கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 3, 2023
பார்வையிட்டோர்: 2,947 
 
 

1 | 2 | 3

பளிங்குத் தரை பாவித்த அந்த விசாலமான அறைக்குள் நுழைந்தபின்னாலும் உங்களால் அந்த சிறுமியை கண்டுபிடித்துவிடமுடியாது. நடனப் பயிற்சிக்காக மரப்பலகைகளால் பதியப்பட்ட அறை பியாநோக்கூடமாக அவளது அப்பா மாற்றியிருந்தார். மிக உயரமான தேக்கு மரக்கதவுகள், ஜன்னல் சீலைகள். ஒரு பெரிய அரசவைக்கு அரங்கத்துக்கு உண்டான அலங்கார வேலைப்பாடுகள். பாரீஸ் கபேக்களின் அண்மைக்கால பேசுபொருளாக இருக்கும் அனைத்து வகை பியானோக்களும் அங்கு இருந்தன. அறையின் மூலையில் இருந்த ஒக் மரத்தாலான பியானோவை வாசித்துக்கொண்டிருந்தாள் அந்த சிறுமி. உங்கள் காதுகளுக்கு கனத்த பியானோ தந்திகள் அதிர்வு இனிமையாகத் தோன்றலாம். அவளுக்கு அருகே உட்கார்ந்திருந்த அவளது தந்தை பிரெட்ரிக் தூங்குவது போல கண்ணைக் மூடிக்கொண்டிருந்தார். அவரது கைவிரல்கள் தன்னிச்சையாக தூரிகையாக மாறி காற்றில் ஓவியங்களைத் தீட்டிக் கொண்டிருந்தன. அச்சிறுமியின் முகத்தில் லயிப்பு சிறிதளவு கூட இல்லை. சாவி கொடுக்கப்பட்ட பொம்மையைப் போல அவளது மெல்லிய விரல்கள் ஸ்டைன்வே பியானோவின் விசைகளை பாலே நடனக்காரியின் கால்களைப் போல் தாவித்தாவி இசைத்துக்கொண்டிருந்தன. ஆனால் உங்களுக்கு கேட்கும் இனிமையான ஒலிகள் அவளுக்குக் கேட்காது. ப்ரேட்ரிக்கின் கைவிரல்களின் தாளகதிக்கு ஏற்ப அவளது கைவிரல்கள் துள்ளிக்கொண்டிருந்தன.

‘மறுபடியும். ஜி ஸ்கேலில் தொடங்கு..’ – கண்ணைத் திறக்காமல் பிரெட்ரிக் சொன்னதைக் கேட்டு ஒரு நொடி தாமதித்து மீண்டும் தொடங்கினாள்.

நீங்கள் இன்னும் அருகே சென்று பார்க்கலாம். அவள் தந்தையின் முன் இருந்த இசைக்கோவை வாசிக்கும் அவள் முன் இருக்காது. ஐரோப்பாவிலேயே நோட்சைப் பாராது இசைக்கும் முதல் பியானோ கலைஞாக நீ மாற வேண்டும் என்பது அவளது மூன்றாவது வயதில் சொல்லப்பட்டது. அம்மாவிடம் பால் குடிப்பதை நிறுத்துவதற்கு முன்னரே பியானோ கற்றுக்கொள்ளத் தொடங்கியவள். பயிற்சிகளுக்கு இடையே அம்மாவின் அரவணைப்பில் பால் குடித்தபிறகு மீண்டும் தொடங்குவாள். ஐந்து வயது வரை.

அருகே நெருங்க நெருங்க சத்தம் அதிகரிக்கிறது. சிக்கெடுக்கும் தாயைப் போன்ற சங்கடமற்ற முகப்பொலிவுடன் பிரெட்ரிக் உட்கார்ந்திருக்கிறார்.

‘அப்பா, இன்னும் எத்தனை முறை இதையே வாசிக்க வேண்டும்? சலிப்பாக இருக்கிறது..’ – அவள் பேசி முடிக்கவில்லை, பிரேட்ரிக்கின் சிவப்பேறிய கண்கள் உங்கள் மேல் நிலைகுத்தி நிற்கிறது. பதட்டப்பட வேண்டாம். பயிற்சியின் போது மட்டுமல்ல மற்றவர்களிடம் பேசும்போதும் அவரது பார்வை பேசுபவரைத் தாண்டி எங்கோ இருக்கும். முடிந்தால் கிளாரா அருகில் உட்கார்ந்து பயிற்சியை வேடிக்கை பாருங்கள்.

‘நூறு முறை வாசித்தும் இசை மட்டும் தான் கேட்கிறது. இந்நேரம் நீ அதைக் கடந்து இந்த வரிகளின் ஆத்மாவை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். பிசிறின்றி நேரக்கவனத்துடன் வாசிக்க நீ ஒரு பறவை அல்ல. இரை தேடுவதும், மக்களை கவர்வதும் அல்ல உன்னோட வேலை. அதற்கு ஐரோப்பா கேளிக்கை விடுதிகளில் வாழ்நாள் பயிற்சி தேவைப்படாத பல பெண்கள் இருக்கின்றனர். நீ தேடுவது இசையில் உள்ளது.இதை உருவாக்கியவனின் உணர்வைத் தேடு.’

ஒரு கணம் பிரேட்ரிக்கின் வார்த்தைகள் உங்களை அதிரவைக்கும். எட்டு வயது சிறுமியிடம் பேசக்கூடிய வார்த்தைகளா அவை?

டிரேஸ்டன் நகரம் வாய் மூடுவதில்லை. பகலின் எந்த நேரத்திலும் பிரெட்ரிக் வசித்த எம்மானுவல் தெருவைக் கடப்பவர்களுக்கு பலவித அலறல்கள் கேட்கும். நீங்களும் அதைக் கேட்டபின் அந்த வீட்டுக்குள் நுழைந்திருப்பீர்கள். பக்கத்து அறையில் உலர்ந்த திராட்சை போன்ற சருமம் கொண்ட வீக்கிடம் கேட்டுப் பாருங்கள். ரெண்டு மணி நேரங்களுக்கு முன்னர் ஓரடி நீளமுள்ள காய்ந்த விறகுக்குச்சி அவனது கைவிரல் முட்டிகளில் என்ன செய்துகொண்டிருந்தது எனச் சொல்லும்.’பரிதாபம்’ என்பதைத் தவிர நீங்கள் என்ன சொல்லிவிட முடியும். நான்கு வயதில் மோட்சார்ட், ஐந்தரை வயதில் ஆண்ட்ரியா ஸ்னைப்பர் என ஐரோப்பாவின் இசை அரங்கங்கள் பால் வாசம் மாறாத இளம் மேதைகளால் நிரம்பி வழிகிறது.இன்னும் இரண்டு வருடங்களில் கிளாரா மேல் இருக்கும் கவனம் திசை திரும்பிவிடும்.

வாசிப்பு அறையில் இருப்பதால் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் இல்லை என நினைப்பீர்கள். பத்து நிமிடங்களில் எம்மானுவேல் சாலை வீட்டைச் சுற்றிப் பார்த்துவிடலாம். கீழே இருக்கும் இரு வரவேற்பறைகள், உயரமான சுவர்களைக் கொண்டு பயிற்சி அறை, அதை ஒட்டி இருக்கும் சமையலறை, முதல் தளத்தில் இருக்கும் வாத்தியக்கருவிகள் அறை என எங்கும் ஒரு பொம்மை கூட கிடையாது என உங்களுக்குத் தெரியவரும். நான்கு வயது முதல் பனிரெண்டு வயது வரையான பத்து குழந்தைகள் இருக்கும் வீட்டில் பொம்மைகளோ விளையாட்டு சாமான்களோ இல்லையா என நீங்கள் திகைக்கக்கூடும். பியானோ பழுதுபார்க்க வந்த டிரேஸ்டன் அரசவை பாடகர் கேட்ட போது பிரெட்ரிக் அளித்த பதில், ‘தேவைப்படவில்லை’.

பனித் துவாலைகள் இறுகி கடும் பொழிவு தொடங்கிய டிசம்பர் மாத இறுதியில் கிளாராவுக்கு செய்தி வந்தது. ஷுபர்ட் இறந்து விட்டான். உலகின் கடைசி கலைஞன், கிளாராவின் ரகசிய காதலன் இறந்துவிட்டான். என்றாவது ஒரு நாள் வியன்னா நகர் அரங்கில் அவனது இசையைக் கேட்டுவிடுவோம் என்பது கிளாராவின் நித்தியக் கனவு. நிகழ்ச்சி முடிந்ததும் அரங்கின் பின்பகுதிக்குச் சென்று காத்திருக்கும் பல நூறு ரசிகர்களை விலக்கிவிட்டு கடைசி மூலையில் மறைவாய் நிற்கும் தன் கரத்தைப் பற்றி முத்தமிடுவான் என விழி மூடிய கணங்களிலும் நாணுவாள்.

கதவைத் திறந்து செய்தி கேட்ட ஆல்வினுக்கு மயக்கம் வராத குறை. கனமான நாதங்கியை நடுங்கும் விரலால் பற்றியபடி சுவரில் சாய்ந்து நின்றிருந்தான். இத்தனைக்கும் ஷூபர்ட்டை அவனுக்குப் பிடிக்காது. ஊரில் உள்ள பெண்களை எல்லாம் கவரும் கலைஞனை எந்த ஆணுக்குப் பிடிக்கும்? ஆனால் அவனது நடுக்கம் அதனால் அல்ல. தந்தை பிரேட்ரிக்கின் எப்படி எதிர்வினையாற்றுவார் என அவனுக்குத் தெரியும். மோட்சார்ட் இறந்த வாரம் முழுவதும் அவர் உண்ணவில்லை, உறக்கம் கூட கனவிழிகளின் கட்டுப்பாட்டில் திறக்கும் மூடும்.

முதலில் செய்தியை அவர் நம்பவில்லை. ஷூபர்டின் இறப்பு செய்தி கூட இவ்வளவு தாமதமாக வருமா? ஒரு மாதமாக அவனது இருப்பில்லாமல் உலகம் இயங்கத்தான் செய்ததா? பின்னர் அவன் கடைசியாக ஆசைப்பட்ட பெத்தொவனின் தந்தியிசையைக் கூடக் கேட்காமல் மறைந்தான் எனக் கேள்விப்பட்டது மடை உடைந்தது.

பிரெட்ரிக் அழுது கிளாரா பார்த்ததில்லை. தங்கை ஜோஹான்னவோடு அம்மா பிரிந்தபோது கூட. வல்லமை தரும் மேன்மை நட்டுவாக்கிளியின் புடைத்த கொடுக்கைபோல வீரியம் கொண்டு வலி உண்டாக்கும். வரவேற்பறையை விட்டு வெளியேற அவருக்கு ஒரு வாரம் ஆனது. பள்ளம் நிரவி தவளை எட்டிப்பார்க்க மேலும் ஒரு வாரம் ஆனது.

– தொடரும்…

– ஜனவரி 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *