இரத்தத்தாலல்ல

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 29, 2024
பார்வையிட்டோர்: 593 
 
 

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வாயிலிலே வெள்ளைக்கன்னி நாகு கட்டப்பட்டுவிட்டது.

செல்லப்பரின் மூச்சு வாயில்வரை கேட்கிறது. சாம்பிராணிப் புகையின் வாசனை வாயில்வரை வந்து கரைந்து போகிறது.

உள்ளேசெல்லப்பர் மரணப் படுக்கையில் கிடக்கிறார். அவரின் கால்புறமாக இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக அவருடன் கூடிக் குலாவி வந்த, சாயம் மங்கிவிட்ட ராஜா ராணிக்குடை சார்த்தி வைக்கப் பட்டிருக்கிறது. அவரின் தலைமாட்டில், அவரின்மூக்குக் கண்ணாடி யும், தலைப்பாகையும் பக்குவமாக வைக்கப்பட்டிருக்கின்றன. உள்வாயில்படி ஓரமாக அவரின் தோல் செருப்புச் சுத்தம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது.

கண் வாய் பொத்துவதற்காக சின்னாச்சிக் கிழவி துடித்துக் கொண்டி ருக்கிறாள். அவளின் பஞ்சடைந்து போன கண்கள் செல்லப்பரின் மோவாய்க்கட்டையில் குத்திட்டுநிற்கின்றன.

பேரக் குழந்தைகள் மாறி மாறிப் பால் வார்த்துக் கொண்டிருக் கின்றனர். இடையிடையே அந்தப் பால் வழிவதும் உள்ளே போவது மாக இருக்கிறது. செல்லப்பரின் முடறு முறிப்பு ஓசையும் இடையிடையே கேட்கிறது.

செல்லப்பரின் மனைவியாகிய காமாட்சி அம்மாள் தலைமாட்டில் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறாள். அவரின் ஏக புத்திரனுக்கு மனைவியாய் வந்த மருமகள் அழகம்மாள் கவலை தோய்த்த முகத் துடன், ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் நெய் விளக்குகளுக்கு எண்ணெய் ஊற்றுவதும், வருவோர் போவோரைக் கவனிப்பதுமாக இருக்கிறாள்.

முதல் குரல் வைப்பதற்குப் பெண்கள் கூட்டமும், ஏனையவை களைக் கவனிப்பதற்கு அடிமைகுடிமைக் கூட்டமும் காத்திருக்கின்றன.

உள்ளே டெலிபோன் மணி கணீரிடுகிறது. அழகம்மாள் ஓடுகிறாள். டெலிபோனில் பேசுவது அவளின் முத்துவேலர்தான்! அவர் கொழும்பி லிருந்து பேசுகிறார். உரக்கப் பேசுகிறார். காலை விமானத்தில் புறப் படுவதாகப் பேசுகிறார்.

வெளியே கன்னி நாகு குரல் வைக்கிறது. இயமதர்மராஜனே பாசக் கயிற்றுடன் வாயில் தாண்டி வந்து கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டு சின்னாச்சிக் கிழவி உசார் நிலைக்கு வருகிறாள். காமாட்சி அம்மாள் விம்மலை மிகைப்படுத்திக் கொண்டு செல்லப்பரின் நெஞ்சுக்கு மேல் விழுவதற்காகத் தன்னைத் தயாராக்கிக் கொள்கிறாள்.

வெளியே கன்னி நாகு கத்திக்கொண்டே இருக்கிறது. நன்றாக விடிந்துவிட்டது. டாக்டர் சோமசுந்தரத்தின் கார் வந்தது.

டாக்டரின் முடிவு முன்பு கிடைத்ததுதான். அதனால் டாக்டரை யாரும் ஆவலுடன் எதிர்பார்த்ததாக இல்லை. தெதஸ்கோப் அவர் காதோடு மருவிக் கழுத்தில் தொங்கியது. ஆனாலும் அதன் உதவி இன்றியே அவர் செல்லப்பரைப் பரிசோதித்து முடித்துவிட்டார். உதட்டையும் விழிகளையும் ஒரே வேளையில் அவர் பிதுக்கிக் கொண்டது. எல்லோருக்கும் எல்லாவற்றையும் விளங்க வைத்தது போலாயிற்று.

அம்மான் டாக்டர் செல்லப்பரை மெதுவாக அழைத்தார். டாக்டருக்கு அவர் முறை மருகன் அல்ல. ஆனாலும் தூரத்து உறவு வகையில் இந்த அம்மான் முறை இருந்தது.

சொல்லி வைத்தாற்போன்று, இப்போதுதான் செல்லப்பர் ஏதோ பேச முயல்கிறார். வார்த்தைகளாக அவைகள் பிறக்கவில்லை.

முஷ்டிகளை உயர்த்தி – நரம்புகளைப் புடைக்க வைத்து… ‘முத்… டேய்… உன்… உன்…’ இப்படியே வார்த்தைகள் சிதைந்து போயின.

டாக்டர், காமாட்சி அம்மாளைப் பார்த்து ‘முத்துவேல் இண்டைக்கு வர்ராறா?’ என்று கேட்டபோதுதான் காமாட்சி அம்மாளால் சுய நிலைக்கு வர முடிந்தது.

‘அவர், காலைப் பிளேனில் வர்ரதா மெசேஜ் வந்தது!’ என்று மருமகள் பதில் சொன்னாள்.

‘நேரத்துக்கு அவன் வந்து சேர்கிறானோ என்னவோ’ என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் சூசகமாகப் பேசினார் டாக்டர்.

‘ஆமாம். அவருக்காகவே உயிர்காத்துக் கிடக்கிறது’ என்று சூசகமாக அழகம்மாள் பதிலும் சொன்னாள். “டே… டேய்… முத்… என்…’

செல்லப்பர் மீண்டும் மீண்டும் இப்படித்தான் பீற்றிக் கொண்டிருக் கிறார். அவரால் வார்த்தைகளை ஒழுங்கு படக் கூறி மனச்சுமையை இறக்கவும் முடியவில்லை . இறந்து போகவும் முடியவில்லை .

‘காமாட்…சி…எடி…’ இப்படி ஒரு தடவை செல்லப்பர் கத்திவிட்டார். காமாட்சி, அந்த ஒரு வார்த்தையால் கூனிக் குறுகிப் போனாள்….

முன்பொரு தடவை… ஒரே ஒரு தடவை இதே தொனியில்… இதே முறையில்…

அந்த ஒரு தடவையைக் காமாட்சியால் இப்போது எண்ணிப் பார்க்க முடியவில்லை. ஆனாலும் அது செவிப் புலனால் நுழைந்து நெஞ்சு வரை …

இப்போதுள்ளதைப் போல அந்தக் காலத்தில் பட்டினப் பகுதிகளில் கூட வெளிச்சம் இருப்பதில்லை. சந்திப்புக்குச் சந்திப்பு ஒற்றைக் கம்பத்தில் நாற்சதுரக் கோபுரம் போல அமைந்த கண்ணாடிக் கூண்டினுள் எண்ணெய் விளக்கு மட்டுந்தான் எரிந்து கொண்டிருக்கும். சந்திப்புக்குச் சந்திப்புத்தான் வெளிச்சமிருப்பினும் அநேகமான கம்பங்களில் விளக்குகளே இருப்பதில்லை. பலர் பலதுக்குமாக அந்தக் கண்ணாடிக் கூண்டுத் தெரு விளக்குகளை உடைத்து வைத்திருப்பர். இருட்டி விடுவதற்கு முன்னமே ஊர் அடங்கிப் போய்விடும்.

அப்போது செல்லப்பருக்குக் கச்சேரியில் சிறிய உத்தியோகம். மாத வருமானம் மிகவும் மட்டம்.

செல்லப்பரின் தாயார் சீதேவியும், காமாட்சி அம்மாளும் சட்டநாதர் கோயிலின் சின்ன மேளக் கச்சேரி பார்ப்பதற்காகப் போயிருந்தனர். றலி’ என்ற பட்டப்பெயர் வாங்கியவரின் பாட்டுக் கச்சேரியும் இருந்ததனால் ஊரே சட்டநாதர் கோயிலில் திரண்டிருந்தது.

மல்லிகாதேவி ஆட, றலி பாட, ஆர்மோனிய வித்துவான் சோமு ஆர்மோனியம் தட்ட, கோடையிடி தம்பாப் பிள்ளை மிருதங்கம் வாசிப்பதென்றால், இந்தச் சந்திப்பு எப்போதும் கிடைப்பதில்லை. அன்று இந்தச் சந்திப்புக் கிடைத்திருந்தது.

செல்லப்பர் வீட்டுக்குக் காவலாக இருந்தார். இந்தப் பெரு விழாவைப் பார்க்க ஆசைதான். ஆனாலும் அவர் வீட்டோடுதான் இருக்க வேண்டியதாக இருந்தது.

நாதஸ்வர வித்துவான் மாசிலாமணியின் நாதஸ்வரக் கச்சேரி இன்னும் முடியவில்லை. அந்த நாதஸ்வரத்தின் நாதக்கூர்கள் குத்திக் கொண்டிருந்த போதும் செல்லப்பர் சற்றுக் கண்ணயர்ந்துவிட்டார். திடீரென அவர் திடுக்குற்று விழித்தபோது நிலம் அதிர்ந்து விடும்படி யாரோ ஓடிவந்து, வீதிக்கரை வேலியால் உள்ளே தாவியதுபோல் ஒரு பிரேமை!

வீதியால் பலர் ஓடினர். அவர்கள் வைத்துச் சென்ற ‘கள்ளன்; கள்ளன்’ என்ற அவலக்குரல்கள் தெளிவாகக் கேட்டன. செல்லப்பருக்கு உள்ளமெல்லாம் புல்லரித்தது. தலைமாட்டிலிருந்த கைப்பிரம்பை எடுத்துக் கொண்டு அவர் துணிச்சலுடன் வெளியே வந்தார். சிங்கப்பூரி லிருந்து அவரின் பழைய நண்பன் ஒருவன் யார் மூலமாகவோ அனுப்பி வைத்த ஐந்து பாற்றறி ரோச் லையிற் கையில் இருந்தது. துணிவுடன் வளவெங்கும் வெளிச்சத்தை ஊரவிட்டார். இறுதியில் … இறுதி யில் வளவுப்புறமாக நிமிர்த்தி வைக்கப்பட்டிருந்த தார்ப் பீப்பாக்களுக்கு மறைவில்… ‘கள்ளன்; கள்ளன்’ என்று கூக்குரலிட உன்னிய செல்லப்பரின் குரலை அவரின் எதிர்கால அதிர்ஷ்டம் அடைத்து விட்டது. அவர் அப்படியே நின்றபடி நின்றார் ஒளிப்பொட்டு தார்ப் பீப்பாய்களுக்கு நடுவே நிலைத்து நின்றது.

சண்டியன் கட்டோடு, பாதி தெரியும்படி உடம்பைக் கறுப்புத் துணியால் மூடிக்கொண்டு அர்த்த ஜாமத்தில் ஒரு மனிதனைச் செல்லப்பர் சந்தித்தார்.

அந்த மனிதன் தன் முக்காட்டை நீக்கி, மடிக்கட்டுக்குள் புதைத்து வைத்திருந்த தங்க நகைகளைத் தெய்வத்திற்கு மலர் தூவும் பாவனை யில் செல்லப்பரின் திருக்காலடியில் தூவி விட்டுச் சரணடைந்து – செயலிழந்து நடுவே நின்றான்.

அந்த மனிதன் பெயர் முத்தையன்.

முத்தையனைக் காமாட்சி அம்மாளுக்கு முன்பின் தெரியாது. தெரிந் திருக்கவும் நியாயமில்லை. ‘கணவனுக்குமுத்தையன் பழைய நண்பன்’ என்ற நியாயத்தையும் அவளால் ஒப்புப்கொள்ள முடியவில்லை. ஆனாலும், கணவரின் விருப்பத்திற்கு மாறாக, அவளால் நடக்கவும் முடியவில்லை. முத்தையனின் கோலத்திலிருந்து, அவன் ஒரு கீழ்ஜாதிக் காரனாகவே இருக்க வேண்டுமென்று நிச்சயித்துக் கொண்டவளுக்கு, அவன் அடிக்கடி வந்து போவதும், அவனை நடு வீடுவரை அனுமதித்து, செல்லப்பர் அவனுடன் அந்நியோந்நியமாக உறவோடுவதும் சகிக்க முடியாததாகி இருந்தது.

‘இவன் என்ன சாதி’ என்று செல்லப்பரைக் காமாட்சி ஒருநாள் கேட்டே விட்டாள். செல்லப்பருக்கு வந்ததே கோபம்! எல்லாம் நல்ல ஜாதிதான்! சாதி கேக்க வந்திட்டா நாச்சியார்!’ என்று எரிந்துவிழுந்தார். இதற்குமேல் காமாட்சியால் எதுவும் பேச முடியவில்லை.

செல்லப்பருக்குச் சகோதரர்கள் என்றோ, தந்தை என்றோ யாரு மில்லை. ‘தாய்’ என்ற ஸ்தானத்தில் சீதேவிக் கிழவி மட்டுந்தான் வீட்டில்.

‘எட தம்பி. உவன் நெடுக நெடுக இஞ்சை வந்து போறது நல்லா யில்லையடா! ஊர் என்ன கதைக்கும்? கேட்டுக் கேள்வி இல்லாமை நடுச்சாமத்திலை வாறான்; போறான்! ஆளைப் பாத்தா நல்ல சாதியாயிங் காணேல்லை. உவன்ரை சிநேகிதத்தை விடன் மோனே!’ என்று தாயானவளும் ஒரு தடவை சொல்லிப் பார்த்துவிட்டாள்.

இந்த ஒரே ஒரு தடவைக்கு மேல் தாயாரை இதுபற்றிப் பேசுமளவுக்கு செல்லப்பர் விட்டு வைக்கவில்லை. ஆனால், முத்தையன் வந்து போவது, மட்டும் குறைந்து விட்டது. எப்போதோ ஒருநாள் வருவான் போவான்! அதுவும் அர்த்த ஜாமத்தில்! யாருக்குமே தெரியாமல்!

பல நாட்களுக்குப்பின் ஒருநாள் காமாட்சி அம்மாள் முத்தையனைக் கண்டாள். அந்த வேளை செல்லப்பர் வீட்டில் இல்லை. அவனை உபசரித்து, அவர் வரும்வரை தடுத்து வைக்காவிட்டால் செல்லப்பருக்குக் கெட்ட கோபம் வரும் என்பதை அவள் அறிந்திருந்தாள்.

முத்தையனைக் காமாட்சி உபசரித்தாள்! முன்பு அவள் கண்ட முத்தையனல்ல இப்போது. எண்ணெய் தடவி, தலையை மினுமினுப்பாக படியச் சீவி இருந்தான். அவனின் சுருள் தலை பளிச்சிட்டுமின்னி நெளிவது போலிருந்தது.

பெரிய மீசையை அளவாக வெட்டி, ஊசிமுனைவரை இலேசாக்கி சொகுசுபடுத்தியிருந்தான்.

முன்பு காதிலே மாட்டியிருந்த சிவப்புக்கல் காதோலையைக் காணோம்!

வெள்ளை வெளேரென்ற வேஷ்டி, பழுப்பு நிறத்திலான மேல் சட்டை !

ஒன்றே ஒன்று மட்டும் பழைய நிலையில்தான் இருந்தது. அதுதான் இடுப்போடு செருகப்பட்ட றெச்சேஸ் வில்லுக்கத்தியும், தலைப்பில் தோல் பொருத்தப் பட்டு வெளியிலே தொங்கிய வெள்ளிச் சங்கிலியும்.

அவனைக் கண்டபோது காமாட்சி அம்மாள் கணவேளை அசந்து போனாள்.

செல்லப்பர் இன்னமும் குடுமிதான் வைத்துக்கொண்டிருக்கிறார். காதிலே குவளைக் கடுக்கன்கள் இன்னும் தொங்கிக்கொண்டே இருக்கின்றன.

வீட்டிலிருக்கும் வேளையைத் தவிர, வெளியே போகும் போது, நெருப்பு வத்தி ஒட்டிய தலைப்பாகையைத்தான் வைத்துக்கொள்கிறார்.

நீளக் கால்சட்டை அணிந்து, அதன் மேல் நீண்டநீலநிறக் கோட்டும் போட்டு, கழுத்தில் பட்டியும் கட்டி, தலைப்பாகையுடன் அவர் வெளியே போவதைத்தான் இதுவரை காமாட்சி அம்மாள் நாகரீக மாகக் கண்டிருக்கிறாள். ஆனால், முத்தையன்…?

காமாட்சி அம்மாள் என்ன நினைத்தாளோ, மிகக் கனிவோடும், மரியாதையோடும் அவளை வரவேற்று, உபசரித்து விட்டாள். உபசரணைகளின் முடிவில்தான், தான் அப்படி மரியாதை காட்டி இருக்கக்கூடாதென்று மனதில் தட்டியது.

என்றுமில்லாத விதத்தில் மாமியாருக்கு இப்போதுதான் அவள் மிகவும் அஞ்சினாள்.

நாடிக்குக் கைக் கொடுத்து, பெருமூச்செறிந்து, உள் வாயில் படியோரம் உட்கார்ந்திருந்த மாமியாரின் கருடப் பார்வை அவள் நெஞ்சைச் சுட்டது.

செல்லப்பரைக் கட்டிக்கொண்டு பத்தாண்டுகள் வாழ்ந்துவிட்டாள். இதுவரை குழந்தைப் பாக்கியம் இல்லாக் குறையே தெரிந்ததில்லை. மாமியாரைக் குழந்தை போலச் செல்லமாகப் பாவித்து ஊருக்குப் புதுவித மருமகள் முறையைச் சிருட்டித்து விட்டவளுக்கு இன்று மாமியாரைப் பற்றிப் புதுவித உணர்வு தோன்றியிருப்பது அவளுக்கே புரியமுடியாத தொன்றாகி விட்டது.

இருட்டிவிட்ட பின்பு செல்லப்பர் வந்தார். நால்சார் வீட்டின் நிலா முற்றத்தின் அருகோடு விளக்குமட்டும் எரிந்து கொண்டிருந்தது. பக்கத்தே போடப்பட்டிருந்த பிரம்புக் கட்டிலில் முத்தையன் மட்டும் தூங்கி வழிந்து கொண்டிருந்தான்.

இந்த ஓராண்டு காலத்தில் முத்தையன் பட்டப்பகல் வேளை அவரைத் தேடி வந்ததுமில்லை; ‘இவனுடன் சற்றுவேளைப் பேசிக் கொண்டிருக்கும் நாகரிகம்கூட இந்தக் கழுதைகளுக்கு இல்லையே’ என்று மனதுக்குள் கடிந்துகொண்டார். ‘அவள் இளம் மனுஷி. இந்தக் கிழவியாவது கதைச்சுக் கொண்டிருக்கலாமே!’ என்று தாய்க் கிழவி மேல் சீற்றம் வந்தது. ஆனாலும், சகலத்தையும் விழுங்கிக்கொண்டார்.

***

சின்னத்துரைப் பத்தர் செல்லப்பரின் பாலிய நண்பன் செல்லப்பர் கலியாணம் செய்து கொண்ட நாளிலிருந்து இந்த நட்பு சற்று விடுபட்டி ருந்தது. இப்போது மறுபடியும் அந்த நட்புவந்து ஒட்டிக்கொண்டு விட்டது. சின்னத்துரை பத்தர் அடிக்கடி வந்து போனார். இதற்கான காரணத்தை காமாட்சி அம்மாளால் அறியவும் முடியவில்லை. முடிய வில்லை ‘ என்று சொல்வதைவிட, அறிய அவளுக்கு ‘நேரமும், மனதும் இருக்கவில்லை’ என்பதுதான் பொருத்தமானது.

ஒருநாள் நடுப்பகல் சின்னத்துரை பத்தர் செல்லப்பரைத் தேடிக் கொண்டு வந்தபோது, காமாட்சி அம்மாளையும், முத்தையனையும் தவிர வீட்டில் யாரும் இருக்கவில்லை .

சின்னத்துரைப் பத்தர் போய்விட்டார்.

அன்று இரவு படுக்கைக்குப் போன போது காமாட்சி அம்மாள் செல்லப்பரின் காதுக்குள் பேசினாள்.

‘இஞ்சருக்கோ!’

‘என்னது?’

‘உவன் சின்னத்துரை இனி இஞ்சை வரப்படாது!’

‘ஏன் வரப்படாது?’

‘நான் சொல்லுறன் வரப்படாது!’

‘ஏன்!ஏன்; ஏன் வரப்படாது?’

‘அவன் பாக்கிற பார்வையும் பேசிற பேச்சும் நல்லாயில்லை!’

‘…..’

‘நாறல் மீனைப் பூனை பாத்ததுமாதிரி அவன் என்னைப் பாக்கிற பார்வை எனக்குப் பிடிக்கேல்லை! நீங்கள் அவனோட சிநேகிதமா யிருக்கிறண்டால் வெளியிலை சிநேகமாயிருங்கோ; இஞ்சை அவன் வேண்டாம்!’

‘ஏன் பேசிறியளில்லை?’

‘………….’

இதற்குப்பின் சின்னத்துரைப் பத்தர் வீட்டுக்கு வருவதை நிறுத்திக் கொண்டார்.

இருந்தாற்போல ஒருநாள் படுக்கைக்குப் போனபோது செல்லப்பர் காமாட்சி அம்மாளிடம் பேசினார்.

‘நான் வேலையைவிடப் போறேன்!’

‘இதென்ன விசர்க் கதை!ஏன்?’

‘சும்மா அவனிவனுக்கு அடிமை வேலை செய்யத் தேவேல்லை!’

‘விட்டிட்டு!’

‘விட்டிட்டு, வீட்டோடை இருக்கப் போறன்; உன்ரை ஆசை எல்லாத்தையும் இனித்தான் தீர்க்கப்போறன்!’

‘காமாட்சி என்ன பேசிறாயில்லை?’ காமாட்சியால் பேச முடியவில்லை. நெஞ்சிலே கூரிய ஈட்டி ஒன்று ஊடுருவிச் செல்வதுபோல இருந்தது. உடம்பெல்லாம், உள்ளமெல்லாம் கூனிக் குறுகியது.

அதிகவேளை அமைதி இருட்டோடு புதைந்து கிடந்தது.

வெகு நேரத்துக்குப்பின் காமாட்சி அம்மாளின் விம்மலோசை கேட்டது.

செல்லப்பா உறங்கிப்போய் விட்டார். அவருக்குக் கேட்கும்படியும் அவள் விம்மினாள். அவர் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். விம்மியபடி அவர் முகத்திலே, அவள் கண்ணீரைச் சிந்திவிட்டாள். ‘ஏன் காமாட்சி அழுகிறாய்?’ தூக்கம் கலைந்து போக, செல்லப்பர் பரிவோடு கேட்டார். ‘நீங்கள் என்னிலை ஐமிச்சப்படுறியள்; அதுதான் வேலையை விட்டிட்டு வீட்டோடை இருக்கப் போறனென் றெண்ணிறியள்!’

‘எடி விசரி! நான் அதுக்குச் சொல்லேல்லையெடி! வீட்டோடை இருந்து வட்டிக்கடை போடப்போறன். நான் இனி உழைச்சு ஆருக்கு? அதுக்குத்தான் சொன்னனான்!’

காமாட்சி அம்மாள், அவர் நெஞ்சிலேயே அசந்துவிட்டாள். கந்தசாமி கோவிலின் மணி கணீரென ஒலித்தது. மணி நான்கு. ‘எனக் கிப்பஐஞ்சாறு நாளாச் சத்தி சத்தியா வருகுது!’ ‘என்னது? நீ, சும்மா சொல்லுறாய்! என்னைச் சோதிச்சுப் பாக்கிறாய் என்ன?”

“இல்லையெண்ணிறன்! வாயூறுது; வயித்தைப் பிரட்டுது; தலையைச் சுத்துது!’

‘காமாட்சி!’

செல்லப்பரின் முரட்டுத்தனமான அணைப்புக்குள் காமாட்சி திணறிப்போனாள்.

விடிந்து வெகு நேரமாகியும் காமாட்சி அம்மாளால் எழுந்திருக்க முடியவில்லை.

செல்லப்பர் குழந்தைபோலத் துள்ளினார்; குதித்தார்; அடுப்பங்கரைப் பக்கம் போனார்; தாழ்வாரத்தைப் பெருக்கினார்; ஆங்கிலத்தில் பாடினார்; கடைசியாகத் தாய்க்கிழவியிடம் பைத்தியக்காரன் போலப் பிதற்றினார்.

‘ஆச்சி! உனக்குப் பேரன் வரப்போறான்!’ தாயானவள் ஏங்கிப் போனாள்.

அவள் வாய் கொன்னிக் கொண்டு வந்தது. செல்லப்பரின் சொல்லின் பாரத்தைச் சுமக்க முடியாத அவளின் நெஞ்சு மயக்கமுற்றது. அதற்குப் பிறகு அவளால் பேசவே முடியவில்லை .

தாயாரின் நிலையை நன்கு அவதானிப்பதற்குமுன் சொல்லி வைத்தாற்போன்று முத்தையன் வந்தான்.

செல்லப்பர் குழந்தை போலத் துள்ளிக் குதிப்பதைப் பார்க்க அவனுக்கு வியப்பாக இருந்தது.

‘முத்தையா! எனக்குப் பிள்ளை பிறக்கப் போகுது!’

‘முத்தையா! என்ரை நாப்பத்திரெண்டாம் வயதிலை எனக்கு எல்லாப் பாக்கியமும் வருமெண்டு சாத்திரி சொன்னதை நீ முந்தி நம்பேல்லை! இப்ப நம்பிறியே?”

‘…’

‘ஆம்பிளைப் பிள்ளைக்குப் பலனிருக்கெண்டு காமாட்சியின்ரை சாதகத்திலை இருக்கெண்டு நான் சொன்னதை நீ நம்பேல்லை. இப்ப நம்பிறியே?’

செல்லப்பர் முத்தையனைத் தனது தனி அறைக்கு உற்சாகத்துடன் அழைத்துச் சென்றார்.

இரண்டொரு மாதமாக முத்தையனைப் பார்க்க முடியவில்லை. செல்லப்பருக்கு மனம் ஒரு மாதிரியாக இருந்தது. முத்தையன் எங்காவது வெளியூர் போயிருக்கக் கூடுமென்றுதான் அவன் எண்ணினார். அப்படி அவன் கதையோடு கதையாகச் சொல்லி வைத்ததாகக்கூட ஞாபக மில்லை.

தாய்க்கிழவியோ வாய்பேச முடியாதவளாக படுக்கையில் விழுந்து விட்டாள். ஒரு பக்கத்து அவயவத்தையும் வாதம் வாங்கிவிட்டது.

“பாவம் அவள் பாவி, ஓங்காளித்து ஓங்காளித்துச் சாகிறாள். இந்த நேரத்திலை அவளுக்கு ஆசைப் பண்டம், சோட்டைப் பண்டம் தேடிக் குடுக்க ஆருமில்லை!’

இப்படிச் செல்லப்பர் ஏங்கி ஏங்கி அவஸ்தைப்பட்டார். முடிந்தவரை வாயும், வயிறுமான மனைவியைச் சந்தோஷப்படுத்த அவர் படாத பாடுபட்டார்.

பக்கத்து வீட்டார் உற்றார் உறவினர் என்ற விதத்தில் வழக்கத் திலேயே தொடர்பு விட்டுப்போன வாழ்க்கை!இப்படி வாழ்க்கைதான் முன்பு அவருக்கும், இப்போது காமாட்சிக்கும் பிடித்ததாகவும் இருந்தது.

காமாட்சியைப்பற்றிய கவலையும், தாயைப்பற்றிய வேதனையும் பிடுங்கித் தின்றாலும், முத்தையன் வராது விட்டானே’ என்பது எதற்கும் மேலான பெரும் பேரிடியாக அவருக்கு இருந்தது. சருகு அசைந்தாலும் முத்தையனைப்பற்றிய நினைவுதான் முந்திக்கொண்டு வந்து விடுகிறது!

அப்போதுதான் செல்லப்பர் சற்று கண்ணயர்ந்தார். ஏதோ சந்தடி அவரை அசைத்துவிட்டது.

வெளியே முத்தையனின் சைக்கிள் சந்தடி போலத்தான் இருந்தது. அவர் வெளியே வந்தார். மழைக்கால் இருட்டு! வானம் அழுது வடிந்தது. மின் வெட்டொன்று அடிவானத்திலே கோடிட்டு விளையாடி மறைந்தது.

பளுவான பெட்டி ஒன்றைச் சைக்கிளில் சுமந்து வைத்தபடி முத்தையன் நின்றான்.

மழையின் வெடில் அடித்தது. அது இரத்த வாடை போலவும் இருந்தது. வானம் அழுது வடிந்தாலும் இப்படித்தான் வெடில் இருக்கும்.

‘முத்தையா!’

குரலை மிகவும் அடக்கிக்கொண்டே செல்லப்பர் அழைத்தார். அவர் அழைப்புக்குக் காத்திராமலே முத்தையன் உள்ளே வந்து விட்டான்.

அவசர அவசரமாக தனது அந்தரங்க அறைக்குள் அவனை, அழைத்து வந்த செல்லப்பர். சிங்கப்பூர் இலாம்பைத் தீண்டிவிட்ட போதுதான் திடுக்குற்றுப் போனார்.

முத்தையனின் உடையெல்லாம் இரத்தக்கறை படிந்திருந்தது. விடிவதற்கு சில மணி நேரம்தான் இருந்தது. கடந்த இரண்டாண்டுகால அனுபவத்தில் இப்படி ஒரு சந்திப்பு செல்லப்பருக்குக் கிடைத்ததில்லை. அவர் நடுங்கிப் போய்விட்டார்.

கந்தன் கோவிலில் மணியோசை கேட்டது. மணி நான்கு!

செல்லப்பரின் தூரத்து உறவினர் முருகேசம்பிள்ளை கொலை செய்யப் பட்டு விட்டதான செய்தி பதினைந்து மைல்களுக்கப்பாலுள்ள கிராமத்திலிருந்து வந்து சேர மதியம் திரும்பிவிட்டது.

இந்தச் செய்தியைக் கேட்டுச் செல்லப்பரின் அங்கமெல்லாம் விறைத்தது. செய்தி கொண்டு வந்தவன் காமாட்சிக்கு முன்னால் நடந்து விட்ட சம்பவத்தைப் பச்சை பச்சையாகக் கூறியபோது, காமாட்சி மயக்கம் போட்டு வீழ்ந்து விட்டாள். வீட்டில் உள்ள நாயை விஷமிட்டுக் கொன்றுவிட்டு, முருகேசம்பிள்ளையையும் கழுத்தற வெட்டிவிட்டு, நகைநட்டுகளாகவும், ரொக்கமாக இலட்சத்துக்கு மேலான பண மாகவும் கொலையாளி திருடிக்கொண்டு போய்விட்ட கதையைச் செல்லப்பரினாலும் ஒழுங்காகக் கேட்க முடியவில்லை. காமாட்சி யையும், கிழவியையும் வீட்டோடு விட்டுவிட்டு அவர் சா வீட்டிற்கு பறந்தோடிவிட்டார்.

அதன் பின்…. முருகேசம்பிள்ளையின் கொலை பற்றிய விருத்தாந்தம் நாட்டின் ஒரே ஒரு தமிழ்ப் புதினப் பத்திரிகையில் ஒரு நாள் வெளிவந்தது.

பத்துநாட்கள் கழித்து, முத்தையன் என்ற ஒருவன் அகப்பட்டுக் கொண்டதாகச் செய்தி வந்தது.

காமாட்சி அம்மாள் ‘பேயறைந்தவள்’ போலானாள். செல்லப்பரோ மூலைக்குள் சுருண்டு கொண்டார்.

‘யார் இந்த முத்தையன்?’ என்ற கேள்வி ஊரில் பரவலாக எழுந்ததே தவிர, செல்லப்பருக்கும் அவனுக்கும் தொடர்பிருந்ததாக யாரும் பேசிக் கொள்ளவில்லை.

நாட்கள் ஆக, ஆக காமாட்சி அம்மாள் மிகவும் வெதும்பிப் போனாள். செல்லப்பர் காமாட்சி அம்மாளின் முகத்தில் விழிக்கவே கூசினார். பழைய உற்சாகம் இப்போது அவரிடமில்லை. இரண்டொரு தடவை அவர் கொழும்புக்குப் போய் வந்தார்.

முருகேசம்பிள்ளையின் கொலை வழக்கு பருவகாலம் கோட்டின் விசாரணைக்கு வந்துவிட்டது. செல்லப்பர் கொழும்புக்குப் போய் வந்தது. முத்தையனுக்காக நியாய துரந்தரை ஏற்படுத்தவாகத்தான் இருக்க வேண்டுமெனக் காமாட்சி எண்ணினாள். அவரை உற்சாகப் படுத்தும் துணிச்சலும் அவளுக்கிருக்கவில்லை. இம்முறை பருவகால விசாரணைக்கு வந்த இராசா, செல்லப்பர் வேலை பார்த்த கச்சேரித் துரையின் நண்பர் என்பதையும் அவரைப் பார்க்க செல்லப்பர் முயற்சித்து, இராணி இல்லத்திற்கு போய் வந்ததையும் வைத்துக் கொண்டு, அவள் முத்தையனுக்காக எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணினாள். இப்போது சின்னத்துரைப் பத்தர் செல்லப்பரோடு நட்பாகிவிட்டார்.

நான்கு நாட்கள் தொடர்ந்து விசாரணைக்குப் பின்பு, முத்தையனுக்கு மரண தண்டனை கிடைத்தது.

முத்தையனின்தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட தினத்தில் காமாட்சி அம்மாள் ஒரு ஆண் குழந்தையைப் பிரசவித்தாள். அப்போதும் சின்னத்துரைப் பத்தர் செல்லப்பரோடு பேசிக் கொண்டிருந்தார்.

குழந்தை பிறந்தபோது நயினார் கூரையைத் தட்டவாக்கும்!’ என்று மருத்துவச்சி வள்ளி உள்ளேயிருந்து குரல் வைத்தபோது, செல்லப்பரின் மனம், வாக்கு, காயம் சகலது மே கூனிக்குறுகிவிட்டது. சின்னத்துரைப் பத்தர் தலை கவிழ்ந்து கொண்டார்.

‘சின்ன நயினார், உரிச்சுப் படைச்சுப் பெரிய நயினார் போலைதான்.’ குழந்தையை வெந்நீரான கழுவியபோது வள்ளி இப்படிக் கூறினாள். இராச நோக்காட்டின் முடிவிலே அசந்து போய்க் கிடந்த – ஆனால் முனகியபடி கிடந்த – காமாட்சி அம்மாளின் காதுகளைத் துளைத்துக் கொண்டு இந்த வார்த்தைகள் உள்ளே நுழைந்திருக்க வேண்டும். கணவேளை அவள் முனகல் தடைப்பட்டு பின்தொடர்ந்தது.

‘எடி காமாட்சி’

செல்லப்பர் வெளித்திண்ணையிலிருந்து பீறிட்டுக் கத்துகிறார். சின்னத்துரைப் பத்தருக்கு அந்தக் குரலின் உக்கிரம் புரிந்துவிட்டது.

மருத்துவச்சி வள்ளிக்கு எதுவுமே புரியவில்லை.

***

வெளியே கன்னிநாகு மீண்டும் குரல் வைத்தது.

காமாட்சி அம்மாள் சுயநிலைக்கு வந்தபோது, செல்லப்பர் விக்கலெடுத்துக் கொண்டிருந்தார்.

சின்னாச்சிக் கிழவி கண் வாய்ப் பொத்துவதற்காக மீண்டும் தயாராகி விட்டாள்.

வானத்திலே விமானம் ஒன்று ஊர்ந்து போகும் ஓசை கேட்டது. ‘இதிலைதான் அவர் வாறார். இப்ப வந்திடுவார்’ என்று அழகம்மாள் செல்லப்பரின் காதுவரை கேட்கும்படி கூறினாள்.

பால் வார்த்துக் கொண்டிருந்த பேரக் குழந்தைகள் முற்றத்துக்கு ஓடி, வானமுகட்டைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

கன்னிநாகு வெளியே கத்திக்கொண்டே இருந்தது. விமான நிலையத்திலிருந்து முத்துவேலரை அழைத்து வர மோட்டார் அனுப்பி வைக்கப்பட்டும், வெகு நேரமாகிவிட்டது. அழகம்மாள் வாயில் பக்கமாக நீண்ட நேரம் பார்வையைப் புதைத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு முத்து வேலர் வந்தபோது, வீடெங்கும் விம்மல் ஓசைகள் எழுந்தன.

காமாட்சி அம்மாள் முத்துவேலரின் கால்களைக் கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டாள். அழகம்மாள் ஊமைத்தனமாக விம்மினாள்.

‘பாதர்… பாதர்…’ மேலே பேசவே முடியாமல் முத்து வேலர் துக்கக் கடலில் மூழ்கிவிட்டார்.

வெளியே கன்னிநாகு அவசர அவசரமாகக் கத்தியது. செல்லப்பரின் கண்கள் அகலத் திறந்து கொண்டன. வாயை அசலத் திறந்து, அவர் ஏதோ பேசுவதற்கு முயற்சித்த போது…. சின்னாச்சி சூம்பிப்போன விரல்களால், அகலத் திறந்த கண்களை யும் உள்ளங்கைப் பின்முனையால்விரிந்த கீழ் நாடித்தாடையையும் ஒரே வேளையில் பக்குவமாக மூடிவிட்டாள்.

காமாட்சி அம்மாள் கத்திக்கொண்டே செல்லப்பரின் நெஞ்சுக்கு மேல் வீழ்ந்தார்.

வீடெங்கும் கூக்குரல் எழுந்தது. முத்துவேலர் தன்னந்தனி மரமாக நின்று நாகரிகமாகக் கண்ணீர் விட்டார்.

எல்லாமே முடிந்துவிட்டது. கன்னிநாகு இன்னமும் கத்திக்கொண்டேதான் இருந்தது. ஒருநாள் கழிந்தது. திருத்தியங்கள் யாவும் சிறப்பாக முடிந்தன. குளிப்பாட்டப்பட்ட செல்லப்பருக்கு அவரின் தலைப்பாகை யையும், மூக்குக் கண்ணாடியையும், தோல் செருப்பையும் சிறப்பாக அணிவித்து இருந்தார்கள். நாற்பத்தைந்து வருடங்களாக அவருடன் கூடிக் குலாவி வந்தசாயம் மங்கிவிட்ட இராசா இராணிக்குடையும் பக்கத்தே கெம்பீரமாகக் கொலுவிருந்தது.

எதையோ வலிந்து நினைவுபடுத்திக்கொண்ட அழகம்மாள் உள்ளே ஓடிச் சென்று, செல்லப்பரின் ஐந்து பற்றறிலையிற்றை எடுத்துவந்து மாமனாரின் கைகளின் மேல் பக்குவமாக வைத்தாள்.

ஊரில் என்றுமே வழக்கமில்லாதபடி கோவில் குருக்கள் செல்லப் பருக்கு இறுதி மரியாதை செலுத்த வந்திருந்தார்.

பிரமுகர்கள் சிலர் செல்லப்பரைப்பற்றி இரத்தினச் சுருக்கமாக இரண்டிரண்டு வார்த்தைகள் பேசினர்.

கடைசியாகக் குருக்கள் பேசினார். ‘கண் கெட்டுப்போன இந்த நாகரிக முறைகளிலிருந்து சைவத்தை யும், ஆகமங்களையும் காப்பாற்ற இலண்டன்வரை வழக்குரைக்க உதவிய கொடைவள்ளல் முத்துவேலரின் அருமைத் தந்தையாருக்கு உண்மைச் சைவர்கள் சகலரினதும் சார்பில் அஞ்சலி செய்கிறேன். அவரின் ஆத்மா சிவபதம் அடையட்டும்’ என்று குருக்கள் பேசி முடித்ததும் எங்கும் பேய் அமைதி நிலவியது.

கன்னிநாகு இன்னமும் கத்திக்கொண்டே இருந்தது. ‘ சினைப்படுகிற நேரத்திலை உதை மாட்டுக்கு விடாட்டி அது மலடாய்த்தான் போகும்.’

இப்படி மரண வீட்டுக்கு வந்திருந்த ஒரு மாட்டுப் பண்ணைச் சொந்தக்காரன் ‘முட்டாள்’ தனமாகப் பேசினான்.

– கே.டானியல் படைப்புகள் – சிறுகதைகளும் குறுநாவல்களும் (தொகுதி இரண்டு), முதற் பதிப்பு: 2016, அடையாளம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *