எதற்குப் பிறந்தேன்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 7, 2024
பார்வையிட்டோர்: 1,342 
 
 

(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

“நாராயணி, நாராயணி இந்தப் புடவை நன்னாயிருக்கா, பாரேன்!”

புடவைத் தலைப்பை விரித்து, முகத்தை மூடிக்கொண்டு படுத்திருந்த நாராயணி தலையைத் தூக்கி, ”ஊம்! என்னம்மா, சொல்லறே?” என்றாள். 

பத்மா புடவை மூட்டையுடன் உள்ளே நுழைந்து தமக்கை பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். 

“அப்பா கடைக்காரனைப் பத்துப் புடவை கொண்டுவரச் சொல்லியிருந்தார். எனக்குப் பிடிச்ச ஆறு புடவையையும் பொறுக்கிண்டு வந்திருக்கேன், நீயும் பாரேன்!” 

“உனக்குப் பிடிச்சிருந்தால் சரிதான், பத்மா. நீ தானே கட்டிக்கணும்.” 

“பாரேன்! பார்த்தால் தேஞ்சா போயிடும்? நீ பிடிக்கறதுன்னு ஒரு வார்த்தை சொன்னால் என் மனசுக்கு திருப்தியாப் போயிடும்.” 

“சரி!” என்று நாராயணி எழுந்து உட்கார்ந்தாள். எண்ணெய் கண்டு வெகு நாளாகி விட்டதால் அவள் தலை பரட்டையாக ‘பம்’மென்று இருந்தது. முகம் வாடி வதங்கி, நெற்றியில் திலகமில்லாத குறையை எடுத்துக்காட்டியது. 

பத்மா பொட்டணத்தைப் பிரித்தாள்.

“இந்த மேக வர்ணம், டபிள் கலர், இது ரொம்ப நன்னாயிருக்கோல்லியோ, நாராயணி?” 

“நன்னாயிருக்கு. பேஷ். அடுத்தது கிளிப் பச்சையா, புனாத் தலைப்பா? தலைப்பைப் பிரி.” 

“நீயே பிரிச்சுப் பாரேன்!” என்று பத்மா அந்தப் புடவையை அவளுக்கு அருகில் போட்டாள். பாம்பைக் கண்டவள்போல் நாராயணி பின்னுக்கு நகர்ந்துகொண்டாள். 

“ஏன் நாராயணி, தொடமாட்டாயா?” என்று பத்மா அழாத குறையாகக் கேட்டாள்.

“அதுக்கில்லை, பத்மா. நான் தொடக் கூடாது. நீயே பிரிச்சுக் காட்டேன். உன் நல்லதுக்குத்தான் தொடமாட்டேன் என்கிறேன்.” அவள் கண்களிலும் நீர் நிரம்பப் பார்த்தது. 

பத்மா தரையை வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தாள். 

“பத்மா, நிமிர்ந்து பாரு! கலியாணப் புட வையைப் பார்த்ததும் வெட்கம் வந்துடுத்தா?” என்று நாராயணி தன் தங்கையின் முகவாய்க் கட்டையைப் பிடித்து நிமிர்த்தினாள். முகம் நிமிர்ந்தபோதிலும் கண்கள் பூமியையே நோக்கின. 

“கோவிச்சுண்டிட்டியா, பத்மா? நான் புடவையை எடுத்துப் பார்க்கிறேன், போறுமா?” என்று நாராயணி அந்தப் பச்சைப் புடவையை எடுத்துப் பார்த்தாள். 

“ரொம்ப நன்னாயிருக்கே! கோபுர பார்டர். தலைப்பிலே நிறைய சரிகை. இதை எப்படி பத்மா, பொறுக்கி எடுத்தே? பேஷ்!” 

பத்மாவுக்குப் பழைய உற்சாகம் வரவில்லை. வாயைத் திறந்து பேசாமல் ஒவ்வொரு புடவையாகப் பாக்கி நான்கையும் எடுத்துக் காட்டி விட்டு மறுபடியும் காகிதத்தை மடித்து நூலால் கட்டினாள். 

“இந்த ஆறையும் எடுத்துக்கொள்ளு,பத்மா உன் சிவப்பு உடம்புக்குப் பொருத்தமாயிருக்கும்.” 

“சரி, நாராயணி,” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் பத்மா வெளியேறினாள். 

கூடத்தில் தட்டான் வந்து நின்றுகொண்டிருந்தான். தாயாரும்தான் இருந்தாள். 

“பத்மா, உனக்கு கைவளை பண்ண, மாதிரி கொண்டுவந்திருக்கான். பார்க்கிறாயா?” என்றாள் தாயார். 

“நீயே பார்த்துச் சொல்லேன், அம்மா! நான் எதுக்கு?” என்று பத்மா மாடிக்கு ஓடும் சத்தம் கேட்டது. 

“இதென்னடி பெண்ணே ! தட்டான் வந்து காத்திண்டிருக்கான். நல்ல காரியமும் அதுவுமா! ஏண்டி நாராயணி, நீ ஏதாவது சொன்னயோ? இந்தப் பொண்ணு கோவிச்சுண்டு ஓடறதே?” 

நாராயணி பதில் பேசவே இல்லை. தாயார் அந்த உள்ளுக்கே வந்துவிட்டாள். 

“ஏண்டி, அந்தக் குழந்தைகிட்டே எதையாவது பொருமி வைச்சயா? உன்னைத்தான் அடைச்சுப் போட்டிருக்கே, தெய்வம், உன் வாயையும் அடைச்சுக்கக் கூடாதோ?” 

“நான் ஒண்ணும் சொல்லல்லேஅம்மா. புடவையெல்லாம் கொண்டு வந்து காட்டினாள். நன்னாயிருக்குன்னு சொன்னேன். வேணும்னா நான் போய் கூப்பிட்டுண்டு வரேன். போகட்டுமா?” 

“வேண்டாம்.வேண்டாம். நகை பண்ண ஆசாரி வந்திருக்கான். உன் முகத்தைக் காட்ட வேண்டாம்!” என்று தாயார் அழுத்தந்திருத்தமாகச் சொல்லிவிட்டுப் போனாள். 

நாராயணியின் கண் கலங்கியது. ஆனால் நீர் பெருகவில்லை. அவை வற்றிப்போய்த்தான் எவ்வளவோ நாளாயிற்றே? தாயாரின் குத்தலான மொழிகள் அவள் இருதயத்தைத் தொட்டு அதிர்ச்சி யுண்டாக்கின.
ஆனால் காயப் படுத்தவில்லை. அதிர்ச்சி அடங்கியதும், “அவள் சொன்னதும் வாஸ்தவம் தான். நாமே தான் வைராக்கியமா புடவையைத் தொடக் கூடாதுன்னு நினைச்சோம் நகையை மட்டும் பார்க்கலாமா?” என்று நினைக்கத் தொடங்கினாள். 

பத்மா மாடியிலிருந்து இறங்கி வந்ததாகத் தெரியவில்லை. மாடிமேல் தாயாரின் குரல் இரைந்து கேட்டது. கீழே ஆசாரி “அம்மா!” என்று கூப்பிட்டவுடன் தாயார் இறங்கி வந்தாள். பின்னாலேயே பத்மாவும் வந்தாள் போலிருக்கிறது. அவள் குரலும் மெதுவாகக் கேட்டது. 

“ஆசையாயிருந்தது, காட்டினேன்! காட்டினால் என்னவாம்? அவளுக்கு மட்டும் கலியாணப் பொறுப்பில் பங்கில்லையோ ?” 

“அசடு! சும்மா இரேன். தெரிஞ்சாப் போலே பேசாதே. நான் பெரியவள். சொல்ற படிகேளு!” என்று தாயார் அதட்டினாள். 

அப்புறம் நகைகளைப்பற்றிய பேச்சுக்கள் தான் கேட்டன. நகையென்றால் உற்சாகப்படும் பத்மா. “எல்லாம் போறும்!” என்று பேச்சுத் தொடங்கினாள். 

நாராயணி இரு காதுகளையும் பொத்திக் கொண்டு பழையபடி உடலைச் சுருட்டிக் கொண்டு படுத்தாள். நல்லவேளையாக அந்த இருட்டறையின் கதவு காற்றில் சாத்திக் கொண்டது. 

தான் மூத்த பெண். முப்பது வயதாகப் போகிறது. பத்மாவுக்குப் பதினாறே வயது. அவள் குழந்தையல்லவா? அவள் க்ஷேமத்தில் பெற்றோருக்கு இருக்கும் சிரத்தை தமக்கையான தனக்கும் இருக்கவேண்டாமா? கலியாண சமயத்தில் எதையும் சகுனம் பார்த்துக் கைராசி தெரிந்து செய்வார்கள். அந்தச் சமயத்தில் எவ்வளவு ஒதுங்கியிருந்தாலும் தன் கை பட்டுவிடும் அல்லது கண்ணாவது விழுந்து விடும். அப்பா மட்டும் தன்னைச் சோழராஜ புரத்தில் கொண்டுவிடச் சம்மதித்தாரானால் அங்கேபோய் இருக்கவேண்டும். கலியாண வீட்டில் தனக்கு என்ன வேலை? 

நாராயணி மனதில் நிச்சயமாகிவிட்டது. கட்டாயம் சோழராஜபுரத்திற்குப் போய்விட வேண்டும். 

அவளுக்குத் தான் சோழராஜபுரத்திலிருந்து பிறந்தகம் வந்த வைபவம் நினைவுக்கு வந்தது. புருஷன் இறந்துபோன ஒரு மாதத்திற்குள் அவளைத் தாயாரும் தகப்பனாரும் பலவந்தப் படுத்தி, பிறந்தகத்திற்கு அழைத்துவந்தார்கள். தாயார் அப்போதெல்லாம் பொழுதுவிடிந்தால் பொழுது போனால் அதே அறையின் வாசற் படியில் உட்கார்ந்து கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பாள். பத்மா இப்போதிருப்பதைவிட அப்போது இன்னும் உலகமறியாதவளாக இருந்தாள். நாராயணி ‘உம்’ மென்றிருக்கிறாள் என்று பயந்துகொண்டு அவள் அந்த அறைப் பக்கமே வரமாட்டாள். போதாத குறைக்குத் தாயார் வேறு கணணீரும் கம்பலையுமாக அறை வாசலில் உட்கார்ந்திருந்தாளா? 

ஒரு நாள் – மாசம்,தேதி ஒன்றும் அவளுக்கு நினைவில்லை – பத்மா தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்தாள். 

“எனது உள்ளமே நிறைந்த தின்ப வெள்ளமே!” 

அவள் குரல் வெகு இனிமையாக இருக்கும். எந்த இசைத் தட்டிலிருந்து கற்றுக்கொண்டாளோ தெரியவில்லை. மிகவும் நன்றாக, சங்கோஜமில்லாமல் பாடினாள். 

அப்போது, “என்ன பாட்டு வேண்டியிருக்கு? கூடப்பொறந்தவளை உள்ளே முறிச்சுப்போட்டிருக்கு ! உனக்குப் பாட்டா? இன்ப வெள்ளம் பொங்கறதோ?” என்று தாயார் குரோதத்துடன் அதட்டல் போட்டாள். 

“பாடக்கூடாதா அம்மா? நாராயணிக்குத் தான் பாட்டுன்னா பிடிக்குமே?” 

“சரிதான்! சும்மாயிருக்கமாட்டே? நம்மாத் திலேதான் பாட்டு, கூத்து ஒண்ணுமில்லாமே அடிச்சுட்டானே?” 

பாட்டு நின்றுவிட்டது. பத்மா விம்மிக்கொண்டிருந்தாள். 

அன்றுதான் முதல்தடவையாக நாராயணி அந்தக் கோலத்தில் பகலில் அந்த அறையை விட்டு வெளியே வந்தது. வெகுநேரம் விழுந்து கிடந்த பிறகு எழுந்ததால் தலை கிர்ரென்று சுற்றியது. ஒரு வினாடி கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. மெதுவாகச் சுவரைப் பிடித்துக்கொண்டு வெளியே வந்தாள், அவளைத் திடீரென்று கூடத்தில் கண்டதும் தாயார் திடுக்கிட்டாள். 

“என்னம்மா, வேணும்?” 

நாராயணி அதைக் காதில் போட்டுக்கொள்ளாமல் தன் தங்கையிடம் போனாள். அவளைத் தூக்கி நிறுத்தி, தன் புடவைத் தலைப்பால் அவள் கண்களைத் துடைத்தாள். 

“நீ பாட்டுக்குப் பாடு பத்மா. அம்மா கிடக்கிறாள். கோபத்திலே ஏதோ சொல்லி விட்டாள். சின்ன பொண்ணா லட்சணமா ஆடிப் பாடிண்டு இருக்கணும் தெரியுமா?” என்றாள். பிறகு தன் தாயார் பக்கம் திரும்பி, ” ஏனம்மா, அவள் குழந்தை. அவள் மனசை ஏன் புண்படுத்தறே? என்னையும் அவளையும் சேர்த்து ஒரே வாயாலே பேசாதே. அவளாவது சந்தோஷமாய் இருக்கட்டும். ஏன்? அவள் சந்தோஷமா யிருந்தாத்தானே நமக்கும் சந்தோஷம்?” என்றாள். 

பத்மா அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு தொங்கினாள். 

“நாராயணி, நான் உன்னோடே பேசல்லேன்னு உனக்கு கோவமில்லையே? எனக்கு பயமாயிருந்தது!” என்று கொஞ்சினாள். 

அந்த நினைவு வந்ததும் நாராயணியின் ‘வற்றிப்போன கண்கள் ஊற்றெடுத்தன. அது சோகக் கண்ணீரல்ல. உணர்ச்சிக் கண்ணீர்! 

அன்றிலிருந்தோ என்னமோ தாயாருக்கு நாராயணியின் மேலிருந்த பாசம் பெரிய மாறுதலை அடைந்தது. இரண்டு திருப்பம் திரும்பி எதிர் திசையை நோக்கிச் சென்றது! ஒரு வருஷம் வரை அது அவ்வளவு தெளிவாக இல்லை. பத்மாவுக்குக் கலியாணம் நிச்சயமானதும் ஸ்பஷ்டமாகத் தெரியத் தொடங்கிற்று. பத்மாவையும் அவளையும் எவ்வளவு பிரித்துவைக்க முடியுமோ அவ்வளவு பிரித்துவைக்கத் தாயார் முயற்சி செய்தாள். 

“இப்போது அவளுக்கே சந்தோஷமாயிருக்கும். நான் சோழராஜபுரத்திற்குப் போகிறேன் என்று சொல்லப் போவது!” என்று நாராயணி நினைத்துக்கொண்டாள். 

வெளியில் போயிருந்த தகப்பனார் வந்தார். 

“புடவையெல்லாம் பொறுக்கியாச்சா? நகை பண்ணக் கொடுத்தாச்சா?” என்று விசாரித்தார். 

“என்ன பத்மா, ஒரு மாதிரியாயிருக்கே?”

“ஓஹோ! இன்னும் பத்மா சமாதானம் அடையவில்லையா? பாவம், குழந்தையைப் புண்படுத்திவிட்டேன்” என்று நாராயணி நொந்துகொண்டாள். 

இதோ அம்மாவின் புகார் ! 

“அவள் இருக்காளோல்லியோ? தங்கையெ ஏதோ தகராறு பண்ணியிருக்காள்!” 

“பார்த்தாயா? மறந்தே போயிட்டேன். நாராயணி கிட்டே முக்கியமான சமாசாரம் சொல்லணும்.” 

தகப்பனார் காலடியோசை கேட்டது.மூடியிருந்த கதவு திறந்தது. 

“தூங்கறயா,நாராயணி?” 

அவள் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள். “இல்லையப்பா. என்ன வேணும்?” என்று கேட்டாள். 

தகப்பனார் உள்ளே வந்து தன் பெண்ணை ஏறெடுத்துப் பார்த்தார். பிறகு, “உன் மச்சினரும் ஓர்ப்படியும் இந்த ஊருக்கு வந்திருக்கா, அம்மா. இங்கே சாயந்திரம் வறேன்னார்கள். காலயில் சோழராஜபுரத்துக்குப் போறாளாம். உன்னையும் கொஞ்சநாள் அழைச்சிண்டுபோய் வைச்சுக்கணும்னு அவன் சொல்றான். உன் அபிப்பிராயம் என்ன? உனக்கும் ஆறுதலாயிருக்கும். கலியாணத்துக்கு நாலுநாள் முந்தி யாரையாவது திருப்பி அழைச்சிண்டு வரச் சொல்றேன்,” என்றார். 

அவளுக்குக் ‘கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது’ என்ற பழமொழி ஞாபகத்திற்கு வந்தது. கடவுளே பார்த்து அவளைச் சோழராஜபுரத்திற்கு அனுப்புகிறார் போலும்! 

“சரியப்பா!” என்று மட்டும் அவள் பதில் சொன்னாள். “கலியாணத்திற்கு நான் வந்து என்ன செய்யப் போகிறேன்” என்று சொல்ல வந்ததை அப்படியே நெஞ்சோடு நிறுத்திக் கொண்டாள். 


சோமராஜபுரத்தில் நாராயணிக்குச் சற்று சௌகரியமாகவே இருந்தது. மைத்துனரின் பெண்களும் பிள்ளைகளும் “பெரியம்மா, பெரியம்மா!” என்று அவளைச் சுற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பட்சணம் செய்து கொடுப்பதிலிருந்து தலைபின்னுவது வரை அவளே செய்தாள். மனதிற்குச் சாந்தியும் சந்தோஷமும் கிடைத்தன. 

மைத்துனன் ஒரு நாள் அவளைத் தேடிக் கொண்டு வந்தார். 

“மன்னி, உன் அப்பா தபால் போட்டிருக்கிறார். நாளன்னிக்குப் பத்மாவுக்கு கலியாணமாம். உன்னை தானே வந்து அழைச்சிண்டு போக சாவகாசம் இல்லாததனால் என்னையே கொண்டுவிடச் சொல்லி யிருக்கார்.’ 

“நான் போகல்லே! மன்னிக்கு உடம்பு சரி யில்லைன்னு எழுதிப் போட்டுடுங்கோ!” என்றாள் நாராயணி. 

“ஏன்,மன்னி?” என்று ஏதோ சொல்ல மைத்துனர் வாயெடுத்தார். 

“நான் அங்கேபோய் என்ன செய்யறது சொல்லுங்கோ. இங்கேதான் மனசுக்கு சந்தோஷமாயிருக்கு. அங்கே போனால் அவாளுக்கும் கஷ்டம், எனக்கும் கஷ்டம், பத்மாவாவது என் கண் படாமே க்ஷேமமாயிருக்கட்டும்,” என்று நாராயணி தீர்மானமாகச் சொன்னாள்.

“உன்னிஷ்டம்!” என்று சொல்லிவிட்டு மைத்துனர் நகர்ந்தார். 

நாராயணி தான் கலியாணத்திற்குப் போகாததைப்பற்றி வருத்தப்படவில்லை. ஆனால் கலியாணத்தன்று மட்டும் அவள் மனம் ஒரு மாதிரியாக இருந்தது. “இத்தனை நேரம் மாப்பிள்ளை ‘பரதேசி கோலம்’ வருவார். பத்மா பச்சைப் புடவை கட்டிக்கொண்டு ஊஞ்சலில் உட்காருவாள். இத்தனை நேரம் தாலி கட்டியாகிவிட்டிருக்கும். பலகாரம் பண்ணுவார்கள்.” என்று நிமிஷத்துக்கு ஒரு தரம் நினைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஒரு சமயம், “நான் வரவில்லையென்று பத்மா வருத்தப்படுகிறாளோ என்னமோ? ஏன் போகாமல் போனோம்?” என்றிருந்தது. சற்று நேரத்திற்குப் பிறகு, “நல்லவேளையாகப் போகவேண்டாம் என்று தோன்றிற்றே?” என்று ஆறுதல் உண்டாயிற்று. போகாததனால் ‘போகவில்லை’ என்பதோடு முடிந்துவிட்டது. போயிருந்தால் உள்ளே அடைந்தாலும் குற்றம், வெளியே வந்தாலும் குற்றம்! எல்லோரும் வேடிக்கை பார்ப்பதுபோல் அவளைப் பார்க்க வந்துவிட்டுப் போவார்கள். 

கலியாணத்தினத்திற்கு அப்புறம் ஒன்று இரண்டு என்று நாட்கள் ஓடின. நாராயணியின் மனதில் ‘கூடப் பிறந்த பாசம்’ படாத பாடு படுத்திக்கொண்டிருந்தது. ஒரு வார காலமானதும் ஊருக்குப்போய் தங்கையைக் காணவேண்டும் என்று வேகம் உண்டாயிற்று. கூடிய சீக்கிரம் அவள் புக்ககத்திற்குப் போய் விடுவாள் அப்புறம் ஆறு மாசமோ ஒரு வருஷமோ, யார் கண்டது? 

மைத்துனரிடம் சொன்னாள். வண்டி ஏற்பாடாகி வாசலில் வந்து நின்றது. குழந்தைகள் அவளைச் சுற்றி நின்றுகொண்டு அழுதன.

ஓர்ப்படி,”மன்னி, நீங்கள் போகவே வேண்டாம். இங்கேயே இருங்கள். உங்களுக்கும் இந்த வீட்டில் பாத்தியதை உண்டோல்லியோ? உங்கள் தங்கை புக்ககம் போகிறபோது இங்கே இறங்கிவிட்டுப் போகட்டுமே? சீயாழி ஸ்டேஷனுக்குப் போக இதுதானே வழி?” என்றாள். 

மைத்துனருக்கும் அவளை அவ்வளவு சீக்கிரம் அனுப்புவதில் இஷ்டமில்லை. குழந்தைகள் தன் மனைவி எல்லோரும் தடுக்கும்போது அவர் மட்டும் “கிளம்பு, மன்னி!” என்று எப்படிச் சொல்லுவார்? “வண்டியைத் திருப்பி அனுப்பி விடட்டுமா. மன்னி? இருந்துவிட்டுத்தான் போயேன்!” என்றார். 

நாராயணி கால் கட்டைவிரலால் தரையைக் கிளறிக்கொண்டிருந்தாள். “அப்போ இன்னும் கொஞ்சநாள் இருக்கட்டுமா?” என்றாள். மெதுவாக. 

ஓர்ப்படி பிடித்துக்கொண்டுவிட்டாள்! “இருந்துவிட்டுப் போங்கள் மன்னி வண்டியைப் போகச் சொல்லுங்கடா. குழந்தைகளா இன்றைக்கே உங்கள் அப்பாவுக்கு எழுதிப்போட்டு விடுங்கள். பத்மா புக்ககம் போகும்போது இங்கே இறங்கி உங்களைப் பார்த்துவிட்டுப் போகட்டும்.” என்றாள். 

வண்டி வாசலைவிட்டு நகர்ந்தது. குழந்தைகள் பெரியம்மாவைச் சுற்றிக் கும்மாளம் போட்டன. 

அப்போது வேறொரு வண்டி வாசலில் வந்து நின்றது. எல்லோரும் எட்டிப் பார்த்தார்கள். நாராயணி அது தன் பிறந்தகத்து வண்டி என்பதை உடனே கண்டுகொண்டாள். 

“உங்கள் தங்கைதான் வந்திருக்காள்போலிருக்கு” என்று ஓர்ப்படி விரைவாக வாசலுக்குப் போனாள். 

வண்டியிலிருந்து இறங்கியது நாராமணியின் தகப்பனார் மட்டும்தான். “வண்டியைத் திருப்பி வைத்துக்கொள்” என்று உத்தரவு இட்டுவிட்டு, படியேறி வந்தார். 

“வாருங்கள், வாருங்கள் ” என்று நாராயணியின் மைத்துனர் வரவேற்றார். 

வந்தவர் ரேழியிலேயே நின்று, “உட்கார நேரம் இல்லை. நாராயணியைக் கையோடு அழைச்சிண்டு போகலாம்னு வந்திருக்கேன். அவள் அம்மாவிற்கு ராத்திரி முதல் உடம்பு சரியில்லை. வீட்டிலே சமையல் செய்யக்கூட ஆளில்லை, அவளைக் கிளம்பச் சொல்லப்பா” என்றார். 

மைத்துனர் விஷயத்தைச் சொல்ல உள்ளே போனபோது நாராயணி தன் புடவை மூட்டையை மறுபடியும் கட்டிக்கொண்டிருந்தாள். அவர் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு கூடத்திற்கு வந்தார். 

“உங்கள் இரண்டாவது பெண் இல்லையோ?” என்று மெதுவாகக் கேட்டார். 

“அவள் முந்தாநாளே புக்ககத்துக்குப் போயிட்டாள். உடனே அழைச்சிண்டு போகணும்னா, அனுப்பிட்டேன். அப்போ பட்சணம் செய்த அலுப்புதான் அவள் அம்மாவிற்கு. சரி, நாராயணி கிளம்பிட்டாளா?”

நாராயணி குழந்தைகளை முத்தமிட்டுவிட்டு ஓர்ப்படியிடமும் மைத்துனரிடமும் சொல்லி விட்டு வேகமாய் வண்டிக்குப் போனாள். 

“வரட்டுமா?” என்று அவள் தகப்பனார் பின் தொடர்ந்தார். 

வண்டியில் போகும்போது நாராயணி எண்ணினாள். “நான் எதற்குப் பிறந்தேன் என்று சில சமயம் நினைத்துக்கொண்டேனே! இதற்குத்தான் பிறந்தேன் என்று இப்போதல்லவா தெரிகிறது!”

– காவேரி, விக்ருதி மலர் 10, கார்த்திகை இதழ் 4, நவம்பர் 1950

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *