட்டுத் தட்டி வச்சிருந்தா இன்னைக்கு இந்த நிலமை வந்திருக்குமா? திரும்பவும் அதே இடத்துக்கு போயிருக்கான் போல…’’ பொருமினார்.

ஓரமாக மரத்தின் மீது அசால்ட்டாக சாய்ந்து முதுகைச் சொறிந்து கொண்டிருந்த சண்டி அல்லியன் பொங்கிவிட்டான். ‘‘சும்மா இரு பெருசு… அந்தக் காலத்துல நீ ஆடாத ஆட்டமா? பெருசா சத்தம் போட வந்துட்டாரு… இப்ப அவன் பண்றதெல்லாம் ஒண்ணுமே இல்ல…’’ அலட்சியமாக ரவுசு விட்டான்.

‘‘ஆமா… இருபது வருஷங்களுக்கு முன்னாடி நடந்ததும் இப்ப அவன் பண்ணிட்டு இருக்கறதும் ஒண்ணா? இதனால என்ன ஆகப்போகுதுனு நினைச்சாலே பகீர்னு இருக்கு. பழிவாங்க அவங்க நம் இடத்துக்கு வந்து எல்லாத்தையும் நாசம் பண்ணிடுவானுங்க…’’ பயத்துடன் நாக மதோற்கடர் அனைவரையும் பார்த்தார்.

உடனே சண்டி‌ அல்லியன், ‘‘யோவ்… நீ வேணா கிளம்பி இப்பவே வேற பக்கம் போய்டு… சும்மா எல்லாருக்கும் பயங் காட்டிக்கிட்டு… நம்ம‌ யாரு நம்ம பலம் என்னன்னு உனக்குத் தெரியாதா என்ன… நாமளும் அப்பப்ப நம்ம யாருன்னு காமிச்சுட்டுதானே இருக்கோம்? ஒரு கை பாத்துடுவோம்…’’ என்றான்.

உடனே கூட்டத்தில் ஒரே ஆரவாரம்.‘‘அவன் போன தடவ அந்த இடத்துக்குப் போயிட்டு வந்தப்ப அங்கிருக்கிற நமக்கு ஒத்துக்காத விஷயங்களைக் கத்துட்டு வந்தது மட்டுமில்லாம நம்ம பசங்களுக்கும் அதை கத்துக் கொடுத்திருக்கான். இதே மாதிரி போச்சுனா சீக்கிரம் நாமெல்லாம் அவனுக மாதிரி ஆயிடுவோமில்ல… நாம காத்து கட்டிவெச்ச கலாசாரம் என்னாகிறதுங்கிறேன்!’’ உரத்த குரலில் உறுமினார் பெருமா. இவர் அந்தக் கூட்டத்திலேயே மிகப் பெரிய சவுண்ட் பார்ட்டி.

‘‘ஆனா, அவன் மட்டும் சண்டய வலிச்சுக்கிட்டு வந்தான்னு வெய்ங்க… அவனுக்கு இருக்கிடி… பிரிபிரின்னு பிரிச்சுடுவேன்…’’ கரியன் குரலில்‌ ஏக கடுகடு எக்காளம்.‘‘இவன் பண்றதயெல்லாம் பாத்துட்டு இவன மாதிரி இருக்கிற இளவட்டங்க எல்லாம் கெத்து காமிக்க ஆரம்பிச்சா..? நாம நிம்மதியா இருக்க வேணாமா? எவ்வளவோ புத்தி சொல்லியும் அந்த மத்தள மர மண்டைக்குள்ள எதுவும் ஏறல. ரொம்ப நாளா பிரச்னை இல்லையேனு நினைச்சேன்… ச்சை… என்ன பொழப்பு இது…’’ புலம்ப ஆரம்பித்தார் தலைவர்.

‘‘தலைவரே… ஒவ்வொருத்தரா என் புள்ளய கரிச்சு கொட்டுவீங்க… நா அதை கேட்டுக்கணுமா..? போதும்டா சாமி… நீங்க திட்டவும் வேண்டாம் அனுசரணையாவும் இருக்க வேண்டாம்… எல்லாம் நாங்களே பாத்துக்குறோம்… அவன் அப்பனாட்டமே தப்பாம பொறந்திருக்கறான். அந்த பாவிப்பய… அங்க போயிதான் செத்து எங்கள நிர்க்கதியா விட்டுட்டாப்படி… அந்த பிரச்னையெல்லாம் வேண்டாம்னு தானே இங்க வந்தோம். இவனும் அத மறக்க மாட்டிங்கிறான்… இப்படி பண்றானே… படுபாவி…’’ அழுதுகொண்டே தன் பெரிய மூக்கைச் சீந்தினாள் அத்தினி.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த கயந்தலையின் காதைப் பிடித்துத் திருகிக்கொண்டே அதவை சொன்னாள். ‘‘டேய்… அவன் உன்கூட சுத்துறவன் தானே? நீ, அவன மாதிரி ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணே… நான் என்ன அவதாரம் எடுப்பேன்னு எனக்கே தெரியாது, சொல்லிட்டேன். நா மிதிக்கிற மிதில சட்னி ஆயிடுவே…’’

கயந்தலை மனதில் தன் அம்மா சொன்னதை நினைத்துப் பார்த்ததிலேயே தலை கிறு கிறு‌வெனச் சுற்றியது.சுற்றிய தலை நின்றவுடன் அவன் பார்த்த திசையில் நண்பன்‌ நொண்டியபடி வந்தாலும் கையை அசைத்தபடி மெதுவாக வந்துகொண்டிருந்தான். உடம்பு பூராவும், ஆங்காங்கே ரத்தக் காயங்கள். அடிபட்ட வடுக்கள். இருந்தாலும் பந்தாவும் திமிரும் இன்னும் போகவில்லை என்பது அவன் நொண்டி நடையிலும் தெரிந்தது.

‘‘ஹேய்… அங்க பாருங்க… நம்ம சின்னத்தம்பி திரும்பி வந்துட்டான்…’’ என கயந்தலை பிளிறிக்கொண்டே அவனை நோக்கி ஓட மொத்த கூட்டமும் கலைந்து அவன் பின்னால் சேர்ந்துகொள்ள… காடு அதிர்ந்தது.

– மே 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *