அம்மாவின் பெயர்

7
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 27,939 
 

அம்மாவின் பெயர் என்ன என்பதே வெகு காலத்துக்குத் தெரியாது எனக்கு. அம்மாவுக்கு என்ன பெயர் இருக்க முடியும்? அம்மா என்பதைத் தவிர. ‘வாட் இஸ் யுவர் ஃபாதர்ஸ் நேம்?’ என்ற கேள்விகளினால் அப்பாவுக்குப் பெயர் உண்டு என்பது நன்றாகவேதெரிந்து இருந்தது. அம்மாவைப்பற்றியும் கேட்டு இருப்பார்கள். ஆனால், அடிக்கடி கேட்டு நினைவில் பதியவைத்து இருக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.

அம்மா… எல்லோருடைய அம்மாவையும்போல் அவளும் அழகானவள்தான். பேரழகி. கண்ணை உறுத்தாத, மெலிதான… ஆனால், பொறாமை ஏற்படுத்தும் அழகி. அவளைவிட அழகான பெண்ணாக காட்டிக்கொள்ள முயற்சித்து, முயற்சித்து தோற்றுப்போனவர்கள்தான் அதிகம். அதில் நானும் ஒருத்தி. என் பதின் பருவங்களில் அவள் மீது உருவான பொறாமை அப்படி இப்படி என்று சாதாரணமானது கிடையாது. கொலை வெறிப் பொறாமை.

நாங்கள் இருவரும் அம்மா – மகள் என்கிற பந்தத்தைத் தாண்டி நண்பிகளாக மாறிய ஒருநாளில், அம்மாவிடம் கேட்டேன்.

”எப்படிம்மா இவ்ளோ அழகா இருக்க? இந்த ஆரஞ்சு கலர் நம்ம குடும்பத்துல யார் கிட்டயுமே கிடையாதே? இத்தனை அழகை எங்க இருந்து கொண்டுவந்தேம்மா?” – மூக்கின் நுனிகள் சிவக்கச் சிரித்த அம்மா, நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல், வேறு ஒரு பதிலைச் சொன்னாள்.

”உனக்குத் தெரியுமா? சின்ன வயசுல நம்ம கிராமத்துல உள்ள எல்லோரும் என்னை ‘ஜெயலலிதா மாதிரியே இருக்கே’னு சொல்வாங்க” – அம்மா இப்படிச் சொன்னபோது, சந்தோஷமான சிரிப்பு வந்தது எனக்கு. ”உனக்கு ஜெயலலிதா பிடிக்குமாம்மா..?”

”இல்ல… எனக்கு சரோஜாதேவிதான் பிடிக்கும்!”

”ஏன்?”

”அவங்க நீளப் பொட்டு வெச்சிருப்பாங்க. வட்டக் கொண்டை போட்டிருப்பாங்க. கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவாங்க…” – இப்படியே அடுக்கிக்கொண்டே போனாள். சிறு வயதில், என் கனவில் வரும் தேவதைகள் அனைத்தும் சாதாரண வாயில் சேலையில், ஒற்றைப் பின்னலில் நீள மல்லிப் பூவுடன், குட்டியான லோலாக்குகளுடன், ஸ்ரிங்கார் பொட்டுவைத்து இருக்கும் என் அம்மாவைப்போலவே எளிமையாக, பேரழகாக வருவார்கள். முழிப்பு வந்தவுடன் அம்மா வைப் பார்க்கும்போது தோன்றும், தேவதைகளைவிட, ஜெயலலிதாவைவிட அம்மாதான் அழகு என்று.

சிறு வயதில் எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருந்த செட்டியார் ஆச்சிகூட அப்படித்தான் சொல்லுவார். ஆச்சி என்றவுடன் வெத்தலைச் சாறு வழிய வாய் நிறையப் புன்சிரிப்போடு,’செல்லம்ம்ம்ம்மா’ என்று ராகம் பாடியபடியே வீட்டுக்குள் வரும் உருவம் தான் நினைவுக்கு வருகிறது. அம்மாவுக்கு ஆச்சி வைத்திருந்த பெயர் செல்லம்மா. ஆச்சிக்கு அம்மா இப்போதும்கூட செல்லம்மாதான். ஆச்சி, தாத்தா, ராஜம் அத்தை, தியாகு மாமா, சுமதி நர்ஸ், எங்கள் வீட்டு வேலைக்காரப் பாட்டி எல்லோருக்கும் அம்மா… செல்லம்மாதான். ரொம்ப நாட்கள் அம்மாவின் பெயர் செல்லம்மாவாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். அத்தனை அன்பான, அமைதியான அம்மாவுக்கு செல்லம்மா என்பதுதானே பெயராக இருக்க வேண்டும்.

ஆனால், அம்மாவின் பெயர் அதுவல்ல என்று நான் வளரும் நாட்களில் தெரிந்துகொண்டேன். கவுன் பருவத்தில் இருந்து நான் பாவாடைப் பருவத்துக்கு மாறியபோது அம்மாவின் பெயரும் மாறியது. எங்கள் தெருவுக்கு பாரி ஜாதம் அம்மாவாக. என் தம்பியின் நட்புவட்டத் துக்கு சரவணன் அம்மாவாக. அடையாளம் தெரியாதவர்களுக்கு… தட்டி வீட்டுக்காரம்மாவாக.

பாரிஜாதம் அம்மாவாக மாறிய நாட்களில், செல்லம்மாவின் தோற்றத்தில் இருந்தும் அம்மா தன்னை மாற்றிக்கொண்டாள். ஒற்றைப் பின்னல் வட்டக் கொண்டையாக மாறியது. நீள நீள மல்லிப் பூக்கள், இரண்டே இரண்டு மொக்குகளாக மாறி கொண்டைக்குள் ஒளிந்துகொண்டன. ஸ்ரிங்காருக்குப் பதிலாகக் குங்குமம் ஏறியது நெற்றியில். வாயில், காட்டன் சேலையாகவும், லோலாக்குகள் தோடுகளாகவும் மாறின. சுத்தமாக அம்மாவைப் பிடிக்காமல்போன காலம் அது. அம்மா அசிங்கமாகிவிட்டாள்… என் தேவதை இவள் இல்லை என்று மூளையில் ஊறத் தொடங்கிய பதின் வயது அது.

அம்மாவின் லோலாக்குக் காலங்களில் அவள் கை பிடித்து நடந்து போவதையே வானத்தில் மிதப்பதுபோல் உணர்ந்திருக்கிறேன். ஆனால், சுடிதார் அணிந்த அம்மாக்களின் பிள்ளைகள் என் நண்பர்களான பதின் வயதில், காட்டன் சேலை அணிந்த என் அம்மாவுடன் வெளியில் செல்வதே அவமானமாக இருந்தது. நட்பு வட்டத்தில் அறிமுகப்படுத்தவும் தயக்கம் அதிகரித்து இருந்தது. இப்படியான ஒரு எதிர் பாரா சந்தர்ப்பத்தில் என் வீட்டுக்கு திடீர் விஜயம் செய்த என் நண்பர்கள் குழு, அம்மா வின் அழகைப் பார்த்து அரண்டுபோனார்கள் என்பது பின்னாட்களில் தெரிய வந்தபோது, ஆச்சர்யமாக இருந்தது. அழகு மட்டும் அல்ல; அம்மாவின் எளிமை, ஒற்றைப் பல் தெரியும் சிரிப்பு, பார்வையிலே சிதறித் தெளிக்கும் அன்பு என அவளின் எல்லாமும் சேர்ந்தே அவர்களை வசீகரித்தது என்பது தெரியவந்த நாட்களில், அவர்கள் அம்மாவுக்குப் புதிய பெயரையே சூட்டி இருந்தார்கள்… அழகம்மா என்று. அதன் பின் அம்மா, அழகம்மா ஆனாள். பள்ளிக் காலம் முடியும் வரை அவள் அழகம்மாவாகவே இருந்தாள்.

குளிர், மழை, வெயில், என்று பருவம் எனக்குத்தான் பல மாற்றங்களைத் தந்துகொண்டே இருந்தது. அம்மா எப்போதும் வசந்த காலம்போலவே இருந்தாள். அழகாக, இளமையாக, இனிப்பாக, சுவையாக, குளிராக, மழையாக, சிட்டுக் குருவியாக, பட்டாம் பூச்சியாக.

நான் கல்லூரிக்கு செல்லத் தொடங்கிய காலங்களில், அம்மா பிரயத்னப்பட்டுக்கொண்டு இருந்தாள் தன்னை வயசானவளாக, அசிங்கமானவளாகக் காட்டிக்கொள்ள. உடம்பைச் சுற்றி சுருங்கிய சேலைகள், கழுத்தில் தாலி செயினுக்குப் பதிலாக மஞ்சள் கயிறு, முத்து வளையல்கள் அலங்கரித்த கைகளை மொட்டையாக்கிக்கொண்டாள், பூக்களை அருகில் விடவே இல்லை. இப்படிப் பல்வேறு விதங்களில், தன்னை வயதானவளாக, அசிங்கமானவளாகக் காட்டிக்கொள்ள முயன்று, பரிதாபமாகத் தோற்றுப்போனாள். அவளிடம் மட்டும் அல்ல; கழுகுக் கண் களால் அவளை உற்று நோக்கிக்கொண்டு இருந்த சமூகத்திடம் இருந்தும்.

”புள்ளைங்க எல்லாம் காலேஜுக்குப் போற நேரத்துல, இவ ஏதோ ஸ்கூலுக்குப் போற மாதிரில்லா இளமையா… ஆட்டிக் கிட்டு அலையிறா” என்ற அசிங்கமான, வயிறு ஊதிப் பெருத்துப்போன, பக்கத்து வீட்டுப் பெண்களின் வயித்தெரிச்சல்கள், மிருதுவான அம்மாவைக் குத்திக் கிழித்தது எனக்குத் தெரியும்.

நாங்கள் தூங்கிவிட்டோம் என்ற நம்பிக்கையில் தனிமையில் அழுதுகொண்டு இருக்கும் அம்மாவை என்ன செய்வது என்று தெரியாமல், தூங்குவதுபோல் நான் நடிக்கப் பழகிக்கொண்ட நாட்கள் அவை.

அம்மாவின் அழகு அவளையே வதைக்கும் அளவுக்கு வந்த ஒரு நாளில், தன்னுடைய ஆறடிக் கூந்தலை ஒரு நள்ளிரவில் அரை அடிக் கூந்தலாக வெட்டி எறிந்தாள் அப்பாவின் கத்திரிக்கோலினால். ஆம்பளைப் பையனைப்போல காது வரை மட்டுமே முடிவைத்து இருந்த அவளைப் பார்த்த அந்தக் காலைதான் என்னால் சகித்துக்கொள்ளவே முடியாத ஒரு காலை யாக இருக்கிறது இப்போது வரைக்கும்.

அம்மாவைப்பற்றிய, அவளின் பேரழ கைப்பற்றிய பொரணிகளும், புகைச்சல்களும் அதிகரித்த ஒருநாளில், அம்மா மனநிலை தவறினாள். அடம்பிடித்து மொட்டை அடித்துக்கொண்டாள். பட்டினி கிடந்து எலும்பும் தோலுமாக மாறினாள். தூக்க மாத்திரைகள் மட்டுமே சாப்பிட்டு எந்நேரமும் தூக்கத்திலேயே இருந்தாள், இந்த உலகத்தையே பார்க்க விரும்பாதவள்போல. அப்போதும் அவளுக்கு ஒரு பெயர் இருந்தது. சுற்றி இருந்தவர்களால், உறவினர்களால், நண்பர்களால்… பைத்தியம் என்று.

மனதிலும் கண்ணிலும் ரணம் வழியச் சண்டை போட்டிருக்கிறேன் இந்தச் சமூகத் திடம்… என் அம்மா பைத்தியம் இல்லை என்று. ‘போங்கடா தே… பசங்களா’ என்று தெருவில் நின்று உரக்கக் கத்தி இருக்கிறேன் அவர்களைப் பார்த்து, அம்மாவின் வலி தாங்காது.

அம்மா பைத்தியம் இல்லை என்றும், அவளை அந்தக் கூட்டுக்குள் இருந்துவெளிக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற வெறியில் மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைந்து திரிந்த ஒருநாளில், எதற்கும் தொடர்பே இல்லாமல் திடீர் என்று எனக்குத் தோன்றியது அம்மாவின் உண்மை யான பெயர் என்னவாக இருக்கும் என்று. தாத்தாவும் ஆச்சியும் உயிருடன் இல்லாத காரணத்தினால் எங்கு போய்க் கண்டுபிடிக்க என்று தெரியவில்லை எனக்கு. ஸ்கூல் சர்ட்டிஃபிகேட்களில் இருக்குமே அம்மா வின் உண்மையான பெயர் என்று தோன்றிய கணம், ஒரு புன்னகையும் கூடவே வந்தது.

அம்மா அப்போதே சேரன்மாதேவியில் இருந்து திருநெல்வேலி வரை ரயிலில் சென்று படித்தவள். அதுவும் பத்தாம் கிளாஸ் வரை. இதைச் சொல்லும் ஒவ்வொரு முறையும், அம்மாவின் முகத்தில் இருந்து கீழே விழும் புன்னகையை எடுத்துச் சேகரித்து வைத்திருக்கிறேன் என் பெட்டகத்தில். அம்மாவின் படிப்பைப்பற்றிய நினைப்பே அந்தப் பெட்டகத்தைத் திறந்து ஒரு புன்னகையை எனக்குக் கொடுத்தது.

ஊருக்குச் சென்று தாத்தாவின் வீடு திறந்தபோது, உள்ளிருந்து வந்த சிறிய வயது அம்மாவின் வாசம், நசநசவென்ற மழை நேர இம்சையில், தேடிக் காத்திருக்கும் பளிச் என்ற ஒரு வெயில் காலத்தை எனக்குப் பரிசாகக் கொடுத்தது.

வீட்டுக்குள் நுழைந்து ஒரு சுற்று அடித்துத் திரும்பியதில், அம்மாவின் பல்வேறு விதமான புகைப்படங்கள் கிடைத்தன. ரிப்பன் வைத்த ரெட்டைச் சடையில், கழுத்து வரை தொங்கும் ஜிமிக்கிகளுடன், பூ போட்டதாவணியில், தோழிகளுடனான சில குறும்புத் தருணங்களில் என்று எங்கு திரும்பினாலும் அம்மாவின் சட்டம் போட்ட புகைப்படங்களைப் பார்க்க முடிந்தது.

எல்லாவற்றையும் கடந்து அரங்குவீட்டுக் குள் மஞ்சள், சிவப்பு, பச்சை என்று பல வண்ணங்களில் ஏராளமான டிரங்குப் பெட்டிகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப் பட்டு இருந்தன. தாத்தாவின் பெட்டிக்குள் உளுத்துப்போன சில பத்திர நகல்கள், பாச்சா உருண்டை வாசத்துடன் சில வேஷ்டி சட்டைகள், தாத்தாவின்அப்பா இறந்த நாளில், அவருடைய பிணத்துடன் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் என்று பல கலவை. அம்மாச்சியின் பெட்டிக்குள் பெரிதாக எதுவும் இல்லை. சில மஞ்சள் கிழங்குகள், ஆச்சி எப்போதோ தலையில் வைத்தோ, அல்லது வைக்காமலோ பத்திரப் படுத்திய மரிக்கொழுந்து மாலை, மஞ்சள் கயிறு, சிவப்பு பிளாஸ்டிக் வளையல்கள், கொஞ்சம் அதிசயமாக நெல் அறுக்கும் ஒரு பன்னருவாள், சம்பந்தமே இல்லாமல், ஏதோ ஒரு சின்னக் குழந்தையின் குட்டி கறுப்பு வளையல்கள் (ஒருவேளை என்னு டையதாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்) இப்படியாக இருந்தது.

அம்மாவுக்குச் சொந்தமானதாக, அம்மா பயன்படுத்தியதாக, திருமணத்துக்குப் பின் அம்மா தன்னுடன் எடுத்துப் போக விரும்பாத தாக, மூன்று டிரங்குப் பெட்டிகள் அடை யாளம் காட்டப்பட்டபோது, சட்டென்று ஒரு பதற்றமும் பயமும் சேர்ந்த ஒரு சந்தோ ஷம் மனதுக்குள் புகுந்துகொண்டது. பெட்டி திறந்தபோது நான் எதிர்பார்த்தது எதுவும் கிடைக்கவில்லை. மாறாக, நான் எதிர்பார்க்காத ஒன்று கிடைத்தது. திறக்கவே கஷ்டப்படும், துருப் பிடித்துப்போன அந்த டிரங்குப் பெட்டிக்குள்தான், புதைத்து வைக்கப்பட்ட அம்மாவின் மற்றொரு பக்கத்தை நான் தெரிந்துகொண்டேன்.

துணிகளுக்குப் பதிலாக பெட்டிகள் முழுவதும் ஜெயகாந்தன், லா.ச.ரா, அசோகமித்திரன் என்று நிரம்பி இருந்தன. சோவியத் ரஷ்யாவில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வந்த வாரப் பத்திரிகைகளும், ஸ்புட்னிக் ஆங்கில இதழும், நக்சல்கள்பற்றிய கட்டுரைகளுமாகக் குவிந்து அதிர்ச்சியை அளித்தது.

அம்மா புத்தகங்கள் படிப்பாள் என்பதே ஆச்சர்யமாக இருந்தது. அவளிடம் வளர்ந்த இந்த 27 வருடங்களில் ஒரு முறைகூட இதை என்னிடம் பகிர்ந்துகொண்டதே இல்லை.அப்பா வாங்கி வரும் அரசியல் சார்ந்த புத்தகங்களை மிக அரிதாக, மூக்குக் கண்ணாடி அணிந்து அவள் படித்த நேரங்களில், ”உனக்கு இந்த மாதிரி புக் எல்லாம் படிக்கத் தெரியுமா என்ன?” என்று நக்கல் அடித்த காலங்கள் உண்டு. எப்போதாவது கிடைக்கும் ரிலாக்ஸ் தருணங்களில் அப்பாவுடன் உலக விஷயங்கள் விவாதிக்கையில், அருகில் அமர்ந்து இருக்கும் அம்மாவை சட்டை செய்ததுகூடக் கிடையாது.

தோண்டத் தோண்ட… நிறையப் புத்தகங்களுக்கு அடியில் கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி என்று பல போட்டிகளில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள் சிதறிக்கிடந்தன. மக்கிப்போன சான்றிதழ்கள் எல்லாவற்றிலும் செல்வி. திராவிட செல்வி, எட்டாம் வகுப்பு, செல்வி. திராவிட செல்வி, ஒன்பதாம் வகுப்பு, என்று பெயர் பிரகாசமாக ஜொலித்தது.

பக்கத்தில் துணைக்கு உட்கார்ந்து இருந்த கன்னுத்தாய் சித்தியிடம், ”இது யாரு திராவிட செல்வி?” என்றேன். ”ஆங்… இதுகூடத் தெரியாதா? உங்க அம்மைதான் திராவிட செல்வி” என்றாள்.

திராவிட செல்வி… அதுதான் அம்மாவோட உண்மையான பெயரா? எத்தனை ஆளுமையான பெயர். ஆனால், அம்மா அந்தப் பெயரைத் தாங்குவதற்குச் சாத்தியமான ஓர் ஆளா என்ன? கன்னாபின்னாவென்று ஓடியது நினைவு.

நினைவுகளைப் பேச்சின் மூலம் கலைத்தாள் சித்தி. ”உங்க தாத்தா திராவிடக் கட்சியில பெரிய ஆளு. அதுனால, உங்க அம்மைக்கு இந்தப் பேர வெச்சாரு. அவளும் சும்மா சொல்லக் கூடாது. பேருக்கு ஏத்த புண்ணியவதி. என்ன அறிவு தெரியுமா அவளுக்கு. எல்லாத்துலயும் ஃபர்ஸ்ட். அவிய அப்பா மாதிரியே பெரிய ஆளா வருவா, ஊருக்கெல்லாம் நல்ல வழி பண்ணுவானு எல்லாம் நினைச்சோம். ம்ம்… உங்க ஆச்சி பண்ணின கூத்துல பதினாறு வயசுலயே கல்யாணம் பண்ணிவெச்சு நோவடிச்சுட்டாங்க” என்றாள்.

சட்டென்று ஒரு வெறுமை மனதுக்குள் பரவியது. பாவமாக இருந்தது அம்மாவை நினைத்தபோது. எத்தனை ஆசைகளுடன் இருந்திருப்பாள். அத்தனை ஆசைகளை யும் இத்தனை வருடங்களாக எந்தக் குழியில் இட்டுப் புதைத்து வைத்திருக்கிறாள் என்று புரியவில்லை. அந்த வலிதான் அவள் சுயத்தைக்கூட எங்களிடம் இருந்தே மறைத்துவைக்கச் சொல்லி இருக்கிறதோ என்றும் தோன்றியது.

வேறு ஒன்றும் இங்கு கிடைக்கப் போவது இல்லை என்று தோன்றிய மறு கணம் அங்கே இருந்து கிளம்ப ஆயத்தமானேன். அங்கே இருந்த சில மணி நேரங்களில் அம்மாவைப்பற்றிய மற்றொரு பிம்பம் எனக்குள் உற்பத்தி ஆகிக்கொண்டு இருந்தது. சித்திக்கு டாட்டா சொல்லி விட்டு, தெரு முனையில் நின்று இருந்த ஆட்டோவை நோக்கி நடந்தேன்.

”ஏலா… யாருளா அது… பொசலு மவளா? எலா…” – சத்தம் வந்த பக்கம் தலை திருப்பினால், பொலமாடி பாட்டி. புருவத்துக்கு மேல் கை வைத்து சூரியனை மறைத்துக்கொண்டு, கண்களை இடுக்கி என்னைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். சிரித்தபடியே பாட்டியிடம் போனேன். ”நான் திராவிட செல்வி மக ஆச்சி… பாரிஜாதம்” என்றேன்.

கெக்கபிக்க என்று சிரித்த பாட்டி, ”அது யாருளா திராவிட செல்வி… புதுப் பேரால்ல சொல்லுத… உங்கம்மை பேரு பொசலு. அவ இந்த ஊருக்கே பொசலு. எங்க பொசலு தாயி” என்றபடியே ராகம் போட்டு ஒரு பாட்டுப் பாடினாள்.

”அசலு பொசலு தாயி
ஆரஞ்சு கலரு தாயி
தங்கம் யாரு தாயி
எங்க பொசலு தாயி” என்று.

சிரித்தவள் கண்களில் திடீரெனக் கண்ணீர்த் துளி. ”எப்பிடிலா இருக்கா உங்கம்மை… எங்க பொசலு” என்றாள்.

”அது என்ன பொசலு?” என்றேன்.

”அவ பொறக்கும்போதும் பொசல் மாதிரிதான் பொறந்தா, அத்தன வேகம். வலிகூட வரல. அதுக்குள்ள இவ வந்து வெளில குதிச்சுட்டா உங்க ஆச்சி வயித்துல இருந்து. வளரும்போதும் பொசல் மாதிரிதான் வளர்ந்தா… என்னா வேகம். பத்து வயசுலயே இருவது வயசுக்கு அறிவு இருக்கும்ல அவளுக்கு. அப்பிடியே அதே வேகத்துல எங்களவிட்டு வெளியவும் போய்ட்டா…”

ஆச்சி சொல்லச் சொல்லப் புரிந்தது. அம்மா புயல்போல் இருந்திருக்கிறாள். அதுதான் இந்தப் பெயர். பளிச்சென்று மின்னல் மின்னியது மனதுக்குள். பொசலு… என் அம்மாவின் பெயர் இதுதான். அவள் பெயர் இதுவாக மட்டுமே இருக்க வேண்டும். அவளின் சந்தோஷங்கள், அவளின் அன்பு, அவளின் கோபம், அவளின் நுட்பம். அவளின் நுணுக்கம், அவளின் அழகுகூட… எல்லாமே புயல் மாதிரிதான். அடித்துச் சாய்த்துவிடும் எதிரில் இருப்பவர்களை.

அவள் பொசல்… அசல் பொசல்…

எங்கோ அறுந்து பறந்துகொண்டு இருந்த காத்தாடி நூலின் முனை என் சுண்டு விரலுக் குள் தானாகவே வந்து சிக்கியதுபோல் இருந்தது.

ஊரில் இருந்து கிளம்பி வீட்டுக்கு வந்து அம்மாவைத் தேடினேன். தோட்டத்தில் வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்தாள் எங்கோ. எதை நினைத்துக்கொண்டு இருப்பாள் இப்போது? தொலைத்ததை எல்லாமா? தெரிய வில்லை.

பின்னால் போய் நின்று மெதுவாக, ”பொசலு… யேய் பொசலுத் தாயோவ்” என்றேன்.

சடக்கென்று தலை திருப்பிய அம்மாவின் கண்களில் ஓராயிரம் சூரியன்களின் ஒளி தெரிந்தது. நீண்ட நாட்களுக்குப் பின்!

– பெப்ரவரி 2011

Print Friendly, PDF & Email

7 thoughts on “அம்மாவின் பெயர்

  1. அருமை. இயல்பான நடை கதையோடு பயணிக்க ஏதுவாக இருந்தது.

  2. ‘அம்மா’ எல்லா அம்மாக்களுமே ஒவ்வொரு துறையிலும் அறிவுமிகுந்தவர்கள் தான். கல்வியில், ஆளுமையில், அரசியலில், எழுத்தில், பேச்சில், குடும்ப நிர்வாகத்தில், குழந்தை வளர்ப்பில் இன்னும் நிறைய நிறைய சொல்லலாம். ஒவ்வொரு குழந்தைக்கும் அது ஆணோ பெண்ணோ அவர்களுக்கு அம்மாதான் வழிகாட்டி அவளின் அறிவுரை தான் அவர்களுக்கு வேதவாக்கு. கதையின் நடையும் அதன் தொடக்கமும் முடிவும் அருமை. வாழ்த்துக்கள்

  3. அறிவு மிகுந்த அம்மாக்கள், இங்கு அதிகம் பேர் இது போன்ற நிலைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள், என்பதை மறுக்க இயலாது. அனைத்து பெண் பிள்ளைகளுக்கும் அவர்களுடைய அம்மா நிச்சயம் தோழியாகவே இருக்கிறார்கள். திராவிடச் செல்வி, செல்ல(அ)ம்மாவாக என் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டாள். உங்கள் பணி மென்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்……….

  4. நான் தொலைத்து தேடி கண்டெடுத்த கவிதை…கதை…
    என் அம்மாவின் பெயர் திராவிட செல்வி…

  5. அம்மா .. என்ன சொல்லறதுனே தெரியல எனக்கு.. எனக்கு அழுகை தன வருது.. என் அம்மாவும் இது போல கனவுகளோடு இருந்துருப்பாங்க. ஆனா அவங்களும் 16 வயசுலயே கல்யாணம் பண்ணிகிட்டாங்க .. ஆசைகளோடும் கனவுகளோடும் இருந்த என் அம்மா கல்யாணம் பண்ணிக்கிட்டு எங்களை பெத்தெடுத்து வளர்க்க இந்த சமூகத்துக்கு இடைல நிறைய பாடு பட்டிருக்காங்க.. இந்த கதை என் அம்மாவோட சின்ன வயசை எனக்கு நினைவு படுத்தது .. என் அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்காக நிறைய செஞ்சிருக்காங்க ..எனக்காக நிறைய இழந்திருக்காங்க .. அம்மா எனக்கு உன்ன ரொம்ப ரொம்ப பிடிக்கும் அம்மா ……

  6. கவிதா,
    நேர்த்தியான எழுத்து., நீங்கள் நிறைய எழுத வாழ்த்துக்கள். கடந்த வருடம் எங்களை தவிக்கவிட்டு சென்ற என் வழர்ப்பு அம்மாவை நினைவு படுத்தியது- உங்கள் கதைக்கு நன்றி.

    பார்த்தசாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *